அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மாடை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  மாடை

பொருள்

  • பொன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே.

கந்தர் அனுபூதி – அருணகிரிநாதர்

கருத்து உரை

மிகப் பெரியதான வலிமைமிக்க மாபெரும் மாயைகளை எல்லாம் நீக்க வல்லவராக முருகப் பெருமான், தன் அறுமுகத்தில் இருக்கும் ஆறு வாயினால் உபதேசங்களை தந்து அருளிய போதிலும், வீடு, பொன் (செல்வம்), மாதர் என்று இவைகளை எப்பொழுதும் நினைத்து சோர்வு அடையச் செய்கிற உலக மாயைக்குள் கிடந்து கலங்குவதை நான் இன்னும் விடவில்லையே.

விளக்க உரை

  • முருகப் பெருமான் தன்னுடைய திருவாக்கால் ஷடாச்சர உபதேசம் செய்தும் நான் தேறவில்லையே என்கிறது மற்றுமொரு உரை.
  • ‘எனக்கு சம்சார மாயை நீங்கவில்லையே’ என பொருள் கொண்டால் முருகனின் பரதத்துவத்திற்கு இழுக்கு ஏற்படும் என்றும் உபதேசம் செய்தவர் எப்படிப்பட்டவர், செய்த உபதேசம் எப்படிப்பட்டது என்பதின் தரமே குறைந்துவிடும் என்று சில குறிப்புகளில் காணப்படுகிறது. அருளாளர்களின் பாடல்கள் அனைத்தும் அவர்களுக்காக எழுதப்பட்டவை அல்ல. சாதாரணமாக இருக்கும் கடை நிலை மனிதர்களின் நிலையில் இருந்து அவர்கள் உய்வதன் பொருட்டு எழுதப்பட்டவை.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

மூவகை அளவைகள் எவை?
காட்சி, கருதல், உரை

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!