Category: சைவம்
முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 3
மார்கழிக் கோலம்
மார்கழிக் கோலம் எதற்கு.
ஆன்மீகம்
மார்கழி மாதம் பீடு உடைய மாதம். சைவத்திலும், வைணவத்திலும் அது பற்றி மிகவும் சிறப்பாக சொல்லப் பட்டிருக்கிறது. தேவர்களின் துவக்க நாள். அதனால் அதைக் கொண்டாடுகிறோம்.
அறிவியல்
1. மார்கழி மாதத்தில் அதிக அளவு ஆக்ஸிஜன் விடியற் காலையில் வெளிப்படும். அதை சுவாசிப்பதால் உடற் பிணிகள் நீங்கும்.
2. இறை வழிபாட்டிற்கு செல்வதால் மற்றவர்களோடு கலந்து பழக வாய்ப்பு வரும். இதனால் நீண்ட நாள் மனக் கசப்புகள் விலகும்.
3. இந்தக் காலங்களில் சிறு சிறு விலங்குகளுக்கு இரை தேடுதல் கடினம். அதை எளிமையாக்கும் வழி. (பூசணிப் பூ – கோல நடுவில்)
Click by : Gayu Venkat
மற்று நான் பெற்றது..
வடதிருமுல்லைவாயில் எழுதப்பட்ட சுந்தரர் தேவாரம்.
செய்த சபதம் மறந்து சங்கிலி நாச்சியாரை விட்டு திருவொற்றியூர் எல்லையைக் கடந்ததால் சுந்தரர் இரு கண்களையும் இழக்கிறார். காஞ்சிபுரம் செல்லும் வழியில் வடதிருமுல்லைவாயில் வருகிறார்.
இத்திருத் தலத்தில் 10+1 பாடல்கள் பாடுகிறார்.
அனைத்துப் பாடல்களும் அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே என்று முடிகின்றன.
இதில் ஒரு பாடல் மட்டும் இப்போது.
மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார்? வள்ளலே! கள்ளமே பேசிக்
குற்றமே செயினும், குணம் எனக் கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன்;
செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லை வாயிலாய்! அடியேன்
பற்று இலேன்; உற்ற படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .
இப்பாடல் சாதாரண மனிதனை வைத்து எழுதப் பட்டதாகவே தோன்றுகிறது.
மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார் – எனக்கு கிடைக்கப் பெற்றது யாருக்கு கிடைக்கும்.
வள்ளலே – பெறுபவரின் நிலை அறியாமல் விரும்பிய அனைத்தையும் கொடுக்கக் கூடியவன்.
கள்ளமே பேசிக் குற்றமே செயினும் – என் உள்ளம் கள்ளத் தன்மை உடையது, குற்றம் புரியக் கூடியது.
குணம் எனக் கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன் – இது எனது பிறவிக் குணம். ஆதலால் இன்னும் பல தீமைகள் புரிந்தேன்.
செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லை வாயிலாய் – செருக்கு கொண்டவர்களின் கர்வத்தை திரிபுர தகனமாக(மும் மல காரியம்) செய்தவனே
அடியேன் பற்று இலேன் – பற்றுவதற்கு எதுவும் இல்லாதவன்.
என்னுடைய துயரத்தை களைவாய்.
சிவவாக்கியர்
தத்துவங்கள் அனைத்தும் நிலையாமை என்ற நிலையில் உருவாகின்றன.
சிவவாக்கியரின் கீழ்க் கண்ட பாடல் அதை விளக்குகிறது.
பாடல்
வடிவுகண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் நந்தினால்
விடுவனோ அவனை முன்னை வெட்ட வேண்டும் என்பனே;
நாடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல்லுடல்
சுடலை மட்டும் கொண்டு போய்த் தோட்டிகைக் கொடுப்பரே!
விளக்கம்
அழகிய வடிவம் கொண்ட தான் விரும்பும் ஒரு பெண்ணை மற்றொருவன் விரும்புகிறான் என்றால் அவனை விடுவேனா, அவனை வெட்டி விடுவேன் என்று கூறுபவன் இருக்கிறான். அவன் எமன் வாயிலில் விழும் போது நாற்றம் கொண்ட இந்த உடல் மண்ணில் விழும். அதன் பிறகு இந்த உடலை மயானத்தில் இருக்கும் வெட்டியானிடம் கொடுத்து விடுவார்கள்.
இதில் பல கருத்துக்கள் அடங்கி உள்ளன.
அழகிய வடிவம் கொண்ட பெண்ணை விரும்புதல் – இயற்கை. அது காமத்துடன் கூடிய மாயையின் காரியம்.
விரும்புவனை வெட்டிவிடுவேன் – ஆணவம்
இறப்பு தீர்மானிக்கப்பட்டது. எனவே அதில் ஆணவம் கொள்ள எதுவும் இல்லை.
எனவே மும்மல காரியம் கொண்டவனுக்கு முக்தி இல்லை. நிலையற்ற எண்ணம் விடுத்து அஃதாவது மும்மலம் நீக்கி இறைவனை நாடச் சொல்கிறது இப்பாடல்.
சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்
குற்றமற்ற ஒன்றும், இயக்க வல்லமை உடையதும், முற்றும் உணர்ந்த ஒருவன் இருக்க வேண்டும். அவனால் மட்டுமே குற்றம் உடைய ஆன்மாக்களை சரி செய்ய முடியும். (தேர்வு எழுதுவனை கண்காணிக்கும் கண்காணிப்பாளர் போல்). அந்த நிலைக்குப் பெயர் சர்வஞ்ஞத்வம்.
எல்லா பொருள்களை அறிவிக்கவும் அதனை அசைவிக்கவும் அவனால் முடியும் எனவே அவன் சர்வவியாபகன்.
பசுவாகிய தன்னை கட்டுப்படுத்த வேறு ஒரு பதி வேண்டும். அவன் எல்லா காலங்களிலும் (பிரளய காலம் உட்பட) எல்லா காலத்திலும் இருப்பதால் நித்யதத்துவம் உடையவன்.
பெண் – இளமை துறத்தல்
வந்த சிவனடியார் அமுது உண்டு சென்றார்.
பரம தத்தன் பசியோடு வீடு திரும்பினான். புனிதவதியார் அமுது படைத்தார். அதோடு மாங்கனியையும் படைத்தார்.
மிகுந்த பசியோடு இருந்ததால் அவன் சொன்னான் ‘இன்னொன்றை எடுத்து வந்து இடுக’. கணவன் மனைவி இருவருக்கும் இரட்டைகள் என்பது பொதுவானது. (இன்பத்திலும் துன்பத்திலும், வாழ்விலும் தாழ்விலும் – திருமண மந்திரம்). இது விடுத்து அவன் தான் மட்டும் உண்ண நினைத்தது தவறானது.
புனிதவதியார் திகைத்தார். இறைவனிடம் சென்று வேண்டினார். மற்றொன்று கிடைத்தது. அதனை அவனிடம் கொடுத்தார் புனிதவதியார். இது வரை அறையா சுவையாக இருந்தது. காரணம் வினவினான் பரம தத்தன்.
நடந்ததை விளக்கிச்சொன்னார் புனிதவதியார்.
பரம தத்தன் நம்பவில்லை. அவன் கூறினான். ‘அப்படி எனில் மற்றொன்றை இடுக’.
புனிதவதியார் இறைவனிடம் வேண்டினார். மற்றொன்று கிடைத்தது.
அதைக் கொண்டுவந்து பரம தத்தனின் கைகளில் அதை இட்டதும் அவன் அதை வாங்கினான். வாங்கியதை உணர்ந்ததும் அது மறைந்து விட்டது. பரம தத்தன் திகைத்தான். அவன் சொன்னது ‘மற்றொன்றை இடுக’ என்றுதானே அன்றி அதை தான் உண்ண வேண்டும் என்று சொல்லவில்லை. எனவே இட்ட உடன் மறைந்து விட்டது.
பரம தத்தன் தெய்வத்திற்கு தீங்கு இழைத்து விட்டதாக நினைத்தான். எனவே வியாபார நிமித்தமாக கடல் மார்க்கமாக பயணம் தொடந்தான்.
நம் பயணமும் கடல் மார்க்கமாக தொடர்கிறது.
சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்
பெண் – இளமை துறத்தல்
காரைக்கால் அம்மையார்
இவர் காரைக்காலில் பிறந்தவர். இயற்பெயர் – புனிதவதி. வணிகர் மரபினை சார்ந்தவர்.
இளமை முதலே சிவ பக்தியில் சிறந்தவராக விளங்கினார். சிவ பத்தர்களை சிவனாகவே எண்ணி வணங்குவார்.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரமதத்தன் என்பவருக்கு புனிதவதியை மணம் செய்து வைத்தார் அவர் தந்தையார்.
தந்தையாருக்கு புனிதவதியை கணவன் வீட்டிற்கு அனுப்ப மனம் இல்லை. எனவே காரைக்காலில் பரமதத்தன் தனது வியாபாரத்தை தொடர்ந்தார்.
பரமதத்தனை சந்திக்க வந்தவர்கள் அவனிடம் இரண்டு மாம்பழங்களை கொடுத்துச் சென்றனர்.(இதில் பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. இவைகள் இரட்டை என்ற கருத்துக்கு வலிமை சேர்க்கின்றன.கணவன் – மனைவி, பரமாத்மா – ஜீவாத்மா)
பரமதத்தன் வேறு ஆள் மூலமாக அந்தப் பழங்களை புனிதவதியிடம் கொடுத்து அனுப்பினான்.புனிதவதி மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தார்.
ஐந்தொழில் புரிவோன் நாடகத்திற்கு தயாரானார்.
அப்போது வாயிலில் குரல் கேட்டது. ‘சிவாயா நம’
காரைக்கால் அம்மையார்,’திரு அமுது(சோறு) தயாராக இருக்கிறது. கறிஅமுது இன்னும் தயாராகவில்லை, சற்று பொருத்திருங்கள்’
சிவனடியார் – ‘மிக்க பசியாக இருக்கிறது. இருப்பதைப் படையுங்கள்’.
எனவே அமுது படையல் பரமதத்தன் அனுப்பிய ஒரு மாங்கனியோடு நிகழ்தது.
காத்திருங்கள்.. நாயகனின் நாடகத்திற்கு..
சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்
சைவ சித்தாந்தம் மிகப் பெரியது என்பதால் இனி இத்தொகுப்புகள் – ‘சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்’ என்ற தலைப்பில் வரும்.
ஆன்மாக்கள் நித்தியமனவைகளாக இருக்கின்றன. தேகம் அழிவதால் அது அநித்தியம். கர்ம வினைகளின் காரணமாக பல பிறப்புகள் எடுக்கும், ஆத்மா மாற்றம் மட்டுமே கொள்கிறது. அது அழிவதில்லை. பல பிறப்புகளுக்கு காரணமாக மட்டும் அமைகிறது.
காமம், குரோதம், லோப மோக மதம் மாற்சரியம் இவற்றின் காரணமாக (அக்காரணிகள்) ஆன்மா குற்றங்களை உடையாதாக இருக்கிறது.
காமம்: பற்றினால் உண்டாகும் பாசம்
குரோதம்: கோபம்
லோபம்: பேராசை
மதம்: மிகு கோபம்/வெறி பிடித்த நிலைமை.
மாத்ஸர்யம்: பொறாமை
மேற் கூரிய காரணங்களால் ஆன்மா, மலத்தால் சூழப்பட்டிருக்கிறது.
‘செம்புல பெயல் நீர் போல்’ என்பது வாசகமாகும். அது போல் ஆன்மா வினைகளின் காரணமாக அதன் வடிவம் பெறுகிறது. இது ஆன்மாவிற்கு இயற்கை உணர்வு இல்லை என்பதை உணர்த்துகிறது.
பெண் – இளமை துறத்தல்
நான் அறிந்த வரையில் (மிக மிக சிறிய அளவு) பக்தி இலக்கிய காலத்திலிருந்து தற்காலம் வரை இரண்டு பெண்கள் தனது இளமையை துறந்திருக்கிறார்கள். (பல ஆண்கள் விரும்பி இருக்கிறார்கள். உ.ம் யயாதி – புரு – மஹாபாரதம்)
1. ஔவையார்,
2. காரைக்கால் அம்மையார்.
இருவருக்குமே இளமையின் மீது ஏன் அந்த வெறுப்பு ஏற்பட்டது?
1.சமூகம்
2.பொருளாதாரம்
3.வீடு
4.இறைமை குறித்த சிந்தனைகள்
5.காரைக்கால் அம்மையாருக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்து வரும் திருநீல கண்ட நாயனார் முலமாக வெளிப்பட்ட /பதிவு செய்யப்பட்ட ‘இளமை மீதூற இன்பத்துறையில் எளியன் ஆனார்’ என்ற எண்ணங்களின் துறத்தலா?
6.துறக்கப்பட்ட விஷயத்தில் இருந்த வலிகள்/காயங்கள்/வடுக்கள்.
7.இலக்கு நோக்கிய பயணம்.
நோக்கம் இருவருக்கும் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது.
காரைக்கால் அம்மையார் – என் சிறுவயதில் சொல்லப்பட்ட கதை இது. இந்த பிரமிப்பு மற்றும் வலிகள் இன்றும் தொடர்கிறது.
ஒரு சராசரி ஆண் எப்படி வாழ்க்கையை நடத்தினான், இறையருளால் ‘அம்மா’ என்று அழைக்கப்பட்ட பெண் எப்படி அடைய முடியா இலக்கை அடைந்தாள் என்பது மிக நீண்ட வரலாறு.
காலத்தினை கருத்தில் கொண்டு காரைக்கால் அம்மையார் சரிதத்தை எழுத இருக்கிறேன். தவறு இருப்பின் தெளியப் படுத்துங்கள்.
Photo – Shivam
சைவ சித்தாந்தம்
உடம்பு அழியக்கூடியது. (தேகம்) – எனில் அதைப் பகுக்க முடியுமா?
ஜடப் பொருள்கள் அழியக்கூடியது.
பிருதிவி, அப்பு, தேயு, வாயு மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் சேர்க்கை. எனவே இது அழியும். எனவே இவை ஜடப் பொருள்கள். எனவே அது சித்து ஆகாது.
அப்படி எனில் மனத்தின் வேலை எது –
கீழே குறிப்பிட்டவைகளின் தொடர்கலவையே செயல்.
மனம் – நினைக்கும்.
புத்தி – விசாரிக்கும்.
சித்தம் – நிச்சயிக்கும்.
அகங்காரம் – துணியும்.
எனவே சித்தம் என்பது பூதங்களின் சேர்க்கை தவிர்த்த மற்றொன்று. சில நேரங்களில் கனவு காண்கிறோம். அவை நிச்சம் என்றும் நம்புகிறோம். விழித்தவுடன் அது கனவு என்பது பற்றிய தெளிவு வருகிறது.
அது போலவே ‘நான்’ தேகம் என்னும் நிலை மாறும் போது, அசித்து பற்றிய எண்ணம் தெளிவுறுகிறது. அது உலகியல் நிலையாமை என்னும் கருத்தை வலியுறுத்தி நிச்சயப்படுத்துகிறது.
கருத்து கனமானது என்பதால் மீண்டும் தொடர்வோம்.
(மிக அதிக அளவில் இக்கருத்துக்களை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னை மன்னிப்பார்களாக)
பட்டினத்தார்
பட்டினத்தார் என்ற பெயரில் பல புலவர்களும், கவிஞர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். காலம் 2ம் நூற்றாண்டு, 10ம் நூற்றாண்டு மற்றும் 17 – 18 ம் நூற்றாண்டு.
பட்டினத்தாருக்கு ஞானம் மகன் மூலமாக கிடைக்கிறது. கடல் கடந்து பொருள் ஈட்டி வரும் மகன், எருவிராட்டியையும், தவிட்டையும் எடுத்து வருகிறான். அவன் கொடுத்ததாக இருந்த பேழையை(பெட்டி) திறந்து பார்க்கிறார். ஒலை ஒன்றும், உடைந்த ஊசி ஒன்றும் இருக்கிறது. அந்த ஓலையில் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்று எழுதப்பட்டிருக்கிறது.
இடரது பாடல்கள் மிக எளிமையானவை.
பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே
இவ்வுலகில் பிறக்கும் போது எதையும் எடுத்து வரவில்லை. அது போலவே இறக்கும் போதும். இடைக்காலத்தில் பெறும் இச்செல்வம் சிவன் கொடுத்தது என்று அறியாமல் இறக்கும் கீழ் தரமானவர்களுக்கு என்ன சொல்வேன்.
முதல் பட்டினத்தார் தவிர மற்ற இருவரின் பாடல்களுக்கு விளக்கம் தேவை இருக்காது.
வாசித்தால் வாழ்வின் நிலைமை புரியும்.
Image – Internet
சைவ சித்தாந்தம்
சைவ சித்தாந்தம் – சிந்தனை
பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில் – என்று ஆரம்பிக்கிறது. பதி குறித்தே தொடக்கம் எனினும், ‘பசு'(உயிர்) குறித்த அறிவு ஏற்பட்ட பின் ‘பதி’ குறித்த உணர்வு வரும் என்பது என் கருத்து.
எனவே பசு தொடங்கி விளக்கம் ஆய்வோம்.
பொதுவாக உயிர்களின் நிலையாமையைச் சொல்லி இறைவனை நாடச் சொல்லுதல் சைவ மரபு. (உ.ம் – திருமந்திரம் – உயிர் நிலையாமை, யாக்கை நிலையாமை )
நிலைத்திருத்தல் என்பது எல்லா காலங்களிலும் நிலைத்திருத்தல் (அழிவற்றதாக) என்பதாகக் குறிக்கப்படும்.
அவ்வாறு அல்லாது,
1. உடம்பு அழியக்கூடியது. (தேகம்)
2. பிரபஞ்சம் அழியக்கூடியது. (உ.ம் பிரளயம், ஊழிப் பெருங்காற்று)
3. பிரபஞ்சதின் உட் பொருட்களும் அழியக் கூடியது. (மரம், செடி)
அழியும் பொருள் ஒன்று எனில், அழியாப் பொருளும் இருக்கக் கூடும்.
எனவே அவைகள் அசித்து எனவும், சித்து எனவும் வழங்கப்படும்.
சித்து – அழியாதது.
அ – சித்து – அழியக் கூடியது.
கருத்து கனமானது என்பதால் மீண்டும் தொடர்வோம்.
(மிக அதிக அளவில் இக்கருத்துக்களை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னை மன்னிப்பார்களாக)
காதல் = பக்தி இலக்கியம்
காதலில் பல வகைகள் உண்டு. பக்தி இலக்கியங்கள் அதனை பெரிதும் பின்பற்றுகின்றன.
தன்னை தலைவியாகவும், இறைவனை தலைவியாகவும் இந்த இலக்கிய காதல்கள் போற்றுகின்றன.
திருநாவுக்கரசரின் பின்வரும் பாடல் அதனை நன்கு விளக்குகிறது.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.
கேட்டு, கண்டு, உணர்தல் அங்கே நிகழ்கிறது. காட்சிகள் விரிகின்றன.
தோழியினடத்தில் கேட்கிறாள்.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் – முதலில் அவனது பெயர் என்ன என்று கேட்கிறாள்.
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் – அவனது உருவ அமைப்புப் பற்றி கேட்கிறாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் – அவனது சொந்த ஊர் பற்றி கேட்கிறாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் – பின் அவன் பொருட்டு பைத்தியமாகிறாள்.
இவ்வடிவத்தில் முக்கியமானதொரு விஷயம் ‘கேட்கிறாள்’.’கேட்கிறாள்’ என்ற நிலை தன்னை இழந்த நிலை. காதும் மனமும் வேறு வேறு வேலையைச் செய்கின்றன்.
காதல் எத்தனை விஷயங்களை செய்கிறது என்ற பட்டியல்.
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அன்னையையும், மற்ற எல்லாவற்றையும் விலக்குகிறாள். ‘நீத்தாள்’ – மீண்டும் திரும்ப முடியாத நிலை. (உ.ம் நீத்தார் விண்ணப்பம் – மாணிக்கவாசகர். அன்னையை எவ்விதத்திலும் விலக்க முடியாது என்பது துணிபு. ஆதிசங்கரர், பட்டினத்தார்)
எல்லா இடங்களுக்கும்/வீடுகளூக்கும் என்று சில ஆசாரங்கள் இருக்கின்றன. இங்கே ஆசாரங்கள் என்பது பழக்க வழக்கங்கள். அதை விட்டு விலகினாள்.
தன்னை மறந்து விடுகிறாள். தன் பெயரையும் மறந்து விடுகிறாள். இரண்டும் வெவ்வேறு நிலைகள். முதல் வகை குறுகிய காலம் குறித்தது. இரண்டாவது நீண்ட காலம் குறித்தது.
அவனது தாளை சரணடைந்தாள்.
வாருங்கள் நமது பொக்கிஷங்களை பேணிக்காப்போம்.
சைவ சித்தாந்தம்
சைவ சித்தாந்தம் பற்றிய சில கருத்துக்களை பகிர இருக்கிறேன்.
சைவ சித்தாந்தம் மிகப்பெரிய ஒரு கடல். இது பற்றி தெரிந்து கொள்ளவும்/தெளிந்து கொள்ளவும் கூடிய ஒரு முன்னுரை மட்டுமே இப்பதிவுகளும் இதன் தொடர்ச்சியான பதிவுகளும்.
த்வைதம் – இருமைப்பற்றி பேசும்
அத்வைதம் – -ஒருமைப்பற்றி பேசும்
விசிஷ்டாத்வதம் – இருமை ஒன்றாதல் பற்றி பேசும்
சைவம் – மூன்றும் அதன் செயல்பாடுகளும் (பதி, பசு, பாசம்) பற்றி பேசும்
பதி – இறைவன்
பசு – உயிர்கள்
பாசம் – இறைவனுக்கும் உயிர்களுக்கும் உள்ள தொடர்பு.
ஆதி சங்கரர் கருத்துப்படி அறுவகை சமயமாக இருந்தாலும்
(காணாபத்தியம் – கணபதி முதன்மை,
கௌமாரம் – முருகன் முதன்மை,
சௌரம் – சூரியன்
சைவம் – சிவன் முதன்மை,
வைஷ்ணவம் – விஷ்ணு முதன்மை,
சாக்தம்- அம்பாள் முதன்மை ) சைவம் காலங்களுக்கு முற்பட்டது.
இவைத்தவிர பைரவர், வீரபத்திரர் – என அனைத்தையும் சேர்த்து பேசப்படும் தொகுதி – பதி.
விபூதி தயாரிக்கும் முறை
விபூதி தயாரிக்கும் முறை.(சைவ சித்தாந்த முறைப்படி)
1. கற்ப விதி
2. அனுகற்ப விதி
3. உப கற்ப விதி
1. கற்ப விதி
பங்குனி மாதத்தில் ஈசான்ய மூலையில் நன்கு மேய்ந்து வந்த பசுக்களை தொழுவத்தில் கட்ட வேண்டும். பின்னர் அவைகள் இடுகின்ற சாணத்தை பூமியில் விழாமல் தாமரை இலையில் எடுத்து வந்து, உண்டையாக்கி நெருப்பில் இட்டுப் பின் புதுப்பானையில் இட்டு, பிறகு பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளவேண்டும்.
2. அனுகற்ப விதி
காட்டினில் இருக்கும் பசுவின் சாணத்தை எடுத்து மேற்கண்ட முறைப்படி தயாரிப்பது.
3. உப கற்ப விதி
காய்ந்த சாணத்தினை(பொதுவாக வீட்டு பசு) எடுத்து மேற்கண்ட முறைப்படி தயாரிப்பது.
பலன்கள்.
தலையினில் இருக்கும் நீரை உறிஞ்சி விடும்.
அனுஷ்டானம் செய்பவர்கள் 16 இடங்களில் தரிப்பார்கள்.(12 எனக் கொள்வாரும் உண்டு)