அமுதமொழி – சார்வரி – தை – 15 (2021)


பாடல்

கெடுவேன் கெடுமா கெடுகின்றேன்
   கேடி லாதாய் பழிகொண்டாய்
படுவேன் படுவ தெல்லாம்நான்
   பட்டாற் பின்னைப் பயனென்னே
கொடுமா நரகத் தழுந்தாமே
   காத்தாட் கொள்ளுங் குருமணியே
நடுவாய் நில்லா தொழிந்தக்கால்
   நன்றோ எங்கள் நாயகமே

திருவாசகம் – எட்டாம் திருமுறை – மாணிக்கவாசகர்

கருத்து – இறைவன் துன்பத்தைப் போக்க வல்லவன் என்பதுவும், இறைவன் குருவாய் வந்து ஆட்கொண்ட போது உடன் செல்லாது இருந்தமையால்,  இங்கு வினைகளைச் செய்து வேதனைப் படுகிறேன் என்பதையும் கூறும் பாடல்.

பதவுரை

கொடிய நரகத்தில் வீழாது காத்தருள குருமணி எனும் குருவடிவாக இருப்பவனே !  வினை பற்றி நின்று செயல்படுவதால் கெடும் இயல்புடைய யான் கெடும் வழியில் சென்று கெடுகின்றேன்;  இதனால் குற்றம் இல்லாதவனாகிய நீ பழியினை அடைந்தாய்; பட்டு அனுபவிற்பதற்கு உரிய துன்பங்களை எல்லாம் நான் அனுபவிப்பதால் நீ காட்டும் பயன் என்னை?  நீ நடுவு நிலைமையில் நில்லாது ஒழிந்தால் அது உனக்கு அழகாகுமோ எம் தலைவனே?

விளக்கஉரை

  • கேடு இலதாய் – கேடில்லாதவனே
  • கெடுவேன் – கெடும் இயல்புடைய யான்
  • கெடுமா கெடுகின்றேன் – கெடும் வழியில் சென்று கெடுகின்றேன்;
  • குருமணியே – மேலான குரவனே
  • பழி கொண்டாய் – ஆட்கொண்ட பெருமான் முத்திப்பேறு அளிக்காமை பற்றியது
  • நடுவாய் நில்லாது – தம்மைப் பின் நிறுத்தி ஏனைய அடியார்களை உடன் அழைத்துச் சென்றமையை நினைவு கூர்ந்து அவ்வாறே தம்மையும் அழைத்துக் கொண்டருள வேண்டும் என்ற விருப்பம் தெரிவித்து அருளியது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 2 (2020)


பாடல்

மின்னே ரனைய பூங்கழல்க
   ளடைந்தார் கடந்தார் வியனுலகம்
பொன்னே ரனைய மலர்கொண்டு
   போற்றா நின்றார் அமரரெல்லாம்
கன்னே ரனைய மனக்கடையாய்க்
   கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த
என்னே ரனையேன் இனியுன்னைக்
   கூடும் வண்ணம் இயம்பாயே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து – உன்னைப் பற்றி எண்ணாமல் கல்மனம் உடையவனாகி துன்பக்கடலில் உழல்வோனாகிய தன்னைக் காப்பாற்ற வேண்டும் என ஈசனிடம் விண்ணபிக்கும் பாடல்.

பதவுரை

இறைவனே! மின்னலின் அழகை ஒத்த உன்னுடைய திருவடியை அடைந்தவர்கள் இந்த அகன்ற உலகைக் கடந்தார்கள்; தேவர்கள் எல்லாம் பொன் போன்ற நிறத்தினை உடைய மலர்களால் போற்றுதலுக்கு உரிய வகையில் அருச்சனை செய்து வணங்கி நின்றார்கள்; கல்லை ஒத்த மனத்தை உடையவனாய்க் உன்னுடைய திருவருள் கூடாமல் உன்னால் கழிக்கப்பட்டுத் துன்பக் கடலில் வீழ்ந்த யான், இனி உன்னை எவ்வாறு அடைய முடியும் எனும் வகையைச் சொல்வாயாக.

விளக்கஉரை

  • மின் ஏர் அனைய – மின்னலினது அழகை ஒத்த
  • பொன் ஏர் அனைய மலர் – பொன்னின் அழகையொத்த பூக்கள்; இவை கற்பகத் தரு போன்றவை
  • அடியார்கள் அடைந்த பெரும்பேற்றினை. `கடையேனாய்` என உயர்திணையாக
  • உரையாமல் சிறுமை கொண்டிருப்பதை வைத்து ‘கடையாய்’  என அஃறிணையாக உரைத்தார்,
  • என்நேர் அனையேன் – இழிவினால் எனக்கு ஒப்பார் பிறரின்றி, என்னையே ஒத்த யான்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 6 (2018)

பாடல்

வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும்
   கானின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய
தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்
   டூன்வந் துரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து
தேன்வந் தமுதின் தெளிவின் ஒளிவந்த
   வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

விண்ணுலகில் தோன்றிய தேவர்களும், திருமால், பிரமன், இந்திரன் முதலானவர்களும், காட்டில் சென்று ஊண் உறக்கமின்றி, தம்மை மறந்து கடும் தவம் செய்தும் காண்பதற்கு அரியவனாகிய சிவபெருமான்  தானே வலிய வந்து நாய் போன்றவனாகிய அடியேனைத் தாய்போலக் கருணை செய்து, உயிரினை உருகச் செய்து, என் ரோமங்கள் விதிர்விதிர்க்குமாறு செய்து, இனிமையான அமுதம் போல், தெளிவான ஒளிவடிவமான அவன் பெருமை பொருந்திய திருவடியைப் புகழ்ந்து அம்மானைப் பாட்டாக  பாடுவோமாக.

விளக்க உரை

  • ‘தேவர்களும் நிலவுலகத்திற்கு வந்து தவம் புரிகின்றனர்` எனும் பொருளில். இந்திரன் சீகாழிப்பதியில் தங்கித் தவம் புரிந்தது – கந்த புராணம் உரைத்தது
  • ‘கானின்று வற்றியும்’ – ஊண் உறக்கமின்றித் தவம் புரிதல்
  • ‘புற்றெழுந்தும்’ – தம்மை மறந்து தவம் புரிதல்
  • உயிர்ப்பு – (அன்பினால்)  உயிர்த்தல்; மூச்செறிதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 22 (2018)

பாடல்

கோல மேனிவ ராக மேகுண
   மாம்பெ ருந்துறைக் கொண்டலே
சீல மேதும் அறிந்தி லாதஎன்
   சிந்தை வைத்த சிகாமணி
ஞால மேகரி யாக நான்உனை
   நச்சி நச்சிட வந்திடும்
கால மேஉனை ஓதநீ வந்து
   காட்டி னாய்கழுக் குன்றிலே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

அழகிய பன்றி உருவத்தை  திருமேனி ஆக உடையவனே! திருப்பெருந்துறைக் மழை மேகமே! சற்றும் நல்லொழுக்கத்தை அறியாத என் சிந்தையினில் வைக்கப் பட்டிருக்கிற தலைசிறந்தவனே! உலகத்திற்கு சாட்சியாக நான் உன்னைப் புகழும்படி திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி எனக்குத் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன்னுடைய பெருங்கருணை இருந்தவாறு என்னே?

விளக்க உரை

  • கொண்டல் – கொள்ளுகை, மேகம், மழை, மேஷராசி, கொண்டற்கல், மகளிர் விளையாட்டுவகை
  • சீலம் – அழகு, குணம், வரலாறு, சீந்தில், சுபாவம், நல்லறிவு, அறம், நல்லொழுக்கம், யானையைப் பயிற்றும் நிலை, தண்டனை
  • கோல மேனி வராகமே – இது பன்றிக்குட்டிகளுக்கு இறைவன் தாய்ப்பன்றியாய்ச் சென்று பால்கொடுத்த திருவிளையாடல் பற்றிய புராணம்
  • கரி – சான்று.
  • நச்சுதல் – விரும்புதல்.
  • நச்சிட வந்திடும் காலமே – என்றும் இடையறாது அன்பு செய்து உன்பால் யான் வருவதற்குரிய காலம்.
  • ஓத – இங்ஙனம் மகிழ்ந்து பாடும்படி

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 23 (2018)

பாடல்

பூணொ ணாததொ ரன்பு பூண்டு
     பொருந்தி நாள்தொறும் போற்றவும்
நாணொ ணாததொர் நாணம் எய்தி
     நடுக்கட லுள்அ ழுந்திநான்
பேணொ ணாதபெ ருந்து றைப்பெருந்
     தோணி பற்றி யுகைத்தலுங்
காணொ ணாத்திருக் கோலம் நீவந்து
    காட்டி னாய்க்கழுக் குன்றிலே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

உன்னுடைய அன்பர்கள் உன்னிடத்தில் என் தரத்திற்கு மேற்பட்ட ஓர் அன்பு கொண்டு அந்த அன்பிலே நித்தமும் நிலைபெற்று உன்னைப் போற்றி வணங்குவதைக் கண்டு, `யான் உன்னிடத்தில் பேரன்பு உடையேனாய் இருந்தும் உன்னொடு வரும் பேற்றினைப் பெறாததால், அப்பேற்றினைப் பெற்றோர் செய்யும்  எள்ளலுக்குப் பெருநாணங்கொண்டு, அந்தநிலை நீங்குதற்கு நீதிருப்பெருந்துறையில் இருந்து, தில்லைக்கு வருகஎன்று அருளிச் செய்த திருவருளையே பற்றுக்கோடாகக் கொண்டு பல தலங்களிலும் சென்று உன்னை வணங்கிவர, துன்பக் கடலில் அழுந்தி, மிக்க மதிக்கத்தக்கதும், போற்றத் தக்கதும் எளிதில் பாதுகாத்துக் கொள்ளுதற்கு இயலாத திருப்பெருந்துறையில் கிடைத்த திருவருளாகிய பெருந்தெப்பத்தைப் பற்றிச் செலுத்தியும்திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, எவராலும் எளிதில் காணமுடியாத உன் திருக்கோலத்தை எனக்குக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?

விளக்க உரை

  • திருக்கழுக்குன்றத்தில் உனது அரிய திருக்காட்சியை எனக்குக் காட்டியருளினாய்` என்பது இதன் பொருள்.
  • உகைத்தல் – செலுத்துதல், எழுப்புதல், பதித்தல், எழுதல், உயரவெழும்புதல்,அம்பு முதலியவற்றை விடல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 30 (2018)

 

பாடல்

வேவத் திரிபுரம் செற்றவில்லி
   வேடுவ னாய்க்கடி நாய்கள்சூழ
ஏவற் செயல்செய்யுந் தேவர்முன்னே
   எம்பெரு மான்தான் இயங்குகாட்டில்
ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன்
   எந்தை பெருந்துறை ஆதிஅன்று
கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த
   கிடப்பறிவார் எம்பிரா னாவாரே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றினால் ஆன கோட்டைகளை அமைத்துக் கொண்டு கொடுமை செய்த அரக்கர்களான வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் ஆகியவர்களின் முப்புரத்தினையும் புன்னகை செய்து தீயினால் வெந்து அழியுமாறு செய்த வில்லை உடையவனும் எமது தந்தையும் ஆகிய திருப்பெருந்துறை முதல்வன், தாம் இட்ட பணியைச் செய்யும் தேவர்களது முன்னிலையில், கடிக்கின்ற நாய்கள் சூழ்ந்து வர, தான் வேடுவனாகிச் சென்ற காட்டிலே, அம்பு தைக்கப்பட்டு இறந்த தாய்ப் பன்றிக்குத் திருவுளம் இரங்கி அக்காலத்தில் அற்ப செயலாகிய தாய்ப்பன்றியாகி அதன் குட்டிகளுக்குப் பால்கொடுத்த திருஉளப் பாங்கை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவர் ஆவார்கள்.

விளக்க உரை

  • ‘வேவ’  முதல், “இயங்கு காட்டில்“ என்றது வரை, சிவபெருமான் அர்ச்சுனன் பொருட்டுப் பன்றியின் பின் வேடனாய்ச் சென்ற வரலாற்றைக் குறிப்பது.(பாசுபதாஸ்திரம் வழங்கிய காதை). அக்காலத்தில் தேவர்கள் ஏவல் செய்யும் வேடுவராய் வந்தனர் என்பதும் வரலாறு.
  • கேழல் – பன்றி
  • இறைவன் பன்றிக் குட்டிகளுக்குப் பால் கொடுத்த திருவிளையாடல்

 

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி – 6 (2018)

பாடல்

புற்று மாய்மர மாய்ப்புனல் காலே
     உண்டி யாய்அண்ட வாணரும் பிறரும்
வற்றி யாரும்நின் மலரடி காணா
     மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப்
பற்றினாய் பதையேன் மனம்மிக உருகேன்
     பரிகி லேன்பரி யாவுடல் தன்னைச்
செற்றி லேன்இன்னுந் திரிதரு கின்றேன்
     திருப்பெ ருந்துறை மேவிய சிவனே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

திருப்பெருந்துறையில் வீற்றிருந்து அமர்ந்து அருளும் பெருமானே! தேவரும், ரிஷிகளும், முனிவர்களும் மற்றவர்களும் தங்கள் உடலின்மேல் புற்று வளரப் பெற்றும், மரம் வளரப் பெற்றும், நீரும் காற்றுமே உணவாக கொண்டு மெலிந்து வாழ்ந்தாலும் அவருள் ஒருவரும் உன் தாமரை மலர் போன்ற திருவடிகளைக் காணமுடியாத அரசனே! அடியேனை ஒரு சொல் சொல்லி என்னை அகப்படுத்தி ஆட்கொண்டாய். இக்கருணையை உணராமல் நெஞ்சம் துடிக்கமாட்டாமல், மனம் மிகவும் உருகமாட்டாமல், உன்னிடம் அன்பு செய்யமாட்டாமல் இன்னும் உலகில் அலைந்து கொண்டிருக்கின்றேன்.

விளக்க உரை

  • ஓர் வார்த்தை – திருவைந்தெழுத்து மந்திரம். அகச் சான்றாய் ‘நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்’ எனும் திருவேசறவு பாடல் மூலம் திருவைந்தெழுத்து மந்திரம் பெற்றதை அறியலாம்.
  • கருத்து உணர்த்தாதமுன்னர் பதைத்தலும், உருகலும் போன்றவை இல்லாமை குற்றம் அல்ல; அவ்வாறு உணர்த்திய பின்னரும், அவை இல்லாது இருக்கின்றேன்` என இரங்கியவாறு.
  • பரியா உடல் – அன்பிற்கு உரிய மெய்ப்பாடுகள் இல்லா உடல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 30 (2018)

பாடல்

மிடைந்தெலும் பூத்தைமிக் கழுக்கூறல்
     வீறிலி நடைக்கூடந்
தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன்
     சோத்தம்எம் பெருமானே
உடைந்துநைந் துருகி உன்னொளி நோக்கி
     உன்திரு மலர்ப்பாதம்
அடைந்துநின் றிடுவான் ஆசைப்பட்டேன்
     கண்டாய் அம்மானே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

போற்றுதலுக்கு உரிய தலைவனே! எலும்புகளால் நெருக்கமாகவும், புலால் மிகுந்து அழுக்கும் ஊறி நிற்பதாயுள்ள சிறப்பில்லாத நடை வீடாகிய இந்த உடம்பு என்னை விடாது பற்றி வருதலால் வருந்தி எனை நலியத் துன்பமடைகின்றேன்; மனம் உடைந்து, நெகிழ்ந்து உருகி, உன்னருள் ஒளியைக் கண்டு நோக்கி, உனது அழகிய மலர் போன்ற திருவடியை  பேரின்பம் பெறுவதன் பொருட்டு அடைந்து நிற்க விரும்பினேன்.

விளக்க உரை

  • மனம் இளகி உருகுதலே இறைவன் திருவடியை அடைதற்கு உரிய வழி என்பது பற்றிய பாடல்
  • வீறு இலி – பெருமை இலதாகிய (இழிவை உடைய கூடம்).
  • நடைக் கூடம் – இயங்குதலை உடைய மாளிகை;  வீடு, பெயர்ந்து செல்லாது; ஆனால் இவ்வுடம்பாகிய வீடு, செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து வருவதாதல் இப் பெயர்
  • சோத்தம் – வணக்கம்.
  • உள்ளம் உருகுதல், ஒளி நோக்குதல், – அருளைப் பெறுதற்கு உரிய வழி,
  • பாதம் அடைதல் – சாதனம்
  • பேரின்பம் பெறுதல் – பயன்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 18 (2018)

பாடல்

செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே
உய்யும் வகையின் உயிர்ப்பறியேன் – வையத்
திருந்துறையுள் வேல்மடுத்தென் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான்

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றின் சக்திகளை இறைவன், தன் ஆற்றலைக் கொண்டு தூண்டி அவை செயல்படுமாறு செய்து உயிர்களின் பந்தம் மெலிவடையச் செய்யும் மறைத்தல் தொழிலாகிய திரோதான சக்தி கொண்டு ஆன்மாவில் பதியும் படி செய்யும் திருப்பெருந்துறை இறைவன், வையத்து இருந்து தன் வேலை மடுத்து என் மனதில் நுழைந்து ஊடுறுவச் செய்தான். இதற்குக் காரணமாக நான் செய்த பிழையை அறிந்திலேன்; அவனது திருவடியையே கைத்தொழுது உய்யும் வகையின் உயிர்ப்பு நிலையையும் அறிந்திலேன்.

விளக்க உரை

  • ஞானத்தை அருளியதை பழிப்பது போலப் புகழ்ந்தது.
  • உறை – தற்போதம் எழுதல்.
  • வேல் –  திரோ தான சத்தி

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – பத்திமை

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பத்திமை

பொருள்

  • தெய்வபத்தியுடைமை
  • காதல்
  • அன்பு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பத்திமையும் பரிசுமிலாப்
   பசுபாசம் அறுத்தருளிப்
பித்தன்இவன் எனஎன்னை
   ஆக்குவித்துப் பேராமே
சித்தமெனுந் திண்கயிற்றால்
   திருப்பாதங் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல்
   விளங்குதில்லை கண்டேனே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்க வாசகர்

கருத்து உரை

அன்புடைமையும், நல்லொழுக்கமும் இல்லாமைக்கு காரணமானதும் ஆன பசு, பாசத்தை அறுத்து அருளி, அடியேனை, ‘இவன் பித்தன்’ என்று கண்டோர் கூறும்படி செய்து, தமது திருவடிகளை விட்டு அகலாமல்,  வலிமையும், உறுதியும் ஆன சித்தம் என்கிற  கயிற்றால் கட்டுண்டு கிடக்கும்படி செய்த திறமை மிக்கவனாகிய சிவபெருமானது திருவிளையாடலைத் தில்லையம்பலத்தில் கண்டேன்.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

உருவத்திருமேனியின் வேறு பெயர்கள் யாவை?
சகளத் திருமேனி, வியத்த லிங்கம்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – வீறு

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  வீறு

பொருள்

  • பொருள்
  • பெருமை
  • கம்பீரம்
  • வீறாப்பு
  • சிறப்பு
  • கிளர்ச்சி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன்
     உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
மெய்ப்பதம் அறியா வீறிலி யேற்கு
     விழுமிய தளித்ததோ ரன்பே
செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தீ
     செல்வமே சிவபெரு மானே
எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
     எங்கெழுந் தருளுவ தினியே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து உரை

ஒப்புமை படுத்த உனக்கு ஒருவரும் இல்லாமலும் நிகரில்லாததுமான ஒருவனே! அருட் செல்வமே! சிவபிரானே! அடியேனது மனத்தில் ஒளிர்கின்ற ஒளியே! உனது உண்மையான நிலைப் பதத்தினை அறியாத பெருமையில்லா எனக்கு மேன்மையான பதத்தைக் கொடுத்தவனாகிய ஒப்பற்ற அன்பானவனே! வார்த்தைகளால் வர்ணனை செய்து சொல்வதற்கு இயலாத வளமையான சுடர் வடிவினனே! சோர்வுற்ற நேரத்தில் உன்னை உறுதியாகப் பற்றினேன். இனிமேல் நீ  எழுந்து அருளிச் செல்வது எவ்விடத்தில்?

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

நவந்தரு பேதங்களுள் அருவத்திருமேனி யாவை?
சிவம், சக்தி, நாதம் மற்றும் விந்து

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – பண்டு

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பண்டு

பொருள்

  • முற்காலம்
  • முன்
  • தகாச்சொல்
  • நிதி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

புகுவேன் எனதே நின்பாதம் போற்றும் அடியா ருள்நின்று
நகுவேன் பண்டு தோள்நோக்கி நாண மில்லா நாயினேன்
நெகுமன் பில்லை நினைக்காண நீஆண் டருள அடியேனுந்
தகுவ னேஎன் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே.

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து உரை

என் தந்தையே! அரிதானவனே! என்னை ஆட்கொண்ட நாளில் வெட்கம் இல்லாத நாய் போன்றவனாகிய யான், உன்னை வணங்குகின்ற அடியார் நடுவில் நின்று, மூர்த்தியாய் எழுந்தருளியிருந்த கோலமாகிய அடியார் உள்ளத்தைக் கவரும் தன்மையதாய் இருக்கும் உன் திருத்தோள்களின் அழகை நோக்கி, முன்னொரு காலத்தில், தகாச்சொற்களைச் சொல்லி  ஒன்றுமே செய்யாதவனாக இருந்தேன்;  உன்னை காண்பதற்கு உள்ளம் உருகுகின்ற அன்பு உடையவனாகவும் இல்லை; நீ ஆண்டு அருளுவதற்கு  அடியேனும் தகுதியுடையனாக இல்லாதிருக்கும் இத் தன்மை அறிந்தும் என்னை ஆட்கொண்டாய்.  உன்னுடைய திருவடி எனக்கு உரியதே! அதைப் பிரிந்து வாழ முடியாது.

விளக்க உரை

  • இறைவன் திருவடிக்காட்சி பெற்றோர், அவரைப் பிரிந்து வாழ ஒருப்படார்.
  • ‘எனதே நின்பாதம்’ – இறைவன் திருவடியில் தமக்கு உள்ள உரிமை பற்றியது.
  • ‘பண்டு தோள் நோக்கி நகுவேன்’ – இறைவன் குருவாய் வந்த பொழுது அவனது தோற்றப் பொலிவைக் கண்டு மகிழ்ந்து இருந்தது அல்லாமல் ஞானத்தைப் பெற்று அன்பு செய்யவில்லை.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – நுந்துதல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  நுந்துதல்

பொருள்

  • தள்ளுதல்
  • தூண்டுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பழிப்பில்நின் பாதப் பழந்தொழும் பெய்தி விழப்பழித்து
விழித்திருந் தேனை விடுதிகண் டாய்வெண் மணிப்பணிலங்
கொழித்துமந் தாரம்மந் தாகினி நுந்தும்பந் தப்பெருமை
தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர்தரு தாரவனே.

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து உரை

ஆகாய கங்கை, வெண்மையான மணியாகிய முத்தினையும், சங்கினையும், ஒதுக்கி மந்தார மலர்களைத் தள்ளுகின்ற அணையாகிய பெருமை பொருந்தியதும், இறைவன் சடையில் தங்குதலால், ‘சிறைநீர்’ எனப்படும் தேவ கங்கை எனும்  அந்நீரில், பிறையாகிய தோணி சேர்வதற்கு இடமாகிய கொன்றை மாலையை உடையவனே! (உன்னோடு) தொடர்புற்று வாழும் பெருமை அடைந்து, பழிப்பற்ற உன் திருவடியின் பழமையான தொண்டினை அடைந்து, அஃது என்னிடத்தினின்றும் தவறிவிட, உன்னை நிந்தித்துக் கொண்டு, திகைத்து  இருந்த என்னை விட்டுவிடுவாயோ?

விளக்க உரை

  • இறைவன் வைதாரையும் வாழ வைப்பான் என்பது கூறுவதற்காக இயற்றப்பட்ட பாடல்
  • பழந்தொழும்பெய்தி விழ –  பழமையான தொண்டினை அடைந்தும் வினையின் காரணமாக  இழந்தேன்;
  • ‘பழித்து விழித்திருந்தேனை – அதனை இழந்த துன்பத்தால் வருந்தி வைதேன்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – பொழிதல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  பொழிதல்

பொருள்

  • சொரிதல்
  • ஈதல்
  • மிகச் செலுத்துதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மூலம்

பொழிகின்ற துன்பப் புயல்வெள்ளத் தில்நின்கழற்புணைகொண்
டிழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான்இடர்க்கடல்வாய்ச்
சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச்சுறவெறிய
அழிகின் றனன்உடை யாய்அடி யேன்உன்அடைக்கலமே.

சொல் பிரிவு

பொழிகின்ற துன்பப் புயல் வெள்ளத்தில், நின் கழல் புணை கொண்டு,
இழிகின்ற அன்பர்கள் ஏறினர், வான்; யான், இடர்க் கடல்வாய்ச்
சுழி சென்று, மாதர்த் திரை பொர, காமச் சுறவு எறிய,
அழிகின்றனன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

திருமுறை 8 – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து உரை

இறைவனே! (வினை பற்றி) பெரும் துன்பமாகிய வெள்ளத்தில் இழிவான அன்பர்கள்  உன் திருவடி துணையைப் பற்றிக் கொண்டு வானில் வாழும் பெரும் பதவி அடைந்தார்கள்; அடியேன்  துன்பமாகிய கடலில் சுழியில் அகப்பட்டு, மாதராகிய அலை மோத, காமமாகிய சுறாமீன் கவரும்படி அழிய நின்றேன். அடியேன் உன் அடைக்கலமே!

விளக்க உரை

  • இறைவன் வினைபற்றி நின்ற பிறவிக் கடலுக்குத் தோணியாய் இருக்கிறான் என்பது விளக்கும் பாடல்
  • துன்ப வெள்ளம்,  பிறவிப் பெருங்கடல் – பிறவி; புயல் –  வினை; மேகம் பற்றி மழை வருதல் போல் வினைபற்றி தொடரும் பிறவிகள்; துன்பத்தைச் சொரிகின்ற மேகத்தின் மூலம் உண்டாகும் வெள்ளம் என்றும் துன்ப வெள்ளமே` என்பது மறைபொருள்
  • இழிகின்ற அன்பர்கள் – என்னோடு ஒன்றாக இருந்த அடியார்கள் கரை ஏறிவிட்டார்கள்; நான் இன்னும் கரை ஏறவில்லை எனும் பொருள் பற்றியது.
  • உடல் தோலின் சுருக்கம் கொண்டது பற்றி மாதரும், அலையும். (சில இடங்களில் அலைதலை உடைதல் பற்றி மாதரும், அலையும் என்று விளக்கப்பட்டிருக்கிறது)
  • சுறாவின் வாய்ப்பட்டோர் திரும்ப முடியாதது போல, காமத்தின் வசப்பட்டோரும் திரும்ப முடியாது

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அதெந்து

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  அதெந்து

பொருள்

  • அறிவினால் அளக்கவொண்ணாதவன் அன்பு வலையில் படுவோன்
  • `காரணம்` என்னும் பொருளையுடைய தோர் திசைச்சொல்.`என் அழைப்புக் காரணம் உடையதே எனக் கருதி எனக்கு அருள் செய்` என்பது பொருள்.
  • அஃது என்னும் பொருளை உடைய திசைச்சொல்
  • அஞ்சாதே என்னும் பொருளை உடைய திசைச்சொல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சோதியே சுடரே சூழொளி விளக்கே
  சுரிகுழற் பணைமுலை மடந்தை
பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய்
  பங்கயத் தயனுமா லறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையில்
  நிறைமலர்க் குருந்தமே வியசீர்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்
  அதெந்துவே என்றரு ளாயே.

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து உரை

சோதிப் பிழம்பானவனே! சுடரானவனே! பிரகாசம் தரும் சூழ்ந்த ஒளியை உடைய விளக்குப் போன்ற வனே! சுருண்ட கூந்தலையும் பெருத்த தனங்களையும் உடைய உமாதேவியின் பாகத்தை உடையவனே! மேலானவனே!  பாலினது நிறத்தை ஒத்த வெண்ணீற்றை அணிந்தவனே! தாமரை மலரை இடமாக உடைய பிரமனாலும், திருமாலாலும் அறியமுடியாத நீதிமானே! செல்வம் மிக்க திருப் பெருந்துறையில், நிறைந்த மலர்களையுடைய குருந்த மரநிழலில் பொருந்திய சிறப்புடைய முன்னவனே! அடியேனாகிய யான், உன்னை விரும்பி அழைத்தால், அஞ்சாதே என்று  அருள் புரிவாயாக!

விளக்க உரை

  • அருளை வேண்டிப் பாடிய பத்துப் பாடல்களைக்கொண்டது அருட்பத்தில் உள்ளப் பாடல். அருளின்றி வீடுபேறு கிட்டாது என்பதை விளக்கும் பாடல்
  • மகாமாயாசுத்தி – மாயையினின்று விலகித் தூய்மை பெறுதல் குறித்தது இப்பாடல்
  • சோதி – எல்லாவற்றையும் அடக்கி விளங்கும் பேரொளி. `சிவம்` என்னும் நிலை. சுடர் – அப்பேரொளியின் கூறு. `சத்தி` என்னும் நிலை. சூழ் ஒளி விளக்கு – ஓர் எல்லையளவில் பரவும் ஒளியை உடைய விளக்கு. எல்லா நிலையிலும் இருப்பவன் எனும் பொருள் பற்றியது.
  • இது மலையாளச் சொல் எனும் பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. தென்னிந்த மொழிகள் தமிழை ஆதாரமாக கொண்டவை என்பதாலும், திருவாசகத்தில் இச்சொல் இடம் பெற்றுள்ளதாலும் இச்சொல் எடுத்தாளப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – சவலை

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  சவலை

பொருள்

  • நோஞ்சான்

வாக்கிய பயன்பாடு

என்னடா நீ, இவ்வளவு சவலப் புள்ளையா இருக்க, நா எல்லாம் உன்ன மாதிரி இருக்கச்ச எப்டி இருந்தேன் தெரியுமா?

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தாயாய் முலையைத் தருவானே
   தாரா தொழிந்தாற் சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ
   நம்பி யினித்தான் நல்குதியே
தாயே யென்றுன் தாளடைந்தேன்
   தயாநீ என்பால் இல்லையே
நாயேன் அடிமை உடனாக
   ஆண்டாய் நான்தான் வேண்டாவோ.

எட்டாம் திருமுறை –  திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து உரை

உயிர்கட்கு எல்லாம் தாயாய் நின்று  பாலூட்டுதலை செய்வோனே! அவ்வாறு தாராவிடின் நாயேன், தாய் இருந்தும் அவள் பாலை உண்ணப் பெறாத பிள்ளை ஆகிய சவலையாய் வீணாய்ப் போவது முறையோ? அண்ணலே! இனியாவது அருளமாட்டாயா; உன்னைத் தாயே என்று கருதி உன் திருவடியை அடைந்தேன். நீ என்னிடத்து கருணையுடையவனாய் இல்லையா? நாய் போன்ற யான் அடிமையாக உன்னுடன் இருக்கும்படி முன்பு ஆண்டாய்; இப்பொழுது நான் வேண்டுவதில்லையோ?

சமூக ஊடகங்கள்