பாடல்
இலயித்த தன்னில் இலயித்தாம் மலத்தால்
இலயித்தவாறு உளதாக வேண்டும் — இலயித்தது
அத்திதியில் என்னின் அழியாது; அவை அழிவது
அத்திதியும் ஆதியும் அங்கு
திருநெறி 1 – சிவஞானபோதம் – மெய்கண்டார்
பதவுரை
ஆன்மாக்களின் பார்வைகளையும் ஒடுக்கி, குருடாக்கி, சஞ்சீதம், பிராரப்தம் மற்றும் ஆகாமியம் ஆகிய மூவினைகளுக்கும், ஆணவம், மாயை மற்றும் கண்மங்களுக்கு உட்பட்டு உலகம் தோன்றி மறைவதாக தோன்றும். நிமித்த காரணமாக நின்று வினைகளைப் பற்றி, மாயா மலங்களை அனுபவித்து வினைகளையும் மலங்களையும் முற்றிலும் இறை அருளால் நசித்து தன்னில் உலகம் இருப்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு, மூவினைகளுக்கு உட்பட்டு, உலகமே ஒடுங்கி அணுவாகி நின்றுஅதன் உருவிலேயே அதன் இயல்பாய் இருக்கின்றது என்னில் கால உணர்வின்றி உலகம் எப்பொழுதும் அழியாது பார்வையில் பட்டு நிற்கும்.
விளக்க உரை
- உலகம் மற்றும் ஆன்மாக்கள் தோன்றி மறையும் இயல்புடையது என்றும் அது சிவனின் அருளினால் அவ்வாறான நிகழ்வுகள் நிகழ்த்தப்படுகின்றன எனவும், அவனே அனைத்துக்கும் கர்த்தா என்னும் சைவ சித்தாந்த கருத்துக்களை விளக்கும் பாடல்.
- உலகம் மட்டுமே நிலை பொருள் எனும் நாத்திகவாதிகளின் கருத்தும், இருப்பது, இல்லாது எனும் நிலைகளைத் தாண்டி, இல்லாமலும் இருக்கலாம் என்றும், இல்லாத பொருள் தோன்றாது எனும் அநேகாந்தவாதத்தின் கருத்துக்களும் மறுக்கப்படுகின்றன.
- தன் அறிவு, அறியாமை, ஒளி, ஒருள் ஆகியவற்றை தன்னுள்ளம் கொண்டிருப்பதை ஒருவன் உணர, மாயை பற்றி ஒளியே இல்லாத இருள்நிலைதான் தன்னின் மூலம் என்பதையும் உணர்வான். இந்த நிலையில் அனைத்தும் ஒடுங்குவது உண்மையே என்றும் இத்தன்மையோன் உணர்வான். ஆகவே சங்கார காரணாகிய ஒருவனே, உலகம் தோன்றி மறையும் இயல்பானது எனும் ஆணவமலம் நீக்கி இவ்வுலகம் தோன்றுவதற்கும், மீளாவகை சென்று அடைவதற்கும் காரணமாக தனி முதல்வனாகவும், தற்பரனாகவும் இருப்பான் என்பதை விளக்கும்.
(சைவ சித்தாந்தம் அத்தனை எளிதானது அல்ல என்பதாலும், வினைபற்றியவன் உரைப்பதாலும் பொருள் குற்றம் ஏற்பட்டிருக்கலாம். குற்றம் பொருத்தருள வேண்டுகிறேன்.)