அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அண்டவுச்சி

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  அண்டவுச்சி

பொருள்

 • கண்
 • புருவ மத்தி
 • துரியாதீதம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கேளப்பா கேசரமே அண்டவுச்சி
கெட்டியாய்க் கண்டவர்க்கே மவுனமாகும்
ஆளப்பா பரப்பிரம்ம யோகமேன்று
அடுக்கையிலே போதமுந்தான் உயரத்தூக்கும்
வாளப்பா கெவுனமணி விந்து நாதம்
வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டுபோகும்
நாளப்பா அண்டமெல்லாஞ் சுத்தியோடும்
நடனமிடும் சிலம்பொலியும் காணலாமே

காகபுசுண்டர் ஞானம்

கருத்து உரை

நமது தலைக்கு மேல் உள்ள அண்டஉச்சி எனப்படும் துரியாதீதம் கண்டு அதை மௌவுனமாகவும் உறுதியாகவும் பார்ப்பவர்களுக்கு, முத்தி பெறுவதற்குரிய வழிகளில் ஒன்றான சமாதி கூடும். பரப்பிரம யோகம் எனும் இவ்வழியினால் அண்டங்களை எல்லாம் நம் மனத்தால் சுற்றி வராலாம், நம் காதுகளில் சிலம்பொலி கேட்கும், பாரபரையின் நடனம் காணலாம். இவ்வாறு குண்டலியை சுழிமுனை நாடிவழியாக செலுத்தி பரபிரமத்துடன் இணைக்கும் செயலால் ஞானம் அல்லது பேரறிவு ஆகிய போதமும் மேன்மை பெறும். 

விளக்க உரை

 • விந்து நாதம்  வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டுபோகும்  –  ‘சுக்கிலம் கெட்டிப்படும்’ என்று பல இடங்களில் பதிவு இடப்பட்டிருக்கிறது. சுக்கிலம் கெட்டிப்படுதல் என்பது இடை நிலை என்பதாலும்,  யோக மரபில் இறுதி நிலை சமாதி என்பதாலும், சமாதி கண்டவர்களுக்கே இந்த அனுபவங்கள் வாய்க்கும் என்பதாலும் இங்கு சமாதி நிலை என்ற பொருளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 • அண்டவுச்சி என்பதற்கான பொருள் விளக்கம் அவரவர் குரு மூலமாக அறிக.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

இறைவன் உயிரோடு கலந்த நிலைக்குப் பெயர் என்ன?
அபேதம் (பேதம் இல்லாதது)

 

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – நயத்தல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  நயத்தல்

வார்த்தை : நயத்தல்

பொருள்

 • விரும்புதல்
 • பாராட்டுதல்
 • சிறப்பித்தல்
 • பிரியப்படுத்தல்
 • தட்டிக்கொடுத்தல்
 • கெஞ்சுதல்
 • அன்புசெய்தல்
 • பின்செல்லுதல்
 • மகிழ்தல்
 • இன்பமுறல்
 • இனிமையுறுதல்
 • இணங்கிப்போதல்
 • பயன்படுதல்
 • மலிதல்
 • மேம்படுதல்
 • ஈரம்ஏறுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நானென்ற ஆணவத்தை நயந்தறுத்து விடுத்தேன்
   நன்மைபெற்றுக் குகைதனிலே வாழ்ந்திருக்க அடுத்தேன்
தானென்ற கருவமதைத் தணித்து விட்டு வந்தோம்
   தவமேதான் கதி என்று சரவழியில் உகந்தோம்.

வகுளிநாதரென்னும் மௌனச்சித்தர் பாடல்

கருத்து உரை

நான் எனும் செருக்கை அறுத்தேன். குகைக்குள்ளே நன்மை பெற்று வாழ்ந்தேன். தான் என்னும் கர்வத்தயும் குறைத்துவிட்டு தவமே உரிய வழி என சஞ்சார வழியில் மகிழ்ந்தோம்.

விளக்க உரை

 • இவருடைய இயற்பெயர் ‘வகுளிநாதர்’
 • இவருக்கு முன் இருந்த பல சித்தர்களைப்  பின்பற்றி 12  பாடல்களைப் பாடியிருப்பது மட்டும் தெரிகிறது.

துக்கடா

சொல் – ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.

சொல்லின் வகைகள்

 • பெயர்ச்சொல்
 • வினைச்சொல்
 • இடைச்சொல்
 • உரிச்சொல்

சமூக ஊடகங்கள்

சிவவாக்கியர்

தத்துவங்கள் அனைத்தும் நிலையாமை என்ற நிலையில்  உருவாகின்றன.

சிவவாக்கியரின் கீழ்க் கண்ட பாடல் அதை விளக்குகிறது.

பாடல்

வடிவுகண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் நந்தினால்
விடுவனோ அவனை முன்னை வெட்ட வேண்டும் என்பனே;
நாடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல்லுடல்
சுடலை மட்டும் கொண்டு போய்த் தோட்டிகைக் கொடுப்பரே!

விளக்கம்

அழகிய வடிவம் கொண்ட தான் விரும்பும் ஒரு பெண்ணை மற்றொருவன் விரும்புகிறான் என்றால் அவனை விடுவேனா, அவனை    வெட்டி விடுவேன் என்று கூறுபவன் இருக்கிறான். அவன் எமன் வாயிலில் விழும் போது நாற்றம் கொண்ட இந்த உடல் மண்ணில்  விழும். அதன் பிறகு இந்த உடலை மயானத்தில் இருக்கும் வெட்டியானிடம் கொடுத்து விடுவார்கள்.

இதில் பல கருத்துக்கள் அடங்கி உள்ளன.

அழகிய வடிவம் கொண்ட பெண்ணை விரும்புதல் – இயற்கை. அது காமத்துடன் கூடிய மாயையின் காரியம்.

விரும்புவனை வெட்டிவிடுவேன் – ஆணவம்

இறப்பு தீர்மானிக்கப்பட்டது. எனவே அதில் ஆணவம் கொள்ள எதுவும் இல்லை.

எனவே மும்மல காரியம் கொண்டவனுக்கு முக்தி இல்லை. நிலையற்ற எண்ணம் விடுத்து அஃதாவது மும்மலம் நீக்கி இறைவனை நாடச் சொல்கிறது இப்பாடல்.

சமூக ஊடகங்கள்

பட்டினத்தார்

பட்டினத்தார் என்ற பெயரில் பல புலவர்களும், கவிஞர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். காலம் 2ம் நூற்றாண்டு, 10ம் நூற்றாண்டு மற்றும் 17 – 18 ம் நூற்றாண்டு.

பட்டினத்தாருக்கு ஞானம் மகன் மூலமாக கிடைக்கிறது. கடல் கடந்து பொருள் ஈட்டி வரும் மகன், எருவிராட்டியையும், தவிட்டையும் எடுத்து வருகிறான். அவன் கொடுத்ததாக இருந்த பேழையை(பெட்டி) திறந்து பார்க்கிறார். ஒலை ஒன்றும், உடைந்த ஊசி ஒன்றும் இருக்கிறது. அந்த ஓலையில்  “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே”  என்று எழுதப்பட்டிருக்கிறது.

இடரது பாடல்கள் மிக எளிமையானவை.

பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே 

இவ்வுலகில் பிறக்கும் போது எதையும் எடுத்து வரவில்லை. அது போலவே இறக்கும் போதும். இடைக்காலத்தில் பெறும் இச்செல்வம் சிவன் கொடுத்தது என்று அறியாமல் இறக்கும் கீழ் தரமானவர்களுக்கு என்ன சொல்வேன்.

முதல் பட்டினத்தார் தவிர மற்ற இருவரின் பாடல்களுக்கு விளக்கம் தேவை இருக்காது.

வாசித்தால் வாழ்வின் நிலைமை புரியும்.

Image – Internet

சமூக ஊடகங்கள்