வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 5

உமாமகேஸ்வரஸம்வாதம்

(

இந் நிகழ்வுகள் மகாபாரதம் அனுசாஸன பர்வத்தில் இடம் பெற்றுள்ளவை

தொடக்கம் 204 அத்யாயம்.

கூடி இருக்கும் ரிஷிகள் கிருஷ்ணரை பார்த்து ‘உலகில் ஆச்சரியமானது ஒன்றை நீங்கள் கண்டிருந்தாலும், கேட்டிருந்தாலும் அதை உரைக்க வேண்டும்’ என்றனர்.

‘நான் மானிட வடிவத்தில் இருப்பதால் எதுவும் உரைப்பதிற்கு இல்லை, அதனால் என் அறிவும் வரையறைக்கு உட்பட்டது என்றார்.

எனவே ரிஷிகள் அனைவரும் நாரதரே உக்கிரமான தவம் உடையவர், கிருஷ்ணருக்கு அன்பானவர், பழைய சரித்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று நிச்சயித்து அவரை அணுகினார்கள்

அவர் உமா மகேஷ்வர ஸம்வாதம் குறித்து சொல்லத் தொடங்கினார்.

)

உமை : 

மூன்று விதமான மனிதர்கள் எப்போதும் காணப்படுகிறார்கள்.  எவ்வித  முயற்சியும் இன்றி உயர்ந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைந்து அனுபவிக்கின்றனர், சிலர் முயற்சி செய்து உயர் நிலைகளை அடைகின்றனர்.  மற்றவர்கள் எந்த முயற்சி செய்தாலும் ஒன்றையும் அடைய இயலாதவராக  இருக்கின்றனர், அது ஏன்?

சிவன் : 

பிரம்மாவிடத்தில் விருப்பு வெறுப்புகள் இன்மையால் அவர் உலகில் உள்ள மனிதர்களை சரி சமமாகவே படைத்தார். கால வித்யாசத்தினால் மாறு பாடு அடைந்தார்கள். எனவே அவர்கள் பிரம்மாவிடம் சென்று காரணம் அறிய விரும்பினார்கள்.அப்போது பிரம்ம தேவர், ‘என்னை குற்றம் சொல்லாதீர்கள்,உங்கள் கர்மத்தை நினையுங்கள்.உங்கள் நல்லதும், தீயதும் உங்களால் தீர்மானிக்கப்படுகிறது. தானே தன் வினைப்பயன்களை அனுபவிக்கவேண்டும். மற்றொருவர் அனுபவிக்க தகாது’ என்று வாக்குரைத்தார்.  ஆகவே உமையே முன் ஜன்மங்களில் தர்மம் செய்தவர்கள் அதன் தொடர்ச்சியாக உயர்ந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைந்து அனுபவிக்கின்றனர். மற்றவர்களின் தூண்டுதலால் தர்மம் செய்பவர்கள் அடுத்துவரும் பிறப்புகளில்  முயற்சி செய்து உயர் நிலைகளை அடைகின்றனர். செல்வத்தாலும், பதவிகளாலும் செருக்கு கொண்டு தம்மை மட்டுமே நினைப்பவர்கள் அடுத்துவரும் பிறப்புகளில் எந்த முயற்சி செய்தாலும் ஒன்றையும் அடைய இயலாதவராக  இருக்கின்றனர் என்றார்.

உமை : 

‘மனிதர்களில் சிலர் மிக்க செல்வம் மற்றும் வசதிகள் இருந்தும் அதை அனுபவிக்க இயலாதவர்களாக இருக்கிறார்களே அது ஏன்? என்றாள்

சிவன் : 

தர்மம் செய்தால் கூட தன் விருப்பமின்றி சிரத்தை இல்லாமல் செய்பவர்கள் அடுத்துவரும் பிறவிகளில் மிக்க செல்வம் மற்றும் வசதிகள் இருந்தும் அதை அனுபவிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்.

உமை : 

சில மனிதர்கள் தனம் இல்லாமல் இருந்தாலும் சுகப்படுபவர்களாகவே இருக்கின்றனரே, அது ஏன்? என்றாள்.

சிவன் : 

எவர்கள் தர்மத்தில் விருப்பமும் தயையும் உள்ளவர்களாகி பிறர் துன்பத்தை அறிந்து தமது வறுமையிலும் பிறர்க்கு உதவி செய்கிறார்களோ அவர்கள் அடுத்து வரும் பிறப்புகளில்தனம் இல்லாமல் இருந்தாலும் சுகப்படுபவர்களாகவே இருக்கின்றனர்.

உமை : 

மூன்று விதமான மனிதர்கள் எப்போதும் காணப்படுகிறார்கள். சிலர் எவ்வித முயற்சியும் இன்றி உயர்ந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைகின்றனர். சிலர் முயற்சி செய்து பாக்கியங்களை அடைகின்றனர். சிலர் எவ்வித முயற்சி செய்தும் ஒன்றையும் அடையாமல் இருக்கின்றனர். அது ஏன்? என்றாள்.

தொடரும்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *