பாடல்
திரிபுரை சுந்தரி அந்தரி சிந் தூரப்
பரிபுரை நாரணி ஆம்பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மனி என்ன
வருபல வாய்நிற்கும் மாமாது தானே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
மகாதேவியாகிய சிவசத்தி, திரிபுரை முதலிய பல காரணப் பெயர்களைப் பெற்று, மிக்க அழகுடையவளாகிய சுந்தரி, ஆகாயத்தில் விளங்குபவளாகிய அந்தரி, சிந்துரத்தையும், சிலம்பணிந்தவள் அணிந்தவள், நாரணன் தங்கை ஆகிய நாரணி, அம்பலம் நிற வடிவத்தையும் உடையவள், சிறப்பான நீல நிறத்தை உடையவளாய் `ஈசுவரி, மனோன்மணி` என்னும் பெயர்களைப் பெற்று அந்த அந்த வகையில் எல்லாம் விளங்குவாள்.
விளக்க உரை
- ஆம் – பொருந்திய, பல வன்னத்தி – பல்வேறு நிற வடிவத்தையும் உடையவள் எனும் பொருளில் சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆம்பல வன்னத்தி – நீட்டல் அதிகாரம் பற்றி அம்பலம் என்பது ஆம்பலம் எனக் கொண்டும் சிவசக்தி ஐக்கிய பேதம் கொண்டு பின்னர் வரும் ஈசுவரி,மனோன்மனி என்று வருவதாலும் அம்பல வண்ணமுடையவள் என்று இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.
- ஒன்பது திருப்பெயரும் ஒன்பது ஆற்றல்களை குறிக்கும். அனைத்தும் ஒன்றாகி மும்மலம் நீங்க அருளச்செய்பவள் சத்தியாகிய திரிபுரை