நெட்டெழுத்தில் வட்டம் ஒன்று நின்றதொன்றும் கண்டிலேன்
குற்றெழுத்தில் உற்றதென்று கொம்புகால் குறித்திடில்
நெட்டெழுத்தில் வட்டமொன்றில் நேர்படான் நம்ஈசனே
அருளிய சித்தர் : சிவவாக்கியர்
பதவுரை
நெட்டெழுத்துக்கள் யாவும் முதலும் முடிவும் இல்லா வட்டத்தில் இருந்து தோன்றுவதைப் போல் பிரமத்திலிருந்தே நால்வகை யோனிகளிலும் உயிர்கள் உலகுக்கு தோன்றி வருகின்றது; குற்றெழுத்துக்களாகிய ‘க’ முதல் ‘ன’ வரையில் அகார ஒலியில் ஒன்றி இருக்கும்; அதில் கொம்பு, கால் ஆகியவைச் சேர்த்தால் அந்த வட்ட எழுத்துக்களின் ஒலி மாறும்.. இவ்வாறு எழுத்துக்கள் யாவும் வட்ட வடிவ ஒரெழுத்தில் இருந்தே உற்பத்தி ஆகி நிற்பதைப் போல் பிரம்மமான ஈசனிடம் இருந்தே அனைத்தும் ஆகி நிற்பதை உணர்ந்து அவனை துதியுங்கள்.
சங்கிரண்டு தாரையொன்று சன்னல்பின்னல் ஆகையால் மங்கிமாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை சங்கிரண்டை யும்தவிர்த்து தாரையூத வல்லிரேல் கொங்கை மங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே
சிவவாக்கியர்
கருத்து – சுழுமுனை வழியே வாசி பற்றி நிற்பவர்கள் ஈசனும் ஒன்றாக கூடி வாழும் தன்மை உடையவர்கள் ஆவார் என்பதைக் கூறும் பாடல்.
பதவுரை
ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டு இருப்பதான இடகலை, பிங்கலை எனப்படும் சங்குகள் இரண்டு கொண்டும் சுழுமுனை எனப்படுவதான தாரை கொண்டும் இருப்பதை அறியாமல் உலகில் எத்தனையோ மானிடர்கள் நெருப்பால் சுடப்பட்டு அழிகின்றனர். அவ்வாறு இல்லாமல் இடகலை, பிங்கலை இரண்டையும் தவிர்த்து சுழுமுனை எனப்படுவதான தாரை கொண்டு வாசி பற்றி அதை ஊத வல்லவர்கள் உலகிற்கு அமுது அளிக்கும் அன்னையுடன் கூடியவரான பாகம் உடையவராகிய ஈசனும் ஒன்றாக கூடி வாழ இயலும்.
கருத்து – அகத்திலும் புறத்திலும் நிறைந்திருக்கும் ஈசனை வழிபடும் முறையை கூறும் பாடல்
பதவுரை
யோக சாதனை செய்து தவ வாழ்வு மேற்கொள்பவர்களால் கண்டம் எனப்படுவதாகிய கழுத்தில் இருந்து சங்கின் ஒலியை எழுப்ப இயலும். அது அகத்தில் இருந்து பெறப்பட்டு புறத்தில் வெளியிடப்படுகிறது. இவ்வாறு அகம் புறம் அனைத்திலும் நிறைந்திருக்கும் ஈசனையும் அவன் திருவருளையும் உணராமல் புற உடல் சார்ந்து அதற்கு மட்டும் மதிப்பு அளித்தல் எவ்வாறு பொருந்தும்?
விளக்கஉரை
‘ஒரு கல்லை இரண்டாய் உடைத்து ஒன்றை வாசலில் பதித்தும் இன்னொன்றைக் கடவுள் எனச் சிலை செய்து வணங்குகிறீர்கள்;. இவற்றில் ஈசனுக்குகந்த கல் எதுவென்று கொள்ள முடியும் என்று வினவுகிறார்’ என்று பல இடங்களில் விளக்கம் காணப்படுகிறது. சிவனுடைய எண்ணங்களை வெளிப்படுத்தும் சித்தர் என்பதாலும், உருவ வழிபாட்டினை ஏற்றுக் கொள்ளாதவர் என்பதாலும் பொதுவான இக்கருத்து விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
பார்த்தல், கேட்டல், சுவைத்தல் , நுகா்தல் மற்றும் தொடுதல் ஆகிய ஐம்புலன்களும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு எனும் ஐம்பூதங்களும் நமசிவய எனும் ஐந்தெழுத்தான சதாசிவமேயன்றி வேறல்ல. ஐம்பூதங்களுடன் ஐம்புலன்கள் இணைந்த கலவையான உயிர்பிறப்புகளும் அனைவற்றுக்கும் எல்லையான ஐந்தெழுத்தான ஆதிமூலமேயன்றி வேறல்ல. எவ்வாறு வளர்ச்சியுறும் கனியை பிஞ்சென்று உரைப்பார்களோ அது போன்ற அளவிலா நிறைந்தவோர் அருட்பெரும் சோதியினின்று பிரிந்து வந்த (பிய்ந்து வந்த) ஒரு துகளே வளரும் நிலைகொண்ட கனலாகும். இக்கனலே அகத்துள் உறைந்து ஐம்பூத மற்றும் ஐம்புலக் கலவையான உயிரினங்களை இயக்குகிறது. இதனை உணராதவர்கள் அவரவர் வாய்ப் போக்கில் உரை செய்வார்கள்; ஈஸ்வர வடிவமான இந்த ஐந்தெழுத்தை உள்ளத்தில் நிலை நிறுத்தி வைக்கக் கூடிய வல்லமை பெற்றோர், எண்ணிக்கையால் குறிப்பிடப்படும் நிலைகளைக் கடந்து (அதாவது ஐம்புலன்கள் மற்றும் ஆறுநிலைகளான மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி மற்றும் ஆக்ஞா) மேலும் கடக்க எந்த நிலையுமல்லாத மிக உன்னதமான இறுதி எனும் பரமானந்த நிலை எய்துவர்.
அருளைத் தரும் நாதர் மற்றும் அம்மையின் உண்மையான திருவடிகளைக் கொண்டு இயம்புவது என்னவெனில் வினையது கொண்டு உருவம் கொண்ட உடலில் இருக்கும் நாடியில் தசவாயுக்களில் ஒன்றானதும், பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன் ஆகிய வாயுக்களுடன் இணைந்து அவற்றை இயக்கி தானும் இயங்குவதான தனஞ்செயனை எண்ணத்தினால் குவித்து துரியத்தின் இடமான கபாலத்தில் ஏற்றும் முறையை தெரிந்து கொண்டால், முதுமை உடையவர்களும் இளமைத் தோற்றம் உடையவராக ஆகிவிடுவார்கள்; அவர்களது மேனி சிவப்பு நிறம் கொண்டிடும்.
தன்னிடம் செல்வம் மிகுதியா இருக்கிறது எனும் கர்வத்துடன் அதை விரும்பி அடையும் பாவிகளே, உடைக்கப்பட்ட மரமாகி விறகுடன் இந்த உடலையும் வெந்து போவதை நீங்கள் அறியவில்லையா? தனது வாரிசுகள், தன் மனைவி மற்றும் சுற்றம் என்று கண்ணால் காணப்படுபவை எல்லாம் மாயை ஆகிய இவைகள் கூற்றுவன் வந்து அழைத்தபோது இவைகள் சேர்ந்து வருமா?
விளக்கஉரை
கர்வம் கொண்ட உடலை தீயினில் இட்டு என்றும் பொருள் கொள்ளலாம்.
நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய் சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய் யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில் செவ்வைஒத்து நின்றதே சிவாயநம அஞ்செழுத்துமே
சிவவாக்கியர்
பதவுரை
நம்பிக்கைத் தரும் ‘ந’ எனும் எழுத்தாகிய நகாரம் இடுப்பிலிருந்து கால்கள் வரையிலாகவும், ‘ம’ எனும் எழுத்தாகிய மகாரம் வயிற்றுப்பகுதியாகவும், ‘சி’ எனும் எழுத்தாகிய சிகாரமானது நெஞ்சில் இருந்து இரண்டு தோள்களாகவும், சிறந்ததான ‘வ’ எனும் எழுத்தை குறிக்கும் வகரம் வாயாகவும், ‘ய’ எனும் எழுத்தை குறிக்கும் யகரம் இரண்டு கண்களாகவும் தூலத்தில் அமைந்துள்ள ஐந்தெழுத்து, சூட்சமத்தில் மெய்ப்பொருளாக அதே பஞ்சாட்சரமாக ஒத்து இருப்பதை அறிந்து அதனை தியானித்து அச் சிவமே ஐந்தெழுத்தாக இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
விளக்கஉரை
‘நமசிவய’ என்னும் மந்திரம்தான் இந்த உடல். அதனுள்தான் இறை ஆகிய சிவம் உள்ளது. யோக முறையில் வழிமுறை தெரிந்து உடலின் உள்ளே செல்ல சிவத்தை உணரலாம்.