அமுதமொழி – சார்வரி – மார்கழி- 8 (2020)


பாடல்

ஊனாய் உயிராய் உணர்வாய் உரையிறந்த
தேனாய் உளமறைந்த சிற்பரத்தை – வானாய்
ஒளியாய் உருவாய் ஒலியாய் உணர்வார்
தெளியாய் தமையென்னத் தேர்

சன்மார்க்க சித்தியார் – பண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர்

கருத்து – இறைவனின் பல்வேறு குணங்களயும், அதனை உணரும் தன்மை உடையவர்களையும் கூறும் பாடல்.

பதவுரை

உருவ வடிவம் தாங்கும் உடலாகவும், அதில் உறையும் உயிராகவும், அதன் உணர்வாகவும், மவுன நிலைக் கடந்த மெய்யடியார்களிடத்தில் தேன் போன்றவனாகவும், அதனுள் உள் மறைந்திருக்கும் சிற்பரமாக இருப்பவனை பரந்து விரிந்த வானமாகவும், அதை வெளிப்படுத்தும் ஒளியாகவும், காட்சியில் தென்படும் உருவமாகவும், காட்சியில் அன்றி தன்னை வெளிப்படுத்தும் ஒலியாகவும் உணராதவர்கள் எவ்வாறு தெளிவு உடையவர்கள் ஆவார்கள்.

விளக்கஉரை

 • உரையிறந்த – மவுனநிலை எய்திய மெய்யடியார்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 5 (2020)


பாடல்

அருள் மிகுத்த ஆகமநூல் படித்து அறியார்!
   கேள்வியையும் அறியார்! முன்னே
இருவினையின் பயன் அறியார்! குருக்கள் என்றே
   உபதேசம் எவர்க்கும் செய்வார்!
வரம் மிகுத்த தண்டலைநீள் நெறியாரே!
   அவர் கிருபா மார்க்கம் எல்லாம்
குருடனுக்குக் குருடன்கோல் கொடுத்துவழி
   காட்டிவரும் கொள்கை தானே

தண்டலையார் சதகம் – படிக்காசுப் புலவர்

கருத்துஅஞ்ஞானி, இன்னொரு அஞ்ஞானிக்கு உபதேசம் புரிய முடியாததை பழமொழியுடன் இணைத்துக் கூறும்  பாடல்.

பதவுரை

கேட்டவற்றியில் மிக்க நன்மை தரக்கூடியதான திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் நீள்நெறி என்னும் திருக்கோயிலிலே எழுந்தருளிய சிவபெருமானே! சொல்லக் கேள்வி எனும் வகையில் வரும் அருள் நிறைந்தாக இருக்கும் ஆகம நூல்களைக் கற்று அறிய மாட்டாதவர்களாகவும், ஆத்ம விசாரம் எனும் சுய கேள்விகளை கேட்டு மெய்ப் பொருளை அறிய மாட்டாதவர்களாகவும், உலகியலில் ஏற்படும் இன்ப துன்பத்திற்கு காரணமான இருவினையின் வினைப் பயன்களையும் அறிய மாட்டாதவர்களாகவும், தன்னை குரு உபதேசம் செய்யத் தக்கவர்கள் என்று எண்ணி, அண்டியவர்களின் தேவைகளின் பொருட்டு உபதேசம் செய்யாமல் எதிர்ப்படும் அனைவருக்கும் உபதேசம் செய்வார்கள்; இவர்கள் அருளக்கூடிய மார்கம் எவ்வாறு எனில் குருடர் ஒருவர்க்கு மற்றொரு குருடர் கோல் கொடுத்து வழிகாட்டி வருவது போன்றதே.

விளக்கஉரை

 • ஞானி மெய் ஞானம் பெறுவதன் பொருட்டு அஞ்ஞானிக்கு அருள் உபதேசம் புரியலாம். ஆனால் அஞ்ஞானி, இன்னொரு அஞ்ஞானிக்கு உபதேசம் புரிந்தால், இருவருமே நரகம் புகுந்து, பிறவிக் குழியிலும் விழுவர்.
 • குருடனுக்குக் குருடன் கோல் கொடுத்தல் எனும் பழமொழியை விளக்கும் பாடல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஐப்பசி – 21 (2020)


பாடல்

தனத்திலே மிகுத்த செழுந் தண்டலையார்
பொன்னி வளம் தழைத்த நாட்டில்,
இனத்திலே மிகும் பெரியோர் வாக்கு மனம்
ஒன்று ஆகி எல்லாம் செய்வார்;
சினத்திலே மிகும் சிறியோர் காரியமோ
சொல்வது ஒன்று! செய்வது ஒன்று!
மனத்திலே பகை ஆகி உதட்டிலே
உறவாகி மடிவர் தாமே

தண்டலையார் சதகம்

கருத்துபெரியேர்களுக்கும் சிறியோர்களுக்குமான வித்தியாசங்களை உணர்த்தும்  பாடல்.

பதவுரை

பொன்னி எனும் காவிரி நதி பாய்ந்து வளம் தழைத்ததுமான நாட்டில், செல்வத்திலே மிகுந்து இருக்கக்கூடியவரான தண்டலையார் இருக்கும் இடத்தில், சொல் எனப்படுவதான வாக்கும், மனம் ஆகியவை எல்லாம் ஒன்றாகி தம் காரியங்களைச் செய்வர்; சினக்கொண்டு சிறுமை படைத்தவர்களாக இருக்கக்கூடிய சிறியோர்களால் செய்யப்படும் காரியங்கள் சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் இருக்கும்; அதுமட்டுமல்லாமல் மனதில் பகை கொண்டு அது வெளியே தெரியாமல் உதட்டளவில் உறவாடி தாமே மடிவார்கள்.

விளக்க உரை

 • ‘மனத்திலே பகை ஆகி’ எனும் பழமொழியை விளக்கும் பாடல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆடி – 23 (2020)


பாடல்

சிவனருள் ஆவி திரோதமலம் ஐந்தும்
அவனெழுத் தஞ்சின் அடைவாம் – இவனின்று
நம்முதலா வோதிலருள் நாடாது நாடும்அருள்
சிம்முதலா வோதுநீ சென்று

திருநெறி 4 – உண்மை விளக்கம் – மனவாசகங்கடந்தார்

கருத்து – பக்குவப்பட்ட உயிர்களுக்கு அருள் பொருந்தும் விதத்தை விளக்கும் பாடல்.

பதவுரை

சிவன் சிவனருள் ஆவி ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறையச் செய்யும் திரோதம், ஆணவமலம் நீங்கி தனது ஆற்றல் கெட்டு நீங்கும் நிலையை அடைதலாகிய மலபரிபாகம் ஆகிய ஐந்தும் ஈஸ்வரனுடைய பஞ்சாக்கரத்தின் பொருள் முறை ஆகும். இப்படி பஞ்சாட்சர வடிவமான இவன் பக்குவப்பட்ட ஆன்மாவிடத்தில் நின்று, நகாரம் முதலாக உச்சரிக்கில் அருள் பொருந்தாது என்று சிகாரம் முதலாக நீ பொருந்தி உச்சரிப்பாயானால் அருள் பொருந்தும் என்று அருளுவான்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆடி – 2 (2020)


பாடல்

வரிசைப்பிடாரிக்குப் பொங்கல்வையாமலே மழைபெய்யவில்லையென்பார்
வந்தகொடுநோயறிந்த வுழ்த மீயாம விம்மனிதனுமிறந்ததென்பார்
சரிவரச் செய்தொழின் முயற்சியில்லாமலேதான் குடியிளைத்ததென்பார்
தன்றிறமையாலே முன்சொன்னபடி தப்பாது சபதமு முடித்தனென்பார்
ஒருவனவனெதிராளி போனபின்பதி கனகயோகம் வந் துற்றதென்பார்
உபாத்தியாயர் திறமில்லையாகையாலே மகற்குயர்கல்வி யில்லையென்பார்
சரியிவையெலாமீசர் செய்கையென்றறியாமற் றரணியின் மயங்குவார்கள்
தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே

உண்ணாமுலையம்மன் சதகம் – மகாவித்வான் சின்னகவுண்டர்

கருத்து – எல்லாம் ஈசன் செயல் என்று அறியாமல் அனைத்தும் தன்னால் நடக்கின்றன என்று மயங்கி இருக்கும் மனிதர்கள் குறித்து பேசும்  பாடல்.

பதவுரை

விரும்பிய எல்லாவற்றையும் அருளும் கற்பகமரமொத்த அருணகிரி ஈசனும் உறைந்து உலகுக்கு தாயான உண்ணாமுலை அம்மையே! ஊர்காவல் தெய்வங்களாக விளங்கும் பிடாரி போன்ற தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்யாமல் மழை பெய்யவில்லை என்று கூறுவார்; ஊழ் பற்றி தொடர்ந்து வரும் கொடு நோய் பற்றி அறிந்தும் அதுபற்றி உரையாமல் மனிதன் இறந்துவிட்ட செய்தியினை உரைப்பார்; தனக்கு உண்டான தொழிலினை சரியான முயற்சியுடன் செய்யாமல் தன்னுடைய குடி வீழ்ந்தது என்று உரைப்பார்; செயல்கள் அனைத்தும் இறைவிருப்பத்தும் நடத்தப்படுகின்றன என்பதை உணராமல் தான் முன்னர் உரைத்தப்படி தப்பாமல் நடந்து சபதம் முடித்துவிட்டதாக உரைப்பார்; எதிரில் ஒருவன் வந்து பேசிச்சென்றப்பின் நிலைத்த புகழ், செல்வம், செல்வாக்கு அமையப் பெற்றதான மிகப்பெரிதான கனக யோகம் வந்து சென்றது என்று உரைப்பர்; கற்றுத்தரும் ஆசிரியர் திறமை இன்மையால் தன்னுடைய மக்களுக்கு உயர்கல்வி வாய்க்கவில்லை என்று உரைப்பார்; உரைக்கப்பட்ட இவை எல்லாம் ஈசன் செயல் என்று அறியாமல் இந்த புவியினில் மயங்கி இருப்பார்கள்.

விளக்க உரை

 • மேவு – மேன்மை
 • மேலே குறிப்பிட்ட எல்லாம் உலக வழக்கம் எனும் தலைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 30 (2020)


பாடல்

திங்கள்செஞ் சடையு மோர்பாற் றிருமுடி துலங்கக் கையிற்
கங்கண மிலங்கக் காலிற் கவின்சிலம் பலம்ப வன்பர்
சங்கரா வெனநின் றேத்தத் தாயெனக் கிருபை நல்கி
அங்கமொன் றான சோதி யணியணா மலையு ளானே

திருவண்ணாமலைப் பதிகம் – திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள்

கருத்து – அண்ணாமலைத் தலத்து ஈசனை புகந்து கருணைக் கொண்டு தாயென அருள வேண்டும் என விளிம்பும்  பாடல்.

பதவுரை

தனது செஞ்சடையில் சந்திரனை சூடியும், கையில் ஒளி வீசக்கூடியதான கங்கணமும் அணிந்து, அழகு பொருந்தியதும் ஒலிக்கக்கூடியதுமான சிலம்பும் அணிந்து சோதி வடிவமாக திருஅண்ணாமலை திருத்தலத்தில் வீற்றிருப்பவனே! உனது அன்பர்கள் சங்கரா என நின்னை நினைந்து ஏத்தி புகழ் சொற்களை தாயேனக் கருதி உன்னுடைய கருணையினை அருள்வாய்.

விளக்க உரை

 • இலங்குதல் – ஒளிசெய்தல், விளக்கமாகத் தெரிதல்
 • கவின் – அழகு
 • அலம்புதல் – ஒலித்தல், ததும்புதல், தவறுதல், அலைதல், கழுவுதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 29 (2020)


பாடல்

சொன்னந் தருங்குருவே சோணா சலத்தானே
இன்னம் பிறந்தாலு மிப்படிநின் – சன்னிதியை
நாடக் கிடைத்திடுமோ நன்னெஞ்சே நாமவரைக்
கூடக் கிடைத்திடுமோ கூறு

திருவருணைத் தனிவெண்பா – குகைநமசிவாய சுவாமிகள்

கருத்து – விலை மதிக்க இயலா புறப்பொருள்கள் கிடைத்தாலும் உன்னுடைய அருள் கிடைக்கப் பெறுமோ என்று நினைந்து உருகும்  பாடல்.

பதவுரை

சொன்னம் எனப்படும் தங்கத்தினை தரக்கூடிய குருவே, சோணாசலம் என்ற திருவண்ணாமலையில் வாழும் ஈசனே! இன்னமும் பிறப்பு என்று ஒன்று இருக்குமாயின் இவ்வாறே உன்னுடைய சன்னதியை நாடி இருக்குமாறு கிடைத்திடுமோ? நன்நெஞ்சே உன்னுடைய திருநாமத்தினை கூறும் படியான வாழ்வு மட்டுமாவது கிடைக்கப் பெறுமோ?

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 23 (2020)


பாடல்

பொன்னை நாடி நாடி நொந்து
   புலர்ந்த துன்பம் போதும் போதும்
உன்னை நம்பிச் சித்தி எட்டும்
   உற்று வக்கும் உவகை ஈவாய்!
முன்னை வேத முடிவில் ஆடி
   மூவர் போற்றும் முதல்வன் ஆனாய்!
தென்னை போலும் வாழை நீடும்
   திருத்து றையூர்ச் சிவபி ரானே!

திருத்துறையூர் சிவபெருமான் பதிகம் – திருவாமாத்தூர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

கருத்து – பொன்னாசை விடுத்து உன்னை அடைந்ததால் அட்டமாசித்தி அருள திருத்துறையூர் சிவனிடத்தில் வேண்டும் பாடல்.

பதவுரை

நீர் குறைவான போதும் வளரும் தென்னை மரங்களும், நீர் அதிகமான இடத்திலே வளரும் வாழை மரங்களும் இருக்கப்பெற்றதான திருத்துறையில் உறைகின்ற சிவனே, வேதத்தின் முடிவுகள் உன்னைப் போற்றும்படி ஆடி ப்ரம்மா, திருமால், ருத்ரன் ஆகிய மூவரும் போற்றும்படியாக அவர்களுக்கு முதல்வன் ஆனவனே! உலகியல் வாழ்வு சார்ந்து பொன்னைத் தேடித் தேடி அதன் காரணமாக துயரம் அடையப்பெற்று அதன் காரணமாக தளர்ந்து அடையப்பெற்ற துன்பம் போதும்; உன்னை நம்பி இருப்பதன் காரணமாக சித்தத்தன்மையினை கொடுக்கக்கூடிய  அணிமா, மகிமா, இலகிமா ஆகிய மூன்றும் உடலால் எய்தும் சித்துக்களையும், கரிமா, ப்ராப்தி, பிரகாம்யம். ஈசத்துவம், வசித்துவம் ஆகிய மனதால் எய்தும் சித்துக்களையும் மகிழ்வுடன் களிப்பு கொள்ளுமாறு அருள்வாய்.

விளக்க உரை

 • நடுநாட்டுத் தலம்
 • உவகை – உவப்பு, மகிழ்ச்சி, களிப்பு
 • அணிமா – அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
 • மகிமா – மலையைப் போல் பெரிதாதல்.
 • இலகிமா – காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
 • கரிமா – கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
 • பிராப்தி – எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
 • பிராகாமியம் – தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
 • ஈசத்துவம் – நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
 • வசித்துவம் – அனைத்தையும் வசப்படுத்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 22 (2020)


பாடல்

கற்றவர்க்குக் கோபம் இல்லை! கடந்தவர்க்குச்
     சாதி இல்லை! கருணை கூர்ந்த
நற்றவர்க்கு விருப்பம் இல்லை! நல்லவருக்கு
     ஒருகாலும் நரகம் இல்லை!
கொற்றவருக்கு அடிமை இல்லை! தண்டலையார்
     மலர்ப் பாதம் கும்பிட்டு ஏத்தப்
பெற்றவர்க்குப் பிறப்பு இல்லை! பிச்சைச் சோற்றினுக்கு
     இல்லை பேச்சுத் தானே

தண்டலையார் சதகம் – படிக்காசுப் புலவர்

கருத்து – பிச்சைச் சோற்றினுக்குப் பேச்சு இல்லை எனும் பழமொழியினை உறுதி செய்ய திருத்தண்டலை இறைவனை முன்வைத்து எழுதப்பட்டப்  பாடல்.

பதவுரை

மெய்ஞானக் கல்வி கற்றவர்க்கு கோபம் என்பது இல்லை; உலகியல் விஷயங்களைக் கடந்தவர்க்கு மெய்ஞானக் கல்வி கற்றவர்க்கு கோபம் என்பது இல்லை; உலகியல் விஷயங்களைக் கடந்தவர்க்கு சாதி வேறுபாடுகள் இல்லை; வீடு பெறுதற்கு தவம் செய்பவர்கள் ஆகிய துறந்தவர்களுக்கு விருப்பம் என்பது இல்லை(வெறுப்பும் இல்லை என்பது மறை பொருள்); நன்மை செய்வதையே திடமாக் கொண்டு வாழும் நல்லவர்களுக்கு எக்காலத்திலும் துன்பம் தரதக்கதான நரகம் என்பது இல்லை; நெறி முறைகளோடு கூடி சிறந்த முறையில் ஆட்சி செய்யும் கொற்றவன் எனும் அரசனுக்கு அடிமை என்பது இல்லை; யாசித்து உண்பவனுக்கு பேச்சு என்பதே இல்லை; மலர் போன்ற பாதங்களை உடைய தண்டலையார் பதம் பணிபவர்களுக்கு பிறப்பு என்பது இல்லை.

விளக்க உரை

 • தண்டலை என்பது சோழ நாட்டுக் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள சிவத் தலங்களுள் ஒன்று. ‘திருத்தண்டலை நீள்நெறி‘ என்பது இதன் முழுப்பெயர். இத்தலத்திலுள்ள சிவபெருமான் மீது பாடிய நூலே தண்டலையார் சதகம் ஆகும்
 • சிறப்புடைய பழமொழிகளைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு பழமொழியும் ஒவ்வொரு பாடலில் அமையுமாறு நூறு பாடல்களுள் வைத்துப் பாடியுள்ளதனால் இதற்கு பழமொழி விளக்கம் எனும் பெயரும் உண்டு. (பழமொழி விளக்கம் எனும் தண்டலையார் சதகம்)
 • தில்லையில் பொருள் இல்லாமல் தங்கி இருந்தபோது தில்லை சிவகாமி அம்மையைப் பாடிய போது,   அம்மையின் அருளால் ஐந்து பொற்காசுகள் வீழ்ந்தன; காசுகள் விழும்போது ‘புலவருக்கு அம்மையின் பொற்கொடை’ என்ற ஒலி எழுந்தது அன்றுமுதல் – படிக்காசுப் புலவர்
 • தருமபுர ஆதீனம் ஆறாவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ திருநாவுக்கரசு தேசிகரிடம் ஞானோபதேசம் பெற்றவர்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 21 (2020)


பாடல்

கலங்காத சித்தமுஞ் செல்வமுஞ் ஞானமுங்
   கல்வியுங் கருணை விளைவுங்
கருதரிய வடிவமும் போகமுந் த்யாகமுங்
   கனரூப முள மங்கையும்
அலங்காத வீரமும் பொறுமையுந் தந்திரமு
   மாண்மையு மமுத மொழியு
மானவிச் செயலெலாஞ் சனனவா சனையினா
   லாகிவரு மன்றி நிலமேல்
நலஞ்சேரு மொருவரைப் பார்த்தது பெறக்கருதி
   னண்ணுமோர் ரஸ்தாளி தன்
னற்சுவை தனக்குவர வேம்புதவ மேநெடிது
   நாள்செயினும் வாராது காண்
அலங்கார மாகமலர் கொன்றைமா லிகைசூடு
   மண்ணலே யருமை மதவே
ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள
  ரறப்பளீ சுர தேவனே

சதுரகிரி அறப்பளீசுர சதகம் – அம்பலவாணக் கவிராயர்

கருத்து – ஒருவருக்கு வரும் நற்செயல்கள், அழகு, ஞானம் ஆகியவை பிறவி வாசனயினல்  வரும் என்றும் அவை குறித்து மற்றவர்கள் பெற கருதக்கூடாது என்பதை உவமையுடம் கூறும் பாடல்.

பதவுரை

அலங்காரமாக மலர்களுடன் கொன்றை மாலையை சூடிடும் அண்ணலே, அழகும் வனப்பும் கொண்டவனே, உள்ளத்தில் அனுதினமும்  இன்பத்தைத் தரும் சதுரகிரியில் வீற்றிருக்கும் அறப்பளீசுர தேவனே! முன் செய்த வினைகளின் காரணமாக துயர் வரும்போது இருக்கும் கலங்காத சித்தமும், செல்வமும், ஞானமும், கல்வியும், கருணை கொண்ட வடிவமும், அளவற்ற இன்பமும், தியாகமும், அழகிய வடிவமுடைய மணத்தலும், ஒளிவீசி புகழ் தரும்படியான வீரமும், பொறுமையும், தந்திரமும், சிறப்புகளும், சிறப்புகள் உடைய பேச்சும், மானம் கொண்டு செய்யப்படும் செயல்களும் பிறவி வாசனயினல் இந்த புவிதனில் வரும்; இவ்வாறு நலங்கள் கொண்டிருக்கும் ஒருவரைப் பார்த்து அதைப் பெறக்கருதுவது என்பது ரஸ்தாளி எனும் வாழைப்பழ சுவை தனக்கு வரவேண்டும் என வேம்பு நீண்ட நாட்கள் தவம் செய்தலுக்கு ஒப்பானது; (கிட்டாது என்பது முடிபு)

விளக்க உரை

 • அலங்குதல் – அசைதல், மனந்தத்தளித்தல், இரங்குதல், ஒளிசெய்தல்
 • மத – மடன், வலிமை, மிகுதி, வனப்பு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 20 (2020)


பாடல்

பொற்புறு சபையின் மாதரார் நடனம்
     புரிந்தியான் காண்பதை யொழித்துச்,
சிற்பர சபையி னின்றிரு நடனந்
     தரிசிக்கப் பெறுவதெந்நாளோ,
மற்பொரு முசுக்கள் காந்தளைப் பாந்தண்
     மணிப்பட மெனப்பயந் துந்திக்,
கற்பக தருவின் கழுத்தொடி தரப்பாய்
     கற்குடி மாமலைப் பரனே

திருக்கற்குடிமாமலைமாலை – ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை

கருத்து – பொன்னாசையும், பெண்ணாசையும் துறந்து சிற்சபையில் நடனம் காணும் நாள் பற்றி எண்ணும்  பாடல்.

பதவுரை

கற்பக தருவின் கழுத்தில் ஒளி வீசிக் கொண்டிருப்பதைப் போல் கற்குடிமாமலையில் வீற்றிருக்கும் கடவுளே! உட்கொண்டால் மரணம் கொடுக்கக் கூடியதும், இலையும் தண்டும் மேனி மேல் பட்டால் தோலில் அரிப்பு உண்டாக்கக் கூடியதுமான கார்த்திகைபூ  எனும் காந்தள் மலரினை தொட்ட குரங்குகள் பயம் கொள்வதைப் போல் பொன்னால் ஆக்கப்பட்ட சபையில் மாதர்கள் நடனம் புரிவதைக் காண்பதை ஒழித்து,திருச்சிற்றம்பலம் எனவும், சிற்சபை எனவும், எனவும் அழைக்கபடும் சிற்பரசபை தனில் திருநடனத்தினை தரிசிக்கப் பெறும் நாள் எதுவோ?

விளக்க உரை

 • திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை – பிரபந்தத்திரட்டு – பகுதி 25.
 • தற்போதைய பெயர் உய்யக்கொண்டான்மலை
 • முசுக்கள் – கருங்குரங்குகள்
 • மற்பொரு – மல் பொரு – மல்யுத்தம், மதம் கொண்ட யானை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 26 (2020)


பாடல்

தாயாரிருந்தென்ன தந்தையுமிருந்தென்ன
   தன்பிறவியுறவு கோடி
தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன
   தாரணியையாண்டுமென்ன
சேயர்கள் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன
   சீடர்கள் இருந்துமென்ன
சித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள்
   செய்தென்ன நதிகளெல்லாம்
ஓயாது மூழ்கினும் என்ன பயன் எமனோலை
   ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ!
இதுவெல்லாம் சந்தை உறவென்று தான்
   உந்தனிருபாதம் பிடித்தேன்
யார்மீது உன்மனமிருந்தாலுமுன் கடைக்
   கண்பார்வையது போதுமே
ஈசனே சிவகாமி நேசனே
   எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

சிறுமணவை முனிசாமி

கருத்து – உறவுகள் எதுவும் நிலையானது அல்ல என்று கூறி ஈசனிடத்தில் வேண்டி அவரின் திருப்பாதங்களைப் பிடித்ததைக் கூறும் பாடல்.

பதவுரை

ஈசனாகவும், சிவகாகியின் நேசத்திற்கு உரியவனாகவும், என்னை ஈன்ற தில்லையில் வாழும் நடராஜனாகவும் இருப்பவனே, ஈசனாகவும், சிவகாகியின் நேசத்திற்கு உரியவனாகவும், என்னை ஈன்ற தில்லையில் வாழும் நடராஜனாகவும் இருப்பவனே! யாரிடத்தில் உன்னுடைய மனம் இருந்தாலும் என் மீது விடும் கடைக்கண் பார்வை போதும்; தாயாருடன் இருந்தாலும் ,தந்தையாருடன் இருந்தாலும், தன் பிறவியுடன் கூடிய உறவு இருந்தாலும், மலை போல் குவிந்திருக்கும் கோடிக் கணக்கான செல்வங்களும் இருந்தாலும், மிகப் பெரிதான பெயர் எடுத்து இருந்தாலும், தரணி எனும் இப்புவியினை ஆளும் அரசன் என்று பெயர் கொண்டு இருந்தாலும், மக்களைப் பெற்று இருந்தாலும், வழிகாட்டுதலுக்கு உரிய குருவாக இருந்தாலும், தன் வழியினை தொடரும் சீடர்கள் இருந்தாலும், பலவிதமான சித்துகள் கற்று இருந்தாலும், தினம் தினம் விரதங்கள் செய்து இருந்தாலும், புண்ணிய நதிகளில் நித்தமும் நீராடி மூழ்கி இருந்தாலும் அவைகள் எல்லாம் பயன் தராது; இவை எல்லாம் மக்கள் கூடிப் பிரியும் சந்தை போன்ற உறவு தான் என்பதை உணர்ந்து கொண்டு உன்னுடைய இரு திருப்பாதங்களைப் பிடித்தேன்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 12 (2019)


பாடல்

தாண்டவ! தில்லைத் தமனிய மன்றுள் தரணியெலாம்
ஆண்டவ! அங்க மனைத்தும் தலையேன் பரவவனி
பூண்டவ! காண்டகு மாயூர நாத! புகழ்பரந்து
நீண்டவ! நீண்டவன் நேரயன் நேடொனா நீர்மையனே

மாயூர நாதர் அந்தாதி – முத்துஸ்வாமி ஐயர்

கருத்துமாயூரநாதரின் பெருமைகளைக் கூறி வணங்கும் பாடல்.

பதவுரை

பெருவடிவம் எடுத்து நீண்டவனான திருமாலும், அவர் சென்ற திசைக்கு எதிர் திசையில் சென்ற பிரம்மனும் கண்டறியா இயலா தன்மை கொண்டவனே, தில்லையில் பொற்சபையில் இருந்து கொண்டு தரணி எல்லாம் தாண்டவம் ஆடுபவனேஊன் எனப்படுவதும் அங்கம் அனைத்தும் தலைகளை மாலையாக அணிந்து கொண்டு ஆள்பவனே, காடு போன்றதான இடத்தில் இருக்கும் மாயூர நாத! உன்னுடைய புகழானது பரந்தும் நீண்டும் காணப்படுவதாக இருக்கிறது.

விளக்க உரை

 • தமனியம் – பொன்
 • என்பு – எலும்பு
 • நேர் அவன் – அவனை ஒத்த பிரமன்
 • நேடு – தேடு

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

%e0%ae%9a%e0%af%88%e0%ae%b5-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d

மாணவன்

உடல் முதல் உலகம் வரை உள்ளதை கொண்டால் உடல்கண்ணால் காணப்படுவதும், அழிவதுமாகவும் இருக்கிறது.  உலகம் அழியாப் பொருளாக இருக்கிறது.எனவே காட்சி மட்டுமே முதன்மை எனும் உலகாயதர்களின் வாதத்தை எவ்வாறு மறுப்பது?

 

ஆசிரியர்

கண்ணால் துய்து உணரும் பொருளையே உலகாயதர்கள் கொள்கின்றனர். காணப்படும் பொருள்கள் ‘தனித்தன்மை மற்றும் பொதுத்தன்மை’ ஆகிய இருவகையில் உணர்த்தப்படும். இக் குடம் இன்னகாலத்தில், இவனால், இந்த மண் கொண்டு இவ்வாறு செய்யப்பட்டது என்பது பொதுத்தன்மை. சிறுகுடம், பெருங்குடம், மண்குடம் போன்ற தனித்தன்மையாலும் விளக்கப்படும். பொதுத்தன்மை உணர காட்சித் தேவையில்லை. தனித்தன்மையை உணர மட்டுமே காட்சித் தேவை.

எனவே காட்சி தனித்தன்மையாகிய காணப்பட்ட பொருளை நோக்கி நிற்கும். பொதுத்தன்மை  அதனொடு ஒத்த அனைத்து பொருள்களையும் பற்றி நிற்கும். அவ்வகையில் தோன்றிய சில உடம்பில் சில் உடனே அழிகின்றன. ‘சில காலம் நின்று’ சில உடல்கள் அழிகின்றன. நிற்றல் நிலை காணப்படும் அனைத்து பொருள்களுக்கும் (குறுகிய காலம் மற்றும் நெடுங்காலம்) இருப்பதால் உலகம் தோன்றி அழியக்கூடியது.

மாணவன்

பொதுத்தன்மையினை முன்வைத்து உடல் என்பதும் உலகம் என்பது வெவ்வேறானவை. ஒத்தப் பொருள்கள் மடுமே பொதுத்தன்மையால் பொருந்தும், அவ்வாறு இல்லாமல் பொதுத்தன்மை உடையவைகள் எவ்வாறு ஒவ்வாத பொருள்களுக்கு பொருந்தும்?

 

ஆசிரியர்

ஒத்திருத்தலில் அதன் தன்மைக்கேற்றவாறு சிறிது ஒத்திருத்தல், பெரிதும் ஒத்திருத்தல் எனும் இரு நிலைகள் காணப்படுகின்றன.  எனவே உடலும் உலகமும் பொதுத்தன்மையில் ஒன்றாகும். உலகத்தின் தோற்ற ஒடுக்கத்தினை மறுத்தாலும் ‘நிற்றல்’ என்பது வெளிப்படை. ஒத்த பொருளின் தன்மைகளில் உடலும் உலகமும் ஒன்று எனில் உடலைப் போன்றே உலகமும் தோற்ற ஒடுக்கம் கொண்டதாகவே இருக்க வேண்டும்.

 

பூதாதி ஈறும் முதலும் துணையாகப்

பேதாய் திதியாகும் பெற்றிமையின் – ஓதாரோ

ஒன்றொன்றிற் றோன்றி உளதாய் இறக்கண்டும்

அன்றென்றும் உண்டென்ன ஆய்ந்து               – சிவஞான போதம் சூ1 அதி1

சமூக ஊடகங்கள்

ஆட்சி சிதம்பரமா? மதுரையா?

ஆட்சி சிதம்பரமா மதுரையா
பொதுவாக வீடுகளில் ஆண் ஆதிக்கமாபெண் ஆதிக்கமா என்பதற்காக  விளையாட்டாக கேட்கப்படும் கேள்வி இதுஇது சரியானது அல்ல.
வைத்திய சாஸ்திர நூல்களுக்கு ஏற்றவாறு நாடிகளின் எண்ணிக்கை 72,000 ல்  இருந்து 3,00,0000 வரை விரிவடைகின்றன.
அவற்றில் முதன்மை பெறும் நாடிகள் இடகலைபிங்கலைசுழுமுனை, சிங்குவை,புருடன்காந்தாரிஅசனிஅலம்பருடன்சங்குனிகுரு ஆகும்அதிலும் குறிப்பாக  இடகலைபிங்கலை ஆகிய நாடிகள் முக்கியம் பெறுகின்றன.
மூக்கின் இடது நாசியில் வழியே நடைபெறும் சுவாசம் இடகலையும்(சந்திரகலை)
வலது நாசியில் நடைபெறும் சுவாசம் பிங்கலையும்(சூரிய கலை) பாம்பு குறீயீடாகவே குறிக்கப்படுகின்றன.
இந்த சுவாசஓட்டம் 4 நாழிக்கு (சுமார் 1 1/2 மணி நேரம்) ஒரு முறை மாறும். அதாவது ஒரு நாளில் 15 முறை (15*4 = 60 நாழிகை)
 
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக்
கூற்றை உதைக்குங் குறியதுவாம் (திருமந்திரம்)
வலப்புற நாடி செல்லும் போது சில வேலைகளையும், இடப்புற நாடி செல்லும் போது சில வேலைகளையும் செய்ய வேண்டும். அப்போது அவைகள் முழுமை பெறும்.
சிதம்பரம் சூரிய நாடியை முதன்மையாய் உடையத் தலம். இதை உணர்த்தவே நடராஜரின் வலது பாதம் ஊன்றி இடது பாதம் தூக்கி ஆடும் வடிவமுடன் அமைந்திருக்கும்.
மதுரை சந்திர நாடியை முதன்மையாய் உடையத் தலம்இதை உணர்த்தவே நடராஜரின் இடது பாதம் ஊன்றி வலது பாதம் தூக்கி ஆடும் வடிவமுடன் அமைந்திருக்கும்.
அதிக விபரம் வேண்டுவோர் குரு முகமாக அறிக.
புகைப்படம் : இணையம்

சமூக ஊடகங்கள்