பாடல்
நின்றாள் அவன்றன் உடலும் உயிருமாய்ச்
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக என்னுட் புகுந்துணர் வாகியே
என்றாள் பரஞ்சுடர் ஏடங்கை யாளே.
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
சிவனது செயல்களிலெல்லாம் உடன் சேர்ந்தே நிற்கின்ற மேலான சத்தியாகிய திரிபுரை, அச்சிவனோடு உடலும் உயிரும்போலப் பிரிப்பின்றி வாளாதும் இருப்பாள்; செயல்பட்டும் நடப்பாள். மேன்மை பொருந்திய ஞானமே யாகின்ற அவள், முதலில் புத்தகம் ஏந்திய கையினையுடைய நாமகளாய் நின்று எனக்கு நூலறிவைத் தந்தும், பின்பு எனது உணர்வினுள் உணர்வாய் இன்புறச் செய்தும் என்னைத் தன் அடியவனாக ஏற்றுக்கொண்டாள்.
விளக்க உரை
- கதி – நடை; செயல். ‘சிவகதி’ – சிவ நடையுடன் மாற்று கருத்து இல்லாமல் ஒத்து. அஃதாவது சிவ கதியில் சேர்ந்திருக்கும் பராசத்தி, ‘அவன்றன் உடலும் உயிருமாய் நின்றாள்; சென்றாள்’ என மாற்றி உரைக்க.
- ‘உணர்வு ஆகி’ என்பது ஞான அனுபவத்தை வழங்கி, அவ்வழிகளில் இன்பம் பெறப்பட்டதை குறித்தது.