அமுதமொழி – பிலவ – ஆனி – 22 (2021)


பாடல்

உரமன் உயர்கோட்டு உலறுகூகை அலறும் மயானத்தில்
இரவில் பூதம் பாடஆடி, எழிலார் அலர்மேலைப்
பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான், எமை ஆளும்
பரமன் பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே

முதலாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துதிருப்பழனம் திருத்தலத்தில் உறையும் இறைவனின் பெருமைகளையும் தோற்றத்தையும் உரைக்கும்  பாடல்.

பதவுரை

எம்மை ஆளும் பரமர் ஆனவரும், பகவன் ஆனவரும், பரமேச்சுவரன் எனும் பெயரினை உடையவரும், திருப்பழன நகரின் உறைபவரான இறைவன் நள்ளிருளில் பூதங்கள் பாடியும் ஆடியும் இருப்பதும், வலிமை பொருந்திய உயரமான வற்றிய மரக்கிளைகளில் அமர்ந்து ஒலி செய்யும் கூகை எனப்படும் ஆந்தைகள் அலறும் மயானத்தில் அழகிய தாமரை மலர்மேல் உறையும் பிரமனது தலையோட்டில் பலியேற்றும் திருவிளையாடல் புரியும் பெருமான் ஆவார்.

விளக்க உரை

  • உரம் – வலிமை.
  • உலறு கோட்டு – வற்றிய கிளை
  • கூகை – கோட்டான்
  • அலர் மேலைப் பிரமன் – தாமரை மலர்மேல் உள்ள பிரமன். நறவம் – கள். தேன்; 
  • பரமன் – உயர்ந்தவற்றிற்கு எல்லாம் உயர்ந்தவன்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 21 (2021)


பாடல்

கலையிலங் கும்மழு கட்டங்கங் கண்டிகை குண்டலம்
விலையிலங் கும்மணி மாடத்தர் வீழி மிழலையார்
தலையிலங் கும்பிறை தாழ்வடஞ் சூலந் தமருகம்
அலையிலங் கும்புன லேற்றவர்க் கும்மடி யார்க்குமே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துதிருவீழிமிழலை இறைவனின் தோற்ற சிறப்புகளை உரைத்து, அவரின் குணங்களையும் உரைக்கும்  பாடல்.

பதவுரை

மான், ஒளிரும் தன்மை உடைய மழுப்படை, யோகதண்டம், உருத்திராக்கம், குண்டலம் முதலியவற்றைக் கொண்டு  விலைமதிப்பு கூற இயலாத மணிகளால் அலங்கரிக்கப்பட்ட மாடங்களையுடைய திருவீழிமிழலையில்  வீற்றிருந்து அருளும் இறைவனானவர் தலையிலே பிறைச் சந்திரனைச் சூடி, கழுத்திலே எலும்புமாலை விளங்குமாறு, கையில் சூலம், உடுக்கை ஆகியவற்றைக் கொண்டு அலையினை உடைய கங்கையை ஏற்று, இடபக்கொடி கொண்டு இருப்பவர்; யோகநெறி நின்று தம்மைத் தொழும் அடியவர்களும் தம்மைப் போன்றே  சாரூப பதவி பெறச் செய்பவர்.

விளக்க உரை

  • கலை – மான்
  • இலங்கும் மழு – ஒளிரும் மழு ஆயுதம்
  • கட்டங்கம் – யோகதண்டம்
  • கண்டிகை – உருத்திராட்சக் கண்டிகை
  • தலை தாழ்வடம்
  • தமருகம் – உடுக்கை
  • அலை இலங்குபுனல் – அலையினால் விளங்குகின்ற கங்கை
  • ஏற்றவர் – இடபக்கொடி யுடையவர் .
  • நகுவெண்டலை – கையிலேந்திய கபாலம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 9 (2021)


பாடல்

அக்கா ரணிவட மாகத்தர் நாகத்தர்
நக்கா ரிளமதிக் கண்ணியர் நாடொறும்
உக்கார் தலைபிடித் துண்பலிக் கூர்தொறும்
புக்கார் புகலூர்ப் புரிசடை யாரே

நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – திருப்புகலூர் திருத்தலத்தில் உறையும் ஈசனின் பெருமைகளை உரைக்கும் பாடல்.

பதவுரை

திருப்புகலூர் திருத்தலத்தில் உறையும் ஈசனானவர் உருத்திராக்கம் நிறைந்த மாலையைப் பூண்ட மார்பினை உரையவர்; கழுத்தில் பாம்பினை உடையவர்; ஒளி வீசும் பிறையை முடிமாலையாகச் சூடியவர்; நாள்தோறும் இறந்தவர் மண்டையோட்டினை ஏந்திப் பிச்சை உணவு வாங்க ஊர் தோறும் செல்பவர் ஆவர்.

விளக்க உரை

  • அக்கு – உருத்தி ராக்கம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 6 (2021)


பாடல்

எல்லா உலகமும் ஆனாய் நீயே
     ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே
நல்லாரை நன்மை அறிவாய் நீயே
     ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே
     புகழ்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வம் தருவாய் நீயே
     திருவையாறு அகலாத செம்பொன் சோதீ

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – திருவையாறு தலத்தில் உறையும் ஈசனின் பெருமைகளை உரைத்து வீடுபேற்றினை அருள வேண்டும் என உரைக்கும் பாடல்.

பதவுரை

திருவையாறு எனும் திருத்தலத்தில் அகலாத செம்பொன் போன்ற சோதீ வடிவாக இருப்பவனே! நீ எல்லா உலகங்களுக்கும் ஆனவனாகவும்,  பேரருள் காரணமாக எளிமையாக வந்து அருளுபவனாகவும், நல்லவர்களுக்கு அவர்களின் நன்மையை அறிந்து அவருக்கு அருள் செய்பவனாகவும், ஞான ஒளி வீசும் மெய் விளக்காக இருப்பவனாகவும், கொடிய வினைகளைப் போக்குபவனாகவும், புகழ்ச்சி மிக்க சேவடி என் மேல் வைத்தவனாகவும் செல்வங்களுள் மேம்பட்டதான வீடுபேற்றுச் செல்வத்தை அருளுபவனாய் உள்ளாய்.

விளக்க உரை

  • எல்லா உலகமும் ஆனாய் – இறைவனது பெருநிலை – சர்வ வியாபக நிலை
  • ஏகம்பம் மேவி இருந்தாய் – அவன் தனது பேரருள் காரணமாக எளிவந்து நிற்கும் நிலையினை விளக்கும் நிலை. திருவேகம்பத்தில் அருளுதல்
  • சுடர் – ஒளி –  ஞானமாகிய ஒளியையுடைய விளக்கு
  • செல்வமாய – செல்வாய- உண்மைச் செல்வம், அழியாச் செல்வம், வீடுபேறு  ஆகிய செல்வத்தைத் தருபவன் நீ ஒருவனே எனும் பொருள் பற்றியது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 3 (2021)


பாடல்

வல்ல தெல்லாம் சொல்லி உம்மை
   வாழ்த்தி னாலும் வாய்தி றந்தொன்
றில்லை என்னீர் உண்டும் என்னீர்
   எம்மை ஆள்வான் இருப்ப தென்நீர்
பல்லை உக்க படுத லையிற்
   பகல்எ லாம்போய்ப் பலிதி ரிந்திங்
கொல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்
   ஓண காந்தன் தளியு ளீரே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – திருவோணகாந்தன்தளி தலத்தில் இருக்கும் ஈசனின் பெருமைகளை உரைத்து தம்மை ஆட்கொள்ள வேண்டும் என உரைக்கும் பாடல்.

பதவுரை

நித்தமும் பல் நீங்கியதும், இறந்தவர்களின் தலை ஆனதுமான மண்டை ஓட்டில் பிச்சை ஏற்கத் திரிந்து  திருவோணகாந்தன்தளி  என்னும் திருத்தலத்தில் வாழும் பெருமானே! யாம் வல்லமை மிக்கதாகிய பல கருத்துக்கள் சொல்லி உம்மை வாழ்த்திய போதும், நீர் திருவாய் திறந்து, எமக்கு தரத்தக்கதான யாதேனும் ஒருபொருளை, ‘இல்லை’ என்றும் சொல்லாதவராக இருக்கின்றிர்; அன்றியும்  ‘உண்டு’ என்றும் சொல்லாதவராக இருக்கின்றிர்; உயிர்ப்பில்லா வாழ்வினை விட்டொழிய மாட்டாதவராக இருப்பவராகிய எம்மை  நீர் பணிகொள்ள இருத்தல் எவ்வாறு?

விளக்க உரை

  • உமக்கு அடியவர்களாகிய நாங்கள் எங்ஙனம் வாழ்வோம் என்பது குறிப்பு
  • திரிந்தும்- இழிவு குறிப்பு
  • பகல் – நாள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – வைகாசி – 22 (2021)


பாடல்

படைக்கட் சூலம் பயிலவல் லானைப்
   பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானைக்
கடைக்கட்பிச் சைக்கிச்சை காதலித் தானைக்
   காமன்ஆ கந்தனைக் கட்டழித் தானைச்
சடைக்கட் கங்கையைத் தாழவைத் தானைத்
   தண்ணீர்மண் ணிக்கரை யானைத்தக் கானை
மடைக்கண்நீ லம்மலர் வாழ்கொளி புத்தூர்
   மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

ஏழாம் திருமுறை -தேவாரம் – சுந்தரர்

கருத்து – திருவாழ்கொளி புத்தூரில் உறையும் ஈசனின் பெருமைகளை உறைத்து அவனை விடுத்து வேறு எதையும் நினைக்கமாட்டேன் எனக் கூறும் பாடல்.

பதவுரை

படைகளில் முதன்மையான சூலத்தை தனது படையாகக் கொண்டவனும், தன்னை நினைப்பவர்களது உள்ளத்தில் பரவி அந்த சிந்தனைகளை அதிகப்படுத்துவனும், ஊர்தோறும் சென்று பிச்சையை விரும்பிச் செய்பவனும், அழகிய வடிவம் கொண்ட காமனது உடலை அழியச் செய்தவனும், பெருக்கெடுத்து செல்லும் கங்கையைச் சடையில் தங்கும்படி செய்தவனும், நீர்வளம் உடைய மண்ணி ஆற்றின் கரையில் இருப்பவனும், எண்குணங்கள் அமையப் பெற்றவனும், நீர் மடைகளில் நீலோற்பல மலர் மலர்ந்து இருக்கின்ற திருவாழ்கொளி புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போன்றவனுமாகிய பெருமானை மறந்து யான் வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினைக்கமாட்டேன்.

விளக்க உரை

  • படைக்கண் – உள் என்னும் பொருளதாய் வந்தது. ஏனைய படைகளிலும் சிறந்தது சூலம் எனும் பொருள் பற்றியது.
  • பாவிக்கொள்ளுதல் – மூடிக்கொள்ளுதல், சுற்றிக் கொள்ளுதல்
  • தாழ்தல் – தங்குதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 26 (2021)


பாடல்

குறைவி லாநிறை வேகுணக் குன்றே
   கூத்த னேகுழைக் காதுடை யானே
உறவி லேன்உனை யன்றிமற் றடியேன்
   ஒருபி ழைபொறுத் தால்இழி வுண்டே
சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச்
   செம்பொ னேதிரு வாவடு துறையுள்
அறவ னேஎனை அஞ்சல்என் றருளாய்
   ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – குறைகள் அற்றவனாகிய சிவனிடத்தில் குறையுடைய தன்னை பொறுத்து அருள வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

‘குறை` எனப்படுவது ஒன்றும் இல்லாது எக்காலத்திலும் நிறைவுடையவனே, எண்குணங்கள் அனைத்தும் பெற்று மலை போன்று உயர்ந்து நிற்பவனே, கூத்துகளை நிகழ்த்துபவனே, குழையணிந்த காதினை உடையவனே, ஒலி எழுப்பும் வண்டுகள் வெளியே செல்லாமல் சிறைபோன்று சோலைகள் சூழ்ந்த திருவாரூரில் செம்பொன் போன்ற திருமேனியினை உடையவனே! திருவாவடுதுறை திருத்தலத்தில் எழுந்து அருளுகின்ற அறவடிவினனே, அடியேனுக்கு உன்னையன்றி எனக்கு எவரும் உறவினராக இல்லை ஆதலினால் யான் செய்த ஒரு குற்றத்தை நீ பொறுத்துக்கொண்டால் , நீ தாழ்வினை அடைவாயா, என்னை ,`அஞ்சேல்` என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள் செய்வாயாக.

விளக்க உரை

  • குறைவிலா நிறைவே – எல்லாவற்றினும் மேலான பொருளாகிய இறைவன் ஒருவனையன்றி, குறை சிறிதும் இல்லாத நிறைவுடைய பொருள் வேறொன்றும் இல்லாமையை எதிர்மறையால் உணர்த்தியது
  • உறவிலேன், உறவு யார் –  தமக்குத் துணைசெய்ய வல்லவர்கள் ஈசனற்றி  பிறர் இல்லை என்பதை வலியுறுத்தியது
  • ஒரு பிழை – பிறப்பெடுத்தது
  • ஒரு பிழை பொறுத்தால் இழிவுண்டே – இறைவரோடு உண்டான உரிமையில் உரைத்தது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 13 (2021)


பாடல்

செய்யநின் கமல பாதஞ் சேருமா தேவர் தேவே
மையணி கண்டத் தானே மான்மறி மழுவொன் றேந்தும்
சைவனே சால ஞானங் கற்றறி விலாத நாயேன்
ஐயனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே

நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – ஈசனின் திருமேனிப் பெருமைகளை உரைத்து அவனின் தாமரை போன்ற பாதங்களை அருளவேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

தேவர்கள் அனைவருக்கும் மேலான தேவனே! நஞ்சு உண்டதால் கண்டத்தில் நீல நிறம் பெற்று நீலகண்டவன் ஆனவனே! மான் கன்றினையும், மழுப்படையையும் ஏந்தி உள்ளவனாகிய சைவ சமயக்கடவுளே! ஞானத்தை முறையாகக் கற்றறியும் வாய்ப்பு இல்லாத அடியேனுடைய தலைவனே! ஆலவாயில் தலத்தில்உறையும் அப்பனே! உன்னுடைய சிவந்த தாமரை போன்ற  பாதங்களை அடியேன் சேரும்படி மிகவும் அருள் செய்வாயாக.

விளக்கஉரை

  • செய்ய – சிவந்த; செம்மையான
  • கமல பாதம் – தாமரைப்பூப்போன்ற திருவடி
  • சேரும் ஆ – இடை விடாது நினையுமாறு
  • மை – நீலவிடம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 11 (2021)


பாடல்

கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக்
   கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை
விள்ள எழுதி வெடுவெ டென்ன
   நக்கு வெருண்டு விலங்கு பார்த்துத்
துள்ளிச் சுடலைச் சுடுபி ணத்தீச்
   சுட்டிய முற்றும் சுளிந்து பூழ்தி
அள்ளி அவிக்கநின் றாடும் எங்கள்
   அப்ப னிடம்திரு ஆலங்காடே

பதினொன்றாம் திருமுறை – காரைக்காலம்மையார் – மூத்த திருப்பதிகம்

கருத்து – பேய்களின் செயல்களைக் கூறி அவ்வாறான இடத்தில் ஈசன் உறைகிறான் என்று கூறும் பாடல்.

பதவுரை

கள்ளி மரத்தின் கிளைகளுக்கு இடையில் காலை நீட்டி, எரிந்து முடிந்த கொள்ளிக் கட்டையை வாங்கி மசிய அரைத்து குழையாக்கி, அதை மசியாக கண்களில் எழுதி,  மசியானது கண்களில் இருந்து வேறுபடுமாறு தோற்றம் கொண்டு பிறர் நடுநடுங்குமாறு சிரித்து, மருட்சி அடைந்து, நேரே பாராமல் வலமாகவும், இடமாகவும் திரும்பித் திரும்பிப் பார்த்து  குறுக்கே நோக்கி, கோபம் கொண்டு குதித்து,சுடலை எனப்படும் சுடலையில் எரிந்து கொண்டிருக்கும் பிணத்தின் தீயானது சுடவும், சினக் குறிப்புக் கொண்டு மணலை அள்ளி அவிக்க, பேய்கள் நின்று ஆடுகின்ற எங்கள் அப்பன் தங்கியிருக்கும் இடம் திரு ஆலங்காடாகும்.

விளக்கஉரை

  • இறையின் மீது நாட்டம் அன்றி புவியின் மீது மனிதர்கள் ஆணவம் கொண்டு ஆடுதலை குறிக்கும் என்றும் கொள்ளலாம்.
  • கள்ளிக் கவடு – கள்ளி மரத்தின் கிளைகள்.
  • கடைக்கொள்ளி – எரிந்து முடிந்த கொள்ளிக் கட்டை.
  • மசித்தல் – மசிய அரைத்தல்.
  • விள்ள – கண்ணினின்றும் வேறு தோன்ற.
  • `வெடு, வெடு` –  சினக் குறிப்பு. நகுதல் கோபச் சிரிப்பாயிற்று.
  • சுளித்தல் – கோபித்தல்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 7 (2021)


பாடல்

பதிதா னிடுகா டுபைங்கொன் றைதொங்கல்
மதிதா னதுசூ டியமைந் தனுந்தான்
விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும்
நெதிதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே

இரண்டாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து – நெல்லிக்கா எனும் திருத்தலத்தில் எழுந்தருளிய இறைவனின் சிறப்புகளையும், திருமேனியில் இடம் பெறும் பொருள்களின் சிறப்புகளையும் கூறும் பாடல்.

பதவுரை

நெல்லிக்கா எனும் திருத்தலத்தில் எழுந்தருளிய இறைவன் இடுகாட்டை வாழும் இடமாகவும், கொன்றைமலரைத் தான் விரும்பும் மாலையாகவும் கொண்டவனாகவும், சந்திரனை சூடிய வீரனாக இருப்பவனாகவும், விதியாகவும் வினையாகவும் மேன்மையளிக்கும் நிதியாகவும் விளங்குபவன் ஆவான்.

விளக்கஉரை

  • தொங்கல் – (மாலை) கொன்றை
  • மதி – பிறை
  • மைந்தன் – வலியன். வீரன். விதியும் வினையும் நிதியும் எல்லாம் அவனன்றி வேறில்லை எனும் பொருள் பற்றியது
  • விழுப்பம் – மேன்மை.
  • விழுப்பம் பயக்கும் நெதி – திருவருளே தனக்கு மேலே ஒன்றில்லாச் செல்வம் என்பது பற்றியது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 4 (2021)


பாடல்

ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
அனலாடி ஆரமுதே யென்றேன் நானே
கூரார் மழுவாட் படையொன் றேந்திக்
குறட்பூதப் பல்படையா யென்றேன் நானே
பேரா யிரமுடையா யென்றேன் நானே
பிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே
ஆரா அமுதேயென் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – ஐயாற்றில் உறையும் சிவனின் பெருமைகளை உரைத்து மனம் உருகி நிற்கின்றேன் என்பதை கூறும் பாடல்.

பதவுரை

பகைவருடைய முப்புரங்களை கண்களால் நோக்கி அதனை அழித்தவனே!  ஊழித்தீயிலும், சுடுகாட்டிலும் எழும் தீயில் கூத்து நிகழ்த்துபவனே! எளிதில் பெற இயலா அரிய அமுதமே!  கூர்மையான  மழுப்படையை ஏந்துபவனே! உயரம் குறைவான பல பூதங்களைப் படையாக உடையவனே! அழைக்க உகந்த ஆயிரம் திரு நாமங்களை உடையவனே! சந்திரனை பிறையாக சூடும் தலைக்கோலம் உடையவனே! ஆரா அமுதமா இருக்கும் ஐயாற்று பெருமானே  என்று பலகாலமாக வாய்விட்டு அழைத்து மனம் உருகி  நிற்கின்றேன்.

விளக்கஉரை

  • ஆரார் – பொருந்தார்; பகைவர்
  • குறள் – குறுகிய வடிவம்
  • ஆயிரம் –  அளவின்மை
  • அரற்றி – வாய்விட்டு அழைத்து
  • நைகின்றேன் – மனம் உருகி நிற்கின்றேன்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 1 (2021)


பாடல்

கங்கை வார்சடை யாய்கண நாதா
கால காலனே காமனுக் கனலே
பொங்கு மாகடல் விடமிடற் றானே
பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால்விடை யாய்தெளி தேனே
தீர்த்த னேதிரு வாவடு துறையுள்
அங்க ணாஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்துஈசனின் செயற்கரிய செயல்களை உரைத்து தன்னையும் காக்க வேண்டும் என விண்ணப்பிக்கும்  பாடல்.

பதவுரை

கங்கை நதியினை தாங்கிய நீண்ட சடையை உடையவனே, பூத கணங்களுக்குத் தலைவனே,  காலன் ஆகிய எமனுக்கு காலனே, காமன் உடலினை நெருப்பாகி அதனை எரித்தவனே,  அலை மிகுந்து தோன்றும் பெரிய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அதை கண்டத்தில் உடையவனே,  உயிர்களுக்கு முதல்வனாக இருப்பவனே, அற வடிவமாக இருப்பவனே, மாசு படாமல் எக்காலத்திலும் தூயோனாக  இருப்பவனே, செம்மையான கண்களை உடைய திருமாலாகிய இடபத்தை ஊர்தியாக உடையவனே, தெளிந்த தேன் போன்றவனே, இறைவனே, தேவர்களிடத்தில் ஆண் சிங்கமாய் உள்ளவனே, திருவாவடுதுறையில் எழுந்து அருளியிருக்கின்ற கருணையாளனே, அடியேனுக்கு உன்னை அன்றி உறவாக யாவர் உளர்! என்னை ‘அஞ்சேல்’ என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்வாயாக.

விளக்கஉரை

  • ‘அமரர்கட்குத் தலைவனே’ என அருளாது ‘அமரர்கள் ஏறே’  என , உருவகித்து அருளியது முதன்மையின் சிறப்பு பற்றியது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மாசி – 18 (2021)


பாடல்

கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற்
   கைப்பர் பாழ்புக மற்றது போலப்
பழுது நானுழன் றுள்தடு மாறிப்
   படுசு ழித்தலைப் பட்டனன் எந்தாய்
அழுது நீயிருந் தென்செய்தி மனனே
   அங்க ணாஅர னேயென மாட்டா
இழுதை யேனுக்கொர் உய்வகை யருளாய்
   இடைம ருதுறை எந்தைபி ரானே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – மெய்யறிவு இல்லாமல் உலகில் உழலும் தனக்கு மனம் இரங்கி உய்யும் வகையினை அருள வேண்டும் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

திருவிடைமருதூரில் எழுந்து அருளுகின்ற எம் குலதேவனேகழுதையானது குங்குமத்தினை பொதி போல் சுமந்து வருந்தினால் சிறப்பு எதுவும் இல்லை எனக் கருதி, அனைவரும் நகைப்பர்; அதுபோல  அடியேன் உனக்கான தொண்டினை மேற்கொண்டு, அதன் உண்மையானப் பயனைப் பெறாமல் மனம் தடுமாறி, வெள்ளத்தில் உண்டாகும் சுழியிடை அகப்பட்டவன் போல  இந்த உலக வாழ்க்கையில் வருத்தம் கொண்டவன் ஆயினேன்; (அவ்வாறே மற்றவர்கள் எள்ளி நகைப்பர் என்பது மறை பொருள்) ‘மனமே, நீ நம் இறைவனுக்கு உண்மையானத் தொண்டினை செய்யாது (புறப்பொருள்கள் குறித்து) கவலை கொண்டிருந்து என்ன பெறப் போகின்றாய்என்று நெஞ்சிற்கு அறிவுறுக்கவும்,  ‘அழகிய கண்களை உடைய சிவனேஎங்களைக் காப்பவனேஎன்று உன்னை அன்பினால் துதிக்கவும் மாட்டாத அறிவில்லாதவனாகிய எனக்கு, நீ  மனம் இரங்கி, உய்யும் நெறி ஒன்றை வழங்கி அருளாய்.

விளக்கஉரை

  • நகைப்பர் -> கைப்பர்
  • அங்கணன் – கண்ணழகு உடையவன், கருணையான நோக்குடையவன், கடவுள்; சிவன்; திருமால்; அருகன்
  • இழுதை – பேய், அறிவின்மை, அறிவிலி, பொய்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – தை – 14 (2021)


பாடல்

குறைவிலோம் கொடு மானுட வாழ்க்கையால்
கறைநிலாவிய கண்டன் எண்தோளினன்
மறைவலான் மயிலாடுதுறை யுறை
இறைவன் நீள்கழல் ஏத்தியிருக்கிலே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – மயிலாடுதுறை தலத்தில் உறையும் சிவனின் பெருமைகளை உரைத்து அவர்தம் திருவடிகளைக் கொண்டவர்களுக்கு மானிட வாழ்வில் துயரம் இல்லை என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

உயிர்கள் பிறவி நீக்கம் பெறுவதன் பொருட்டு, கரை படிந்தது ஒத்த கண்டத்தை கொண்டதால் திருநீலகண்டன் என்னும் பெயர் பெற்றவனும், எட்டுத் தோள்களினை உடையவனும், வேதத்தின் வடிவமாகவும், அதன் பொருளாக இருக்க வல்லவனுமகிய மயிலாடுதுறை தலத்தில் உறையும் இறைவனின் நீண்ட கழல்களை ஏந்தி இருத்தலால் கொடுமை உடையதான மானுட வாழ்வினில் வருவதான குறைவு இல்லாதவர்களாக ஆவோம்.

விளக்கஉரை

  • கொடு – தீயது. மீண்டும் பிறவிக்து ஏதுவான வினை .
  • நீள் கழல் – அழிவில்லாத திருவடிகள்
  • எண்தோளினன் – எட்டுத் திக்குகளையும் ஆடையாக அணிந்தவன் என்றும், எண் குணங்களை முன்வைத்து எண் தோளினன் என்றும் கூறலாம்.
  • திருவடிகளை ஏத்தியிருக்கும் பிறவி வாய்க்குமானால் அந்த மானுட வாழ்க்கையில் வினைகள் என்பது இல்லை.

சமூக ஊடகங்கள்

சைவத்திருத்தலங்கள் 274 – திருப்பூவணம்


தலவரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருப்பூவணம்

  • மூலவர் புஷ்பவனேஸ்வரர் – திரிசூலமும், சடைமுடியும் கொண்ட சுயம்புலிங்கத் திருமேனி
  • பசுவை வதைத்த பாவம் , பித்ரு சாபம் ஆகியவற்றை நீக்கவல்லத் தலம்
  • வடக்கு நோக்கி உத்தரவாகினியாக பாயும் சிறப்புடைய வைகைக்கரையில் அமைந்துள்ள தலம்
  • கோபுர விநாயகர், குடைவரை விநாயகர், அனுக்ஞை விநாயகர், மகா கணபதி, இறந்த முன்னோரின் ஆத்மா சாந்தி பெறவும், யாகம் சிறப்புறவும் அருளும் விநாயகர்கள், பாஸ்கர விநாயகர், இரட்டை விநாயகர் உட்பட 14 விநாயகர்கள் அருள்பாலிக்கும் தலம்
  • திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது வைகை ஆற்றில் கிடந்த மணல் யாவும் சிவலிங்கங்களாக காட்சி அளித்ததால் ஆற்றைக் கடந்து மிதித்துச் செல்லாமல் வைகை ஆற்றின் மறுகரையில் இருந்தபடியே இத்தலத்து இறைவன் மீது பதிகம் பாடியத் தலம்
  • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் சிவனாரை வழிபட ஏதுவாக நந்தி விலகி வழிவிட்டு சாய்ந்தகோலத்தில் இருக்கும் தலம்
  • பாண்டியநாட்டு தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் மூவராலும் பாடப் பெற்ற தலம்
  • கிழக்கு நோக்கிய 5 நிலைகளைக் கொண்ட இராஜகோபுரம்
  • இறந்தவர் முக்தி பெற ஏற்றப்படும் மோட்ச தீபங்கள் – மூலவர் பின்புறம், கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பினபுறம் நட்சத்திர தீபம், 27 விளக்குகள் கொண்ட திருவாச்சி தீபம்
  • குலசேகர பாண்டியன் இந்நகரில் முடிசூட்டிக் கொண்ட விழாவில் நெற்கதிரை முடியாகச் சூடிக்கொண்டதால் நெல்முடிக்கரை
  • பொன்னையாள் எனும் பெண் பூவணநாதர் திருவுருவை பொன்னால் அமைத்து வழிபட வேண்டும் என்று ஆசை இருந்தும், போதிய நிதி இல்லாததால் வீட்டில் இருந்த பழைய இரும்பு, செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை இரசவாதம் செய்து தூய பொன்னாக மாற்றிக் கொடுத்து அவளுக்கு அருள் செய்த இடம்(36 வது திருவிளையாடல்)
  • சுச்சோதி எனும் மன்னன் முன்னோர்களுக்கு திதி கொடுக்க திருப்புவனம் வந்து வைகையாற்றங்கரையில் வேண்டுதல் செய்து, ஆற்றில் தட்சணை பொருட்களான பிண்டங்களை கரைக்க முற்பட்டபோது, முன்னோர்களே நேரடியாக வந்து கையில் வாங்கி கொண்டதால் காசியை விட வீசம்(முன்காலத்து அளவை) அதிகம் புண்ணியம் தரும் புஷ்பவன காசி எனும் பெருமைப் பெற்றத் தலம்
  • சிவலிங்கத்தைக் கதிரவன் (சூரியன்) வழிபட்டு, நவக்கிரகங்களுக்கும் தலைவனாக இருக்கும் வரம் பெற்றத் தலம்
  • பிரம்ம தேவன் அறிந்து செய்த பாவத்தை நீக்கிய திருத்தலம்
  • மகாவிஷ்ணு சலந்திரனைக் கொல்ல சக்கராயுதம் பெற்ற திருத்தலம்.
  • காளிதேவி, சிவலிங்கம் வைத்து பூசித்த திருத்தலம்
  • தருமஞ்ஞன் என்ற அந்தணன் காசியில் இருந்து கொண்டு வந்த அஸ்திக் கலசத்தில் இருந்த எலும்புகள் பூவாய் மாறிய திருத்தலம்
  • செங்கமலன் என்பவனின் பாவங்கள் அனைத்தையும் நீக்கிய திருத்தலம்
  • திருமகளின் சாபம் தீர்ந்த இடம்
  • பார்வதி தேவி இறைவன் திருவருள் வேண்டித் தவம் செய்த திருத்தலம்
  • சலந்திரன் என்ற தவளைக்குச் சக்கரவர்த்தியாய் இருக்கும் படியான வரம் அருளப்பட்ட திருத்தலம்
  • நள மகாராஜாவிற்கு கலிகாலத்தின் கொடுமையை அகற்றி அவனுக்கு மனச்சாந்தி அளித்த திருத்தலம்
  • மாந்தியந்தின முனிவருக்கும் தியானகாட்ட முனிவருக்கும் சிவபெருமான் சிதம்பர நல் உபதேசம் வழங்கிய இடம்
  • தாழம்பூ தான் பொய் சொல்லி உரைத்த பாவம் நீங்க வேண்டி, சிவபெருமானை வணங்கி வழிபட்ட திருத்தலம்
  • உற்பலாங்கி என்ற பெண் நல்ல கணவனை அடையப்பெற்று தீர்க்க சுமங்கலியாய் வாழும் வரம் பெற்றத் தலம்
  • திருப்பூவணத் திருத்தலத்தின் பெருமைகள் விரிவாகப் பாடும் நூல்கள் – கடம்பவனபுராணம். திருவிளையாடற் புராணம்
  • கந்தசாமிப்புலவர் எழுதியது – திருப்பூவணநாதர் உலா, திருப்பூவணநாதர் மூர்த்தி வகுப்பு, தலவகுப்பு,திருப்பூவணப் புராணம் என்ற நூல்கள்

தலம்

திருப்பூவணம்

பிற பெயர்கள்

புஷ்பவனகாசி , பிதுர்மோக்ஷபுரம் , பாஸ்கரபுரம் , லட்சுமிபுரம் , பிரம்மபுரம் , ரசவாதபுரம், நெல்முடிக்கரை

இறைவன்

புஷ்பவனேஸ்வரர், பூவணநாதர், பித்ரு முக்தீஸ்வரர்

இறைவி

சௌந்தரநாயகி, மின்னனையாள், அழகியநாயகி

தல விருட்சம்

பலாமரம் 

தீர்த்தம்

மணிகர்ணிகை , வைகை நதி , வசிஷ்ட தீர்த்தம் , இந்திர தீர்த்தம் 

விழாக்கள்

வைகாசி விசாகத் திருவிழா, ஆடி முளைக்கொட்டு உற்சவம்,  ஆடி மாத /  நவராத்திரி கோலாட்ட உற்சவங்கள், விநாயகர் சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி காலங்களில் சிறப்பு வழிபாடுகள், புரட்டாசி நவராத்திரி உற்சவம், ஐப்பசி கோலாட்ட உற்சவம், கார்த்திகை மகாதீப உற்சவம், மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம், மாசி மகா சிவராத்திரி உற்சவம், பங்குனி நடைபெறும் 1௦ நாட்கள் உற்சவம்

மாவட்டம்

சிவகங்கை 

முகவரி  / திறந்திருக்கும் நேரம்

அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில்
திருப்பூவணம் அஞ்சல், இராமநாதபுரம் மாவட்டம்
PIN – 623611

காலை6.00 மணிமுதல்11.00மணிவரை,
மாலை4.00 மணிமுதல்இரவு 8.00 மணிவரை
94435-01761, 0452-265082, 0452-265084

வழிபட்டவர்கள்

சூரியன், நான்முகன், நாரதர், திருமால், திருமகள், நளமகராஜன், மூவேந்தர்கள்

பாடியவர்கள்

திருநாவுக்கரசர் – 1 பதிகம், திருஞானசம்பந்தர் – 2 பதிகங்கள், சுந்தரர் – 1 பதிகம், கரூர்தேவர்(8 பாடல்கள்), அருணகிரிநாதர் (3 பாடல்கள்)

நிர்வாகம்

சிவகங்கை தேவஸ்தானம்

இருப்பிடம்

மதுரையில் இருந்து தென்கிழக்கே 20 கி.மி தொலைவு

இதரகுறிப்புகள்

தேவாரத்தலங்களில் 202 வதுதலம்
பாண்டியநாட்டுத் தலங்களில் இத்தலம் 11 வது தலம்

பாடியவர்      திருநாவுக்கரசர்
திருமுறை     6
பதிக எண்      18
திருமுறைஎண் 1

பாடல்

வடியேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங்
காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே

பொருள்

சோலைகளுடன் இருக்கும் திருப்பூவணம் எனும் திருத்தலத்தில்  விரும்பி எழுந்தருளி இருக்கும் புனிதராகிய சிவபெருமான், அடியார்களுடைய மனக்கண்ணின் முன்னர் கூர்மையான மூவிலைச் சூலமும், நீண்டு வளர்ந்ததாகிய  சடைமீது அணிந்த பிறையும், நறுமணம் மிக்க கொன்றைப் பூவினால் ஆகிய மாலையும், காதுகளில் கலந்து தோன்றும் வெண்மையான தோடும், இடிபோல பிளிர்தலை செய்து வந்த யானையின் தோலினை உரித்து போர்வையாக போர்த்தியும், அழகு விளங்கும் திருமுடியும், திருநீறணிந்த  திருமேனியும் கொன்டவராக காட்சியில் விளங்குகிறார்.

பாடியவர்      சுந்தரர்
திருமுறை     7
பதிக எண்      11
திருமுறைஎண் 8

பாடல்

மிக்கிறை யேயவன் துன்மதி யாலிட
நக்கிறை யேவிர லாலிற வூன்றி
நெக்கிறை யேநினை வார்தனி நெஞ்சம்
புக்குறை வான்உறை பூவணம் ஈதோ!

பொருள்

தீய எண்ணங் காரணமாக, தனது இடமாகிய கயிலையை பெயர்த்து எடுக்க முற்பட்ட போது நகை செய்து,  அவன் நெரியுமாறு, விரலால் சிறிதே ஊன்றியவனும், தன்னையே உருகி நினைப்பவரது ஒப்பற்ற நெஞ்சிலே உட்புகுந்து, எக்காலத்திலும் நீங்காது உறைபவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியுள்ள `திருப்பூவணம்` என்னும் திருத்தலம் இதுதானோ?

புகைப்படங்கள் : இணையம்
 

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஐப்பசி – 30 (2020)


பாடல்

பிலந்தரு வாயினொடு
   பெரி தும்வலி மிக்குடைய
சலந்தரன் ஆகம்இரு
   பிள வாக்கிய சக்கரம்முன்
நிலந்தரு மாமகள்கோன்
   நெடு மாற்கருள் செய்தபிரான்
நலந்தரு நன்னிலத்துப் பெருங்
   கோயில் நயந்தவனே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – சக்கராயுதத்தை திருமாலுக்கு வழங்கியவன் திருநன்னிலத்துப் பெருங்கோயிலில் உறைக்கின்றான் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

அறத்தினை முன்வைத்து நன்மையைத் தருகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், பிலம் என்று வழங்கப்படுவதும், பாதாளம் போன்று இருக்கப் பெற்றதுமான  வாயைக் கொண்டவனும், பெரிதும் மிகுந்த வலிமையையும் உடைய சலந்தராசுரனது உடலை இரண்டு பிளவாகச் செய்த சக்கராயுதத்தை, முன்னொரு காலத்தில் , மண்ணை உண்டு உமிழ்ந்த திருமகள் கணவனாகிய திருமாலுக்கு அளித்த தலைவன்.

விளக்கஉரை

  • பிலம் – பாதாளம்; கீழறை; குகை; வளை
  • நலம் – நன்மை, அறம், சோபனம் என்ற யோகத்தின் தனித்தமிழ் சொல்.
  • நிலந்தரு –  மக்களுக்கு நிலம் முதலிய செல்வத்தைத் தருகின்ற மாமகளுக்கு உரித்தானவன்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – புரட்டாசி – 24 (2020)


பாடல்

மையார்தடங் கண்ணிபங் காகங்கை யாளும்
மெய்யாகத் திருந்தனள் வேறிட மில்லை
கையார்வளைக் காடுகா ளோடு முடனாய்க்
கொய்யார்பொழிற் கோடியே கோயில்கொண் டாயே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – ஈசன் தனித்து இருந்து கோடிக்கரையில் உறைதல் குறித்து வினா எழுப்பியப்  பாடல்.

பதவுரை

மைபொருந்திய பெரிய கண்களை உடைய உமையம்மை ஆகிய இறைவியின் பாகத்தை உடையவனே! கங்கையும் வேறிடம் இல்லை என்பதை உணர்ந்து உனது அழிவில்லாத திருமேனியில் இருக்கின்றாள்;  இவ்வாறு இரு மகளிர் உடம்பிலே நீங்கா திருக்க பூக்கள் பொருந்திய சோலைகளைகளில் இருந்து பூக்களைப் பறித்து சூடி கையில் நிறைந்த வளைகளையுடையவளும் காட்டை உரிமையாக உடையவளும் ஆன காளியோடு  கூடிதான கோடிக் கரையையே உறைவிடமாகக் கொண்டாயே, இஃது எவ்வாறு?

விளக்க உரை

  • காடுகாள் – காடுகிழாள், பழையோள்,  காளி; ‘காடுகள்’ –  பிழைபட்ட பாடம்
  • இருவர் இருக்க, மூன்றாமவளைக் கூடியது எவ்வாறு என , நகை தோன்ற வினவியது; இத்துணை மகளிரோடும் இங்குத் தனியாய் இருத்தல் தகுமோ என்பதும் பெறப்படும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – புரட்டாசி – 3 (2020)


பாடல்

வெண்ணித் தொல்நகர் மேயவெண் திங்களார்
கண்ணித் தொத்த சடையர் கபாலியார்
எண்ணித் தம்மை நினைந்திருந் தேனுக்கு
அண்ணித் திட்டமு தூறுமென் நாவுக்கே

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – ஈசன் குறித்த சிந்தனைகள் அமுதமெனத் தோன்றும் என்று கூறும்  பாடல்.

பதவுரை

வெண்ணி எனும் மிகப்பழமை வாய்ந்ததான நகரத்தை மேவியவரும், சிறப்புகளை உடைய வெண்திங்களைச் சூடியவரும், கொன்றைக் கண்ணியை கொத்தாக உடைய திருச்சடையினைக் கொண்டவரும், பிரம்ம கபாலத்தைத் திருக்கரங்களில் ஏந்தியவருமான ஆகிய அப்பெருமானை எண்ணி நினைத்திருந்த அடியேனுக்கு அவர் குறித்த சிந்தனைகள் என் நாவினில் இனியதான அமுதமாக ஊறும்.

விளக்க உரை

  • தொல்நகர் – மிகப்பழைய நகர்
  • கண்ணித்தொத்த – கொன்றைக் கண்ணி அணிந்த கொத்தாகிய
  • தம்மை – அப்பெருமான்தமை
  • அண்ணித்திட்டு – இனித்து

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆவணி- 21 (2020)


பாடல்

சிரங்கை யினிலேந் தியிரந்த
பரங்கொள் பரமேட் டிவரையால்
அரங்கவ் வரக்கன் வலிசெற்ற
வரங்கொண் மயிலா டுதுறையே

முதலாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துதிருமயிலாடுதுறை திருத்தலத்தின் பெருமைகளைக் கூறும்  பாடல்.

பதவுரை

ஆணவம் கொண்ட பிரம்மனின் கர்வத்தினை அழிக்க அவன் தலையினைக் கொய்து  அந்த பிரமகபாலத்தைக் கையில் ஏந்திப் பலருடைய இல்லங்களிலும் சென்று யாசித்து உண்ணும் மேன்மை கொண்டவன் சிவபிரான். கயிலை மலையால் இராவணனின் தோள்கள் நெரியுமாறு அடர்த்த நன்மை தருபவனாகிய அப்பெருமானை அடியவர் வணங்கி நன்மைகளைப் பெறும் தலம் திருமயிலாடுதுறை.

விளக்க உரை

  • பரம்கொள் பரமேட்டி – மேன்மையைக் கொண்ட சிவன்
  • வரையால் அரங்க – கைலையால் நசுங்க

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆவணி- 9 (2020)


பாடல்

இடிப்பான்காண் என்வினையை ஏகம் பன்காண்
   எலும்பா பரணன்காண் எல்லாம் முன்னே
முடிப்பான்காண் மூவுலகு மாயி னான்காண்
   முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்
படித்தான் தலையறுத்த பாசு பதன்காண்
   பராய்த்துறையான் பழனம்பைஞ் ஞீலி யான்காண்
கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணி யான்காண்
   காளத்தி யானவனென் கண்ணு ளானே

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – சிவனின் தன்மைகளைக் கூறி அவன் தன் கண்ணில் உறைகின்றான் எனக் கூறும் பாடல்.

பதவுரை

அநாதி காலம் தொட்டு வரும் தொந்த வினைகளை அழிப்பவனாகவும், அழியாத மாவடியின் கீழ் உறைபவனாகி இருத்து அருள்புரியும் ஏகம்பத்தில் உறைபவனாகவும், எலும்புகளையே அணிகலன்களாக அணிபவனாகவும், சங்காரம் எனும் பிரளய காலத்தில் அனைத்தையும் தானே முன்நின்று முடிப்பவனாகவும், மூன்று உலகங்களிலும் வியாபித்திருப்பவனாகவும், நாளுக்குரிய திதி,  வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றை உணர்த்துவதாகிய காலத்தின் வழி செல்லும் உயிர்களை படைப்பவனாகிய  பிரமனின் ஐந்தாம் தலையை நீக்கி பசுபதி என்ற அடையாளங்களை உடையவனாகவும், பராய்த்துறை, பழனம், பைஞ்ஞீலி ஆகிய தலங்களில் விரும்பி உகந்து அருளுபவனாகவும், மார்பிலும், முடிமாலையிலும் கொன்றைப் பூவினாலாய மாலையை அணிபவனாகவும் இருக்கும் பெருமானகிய காளத்தி நாதன் என் (அகக்) கண்களில் உள்ளான்.

விளக்க உரை

  • இடித்தல் – அழித்தல்
  • முடித்தல் – வகுத்தமைத்தல்
  • ஐம்புரி என்பதற்கு பஞ்சாதி என்ற வடமொழிச் சொல்லாக பொருள் கொண்டு, பெரும்பாலும் ஐம்பது வார்த்தைகள் கொண்ட யசுர் வேதத்தின் பகுதிகள் என்றும் சிலர் பொருள் கொண்டு உரைப்பாரும் உளர்.
  • தார் –  மார்பில் அணியும் மாலை
  • கண்ணி – முடியில் அணியும் மாலை

சமூக ஊடகங்கள்