முழந்தாள் அளவு நீண்ட கைகளை உடையவனாகவும், தாமரைப் பூப்போன்ற திருவடிகளை உடையவனாகவும், அல்லி போன்ற பூக்களை சூடியவனாகவும்*, வீணையைக் கைகளில் கொண்டவனாகவும், ஆடுவதால் ஒலிக்கின்ற கிண்கிணிகளை அணிந்த திருவடிகளை உடைய மேம்பட்டவனாய்த் தீயில் கூத்தாடும் பெருமானை அடியேன் தரிசித்த தலம் ஆரூராகும்.
விளக்கஉரை
*கோடலா வேடத்தன் – பிறரால் கொள்ள முடியாத வேடத்தினன் எனும் பொருளில் சில இடங்களில் விளக்கப் பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
தாட வுடுக்கையன் – முழந்தாள் அளவு நீண்ட கை அரசர்களுக்கு உரிய உத்தம இலக்கணம். ‘தாள்தொடு தடக்கை அத்தருமமே அனான்’ எனும் கம்பராமாயண பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
பற்றுக் கொண்டு விரும்பி நினைக்கப்படும் உடலிலே வாய், கண், உடல், செவி, மூக்கு என்ற ஐம்பொறிகளில் புலன்களாகநின்ற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்து வகைகளே! உங்களுடைய மயக்கம் பொருந்திய மண்ணில் ஏற்படுத்தப்பட்ட உருவங்களினால் சுவைக்கின்ற உங்களுக்கு இந்தப் பரந்த உலகம் போதாதா ? யானோ தேவர்களுக்கு அழகிய பொன் போன்ற உருவத்தைத் தந்தவனும், அழகிய ஆரூரில் நிலைபெற்ற மலைபோல் வான் அளவு உயர்ந்தவனாகவும், இந்த உலகம் எல்லாவற்றிலும் அழகான சிவக்கொழுந்தாய் ஆனவனும், என் சிந்தையுள்ளே புகுந்து அதில் தன்னுருவைத் தந்த என் தலைவனை எப்பொழுதும் அணைந்திருப்பேன். ஆதலால் என்னை உம் அளவில் சிறுமை படுத்துவதற்காக செருக்கிக்கொண்டு என்பக்கம் வாராதீர்கள்.
விளக்கஉரை
உன் உருவில் – ( விரும்பி ) நினைக்கப்படுகின்ற உடம்பு
தென் நாட்டு அரசனும், என்னை ஆள்பவனாகிய சிவனும், உலகை காக்கும் தலைவனும், போற்றுதலுக்கு உரிய அழகிய மறைகளை ஓதியவனும், உலகம் தோன்றுவதற்கு முன்னமே நிலைப்பெற்ற தோற்றத்திற்கு உரித்தானவனும், சுடுகாட்டில் சேரும் திருநீற்றினை அணிந்தவனும்,சூரியன் வழிபட்டு இன்புற்ற இன்னம்பரில் எழுந்தருளியுள்ள ஆகிய பெருமானான ஈசனாவான்.
விளக்கஉரை
தென்னவன் – அழகியவன் எனும் பொருள் இருப்பினும், ‘தென்நாடு உடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ எனும் வரிகளை முன்வைத்து தென் நாட்டு அரசன் எனும் பொருளில் விளக்கப்பட்டுளது. (யோக மார்க்கமான பொருளை குரு மூலமாக அறிக)
முன்னம் மன்னவன் – உலகத்தோற்றத்திற்கு முன் உள்ள நிலை பேறுடையோன்
பூழி – விபூதி
இனன் – சூரியன்
இன்னம் இன்புற்ற – சூரியன் வழிபட்டு இன்புற்ற. சூரியன் வழிபட்டதால் இனன் நம்பூர் என்ற பெயர் மருவி இன்னம்பர் ஆயிற்று
அதிகாலை நேர சிவபூசைக்குரிய புஷ்பவிதியில் கூறியதான எட்டு மலர் வகைகளான. புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டை, நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை என்னும் எட்டுவகை மலர்களை அரும்பு மலரோடு சூடிய வட்ட வடிவாகிய மெல்லிய சடை உடைய மறைக்காட்டுறையும் பெருமானே! நடனம் ஆடியும், நான்கு வேதங்கள் பாடியும் விருப்பமாகத் தேவரீர் எழுந்தருளியிருக்கும் இடம் இத்தலமே.
விளக்கஉரை
அடும்பு-அடப்பமலர்
வட்டப் புன்சடை – வட்டமாகக் கட்டிய மெல்லிய சடை.
கொல்லாமை, அருள், பொறி அடக்கம், பொறை, தவம், வாய்மை, அன்பு, அறிவு, என்னும் எட்டும் ஞானபூசைக்குரிய எண் மலர்கள்
தேவி இலட்சுமியால் வரமாக அருளப்பட்டதும், தேவலோகத்தில் இந்திரனுக்கு கிடைக்கப்பெற்றதும், நவநிதிகளில் இருப்பதும், சக்தியை குறிப்பதும் அதன் மூலம் ஞானத்தினை பெற்று நவநிதிகளில் இருப்பதும், சக்தியை குறிப்பதும் அதன் மூலம் ஞானத்தினை பெற்று தரவல்லதும், தோல்வியை என்றும் தராததும் ஆன சங்க நிதியினையும், தரித்துக் கொண்ட ஒரு வீரனை எவர் ஒருவராலும் தோற்கடிக்க முடியாத பதும நிதியினையும் தந்து, ஆட்சி செய்யப் பூமியையும், மற்றும் வானுலகையும் தருபவராக இருப்பினும் தேவர்களுக்கு தலைவனாகிய சிவபெருமானிடத்தில் அன்பில்லாதவர்களாய் நிலையில்லாமல் அழிபவர்களாகிய அவர்களது செல்வத்தை யாம் ஒருபொருளாக மதிக்க மாட்டோம். உறுப்புக்கள் எல்லாம் அழுகிக் குறைந்து அழுகும் தொழுநோய் உடையவர்களாகவும், பசுவை உரித்துத் தின்று அதன் காரணம் பற்ரிய வினை கொண்டு திரியும் புலையர்கள் ஆயினும் கங்கையை நீண்ட சடையில் கொண்ட சிவபெருமானுக்கு அன்பராக இருப்பவர்கள் எவரோ அவரே நாம் வணங்கும் கடவுள் ஆவார்.
விளக்கஉரை
இத் திருத்தாண்டகம், உலகியல் பொருள்களைப் பற்றாது, மெய் நெறியையே பற்றி நிற்கும் தமது நிலையை அருளிச்செய்தது.
புலையர் – கீழ் செயல்கள் உடையோர். (வடமொழி -‘சண்டாளர்’)
ஆதிக்கண் நான்முகத்தி லொன்று சென்று அல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளால் சேதித்த திருவடியைச் செல்ல நல்ல சிவலோக நெறிவகுத்துக் காட்டு வானை மாதிமைய மாதொருகூ றாயி னானை மாமலர்மே லயனோடு மாலுங் காணா நாதியை நம்பியை நள்ளாற் றானை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே
தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
ஆதி காலத்தினை உடைய அந்தணன் எனப்படும் பிரம தேவனுடைய முகங்களில் ஒன்று உண்மை அல்லாத சொல்லினைக் கூற, அந்த முகத்தைத் தன் கையில் இருக்கும் வாளைக் கொண்டு அந்தத் தலையை போக்கிய வயிரவனாய் உள்ளவனும், அடியார்கள் அடைவதற்கு மேம்பட்டதாகிய சிவலோகம் அடையும் வழியைக் காட்டுபவனாய் உள்ளவனும், பெருமையுடைய பார்வதி பாகனாய் உள்ளவனும், தாமரை மலர் மேல் உள்ள பிரமனும், திருமாலும் காண முடியாத தலைவனாக உள்ளவனும், குண பூரணனாக திருநள்ளாற்றில் உகந்து எழுந்து அருளியிருக்கும் பெருமானை அடியேனாகிய நான் நினைந்து துன்பங்களிலிருந்து நீங்கப் பெற்றேன்.
விளக்கஉரை
‘சிவலோக நெறி’ – தானே முதல்வன் என உணர்த்தியும், அவ்வாறு உணரும் நெறி தானே சிவபிரானை அடையும் நெறி என்பதும் குறித்தது
மாதிமைய – பெருமையுடைய
பிரமன் ஐந்துதலை உடையனாய் இருந்தபொழுது,’ தானே முதல்வன்’ எனச் செருக்குக் கொண்டு திருமாலுடன் கலகம் விளைத்தார். சிவபிரான் வயிரவரை அனுப்பிய போது அவரைக்கண்டு , ‘வா, என் மகனே’ எனப் பிரமன் அகங்காரத்துடன் அழைத்த போது வயிரவர் அவனது தலையைக் கிள்ளினார்; பின்பு பிரமனது செருக்கு நீங்கியபொழுது , சிவபெருமான் அவனுக்கு நல்வரம் அருளினார். (திருநாவுக்கரசர் காலத்தின் படி இப்பொருள் உரைக்கப்பட்டது)
‘பிரம னார்சிரம் உகிரினிற் பேதுறக் கொய்தாய்’ – பிரமன் வருந்த அவனது சிரத்தை நகத்தினால் கொய்தவன் என்பது காஞ்சிப் புராணம் வயிரவேசப்படலம் காட்டும் வரலாறு.
திருமுண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவனாவன், உயிரோடு உடல் இயைந்து நின்றவனாகவும், எல்லா உறவுகளுமாக ஆனவனாகவும், ஒருவரிடத்தும் தனக்குப் பின் உரிமையாக இல்லாத வகையில் எவ்விடத்தும் நிறைந்து நின்றவனாகவும், அழிவில்லாதவனாகவும், புற்றில் வாழும் பாம்பை ஆடை மேல் கட்டப்படும் கச்சாகவும் ஆபரணமாகவும் கொண்டவனாகவும், சுடுகாட்டில் எரியேந்தி ஆடுதலைச் செய்தவனாகவும், நல்ல தவ வேடங்கொண்டவனாகவும், சரணடைந்த மார்கண்டேயனுக்காக பெருங்கூற்றுவனைச் சேவடியால் உதைத்து அழித்தவனும் ஆனவனாகவும் ஆகி கைலாச மலையில் வீற்றிருப்பவனாகவும் இருந்து என் சிந்தைக்கு உரியவன் ஆவான்.
பிற உயிர்கள் போல் படைக்கப்படாதவனை, அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்க வேட வடிவம் கொண்டவனை, மன்மதனை நெற்றிக் கண்ணால் நோக்கி அவனை சாம்பலாகுமாறு அவனை செய்தவனை, விதி வழி வரும் பாவங்கள் அடையாமல் காப்பவனை, அடியவர்களுக்கு அருமருந்தாகி அவர்களின் துன்பம் விலகுமாறு அருள் செய்பவனாய், தனது திருமுடிகளில் சந்திரனை தரித்தவனை, சங்கின் நிறம் ஒத்து முத்தினை கொண்டு இருப்பது போன்ற தனித்துவமான வெள்ளை நிற காளையின் நடை உடையவனை, பூரணம் நிறைந்த இறைவனை, திருநள்ளாறு எனும் திருத்தலத்தில் இருப்பவனை அடியேன் நினைந்து உய்ந்தேன்.
விளக்கஉரை
அனங்கன் – மன்மதன்.
‘ஆவா’ – இரக்கக் குறிப்பிடைச் சொல்.
படையானை – பலபடைக்கலங்களை உடையவனாய் என்று சில விளக்கங்களில் கூறப்பட்டு இருந்தாலும், ‘உடையாளை ஒல்கு செம்பட்டுடையாளை ..இங்கு என்னை இனிப் படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே’ எனும் அபிராமி அந்தாதி வரிகள் பற்றியும் படைக்கப்படாதவன் எனும் பொருளில் இங்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பாசுபத வேடத் தானைப் – ‘பாசுபதமதத்தில் கூறப்படும் வேடத்தனாய்’ என்று சில விளக்கங்களில் கூறப்பட்டு இருந்தாலும், திருவேட்டக்குடி திருத்தலத்தில் அர்ஜூனனைச் சோதிக்க சிவபெருமான் வேடுவ கோலத்தில் வந்தது பற்றி தலபுராணத்தில் இருப்பதாலும், அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்கப்பட்ட காதை கொண்டும் அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்க வேட வடிவம் கொண்டவன் எனும் பொருளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உலகத்தார்க்கு பொருந்தாத செய்கைகளாகிய சாம்பல் பூசிக் கொள்ளுதல், எலும்பும் தலைமாலையும் அணிதல், தலை ஓட்டாகிய மண்டை ஓட்டில் இரத்தல், நஞ்சை உண்ணுதல், பாம்பினை அணிதல், சடைதரித்துப் பெண்ணொரு பாகன் ஆதல் போன்றனவும் கொண்டு பொலியக் கொண்டவராய், போற்றுதலாகிய சொற்களைச் சொல்லி விண்ணோர்கள் புகழுமாறு விளங்குபவராய், தம்மிடத்தில் அன்பு கொண்ட அன்பருக்கு அருளும் தன்மை உடையவராய், நிலனொடு நீராய் (ஏனைய பூதங்களாகவும் -அவையாகி நிற்றல் ) நிற்பவராய், புதுமையாகவும், வேறிடங்களில் காணப்படாது நிறைந்து நின்று மருட்கையை விளைத்த கூட்டம் எனப்படும் பூதவேதாளங்கள் முதலிய பதினெண் கணங்களுமாகவும். உமையும் விநாயகனும் கொண்டவராய், உடல் நோயும், உயிர் நோயும் ஆகிய பிணிதீர்க்கும் மருந்தின் தன்மை கொண்டவராய் வாய்மூர் அடிகளாகிய சிவபெருமானை நான் கண்டேன்.
அறிவுடைப் பொருளாகிய சேதனம், அறிவற்ற பொருளாகிய அசேதனம் ஆகியவற்றின் தொடக்கமாக இருப்பவரும், அவ்வாறான சேதனம், அசேதனம் பொருள்களுக்கு முடிவாக நின்று இருப்பவரும், பிரபஞ்சத்தின் எட்டுத் திசைகளிலும் பற்றினை ஏற்படுத்துபவரும், அப்பற்றினை விலக்கி வீடு பேற்றினை உயிர்களுக்கு அளிப்பவரும், விடையேறுதலை விரும்பி செய்பவரும், சிவந்து எரியும் தீயை போற்றி காத்து வரும் அந்தணர்கள் வாழும் மிழலை நகரில் உள்ளவரே! அடியேனைக் காலன் தென் திசையில் செலுத்தும் போது, யான் தங்களை மறந்தாலும் தாங்கள் அடியேனை மனத்தில் குறித்து வைத்துக் கொண்டு காப்பாற்ற வேண்டும்.
உருவமு முயிரு மாகி யோதிய வுலகுக் கெல்லாம் பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க அருவிபொன் சொரியு மண்ணா மலையுளா யண்டர் கோவே மருவிநின் பாத மல்லான் மற்றொரு மாடி லேனே
பதப் பிரிப்புடன்
உருவமும் உயிரும் ஆகி, ஓதிய உலகுக்கு எல்லாம் பெருவினை பிறப்பு வீடாய் நின்றஎம் பெருமான், மிக்க அருவிபொன் சொரியும் அண்ணா மலைஉளாய், அண்டர் கோவே, மருவிநின் பாதம் அல்லால் மற்றொரு மாடு இலேனே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
அசேதனப் ப்ரபஞ்சம் மற்றும் காரண மாயை என குறிக்கப் பெறும் சடமாகி, சேதனப் பிரபஞ்சம் எனக் குறிக்கப்படும் சித்தாகிய ஆன்மாக்களாகவும் ஆகியவனாய், அவ்வாறு குறிப்பிடப்படும் உயிர்களுக்கெல்லாம் மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும் ஏனைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளையும், பிராப்தம் ஆகிய நிகழ்கால வினைகளையும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகளையும் கொண்டு ஏற்படும் பிறப்பும் பெற்று கர்மங்கள் விடுத்தப் பின் ஏற்படும் வீடு பேற்றிற்கு காரணமாகவும் நின்ற எம் பெருமானே! அருவி போன்று பொன்னைச் சொரியும் அழகிய அண்ணாமலையில் உள்ள தேவர்களின் தலைவனே! உன் திருவடிகளைப் பொருந்தி நிற்றல் தவிர வேறு செல்வம் இல்லாதேன் ஆவேன்.
விளக்கஉரை
‘மலையுளாய்’ என்றது கண்டது உரைப்பது பற்றியதால் அருளுரை எனவே பொய்யாகாது.
‘நீர் மிகுந்த அருவிகள் பொன்னைச் சொரியும்’ என சில இடங்களில் விளக்கப்பட்டுளது. பொருள் பொருந்தாமையால் விலக்கப்பட்டுள்ளது.
இந்த உலகில் நீண்ட நெடுங் காலம் உயிர்வாழ்ந்து வாழும் காலத்தில் சிற்றின்ப நுகர்ச்சிகளைப் பொருந்தி இயமனுடைய ஏவலரால் கொல்லப்பட்டு அழிவதன் முன்னமே, குளிர்ந்த நீர் நிலைகளையும், தாளூன்றிய தாமரைப் பூக்களையுடைய பொய்கைகளையும் உடையதான அழகிய குளிர்ந்த கழிப்பாலைப் பெருமானுக்கு அடிமையாகி வலிமை உடையவர்களாகி யம பயத்திலிருந்து விடுபட்டோம்.
காஞ்சித் திருத்தலத்தில் உறையும் மேற்றளி ஆனவர், தெற்குப் பகுதியை ஆண்ட இராவணன், தனது கர்வத்தால் கயிலாய மலையைப் பெயர்த்து எடுக்க முற்பட்ட போது, சிறந்த அழகான ஆபரணங்களை அணிந்த பெண்ணாகிய பார்வதி நடுக்கம் கொண்டது கண்டு, நடுக்கம் நீக்குவதன் பொருட்டு தனது கால் விரல்களால் கயிலாய மலையை அழுத்த, அதனால் அவன் தலைகளை நெரியுமாறு செய்த போது, தன் தவற்றை உணர்ந்து, கரும்பு போன்று இனிய கீதங்களைப் பாடியதால் அவன் தவற்றினை மன்னித்து அதனால் அவனுக்கு அருள் செய்தவர் ஆவார்.
விளக்க உரை
தென்னவன் – இராவணன்
சேயிழை – கல் இழைத்துச் செய்யப்பட்ட அணிகளைப் பூண்டவள். இழை நூலிழையாகக் கொண்டு தாலி எனலும் கூடும்
மன்னவன் – என்றும் நிலையாயிருப்பவன்.(கயிலைத் தலைவன்)
தீங்கு தருகின்ற விடத்தை உண்டு, மாலையில் தோன்றும் செந்நிறத்தை போன்றதுமான பெருமான், ஐந்தலைப் பாம்பு ஒன்றனை அழகிய பொன் போன்ற தோளின் மீது மேலாடையாக அணிந்து, திரு ஓடு ஒன்றனைக் கையில் ஏந்தி, எம் இல்லத்தில் வந்து `’திருவே! உணவு இடு’ என்று கூற, உள்ளே சென்று யான் மீண்டு வர ஏதும் என்னிடத்துப் பிச்சையாகப் பெறாமல் என்னைக் கூர்ந்து நோக்கி என் கண்ணுள்ளே அவர் உருவம் நீங்காது இருக்குமாறு செய்து, பூத கணங்கள் சூழப் ‘புறம்பயம் நம் ஊர்’ என்று கூறிப் போயினார்.
விளக்கஉரை
ஏகாசம் – ஏகம்+ஆகாசம் – ஒரே ஆகாயம் – மேலாடை
‘போகாத வேடத்தார்’ – அவரது வேடம் என் கண்ணினின்றும் நீங்காத இயல்பானது
பெருமானை மறைத்தும் மறந்து போகச் செய்யும் படியாகிய செய்தும், உலக நாட்டத்தில் திளைக்கும் படி செய்யும் வலிய நெஞ்சினை உடையவர்களால் உணர்தற்கு அரியவனாய், வஞ்சனையில்லாத அடியவர் உள்ளத்தில் பரவி நிற்கும் பெருமானாய், காளை மேல் ஏறும் திறனுடையவனாய், பாம்புகள் படமெடுத்து ஆடவும், சடை தொங்கவும், உள்ளங்கையில் தீயினை ஏந்தி இரவினில் கூத்தாடும் பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன்
நெஞ்சமே! ஈசானம் முதல் சத்யோஜாதம் வரை ஐந்து மந்திரங்களை ஓதும் பரமனும், யானையை அஞ்சுமாறு அதன் தோலை உரித்தவனும், தீயேந்தி ஆடுவானும், திருமீயச்சூர் இளங்கோயிலில் இருந்து அருள்புரிவனும் ஆகிய எம்மை உடையானுமாகிய பெருமானையே நினைந்திரு; அந்த நினைப்பால் வாழ்வாய்.
அரியானை அந்தணர்தம் சிந்தை யானை அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும் தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக் கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
தேவாரம் -ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
புறப்பொருளை அறியும் கருவி மட்டும் கொண்டு, தன்னையறியும் உயிரறிவு துணையுடன் தன் முயற்சியால் அறிந்து அணுவதற்கு அரியவன் ஆனவனும், ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் ஆகிய அறுதொழில்களை செய்யும் தில்லைவாழ் அந்தணர்களின் உள்ளத்தில் உள்ளவனும், வீடுபேறு அளிக்கும் அறிய பெரிய வேதங்களின் உட்பொருளாக இருப்பவனும், மிகவும் சிறிதானதும், நுண்ணியதுமான அணு அளவில் உள்ளவனும், யாரும் தம் முயற்சியால் உணரமுடியாத மெய்ப்பொருள் ஆகியவனும், தேனும் பாலும் போன்று இனியவனும், தானே விளங்கும் சுயம்பிரகாசம் ஆகிய நிலைபெற்ற அறிவே ஆன ஒளிவடிவினனும், எல்லா வகையிலும் மேம்பட்டவனும், வியாக்கிரபாதர் என்னும் புலிக்கால் முனிவனுக்கு உறைவிடமாகிய தில்லையில் எழுந்தருளும் அப்பெருமானுடைய உண்மையான புகழைப் பற்றி பேசாத நாள்கள் எல்லாம் பயன் அற்ற நாள்களே.
விளக்கஉரை
பெரும்பற்றப் புலியூரானை – புலி கால் முனிவர் பூசித்த திருப்பாதிரிப் புலியூரில் உள்ளவனை என்று சில இடங்களில் விளக்கப்பட்டுளது. அந்தணர் என்று தில்லை வாழ் அந்தணர் குறித்த செய்தியாலும், புலிக்கால் முனிவர் பற்றிய செய்தியாலும், ஆறாம் திருமுறையில் முதல் தலம் மற்றும் கோயில் எனப்படுவதும், சைவர்களால் குறிக்கப்படுவதும் ஆன ‘கோயில்’ என்று விளக்கி இருப்பதாலும் இப்பொருள் கொண்டு விளக்கப்பட்டிருக்கிறது. பிழை இருப்பின் ஆன்றோர்கள் மன்னிக்க.
‘அணு’ என்றதனால் நுண்மையும், ‘பெரியான்’ என்றதனால் அளவின்மையும் அருளியது குறித்து ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
‘பிறவாநாள்’ – பிறவி பயனின்றி ஒழிந்த நாளாதல் பற்றி. அறம், பொருள், இன்பங்கள் நிலையற்ற உலகியல் இன்பம் தருவதான சிறுமை தரும் என்பது பற்றியும், இறை இன்பமான பெரும் பயன் தராது எனும் நோக்கில்
குறைந்த வலிமையை உடையவனாய் இருந்தும், செருக்கு அடைந்து அதனால் ‘தன்னை உண்மையான வலிமை உடையவன்’ என்று கருதி மிகப் பெரிய தேரில் ஏறிச் சென்று, கோபம் காரணமாக சிவந்த, கொடிய கூர்மையான விழிகளால் கயிலையை, தன் பத்துத் தலைகள் கொண்டு அதனைத் தூக்க முற்பட்டவனாகிய இராவணனுடைய செருக்கினை அழித்து, வலியைப் போக்கிய பெருமான் திருஅவளிவணல்லூரில் உறைகின்றார்.
வானில் உள்ள தேவர்கள் போற்றும் அமுதமாய், வந்து என் உள்ளம் புகுந்தவனாய், உயிர்களின் பிறப்பிற்கு காரணமான குறையைப் போக்கும் அருள் உருவம் உடையவனாய், ஓங்கித் தீப்பிழம்பாய் உயர்ந்தவனாய், தேன் போல தெளிவாக தோன்றுபவனே, தேவர்களுக்கும் தேவனாய் நின்றவனே , சுடுகாட்டுத் தீயில் கூத்தாடுதலை விரும்பி செய்பவனாய் உள்ள கயிலை மலையானே! உன்னை போற்றுகிறேன்.
விளக்கஉரை
மருந்து – அமுதம்
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி – தன் முயற்சி இல்லாமல் இறைவன் தானே வந்து ஆட்கொண்டு அருள் புரிந்த விதம் பற்றிய குறிப்பு.
‘தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி கானத்தீ யாட லுகந்தாய் போற்றி’ – தேவ லோகத்தையும், சுடு காட்டையும் சமமாக பாவிப்பவன் எனும் பொருள் பற்றியது