‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – மைஞான்ற
பொருள்
- கரிய நிறம் வழிவது போலத் தங்கும்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் – நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.
பதினோராம் திருமுறை – அற்புதத் திருவந்தாதி – காரைக்காலம்மையார்
கருத்து உரை
கருமை நிறம் பொருந்திய கண்டத்தினை உடைய பெருமானாக நிற்கும் நீ, வானோர்கள் வணங்கிய உடனே அவர்களுக்கு அருள் செய்தாய்; யான் இவ்வுலகில் பிறந்து (அறியத் தக்கவற்றை அளிக்கும்) மொழியினை பயின்று பின் உன் திருவடிப் பேற்றில் அன்பு மிகுந்து நின் சேவடியே சேர்ந்தேன். என் பிறவித் துன்பத்தை எப்போது தீர்க்கப் போகிறாய்?
விளக்க உரை
- பயின்ற பின் – பயின்று நன்கு உணர்ந்த பிறபட்டக் காலம்
- சேர்ந்தேன் – தமது ஞானத்தின் இயல்பாக இறை அருளினால் துணையாக அடைந்தேன்
- எஞ்ஞான்று தீர்ப்பது – அதனை அறியவில்லை எனும் பொருளில். அதாவது, `இப்பிறப்பிலோ, இனி வரும் பிறப்பிலோ` என்னும் பொருள் பற்றி
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
இறைவனின் எண்குணங்கள் யாவை?
1. தன் வயம் உடைமை, 2. தூய உடம்பு உடைமை, 3. இயற்கை உணர்வு உடைமை, 4. முற்றுணர்வு உடைமை, 5. இயல்பாகவே பாசமின்மை, 6. பேரருள் உடைமை, 7. முடிவில் ஆற்றல் உடைமை, 8. வரம்பில் இன்பம் உடைமை.