அமுதமொழி – விளம்பி – ஆவணி – 19 (2018)

பாடல்

முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்லென்றாற் சொல்லுமா றெங்ஙனே

பத்தாம் திருமுறை -திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

நல்ல அறிவும், சிறந்த இல்லற பண்பும், மக்கட்பேறும் உடைய ஒரு தாயானவள் தன் காதல் கணவனுடன் பெற்ற இன்பத்தை மகள் சொல் என்று  கேட்டால் அந்த தாயால் அதை எப்படி சொல்ல விளக்க முடியாதோ அது போல புறத்தில் பொருளின் வடிவினை முகக்கண் கொண்டு பார்க்க முடியும்; ஆனால் அறிவுக் கண்ணால் மெய் அறிவு கொண்டு காணப்படும் அம்மெய்ப்பொருளை அகக்கண்ணாகிய அறிவுக் கண்ணால் மட்டும் காண இயலும்.அத்தகைய பொய்யில்லாத  மெய்யான இன்பத்தினைத் தமக்குத் தாமே தம்மில் உணர்தல் அன்றி சொல்லி உணரச் செய்வது என்பது எவர்க்கும் ஒல்லாது.

விளக்க உரை

 • மெய்ப் பொருளை புறக்கண்ணால் காணலாம் என்று கூறுபவர் மூடராவர். புறக்கண்,  சிவத்தினை உணரத் துணை செய்யும் போது  திருவடிப் பேரின்பம் அகத்துக் கண்ணாகிய அறிவுக் கண்ணால் நேரும். அதுவே அழிவிலாத பேரின்பம், எல்லையிலாத நல்லின்பம்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 10 (2018)

பாடல்

தானே அமைந்தஅம் முப்புரந் தன்னிடைத்
தானான மூவுரு ஓருருத் தன்மையள்
தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள் கல்வி
தானான போகமும் முத்தியும் நல்குமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

சத்தியானவள், எங்கும் நிறைந்தவளாகவும்உருத்திர லோகம், விஷ்ணுலோகம், ப்ரம்மலோகம் ஆகியவற்றிற்கு  தலைமையாக இருக்கும்  இருக்கும் உருத்திரன், விஷ்ணு, பிரமன் ஆகியவர்களை தோற்றம் ஒடுக்கம் செய்பவர்களாக இருந்து அது தாண்டியதான நான்காவது வடிவமாக நிற்பாள்; அவள் ஓருத்தியே பொன்னிறம் கொண்ட சத்தியாக  நின்று முத்தியையும், செந்நிறம் கொண்ட திருமகளாய் நின்று செல்வத்தையும், வெண்ணிறம் கொண்ட கலைமகளாய் நின்று கல்வியையும் தருவாள்.

விளக்க உரை

 • மூவுரு ஓர் உரு – மூவுன்று உருவத்தையும் அடக்கி உள்ள ஓர் உரு.
 • இதனால், ஒருத்தியே மூவராய் நின்று முத்தொழில் செய்பவளாகவும், ஐவராய் இருந்து ஐந்தொழில் இயற்றி அதன்படி நின்றொழுகும் முதன்மையானவர்கள் அனைவர்க்கும் தலைவியாய் உயிர்கட்குப் போக மோட்சங்களைத் தந்து நிற்கும் திறன் பெறப்படும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 23 (2018)

பாடல்

விடிவ தறியார் வெளிகாண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார்
கடியதோர் ஊன்இமை கட்டுமின் காண்மின்
விடியாமை காக்கும் விளக்கது வாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம்  – திருமூலர்

பதவுரை

புறப் பொருளைக் காணும் கண் இல்லாதவர்கள் இருளிலும், விடி காலை புலர்ந்தாலும், விடிந்தப் பின்னும்  அதை அறியாமல் இருப்பதோடு  விடிந்தபிறகும் ஒளியில் பொருள்களை கண்டு பயன்பாடு கொள்ளவும் மாட்டார்கள். அதுபோலத் திருவருளை உணரும் பக்குவம் இல்லாதவர்கள், தமக்குத் திருவருள் முன்னின்று அருளுதலை உணரமாட்டாமல் இருந்து, அவ்வாறு அருளிய பின்னும் அந்த அருள் நலத்தை நுகரவும் மாட்டார்கள். ஆதலினான் நீங்கள் ஊனக் கண்ணை விலக்கி, நுண்ணிதாகிய ஞானக் கண்ணைத் திறந்து திருவருளைக் காண்டால், அத்திருவருளே அறியாமையாகிய இருள் வாராதபடிக் காக்கின்ற ஒளியாகி முன் நிற்கும்.

விளக்க உரை

 • இருளில் அழுத்துவதாகிய அபக்குவம் நீங்குமாறு முயல வேண்டும் என்பது பற்றிய பாடல்.
 • ‘திருவருளே விளக்கு’ – நீங்கள் அவ்விளக்கையே உமக்குக் காட்டாகக் கொள்ளுதல் வேண்டும்` எனும் பொருளில்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 18 (2018)

பாடல்

திரிபுரை சுந்தரி அந்தரி சிந் தூரப்
பரிபுரை நாரணி ஆம்பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மனி என்ன
வருபல வாய்நிற்கும் மாமாது தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

மகாதேவியாகிய சிவசத்தி, திரிபுரை முதலிய பல காரணப் பெயர்களைப் பெற்று, மிக்க அழகுடையவளாகிய சுந்தரி, ஆகாயத்தில் விளங்குபவளாகிய அந்தரி, சிந்துரத்தையும், சிலம்பணிந்தவள் அணிந்தவள், நாரணன் தங்கை ஆகிய நாரணி, அம்பலம் நிற வடிவத்தையும் உடையவள், சிறப்பான நீல நிறத்தை உடையவளாய் `ஈசுவரி, மனோன்மணி` என்னும் பெயர்களைப் பெற்று அந்த அந்த வகையில் எல்லாம் விளங்குவாள்.

விளக்க உரை

 • ஆம் – பொருந்திய, பல வன்னத்தி – பல்வேறு நிற வடிவத்தையும் உடையவள் எனும் பொருளில் சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆம்பல வன்னத்தி – நீட்டல் அதிகாரம் பற்றி அம்பலம் என்பது  ஆம்பலம் எனக் கொண்டும் சிவசக்தி ஐக்கிய பேதம் கொண்டு பின்னர் வரும் ஈசுவரி,மனோன்மனி என்று வருவதாலும் அம்பல வண்ணமுடையவள் என்று இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.
 • ஒன்பது திருப்பெயரும் ஒன்பது ஆற்றல்களை குறிக்கும். அனைத்தும் ஒன்றாகி மும்மலம் நீங்க அருளச்செய்பவள் சத்தியாகிய திரிபுரை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 16 (2018)

பாடல்

காதணி குண்டலம் கண்டிகை நாதமுன்
ஊதுநற் சங்கம் உயர்கட்டி கப்பரை
ஓதுமில் பாதுகம் யோகாந்த ஆதனம்
ஏதுமில் யோகபட் டம்தண்டம் ஈரைந்தே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

ஆண்கள் காதில் அணியும் ஆபரணமாகிய குண்டலம், கழுத்தணி ஆபரணமாகிய உருத்திராட்சமாலை, வாயினால் ஊதி நல்ல ஒலி உண்டாக்கும் திருச்சங்கு, மகா மேரு, கைகளில் திருவோடு, ஓதுதல் உடைய தவச் சாலை, கால்களில் அணியக்கூடிய பாதுகை, யோகம் தரதக்கதான இருக்கை, நெற்றியில் அணியப்படும் குற்றமற்ற யோக பட்டம் மற்றும் கைகளில் கொள்ளப்படும் யோக தண்டம் என்னும் பத்தும் தவம் உடையவர்களுக்கு உரித்தான வேடங்களாகும்.

விளக்க உரை

 • உயர்கட்டி – மகா மேரு – மாபெரும் துறவிகள் போன்றோர் அணிவது. (உ.ம் பெரும்பாலான ஆதினங்கள் குரு பரம்பரையாக இதை அணிவார்கள்)
 • தவ வேடங்கள் தொகுப்பு பற்றிய பாடல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 11 (2018)

பாடல்

மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓமாயை நாரணி ஓராறு கோடியில்
தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள்
ஆமாய் அலவாம் திரிபுரை ஆங்கே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

திரிபுரை ஆனவள், மா மாயை என பெரியதாக குறிப்பிடப்படும் சுத்த மாயை, மாயை என குறிப்பிடப்படும் அசுத்த மாயை, சுத்த மாயை மற்றும் விந்து ஆகியவற்றால் குறிப்பிடப்படும் சுத்த தத்துவங்களின் காரியங்களாகிய வயிந்தவம், வைகரி, மத்திமை, பைசந்தி, சூக்குமை  முதலிய நால்வகை வாக்குகள் ஆகிய நாத வடிவங்கள் #, அசுத்த மாயையிலிருந்து தோன்றிய ஆன்ம தத்துவங்கள் தோன்றுதற்கு முதலாகிய பிரகிருதி மாயை எனப்படும் ‘மூலப் பிரகிருதி’ ஓராறு கோடி மந்திரங்களின் முடிவாகிய ஏழனுள், `ஹும், பட்` என்று இரண்டுமாகவும்  சில இடங்களில்  ஒன்றாக எண்ணப்படுவதும் ஆன சத்தியின் வேறுபாடுகள், சிவன் நினைத்தவிடத்து சிவன் அசையா பொருளாகவும், ‘ஆம்’ அசை நிலை கொண்டு அசையும் பொருள், பிற பொருள்களில் கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையால் வேறாயும் நிற்பாள்.

விளக்க உரை

 • சொல்லப்படும் பொருள்கள் அனைத்திலும் தானேயாயும், அல்லாதவாறும் சிவ சத்தி வடிவம் கொண்டு நிற்பாள் என்பது பற்றியது.
 • அசுத்த மாயையின் காரியங்கள் ‘மாயேயம்’ , பிரகிருதியின் காரியங்கள் ‘பிராகிருதம்’ ஆகியவற்றை இங்கு உணர்க
 • ஓவுதல் – நீங்குதல்
 • # ஞானசத்தி, இச்சாசத்தி, கிரியாசத்தி`, ஆரணி, ஜெனனி, உரோதயித்திரி, வாமை, ஜேஷ்டை, இரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப் பிரமதனி, சருவபூததமணி, மனோன்மனி, சத்தி, விந்து, மனோன்மணி, மகேசுவரி, உமை, திரு, வாணி` எனவும் பல்வேறு வடிவங்கள்
 • ஆறுகோடியிற்றாமான மந்திரம் – ஆறு ஆதாரங்களுக்கு உரித்தான மந்திர எழுத்துக்கள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 6 (2018)

பாடல்

ஆன வராக முகத்தி பதத்தினில்

ஈனவ ராகம் இடிக்கும் முசலத்தோ

டேனை எழுபடை ஏந்திய வெண்ணகை

ஊனம் அறஉணர்ந் தார்உளத் தோங்குமே

 

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

 

பதவுரை

திரிபுரையானவள், தண்டனை தருவதற்கு ஏற்ற வராக முகத்தை உடையவள் (வராகி); இழிகுணம் படைத்த தீயவர்களது உடலங்களை அவர்களின் காலத்தில் அழிப்பதற்காக உலக்கையோடு சங்கு, சக்கரம், ஏர், அங்குசம், பாசம் ஆகிய ஏழு ஆயுதங்களை ஏந்தி அபயம், வரதம் ஆகியவையும் கொண்டு இருப்பாள்; தங்கள் இடர்களை நீக்க வேண்டித் தியானிப்பவர்களது உள்ளத்தில் சிரித்த முகத்தையுடையவளாக விளங்குவாள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 29 (2018)

பாடல்

மூலம்

காயத்தே ரேறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தே ரேறி மயங்கு மவையுணர்
நேயத்தே ரேறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத்தே ரேறி யவனிவ னாமே

பகுப்பு

காயத்தேர் ஏறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தேர் ஏறி மயங்கும் அவை உணர்
நேயத்தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத்தேர் ஏறி அவன்இவன் ஆகுமே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

உடம்பு ஆகிய நிலையில்லாத தேரின்மேல் ஏறி, மனமாகிய பாகன் தன் கையைப் பொருத்தி,  கண்ட இடங்களில் செலுத்துதலினால் வழியறியாது மாயைக்கு உட்பட்டு மயங்குகின்ற உயிர்கள், சிறிதே உணர்வு பெற்றுச் தூயவனாகிய சிவன் மேல்  அன்பாகிய தேரில் ஏறிச்சென்று அவனது அருளைப்பெற்றால்,  ஆயத்தேர் எனும் சமாதி யோக வழியில்  சீவன் சிவனை அடைந்து அவனாகி விடும்.

விளக்க உரை

 • சிவன் அருள் பெற்று, சாயுஜ்யம் எனும் இறைத்தன்மையில் சிவமாவதற்கு முதலில் அன்பு வேண்டும் என்பதை வலியுறுத்தி எழுதப்பட்ட பாடல்.
 • உடம்பை தேராக உருவகம் செய்ததினால், அதன் இயல்யு ‘மாயத் தேர்’ ஆனது.
 • ‘கைகூட்டல்’ – கையைப் பொருத்தி ஓட்டுதலாகிய காரியம், அஃதாவது தேரினை செலுத்துதல்
 • நேயத்தேர் – இமயம் நியமம் முதலிய ஒழுக்கங்களைக் கைக்கொண்டு
 • ஆயத்தேர் – சமாதி யோகம், சிவனடியார் திருக்கூட்டம்
 • ஆயம் – கமுக்கம்; தோழியர்கூட்டம்; வருத்தம் மேகம் மல்லரிப்பறை; 34அங்குலஆழமுள்ளகுழி; வருவாய்; குடியிறை; கடமை; சூதுகருவி; சூதாட்டம் பசுத்திரள்; நீளம்; மக்கள்தொகுதி; பொன்

 

 

மதனா அண்ணா

எனக்குத் தோன்றிய விளக்கம்.

ஆத்மா ஓர் தேகம் அடைந்து சில காலம் பயணிப்பதை பயணம் என்று கவிதை நடையில் குறிப்பர். நம் ஆத்மாவானது காயம் எனும் தேர் ஏறி அதனை இயக்கும் மனம் எனும் பாகன் கைகொடுக்க மாயம் எனும் நிலையின்மையில் பயணிக்காது எது உண்மையென்று உணர்விக்கும் நேயம் எனும் மார்க்கம் பற்றி அதில் பயணித்தால் அழிவில்லாத மெய்ப்பொருளாகிய சர்வேஸ்வரனின் அருள் கிடைக்கப் பெற்றால் மட்டுமே அடைய இயலும் ஆய்தல் அதாவது உட்தேடல் எனும் கிட்டுதற்கறிய பாக்கியம் பெற்று அதன் மூலம் நான் எனும் நிலையறுத்து நானே அவன் எனும் மிக உயர்ந்த அஹம் பிரஹ்மாஸ்மி எனும் அத்வைத நிலை அல்லது ஒருமை நிலை அண்டும்.

 

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 14 (2018)

பாடல்

காணும் பொருளும் கருதிய தெய்வமும்
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்
ஊணும் உணர்வும் உறக்கமும் தானாகக்
காணுங் கனகமும் காரிகை யாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

ஐம்புல நுகர்ச்சியின் காரணமாக உலகில் காணப்படுகின்ற பல பொருள்கள், கருத்தில் முற்றுப் பெற்று நினைக்கின்ற பலதெய்வங்களை வழிபடுதல், பிறரால் போற்றப்படுகின்ற திவ்ய தலங்களில் வாழ்தல், பெருகி ஓடும் நதி முதலிய புண்ணிய தீர்த்தங்களில் மூழ்குதல் மற்றும் அவற்றால் வரும் பயன்களுடன் நுகர்ச்சி, உண்ணும் உணவு, உணரும் உணர்வு, உறங்கும் உறக்கம், கருதப்படும் அளவான பொன் முதலிய செல்வங்கள் ஆகியவை திருவருள் அம்மையாகிய சாம்பவி மண்டலச் சக்கர வழிபாட்டினால் கிடைக்கும்.

விளக்க உரை

 • சாம்பவி சக்கர வழிபாடு எல்லாப்பயனையும் தருதல் பற்றி கூறப்பட்டப் பாடல்
 • தானாகக்காணும் கனகம் – பொன் பெற்றபிறகு அனைத்தும் உண்டாகும் என்பது பற்றி.
 • காரிகை – சாம்பவி

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

சிவனுக்குத் தத்புருட மந்திரம் எந்த உறுப்பாகும்?
முகம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 13 (2018)

பாடல்

நனவில் கலாதியா நால் ஒன்று அகன்று
தனி உற்ற கேவலம் தன்னில் தான் ஆகி
நினைவுற்று அகன்ற அதீதத்து உள் நேயம்
தனை உற்றிடத் தானே தற்பரம் ஆமே

பத்தாம் திருமுறை-  திருமந்திரம் – திருமூலர்

 பதவுரை

நனவுக் காலத்தே ஊழ், உழைப்பு, உணர்வு, உவப்பு, மருள்  என்னும் ஐந்தும் செய்படாது அகல ஆருயிர் தனித்து நிற்கும் தனிநிலை புலப்படும். அவ்வாறு தன்னில் தானாக நின்று அகன்ற அந்நிலையில் உணர்வுக்கு உணர்வாய் விளங்கப்படும் பொருளான சிவபெருமான் திருவடியினைத் திருவருள் நினைவால் கொள்ள அந்த உயிர் தற்பரசிவமாய்த் திகழும்.

விளக்க உரை

 • நாலொன்று – ஐந்து: கலை, வித்தை, அராகம், புருடன், மாயை.
 • நேயந்தனை – சிவத்தை.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

ஈசான மந்திரத்தால் செய்யும் தொழில் என்ன?
அருளல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 7 (2018)

பாடல்

நின்றாள் அவன்றன் உடலும் உயிருமாய்ச்
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக என்னுட் புகுந்துணர் வாகியே
என்றாள் பரஞ்சுடர் ஏடங்கை யாளே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

சிவனது செயல்களிலெல்லாம் உடன் சேர்ந்தே நிற்கின்ற மேலான சத்தியாகிய திரிபுரை, அச்சிவனோடு உடலும் உயிரும்போலப் பிரிப்பின்றி வாளாதும் இருப்பாள்; செயல்பட்டும் நடப்பாள். மேன்மை பொருந்திய ஞானமே யாகின்ற அவள், முதலில் புத்தகம் ஏந்திய கையினையுடைய நாமகளாய் நின்று எனக்கு நூலறிவைத் தந்தும், பின்பு எனது உணர்வினுள் உணர்வாய் இன்புறச் செய்தும் என்னைத் தன் அடியவனாக ஏற்றுக்கொண்டாள்.

விளக்க உரை

 • கதி – நடை; செயல். ‘சிவகதி’ – சிவ நடையுடன் மாற்று கருத்து இல்லாமல் ஒத்து. அஃதாவது சிவ கதியில் சேர்ந்திருக்கும் பராசத்தி, ‘அவன்றன் உடலும் உயிருமாய் நின்றாள்; சென்றாள்’ என மாற்றி உரைக்க.
 • ‘உணர்வு ஆகி’ என்பது ஞான அனுபவத்தை வழங்கி, அவ்வழிகளில் இன்பம் பெறப்பட்டதை குறித்தது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 5 (2018)

பாடல்

எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில்
எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

இறந்தவர்களது எலும்புகள் பலவற்றையும், எலும்புடன் கவசம் போன்ற மண்டையோடு பலவற்றையும் தாங்கி நிற்பவனும், பேரொளி ததும்பும் மணிமுடி தாங்கியவனுமான சிவபெருமான், அவ்வாறு காட்சியளிக்கின்ற அவன், தேவர் பலர்க்கும் மணிமுடி தரித்த மேலாலவர்களுக்கும் முதலானவனாய் இருந்தான். அது மட்டும் இன்றியும், அவன் அவற்றைத் தாங்காது ஒழிவனாயின், மாயா காரியப் பொருள்கள், சிவபெருமான் கைப்பற்றுதல் இன்றி உலகில் நிலைபெறாது அழிந்து ஒழியும்.

விளக்க உரை

 • எலும்பினையும் மண்டையோட்டினையும் ஏந்துதல் – தான் ஒருவனே அழிவில்லாத முழுமுதல்வன் என்பதைக் காட்டப் பெறும். ஏனைய மண்ணவர் விண்ணவர் அனைவர்களும் பிறந்து இறக்கும் உயிரினங்களே என்பதையும் அதுவே காட்டும்.
 • காரணமாயை என்றும் அழிவினை அடையாது, சிவபெருமான் தாங்குதலில் நிற்கும் என்பது ஆகும்.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

வேக வடிவம் என்பது என்ன?
கால சம்ஹாரர் போல் உயிர்களுக்கு கொடியவரைத் தண்டிக்கும் திருமேனி

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – ஹேவிளம்பி – பங்குனி – 30 (2018)

பாடல்

ஆமே அனைத்துயிர் ஆகிய அம்மையும்
தாமேசகலமும் ஈன்றஅத் தையலும்
ஆமே அவளடி போற்றி வணங்கிடில்
போமே வினைகளும் புண்ணிய னாகுமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் -திருமூலர்

பதவுரை

அம்மையானவள், அனைத்து உயிர்களாக நிற்கின்றவளும், எல்லாப் பொருள்களிலும் அதன் தன்மையில் தானே ஆகி நிற்பவளும், தம் இயல்பு தன்மையினால் எங்கும் நிறைந்திருந்து ஈன்றவளாகவும்  நிற்பாள். ஆகையால் பக்குவம் உடையவன் அவளை வணங்கி அவ்வழியே வினை நீக்கமும், தவப் பேறும் ஆன பயன்களை எய்துவான்.

விளக்க உரை

 • புண்ணியன் ஆகுதல் – தவம் உடையவன் ஆகுதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – ஹேவிளம்பி – பங்குனி – 28 (2018)

அமுதமொழி – ஹேவிளம்பி – பங்குனி – 28 (2018)

பாடல்

ஈசனடியார் இதயங் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசம தாயிடும் நம்நந்தி யாணையே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

ஈசனை வணங்கிடும் அடியாரது உள்ளம் எந்தவகையிலேனும் வருந்துமாயின், அதற்குக் காரணமாய் உள்ள மண்ணுலக தேசமும், அது சார்ந்த நாடும் அதன் சிறப்புக்களும் அழிந்திடும்; விண்ணுலக வேந்தனாகிய இந்திரன் ஆட்சி பீடம் மற்றும் மண்ணுலக மன்னன் ஆட்சி பீடமும் அழிந்து ஒழியும். இஃது நமது நந்திபெருமான்மேல் ஆணையாகச் சொல்லத்தக்க உண்மை.

விளக்க உரை

 • மாகேசுர நிந்தையால் விளையும் கேடு பற்றியும் சிவனடியாரது மனம் வருந்தாமல் காத்தல் நாடாளும் அரசர்க்கு முதற்கடமையாதல் என்பது பற்றியும் விளக்கும் பாடல்

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

அருவுருவத் திருமேனியின் வேறு பெயர்கள் எவை?
சகளநிட்களத் திருமேனி, வியத்தாவியத்த லிங்கம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – ஹேவிளம்பி – பங்குனி – 23 (2018)

அறிவதற்கு அரியவராய், அனைத்திலும் நிறைந்தவராய், கருணை உருவானவராய்,  கணப் பொழுதும் சிந்தையில் சிவம் பிறழா நிலைப்பவராய் ஆன என் குரு நாதரின் உத்தரவின் பேரில் இன்று முதல் ‘அமுதமொழி ‘ என்ற தலைப்பில் இனி இப்பணி தொடரும்.

அமைப்பில் இருக்கும் மாறுதல்களும் குருநாதரின் கருணையின் அடிப்படையில் அருளப்பட்டவை.

எப்பொழுதும் போல் தொடர என் குருநாதரின் அன்பினையும் ஆசிகளையும் வேண்டி தொடங்குகிறேன்.

———————————————————————————————————————————–

பாடல்

ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை
அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி
மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி
சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

தன்னிடத்தில் அன்பு வைத்த அன்பர்களிடத்தில் ஒன்றி அவர்களுடன் இசைந்து, அவர்களது உள்ளத் தாமரையிலே நிற்கின்றவளும்,  அவ்வாறு நிற்கும் தன்மையில் உயர்ந்தவனும், பெரிய தலைவனாகவும் ஆன சிவனிடத்தில் நிறைந்து நிற்பவளும், மனோன்மனி தாயாகவும், என்றும் மங்களமானவளும் ஆகிய திரிபுரை நாயகி பல வகைச் சித்துக்களையும் உயிர்களிடத்தில் எவ்வாறு புரிந்து  நிற்கின்றாள் என்ற முறையை உலகர் ஆராய்ந்து அறியவில்லை.

விளக்க உரை
மத்து – நிறைவை உணர்த்தும் வடசொல்.
சித்து – அதிசயச் செயல்கள்
வழி – சிவத்தொடு நின்றே செய்தல்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – பொருவிலி

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பொருவிலி

பொருள்

 • ஒப்பிலி
 • ஒப்பார் இல்லாதவன்
 • சிவபிரான்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

உருவிலி யூனிலி யூனமொன் றில்லி
திருவிலி தீதிலி தேவர்க்குந் தேவன்
பொருவிலி பூதப் படையுடை யாளி
மருவிலி வந்தென் மனம்புகுந் 1தானே.

 

உருவிலி ஊனிலி ஊனம்ஒன்று இல்லி
திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன்
பொருவிலி பூதப் படையுடை யாளி
மருவிலி வந்துஎன் மனம்புகுந் தானே

திருமந்திரம் – பத்தாம் திருமுறை – திருமூலர்

கருத்து உரை

சிவபெருமான், வினைகள் பற்றிவரும் உருவத்தை உடையவன் அல்லன்; பிறப்பில்லாதவன்; இயல்பாகவே மலமில்லாதவன்; தேடிச் சென்றடைக்கூடிய அளவிற்கு செல்வம் இல்லாதவன் அல்லன்; குற்றம்  அற்றவன்; தேவர்களுக்கும் தேவனாக உள்ளவன்; தனக்கு யாரும் ஒப்பில்லாதவன்;  பூதப் படைகளை உடைமையாகக் கொண்டு ஆள்பவன்;  தான் எல்லாப் பொருட்கும் சார்பாக இருப்பது மட்டுமல்லாமல் தான் எந்த ஒன்றையும் சார்ந்திருக்கும் தன்மை இல்லாதவன்; இத் தன்மைகளை உடைய ஒப்பில்லாத பண்புகளை வாய்ந்த அவன் வலியவந்து அடியேன் உள்ளம் புகுந்தான்.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – நூறுதல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  நூறுதல்

பொருள்

 • அழித்தல்
 • அறைந்துகொள்ளுதல்
 • வெட்டுதல்
 • நெரித்தல்
 • பொடியாக்குதல்
 • இடித்தல்
 • வளைந்துகொள்ளுதல்
 • துரத்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நூறும் மிளகு நுகரும் சிவத்தின் நீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்காள்
தேறி இதனைத் தெளிஉச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே

திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – திருமூலர்

கருத்து உரை

யோகியர்களே, நீங்கள் பொடி செய்த மிளகை உண்ணுங்கள்; அதனால், சிறுநீர் சிவநீராய் மாறும். அவ்வாறு மாறுவதற்கு வேறு மருந்து ஒன்றும் தேவை இல்லை.  (குரு முகமாக அறிக). மிளகுப் பொடியின் ஆற்றலைத் தெரிந்து கொள்ள அறிவிற்கு ஆதாரமான உச்சியில் அதனை அப்பினாலும் மேலே குறிப்பிட்டவாறு  சிவநீராக மாறும். இதனாலே நரையும் மாறும்.

விளக்க உரை

 • நூறுதல் – பொடித்தல் என்பதால் ‘நூறு மிளகு“ எனக் கொண்டு, எண் வரையறையாக உரைத்தல் கூடாது.
 • அமுரி தாரணைக்குத் துணையாக இருக்கும் சிலவற்ரைப் பற்றி கூறுதல்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – துரிசு

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  துரிசு

பொருள்

 • குற்றம்
 • துக்கம்
 • மயில் துத்தம்
 • முடிவு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன
துன்புறு காலந் துரிசுற மேன்மேல்
அன்புடை யார்கள் அழுதகன் றார்களே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

நிழல் தரும் பந்தல் போன்றதாகிய இவ்வுடம்பு தன் நிலைகெட்டு விட்டது. உயிர்நிலை கட்டுப்பாடு இல்லாமல், ஒன்பது வாசலால் ஒருங்கே அடைத்து விடப்பட்டது. அனைவரும் துன்பம் அடையும் படியான துக்க காலம் வர அன்புடையவர்கள் மேலும் மேலும் அழுது அந்த இடம் நீங்கினர்.

விளக்க உரை

 • ‘இறைவனைத் துணையாகப் பற்றுதலே நன்று` என்பது குறித்தப் பாடல்
 • ‘துரிசு, விரைவுப் பொருட்டாகிய, `துரிதம்` என்பதன் சிதைவு எனப் பொருள் கொண்டு விரைந்து துன்பம் கொடுப்பவனாகிய காலன் சேர்ந்து’ எனப் பொருளிளும் சில இடங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. ஆன்றோர் பொருள் உணர்ந்து அறிக.
 • `மனைவி முதலான உறவுகள் உண்மையில் அன்புடையர்களாக இருப்பினும் , அவர்களால் நிலையாமை விலக்க இயலாது’ என்பது பற்றியது.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

ஆதி முத்தன் யார்?
ஆன்மா

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அவ்வியம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  அவ்வியம்

பொருள்

 • பொறாமை
 • அழுக்காறு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விகொ டுமின் தலைப்பட்ட போதே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

பொறாமை உடையவர்களாக ஆகி, அறத்தின் வழியில் இருந்து விலகி,  தீக்குணம் உடையவர்களாக பிறர் பொருளைக் கொள்ளாதீர்கள். நற்பண்பு உடையவர்களாக உயர்ந்து, உண்ணும்போது சிறிதாயினும் பிறருக்குக் கொடுத்து உண்ணுங்கள். 

விளக்க உரை

 • இவ்வாறான நெறியில் நின்றால் நிலையாமை நீங்கி இன்பம் பெறலாம்` என்பது குறிப்பு.
 • `உணர்வு நிலையாமையை உணர்ந்து நிலைபெறுவதற்கு உரிய நெறியில் நிற்றல் வேண்டும்` என்பது பற்றி கூறப்படும் பாடல்.
 • ‘அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே’ எனும் அபிராமி அந்தாதி யாண்டும் சிந்திக்கத் தக்கது.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

இறைவனின் குணங்கள் யாவை?
சத்து, சித்து, ஆனந்தம்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – பேதித்தல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பேதித்தல்

பொருள்

 • மாறுபடுதல்
 • பேதியாதல்
 • கெடுதல்
 • குழம்புதல்
 • மனம் மாறுபடுதல்
 • பகையாதல்
 • பிரித்தல்
 • வேற்றுமைப்படுத்தல்
 • மாற்றுதல்
 • வெட்டுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

முன்னை யறிவறி யாதஅம் மூடர்போல்
பின்னை யறிவறி யாமையைப் பேதித்தான்
தன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்
தென்னை யறிவித் திருந்தனன் நந்தியே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

யான் நந்தி பெருமானைக் குருவாக அடைதற்கு முன், அறியத்தக்க பொருளை அறியாது கிடக்கின்ற மூடர்களோடு ஒன்றாக பொருந்தி  இருந்தேன். அவரை அடைந்த பின், என்னைக் அந்தக் கூட்டத்திற்கு அயலானாக ஆக்கி, அறியாமையை நீக்கிச் சிவத்தை உணருமாறு ஆக்கப்பட்டால் யான் சொரூப சிவத்தில் தோய்ந்தபின்பு மீண்டும் அந்தக் கூட்டத்திற்கு செல்லாதவாறு இருக்கும் உணர்வைத் தந்து கொண்டிருக்கின்றார்.

விளக்க உரை

 • குருவருளில் உறைத்து நிற்பதாலே கருணை உண்டாகும் என்பது பற்றிய பாடல்
 • அறிவித்தல் – அறியாமை புகாதவாறு காத்தலாலே யான் ஞேயத்தின் நீங்காதவன் ஆயினேன்

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

மறைத்தல் தொழில் என்பது என்ன?
உலகத்தை உயிர்கள் நோக்கி இருக்க செய்து தன்னை வெளிப்படுத்தாது தன்னை மறைத்து நிற்கும் தொழில்

சமூக ஊடகங்கள்