
பாடல்
சடையானே சடையிடையே தவழுந்தண் மதியானே
விடையானே விடையேறிப் புரமெரித்த வித்தகனே
உடையானே யுடைதலைகொண் டூரூருண் பலிக்குழலும்
அடையானே யையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – இறைவன் திருமேனியினை விளக்கி தன்னைக் காக்க வேண்டும் என்று உரைக்கும் பாடல்
பதவுரை
திருமுடி ஆகிய சடையை உடையவனே! சடையில் தவழும் திங்களைப் பிறையையாகச் சூடியவனே! காளையினை ஊர்தியாகக் கொண்டவனே! காளை மீது ஏறி ஊர்வலமாக சென்று முப்புரங்களையும் எரியச்செய்தவனே! சகல சீவன்களுக்கும் முதல்வனாக இருப்பதால் அவர்களுக்கு அருள தலைவனாக இருந்து ஆள்பவனே! வைரவர் வடிவம் கொண்டு பிரம்மனது மண்டை ஓட்டை ஏந்தி ஊர்தோறும் சென்று பிச்சை ஏற்று உலக உயிர்களைக் காப்பவனே! ஐயாறு ஆகிய திருவையாறு தளத்தில் உறைபவனாகிய உனக்கு அடியேன் ஆளாகி உய்ந்தேன்.
விளக்க உரை:
- விடையேறித் திரிபுரம் எரித்த ஞான சொரூபன்
- அடையான் – எவ்வுயிர்க்கும் தானே காவலன்
#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவத்_திருத்தலங்கள் #சைவம் #திருமுறை #தேவாரம் #பாடல்_பெற்றத்_தலங்கள் #நான்காம்_திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #திருவையாறு #சோழநாடு #காவிரி_ வடகரை _தலங்கள்