அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – இரவலர்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  இரவலர்

பொருள்

 • ஏற்போர்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பரவப் படுவான் பரமனை ஏத்தார்
இரவலர்க்கு ஈதலை யாயினும் ஈயார்
கரகத்தால் நீராட்டிக் காவை வளர்க்கார்
நரகத்தில் நிற்றிரோ நல்நெஞ்சி னீரே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

உலகாயத மதத்தினை முன்வைத்து அதன் போதனையால் தம் புகழை விரும்பி நிற்பார்; மண்ணவர், விண்ணவர், முத்தேவர் முதலிய யாவர்களாலும் தொழப்படுவானாகிய சிவபெருமானைப் பாடிப் பரவிப் பணியவும் மாட்டார். தம்மிடம் வந்து யாசித்தவர்களுக்குச் சிறிதும் கொடுக்க மாட்டார்; பொருள் அற்று இறந்தவர்களுக்கு ஈயின் தலையளவு ஆன சிறுபொருளைக்கூட கொடுக்கவும் மாட்டார்கள். வழிப்போக்கர் தங்கி சிரமப் பரிகாரம் செய்து செய்ய சரீரப் பிரயாசை கொண்டு குடத்தினால் நீர்விட்டுச் சோலைகளை வளர்க்கவும் செய்ய மாட்டார்கள்; நீர் எடுத்து வந்து எல்லார்க்கும் நல்ல பல பயன் தரும் சோலைகளை வளர்க்க மாட்டார்கள். இத்தகைய நல்ல எண்ணம் கொண்டவர்களே! நரகத்தில் நிலையான வாசம் விரும்பியுள்ளீர்களோ?

விளக்க உரை

 • நல்நெஞ்சினீர் – வஞ்சப் புகழ்ச்சி.
 • நல்லறம் புரியாது நாளை வீணாளாக்கிச் சாவை நெருங்கினீரே என்பது பற்றியது

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – மூலை

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  மூலை

பொருள்

 • மூலாதாரம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தராதல மூலைக்குத் தற்பரம் மாபரன்
தராதல வெப்பு நமவா சியஆம்
தராதலம் சொல்லின் தான்வா சியஆம்
தராதல யோகம் தயாவாசி ஆமே.

எட்டாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

ஆதாரங்களில் ஏனையவற்றிற்கெல்லாம் அடிப்படை ஆகிய மூலாதாரத்திற்கு உரிய தெய்வ மந்திரம், நகாரம் முதலாக (நமசிவாய) முழுமையாய் மாறாது நிற்கும் திருவைந்தெழுத்தாம். அதற்கு மேல் உள்ள அக்கினி மண்டலத்தில் அம்மந்திரம் அருள் எழுத்து மாறி இடை நிற்க ஏனைய எழுத்துக்கள் முன் நின்றவாறே நிற்க இருக்கும் (நமவாசிய). அதற்குமேல் உள்ள சூரியமண்டலத்தில் பாச எழுத்துக்கள் நீங்க, ஏனைய மூன்றும் முன்நின்றவாறே நிற்க இருக்கும்(வாசிய). அதற்கு மேல் யோகத்தால் அடையப்படும் சந்திர மண்டலத்தில் பசு எழுத்து நீங்க, அருளேயான ஏனை இரண்டழுத்தும் அவ்வாறே நிற்க இருக்கும் (வாசி).

விளக்க உரை

 • இவ்வாறு அறிந்து சிவயோகி தனது சிவயோகத்தைச் செய்ய வேண்டும் என்பது குறிப்பு.
 • பிற யோகிகள் யோகத்தை மந்திரம் இல்லாமலும், பிரணவமாகவும் செய்வாராயினும், சிவயோகி இவ்வாறு திருவைந்தெழுத்து மந்திரத்தால் யோகம் செய்யக்கடவன் என்பது குறிப்பு.
 • இச் சிவயோக நெறியால் பாசமும், அத்துடன் நிற்கும் பசுத்துவமும் நீங்கிச் சிவத் தன்மையைப் பெறுவன்
 • மூலை யிருந்தாரை முற்றத்தே விட்டவர்சாலப் பெரியர்என் றுந்தீபற;தவத்தில் தலைவர்என் றுந்தீபற

என்ற திருவுந்தியார் பாடலை ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – விடாய்த்தல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  விடாய்த்தல்

பொருள்

 • வேட்கையுறுதல்
 • களைப்படைதல்
 • விரும்புதல்
 • செருக்குக்கொள்ளுதல்

வாக்கிய பயன்பாடு

ரொம்ப விடாய்க்காத, காலம் இப்படியே போவாது

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத்தங் காயஞ் சுருக்கும்
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன்றன் சிவானந்தத் தேறலே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

பசுக்கள், அரிசி கழுவிய நீராகிய கழுநீரை உண்டு பழகி விட்டால், பின்பு குளத்தில் உள்ள தூயநீரை நாடிச் செல்லாது; அக் கழுநீரையே விரும்பி ஏற்றுக் கொண்டு உடல் மெலியும். அத்தன்மையான  அப்பசுக்கள் தம் இயல்பில் இருந்து மாறுவது இல்லை. வளமையுடைய பருகும் பொருள், சிவபெருமானது திருவடி இன்பமாகிய தேனே என்பதை அறியாதவர்கள் கள்ளின் சுவையை நினைத்துக் கள்ளுண்ணும் மக்கள் தம் இயல்பில் இருந்து  நீங்கியவர்கள் ஆவார்.

விளக்க உரை

 • ‘கழுநீர் பெறிற்பின் கயந்தேரா தேரா’ எனும் வரிகளால்   கள்ளுண்போர் மாக்களாதல் கூறப்பட்டது. மாக்களே, உண்ணப்படும் பொருளால் பின் விளைவதை அறியாது, கேடு பயக்கும் பொருளையும் உண்ணும்.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – ஆகம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  ஆகம்

பொருள்

 • உடல்
 • மார்பு
 • மனம்
 • சுரை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஆமேவப் பூண்டருள் ஆதி வயிரவன்
ஆமே கபாலமும் சூலமும் கைக்கொண்டுஅங்கு
ஆமே தமருக பாசமும் கையது
வாமே சிரத்தொடு வாளது கையே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

உடலாகிய திருமேனியில் எலும்பு, தோல் முதலியவைகளை விரும்பிப்பூண்ட ஆதி வயிரவர் மேற்கூறியவற்றுடன் சூல கபாலங்களைச் சிறப்பாக ஏந்தி விளங்குவார். அதோடு தமருகம், பாசம், வெட்டப்பட்ட தலை, வாள் என்னும் இவைகளையும் அவர் கொண்டிருப்பார்.

விளக்க உரை

 • வயிரவரது உருவ அமைப்பும், கையில் உள்ள படைக்கலம் முதலியவைகளும் கூறப்பட்டன.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

இறைவன் வேறாய் நின்று உதவுவது என்ன உபகாரம்?
காட்டும் உபகாரம்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – புன்மை

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  புன்மை

பொருள்

 • சிறுமை
 • இழிவு
 • இழிசெயல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்
புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின்;
பன்மையில் யாதென நும்மைப் பரிசுசெய்
தொன்மையின் உண்மை தொடர்ந்து நின்றானே;

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

உயிர்களுக்கு நன்மைகளை எல்லாம் செய்ய வல்லவனும், அனைத்து உயிர்களையும் ஒன்றாக நோக்கும் நடுவு நிலையாளனும், இயல்பாகவே பாசங்கள் இல்லாத தூயவனும் ஆகிய சிவபெருமானை நீவிர் இழிவு உண்டாகும் பொய்மையாக இன்றி, உண்மையாக விரும்புங்கள்; அவ்வாறு விரும்பினால், பல உயிர்களுள்ளும் உம்மை, ‘இவ்வுயிர் யாது’ எனச் சிறப்பாக நோக்கி, உம்முடைய குற்றங்களை நீக்கி, இயற்கையாகச் செய்து அத் தொடக்க நிலையில் இருந்து பின்னும் தொடர்ந்தே நிற்பான்.

விளக்க உரை

 • மெய்யன்பு சோதனையால் திரியமாட்டாது என்பது பற்றி கூறப்படும் பாடல்.
 • தொன்னிலை – அனாதி நிலை; உண்மையியல்பு (பொய்யாது நாடுதல் இல்லாமல் வேறுபயன் கருதாது அன்பே காரணமாக விரும்புதல். செயற்கை – பாசத்தோடு கூடிநின்ற நிலை. இயற்கை – பாசத்தின் நீங்கிச் சிவத்தோடு நிற்கும் நிலை)
 • இம்மந்திரம் பதிப்புக்களில் பாடம் பெரிதும் வேறாய்க் காணப்படுகின்றது.

[தன்மைவல் லோனைத் தவத்துள் நலத்தினை
நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்
புன்மைசெய் யாதே புனிதனை நாடுமின்;
பன்மையில் உம்மைப் பரிசுசெய் வானே.]

அடுத்து வரும் மந்திரம், `தொடர்ந்து நின்றான்` எனத் தொடங்குதலாலும், தருமை ஆதினப் பதிப்புகளிலும் இப்பாடலே காணப்படுவதால் இப்பாடமே கொள்ளப்பட்டது.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

இறைவன் உடனாய் நின்று உதவுவது என்ன உபகாரம்?
காணும் உபகாரம்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – திரிகை

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  திரிகை

பொருள்

 • அலைகை
 • எந்திரம்
 • குயவன் சக்கரம்
 • இடக்கை மேளம்
 • கூத்தின் அங்கக்கிரியை வகை
 • முந்திரி, கொடிமுந்திரி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நேர்தரு மந்திர நாயகி யானவள்
யாதொரு வண்ணம்? அறிந்திடு பொற்பூவை
கார்தரு வண்ணம் கருதின கைவரும்
நார்தரு வண்ணம் நடந்திடு நீயே.

திருமந்திரம் – நான்காம் தந்திரம் – திருமூலர்

கருத்து உரை

வழிபடுவார்க்கு நேரில் வந்து அருள் புரிகின்றவளும், அழகிய தேவி ஆனவளும் ஆகிய அந்த நவாக்கரி சக்கர சத்தி என்ன நிறத்தை உடையவள் எனில், மழை தரும் மேகம் போன்ற நிறத்தை உடையவள். இதனை அறிந்து அவள்பால் உனது அன்பினை செலுத்தி அவ்வண்ணம் நீ நட; அப்பொழுது நீ மனதால் நினைத்தவை எல்லாம் உனக்குக் கைகூடும். 

விளக்க உரை

 • இச்சக்கரத்தின் தியானவண்ணம் கூறும் பாடல்.
 • திரிகை என்பது கடைக்குறைந்து ‘தரு’ என நின்றது

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

இறைவன் உயிருக்கு வேறாய் நிற்கும் நிலைக்கு பெயர் என்ன?
பேதம்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – காசம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  காசம்

பொருள்

 • ஆகாயம்
 • மயிர்ச்சாந்து (தைலம்)
 • பிரகாசம்` என்னும் வடசொல் மருவி , காசம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பூசு வனஎல்லாம் பூசிப் புலர்த்திய
வாச நறுங்குழல் மாலையுஞ் சாத்திய
காசக் குழலி கலவி யொடுங்கலந்
தூசித் துளையுறத் தூங்காது போகமே.

பத்தாம் திருமுறை –  திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

யோகி ஆனவன்,  பூசுத்தக்கவற்றைப் பூசி, நல்ல வாசனை மலர்களை சூடி போகத்தை விளைவிக்கின்ற ஒப்பனையுடன் வருகின்ற தன் மனைவியோடு கூடுவான் ஆயினும், அவனது மனம் ஊசித் துளை அளவுடைய  பிரமந்திரத்திலே நிற்கும் ஆயின், அவனுக்கு அதனால் போகம் மிகாது; (யோகமே மிகும் எனும் பொருள் பற்றி)

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

இறைவன் உயிரோடு ஒன்றாகவும்,  வேறாகவும் மற்றும் உடனாகவும் கலந்திருத்தல் என்ன இயல்பு?
பொது இயப்பு (தடத்த இலக்கணம்)

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அந்தித்தல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  அந்தித்தல்

பொருள்

 • சந்தித்தல்
 • நெருங்குதல்
 • முடித்து வைத்தல்
 • முடிவு செய்தல்
 • இறத்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அந்திப்பன் திங்கள் அதன்பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாடொறும்
வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

முதலில் சந்திர கலை ஆகிய இடநாடியின் வழியும், பின்பு சூரிய கலை  நாடி ஆகிய வல நாடியின் வழியும், பிராண வாயுவை அடக்கியும், வெளி விட்டும் ஒப்பற்ற ஒருவனாகிய சிவனது திருவடிகளை என்றும் தியானிப்பேன். பின்பு அவனைப் புறத்திலும் சில இடங்களில் கண்டு வழிபடுவேன். இவை எல்லாமும் இங்குக் கூறிய தாசமார்க்கத்தில் சொல்லப்பட்டன.

விளக்க உரை

 • தாச மார்க்கம் வழி சிறப்பு நிலை எய்துதல் குறித்து கூறப் பட்டப்பாடல்.
 • சரியை ஆகிய தாசமார்க்கத்தில் நிற்போர் சமயதீக்கை பெற்று மூல மந்திர செபம், சதாசிவத் தியானம், கதிர் வழிபாடு என்பவற்றை நாள்தோறும் தவறாது செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது அவரது சரியைத் தொண்டு சிறப்பாய் விளங்கிப் பயன் தரும் என்றவாறு.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

உரை அளவையின் மூன்று வகைகள் யாவை?
தந்திரச் சொல், மந்திரச் சொல், உபதேசச் சொல்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – பரம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  பரம்

பொருள்

 • மேலானது
 • திருமால்நிலை ஐந்தனுள் ஒன்று –முதல் நிலை
 • கடவுள்
 • மேலுலகம்
 • திவ்வியம்
 • மோட்சம்
 • பிறவி நீக்கம்
 • முன்
 • மேலிடம்
 • அன்னியம்
 • சார்பு
 • தகுதி
 • நிறைவு
 • நரகம்
 • பாரம்
 • உடல்
 • கவசம்
 • கேடகவகை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

சிவபெருமான், இவ்வாறு பல உலகங்கள் பலவற்றையும் படைத்து, பிறவாமையால் அமரர் எனும் பொருள் பற்றி நிற்கும் தேவர்களையும் படைத்து,  தேவர் ஒழிந்த பிற உயிர்களையும் படைத்து,அவற்றுள் சித்துப்பொருளை அடிமைகளாகவும், சடப் பொருளை உடைமைகளாகவும் கொண்டு தான் தலைவனாய் நின்று அவை அனைத்தையும் ஆள்கின்றான்.

விளக்க உரை

 • உயிர்கட்குப் பந்தமும், வீடும் தருதலும் அவனுக்குக் கடனாதல் என்பது பற்றி கூறப்பட்டப் பாடல்
 • ‘அடிமைகளாகிய உயிர்கட்கு, வேண்டும் காலத்து வேண்டுவனவற்றைத் தருதல் அவனுக்குக் கடன்` என்பது குறிப்பு.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – வயிரவன்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  வயிரவன்

பொருள்

 • பைரவரின்  பலவேறு பெயர்களில் ஒன்று
 • பிரம்ம சிரேச்சிதர்
 • உக்ர பைரவர்
 • க்ஷேத்ரபாலகர்
 • வடுகர்
 • ஆபத்துதாரனர்
 • சட்டைநாதர்
 • கஞ்சுகன்
 • கரிமுக்தன்
 • நிர்வாணி
 • சித்தன்
 • கபாலி
 • வாதுகன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நடந்த வயிரவன் சூல கபாலி
கடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த உயிரது உண்ணும் பொழுது
படர்ந்த உடல்கொடு பந்தாடல் ஆமே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

இச்சக்கரத்தில்(வைரவச் சக்கரத்தில்) விளங்கும் வயிரவ மூர்த்தியானவர், சூலம் மற்றும் கபாலங்களை ஏந்திய வேக வடிவ மூர்த்தி ஆவார். அவர் தம் அடியவர் தவச் செயலுக்குப் பகையாய் நிற்பவரை தாமே முன்னின்று சூழ்ச்சி அற்றவராகச் செய்து, அவர்களது உயிரையும் போக்கித் தமது வெற்றிக்கு அறிகுறியாக பகைவர்களின் உயிர் நீங்கிய உடலங்களைப் பந்துபோல எறிந்து வீர விளையாட்டுச் செய்தருளுவர்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

ஐயம் இல்லாமல் விஷத்தை நேர அறிவது என்ன அளவை
காட்சி அளவை

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கொழுத்தல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  கொழுத்தல்

பொருள்

 • செழித்தல்
 • உடற்கொழுப்பு மிகுதல்
 • வளம்மிகுத்தல்
 • குழம்பாயிருத்தல்
 • திமிர்கொள்ளுதல்
 • பூமி மதர்த்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவென்னும் தோட்டியை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்
கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

மும்மலமாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகியவை கொண்டு ஐந்து இந்திரியங்களும் மத யானைகள் போன்று தறியில் கட்டுபடாது பிளிறிக்கொண்டு தாம் நினைத்தபடி செல்லும் இயல்பான தன்மை உடையவை. அதை அறிந்து நான் அவைகளை அடக்கி நேர் வழியில் செலுத்துவதன் பொருட்டு அறிவு எனும் ஞானமாகிய அங்குசத்தைப் பயன்படுத்தினேன். எனினும் அவைகள் அதையும் மீறித் தம் விருப்பப்படி ஓடித் தமக்கு விருப்பமானவைகளை மிகுதியாக பெற்று, அதனால் மேலும் மதம் மிகுந்து தீய குணத்தை மிக அடைந்து என்னை நிலைகுலையச் செய்யுமாறு பெரிது.

விளக்க உரை

 • ஞானத்தின் வழி சென்றாலும் ஐந்து இந்திரியங்களை அடக்காமல் புறக்கணித்தால் அவற்றால் பெருங்கேடு விளையும் எனும் பொருள் பற்றியது இப்பாடல்.
 • இந்திரியங்களால் அடைப்பெறும் சுகங்கள் அனைத்தும் மேலும் மேலும் துன்பம் தருபவையே.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

ஞேயம் என்பது என்ன?
அறியப்படும் பொருள்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இணர்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  இணர்

பொருள்

 • ஒழுங்கு
 • தொடர்ச்சி
 • பூங்கொத்து

வாக்கிய பயன்பாடு

இணஞ்சி போனாத்தான் வாழ்க்க, அத நீங்க நல்லா புரிஞ்சிக்கணும்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

உணர்வும் அவனே உயிரும் அவனே
புணர்வும் அவனே புலவி அவனே
இணரும் அவன் தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

ஒரு பிரபஞ்ச பொருள்களை உணர்வதற்கு கருவியாகிய இருக்கும் உணர்வும், அந்த உணர்வினால் பொருள்களை உணர்கின்ற உயிரும், உணரப்பட்ட பொருள்களை விரும்பும் விருப்பமும், வெறுக்கின்ற வெறுப்பும் எல்லாம் ஆகியவன் சிவன். அனைத்துப் பிரபஞ்சப் பொருள்களையும் ஒன்றாக்கி இணைத்து செயற்படுத்துகின்ற அவன் பிறர் ஒருவராலும் பிரபஞ்சத்தில் இருந்து தனியே வேறுபடுத்தி நினைக்க வரமாட்டான். ஆயினும் கொத்தாய் உள்ள வாசனை மிக்க மலர்களிடம் இருந்து மணம் கமழ்வது போல அனைத்துப் பொருளின் செயல் பாட்டிலும் அவன் விளங்குகிறான்.

விளக்க உரை

 • எல்லாப் பொருள்களிலும் அவன் நீக்கமற நிறைந்து நிற்றல் பற்றியும், அனைத்துப் பொருள்களின் செயல் பாட்டையும் அவனது செயலாக உணர்தல் பற்றியதும் குறித்தது இப்பாடல்.
 • புணர்வு – விடாது விருப்பம் கொண்டு பற்றுதல்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

பிரமேயம் என்பது என்ன?
அளக்கப்படும் பொருள்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பரதுரியம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  பரதுரியம்

பொருள்

 • முத்துரியத்தில் ஒன்று (சீவதுரியம், பரதுரியம், சிவ துரியம்)
 • விழிப்பு, கனவு, உறக்கம்  எனும் மூன்றிற்கும் அப்பாற்பட்ட நான்காவது நிலை துரியம்; இதற்கு மேல் அதி நுட்பமானது பரதுரியம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பரதுரி யத்து நனவும் படிஉண்ட
விரிவில் கனவும் இதன்உப சாந்தத்(து)
உரிய சுழுனையும் ஓவும் சிவன்பால்
அரிய துரியம் அசிபதம் ஆமே.

எட்டாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

பரதுரியத்தில் உலகத்தை அனுபவிக்கும் கேவல சகல அஞ்சவத்தைகள் ஆகிய (விழிப்பு, உறக்கம், கனவு, துரியம், துரியாதீதம்) எப்பொழுதும் நிகழாது முழுவதுமாக நீங்கும். ஆயினும் நின்மல துரியத்தில் அவை ஒரு சில நேரங்களில் நிகழ்ந்தாலும் நிகழும். ஆகவே, நின்மல துரியம் என்பது `அசி` பத அனுபவமாய் நிற்பதே ஆகும்.

விளக்க உரை

 • அதையும் கடந்த அனுபவம் ஆதல் இல்லை’ எனும் பொருளில் இப்பாடல்.
 • நின்மல துரியம் – கேவல அவத்தைகள் நீங்கி, அருளாலே தன்னையும் கண்டு அருளையும் கண்டு அதன் வயமாய் நிற்கும் நிலை.
 • நனவு, கனவு, சுழுத்தி, துரியம் ஆகிய நான்கு வேறு வேறு நிலைகள் ஒன்றோடு ஒன்று முடியும் இடத்திலேயே மற்றொன்று (சீவதுரியம், பரதுரியம், சிவ துரியம்) தொடங்கிவிடும்.
 • அதனால் பன்னிரண்டு நிலைகள் (குணம் மூன்றும் ( சாத்வீகம், ராட்சத, தாமச), நான்காகிய அந்தக்கரணங்கள்(மனம், சித்தம், புத்தி, அகங்காகரம்) இவைகள் ஐம்பொறிகள் வழியே கலந்து) சுருங்கிப் பத்து நிலைகள் (மெய், வாய், கண்,மூக்கு,செவி,பகுத்தறிவு ஆகிய ஆறறிவு மற்றும் குறிப்பறிவு, மெய்யறிவு, நுண் மாண் நுழை புலம் என்னும் அறிவு (சிற்றம்பலம் நுழைய தேவையான அறிவு), வாலறிவு (இறை அறிவு)) ஆகக் குறைந்துவிடும். சீவதுரியம் முடியும் இடத்தில் பரநனவு நிலை தொடங்கும். பரதுரியம் முடியும் இடத்தில் சிவதுரியத்தின் நனவு நிலை தொடங்கி விடும்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

காரணத்தில் இருந்து தோன்றும் காரிய வளர்ச்சி வகைகள் எவை?
பரிணாமம், விருத்தி

 

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

 

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வந்தித்தல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  வந்தித்தல்

பொருள்

 • வணங்குதல்
 • புகழ்தல்
 • கட்டுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அந்திப்பன் திங்கள் அதன்பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாடொறும்
வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

இடநாடியாகிய சந்திர கலை வழியாகவும், பின்பு வல நாடியாகிய சூரிய கலை வழியாகவும்,  பிராண வாயுவை அடக்கியும், வெளியே விட்டும் ஒப்பற்ற நிறைவு உடைய ஒருவனாகி, வானில் அரசாளும் தேவர்களின் தலைவனாக இருந்து வழிபாடு செய்யத்தக்கதாகவும் இருக்கும் சிவனது திருவடிகளை என்றும் வணங்கி  தியானிப்பேன். அவனை புறத்திலும் கண்டு வழிபடுவேன். இவை எல்லாமும் இங்குக் கூறிய தாசமார்க்கத்தில் சொல்லப்பட்டவை.

விளக்க உரை

 • ‘பின்பு அவனைப் புறத்திலும் சில இடங்களில் கண்டு வழிபடுவேன்’ எனு சில இடங்களில் விளக்கம் தரப்பட்டுள்ளன. ‘சில இடங்களில் கண்டு வழிபடுவேன்’ எனும் பொழுது பல இடங்களில் கண்டு வழிபட மாட்டேன் எனும் பொருள் விளக்கமுறும். சித்தர் என்பதாலும், அக மற்றும் புற வழிபாட்டு முறைகளை அறிந்து கூறுவதாலும் ‘அவனை புறத்திலும் கண்டு வழிபடுவேன்’ எனும் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. (இறை அன்பர்கள் தகுந்த விளக்கம் அளித்தால் பொருள் உணர்ந்து மகிழ்வுறுவேன்)
 • ‘வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்’ எனும் அபிராமி அந்தாதி வரிகளும் ‘வந்திப்பன் வானவர் தேவனை’ எனும் இப்பாடல் வரிகளும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

காரியத்தோடு தொடர்பு உடைய காரணம் எது?
முதற்காரணம்

சமூக ஊடகங்கள்