கருத்து – அன்னையினை பாகம் கொண்டு எழுந்து அருளும் திருஆமாத்தூர் திருத்தலம் பற்றி உரைக்கும்பாடல்.
பதவுரை
பாடுதலையும் கூத்தாடுதலையும் விரும்பிய பல பூதங்களை உடைய ஆமாத்தூரில் உறையும் ஈசனானவர், படம் எடுக்கும் பாம்பைக் கச்சையாக உடுத்தியும், தீப்போன்ற சிவந்த மேனி கொண்டும், இமைக்காத முக்கண்களை உடையவராகவும், நான்கு வேதங்களையும் ஓதுபவராகவும், திருநீற்றை நீரில் குழைத்து அணிந்தவராகவும், தம் உடம்பின் ஒரு பாகத்தில் உமாதேவியை நீங்காத கோலம் கொண்டவராகவும், தெளிவான கங்கையை திருமுடியில் தாங்குபவராகவும், தீ ஏந்திய கையினை உடையவராகவும் அழகி கோலம் கொண்டவராகவும் காட்சி வழங்குகின்றார்.
கருத்து – சிவபெருமான் திருவடி அடைப்பெறுவதால் மனிதர்கள் பெறும் இயல்புகளைக் கூறும் பாடல்.
பதவுரை
இறந்த பிரமனுடைய தலைகளை மாலையாகக் கோத்து அணிந்த தலையையுடைய சிறந்த புண்ணியனை உள்ளத்தில் கொண்டு இருப்பதால் எவரிடத்தில் இருந்தும் யாம் என்றும் பின்வாங்க மாட்டோம்; சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றதால் (அனைத்து உயிர்களும் சமமானதால்) இந்த பரந்துபட்ட பூமியிலும் விண்ணுலகத்திலும் எமக்கு எதிராவார் யாரும் இல்லை. யாம் தேடிச்சென்று சிறு தெய்வங்களைச் சேர்ந்து தொழ மாட்டோம்; யாம் எந்த ஒன்றினாலும் குறை உடையவர்களாக ஆகமாட்டோம். பிறவியின் காரணமாக வருவதாகிய உறுபிணிகள் எம்மைத் துன்புறுத்தாமல் விட்டு ஓடிப் போயின.
கருத்து – திருப்புகலூர் திருத்தலத்தில் உறையும் ஈசனின் பெருமைகளை உரைக்கும் பாடல்.
பதவுரை
திருப்புகலூர் திருத்தலத்தில் உறையும் ஈசனானவர் உருத்திராக்கம் நிறைந்த மாலையைப் பூண்ட மார்பினை உரையவர்; கழுத்தில் பாம்பினை உடையவர்; ஒளி வீசும் பிறையை முடிமாலையாகச் சூடியவர்; நாள்தோறும் இறந்தவர் மண்டையோட்டினை ஏந்திப் பிச்சை உணவு வாங்க ஊர் தோறும் செல்பவர் ஆவர்.
கருத்து – திருவையாறு தலத்தில் உறையும் ஈசனின் பெருமைகளை உரைத்து வீடுபேற்றினை அருள வேண்டும் என உரைக்கும் பாடல்.
பதவுரை
திருவையாறு எனும் திருத்தலத்தில் அகலாத செம்பொன் போன்ற சோதீ வடிவாக இருப்பவனே! நீ எல்லா உலகங்களுக்கும் ஆனவனாகவும், பேரருள் காரணமாக எளிமையாக வந்து அருளுபவனாகவும், நல்லவர்களுக்கு அவர்களின் நன்மையை அறிந்து அவருக்கு அருள் செய்பவனாகவும், ஞான ஒளி வீசும் மெய் விளக்காக இருப்பவனாகவும், கொடிய வினைகளைப் போக்குபவனாகவும், புகழ்ச்சி மிக்க சேவடி என் மேல் வைத்தவனாகவும் செல்வங்களுள் மேம்பட்டதான வீடுபேற்றுச் செல்வத்தை அருளுபவனாய் உள்ளாய்.
விளக்கஉரை
எல்லா உலகமும் ஆனாய் – இறைவனது பெருநிலை – சர்வ வியாபக நிலை
ஏகம்பம் மேவி இருந்தாய் – அவன் தனது பேரருள் காரணமாக எளிவந்து நிற்கும் நிலையினை விளக்கும் நிலை. திருவேகம்பத்தில் அருளுதல்
சுடர் – ஒளி – ஞானமாகிய ஒளியையுடைய விளக்கு
செல்வமாய – செல்வாய- உண்மைச் செல்வம், அழியாச் செல்வம், வீடுபேறு ஆகிய செல்வத்தைத் தருபவன் நீ ஒருவனே எனும் பொருள் பற்றியது
செய்யநின் கமல பாதஞ் சேருமா தேவர் தேவே மையணி கண்டத் தானே மான்மறி மழுவொன் றேந்தும் சைவனே சால ஞானங் கற்றறி விலாத நாயேன் ஐயனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே
நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – ஈசனின் திருமேனிப் பெருமைகளை உரைத்து அவனின் தாமரை போன்ற பாதங்களை அருளவேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
தேவர்கள் அனைவருக்கும் மேலான தேவனே! நஞ்சு உண்டதால் கண்டத்தில் நீல நிறம் பெற்று நீலகண்டவன் ஆனவனே! மான் கன்றினையும், மழுப்படையையும் ஏந்தி உள்ளவனாகிய சைவ சமயக்கடவுளே! ஞானத்தை முறையாகக் கற்றறியும் வாய்ப்பு இல்லாத அடியேனுடைய தலைவனே! ஆலவாயில் தலத்தில்உறையும் அப்பனே! உன்னுடைய சிவந்த தாமரை போன்ற பாதங்களை அடியேன் சேரும்படி மிகவும் அருள் செய்வாயாக.
கருத்து – ஐயாற்றில் உறையும் சிவனின் பெருமைகளை உரைத்து மனம் உருகி நிற்கின்றேன் என்பதை கூறும் பாடல்.
பதவுரை
பகைவருடைய முப்புரங்களை கண்களால் நோக்கி அதனை அழித்தவனே! ஊழித்தீயிலும், சுடுகாட்டிலும் எழும் தீயில் கூத்து நிகழ்த்துபவனே! எளிதில் பெற இயலா அரிய அமுதமே! கூர்மையான மழுப்படையை ஏந்துபவனே! உயரம் குறைவான பல பூதங்களைப் படையாக உடையவனே! அழைக்க உகந்த ஆயிரம் திரு நாமங்களை உடையவனே! சந்திரனை பிறையாக சூடும் தலைக்கோலம் உடையவனே! ஆரா அமுதமா இருக்கும் ஐயாற்று பெருமானே என்று பலகாலமாக வாய்விட்டு அழைத்து மனம் உருகி நிற்கின்றேன்.
கருத்து – மயிலாடுதுறை தலத்தில் உறையும் சிவனின் பெருமைகளை உரைத்து அவர்தம் திருவடிகளைக் கொண்டவர்களுக்கு மானிட வாழ்வில் துயரம் இல்லை என்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
உயிர்கள் பிறவி நீக்கம் பெறுவதன் பொருட்டு, கரை படிந்தது ஒத்த கண்டத்தை கொண்டதால் திருநீலகண்டன் என்னும் பெயர் பெற்றவனும், எட்டுத் தோள்களினை உடையவனும், வேதத்தின் வடிவமாகவும், அதன் பொருளாக இருக்க வல்லவனுமகிய மயிலாடுதுறை தலத்தில் உறையும் இறைவனின் நீண்ட கழல்களை ஏந்தி இருத்தலால் கொடுமை உடையதான மானுட வாழ்வினில் வருவதான குறைவு இல்லாதவர்களாக ஆவோம்.
விளக்கஉரை
கொடு – தீயது. மீண்டும் பிறவிக்து ஏதுவான வினை .
நீள் கழல் – அழிவில்லாத திருவடிகள்
எண்தோளினன் – எட்டுத் திக்குகளையும் ஆடையாக அணிந்தவன் என்றும், எண் குணங்களை முன்வைத்து எண் தோளினன் என்றும் கூறலாம்.
திருவடிகளை ஏத்தியிருக்கும் பிறவி வாய்க்குமானால் அந்த மானுட வாழ்க்கையில் வினைகள் என்பது இல்லை.
கருத்து – ஈசன் குறித்த சிந்தனைகள் அமுதமெனத் தோன்றும் என்று கூறும் பாடல்.
பதவுரை
வெண்ணி எனும் மிகப்பழமை வாய்ந்ததான நகரத்தை மேவியவரும், சிறப்புகளை உடைய வெண்திங்களைச் சூடியவரும், கொன்றைக் கண்ணியை கொத்தாக உடைய திருச்சடையினைக் கொண்டவரும், பிரம்ம கபாலத்தைத் திருக்கரங்களில் ஏந்தியவருமான ஆகிய அப்பெருமானை எண்ணி நினைத்திருந்த அடியேனுக்கு அவர் குறித்த சிந்தனைகள் என் நாவினில் இனியதான அமுதமாக ஊறும்.
கருத்து – சிவனின் தன்மைகளைக் கூறி அவன் தன் கண்ணில் உறைகின்றான் எனக் கூறும் பாடல்.
பதவுரை
அநாதி காலம் தொட்டு வரும் தொந்த வினைகளை அழிப்பவனாகவும், அழியாத மாவடியின் கீழ் உறைபவனாகி இருத்து அருள்புரியும் ஏகம்பத்தில் உறைபவனாகவும், எலும்புகளையே அணிகலன்களாக அணிபவனாகவும், சங்காரம் எனும் பிரளய காலத்தில் அனைத்தையும் தானே முன்நின்று முடிப்பவனாகவும், மூன்று உலகங்களிலும் வியாபித்திருப்பவனாகவும், நாளுக்குரிய திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றை உணர்த்துவதாகிய காலத்தின் வழி செல்லும் உயிர்களை படைப்பவனாகிய பிரமனின் ஐந்தாம் தலையை நீக்கி பசுபதி என்ற அடையாளங்களை உடையவனாகவும், பராய்த்துறை, பழனம், பைஞ்ஞீலி ஆகிய தலங்களில் விரும்பி உகந்து அருளுபவனாகவும், மார்பிலும், முடிமாலையிலும் கொன்றைப் பூவினாலாய மாலையை அணிபவனாகவும் இருக்கும் பெருமானகிய காளத்தி நாதன் என் (அகக்) கண்களில் உள்ளான்.
விளக்கஉரை
இடித்தல் – அழித்தல்
முடித்தல் – வகுத்தமைத்தல்
ஐம்புரி என்பதற்கு பஞ்சாதி என்ற வடமொழிச் சொல்லாக பொருள் கொண்டு, பெரும்பாலும் ஐம்பது வார்த்தைகள் கொண்ட யசுர் வேதத்தின் பகுதிகள் என்றும் சிலர் பொருள் கொண்டு உரைப்பாரும் உளர்.
கருத்து – ஈசனின் எண்குணங்களின் பெருமைகளில் சிலவற்றை உரைத்தும், பிரம்மனுக்கும், திருமாலுக்கும் அருளிய திறம் குறித்தும் உரைக்கும் பாடல்.
பதவுரை
பிரமர்கள் இறந்த பிறகு அவர்களின் தலைகளை மாலையாக அணிந்து பொலிவு பெற்று விளங்கும் திருமேனியினை உடையவனாகவும், சிருஷ்டி எனும் உலகின் தோற்றம் நிலைபெறுதல் சங்காரம் என்றும் சம்ஹாரம் என்றும் வழங்கப்பெறும் இறுதி ஆகியவற்றை செய்பவனாகவும், கண்டத்தில் மகா வராகத்தின் கொம்பினை அணிகலனாக அணிந்தவனாகவும், கோபத்தை உடைய பாம்பினைக் கையில் கொண்டு கூத்தாடும் படியான காட்சியினை வழங்குபவனாகவும், இவ்வுடம்பின் காரணங்களாய் உள்ள தத்துவங்களுக்கு அதன் தன்மை கொண்டு அதன் இயல்பாக உள்ளவனாகவும், நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாசம் எனும் ஐம்பெரும் பூதங்களாக ஆகி அண்டங்களுக்கு புறமும் உள்ளும் இருக்கும் பெருமை உடைய பெருமான் அதிகை வீரட்டனாவான்.
விளக்கஉரை
முதல் நடு முடிவு – உலகத்தின் தோற்றம் நிலை இறுதிகளை செய்பவர்களை அவர்கள் விரும்பிய வகையில் அருளுதல்
வெண் மருப்பு – திருமால் வராக அவதாரம் எடுத்தபோது ஏற்பட்ட செருக்கினை நீங்குதல் பொருட்டு செருக்கினை அழித்து, அதன் அடையாளமாக அதன் கொம்பினை அணிந்து கொண்டார்.(வரலாறு )
கருத்து – திருப்புன்கூர், திருநீடுர் தலங்களில் உறையும் சிவனின் பெருமைகளை உரைத்து அவர் மீது பற்று கொள்ளாமல் இருந்து விட்டதை குறித்து வருந்தும் பாடல்.
பதவுரை
திருப்புன்கூர் தலத்தில் உறையும் சிவன் பலகாலம் நிலைத்திருக்கும் அழகிய மாடி வீடுகளை உடைய நீடூரையும் உகந்து அருளியவனாகவும்; ஆய்ந்து அறிதலை உடைய அறுபத்தி நான்கு கலைகளையும் குறிப்பிடுவதாகிய கலைஞானத்தை முயன்று கற்க வேண்டாதபடி உள்நின்றே உணர்த்துபவனாகவும், கொடிய நரகங்களை அடையாதவாறு காப்பவனாகவும், எந்த விதமான பற்றுக்கள் இல்லாமலும் பல்வேறு இடங்களிலிருந்து தன்னை வழிபடுபவர் விரும்பும் பல தெய்வ வடிவமாகி தானே காட்சி வழங்கி ஆங்காங்கே அருளுபவனாகவும், எவ்விதமான செயல்களும் அற்று சிலை போல் இருந்து மூன்றுவிதமான அரண்களையும் அழித்தவனாகவும், ஈமத்தீயில் ஆடுபவனாகி கூத்து நிகழ்த்துபவனாகவும் இருக்கிறான்; இவ்வாறான பெருமைகளை உடைய அவனை அறிவில்லாதவனாகிய யான் நினையாதவாறு இருந்துவிட்டேன்.
விளக்கஉரை
கலைஞானம் – நூலறிவு, அறுபத்துநான்கு கலை
தீயாடி – ஈமத்தீயில் ஆடுபவனான சிவபெருமான்
நீசன் – அறிவில்லாதவன்
‘தன்னை வழிபடுபவர் விரும்பும் பல வேடங்களிலும் தானே காட்சி வழங்கி‘ எனும் பொருள் விளக்கமும் காணப்படுகிறது. ‘கோலமே மேலை வானவர் கோவே‘ எனும் திருமாளிகைத் தேவர் அடிகளை முன்வைத்து அடியவர்களுக்காக அவர்கள் விரும்பும் தெய்வமாக உருவ வடிவம் கொள்பவன் என பொருள் உரைக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
இன்று ளார்நாளை யில்லை யெனும்பொருள் ஒன்றும் ஓரா துழிதரு மூமர்காள் அன்று வானவர்க் காக விடமுண்ட கண்ட னார்காட்டுப் பள்ளிகண் டுய்ம்மினே
ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – நிலையாமையை உரைத்து காட்டுப்பள்ளி ஈசனை கண்டு உய்யச் சொல்லும் பாடல்.
பதவுரை
பேச்சுத் திறம் அழிந்த ஊமையர்களே! இன்று உயிருடன் இருப்பவர்கள் நாளை இருக்கமாட்டார்கள் எனும் பொருளை ஆராயமலும் உணராமலும் அறியாது ஒழிதலைக் கொண்டு இருப்பவர்களே! முன்னொரு காலத்தில் தேவர்களின் பொருட்டு அவர்களின் நலனுக்காக விடத்தினை உண்ட கண்டத்தினை உடையவனாகிய ஈசன் உறையும் காட்டுப்பள்ளி கண்டு உய்வீராக.
அதிகை வீரட்டத்தை தலத்தில் எழுந்து அருளும் தூயோனும், சகல உயிர்கள் இடத்திலும் அவைகள் காத்து ரட்சிக்கப்படுவதன் பொருட்டு பந்தம் கொண்டு அருளுதலை செய்ய மெல்லிய விரல்களை உடைய பார்வதியின் பாகன் ஆனவனும், பெரியதான பவள மலை போன்றவனும், சுடுகாட்டில் எரிக்கப்பட்டவருடைய சாம்பலில் தோய்ந்து இருப்பவனாகிய எம் பெருமானுடைய திருவடிகள் அன்றைய தினத்தில் மலர்ந்த தாமரைப் மலர்கள் போன்றவை; தன் வலிமையை ஆணவமாகக் கொண்டு இமயமலையை பெயர்த்து எடுத்த இராவணனுடைய ஆற்றலையும் போக்கியவை; ஏனைய பொருள்களும், உயிர்களும் தோன்றுவதற்கு முன்னமே இருப்பவை; ஒலியினை எழுப்பி எரியக்கூடிய கழலை உடைய எம்முடைய மூர்த்தி நீண்ட வளர்ந்த வடிவினை கொண்டவை.
விளக்கஉரை
போது அலர்ந்த, அரக்கனையும் (உம்மை உயர்வு சிறப்பு) – முறையே மென்மையும் வன்மையும் அருளிய திறம் கூறல்
முந்தாகி – முதற்காலமாய் நின்று(சிவதத்துவ நிலை)
நான்காவது தொடர் (முழங்கழலாய் நீண்டஎம் மூர்த்தி) – அரியும் அயனும் அடியும் முடியும் தேட நின்ற சதாசிவ தத்துவ நிலை
ஐந்தாவது தொடர் உருவத் திருமேனி கொண்டு உலகத்தைத் தொழிற்படுத்தி நிற்கும் ஈசுவரத் தத்துவ நிலை
வெந்தாரது நீறு – இதனால் எஞ்ஞான்றும் அழிவின்றி நிற்றலையும், அனைத்தும் அழிந்தபின் மீளத் தோற்றுதற்கு முதலாதலையும் உணர்த்தியது
முந்தாகி – உலகிற்குக் காரணமாய்த் தனக்கு ஒரு காரணமின்றி நிற்றல்
பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி – பந்தினை விளையாடும் மெல்லிய விரல்களை உடைய பார்வதி பாகன் என்ற விளக்கம் சில இடங்களில் காணப்படுகிறது; இது பொருந்தாமையால் இந்த விளக்கம் விலக்கப்படுகிறது.
அடுத்து வந்த இலங்கையர் மன்னனை எடுத்த தோள்க ளிறநெரித் தானையார் கடுத்த காலனைக் காய்ந்ததொ ரானையார் கடுக்கை யானைகண் டீர்கட வூரரே
ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – தன்னைச் சினந்தவர்களின் செருக்கினை அடக்கி அவர்களுக்கு அருள் புரிந்த திறத்தினைக் கூறும் பாடல்.
பதவுரை
சினம் கொண்டு கயிலை மலையை பெயர்த்து எடுப்பேன் என்று வந்த இலங்கை வேந்தன் ஆகிய இராவணனின் இருபது தோள்களும் இறும் வண்ணம் நெரித்த ஆனை போன்ற பலம் உடையவர்; சினந்த காலனை வருத்தம் கொள்ளுமாறு செய்து அவனை அழித்த ஆனை போன்ற பலம் உடையவர்; கடவூர்த் திருத்தலத்து இறைவர்; கொன்றை பூக்களை அணிந்த ஆனை போன்ற பலம் உடையவர் என்பதைக் காண்பீர்களாக.
கருத்து – துன்பம் கொண்டு பேசியும், ஊனை பாதுகாத்தும், வினைகளைப் பெருக்குதலும் சுற்றம் துணை என்று இருத்தலும் நீங்கி திருவாரூர் தலைவனின் திருவடித்துணை ஓங்க இருத்தல் பற்றிய பாடல்.
கருத்து – ஈசனின் குணங்களை சொல்லி அவரை வணங்குதலைப் பற்றி உரைக்கும் பாடல்.
பதவுரை
திருமுடியில் முல்லை மாலையை சூடியவனே, திருமேனி முழுவதும் திருநீறு பூசியவனே, எல்லை அற்றதான எண்குணங்களை உடையவனே, செங்கோட்டு யாழ் மற்றும் சீறி யாழ்போன்ற ஏழு நரம்புகள் உடைய யாழ் வகையில் ஏழுவகை ஓசையைப் படைத்தவனே, மயிர் நீக்கப்பட்ட உருண்டை வடிவினதாகிய கபாலம் எனும் மண்டை ஓட்டில் உணவு பெறுபவனே, உன்னை வந்து வழிபடுபவர்களின் தீவினைகளை முழுவதும் நீக்குபவனே, ஓதுதலை உடைய தில்லைச் சிற்றம்பலத்தை விரும்பி அடைந்து இருப்பவனே, அதிகை வீரட்டானத்தில் உகந்தருளியிருக்கும் எம் செல்வனே! உன்னை வணங்குகிறேன்.
விளக்கஉரை
படைத்தல் – உடையனாதல்
சில்லை – வட்டம்
சிரை – மழிப்பு
செல்வன் – இன்பத்திற்கு ஏதுவாய் உள்ள பொருளாய் உள்ளவன்
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி – சிவனுக்கு உரித்தானதும், சைவ ஆகமத்தில் கூறப்பட்ட முறைப்படியும் எண்வகைப்பட்ட குணங்கள் தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர்-அருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என்பதால் எல்லையற்ற நற்பண்புகளை உடையவனே எனும் பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ள கருத்து விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – முல்லை
புகைப்படம் மற்றும் செய்தி – விக்கிப்பீடியா
முல்லை என்னும் சொல் காட்டில் மலரும் வனமுல்லையை குறிக்கும்
பாரி வள்ளல் தன் தேரை வழங்கியது இந்த முல்லைக்குத்தான்
மருத்துவ குணங்கள் – மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு பெறுதல், தலைவலி நீக்குதல், கண் பார்வை கோளாறு நீக்குதல் போன்றவற்றை செய்யும்
கருத்து – சிவன் சூடியுள்ள மலர்களை குறிப்பிட்டு அவர் அனைத்து உயிர்களுக்கு துணையாக இருப்பதை குறிப்பிடும் பாடல்.
பதவுரை
விரும்பத்தக்கதான காட்டுப்பள்ளி எனும் தலத்தில் உறைபவரும், அடும்பு மலர்கள், கொன்றை மலர்கள், வன்னி மலர்கள், ஊமத்த மலர்கள் ஆகியவற்றால் புனையப்பட்ட மாலையை சடையில் சூடி இருப்பவரும், ஒளிவீசும் முத்து போன்ற சோதி வடிவாக இருப்பவனும், கடம்ப மலர் மாலையினை அணிந்த முருகனின் தந்தையும் ஆகிய பெருமானே இந்த உடலோடு கூடி வாழும் உயிர்களுக்கு உற்ற துணைவர் ஆவார்.
விளக்கஉரை
அடும்பு – அடம்பமலர்
துடும்பல் – நிறைந்திருத்தல்
தூமணிச்சோதி – தூயமணியினது ஒளியை உடையவன்
கடம்பன் – கடம்பமலர்மாலை சூடிய முருகன்
தாதை – தந்தை
திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – அடும்பு
புகைப்படம் மற்றும் செய்தி - விக்கிப்பீடியா
• வேறு பெயர் அடம்பு • படரும் கொடி வகை சார்ந்தது • கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும் தன்மை உடையது • குணங்கள் – மருத்துவ மூலிகை, வயிற்றுப்போக்கை நிறுத்தக்கூடியது. மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது. சிறுநீரை பெருக்கும் தன்மை உடையது.
கருத்து – இராவணனுக்கு வேண்டி நின்றப் பின் அருளிய திறத்தையும், வேண்டாத பொழுதும் தன்னிடத்தில் இரக்கம் கொண்டு அருளிய திறத்தையும் திருநாவுக்கரசர் உரைத்தப் பாடல்.
பதவுரை
அரக்கன் ஆன இராவணன் வாய் விட்டு அலறுமாறு அழகிய திருவிரலை ஊன்றியவனும், எஞ்ஞான்றும் மாறுபாடு இல்லாமல் இருப்பவனும், திருவண்ணாமலை வடிவமாக இருப்பவனும், இரக்கம் கொண்டு என் உடல் பெற்ற நோய்களைத் துரத்திய அருளாளனுமாகிய பெருமானைத் தொண்டுபுரியும் அடியேன் மறந்து உய்தலும் கூடுமே?(இல்லை என்பது மறை பொருள்)
இரக்கமாய் – இரங்கி அருளி( செருக்கு நீங்கிப் பண் இசைத்து அருள் பெற்றது)
துரக்கன் – துரத்தியவன்
உரக்கன் – வலிமையுள்ளோன்
உடலுறு நோய் ஒன்னு ஆன போதிலும் அதனால் பெற்ற வருத்தம் பல வகைப் பட்டமையின் காரணமாக நோய்களை என்றார் என்று சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சஞ்சீதம் பிராப்தம் ஆகாமியம் ஆகிய மூவினைகளையும் அழித்து அதன் மூலம் உடல் நோயினை நீங்குபவன் என்பதான பொருளும் அறியப்படும். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
கருத்து – ஈசனை புற உலகங்களில் அனைத்திலும் நிறைந்து அதன் வடிவமாகவும் இருப்பவன் என்பதையும் அவன் வீரச் செயல்களையும் கூறிய பாடல்.
பதவுரை
இடைமருது எனும் திருத்தலத்தில் மேவிய ஈசனார், செய்யப்படுகின்றன தீவினைகளும் நல்வினைகளுக்கும் கர்ம சாட்சி ஆகி எண் திசைகளுடன் கூடியதான மேல், கீழ் சேர்த்து பத்துத் திசைகளாகவும் அதில் உள்ள பொருள்கள் யாவுமாய் நிறைந்த செல்வராவார்; ஆறுடன் ஒன்று சேர்ந்ததான ஏழு இசையாகவும் இருப்பவர்; ரிக், யஜுர், சாமம் மற்றும் அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களாகவும் அதன் அங்கம் ஆகிய சிக்ஷை சந்தசு சோதிடம் வியாகரணம் நிருத்தம் கற்பம் எனும் ஆறாகவும், மீமாஞ்சை நியாயம் புராணம் ஸ்மிருதி எனும் உபாங்கமாகவும், புராணம், நியாயம், மீமாஞ்சை, மிருதி என்னும் நான்காகவும், ஆயுள் வேதம், வில்வேதம், காந்தருவவேதம்,அருத்தநூல் எனும் உபாங்கமாகவும், பூருவமோமாஞ்சை உத்தரமீமாஞ்சை எனும் இரு மீமாஞ்சையாகவும், கெளதம சூத்திரம் காணத சூத்திரம் எனும் இரு நியாயமாகவும் (ஆக பதினெட்டு வித்தைகள்) இருப்பவர்; ஒவ்வொரு மாதத்திற்கும் வேறு வேறு பெயர்களால் அழைக்கப்படும் சூரியனான தாதா, அர்யமா, மித்ரா, வருணா, இந்திரா, விவஸ்வான், த்வஷ்டா, விஷ்ணு, அம்சுமான், பகா, பூஷா, பர்ஜனா என பன்னிரெண்டாகவும் இருப்பவர்; புதியதான கொன்றை மலரினை சூடிய சடையினை உடையவர்; கூத்து நிகழ்த்துதலில் வல்லவரான அவர் என்றும் இளமைத் தோற்றம் கொண்டவர்; தம் மீது மலரம்புகளைச் செலுத்தவந்த மன்மதனைக் கோபித்து அவனை எரித்தவர்.
விளக்கஉரை
ஐயிரண்டு – பத்துத் திசைகள்.
ஆறொன்று – ஏழு இசைகள்.
ஐயிரண்டும் ஆறொன்றும் என்பதை முன்வைத்து 10 + 6 எனக் கொண்டு 16 வகைப் பேறுகளை அருளுபவன் எனக் கொள்வாரும் உளர். புறவடிவங்களில் இருக்கும் பிரமாண்டத்தின் அனைத்து வடிவங்களாகவும் அவன் இருக்கிறான் என்பதால் இப்பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
அறுமூன்று – பதினெட்டு வித்தைகள். அறுமூன்று என்பதை முன்வைத்து பதினெட்டு புராணங்கள் என்று கூறுவோர்களும் உளர்.
கருத்து – ஈசனின் திருமேனி அமைப்பினையும் அவன் அருளும் திறத்தினையும் கூறும் பாடல்.
பதவுரை
பார்வதியினை தன்னில் ஒரு பாகமாக் கொண்டவனே, சோதி வடிவமாக இருப்பவனே, கூத்து நிகழும் காலத்தே அதில் வெளிப்படுத்த அசைகின்ற எட்டு வடிவமாக இருப்பவனே, ஆதியே, தேவர்களுக்குத் தலைவனே, அழகிய அண்ணாமலையில் இருப்பவனே! சிவார்ச்சனைக்கு விதித்த சிறந்த பூக்களான* கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ ஆகியவற்றை முறையாக உன் திருநாமங்களை ஓதி அர்ச்சித்து நின்னை அல்லால் நினையுமாறு செய்து வேறு ஒரு நினைவு இல்லாமல் உன்னைத் தியானிப்பதனைத் தவிர மற்ற பொருள்களை ஊன்றி நினையேன்.
விளக்கஉரை
ஓதிய நாமங்களுள் – உமையவள் பங்கா, மிக்க சோதியே, துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே , ஆதியே, அமரர்கோவே, அணி யணாமலையுளானே
பங்கன் – பாகமுடையவன், இவறலன், ஒன்றும் கொடாதவன்
கூத்து நிகழும் காலத்தே அதில் வெளிப்படுத்த அசைகின்ற எட்டுத் தோள்களை உடையவனே எனும் பொருளில் சில இடங்களிலும் எல்லாவுயிரும் உய்யும் பொருட்டு அங்கம் பிரத்தியங்கம் சாங்கம் உபாங்கம் உடைய திருவுருக் கொண்டு அருளினான் என்றும் சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. கூத்து வகைகள் முன் நிறுத்தில் 1) சிவன் – கொடுகொட்டி, பாண்டரங்கம், கபாலம் 2) திருமகள் – பாவை 3) திருமால் – குடம், மல், அல்லியம் 4) குமரன்(முருகன்) – குடை, துடி. 5) எழுவகை மாதர்(சபத கன்னியர்) – துடி 6) அயிராணி (இந்திரன் மனைவி) – கடையம் 7) துர்க்கை – மரக்கால் 8) காமன் – பேடு என இருப்பதால் இப்பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
நீதி – சிவாகம முறையில் வகுக்கப்பட்ட முறைப்படி அல்லாமல் வேறு வகையில் ஓதித் தூவி நினையுமாறு மற்றொவரையும் நினைவு கொள்ளுதல்
நின்னையல்லால் நினையுமா நினைவிலேன் – நினைதல் ( மனம் ) ஓதல் ( வாக்கு ) தூவுதல் ( காயம் ) என்னும் முப்பொறிக்குமுரிய வழிபாடு முன்நிறுத்தி உணர்த்தியது.
*புட்ப விதி – கமலை ஞானப்பிரகாசர். காலம் 6-ஆம் நூற்றாண்டு