புகைப்படம் : Karthik Pasupathi
வீட்டில் இருக்கும் கம்யூட்டரில் HD சரியாக வேலை செய்யவில்லை. நண்பர் வந்து புது HD மாற்றிக் கொடுத்தார்.
இதுல எது எது எது வேணும்னு சொன்னீங்கன்னா அதெல்லாம் புது HDல காப்பி செய்துடலாம்.
12 வருடங்களுக்கு மேற்பட்ட விஷயங்கள். எப்படி உடனடியாக தேர்வு செய்ய முடியும். சரி, வரிசையா ஒன்னு ஒன்னா பாத்துக்கிட்டே வாங்க. நீங்க சொல்றதை மட்டும் காப்பி செய்துடுறேன்.
இது இளையராஜா பாடல்கள் …இது வேணும்.
இது நான் கடவுள் மூவி .. இது வேணும்.
யோகி ஃபோல்டர்ல என்ன இருக்குன்னு பாருங்க?
ஏதோ பெபில்ஸ்ன்னு இருக்கு.
என் இனிய பொன் நிலாவே பாடலில் வருவது போல் காலம் சுழல ஆரம்பித்தது.
அப்போது யோகிக்கு பேச்சு வரவில்லை. சில நேரம் ம்,.. ம்ம்.. சந்தோஷப் படும் போது வேகமாக குதிப்பான்.
ஒரு முறை கடைக்கு சென்றிருந்த போது அழுதான். அப்போது DVD பிளேயரில் இருந்து பாடல்கள் ஒலித்தன. உடன் அழுகை நின்றது.
சார், இது என்ன பாடல்?
குழந்தைகளுக்கான பாடல் சார்.
எவ்வளவு சார்?
99ரூ.
நான் இத எடுத்துக்கிறேன் சார்
அன்று முதல் பக்தி பாடலுக்கு பதிலாக இந்தப்பாடல்கள் தான் ஒலிபரப்பாகும் (அப்படித்தான்)
பேச்சு வர ஆரம்பித்தது.
சைகை காட்டியது போய் கம்யூட்டரை அவனே ஆன் செய்து பாடல்களை வைக்கக் கற்றுக் கொண்டான்.
என் இனிய பொன் நிலாவே பாடல் முடிவுக்கு வந்தது.
அட என்னா அங்கிள் நீங்க, அவருகிட்ட போய் கேட்டுகிட்டு இருக்கீங்க. எல்லாத்தையும் காப்பி பண்ணி போட்டுடுங்க. இல்லேன்னா கத்துவார். இவரு கௌதம் ஃப்ரெண்ட் வேற. படத்துக்கு ஒரு டிக்கெட் எடுத்து குடுக்க முடியல. நீங்க என்ன பண்ணுங்கண்னா, மியுசிக் சைட்ல போயி AYM படத்துல வர ‘தள்ளிப்போகாதே’ பாட்டை டவுண்லோட் செய்து குடுங்க. அப்பாவ கேட்காதீங்க.
*சொல்லாடுதல் – பேசுதல்