அமுதமொழி – சார்வரி – கார்த்திகை- 15 (2020)


பாடல்

காயம் அறுங்கால் கருதியமெய் யாவிவிட்டுப்
போயோர் தனுவிற் புகுகையால் – ஆயகலைய்
தந்திரமா யோசித்துத் தானியத்தால் ஆகுதியை
மந்திரத்தாற் செய்வன் மகிழ்ந்து

சிவாச்சிரமத் தெளிவு – அம்பலவாண தேசிகர் 

கருத்துஉடலில் மந்திரத்தால் ஆகுதி செய்தல் பற்றிய  பாடல்.

பதவுரை

உடலானது அறுபட்டு போகும் காலத்தில், மெய் என்று கருதிய உடலை விட்டு ஆவி பிரிந்து போய்  வேறொரு உடலில் புகும்; ஆகையால் கற்ற அனைத்து கலைகளிலும் இருக்கும் சிறப்புகளை யோசித்து தீர்மானமாக தானியம் கொண்டு ஆகுதியை வளர்ப்பது போல் குருவால் உபதேசிக்கப்பட்ட மந்திரத்தால் இந்த உடலில் ஆகுதி செய்து மகிழ்ந்து இருக்க வேண்டும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 32 (2019)


பாடல்

மூலம்

எட்டு மிரண்டு முருவான லிங்கத்தே
நட்டம் புதல்வா நவிலக்கேள் – சிட்டன்
சிவாயநம வென்னுந் திருவெழுத்தஞ் சாலே
யவாயமற நின்றாடு வான்

பதப்பிரிப்பு

எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே
நட்டம் புதல்வா நவிலக்கேள் – சிட்டன்
சிவாயநம வென்னூந் திருவெழுத்தஞ் சாலே
அவாயமற நின்றாடு வான்

திருநெறி 4 – உண்மை விளக்கம்  – மனவாசகங்கடந்தார்

கருத்து –  திருவைந்தெழுத்தினை ஓத ஆன்மாக்களின் பிறவித் துன்பம் தீரும் எனக் கூறும் பாடல்.

பதவுரை

எட்டு எழுத்தாகிய அகரத்தினையும், இரண்டு    எழுத்தாகிய உகரத்தினையும் கொண்டு உருவானதும் பத்து எழுத்தால் ஆனதும் ‘ய’ எனும் எழுத்தால் குறிக்கப் பெறுவதும் ஆன லிங்கம் எனப்படுவதான இந்த உடலில் உறையும் ஆன்மாவில் சிவபெருமான் ஆடுகின்ற நடனத்தை யாம் சொல்லக் கேட்பாயாக;  அனைத்தையும் அறிந்தவனாகிய ஈசன் சிவாயநம  என்கின்ற திருவைந்தெழுத்துக்களையே தனது திருமேனியாகக் கொண்டு ஆன்மாக்களின் பிறவித் துன்பம் நீங்கும்படி ஆடல்புரிவான் என்பதை அறிவாயாக.

விளக்க உரை

எட்டும் இரண்டும் அறியாத என்னை
எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி
எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின்
எட்டும் இரண்டும் இலிங்கமதாகும்

  • யோக மரபினை முன்வைத்து, எட்டு  ஆகிய வலது கண், இரண்டு ஆகிய இடது கண் இரண்டையும் கொண்டு சூரிய சந்திரன் எனவும், சிவசக்தியினை பத்தாகிய அக்னிஸ்தானம் என்றும் திருமந்திர விளக்கம் அருளப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 26 (2018)

பாடல்

காண்டல் வாயில் மனம்தன்வே தனையோ(டு) யோகக் காட்சியென
ஈண்டு நான்காம் அனுமானம் தனக்கும் பிறர்க்கு மென்றிரண்டாம்
மாண்ட உரைதந்த் ரமந்த்தரத்தோ டுபதே சச்சொல் லெனமூன்றாம்
பூண்ட அளவைக் கெதிர்புலன்தன் னியல்பு பொதுவென் றிரண்டாமே

திருநெறி 2 – சிவஞானசித்தியார்

பதவுரை

பொருளை அறிவதற்குக் கண்ணால் காணுகின்ற நிலையைக் கருவியாக்கிப் பொருளை அறிவதை குறிப்பிடும் பிரத்தியட்ச பிரமாணம் என்றும் காண்டல் அளவை என்றும் குறிக்கப் பெறும் காட்சியளவை வாயிற்காட்சி, மானதக்காட்சி, தன்வேதனைக்காட்சி, யோகக்காட்சி என நான்கு வகைப்படும்; கருதலளவை தன்பொருட்டு எனவும், பிறர் பொருட்டெனவும் இருவகைப்படும்; உரையளவை தந்திரகலை, மந்திரக்கலை, உபதேசக்கலை என மூன்று வகைப்படும்; இதுவே பிரமாணங்கள் என்று அறியப்படும். பிரமேயங்கள் சிறப்பியல்பு, பொதுவியல்பு என இருவகைப்படும்.

விளக்க உரை

  • காட்சி அளவை, கருதல் அளவை மற்றும் உரையளவை ஆகியவற்றின் பாகுபாடுகள் பற்றி கூறப்பட்டது

 

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 1 (2018)

பாடல்

இலயித்த தன்னில் இலயித்தாம் மலத்தால்
இலயித்தவாறு உளதாக வேண்டும் — இலயித்தது
அத்திதியில் என்னின் அழியாது; அவை அழிவது
அத்திதியும் ஆதியும் அங்கு

திருநெறி 1 – சிவஞானபோதம் – மெய்கண்டார்

பதவுரை

ஆன்மாக்களின் பார்வைகளையும் ஒடுக்கி,  குருடாக்கி, சஞ்சீதம், பிராரப்தம் மற்றும் ஆகாமியம் ஆகிய மூவினைகளுக்கும், ஆணவம், மாயை மற்றும் கண்மங்களுக்கு உட்பட்டு உலகம் தோன்றி மறைவதாக தோன்றும். நிமித்த காரணமாக நின்று வினைகளைப் பற்றி, மாயா மலங்களை அனுபவித்து வினைகளையும் மலங்களையும் முற்றிலும் இறை அருளால் நசித்து தன்னில் உலகம் இருப்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு, மூவினைகளுக்கு உட்பட்டு, உலகமே ஒடுங்கி அணுவாகி நின்றுஅதன் உருவிலேயே அதன் இயல்பாய் இருக்கின்றது என்னில் கால உணர்வின்றி உலகம் எப்பொழுதும் அழியாது பார்வையில் பட்டு நிற்கும்.

விளக்க உரை

  • உலகம் மற்றும் ஆன்மாக்கள் தோன்றி மறையும் இயல்புடையது என்றும் அது சிவனின் அருளினால் அவ்வாறான நிகழ்வுகள் நிகழ்த்தப்படுகின்றன எனவும், அவனே அனைத்துக்கும் கர்த்தா என்னும் சைவ சித்தாந்த கருத்துக்களை விளக்கும் பாடல்.
  • உலகம் மட்டுமே நிலை பொருள் எனும் நாத்திகவாதிகளின் கருத்தும், இருப்பது, இல்லாது எனும் நிலைகளைத் தாண்டி, இல்லாமலும் இருக்கலாம் என்றும்,  இல்லாத பொருள் தோன்றாது எனும் அநேகாந்தவாதத்தின் கருத்துக்களும் மறுக்கப்படுகின்றன.
  • தன் அறிவு, அறியாமை, ஒளி, ஒருள் ஆகியவற்றை  தன்னுள்ளம் கொண்டிருப்பதை ஒருவன் உணர, மாயை பற்றி ஒளியே இல்லாத இருள்நிலைதான் தன்னின் மூலம் என்பதையும் உணர்வான். இந்த நிலையில் அனைத்தும் ஒடுங்குவது உண்மையே என்றும் இத்தன்மையோன் உணர்வான். ஆகவே சங்கார காரணாகிய ஒருவனே, உலகம் தோன்றி மறையும் இயல்பானது எனும் ஆணவமலம் நீக்கி இவ்வுலகம் தோன்றுவதற்கும், மீளாவகை சென்று அடைவதற்கும் காரணமாக தனி முதல்வனாகவும், தற்பரனாகவும் இருப்பான் என்பதை விளக்கும்.

(சைவ சித்தாந்தம் அத்தனை எளிதானது அல்ல என்பதாலும், வினைபற்றியவன் உரைப்பதாலும் பொருள் குற்றம் ஏற்பட்டிருக்கலாம். குற்றம் பொருத்தருள வேண்டுகிறேன்.)

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

%e0%ae%9a%e0%af%88%e0%ae%b5-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d

மாணவன்

உடல் முதல் உலகம் வரை உள்ளதை கொண்டால் உடல்கண்ணால் காணப்படுவதும், அழிவதுமாகவும் இருக்கிறது.  உலகம் அழியாப் பொருளாக இருக்கிறது.எனவே காட்சி மட்டுமே முதன்மை எனும் உலகாயதர்களின் வாதத்தை எவ்வாறு மறுப்பது?

 

ஆசிரியர்

கண்ணால் துய்து உணரும் பொருளையே உலகாயதர்கள் கொள்கின்றனர். காணப்படும் பொருள்கள் ‘தனித்தன்மை மற்றும் பொதுத்தன்மை’ ஆகிய இருவகையில் உணர்த்தப்படும். இக் குடம் இன்னகாலத்தில், இவனால், இந்த மண் கொண்டு இவ்வாறு செய்யப்பட்டது என்பது பொதுத்தன்மை. சிறுகுடம், பெருங்குடம், மண்குடம் போன்ற தனித்தன்மையாலும் விளக்கப்படும். பொதுத்தன்மை உணர காட்சித் தேவையில்லை. தனித்தன்மையை உணர மட்டுமே காட்சித் தேவை.

எனவே காட்சி தனித்தன்மையாகிய காணப்பட்ட பொருளை நோக்கி நிற்கும். பொதுத்தன்மை  அதனொடு ஒத்த அனைத்து பொருள்களையும் பற்றி நிற்கும். அவ்வகையில் தோன்றிய சில உடம்பில் சில் உடனே அழிகின்றன. ‘சில காலம் நின்று’ சில உடல்கள் அழிகின்றன. நிற்றல் நிலை காணப்படும் அனைத்து பொருள்களுக்கும் (குறுகிய காலம் மற்றும் நெடுங்காலம்) இருப்பதால் உலகம் தோன்றி அழியக்கூடியது.

மாணவன்

பொதுத்தன்மையினை முன்வைத்து உடல் என்பதும் உலகம் என்பது வெவ்வேறானவை. ஒத்தப் பொருள்கள் மடுமே பொதுத்தன்மையால் பொருந்தும், அவ்வாறு இல்லாமல் பொதுத்தன்மை உடையவைகள் எவ்வாறு ஒவ்வாத பொருள்களுக்கு பொருந்தும்?

 

ஆசிரியர்

ஒத்திருத்தலில் அதன் தன்மைக்கேற்றவாறு சிறிது ஒத்திருத்தல், பெரிதும் ஒத்திருத்தல் எனும் இரு நிலைகள் காணப்படுகின்றன.  எனவே உடலும் உலகமும் பொதுத்தன்மையில் ஒன்றாகும். உலகத்தின் தோற்ற ஒடுக்கத்தினை மறுத்தாலும் ‘நிற்றல்’ என்பது வெளிப்படை. ஒத்த பொருளின் தன்மைகளில் உடலும் உலகமும் ஒன்று எனில் உடலைப் போன்றே உலகமும் தோற்ற ஒடுக்கம் கொண்டதாகவே இருக்க வேண்டும்.

 

பூதாதி ஈறும் முதலும் துணையாகப்

பேதாய் திதியாகும் பெற்றிமையின் – ஓதாரோ

ஒன்றொன்றிற் றோன்றி உளதாய் இறக்கண்டும்

அன்றென்றும் உண்டென்ன ஆய்ந்து               – சிவஞான போதம் சூ1 அதி1

சமூக ஊடகங்கள்