
பாடல்
தானே தனக்குச் சரியாய தாயே வருக வுரைக்கவினை
தடிவாய் வருக நினைக்கமுத்தி தருவாய் வருக மலர்பொதிந்த
கானே புரையுங் கருங்கூந்தற் கவுரி வருக மெய்ஞ்ஞானக்
கரும்பே வருக வருள்பழுத்த கனியே வருக தெவிட்டாத
தேனே வருக வானந்தத் திருவே வருக பெருவேதச்
செல்வீ வருக வெங்கள்குல தெய்வம் வருக வுருகுநருண்
மானே வருக விமயவரை வனிதாய் வருக வருகவே
மறைவாழ்த் தொலிசா றிருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே
திருக்குடந்தை ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் – திரு மீனாட்சிசுந்தரம் பிள்ளை
கருத்து – மங்களாம்பிகையையின் அருட் சிறப்புகளைச் சொல்லி பிள்ளைத்தமிழில் அழைக்கும் பாடல்.
பதவுரை
இப்பிரபஞ்சம் முழுவதிலும் தனக்கு நிகராக எவரும் இல்லாமல் தான் மட்டுமே தனக்கு நிகராக இருப்பவளாகிய தாயே வருக; தன்னால் செய்யப்பட்ட வினைக்களை உரைக்க கண்டால் அதை விலக்கி அவர்களுக்கு அருள்பவளே வருக; உன்னைபற்றிய எண்ணம் கொண்டு உன்னை நினைக்க முற்பட்ட உடன் அவர்களுக்கு திருவடியாக பத முக்தியை அளிப்பவளே வருக; மலர்களால் சூழப்பட்ட காட்டினைப் போன்ற கருங்கூந்தலை உடையவளே வருக; அடி, நுனி என இல்லாமல் எல்லா இடங்களிலும் இனிமையாக இருக்கும் மெய்ஞான கரும்பு போன்றவளே வருக; உண்ணுவதற்கு இனிமையாக இருக்கும் அருள் நிறைந்த கனி போன்றவளே வருக; பருகத் தெவிட்டாமல் இருக்கும் தேன் போன்றவளே வருக; வானம் வரையில் வடிவம் கொண்டிருக்கும் திருவடிவம் கொண்டவளே வருக; பெருமை உடைய வேதங்களின் உட்பொருளாக இருக்கும் செல்வியே வருக; எங்கள் குல தெய்வம் ஆனவளே வருக; ஒரு நிலையில் இருந்து வேறு நிலைக்கு அழைத்துச் செல்லும் நறுமணம் உடைய மானே வருக; இமையாதவர்கள் ஆகிய தேவர்களின் துன்பத்தை நீக்குபவளே வருக; வேதங்களும் மறைகளும் ஒலிக்கும் குடந்தையில் வீற்றிருப்பவளே வருக வருக என்று மங்களாம்பிகையை பிள்ளைத்தமிழில் அழைக்கிறார்.
விளக்க உரை
- புரைதல் – ஒத்தல், தைத்தல், மறைத்தல், பொருந்துதல், நேர்தல்