வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 39


உமை :

வைரக்கியம் பற்றி உரைக்கவேண்டும்.

மகேஷ்வரர் :  

ஆசைக்கு ஈடான துன்பமும் இல்லை. விடுவதைப் போல் இன்பமும் இல்லை. ஒருவன் விருப்பங்களை எல்லாம் விட்டப்பின் பிரம்ம பிராப்தத்திற்கு உரியவனாகிறான். நல்லறிவு இல்லாதவர்களால் விட முடியாததும், தேகம் தளர்ந்தாலும் தளராரதும், உயிருள்ள வரை துன்பம் தரத் தக்கதான ஆசை விடுபவனுக்கே சுகம் அதிகம் என்பதை உணர்பவன் வைராக்கியம் அடைவான்.

விருப்பம் விரும்பியதை அனுபவிப்பதால் தணிவதில்லை. அது நெய்யினால் தீயானது அதிகமாக ஆவது போல் இன்னும் அதிகரிக்கும். பற்றுதல் ஏற்படுத்தி ஜொலிப்பது போல் இருக்கும் காமமானது மெய்யறிவு இல்லா மனிதர்களை சப்தாதி விஷயங்களினால் மயக்கி எரித்து விடுகின்றது. உலகிலுள்ள காம சுகங்களும், தேவ லோக பெரிய சுகங்களும் ஆசையற்றவனின் சுகத்தில் பதினாறின் ஒரு பாகத்திற்கு சமம் ஆகாது என்பதை வைராக்கியம் கொண்டவன் அறிவான்.

ஐம்புலன்களையும் ஆறாவதான மனதினை கட்டி எப்பொழுதும் ஆத்மாவிடம் வைக்க வேண்டும். புலன்களை விஷயத்தில் செலுத்துவதால் கெடுதலே. இவ்வாறு இந்திரியங்களை ஆத்மாவிடம் சேர்த்து கட்டும் திறமை உள்ளவன் பாவங்களையும், துயரத்தையும் அடையான்.

பெரும் உபாயங்களால் தேடப்பட்டவைகளும், நிலையற்றவையும், குணமற்றவையும் துன்பத்தை முதலும் முடிவுமாக கொண்டவை ஆன காம சுகங்களினால் என்ன இன்பம் இருக்கின்றது? வியாதி கொண்டு இருக்கும் மனிதனுக்கு மரணம் வரும் போது என்ன சுகம் இருக்கிறது? காட்டில் புலியானது ஆட்டை தூக்கி செல்வது போல் காமத்தில் திளைத்து விரும்பம் நிறைவேறா மனிதனை எமன் தூக்கிச் செல்கிறான். சம்சாரத்தில் இருக்கும் மனிதர்கள் பாவத்திற்கு அஞ்சுவது இல்லை.

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 38


உமை :

வைரக்கியம் பற்றி உரைக்கவேண்டும்.

மகேஷ்வரர் :  

தேவேந்திரன் எப்பொழுதும் இன்பம் அனுபவிப்பதில்லை. அவனுக்கும் மிகப்பெரிய துன்பம் இருக்கின்றது. அவனும் நித்திய சுகத்தை அடைவதில்லை.இன்பமும் துன்பமும் மாறி மாறி வருபவை. தனங்கள் எல்லாவற்றிற்கும் அழிவுதான் முடிவு; சேர்க்கைக்கு பிரிவு முடிவு; வாழ்வுக்கு மரணம் முடிவு; நிலை உயர்வையும், தாழ்வையும் கண்டு இவை அநித்தியம் என்று அறிந்து துன்பம் தர தக்கவை என்றும் வைராக்கியம் கொள்ள வேண்டும்.

பொருளை ஈட்டுதல், அதைக் காத்தல், அழிப்பது, செலவழித்தல் ஆகியவை துன்பம் தரத்தக்கவை. பொருள் உடைய மனிதனை அரசன், கள்வன், தாயார், பூதங்கள், செலவு ஆகிய ஐந்து பெரும் பகைவர்கள் எப்பொழுதும் சூழ்ந்து இருக்கின்றனர். பொருள் இல்லாதவனை துன்பங்கள் சேர்வதில்லை. பொருள் கிடைப்பதால் ஆசை முடிவுறுவது இல்லை என்று உணர்ந்தால் வைராக்கியம் உண்டாகும்.

பொருள் ஈட்டும் ஆசையானது விறகில் தீப்பற்றுவது போல் அதிகமாகும். நான்கு கடல்களையும் மேகலை எனும் அணிகலனாக அணிந்திருக்கும் பூமியினை ஜெயித்தப்பின்னும் அக்கரையை ஜெயிக்க எண்ணம் தோன்றும். பற்று குற்றம் உடையது என்றும் புற்று சேர்க்கும் கரையான் பற்றுதலினால் கொல்லப்படுகின்றது என்றும் உணர்வு வைராக்கியத்தினால் அடையப்பெறும்.

மிகப்பெரிய தேசத்தினை ஆண்டாலும் அவன் இருப்பிடம் மிக சிறியது. பெரிய பற்றினால் அவன் அனுபவிப்பது மிக கொஞ்சம். ‘எல்லாம் எனது பலத்தினால்எனும் எண்ணம் உடையவன் அனுபவிக்கும் பிரயோஜனம் மிகக் கொஞ்சமே. மனிதர்களின் தேகயாத்திரை ஒருபடி அரிசி அளவு என்பதை உணர்பவன் வைராக்கியம் அடைவான்.

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 36


உமை

புண்ணியம் செய்யும் மனிதர்களைப் பற்றி கேட்க விரும்புகிறேன். அவர்களுக்கு எப்படிப்பட்ட உலகங்கள் படைக்கப்பட்டு இருக்கின்றன? அவர்கள் அந்த உலகங்களில் போகங்களை எவ்வாறு அனுபவிக்கின்றனர்?

மகேஷ்வரர்

பத்ராசுவம், கேதுமாலம், உத்திர குருஷேத்ரம், ஜம்புவனம் முதலிய ஸ்வர்கங்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் யோஜனை தூரம் உடையது. அந்த உலகங்களில் எக்காலமும் பூக்களும் பழங்களும் இருக்கின்றன. அவைகள் பொன் நிறத்தில் இருக்கின்றன. பழங்கள் பொன்றமானவை. தடாகங்கள் தாமரை மலர்களால் மூடப்பட்டு இருக்கின்றன.

*யோஜனை தூரம் – தோராயமாக 6 – 15 கி.மீ. பொதுவில் 150 கி.மீ மேல்

அந்த தேசம் அழகாகவும், பூக்கள் நிரம்பியதாகவும் இருக்கின்றது.புண்ணியம் செய்தவர்கள் புண்ணிய பலன் எது வரையில் இருக்கின்றதோ அதுவரையில் அங்கே எல்லோரோடும் சேர்ந்து இருப்பார்கள்.அவ்விடத்தில் பிறந்தவர்கள் புண்ணியமுள்ள வரையில் போகங்களை அனுபவித்து புண்ணியம் கழிந்தவுடன் தேகம் விடுகின்றனர்.முந்திய புண்ணிய கர்மத்தின் பலனாக சிறந்த மனிதர்களாக பிறப்பு எடுக்கின்றனர். இது வரையில் ஸ்வர்க்க கதியைச் சொன்னேன்.

எட்டு புண்ணிய உலகங்களைச் சொல்கிறேன் கேள். அவைகள் ஒன்றுக் கொன்று மேலானவைகள்; போகங்கள் நிறைந்தவை; சுகங்கள் தருபவை. வித்தியாதரலோகம், கிம்புருஷலோகம், யஷலோகம், கந்தர்வலோகம், கின்னரலோகம், அப்ஸ்ரஸுகளின் லோகம், தானவ லோகம், தேவ லோகம் என சொல்லப்பட்டு இருக்கின்றன.புண்ணிய கர்மங்களைச் செய்து அங்கு வசிப்பவர்களாகிய அவர்கள் மனிதர்களுக்கு மேம்பட்ட செல்வம் படைத்தவர்களாக இருக்கின்றனர். அவ்விடங்களில் மூப்பும், பிறப்பும் இறப்பும் காணப்படுகின்றது.

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 35


உமை

மனிதர்கள் உயிருடன் இருக்கும்போதே ‘இந்த ஜீவன் நல்லகதிக்கு உரியவன்’ என்றும் ‘இவன் துன்பத்துக்கு உரியவன் என்றும்’ அறியக்கூடுமா. கூடாதா எனும் இதை உரையுங்கள்.

மகேஸ்வரர்

மனிதர்கள் தேவத்தன்மை, அசுரத்தன்மை எனும் இரண்டு வகையாக இருக்கின்றார்கள். மனம், வாக்கு செய்கையினால் தீங்கு செய்து கொண்டு இருப்பவர்கள் அசுரர் என்று அறிவாயாக. துன்பம் செய்பவரும், கள்வரும், வஞ்சகரும், பிறர்மனைவியைத் தொடுபவரும், இழிதொழிலில் விருப்பம் உள்ளவரும், சுத்தம், மங்களத்தினை விட்டவரும், ஆசாரத்தைக் கெடுப்பவரும், பாவம் செய்பவரும், உலக ஒழுக்கத்தைக் கெடுப்பவரும் அவர்களின் தீச்செயல்களால் நரகத்துக்கு உரியவர்.

பிறர் துன்பத்தினைக் கண்டு அதை தன் துன்பம் போல் கொள்பவர்கள், ஏழையாக இருந்தாலும் யாசிப்பவர்களுக்கு அன்புடன் எதையாவது கொடுப்பவர்கள், குருவுக்கு பணிவிடை செய்பவர்கள் நன்றி மறவாதவர்கள், புலன் அடக்கம் கொண்டவர்கள், கோபம், தற்புகழ்சி, கர்வம்,பொருளாசை, பகை இவற்றை விட்டவர்கள் ஸ்வர்கம் செல்பவர்கள்.

இம்மையின் ஒழுக்கத்தினால் மறுமையின் பயன் தெரியும்.

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 34


உமை : 
தர்மம் செய்யப்பட்ட அளவையும் அதன் பலன்களையும் உரைக்க வேண்டும்.

மகேஸ்வரர் : 
ஒரு கோடி தனமுள்ளவன் அதனைக் கொடுப்பதாலும், ஒரு படி தானியம் உள்ளவன் அதைக் கொடுப்பதாலும் பெரும் பலன்களை அடைகிறார்கள். இரண்டுக்கான பலனும் சமமானதே. தன் சக்திக்கு குறைவாகக் கொடுப்பது மத்தியம். மிகக் குறைவாகக் கொடுக்கப்படுவது அதமம் என்று உரைக்கப்படுகின்றது.

தான பலன் 5 வகைப்படும்

  • ஆனந்த்யம் – கொடுக்க மனம் வராததை உத்தமருக்கு கொடுப்பது. இதனால் நீண்ட காலம் தேவலோகத்தில் வசித்தல் பலனாகும்.
  • மகத்து – கொடுப்பவன், கொடுக்கப்படும் பொருள், வாங்குபவன், கொடுக்கும் வகை, இடம், காலம் ஆகிய ஆறு குணங்களும் பொருந்திய தானம். ஸ்வர்க்க லோகத்தில் வசித்தல் பலனாகும்.
  • சமம் – வாங்குபவன் தகுதிக்கு தகுந்தபடி சிரத்தையுடன் செய்யப்படும் தானம். மானிட லோகத்தில் போகம் பெறுதல் பலனாகும்.
  • ஹீனம் – ஆறு குணங்களில் சில குறைந்திருக்கும் தானம். மிலேச்ச தேசத்தில் பிறத்தல் பலனாகும்.
  • பாதகம் – ஆறு குணங்களும் இல்லாத தானம். நரகம் அடைதல் பலனாகும்.

உமை :
பாதகமான தர்மத்திற்கும் நல்ல பலன் கிடைப்பது எப்படி?

மகேஷ்வரர் :
மன உண்மையோடும் தயையோடும் செய்யப்படும் தர்மம் சுத்தமான தர்மம் ஆகும். எந்த தானங்களையும் அன்புடன் கொடுப்பதால் அதன் பலன்களை அடையலாம். எல்லா தானங்களுக்கும் இதுவே சாரம் என்று அறிவாயாக.

தோட்டங்கள், தேவாலயங்கள் அமைத்தல் , தீர்த்தங்களில் துறைகள் அமைத்தல், கிணறு வெட்டுதல், பசுமடம் அமைத்தல், தடாகம் அமைத்தல், சபைகள் அமைத்தல், சன்னியாசிகள் தங்க இடம் அமைத்தல், நோயாளிக்கும் மருத்துவம் பார்த்தல், அநாதைகளைக் காப்பது, அநாதைப் பிணங்களை எரிப்பது, தன்னால் இயன்றவரை பிறரை துன்பத்தில் இருந்து காப்பது ஆகியவை சாதுக்களால் செய்யப்படும் மற்ற தர்ம காரியங்கள் ஆகும்.

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 37


உமை :

வைரக்கியம் பற்றி உரைக்கவேண்டும்.

மகேஷ்வரர் :  

துன்பம், நோய் மூப்பு இளைப்பினால் இந்த சம்சாகார சாகரத்தில் மனம் வெறுக்காதவனுக்கு முக்தி வருவதில்லை. எனவே இதுபற்றிய ஞானத்தினை உனக்குச் சொல்வேன். ஞானத்தின் வழியே அமிர்தம் எனப்படும் முக்தி கிட்டும். மூடனிடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான துன்பங்களும் பயங்களும் தோன்றுகின்றன. கற்று அறிந்தவனிடம் அவைகள் இருப்பதில்லை. மூடன் பொருள் நட்டம் வந்த போது அதை நினைத்து துயரம் அடைகிறான். கடந்து போனதை நினைக்கக்கூடாது. அவ்வாறு நினையாதவனுக்கு துயரம் இல்லாமல் அழிந்து போகும்.

அற்ப புத்தியுள்ள மனிதர்கள் வேண்டாதது வருவதாலும், வேண்டியது போவதாலும் மனத்துயரம் அடைகின்றனர். இறந்தவனையும், கெட்டுப்போன பொருளையும் சிந்திப்பவன் துயரத்தையே அடைவான். மானிடர்களின் கர்ப்ப காலம் தொடங்கி இயற்கை அவ்வாறு உருவாக்கி இருக்கின்றது. இன்ப துன்பங்கள் பல வகையில் வந்தாலும், மனிதன் அதற்கு உட்படாமல் இருக்க வேண்டும்.

வைராக்கியவத்தை விரும்புவன் இன்பத்தைக் கண்டு மகிழாமலும், துன்பத்தைக் கண்டு துவளாமலும் இருக்க வேண்டும். எந்த பொருளிடத்தில் அன்பு உண்டாகின்றதோ அதில் இருக்கும் குற்றங்களை ஆராய்ந்து அதில் துன்பம் கலந்திருப்பதை உணரவேண்டும். இதனால் வைராக்கியத்தினை சீக்கிரம் பெறலாம்.

பெரும் கடலில் ஒரு கட்டையும், மற்றொரு கட்டையும் சேர்வது போன்றதே சுற்றங்கள் சேர்வதும். முன்பின் அறிமுகம் இல்லாமல் வந்து மீண்டும் காணாமல் போகும் மனிதர்களிடத்தில் ஸ்நேகம் கொள்ளக் கூடாது. பிள்ளை, பெண்டிர், உடல், சொத்து, அதிகாரம், நலம் ஆகியவை குடும்பம் போன்றவை. வைராக்கியம் கொண்டவன் அதில் மயங்கக் கூடாது.

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 33


உமை

பித்ரு யாகம் பற்றியும், அது செய்யத்தக்க காலம் பற்றியும், அதை எவ்வாறு செய்வது என்பது பற்றியும் அதைச் சொல்லக்கடவீர்.

மகேஸ்வரர்

பித்ருக்கள் புண்ணியர்களாகவும், தேவர்களுக்கும் மேலானவர்களாகவும், அனைவரும் பூஜிக்கத் தக்கவர்களாகவும், எப்பொழுதும் பிரகாசம் உடையவர்களாகவும்,  தென் திசையைச் சார்ந்தவர்களாகவும் இருக்கின்றனர்.

புவியில் உள்ள உயிர்கள் மழையை எதிர்ப்பார்த்து காத்திருப்பது போல் பித்ருக்கள் உலகில் நடக்கும் சிராத்தத்தினை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.  குரு ஷேத்திரம், கயை, கங்கை, சரஸ்வதி நதிக்கரைகள் சிராத்தத்திற்கு உரியவை. இங்கு செய்யும் சிராத்தம் பெரும் பயன் தரும். புண்ணியதிருத்தலங்களும், புண்ணிய நதிக்கரைகளும், மனிதர்கள் அற்ற வனங்களும், ஆற்று மணல் நிறைந்த இடங்களும் சிராத்தத்திற்கு உரித்தான இடங்களாகும். மாசி புரட்டாசி மாதங்கள், தேய்பிறை ஆகிய கிருஷ்ணபட்சம், அமாவாசை, திரயோதசி, நவமி ஆகிய திதிகளில் சிராத்தம் செய்யத்தக்க காலங்கள் ஆகும். முற்பகல், வளர்பிறை, இரவுப்பொழுது, ஜன்ம நட்சத்திரம், இரட்டித்த திதிகள் போன்றவற்றை சிராத்தம் செய்ய விலக்க வேண்டும்.

பித்ருயாகத்தின் குற்றங்கள் திலத்தினால் விலகும். பச்சைபயறு, உளுந்து போன்ற தானியங்களால் பித்ருக்குகள் திருப்தி அடைவர். பசுவின் நெய், பாயசத்தினால் ஒருவருடமும், எள்ளோடு சேந்த பாயசம், தேன் போன்றவற்றால் பன்னிரெண்டு வருட காலமும் திருப்தி அடைவார்கள். சிராத்தம் செய்யப்படும் இடத்தில் வெளிப்படையாகவும், ரகசியாகவும் பேசுதல் கூடாது.

புத்திரனை விரும்புவன் ‘பித்ருக்களே, தாமரை மாலை அணிந்த குமாரனை கர்பத்தில் அருளுங்கள்‘ என்று செபித்து நடு பிண்டத்தை மனைவியை உண்ணச் செய்ய வேண்டும்.

இவைகளை தினம், ஒவ்வொரு மாதம், வருடத்திற்கு நான்குமுறை, வருடத்திற்கு இருமுறை என்ற வகையில் தன் சக்திக்கு தகுந்த அளவில் செய்யலாம்.

இந்த பித்ரு யாகங்கள் பகைவர்களை கெடுத்து, குலத்தைப் பெருக்கும் என்பதால் மனிதர்கள் தீர்க்க ஆயுள் உள்ளவர்களாகவும், ஆரோக்கியம் உடையவவர்களாகவும், சந்ததி உடையவவர்களாகவும், தனதான்யம் உடையவவர்களாகவும் இருப்பார்கள்

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 32

உமை

பகவானே! மரணகாலம் வந்தபோது எந்த வகையால் உயிர்விட்டமனிதர்கள் மறுமையில் இதம்பெறுவார்கள்?

மகேஸ்வரர்

முயற்சியினால் உண்டாகும் மரணம் தேகத்தில் சத்தி உள்ளவனுக்கும் சக்தி இல்லாதவனுக்கும் இரண்டுவகைகளாகச் சொல்லப்படுகிறது.

முயற்சியினால் உண்டாகும் மரணம் எனில் அதை உபாயங்களினால் செய்யவேண்டும்.

உலகத்தில் மரணமானது தேக வலிமை தப்பி மூப்பும் பிணியும் பற்றிய காரணங்களால் அமையப் பெற்ற அபாயமில்லாத ஸ்வபாவமரணம் எனும் இயற்கையாலும், இறந்துபோக எண்ணத்தினால் உயிரைவிடும் முயற்சியாலும் உண்டாகிறது. காசி போன்ற நகரங்களுக்கு செல்லுதல், சாகும்வரை உண்ணாவிரதம் ஆகிய வடக்கிருத்தல், நீரில் விழுந்து உயிரை மாய்ப்பது, அக்னியில் உயிரை விடுவது என நான்கு வகைகள் கூறப்பட்டுள்ளன.

இறந்துபோகக் கருதுகிறவர்களுக்குப் பகலும் சுக்லபக்ஷமும் உத்தராயணமும் சிறந்தவை; மற்றவை இழி வானவை. சாஸ்திரத்தில் விதித்தபடி தனக்கான தர்மங்களைச் செய்து கிருகஸ்த ஆஸ்சிரமத்தை  நடத்தி,தேவ மனுஷ்ய பித்ருரிஷி ஆகியோர் கடன்களைத் தீர்த்து தனது முதுமை கண்டு நோய் அடைந்து இருக்கும்போது தன் சக்தியின்மையை தன் உறவினர்களுக்குத்  அவர்களிடம் கேட்டுக்கொண்டு தன் குடும்ப உறவுகளுக்கு உணவிற்கான ஏற்பாடுகள் எல்லாவற்றையும் செய்துவிட்டு,  தன்னுடைய புண்ணியத்திற்காகத் தானங்களைச் செய்து, எல்லாரிடத்தும் கனிவாகப் பேசி பொருள் பெற்றுக் கொண்டு புதுவஸ்திரம்தரித்து அதைத் தர்ப்பக் கயிற்றினால் கட்டிக் கொண்டு ஆசமனம் செய்து ஸங்கல்பத்தோடு நிச்சயம்செய்து உலக நடையை எல்லாம் விட்டுத் தனக்கு இஷ்டமான தர்மத்தைச்செய்ய வேண்டும். உயிர்விடும் வரையிலும் ஆகாரமில்லாமல் இருந்துகொண்டு வடதிசையை நோக்கிச் செல்ல வேண்டும். நடையற்றுப் போகும்போது மனவுறுதியுடன் படுத்து உயிரை விடவேண்டும். 

அக்நிப்பிரவேசத்தில் விருப்பமிருந்தாம் முன்சொன்ன விதிப்படியே புண்ணிய தங்களில் அல்லது நதிக்கரைகளில் கட்டைகளினால் சிதையைச் செய்து பரிசுத்தனாகிச் சங்கல்பம் செய்து கொண்டு தேவதைகளுக்கு நமஸ்காரம்செய்து அக்னியை வலம் வந்து அதில் முழுகவேண்டும். 

நீரில் விழநினைத்தாலும் அதேமுறையில் மிகப்புண்ணியமான பிரஸித்தி பெற்ற தீர்த்தத்தில் தர்மத்தை நினைத்து அமிழவேண்டும்.

இது எக்காலமும் உள்ள தர்மம் என்பதால் இவ்வாறு செய்பவன் பற்றின்மை காரணமாக பரிசுத்தமான புண்ணிய லோகங்களை அடைந்து ஸ்வர்க்க லோகத்தில் பூஜிக்கப்படுவான்.

தேகவன்மையுள்ளவன் உயிர்விடும்வகையை சரியாகச் சொல்லுகிறேன்; கேள். நாட்டை ஆளும் அரசன் தன்னுடை ராஜ்யத்தைக் காப்பாற்றுவதற்காகவும், படைச்சேவகர்கள் அரசனுக்கு கடமைப் பட்டதற்காவும், பிரம்மசாரிகள் குருவுக்காகவும் மற்றவர்கள் எல்லோரும் பசுக்களைக் காப்பதன் பொருட்டு   உயிரை விடுவது சாஸ்திரத்தில் விதிக்கப்படுகிறது. தன்னுடை ராஜ்யத்தைக் காப்பதற்காகவும், கெட்ட தன்மை உடைய மனிதர்களால் பிடிபட்ட மக்களை விடுவிப்பதற்காகவும் விதிப்படி யுத்த ஒலி எழுப்பி மன உறுதியுடன் யுத்தத்தில் சென்று பின்வாங்காமல் உயிரைவிடவேண்டும்.  இவ்வாறு இறந்த அரசன் அப்போதே ஸ்வர்க்கலோகத்தில் பூஜிக்கப் படுவான். அப்படிப்பட்டநல்லகதி வேறில்லை. க்ஷத்திரியனுக்கு அது சிறந்தது. இவ்வாறு, உயிரைவிடுவதற்கு உள்ள நல்வழிகளை உனக்குச் சொன்னேன்.

காமம், கோபம், பயம் ஆகிய ஏதாவது காரணத்தினால் தேகத்தை ஒருவன் விடுவானாயின் அவன் தற்கொலை செய்துகொண்ட காரணத்தினால் முடிவில்லாத நரகத்தை அடைவான். அவ்வாறு இறந்துபோனவர்களுக்குச் சாஸ்திரப்படி செய்யவேண்டிய காரியத்தையும் சொல்லுகிறேன்; கேள். மனிதன் இறந்துபோகும் தருணத்தில் தேகத்தைப் பூமியில் படுக்கவைக்கவேண்டும்; உயிர் விட்டவுடன் அந்தத்தேகத்தை வஸ்திரத்தினால் மூடவேண்டும்; பிரேத தேகத்தைப் பூமாலைகளினாலும் சந்தனத்தினாலும் பொன்னினாலும் அலங்கரித்து மயானத்தின் தென்புறத்தில் சிதை கொண்டு அக்கினியில் எரிக்கவேண்டும்.  உயிரில்லாத தேகத்தைப் பூமியில் புதைக்கவும்செய்யலாம்.  ஜலதர்ப்பணமும் அஷ்டகையென்னும் சிராத்தமும் அநேகரால் செய்யப்படுமானால் இறந்துபோனவர்களுக்கு பரலோகத்தில் புண்ணியம் கிட்டும்.

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 30

ஓவியம் : இணையம்

உமை

மனிதர்கள் தர்மத்திற்காகக் கொடுக்கத் தக்கவை எவை? அவற்றை நான் கேட்கவிரும்புகிறேன். அவற்றை எனக்குச் சொல்ல வேண்டும்.

உமா மகேஸ்வரர்

தொடரும் தர்மங்கள் ..

சுவர்ண தானம்

  • மிகச்சிறந்ததும் ஸ்வர்க்கத்தையும் நன்மையையும் தருவது.
  • பாவம் செய்த கொடியவனையும் சுவர்ண தானம் துலக்கி விடும்.
  • சுவர்ணமும் அக்நி என்பதாலும் எல்லா தேவர்களுக்குமாக இருப்பதாலும் சுவர்ணத்தைக் கொடுப்பதனால் எல்லாத்தேவர்களும் திருப்தி அடைந்தவராகி விரும்பினவற்றையெல்லாம் அடைவர். அவர்கள் சூரியன் அக்நி இவர்களின் சிறந்த லோகங்களை அடைவர்.
  • ஆதலால், பூமியில் மனிதர்கள் தங்களால் இயன்றவரையில் சுவர்ண தானம் செய்யவேண்டும். இதற்கு மேற்பட்டது உலகத்தில் ஒன்றுமில்லை.

கோதானம்

  • பிரம்மதேவர் உலகங்களைப் படைக்கக் கருதினபோதே எல்லாப் பிராணிகளின் ஜீவனத்திற்காகவும் கோக்களை முதலில் படைத்தால் அதனால் அவை தாய்களென்று சொல்லப்படுகின்றன.
  • வெருளாததும் நல்ல.அடக்கமுள்ளதும் நல்ல கன்றுள்ளதும் நிரம்பப் பாலுள்ளதுமான பசுவைத் தானம் செய்பவன் அதன்தேகத்தில் எத்தனை ரோமங்களிருக்கின்றனவோ அத்தனை வருஷங்கள் சுவர்க்க சுகங்களை அனுபவிப்பான், பொன்னால் அலங்கரிக்கப்பட்டகொம்பு.நுனிகளையுடைய கபிலைப் பசுவை வஸ்திரத்தோடும் கறக்க வெண்கலப் பாத்திரத்தோடும் தானம் செய்பவன் தன் புத்திர பெளத்திரர்களையும் தன் குலத்தின்முன் ஏழு தலைமுறைகளையும் பரலோகத்தில் மகிழ்ச்சி அடைவான்.
  • வீட்டில் பிறந்தவை, கிரயத்திற்கு வாங்கப்பட்டவை, பந்தயமாகக் கிடைத்தவை, பராக்கிரமத்தினால் வாங்கப்பட்ட வைகள், பஞ்ச காலங்களில் இடரப்பட்டுக் காப்பாற்றுவதற்காக வந்து சேர்ந்தவையுமான பசுக்களையும் மற்றும் இவ்வகை மார்க்கங்களால் கிடைத்த பசுக்களையும்  தானம் செய்யலாம்
  • இப்படி ஒரு வருஷம் செய்வது விரும்பினவற்றை எல்லாம் கொடுக்கும் . ஒவ்வொருநாளும் காலை மாலை இரண்டு வேளைகளிலும் பசுக்களுக்கு மங்களத்தைச் சொல்லவேண்டும். அவற்றிற்குத்தீங்கை எண் ணலாகாதென்று தர்மம்தெரிந்தவர்கள் நினைக்கின்றனர், பசுக்களே சிறந்த சுத்தம், உலகங்கள் பசுக்களிடம் இருக்கின்றன. பசுக்கள் உலகத்திற்குத் தாய்கள். அவற்றை எவ்வகையாலும் அவமதிக்காமல் இருக்கவேண்டும். அதனாலேதான் கோ தானம் சிறந்ததென்று சொல்லப்படுகிறது. கோக்களிடத்தில் பக்தியும் அவற்றைப் பூஜிப்பதும் மனிதனுக்குத் தீர்க்காயுளைக்கொடுக்கும்.
  • கோமயத்தை ஒருகாலும் அருவருக்கலாகாது. கோக்களின் மாமிசத்தை உண்ணலாகாது. கோக்களிடத்தில் எப்போதும் பக்தியோடு இருக்கவேண்டும்.
  • ஆகாரம் செய்வதற்கு முன்னமே தூயவனாக இருந்து பிறர் பசுவுக்கு ஒருபிடி புல் கொடுக்கவேண்டும்.
  • தயை அற்றவனுக்கும் நன்றி கெட்டவனுக்கும் பொருளாசை உள்ளவனுக்கும் பொய் சொல்லுகிறவனுக்கும் யாகத்தையும் சிராததையும் விட்டவனுக்கும் எவ்வகையிலும் கோ தானம் செய்யலாது.

தர்மங்கள் தொடரும்..

சமூக ஊடகங்கள்