பாடல்
பூசுவது வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ!
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசன்அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து – சிவனுடைய காருண்யமான கருணையை விளக்கும் பாடல்.
பதவுரை
தோழியே, உங்கள் இறைவனான ஈசன் பூசிக்கொள்வது வெண்மையான திருநீறு; அணிகலனாக அணிவது சீறுகின்ற பாம்பு; அவனது திருவாயினால் சொல்லுவது விளங்காத சொற்கள் போலும் என ஒருத்தி இகழ்ச்சியாகக் கூறினாள்; பூசுகின்ற பொருளும், பேசுகின்ற சொற்களும், அணிகின்ற ஆபரணங்களும் கொண்ட என் ஈசனானவன் எல்லா உயிர்க்கும் இயல்பாகவே இறைவனாய் இருந்து அந்த உயிர்களுக்கு தக்க பலன் அளிப்பவனாய் இருக்கிறான் என்று மற்றொருத்தி விடை கூறினாள்.
விளக்க உரை
- மறை – பொருள் விளங்காத சொல். `வேதம்` என்பது, உண்மைப் பொருள்.
- ஈசன் தலைமை கொண்டது அவனுக்குப் பிறர்தந்து வராமல் இயல்பாக அமைந்தது.
- ‘சிவன் சாந்தாகப் பூசுவதும் சாம்பல்; அணியாக அணிவதும் பாம்பு; சொல்வதும் பொருள் விளங்காத சொல் என்றால், அவன் உயர்ந்தோனாதல் எவ்வாறு’ என்பது இதனுள் எழுப்பப்பட்ட தடை; ‘எல்லா உயிர்க்கும் அவனே தலைவன் என்பது யாவராலும் நன்கு அறியப்பட்டதால், அவன் பூசுவது முதலியன பற்றி ஐயுற வேண்டுவது ஏன்` என்பது தடைக்கு விடை.
- கேள்வியில் பூசுவதும், பூண்பதுவும், பேசுவது என்று வருகிறது. பதிலில் பூசுவதும், பேசுவதுவும், பூண்பதுவும் என்று வருகிறது. முன்னர் உரைத்த மறை போலும் என்பதைக் கொண்டு அவன் பேசுவது மறை என்றும் அவன் பூண்பது என்பது அந்த மறை சொற்களே என்பதையும், அவனே அந்த மறை வடிவமாக இருக்கிறான் என்றும் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் உணர்ந்து உய்க.