அமுதமொழி – சுபகிருது – மார்கழி– 17 (2023)


பாடல்

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று

மூதுரை – ஔவையார்

கருத்து – நல்லவர்களைப் பற்றி உரைத்து அவர்களுடன் இருத்தல் நன்மையைத் தரும் என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

மனம், வாக்கு காயத்தால் நற்குணம் உடையோரை கண்ணினால் காண்பதும் நல்லதே;  நல்லவர்களிடம் இருந்து பயன் நிறைந்த சொல்லை கேட்டலும் நல்லதே;  அவ்வாறான நல்லவருடைய நல்ல குணங்களை பேசுதலும் நல்லதே; அந்த நல்லவர்களுடன் கூடியிருத்தலும் நல்லதே.

விளக்க உரை

  • ‘நல்லார் இணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே அல்லாது வேறு நிலையுளதோ’ எனும் பட்டினத்தார் பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – ஐப்பசி – 1 (2022)


பாடல்

புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்- எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்

நல்வழி – ஔவையார்

கருத்து – பிறவிக்கு காரணம் நல்வினைகளும், தீவினைகளும் என்று உரைத்து அதனால் நன்மையைச் செய்ய வேண்டும் என்று கூறும் பாடல்.

பதவுரை

இந்த மண்ணில் பிறந்தவர்கள் வைத்திருக்கும் பொருள் எனும் செல்வமானது  முன்சென்ற பிறவிகளில் செய்த புண்ணியம் பாவம் என்னும் இரண்டின் காரணமாக அமைந்தது. இவ்வாறு இருப்பதைத் தவிர வேறு இல்லை என்று எல்லாச் சமயங்களும் (பாவ புண்ணிய கருத்தினைக் கொண்ட சமயங்கள்)  கருதிப் பார்த்துச் சொல்லுகின்றன.  எனவே தீமைகளை விலக்கிவிட்டு நன்மை தரும் செயல்களைச் செய்வோம். அதனால் புண்ணியம் பெருகி பாவம் போய்விடும். இது அடுத்த பிறவிக்கு முதலாக இருக்கும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – வைகாசி – 24 (2022)


பாடல்

ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்-ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்யம் புவியதன் மேல்

ஔவையார் – நல்வழி

கருத்துஊழினால் அடையக் கூடிய ஆக்கக் கேடுகளைத் தவிர்க்க வல்லவர் ஒருவரும் இல்லை என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

அழகிய பூமியின்மேலே, மனதில் மாறுபாடு இல்லாமல் உண்மையாக வாழ்வதற்கு உரியாரை அழிக்கவல்லார் யாவர்? அது போல இறத்தலுக்கு உரியவரை இறவாமல் நிறுத்த வல்லார் யாவர்? ஒழிவு இல்லாமல் பிச்சைக்குச் செல்வோரை, தடுக்க வல்லவர் யாவர்?

விளக்கஉரை

  • ஓவாமல் – சளைக்காமல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 20 (2021)


பாடல்

எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை

மூதுரை – ஔவையார்

கருத்து – முன் ஜென்ம வினைவழியே அனைத்தும் நிகழும் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

தான் எண்ணியவாறு  நடக்கவில்லையே என்று வருந்தும்  மட நெஞ்சமே! விரும்பியதை எல்லாவற்றையும் தரும்  கற்பக மரத்திடம் சென்று வேண்டி நின்றாலும் அது   எட்டிக் காயைக் கொடுக்கிறது எனில் அது அவர்கள் முன் பிறவியில் செய்த வினையின் பயன்.

விளக்க உரை

காஞ்சிரங்காய் – எட்டிக் காய்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 2 (2021)


பாடல்

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர்
குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாங் கண்டீர் மரம்

மூதுரை – ஔவையார்

கருத்து – தீங்குகளை மனதில் கொள்ளாமல்  அவர்களைக் காக்கும் சான்றோர்கள் குணம் பற்றி உரைக்கும் பாடல்.

பதவுரை

மாந்தர்களால் வெட்டுப்பட்டு தன்னுடைய அவயங்கள் ஆகிய கிளைகள் குறையும் போதும் தன்னை வெட்டுபவனுக்கு நிழலைத் தந்து காக்கும் மரத்தைப் போல, அறிவுடைய சான்றோர்கள் தங்கள் உயிருக்கே தீங்கு நேரினும் அந்த தீங்குகளை மனதில் கொள்லாமல் அவ்வாறு தீங்கு செய்பவனையும் இயன்ற வரைக் காக்கவே செய்வர்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – வைகாசி – 9 (2021)


பாடல்

புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்- எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்

நல்வழி -ஔவையார்

கருத்து – மனிதர்கள் பெறும் செல்வங்கள் முன் பிறவியில் செய்தவைகளின் விளைவு எனக் கூறும் பாடல்.

பதவுரை

இந்த மண்ணில் பிறந்தவர்கள் வைத்திருக்கும் பொருள் போன பிறவியில் அவர்கள் செய்த புண்ணியம் பாவம் என்னும் இரண்டு மட்டுமே. இதைத் தவிர வேறு இல்லை என்று எல்லாச் சமயங்களும் அறுதியிட்டு உண்மையை உணர்ந்து  சொல்லுகின்றன. ஆதலினால் இந்த உண்மைய உணர்ந்து தீமைகளை விலக்கித் தள்ளிவிட்டு நன்மை தரும் செயல்களைச் செய்வோம். அதனால் புண்ணியம் பெருகும். பாவம் போய்விடும். அடுத்த பிறவிக்கு முதலாக இருக்கும்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 2 (2021)


பாடல்

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா-இருந்து ஏங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்

நல்வழி – ஔவையார்

கருத்துமனிதர்கள் வினைபற்றி இருக்கும் போது அது குறித்து துயரப்பட்டு இறத்தலே தொழிலாக இருப்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

வருத்தப்பட்டு எத்தனை முயன்று அழைத்தாலும் நமக்குச் சேராதவைகள் நம்மிடத்தில் வந்து சேர்வதில்லை. நம்மிடம் வந்து பொருத்தி நிற்பவைகள் நம்மை விட்டுப் போகவேண்டும் என்றால் அது எக்காலத்திலும் போவதும் இல்லை. இவ்வாறு வினைகள் பற்றி மனிதர்களின் வாழ்வு இருக்கும் போது ஒன்றை அடையவேண்டும் என்னும் ஏக்கம் கொண்டு நெஞ்செல்லாம் புண்ணாகும்படி வருந்தி நெடுந்தூரம் திட்டமிட்டுக் கொண்டிருந்து மரணிப்பதே மாந்தரின் தொழிலாகப் போய்விட்டது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 11 (2020)


பாடல்

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை – நினைப்பதெனக்
கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க் கில்லை விதி

நல்வழி – ஔவையார்

கருத்துவினைகளின் பயன்களை அனுபவியாமல் விலக்குவதற்கு வேதம் முதலாகிய அனைத்து நூல்களிலும் வழி முறைகள் சொல்லப்படவில்லை என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

நெஞ்சே! தொந்த வினைகளின் பயன்களை அனுபவியாமல் விலக்குவதற்கு வேதம் முதலாகிய அனைத்து நூல்களிலும் வழி முறைகள் சொல்லப்படவில்லை. நீ வினை வலிமையை மனதினால் ஆராய்ந்து அதை வெல்ல நினைத்து அதுபற்றி கணித்துக் கவலைப்படலாம் அன்றி நற்செயல்கள்  புரிந்து அதன் காரணமாக விண்ணுலகம் செல்பவர்களை அவர்களின் தலைவிதி தடுத்து நிறுத்தாது.

விளக்கஉரை

  • விண்ணுறுவார் – விண்ணுலகம் செல்பவர்கள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 26 (2020)


பாடல்

எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை

மூதுரை – ஔவையார்

கருத்து – கற்பக மரத்தின் கீழ் நின்றாலும் வினையின் காரணமாக விதிக்கப்பட்டதே கிடைக்கப் பெறும் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

தாம் எண்ணிய செயல்கள் எண்ணியவாறு  நடக்கவில்லையே என்று வருந்திக்கொண்டிருக்கும் மூடத்தனமான நெஞ்சமே!  நீ நீனைத்தபடி எல்லாச் செயலும் நடந்துவிடுமா? கருத்தில் ஒருமை கொண்டு, நினைத்தவற்றை எல்லாம் வழங்கத் தக்கதான கற்பக மரத்திடம் சென்று கேட்டாலும், விதியில் எழுதியுள்ளபடி நமக்குக் கிடைக்கக் கூடியதான எட்டிக்காயே கிடைக்கும் என்றால்  அது நம் முன் வினைப் பயனே.

விளக்கஉரை

  • காஞ்சிரங்காய் – எட்டிக்கொட்டை, எட்டிக்காய்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 6 (2020)


பாடல்

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை – நினைப்பதெனக்
கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க் கில்லை விதி

நல்வழி – ஔவையார்

கருத்துவினைகள் அனுபவிக்கப்படாமல் தீர்க்கப்படுவதில்லை என்பதையும் அவற்றை தீர்க்க வழியும் இல்லை என்பதையும் அறுதியிட்டுக் கூறும் பாடல்.

பதவுரை

நெஞ்சே! நீ வினை வலிமையை கண்ணால் கண்டு அவற்றை வெல்வதற்காக  நினைத்துப் பார்த்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கலாம்.  ஆனால் நல்ல செயல்கள் புரிந்து விண்ணுலகம் செல்பவர்களின் தலைவிதியினை தடுத்து நிறுத்த முடியாது. வேதம் முதலான அனைத்து நூல்களை ஆராய்ந்து பார்த்தாலும் உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினை, அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும் ஏனைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினை, பிராப்தம் ஆகிய நிகழ்கால வினை, ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினை ஆகிய எல்லா வினைகளின்  பயன்களை அனுபவிக்காமல் இருப்பதற்கு வழி இல்லை.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 30 (2019)


பாடல்

மேற்பார்க் கமைந்தருள் மூவா எருதும் விளங்குகங்கை
நீர்ப்பாய்ச் சலும்நன் னிலமுமுண் டாகியும் நின்னிடத்திற்
பாற்பாக் கியவதி நீங்கா திருந்தும் பலிக்குழன்றீர்
ஏற்பார்க் கிடாமலன் றோபெருங் கோவில் இறையவனே

ஔவையார்

கருத்து – காளை, கங்கை, உமையம்மை சூழ இருந்தும் யாசிப்பது குறித்து பழிப்பது போல் புகழும் பாடல்.

பதவுரை

பெரும் கோவிலில் உறையும் இறையவனே! உன்னையே எப்பொழுதும் நினைத்துக் கொண்டு அண்ணாந்து பார்த்துகொண்டிருக்கும் எருது ஆகிய காளை உன்னிடம் இருக்கிறது; (இக்காரணம் பற்றி உழுது உண்ணலாம்). நீர்ப்பாய்ச்சலை உடையதும், நல்ல நிலத்தினை தோற்றுவிப்பதும் ஆனதும் பெருகிப் பாய்வதும் ஆன கங்கை உன்னிடம் இருக்கிறது. பாக்கியவதி ஆகிய உன் மனைவி உன்னோடு பங்கு போட்டுக்கொண்டு  உன்னை விட்டு நீங்காமல் கிடக்கிறாள்; இவையெல்லாம் இருந்தும் யாசித்து உண்கிறாய். உன்னிடம் இரப்பவர்களுக்கும் நீ எதுவும் தருவதில்லை. ஏனோ?

விளக்க உரை

  • விளங்குதல் – ஒளிர்தல், தெளிவாதல், விளக்கமாதல், பளபளப்பாதல், பெருகுதல், மிகுதல், அறிதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 23 (2019)


பாடல்

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது

தனிப்பாடல் திரட்டு – ஔவையார்

கருத்துஒவ்வொரு உயிருக்குமான தனித்தன்மையை விளக்கி எவரும் வலிமை உடையவர்கள் எனக் கூறக்கூடாது என்பதை வலியுறுத்தும் பாடல்.

பதவுரை

இருப்பிடம் அமைப்பதில் வானில் பறக்கக்கூடிய தூக்கணாங்குருவி ஒருமுறையில் கூடு கட்டும்; புவியினில் வசிப்பதான கறையான்  வேறு முறையில் புற்று கட்டும்;  வீட்டில் இருக்கக்கூடிய சிலந்தி வலையை வேறு முறையில் அமைக்கும்; எல்லாவற்றையும்  எல்லாராலும் செய்யமுடியாது. எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிதாக இருக்கும். எனவே யாமே பெரிய வலிமை உடையவர்கள் என்று வலிமை முன்வைத்து உரைப்பதும், நானே வல்லமை உடையவன் என்று யாரும் பெருமை கொள்ளக் கூடாது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 13 (2019)


பாடல்

மாடில்லான் வாழ்வும் மதியில்லான் வாணிபம்நன்
னாடில்லான் செங்கோல் நடத்துவதும் – கூடும்
குருவில்லான் வித்தை குணமில்லாப் பெண்டு
விருந்தில்லான் வீடும் விழல்

ஔவையார் தனிப்பாடல்கள் – ஔவையார்

கருத்துகுரு இல்லாமல் வித்தைகளை கற்க இயலாது என்பதை கூறும் பாடல்.

பதவுரை

நடத்த இயலாதவைகள் என்று கூறத் தக்கதான செல்வம் இல்லாமல் வாழ்வினை நடத்துதல், மதி நுணுக்கங்கள் அறியாமல் வாணிபம் செய்யும் திறமை, செங்கோல் இல்லாமல் நல்ல நாட்டினை வழி நடத்துதல் போன்றவைகளை அவைகள் இல்லாமல் கூட செயல்படுத்த இயலும். ஆனால் குரு இல்லாமல் வித்தைகளை கற்பது, குணமில்லாத பெண்ணோடு வாழ்வது, விருந்து வராத வீட்டில் வாழ்வது ஆகியவைகள் விவசாயத்திற்கு உதவா நிலம் போன்றது ஆகும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 6 (2019)


பாடல்

வானம் உளதால் மழையுளதால் மண்ணுலகில்
தானம் உளதால் தயையுளதால் – ஆனபொழு(து)
எய்த்தோம் இளைத்தோமென்(று) ஏமாந் திருப்போரை
எற்றோமற் றெற்றோமற் றெற்று

ஔவையார் தனிப்பாடல்

கருத்துஉலகியல் வாழ்வின் நிறைவுகளைப் பற்றி சொல்லி துன்பம் கொண்டு இருக்கக் கூடாது என்பதை குறிக்கும் பாடல்

பதவுரை

அளவிட இயாலாத வானம் இருக்கிறது; உயிர்களைக் காக்க மழை இருக்கிறது; உயிர்களை வளர்க்கும்  இந்த மண் உலகில் பிறருக்கு உதவி செய்யக்கூடிய தானம் இருக்கிறது. பிறரிடத்தில் காட்டக்கூடிய அன்பு இருக்கிறது. இத்தனையும் இருக்கும்போது அடைதல் இல்லாமல் ஒன்றுமில்லாதவர் ஆயினோம், செல்வத்தால் இளைத்துப்போயிருக்கிறோம் என்று எடுப்பவர் பற்றி ஏமாந்திருப்பது எதற்காக?

விளக்க உரை

  • ஓர் அரசன் மகள் கல்வி அறிவில்லாதவன் ஒருவனை காதலித்து வஞ்சகம் கொண்ட கல்வி அறிவுள்ளவன் மற்றொருவனை மணந்து  தற்கொலை செய்துகொண்டு இறந்து, வருகிறவர்களைத் துன்பப்படுத்திக் கொண்டிருந்தவள், ஔவையைத் துன்பம் செய்யத் தொடங்கியபோது நான்கு சாமத்திலும் பாடிய பாடல்.
  • எய்தல் – அடைதல், சேர்தல், அம்பைச் செலுத்தல், நிகழ்தல், சம்பவித்தல், பெறுதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 13 (2019)

பாடல்

தண்டாமல் ஈவது தாளாண்மை தண்டி
அடுத்தக்கால் ஈவது வண்மை – அடுத்தடுத்துப்
பின்சென்றான் ஈவது காற்கூலி பின்சென்றும்
ஈயானெச் சம்போல் அறு

தனிப்பாடல்கள் – ஔவையார்

கருத்துபல வகைத் தானங்களும், அவற்றின் பலன்களும் பற்றியப் பாடல்.

பதவுரை

பிறர் கேட்கமால் அவர் நிலை அறிந்து தானம் கொடுப்பது பெருமை உடையது; அவர்களின் நிலையைக் கேட்டு அறிந்து அவர்களுக்கு தானம் கொடுப்பது குறைந்த பெருமை உடையது; பலமுறைக் கேட்டு பின் தானம் கொடுப்பது தர்மத்தின் கால்பகுதி, கேட்டும் கொடுக்காதவர், கழிவு இல்லாத பழைய வினை போன்றவர் என்று அவர் உறவை அறுத்து விடுக.

விளக்க உரை

  • ஈதல் – தானம் கொடுத்தல்.
  • எச்சம் – மீதம், எஞ்சி இருப்பது, வாரிசு, பறவைகளின் கழிவு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 22 (2019)

பாடல்

ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன் றாம்புலவர்
வார்த்தை பதினாயி ரத்தொருவர் – பூத்தமலர்த்
தண்டா மரைத்திருவே தாதாகோ டிக்கொருவர்
உண்டாயின் உண்டென் றறு

தனிப்பாடல்கள் – ஔவையார்

கருத்துமுனிவனாகும் வாய்ப்பு பற்றிய பாடல்.

பதவுரை

மின்னுதல் போன்று அறிவை வெளிப்படுத்தும் அவையில், நூறு பேரில் ஒருவர்  பேசக்கூடியவராகவும்,  ஆயிரம் பேரில் ஒருவர் புலவராகவும்,  பத்தாயிரம்  பேரில் ஒருவர் சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவராகவும், நீர் தடாகங்களில் தாமரை மலர்கள் பூத்து தண்டை மறைப்பது போல் மதிப்பு உடையவராகவும், தெய்வத் தன்மை உடையவராகவும் கோடி பேரில் ஒருவர் மட்டுமே தாதா என்றைக்கப்படும் முனிவராகவும் இருப்பது உலகியல்பு என அறுதியிடலாம்.

விளக்க உரை

  • ஆர்த்தல் – மறைத்தல், மின்னுதல்
  • சற்றேறக்குறைய 40 வருடங்களுக்கு முன் புலவர் பட்டம் பெற தோராயமாக 10000 பாடல் அறிந்திருக்க வேண்டும் எனில் ஔவையார் காலம் பற்றி அறிந்திருக்க வேண்டிய பாடல் எண்ணிக்கை அறிக.
  • கூடுவது லகுவல்ல வாய்ப்பேச்சல்ல கோடியிலே ஒருவனடா குறியைக் காண்பான் எனும் சுப்ரமணியர் ஞானப்பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்க.

 


ஆர்த்தசபை நூற்றொருவர் – இது இறுமாப்பு கொண்டதுரியோதன் சபையில் ஒருவர் சகுனி.
ஆயிரத்தொண்றாம்புலவர் – இது விதுரரைக் குறிப்பது
பூத்தமலர்த்தாண்டமறை- இது விஷ்ணு விஸ்வ ரகசியம்
ததாகோடிக்கொருவர்உண்டாயிண்உண்டெண்டெண்றுஅறு – இது சிவம் இது ஒங்காரம்.

என்று இறை அன்பர் தனித் தகவலில் அனுப்பி இருந்தார்.


 

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 11 (2018)

பாடல்

எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாது
புண்ணியம் வந்து எய்த போது அல்லால்-கண் இல்லான்
மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு

நல்வழி – ஔவையார்

பதவுரை

செய்துமுடிக்கும் செயலெல்லாம் செய்த புண்ணியத்தால் நிறைவேறியது என்பது அன்றி எவ்வொருவராலும் செயல் பற்றி எண்ணி அந்த செயலை தான் முடித்துவிடோம் என எண்ண இயலாது. காலம் சரியானதாக இருந்து நேரம் கூடிவரும் போது,  கண் தெரியாத ஒருவன் தன் கையிலிக்கும்  கோலை வீசி மாங்காய் விழுவது போன்று அது நிறைவேறும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 13 (2018)

பாடல்

ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து – ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு

தனிப்பாடல் திரட்டு – ஔவையார்

பதவுரை

தானம் கொடுத்தலே அறமாகும். தீவினைபற்றி தீயவழியில் பொருள் ஈட்டுதல் விடுத்து நல்வழியில் பொருள் ஈட்டுதலே பொருளாகும். எக்காலத்தும் காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஒன்றாக் கூடி முடிவு எடுப்பதே  இன்பமாகும். பரனை நினைந்து அவன் அருளால் இம்மூன்றையும் விட்டதே பேரின்ப வீட்டினை நல்கும்.

விளக்க உரை

  • சைவ சித்தாந்த கருத்துப்படி வீடு என்பது துன்ப நீக்கத்தினையும்,  பேறு என்பது இன்ப ஆக்கம் என்பதையும் குறிக்கும்.
  • செயல்கள் அனைத்தும் பரமன்  என்பதால் பரமனை நினைந்து செய்யப்படும் ஈதல் அறமாகி விடுகிறது;  தீவினைகள் விலகி நல்வினைப்பட்டு பொருளீட்டுதல் இயல்பாக நிகழும். காதலர் இருவர் கருத்து ஒருமித்தல் நிகழும்; அவன் நினைவாலே இம்மூன்றையும் விட்டு வீடுபேறடையவும் இயலும். அஃதாவது உலகியல் செயல்களும், ஆத்ம செயல்களும் பரமனாகிய ஈசனாலேயே நிகழ்கின்றன.
  • எல்லாப் பொருள்களும் பரமனது உடைமைகள் என்பதால் அவற்றை நமது உழைப்பிற்கு எற்ப அவன் அநுமதிக்கும் அளவிற்கு அநுபவிக்கலாமே தவிர, நாமாகப் பிறர்க்கு வழங்க நமக்கு உரிமை இல்லை. எனவே அவனுடைய பொருள் என்னும்போது அவனை நினைந்து ஈதலே முறையாகும். ஆகவேஅது அறமாகி விடுகிறது. ‘பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல் இறக்கும்பொழுது கொடுபோவதில்லை’ எனும் பட்டினத்தாரின் பாடல் வரிகளுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – எத்தால்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  எத்தால்

பொருள்

  • எக்காரணம்பற்றி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பத்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி வாழலாம் – சற்றேனும்
ஏறுமா றாக இருப்பாளே யாமாகில்
கூறாமல் சந்நியாசம் கொள்.

ஔவையார் தனிப்பாடல்கள்

கருத்து உரை

கணவனுக்கு ஏற்ற மனைவி அமையப்பெற்றால் எக்காரணம் பற்றியும்  அவளுடன்  கூடி வாழலாம். சற்றே மாறுபாடு கொண்டு குழப்பம் தரும் எதிர்மறையான மனைவி அமையப்பெற்றால் அவன் எவரிடமும் எதுவும் விளக்காமல் சந்நியாசம் கொள்ளலாம்.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

ஆப்த வாக்கியம் என்பது என்ன?
சான்றோர் செய்த நூல்

சமூக ஊடகங்கள்