அமுதமொழி – சார்வரி – சித்திரை – 28 (2020)


பாடல்

சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல்
சார்ந்தாரைக் காத்துஞ் சலமிலனாய்ச் – சார்ந்தடியார்
தாந்தானாச் செய்துபிறர் தங்கள்வினை தான்கொடுத்தல்
ஆய்ந்தார்முன் செய்வினையும் ஆங்கு

திருநெறி 1 – சிவஞான போதம் – மெய்கண்ட தேவர்

கருத்து சார்ந்தாரைக் காத்தலையும், சாராதவர்களை வினைகளை கொடுத்து அதை அனுபவிக்குமாறு செய்பவன் என்பதையும் உணர்த்தும் பாடல்.

பதவுரை

தன்னை சார்ந்து அடைக்கலம் புகுந்தவர்களை காத்தல் என்பது தலைவன் ஆகிய ஈசனின் கடமை; ஆனால தன்னைக் சாராமல் அடைக்கலம் புகாதவர்களை காக்காமல் வஞ்சம் செய்பவன் அல்ல; தன்னை சார்ந்து அடைக்கலம் புகுந்தவர்களை பிராப்த வினைகளை நீக்கி அவர்களைக் காப்பான்; தன்னைச் சாராதவர்களை  பிராப்த வினைகளை ஆராய்ந்து அதற்கு ஏற்ப வினைகளைக் கொடுத்து அதை அனுபவிக்குமாறு செய்து அவர்களைக் காப்பான்.

விளக்க உரை

 • இயல்பாகவே பாசங்களின் நீங்கி இருப்பவன் என்பதை முன்வைத்து பேரருள் உடைமை ஆகியவன் என்பதால் சார்ந்தாரைக் காத்தலையும், முடிவில் ஆற்றல் உடைமை என்பதை முன்வைத்து வினைகளை கொடுத்து அதை அனுபவிக்குமாறு செய்பவன் என்பதையும் உணரலாம். இவைகள் ஈசனின் எண்குணங்களின் தன்மைகள் ஆகும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 22 (2019)


பாடல்

நிர்க்குணனாய் நின்மலனாய் நித்தியா னந்தனாய்த்
தற்பரமாய் நின்ற தனிமுதல்வன் – அற்புதம்போல்
ஆனா அறிவாய் அளவிறந்து தோன்றானோ
வானே முதல்களையின் வந்து

திருநெறி 1 – சிவஞானபோதம் – மெய்கண்டார்

கருத்துஅசத்தாயுள்ள பிரபஞ்சத்தை அசத்தென்று காண உளதாய் நிற்பது ஞானசொரூபம் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

குணம் என்பதாகிய எண் குணம் உடையவனும், அழுக்கு எனும் குற்றங்கள் அற்றவன் ஆனவனும், எக்காலத்திலும் துன்பமற்றவனும், மேம்பட்டதான பரம் பொருள் ஆனவனும் படைப்பில் முதல் முதலில் தோன்றிய ஆகாயமே அசத்து என்று சுட்டறிவினைக் கொண்டு அறியும் பொருளாய்  கொண்ட அறிவினைக் கடந்து சூன்யப் பொருள் போல் தோன்றி, (குருவருளால்) சுட்டறிவதால் உண்டாகும் தன்னறிவினால் நீங்காமல் நிலை பெறுவதாகிய சோதி வடிவாய் (அகத்தில்) விளங்கிக் தோன்றுவான்.

விளக்க உரை

 • தற்பரம் தனக்குப் பரமென விரியும்.
 • சூனியமாய்த் தோன்றினாலும் அது அற்புதம் போல் வந்தது
 • தனி முதல்வன் – உலகியல் விடுத்து அதைக் கடந்து அதற்கும் காரணாய் இருக்கும் ஞானத் தன்மைப் பற்றியது.
 • பிரபஞ்சம் நிலைப்பு தன்மை உடையது அல்ல எனும் பேருண்மையினையும், அசத்தாய் உள்ள உலகினைக் அறிய ஞான வடிவமாகியவனே அருளிச் செய்ய இயலும் என்றும், அசத்து நிலையுடைய பொருள்கள் தன் சொருபத்தை காட்டாது மறைத்து நிற்கும் இயல்பு உடையது; இது நிலைப்பு தன்மை உடையது என்று அறிய உணர்த்துவது ஞான சொருபமாகிய பதி ஞானம் என்று சுப்பிரமணிய தேசிகர் உரையில் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 15 (2018)

பாடல்

விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு
அளந்தறிந்து அறியா, ஆங்கவை போலத்
தாம்தம் உணர்வின் தமி யருள்
காந்தம் கண்ட பசாசத் தவையே

சிவஞானபோதம் – மெய்கண்டார்

பதவுரை

சடப் பொருட்கள் என்றும்,ஞானேந்திரியங்கள் என்றும் ஐம்பொறிகள் என்றும் அறிகருவிகள் என்றும் வழங்கப்பெறும் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றில் உடல் உணர்வை உணரும்; வாய் சுவையை உணரும்; கண் புறக் காட்சியைக் காணும்; மூக்கு வாசனையை அறியும்; செவி ஓசையை அறியும். அவ்வாறு ஐம்பொறிகள் இவைகளை அறிந்தாலும், அறிகின்ற தம்மை அறியமாட்டா. உயிர் உடனிருந்து திருவருள் காந்தம் போன்று இயங்கினால் உயிர்கள் இரும்பினைப் போல் இயங்கி அவை செயல்படும்.

விளக்க உரை

 • இறைவன் திருவருள் என்பது சைவசித்தாந்த மரபில் மறைப்பாற்றலையே (திரோதான சத்தி) குறிக்கும். உயிர் அனுபவித்துத்தான் மலக் குற்றங்களை நீக்க முடியும். எனவே உயிர்கள் மாயை செய்த கன்மங்களின் வழியே வினையாற்ற வேண்டியுள்ளதால், நன்மை தீமைகளை அறியாதவாறு உலகியல் அனுபங்களில் ஈடுபடச் செய்ய திருவருள் துணை செய்யும்.
 • ஐம்பொறிகள் உயிரால் செலுத்தப் படுவதால் வினைகளை நுகர்கின்றன.  உயிர் தன் வினையினால் தன்பொருட்டாகவே நுகர்கின்றது. அவ்வுயிரைச் செலுத்துகின்ற இறைவன்  முன்னிலையில் உலக நிகழ்வுகள் செயல்படுகின்றன.
 • தமி – ஒப்பற்ற முதல்வன்
 • பசாசம் – இரும்பு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 1 (2018)

பாடல்

இலயித்த தன்னில் இலயித்தாம் மலத்தால்
இலயித்தவாறு உளதாக வேண்டும் — இலயித்தது
அத்திதியில் என்னின் அழியாது; அவை அழிவது
அத்திதியும் ஆதியும் அங்கு

திருநெறி 1 – சிவஞானபோதம் – மெய்கண்டார்

பதவுரை

ஆன்மாக்களின் பார்வைகளையும் ஒடுக்கி,  குருடாக்கி, சஞ்சீதம், பிராப்தம் மற்றும் ஆகாமியம் ஆகிய மூவினைகளுக்கும், ஆணவம், மாயை மற்றும் கண்மங்களுக்கு உட்பட்டு உலகம் தோன்றி மறைவதாக தோன்றும். நிமித்த காரணமாக நின்று வினைகளைப் பற்றி, மாயா மலங்களை அனுபவித்து வினைகளையும் மலங்களையும் முற்றிலும் இறை அருளால் நசித்து தன்னில் உலகம் இருப்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு, மூவினைகளுக்கு உட்பட்டு, உலகமே ஒடுங்கி அணுவாகி நின்றுஅதன் உருவிலேயே அதன் இயல்பாய் இருக்கின்றது என்னில் கால உணர்வின்றி உலகம் எப்பொழுதும் அழியாது பார்வையில் பட்டு நிற்கும்.

விளக்க உரை

 • உலகம் மற்றும் ஆன்மாக்கள் தோன்றி மறையும் இயல்புடையது என்றும் அது சிவனின் அருளினால் அவ்வாறான நிகழ்வுகள் நிகழ்த்தப்படுகின்றன எனவும், அவனே அனைத்துக்கும் கர்த்தா என்னும் சைவ சித்தாந்த கருத்துக்களை விளக்கும் பாடல்.
 • உலகம் மட்டுமே நிலை பொருள் எனும் நாத்திகவாதிகளின் கருத்தும், இருப்பது, இல்லாது எனும் நிலைகளைத் தாண்டி, இல்லாமலும் இருக்கலாம் என்றும்,  இல்லாத பொருள் தோன்றாது எனும் அநேகாந்தவாதத்தின் கருத்துக்களும் மறுக்கப்படுகின்றன.
 • தன் அறிவு, அறியாமை, ஒளி, ஒருள் ஆகியவற்றை  தன்னுள்ளம் கொண்டிருப்பதை ஒருவன் உணர, மாயை பற்றி ஒளியே இல்லாத இருள்நிலைதான் தன்னின் மூலம் என்பதையும் உணர்வான். இந்த நிலையில் அனைத்தும் ஒடுங்குவது உண்மையே என்றும் இத்தன்மையோன் உணர்வான். ஆகவே சங்கார காரணாகிய ஒருவனே, உலகம் தோன்றி மறையும் இயல்பானது எனும் ஆணவமலம் நீக்கி இவ்வுலகம் தோன்றுவதற்கும், மீளாவகை சென்று அடைவதற்கும் காரணமாக தனி முதல்வனாகவும், தற்பரனாகவும் இருப்பான் என்பதை விளக்கும்.

(சைவ சித்தாந்தம் அத்தனை எளிதானது அல்ல என்பதாலும், வினைபற்றியவன் உரைப்பதாலும் பொருள் குற்றம் ஏற்பட்டிருக்கலாம். குற்றம் பொருத்தருள வேண்டுகிறேன்.)

சமூக ஊடகங்கள்