அமுதமொழி – சார்வரி – புரட்டாசி- 7 (2020)


பாடல்

காண்பவன் சிவனே யானால் அவனடிக் கன்பு செய்கை
மாண்பறம் அரன்றன் பாதம் மறந்துசெய் அறங்க ளெல்லாம்
வீண்செய லிறைவன் சொன்ன விதியறம் விருப்பொன் றில்லான்
பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே

திருநெறி 2 – சிவஞானசித்தியார் – பிரமாணவியல் – இரண்டாம் சூத்திரம்

கருத்து – சிவனே அறங்களை வகுத்தல் ஆதலால், அவனே வணங்கத் தக்கவன் எனும்பாடல்.

பதவுரை

இறைவன் ஆகிய சிவன் சொன்னவிதிகளே அறமாகும் என்பதாலும், வினை பற்றி உயிர்களால் செய்யப்படும் செயல்களை சாட்சி பாவத்தில் நின்று காண்பவன் அவன் என்பதாலும் அவன் திருவடிக்கு அன்பு செய்தல் என்பது மாண்புடைய அறமாகும். (ஏனைய கடவுளர்களுக்கு செய்யப்படும் வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு அவர்கள் விரும்பியபடி அருளுபவன் என்பது பெறப்படும்). அவனன்றி செய்யப்படும் அறங்கள் எல்லாம் பிறவியினைத் தரும் என்பதால் அவை வீணாகும் என்பதாலும் உயிர்களிடத்தில் கருணை உள்ளவனாகவும், விருப்பம் ஏதும்  இல்லாதவனாகவும் ஆகிய அவன் பூசையே விருப்பத்தோடு செய்யத்தக்க பூசையாகும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 22 (2020)


பாடல்

நாயகன் கண்ந யப்பால் நாயகி புதைப்ப எங்கும்
பாயிரு ளாகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றித்
தூயநேத் திரத்தி னாலே சுடரொளி கொடுத்த பண்பில்
தேயமா ரொளிக ளெல்லாஞ் சிவனுருத் தேச தென்னார்

திருநெறி – சிவஞானசித்தியார்

கருத்துஉமையம்மை சிவனின் கண்களை விளையாட்டாக மூடியதால் ஏற்பட்டவைகளே போக, வேக, யோக வடிவங்கள் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

புவனங்களுக்கு நாயகனின் திருக்கண்களை நாயகி மூடியபோது சகலம், கேவலம், சுத்தம் ஆகிய தத்துவங்கள் ஒன்றான தன்மையான சங்காரம் ஒத்து எங்கும் இருள் சூழ்ந்த போது,  தனது நெற்றிக் கண்ணை திறந்தார். அந்த முதல்வன் கொண்ட திருமேனிகள் போகம் கொள்வதன் பொருட்டு  சில திருமேனி போகவடிவமும், வினையினை விடுதலை முன்வைத்து சில திருமேனி கோரவடிவமும், யோகமுத்தி தருவதன் பொருட்டு யோக வடிவமும் வெளிப்பட்டன; இவைகள் ஆன்மாக்கள் உய்வுறுவதன் பொருட்டு அருள்புரிக்கூடிவை என்பதால் இந்த அருளுதல் தொழில் செய்வதற்காக  திருக்கண் புதைத்த திருவிளையாட்டின் வழி நிகழ்ந்த நிகழ்ச்சியே என்பதற்கு இது சான்று.

விளக்க உரை

  • நயப்பு – அன்பு. விருப்பம், இன்பம், தலைவி எழிலைப் புகழ்கை, மலிவு, இலாபம், மேம்பாடு, நன்மை, மகிழ்ச்சி
  • பாய்தல் – பரத்தல்
  • தேயம் – உலகம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 23 (2020)


பாடல்

நீடு பாவ புண்ணி யங்க ளால்நிரய வானகம்
கூடு வோர்கள் இன்றுநின்று கூட்டு வோர்கள் இன்மையின்
ஓடு மாக ணைத்தி றத்தின் உற்றவா றுரைத்தியேல்
வீடு மாகணைக்கு நாடும் வில்லி போல வேண்டுமே

திருநெறி 2 – சிவஞானசித்தியார் – பரபக்கம் – நிகண்டவாதி மதம்

கருத்து – வினைகளை அனுபவிக்கசெய்ய ஒரு கர்த்தா இருக்க வேண்டும் என்பதை அறுதியிட்டு கூறும் பாடல்.

பதவுரை

ஆன்மாக்கள் செய்த புண்ணிய பாவங்களை அறிந்து நின்று அவற்றின் பலாபலன்களை செலுத்துவிக்க ஒரு கர்த்தா இல்லையென்று நீ சொன்னால், மிக்க பாவங்களால் ஆன நரகங்களையும் மிக்க புண்ணியங்களால் ஆன சுவர்க்கங்களில்  பொருந்திநின்று அதனைஅநுபவிப்பாரில்லை; விரைந்த செலுதப்பட்ட பெரிய அம்பு இலக்கில் படுதல் போல செய்யப்பட்ட புண்ணியபாவங்கள் செய்தவனிடத்தே விரையத் தாமே சென்று பற்றுமென்று நீ சொன்னால், அவ்வாறு விடப்பட்ட பெரியகணைக்கு இலக்கை சென்று அடையும்படி செய்வதற்கு ஒரு வில்லாளன் வேண்டும் எனக் கொண்டால் அந்த ஆன்மாக்கள் செய்த கன்மங்களை அநுபவிக்கும்படி கூட்டுவிக்க ஒரு கர்த்தா வேண்டும்.

விளக்க உரை

  • வில்லி – வில்லாளன், மன்மதன், வீரபத்திரன், அருச்சுனன், வேடன், வில்லிபுத்தூராழ்வார்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 13 (2019)


பாடல்

இப்படி யன்றிக் கன்மம் உயிர்இறை வேறுண் டென்று
செப்பிடும் அவர்க்கு மண்ணோர் செய்திடுங் குற்ற மென்னோ
ஒப்பிலா மலடி பெற்ற மகனொரு முயற்கொம் பேறித்
தப்பில்ஆ காயப் பூவைப் பறித்தமை சாற்றி னாரே

திருநெறி 2 – பரபக்கம் – உலகாயதன் மதம் – சிவஞான சித்தியார்

கருத்துஉலகாயர்கள் கொள்கையினை உவகை காட்டி விளக்கி அதை மறுதலித்து ஆன்மா உண்டு எனவும், அதை இயக்க கர்த்தா உண்டு எனவும் கூறும் பாடல்.

பதவுரை

இவ்வாறாக பூதக்கூட்டத்தினால் உயிர் உறையும் உருக்கள்  வாயுக்களுடன் சேர்ந்து முன் ஜென்மங்களில் செய்த கர்மத்தால் பின் தொடரும் என்றும் இதை அனுபவிக்க ஆன்மா உண்டு எனவும் இதனை கூட்டுவிப்பவன் ஆகிய ஒரு கர்த்தா உண்டு எனவும் சமயவாதிகள் கூறுவார்கள். இதனை மறுத்து சமயவாதிகளை மயக்கச் உலகாயர்கள் கூறுவது என்னவெனில் ஒப்புமை செய்ய இயலாத  மலடி பெற்ற மகன் ஒரு முயலின் கொம்பிலே ஏறி ஆகாயத்தில் பூத்த பூவைத் தவறின்றிப் பறித்தான் எனும் தன்மையை ஒத்தது.

விளக்க உரை

  • உலகாயர்கள் – பூதமே தெய்வம், பூதக்கூட்டத்தின் குறைவே கன்மம், பூதக் கூட்டத்தின் நிகழும் உணர்வே ஆன்மா; இவ்வாறு அன்றி வேறு தெய்வமும் கன்மமும் ஆன்மாவுமில்லை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 3 (2018)

பாடல்

எங்கும்தான் வியாபியாய் நின்று உணரும் இவ் ஆன்மா என்னின்
தங்கிடும் அவத்தை போக்கு வரவுகள் சாற்றல் வேண்டும்
பங்கம் ஆர் புலன் ஒன்று ஒன்றாகப் பார்த்திடல் பகரல் வேண்டும்
இங்கு எலாம் ஒழிந்தால், நிற்பது எங்கனம்? இயம்பல் வேண்டும்

சிவஞானசித்தியார் – சுபக்கம்

பதவுரை

ஐம்பொறிகளின் வாயிலாக உணரப்படும் உயிர் எங்கும் வியாபித்து நிற்கும் எனில் காரிய அவத்தைகளான நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படக்கம் ஆகியவற்றில் அது எங்கும் அறிவோடு இருக்க வேண்டும்; அது பற்றி தொடக்கம் மற்றும் முடிவு பற்றி உரைத்திடல் வேண்டும்; உயிர் எங்கும் வியாபித்து நிற்பின் குற்றம் நிறைந்த புலன் பற்றியும், குற்றமற்ற புலன் பற்றியும் எனத் தனித்தனியே அவைகளைப் பார்த்து சொல்ல வேண்டும்; பூவுலகில் உடல் அழிந்தால் உயிர் எவ்வாறு எங்கு நிலைபெற்று இருக்கும் என்பதை சொல்ல வேண்டும்; அவ்வாறு இல்லாமல் இருப்பதால் எங்கும் வியாபித்து நிற்பது உயிர் அல்ல

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 26 (2018)

பாடல்

காண்டல் வாயில் மனம்தன்வே தனையோ(டு) யோகக் காட்சியென
ஈண்டு நான்காம் அனுமானம் தனக்கும் பிறர்க்கு மென்றிரண்டாம்
மாண்ட உரைதந்த் ரமந்த்தரத்தோ டுபதே சச்சொல் லெனமூன்றாம்
பூண்ட அளவைக் கெதிர்புலன்தன் னியல்பு பொதுவென் றிரண்டாமே

திருநெறி 2 – சிவஞானசித்தியார்

பதவுரை

பொருளை அறிவதற்குக் கண்ணால் காணுகின்ற நிலையைக் கருவியாக்கிப் பொருளை அறிவதை குறிப்பிடும் பிரத்தியட்ச பிரமாணம் என்றும் காண்டல் அளவை என்றும் குறிக்கப் பெறும் காட்சியளவை வாயிற்காட்சி, மானதக்காட்சி, தன்வேதனைக்காட்சி, யோகக்காட்சி என நான்கு வகைப்படும்; கருதலளவை தன்பொருட்டு எனவும், பிறர் பொருட்டெனவும் இருவகைப்படும்; உரையளவை தந்திரகலை, மந்திரக்கலை, உபதேசக்கலை என மூன்று வகைப்படும்; இதுவே பிரமாணங்கள் என்று அறியப்படும். பிரமேயங்கள் சிறப்பியல்பு, பொதுவியல்பு என இருவகைப்படும்.

விளக்க உரை

  • காட்சி அளவை, கருதல் அளவை மற்றும் உரையளவை ஆகியவற்றின் பாகுபாடுகள் பற்றி கூறப்பட்டது

 

சமூக ஊடகங்கள்