பாடல்
பண்டு மறையின் முடிவினுள்ளே
பழுத்த பழமே அருட்பழமே
பரிபா கத்துப் பத்தர்நெஞ்சில்
படர்ந்த பழமே நவமுடிமேல்
என்றுங் கனிந்த திருப்பழமே
இமையோர் தேடித் தேடியுமே
எட்டாப் பழமே காசினியில்
எவர்தாம் தனையே உணர்ந்தோர்கள்
கண்டு புசிக்கும் பதிப்பழமே
கருணைப் பழமே சிவப்பழமே
கயிலா யத்தில் அரன்முடிமேல்
கனிந்த பழமே கதிப்பழமே
மன்றுள் மணக்கும் அடியவர்க்கும்
மாயோ கியர்க்கும் உதவிநிற்கும்
மயிலா புரியில் வளரீசன்
வாழ்வே அபயாம் பிகைத்தாயே
அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்
பதவுரை
காலத்தால் முற்பட்ட மறையின் முடிவாக இருந்து அதன் விளைவாக பழுத்த பழமாகவும், அடியவர்களுக்கு அருளை வழங்கும் அருட்பழமாகவும், முதிர்ச்சி உடைய பக்தர்கள் நெஞ்சில் படர்ந்த பழமாகவும், புதுமையாக சூடப்பட்ட முடி மேல் என்றும் கனிந்திருக்கும் மேன்மை பொருந்திய பழமாகவும், இமைத்தலை செய்யா தேவர்கள் தேடித் தேடியும் காண இயலாமல் அவர்களுக்கு எட்டாத பழமாகவும், தன்னைத் தானே உணர்ந்தவர்கள் கண்டு புசிக்கும் பழமாகவும், பக்தர்களுக்கு வேண்டியதை அருளுவதால் கருணைப் பழமாகவும்! சிவ சக்தி ரூபமாக் இருப்பதால் சிவப் பழமாகவும், கயிலாயத்தில் வீற்றிருக்கும் சிவன் முடிமேல் இருக்கும் கனிந்த பழமாகவும், அருளை வாரி வழங்கி நல் கதிக்கு அழைத்துச் செல்வதால் கதிப்பழமாகவும், சிதம்பரத்துள் உள்ள கனகசபை தனில் மணம்வீசிக் கொண்டிருக்கும் அடியவர்களுக்கும், மாபெரும் யோகியர்களுக்கும் உதவி நிற்கக் கூடிய அருள் பொழியும் மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவள் ஆகிறாய்.
விளக்க உரை
- அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
- அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’ என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
- அருட்பழமாக அன்னையை கண்டு வியத்தல் பற்றியது இப்பாடல்
- ‘பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங் கண்டாரு மில்லை’ எனும் மாணிக்கவாசகரின் திருவாசக வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
- ‘இம்மணியா லிழைத்துநவ முடிசூட்டி யிச்சிங்க விளவெ றன்ன’ எனும் திருவிளையாடற் புராண வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது. சில இடங்களில் ‘நவமணியால்’ இழைத்தது எனவும் பொருள் விளக்கப்படுகிறது.
- ‘நவமுடிமேல் என்றுங் கனிந்த திருப்பழமே’ என்றும் ‘கயிலா யத்தில் அரன்முடிமேல் கனிந்த பழமே’ என்பதும் ஒன்று போலவே தோன்றும். பொருள் விளக்கத்தில் அதன் தன்மையை அழுத்தி கூறுமிடத்து அவ்வாறு இருமுறை கூறுதல் மரபு. அன்றியும் அம்மையைக் கண்டதும் தன்நிலை மறந்து புத்தி பேதலித்து இருந்த அவர் வாழ்வியல் முறை வைத்தும் இரு முறை வந்திருக்கலாம்.