பாடல்
திங்களை முடித்தார் கண்டாய் திரிகூடச் செல்வர் கண்டாய்
எங்குள சித்துக் கெல்லாம் இறையவர் இவரே என்று
நங்கைமார் பலரும் கூறும் நன்மொழித் தேறல் மாந்தி
மங்கையாம் வசந்தவல்லி மனங்கொண்டாள் மயல்கொண் டாளே
திருகுற்றாலக் குறவஞ்சி – திரிகூடராசப்பக் கவிராயர்
பதவுரை
இளம்பிறையை ஆகிய சந்திரனை சடையில் முடித்திருப்பதைப் கண்டாய்; இவரே திரிகூடநாதர் ஆவர் என்று அறிவாயாக; எல்லா இடங்களிலும், எல்லா வகையான மாயை எனும் சித்து வித்தைகளுக்கும் இவரே தலைவர் என்று பெண்கள் பலரும் சொல்கின்ற நல்ல தேன் ஒத்த சொல்லை பருகி, மங்கையான வசந்தவல்லி மனத்தில் அச்சொற்களை கொண்டவளாகி, திரிகூடநாதர் மீது மயக்கம் கொண்டவளானாள்.
விளக்க உரை
- தோழியார், திருக்குற்றாலநாதர் புகழைக் கூறக் கேட்டு வசந்தவல்லி காதல் கொள்ளுதல்
- உற்றார் ஆருளரோ-உயிர் கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தன்அல் லால்நமக்கு உற்றார் ஆருளரோ
எனும் திருநாவுக்கரசர் சுவாமிகள் அருளிச்செய்த திருஅங்கமாலையும்
- குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே
எனும் மாணிக்கவாசகரின் திருப்புலம்பலும் ஒப்பு நோக்கி குற்றால நாதர் ஆகிய கூத்தன் பெருமை உணர்க.