அமுதமொழி – விகாரி – மாசி – 8 (2020)


பாடல்

ஏறுகின்ற மூலாதா ரத்தில் நின்ற
என் மகனே புலத்தியனே யிசைந்து கேளு
மாறுமிது மிடைபின்னாய் யிரண்டு மாறு
மகாரமது முப்பொருளாய் நின்ற சூட்சம்
வேறு துறை யேதுமில்லை மவுனத் தூட்டு
வேதாந்த சுழிமுனையின் நாட்ட மாகும்
தேறுமப்பா கற்பமது மவுனத் தாலே
ஜெகசால சித்தகறை மவுனந்தானே

அகஸ்தியர் தண்டக சூஸ்திரம் 25

கருத்து – அகத்தியர் புலத்தியருக்கு மௌனம் பற்றி விளக்கி அதில் நிலைபெறுதலைக் குறித்து விளக்கம் அளிக்கும் பாடல்.

பதவுரை

உயிர்களுக்கு ஆதாரமாக இருக்கக் கூடியதான மூலாதாரத்தில் நின்ற எனது மகனாகிய புலத்தியனே உரைக்கக்கூடிய இந்த விஷயங்களை மனம் ஒன்றி கேட்பாயக. மாறி மாறி இருக்கக் கூடியதான பின்னல் போன்றதான இரு நாடிகள் ஆகிய சூரிய நாடி சந்திர நாடி ஆகியவற்றின் வழியே செல்வதாகியதும், ஊமை மூலமானதும், ஜீவாத்மாவை குறிப்பதானதும், ஆறாம் அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை குறிப்பதான மகாரமானது அருவம், உருவம் அருவுருவம் ஆகிய முப்பொருளாய் நின்ற நிலையில் அல்லாமல் வேறு எவ்வகையிலும் இல்லாமல் இருப்பதை மௌனத்தினைக் கொண்டு அறுதியிட்டு கூறப்பட்டதான சுழிமுனையில் விருப்பமுடன் நிற்பாயாக. இவ்வாறான கற்கக்கூடியதான மௌனத்தால்  சித்தத்தில் இருக்கும்  அனைத்துவிதமான குற்றங்களும் நீங்க மௌனம் மட்டும் நிலைபெற்று இருக்கும்.

விளக்க உரை

  • மாறுமிது மிடைபின்னாய் யிரண்டு மாறு மகாரமது முப்பொருளாய் நின்ற சூட்சம் – மகாரத்தினை முதன்மையாகக் கொண்டு அதை நடுவில் வைத்து முன்னும் பின்னும் ஓங்கார எழுத்துக்களால் அடையப்படுபவளாகிய அன்னை எனவும் கொள்ளலாம். ஓங்காரத்தினை உணர்தல் என்றும் கூறலாம்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மாசி – 1 (2020)


பாடல்

தத்துவந் தொண்ணுற் றாறில் தகவுறு வாயுப் பத்து
மெத்தென நாடி பத்து மெய்யுளே ஆறா தாரம்
சுத்தமாங் கரணம் நான்கும் தொன்றுமண் டலங்கள் மூன்று
மித்தனை நறிய வல்லா ரிறைவரா யிருப்பார் தாமே

அகத்தியர் முதுமொழி ஞானம் – 28

கருத்து – 96 வகையான தத்துவங்கள், தச வாயுக்கள், தச நாடிகள், அந்தக்கரணம், மண்டலங்கள் இவற்றைக்கண்டு அறுக்கவல்லவர்கள் இறை நிலையில் இருப்பார்கள் என்பதை வலியுறுத்தும் பாடல்.

பதவுரை

(சைவ சித்தாத்தன்படி விளக்கப்படுவதாகிய) தொண்ணுற்று ஆறு தத்துவங்களையும், அதில் வலிமையும் பெருமையும் உடையதாகிய தச வாயுக்கள் எனும் பத்து வாயுக்களையும், பத்து நாடிக்களையும் கொண்ட உடல்தனில் ஆறு ஆதாரங்களையும், புனிதத்துவம் வாய்ந்ததான அந்தக்கரணங்கள் நான்கையும், அநாதி காலம் தொட்டு இருக்கக்கூடியதான அக்னி, ஞாயிறு மற்றும் சந்திர மண்டலங்கள்  ஆகியவற்றை கண்டு அதனை அறுக்கவல்லவராக இருப்பவர்கள் இறைவனாக ( இறைவனுக்கு நிகரானவராக – சாயுச்சிய நிலையில் ) இருப்பார்கள்.

விளக்க உரை

  • தகவு – தகுதி, பெருமை, உவமை, குணம், அருள், நடுவுநிலை, வலிமை, அறிவு, தெளிவு, கற்பு, நல்லொழுக்கம்
  • ஆன்ம தத்துவங்கள் -24, உடலின் வாசல்கள் -9, தாதுக்கள் -7, மண்டலங்கள் -3, குணங்கள் -3, மலங்கள் -3, வியாதிகள் -3, விகாரங்கள் -8, ஆதாரங்கள் -6, வாயுக்கள் -10, நாடிகள் -10, அவத்தைகள் -5, ஐவுடம்புகள் -5
  • ஆறு சக்கரங்கள் – மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாஹதம், விசுத்தி , ஆக்ஞை
  • வாயுக்கள் 10 – உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுக்காற்று, விழிக்காற்று, இமைக்காற்று, தும்மல்காற்று, கொட்டாவிக்காற்று, வீங்கல்காற்று
  • நாடிகள் 10 – சந்திரநாடி அல்லது பெண்நாடி, சூரியநாடி அல்லது ஆண்நாடி, நடுமூச்சு நாடி, உள்நாக்கு நரம்புநாடி, வலக்கண் நரம்புநாடி, இடக்கண் நரம்புநாடி, வலச்செவி நரம்புநாடி, இடதுசெவி நரம்புநாடி,
  • கருவாய் நரம்புநாடி, மலவாய் நரம்புநாடி
  • அந்தக்கரணங்கள் – மனம், புத்தி, சித்தம், அகங்காரம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 23 (2020)


பாடல்

வடிவமாக இருப்பதுவே சந்தோஷமாகும்
வரிசையுடன் ஆகம புராணந்தன்னை
பதிவாக விட்டுவிட நின்றுகொண்டு
பத்தியுடன் வேதாந்த பொருளென்றெண்ணி
முடிவாக அத்திவுரித் தடிமேல் நின்று
முன்பின்னாயாகுகின்ற முறையாதென்று
அடியார்கள் சொல்லுகிற கருவைக் கேளு
அவர்சொல்லும் பூரணமு மறிந்துபாரே

அகத்தியர் சௌமியசாகரரம்

கருத்து – அடியார்களை அணுகி அவர்கள் இடத்தில் இருந்து பூரணத்துவத்தை பெற வேண்டும் என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

உண்மையான சந்தோசம் என்பது இருப்பதைக் கொண்டு திருப்தி அடையும் மனத்துடன் இருக்கும் வடிவமே சந்தோஷமாகும்; சமய நெறிமுறைகளை எடுத்துச் சொல்லும் ஆகமம், அறுபத்துநாலு கலைகளுள் ஒன்றானதும், பழமையுடன் கூடியதான கதையைக் கூறுவதும் ஆன புராணம் ஆகியவற்றை  செய்திகள் என்று எண்ணாமல்  உண்மைத் தன்மைகளை பக்தியுடன் வேதத்தின் முடிவுகளாகிய வேதாந்தம் என்று எண்ணி, அனைத்தையும் முடிவாக அறிந்தவர்களானவர்களும், சாம்பல் எனப்படும் திருநீற்றினை மேனி முழுவதும் பூசி,  காக்கும் திருவடிகள் மேல் மனம் வைத்தவர்களும், மூச்சுக் காற்றினை முறையாக அறிந்து அதன்படி நிற்பவர்களுமான அடியவர்களாகிய கருத்தினை கேட்பாயாக; அவர்கள் உரைக்கக் கூடியதான பூரணத்துவம் என்பது என  அறிந்து பார்ப்பாயாக என அகத்தியர் புலத்தியருக்கு உரைக்கிறார்.

விளக்க உரை

  • புராணம் – பழமை, பழங்கதை, அறுபத்துநாலுகலையுள் ஒன்றும் வியாச முனிவரால்இயற்றப்பட்டதும், சருக்கம், பிரதிசருக்கம், வமிசம்,மன்வந்தரம், வமிசானுசரிதம் இவற்றைப்பற்றிக் கூறுவதுமான பழைய நூல்வகை
  • அத்திவுரித்து அடிமீது நின்று – அத்தி மரம், யானை என்று இருபொருள் பெறப்படும். அத்தி உரித்து என்பது வேழ முகத்தானுக்கு உரிய யானை குறிக்கும் மூலாதாரத்தில் உள்ள குண்டலினியை எழுப்பி அங்கு பிராணனை நிறுத்தி அதை மேலே ஏற்றுவது என்று பொருள்; பிராணன் எனும் குண்டலினியை  அது இருக்கும் இடமான மூலாதாரத்திலிருந்து எழுப்பி பின் நிலையான இடமான சகஸ்ராரத்துக்கு மாற்றுவது. குருமுகமாக அறியப்படவேண்டிய ரகசியம் இது.
  • அடியார் – அடியை உடையவர்கள், அதாவது மூலாதாரத்தை அறிந்தவர்கள் அடியவர்கள்.  அவர்களது விளக்கமே உண்மையான விளக்கமாகும் என்றும் பொருள் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 9 (2020)


பாடல்

நெஞ்சுளே நினைவு தோன்றும் நினைவுகளே அறிவு தோன்றும்
மிஞ்சிய அறிவு தானே மெய்பொரு ளாகி நிற்கும்
பஞ்சுளே படும்பொ றிப்போல் பரந்துளே துரிய மாகும்
அஞ்சிலே துரிய மாகி யதனுறே யாதியாமே

முதுமொழி ஞானம் –  – அகத்தியர்

கருத்து – ஆதியானது அஞ்செழுத்தினில் பரவி இருத்தலையும், மெய்ஞான நிலையில் அதை அறிய முடியும் என்பதையும் உரைக்கும் பாடல்.

பதவுரை

ஆதியானது பஞ்சினில் இருக்கும் அனல் போல் பரவி அஞ்செழுத்தில் தன்மயமாய் நிற்கும் உயர்நிலையை ஆகிய துரிய நிலையில் நிற்கும்;  கற்று அறிந்ததைக் கொண்டு நெஞ்சத்தில் ஆதி பற்றிய எண்ணங்கள் முதலில் தோன்றும்;  அந்த எண்ணங்களைத் தொடர்ந்து  மெய்யறிவு பற்றிய ஞானம் தோன்றும்; அவ்வாறான அந்த நிலையில் அறிவு எனும் பேரறிவு தானே மெய்ப் பொருளாகிவிடும்.

விளக்க உரை

  • துரியம் – நான்காம் அவத்தை, யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை, பொதியெருது, சுமத்தல்
  • பஞ்சுளே படும்பொ றிப்போல் – பஞ்சினில் தீ மறைந்திருக்கும், குவிஆடி மூலம் குவிக்கப்படும் போது அந்தப் பஞ்சானது பற்றிக் கொள்ளும். அத்தன்மை ஒத்து

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 2 (2020)


பாடல்

ஆசானை அடுக்கிற விதம்
காரப்பா இந்நூலைத் திருந்தோர் பாதம்
காரடா வருடமது பனிரெண்டாண்டு
சீரப்பா பணிவிடைகள் எல்லாம் செய்து
சிவசிவா கேட்டதன்ம மெல்லாம் ஈய்ந்து
சாரப்பா நூல் எனக்குத் தாரு மென்று
சற்றும் நீ கேளாதே சும்மா நில்லு
பேரப்பா அவர் மனது கனிந்து தென்றால்
பேசாமல் நூல் கொடுத்து அருள் ஈவாரே

சித்தர் பாடல்கள் –  அகஸ்தியர் மெய்ஞானம்

கருத்துசீடனின் ஆன்மீக நிலை குரு அறிவார் என்பதால் சீடன் தெரிவிக்காமலே குரு கற்றுத் தருவார் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

ஆசானை அடுத்து இருக்கின்ற விதத்தினை உரைக்கின்றேன்; சீடனானவன், மெய் ஞானத்தையும் மற்றும் அனைத்து விஷயங்களையும் போதிக்கின்ற உண்மையான ஆசானைச் சேர்ந்து அவருக்கு பன்னிரண்டு ஆண்டுகள் சேவை புரியவேண்டும். ஆசான் கேட்கின்ற அனைத்தையும் அவருக்கு அளித்து அவர் மனம் குளிரச் செய்யவேண்டும்; அவர் விரும்புகின்ற தனம் எல்லாம் ஈந்தாலும், அவரிடம் கற்றுத் தருவதைப்பற்றி குறிப்பிட்டு இதனை எனக்கு கற்றுத் தரவேண்டும் என்று கேட்கக் கூடாது; சீடனின் செயல்களில் மனம் குளிரும் ஆசானானவர் தேவையான அறிவையும் தந்து தனது அருளையும் ஈவார் என்று அகத்தியர் புலத்தியருக்குக் கூறுகிறார்.

விளக்க உரை

  • குரு இறைவுணர்வின் வடிகாலாக இருப்பதாலும், உடல் அளவில் கர்ம யோகத்தின்படி பக்குவப்படுத்தியும், மனதளவில் விருப்பு வெறுப்புகளை விலக்கச் செய்தும் வழிகாட்டுவதால் சீடனின் வாழ்வுக்கான வரங்களில் முக்கியமானது அவருடன் தங்கி இருந்து பெறும் அனுபவமே முதன்மையானது
  • நூல் – மெய்ஞான அனுபவங்கள்
  • குரு – வழிகாட்டுபவர்; ஆசான் – வழி வகுத்து அந்த நெறிபடி நின்று உதாரணமாக வாழ்ந்து காட்டுபவர்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 19 (2019)


பாடல்

விளம்புகிறேன் பூரணந்தா னெதுவென்றாக்கால்
வெட்டவெளி சுழினையுச்சி வேறேயில்லை
தளம்பாதே வேறெண்ணாதே நீயும்
சகல சித்தும் கைவசமா யாடும்பீடம்
முளங்காதே பூரணத்தைக் கண்டோமென்று
முச்சுடரின் சோதிதன்னை மொழிந்தாற்தோஷம்
பழங்காறு மும்மூலந் தன்னைத்தானும்
பார் மகனே சித்தர்கள்தான் பகரார்காணே

அகஸ்தியர் ஞான சைதன்யம்

*கருத்து – வெட்டவெளி எனப்படும் சுழுமுனை உச்சியினை கண்டவர்களின் இயல்பினை உரைக்கும் பாடல்.*

பதவுரை

மனம் கலங்கி வேறு எந்த ஒன்றை பற்றியும் எண்ணாமல் சகலவிதமான சித்துகளும் கைவசம் ஆடும் பீடம் ஆனதும், முழுவதுமான மகிழ்ச்சியினை தருவதும் ஆன வெட்டவெளி எனப்படும் சுழுமுனை உச்சியினை தவிர ஏதுவும் இல்லை; இவ்வாறான பூரணத்தை கண்டுவிட்டதை எவரிடத்திலும் உரையாதே; மூன்று சுடர் போன்றதான சோதிதன்னை கண்டதை உரைத்தால் அது தோஷமாகும்; மிகப் பழையதான காலத்தில் இருந்து தொடரும் மூலம் தன்னை கண்டவர்கள் சித்தர்கள் ஆயினும் அவர்கள் கண்டதைப் பற்றி எதையும் பகரமாட்டார்கள்

விளக்க உரை

  • தளும்புதல் – மனங்கலங்குதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 30 (2019)


பாடல்

பாரப்பா உதயத்தில் எழுந்தி ருந்து
பதறாமற் சுழுமுனையில் மனத்தை வைத்துக்
காரப்பா பரிதிமதி யிரண்டு மாறிக்
கருவான சுழுமுனையில் உதிக்கும் போது
தேரப்பா அண்ணாக்குள் நின்று கொண்டு
தியங்காமற் சுழுமுனைக்குள் ளடங்கும் பாரு;
சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும்
சிதறாமல் மூன்றும் ஒன்றாய்ச் சேர்ந்து போமே

அகத்தியர் ஞானம்

கருத்து – அண்ணாக்கு தனில் நின்று சிவ ரூபம் காணுதலைப் பற்றிக் கூறும் பாடல்.

பதவுரை

உதய காலத்தில் எழுந்திருந்து மனதில் பதற்றம் கொண்டு அலையவிடாமல் சூரிய சந்திர நாடிகள் சந்தித்து ஒன்று கூடும் இடமான சுழுமுனையில் மனதை வைத்து அண்ட உச்சி, ஜோதி தரிசனம் என்று அழைக்கப்படும் அண்ணாக்கு தனில் நின்று மனதின் இயக்கங்கள் அனைத்தையும் நிறுத்தினால் மனமானது சுழுமுனைக்குள் அடங்கும். எட்டு என்பதைக் குறிக்கக்கூடியதான சிவ நிலையான யோகாக்கினி நிலையில் நின்று கர்மேந்திரியங்கள் மற்றும் ஞானேந்திரியங்களின் பின்னணியில் இருந்து கொண்டு அவற்றின் செயல்களை ஒருங்கிணைத்து, நமக்கு உள்ளே இருந்து அறிவை உண்டாக்குகின்ற, கண்களுக்கு தெரியாத புலனையே உண்டாக்கும் மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரம் எனும் நான்கு வகையாக மாறுபட்டு செயல்படுகிற அந்தக்கரணம் சிதறாமல் அருள்வெளிப்படுத்த காரணமாக இருக்கும் இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூன்று நிலைகளில் நிற்க கூடிய சிவத்துடன் கூடி பதினாறு கலைகளையுடைய ஜோதிமயமானதும், ஆனந்தமயம் ஆனதும் ஆன சக்தி ரூபம் அடையலாம்.

விளக்க உரை

  • நான்கும் என்பதை வித்யா கலையான கர்மா, ஞானம், பக்தி, பிரபக்தி எனும் மகாவிஷ்ணு நிலையை என்று பொருள் கூறுபவர்களும் உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 9 (2019)


பாடல்

ஆச்சப்பா சிவயோகி ஆவதென்றால்
     அடங்கி நின்ற பஞ்சகர்த்தாள் அஞ்சு பேரை
பேச்சப்பா பேச்சறிந்து கண்டு கொண்டு
     பெருமையினால் சிவயோக முத்தனாச்சு
மூச்சப்பா தானறிந்து தன்னைப் பார்த்து
     முனையான சுழினையில் வாசி பூட்டி
காச்சப்பா அக்கினி கொண்டாறாதாரங்
     கசடகலக் காச்சிவிடு கனகமாமே

அகத்தியர் சௌமியசாகரம்

கருத்து –  சிவயோகி ஆவது எவ்வாறு  என்பதை குறிக்கும் பாடல்

பதவுரை

அக்னி எனப்படுவதான குண்டலினியில் தொடங்கி ஆறு உணர்வு நிலைகளைக் குறிப்பதானதும், தத்துவங்கள் எனப்படுவதும், மலங்கள் எனப்படுவதும் ஆன ஆறு ஆதாரங்களையும் குற்றம் இல்லாமல் கடக்க வேண்டும்;  பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன் மற்றும் சதாசிவன் ஆகிய பஞ்ச கர்த்தாக்களையும் அவர்களுக்கு உரித்தான  மூலமான நாதத்தை பிராணன் என்றும் வாசி என்றும் உரைக்கப்படுவதான மூச்சின் வழி அறிந்து அதன் மூலம் தன்னையும் அறிந்து அதை சுழிமுனை எனப்படும் ஆக்ஞையில் பூட்ட வேண்டும்; அவ்வாறு செய்யும் பொழுது உடல் கனகம் எனப்படுவதான பொன் போன்ற  மேனியாகும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 26 (2019)


பாடல்

நாட்டமென்ற பூரணத்தைக் காண வென்றால்
     நன்மையுள்ள சற்குருவாற் காண வேண்டும்
ஓட்டமென்ற வோட்டமெல்லாம் வோடா தேநீ
     ஒருமனதாய் சுழிமுனையிலு கந்து நில்லு
ஆட்டமென்ற திருநடன மங்கே யுண்டு
     ஐம்பத்தோ ரெழுத்துமுத லெல்லா முண்டு
பாட்டைமிக பதத்தினா லென்ன வுண்டு
     பத்திமுத்தி வைராக்கிய மாகப் பாரே

அகஸ்தியர் சௌமிய சாகரம்

கருத்து –  திட சித்தமுடன் வைராக்கியம் கொண்டு மனதை ஒரு நிலைப்படுத்தினால் திருநடனம் காணலாம் என்பதை கூறும் பாடல்

பதவுரை

சிறந்ததான நோக்கம் கொண்டு அதில் விருப்பம் கொண்டு பூரணமாகிய பரம்பொருளைக் காணவேண்டும் என்றால் நல்ல குருவின் துணை வேண்டும். அவ்வாறு இல்லாமல் எண்ணங்களை ஓட விடதே; அவ்வாறு அலைவதான மனதை விடுத்து ஒரு நிலைப்படுத்தி சுழிமுனையில் நிறுத்தி நீ நில்லு; அவ்வாறு நிற்பாயானால் சுழிமுனையில் திருநடனத்தை காணலாம்; மேலும் ஐம்பத்தொரு எழுத்துக்களையும் அதன் பொருளையும் பக்தியுடன் வைராக்கியமாக இருந்து பரம் பொருளைக் காணலாம்.

விளக்க உரை

  • ஐம்பத்தொரு எழுத்துக்கள் – சைவத்தின்படி சிதம்பர சக்கரம் எனப்படுவதும் திருவம்பலச்சக்கரத்தின் உயிர் நாடியாகவும் இந்த எழுத்துக்களே விளங்குகிறது எனவும் நமசிவாய எனும் ஐந்தெழுத்தாகவும், அதனுடன் சேர்ந்து அ உ ம என்று எட்டெழுத்தாகவும், அதுவே ஐம்பத்தோர் எண்களாய் விரிந்து இந்த உடலில் உள்ள உயிர் என்றும் சில இடங்களில் விளக்கப்பட்டு இருக்கின்றன.
  • யோக முறையில் (சாக்த வழிபாட்டின்படி எனவும் கொள்ளலாம்) பிரணாயாமத்தின் படி பத்து வகை வாயுக்களில் பிராணன் என்னும் மூச்சுக் காற்று வெளியே போகாதவாறு கட்டும் போது உடம்பிலுள்ள ஆறு ஆதாரங்களில் குண்டலி பொருந்தும் போது ஏற்படும் அதிர்வுகளை ஒலியாகக் கொண்டு, ஆறு ஆதாரங்களான மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகியவற்றில் முறையே 4 (சப்தங்கள் – வ ஸ ச ஷ), 6 (சப்தங்கள் – ஸ, ஹ, ம், ய, ர, ல) , 10 (சப்தங்கள் – டட, ணத, தத, தந, பப), 12(சப்தங்கள் – சங, கக, கக, டட, ஞஜ, ஜச), 16 (சப்தங்கள் -லுரூ, ருஊ, வஈ, இஆ, அஅ, அம்ஔ, ஓஐ, ஏலூ), 3(சப்தங்கள் – ஹ, ள, இவற்றுடம் சேர்ந்த ஓங்காரமாக இருக்கலாம்) என 51 ஒலி அதிர்வுகள் உண்டாகும் எனவும் குறிப்பிடப்படும்.  ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

விந்துவி லும்சுழி நாதம் எழுந்திடப்
பந்தத் தலைவிபதி னாறு கலையதாய்க்
கந்தர வாகரம் கால்உடம் பாயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றாயதே

         எனும் திருமந்திரப்பாடலும் ஒப்பு நோக்கி உணர்க

  •  நாட்டம் – விருப்பம், நோக்கம், நிலைநிறுத்துகை, ஆராய்ச்சி, சந்தேகம், கண், பார்வை, சஞ்சாரம், சோதிட நூல், வாள், நாட்டுத்தலைமை

சித்தர் பாடல் என்பதாலும், குரு முகமாக உபதேசம் கொண்டே உணரப்படவேண்டும் என்பதாலும் பதவுரையில் பிழைகள் இருக்கலாம். குறை எனில் மானிட பிறப்பு சார்ந்தது; நிறை எனில் குருவருள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 20 (2019)


பாடல்

ஒட்டாது சுழற்காற்றுத் தீயுங்கூடி
ஒளிகோடி மதிகோடி ரவிதான்கோடி
கொட்டேது யிடிமுழக்க மேகநாதங்
கூறுவலம் புரிநாத மணியினோசை
விட்டேது காதடைக்குங் கண்ணும்புக்கும்
மேலேற்றத் தெரியாது விழியுங்காணோம்
மட்டேது நடனவொலி சிலம்பினோசை
மாட்டியே வாங்குமப்போ மயக்கந்தானே

அகத்தியர் தீட்சாவிதி 200

கருத்து –  தச தீட்சையில் பெறப்படும் தச நாதங்களின் தன்மைகளில் சிலவற்றை கூறியது.

பதவுரை

எதிலும் ஒட்டாமல் செல்லும் சுழற்காற்றும் தீயும் கூடியது போல் கோடி சூரியனும், கோடி சந்திரனும் கூடியது போல் கோடி இடி முழக்கங்கள் சேர்ந்து ஒலிப்பது போன்று வலம்புரி சங்கில் இருந்து மணியின் ஓசை போன்று காதில் ஒலிக்கும்; இருகண்களுக்கும் இடையில் புருவ மத்தியில் வாசி வழி மேல் ஏற்றத் தெரியாமல் விழிகளை காணாமல் இருப்பது போன்று விழி மூடிய நிலையில் நடனத்தில் ஒலிக்கக்கூடியதும் மயக்கம் தருவதும் ஆன  சிலம்பின் ஓசை கேட்கும்.

விளக்க உரை

  • வாசி மேலேறும் போது, சாதகன் , சாதனத்தில் அடங்கி இருக்கும் போது சுழிமுனை நாடியில் மேலேற மேலேற பத்து வித நாதங்கள் சாதகனுக்கு கேட்கும்.

தச நாதம் – 1. மணியோசை 2. கடல் அலையோசை 3. யானை பிளிறும் ஓசை 4. புல்லாங்குழலோசை 5. இடியோசை 6. வண்டின் ரீங்கார ஓசை 7. தும்பியின் முரலோசை 8. சங்கொலி 9. பேரிகை ஓசை 10. யாழிசை

மணிகடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே

எனும் திருமந்திரப்பாடலுடன் ஒப்பு நோக்கி உணர்க,

இது சித்தர் பாடல் என்பதாலும், தச தீட்சை என்பது ஆன்மீகத்தில் மிக உயர்ந்த நிலை அடைந்தவர்களால் மட்டுமே பெறக்கூடிய அனுபவம் என்பதால் பொருள் உணர்ந்து எழுத முயற்சித்து இருக்கிறேன். குறை எனில் மானிடப்பிறப்பு சார்ந்தது. நிறை எனில் குருவருள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 9 (2019)


பாடல்

ஆச்சப்பா உட்கருவி முப்பத்தாறும்
   அப்பே சிவத்தினுட கூறேயாச்சு
நீச்சப்பா புறக்கருவி அறுவதுதான்
   நிசமான சக்தியுட கூறேயாச்சு
பேச்சப்பா உள்வெளியும் நன்றாய்ப் பார்த்து
   பெருமையுடன் ஆதார நிலையுங் கண்டு
காச்சப்பா கருவி கரணாதி என்று
   காடான தத்துவத்தைக் கண்டு தேரே

சௌமிய சாகரம் – அகத்தியர்

கருத்து – 96 தத்துவங்கள் சிவ சக்தி ரூபமாக இருப்பதை அகத்தியர் புலத்தியருக்குக் கூறும் பாடல்.

பதவுரை

உலகின் தோற்றம், பிரபஞ்சத்தின் அமைப்பு என்பவற்றை விளக்கும் மெய்ஞ்ஞானத்தின் எண்ணக் கருக்களில் சைவநெறியினை முன்னிறுத்தி கூறப்படும் தத்துவங்கள் உணர்த்துவதாகிய 96 தத்துவங்களில் அககருவிகளான 36 தத்துவங்கள் சிவனின் கூறுகள் ஆகும்; செயல்பட்டு அறிவை ஏற்படுத்தும் புறக்கருவிகளான 60  தத்துவங்கள் உண்மையில் செயல்படும்  சக்தியின் கூறுகள் ஆகும்;  ஆகாயம் என்பதும், பெருவெளி என்பதும் ஆன ஆதார நிலை ஆகிய இந்த சூட்சுமத்தை குருவின் மூலமாக நன்கு அறிந்தும் உணர்ந்தும் கருவிகளையும் கரணங்கள் எனப்படும் மனத்தில் மாறுபாடுகளையும் பக்குவப்படுமாறு செய்ய வேண்டும்;  உடல் கருவிகளும் உயிர் கருவிகளும் கொண்டு மேலே கூறப்பட்டவாறு பக்குவப்படுமாறு செய்தால் காடு போல் வழிதவறி உலகில் உழலச் செய்யும் தத்துவங்களை அறிந்து அதில் இருந்து தேறலாம்.

விளக்க உரை

  • சாங்கிய யோகத்தில் 24 தத்துவங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. ஆன்றோர் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 19 (2019)


பாடல்

அணைத்துமிகத்தான் உருக்கி எடுத்துப்பார்த்தால்
     ஆதிமிக சோதி என்ற தங்கத் தாய்தான்
நினைத்தபடி தான்குடுக்குஞ் சோதித்தாயை
     நித்தியமுஞ் சுத்தமதாய்ப் பூசைப்பண்ணி
மனதைமிகத் தானிருத்தி சோதிப்பார்த்தால்
     மகத்தான வாசிசிவ யோகந் தன்னால்
சினந்து வருங்காலனவன் ஓடிப் போவான்
     சிவசிவா குருபதத்தில் தெளிவாய் நில்லே

சௌமிய சாகரம் – அகத்தியர்

கருத்து – ஆக்ஞையில் சோதி வடிவான அன்னையைக் கண்டவர்களை காலன் அணுகான் என்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

பிராணன் தனது வாகனமாக மூச்சுடன் வா (உள்மூச்சு- காற்றுத் தத்துவம்) என்றும்  சி(வெளி மூச்சு – அக்னி தத்துவம்)  என்றும் கூடி குண்டலினி அக்னியை மேலே எழுப்புகிறது. அவ்வாறு எழுந்த அக்னி வ என்னும் காற்றுத் தத்துவத்தைக் குறிக்கும் லலாட சக்கரத்திலிருந்து அமிர்தத்துடன் விசுத்தி சக்கரத்தில் சேகரிக்கப்படுகிறது. (சில நூல்கள் அனாகத சக்கரமான இதயம் அதைக் குறிக்கின்றது என்றும் கூறுகின்றன). இவ்வாறு பெறப்படும் அமிர்தம் நமது விசுத்தியிலும் இதயத்திலும் நின்று நம்மை காலத்தைக் கடக்க வைக்கிறது. இவ்வாறு எழும் அக்கியானது குருபதம் எனப்படுவதாகிய ஆக்ஞையில் உணர்வு செல்லும்போது ஞானம் ஏற்படுகிறது. அதனால் ஒருவர் தெளிவுடன் குருபதம் எனப்படும் ஆக்ஞையில் நிற்க வேண்டும். தினமும், மனம் வாக்கு காயங்களால் தூயவராகவும் மனத்தை  வாசி எனும் சிவ யோகத்தால் நிறுத்தியவராகவும் இருப்பவர் மேலே குறிப்பிடப்பட்ட பாடல்களில் கூறிய பொருள்களை சேர்த்து உருக்கி எடுத்து பார்க்கும்போது ஆக்ஞையில்  அடியவர்கள் விரும்பதை அவர்கள் விரும்புகின்ற அளவில் கொடுப்பவளானவளும், தங்கமேனி கொண்ட  தாய் என அழைக்கப்படுபவளும் ஆன சக்தி தென்படுகிறாள். அவ்வாறு தேவியின் தரிசனத்தைப் பெற்றால் உயிர்களை கொல்ல சினம் கொண்டு வரும் காலன் ஓடிப்போவான்.

விளக்க உரை

  • வாசி/சிவயோகம் என்பது சித்தர்களின் பிராணாயாம முறை என்பதால் குரு முகமாக செய்முறைகளை அறிக.
  • ஆதிமிக சோதி – அறியமுடியா காலத்தால் இருந்து இருப்பவள்; அளவிட முடியா ஜோதி வடிவாக இருப்பவள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 9 (2019)


பாடல்

பணிந்ததொரு சீடனே பார்த்துப்பின்பு
   பாலகனேயென் மகனே யென்றுசொல்லி
கணிந்ததொரு கண்மலரி லொற்றிப்பின்பு
   கனியானநற்கனியே சுந்தரமேஐயா
அணிந்ததொரு ஐந்தெழுத்தா லெல்லாந்தீரும்
   ஆத்மாவி லைந்தெழுத்துங் கலந்துநிற்கும்
அணிந்ததொரு நீறுமடா ஐந்தெழுத்துமாச்சு
   அம்பலத்தி லாடினது மஞ்சுமாச்சே

அகத்தியர் – தற்க சாஸ்திரம்

கருத்துநீறு அணிந்த அட்சரத்தினாலும், பாசத்தை நீக்கக் கூடிய சொல்லாலும், பாசவினைக் கொடுமைகளையும் நீக்கும் சொல்லும், நல் வழி காட்டும்  சொல்லையும், எமனின் வருகையை அகற்றும் சொல்லினையும் சொல்லுமாறு புலத்தியர் கூறுமாறு கேட்டபோது அகத்தியர் உரைத்தது இப்பாடல்.

பதவுரை

தன்னைப் பணிந்த சீடனை பார்த்து பின்பு என்னைப்பணிந்த சீடனே, பாலகனே என் மகனே, கண்ணைப் போன்ற மலரானது கனிந்து நல்ல கனியைப் போன்ற சுந்தரமே என்று சொல்லி “சிவதீட்சையின் படி திருநீற்றினை அணிந்து அனுஷ்டானங்கள் கடைப்பிடித்து, பஞ்சாட்சரம் ஓதி சிவபூசை செய்பவர்களுக்கு எல்லாவிதமான வினைகளும் தீரும்; அவ்வாறு ஓதப்பட்ட மந்திரங்களானது ஆன்மாவில் அழுந்தி கலந்து நிற்கும்; அவ்வாறு அணியப்பட்ட திருநீறானது பஞ்ச பூதத்தின் வடிவமான ஐந்தெழுத்து ஆனது; அது அழகும், இளமையும், வலிமையும் நிறைந்த மேகங்கள் நிறைந்த அம்பலத்தில் ஆடும் ஐந்தெழுத்தானது” என்று அகத்தியர் உரைத்தார்.

விளக்க உரை

  • மஞ்சு – அழகு, ஆபரணம், வெண்மேகம், மேகம், பனி, மூடுபனி, யானை முதுகு, களஞ்சியம், கட்டில், குறுமாடியின் அடைப்பு, வீட்டு முகடு, இளமை, வலிமை, மயில்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 12 (2019)


பாடல்

பதியான பதியதுதான் பரசொரூபம்
பசுவான வாசியடா காலுமாச்சு
விதியான பாகமாடா வீடதாச்சு
வீடரிந்து கால் நிறுத்தி யோகஞ் செய்தால்
கெதியான முச்சுடரும் ஒன்றாய் நின்று
கேசரத்தில் ஆடுகின்ற கெதியைப் பார்த்தால்
மதியான மதிமயக்கந் தானே தீர்ந்து
மாசற்ற சோதியென வாழலாமே

சௌமிய சாகரம் – அகத்தியர்

கருத்துவாசி வழி வினைகளை அறுத்தல் பற்றி அகத்தியர் கூறும் பாடல்

பதவுரை

பர சொரூபமாக இருக்கும் பதியே பிரபஞ்ச பிராண சக்தி; உடலில் இருந்து பிராண சக்தியினை தருவதை வாசி என்றும், கால் என்றும் அழைக்க பெறும் காற்றுத் தத்துவமே பசு; ஜீவனுக்கு உடலானதும்,  பிரபஞ்ச பிராணனுக்கு வெட்ட வெளி ஆனதும் ஆனதும் பாசம் எனப்படுவதும்  ஆன வாசி எனும் வீட்டினுள் உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், வல்வினையாகிய துவந்தங்களும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும்  ஏனைய  சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளும், பிராப்தம் ஆகியதும் தீர்ப்பதற்கு அரியதும் ஆன நுகர்வினை ஆகிய  நிகழ்கால வினைகளும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகள் ஆகிய எதிர்வினைகளும் வாசியினை வாகனமாகக் கொண்டு விதி என்று உடலினுள் வருகிறது; இந்த உண்மையை அறிந்து கும்ப நிலையில் மூச்சுக் காற்றை நிறுத்தி இருக்க வேண்டும்; இவ்வாறு  பதி, பசு, பாசம் என்பதை அறிந்தும் உணர்ந்து வாசி யோகத்தைச் செய்தால் முச்சுடர்கள் எனப்படும் சூரியன், சந்திரன், அக்னி என்ற மூன்றும் ஒன்றாக கூடும் கேசரமாகிய உச்சியில் நின்று ஆடுவதான வெட்டவெளியை தரிசனம் காணலாம்; இந்த நிலையில் எண்ணங்கள் ஆகிய மதியில் இருக்கும் மயக்கங்கள் விலகி ஆதி நிலையாகிய மாசற்ற சோதியாக வாழலாம்.

விளக்க உரை

  • கேசரம் – க+ ஏ+சரம்;  க-வெளி, சரம்- எல்லை, இ- சங்கல்ப சக்தி
  • அசி – பசு பதியை அடையும் வழி

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 28 (2019)


பாடல்

சாரான அண்டமதில் நிறைந்த ஈசன்
   சகலகலை வல்லவனாய் இருந்த மூர்த்தி
பேரான ஐம்பூதம் ஆன மூர்த்தி
   பேருலக மேலுலகம் படைத்த னாதன்
கூரான சுடுகாடு குடியிருந்த மூர்த்தி
   கூறுகிற ஆசனத்தில் ஆன மூர்த்தி
ஆரான ஆறுமுகம் ஆன மூர்த்தி
   அம்பலத்தில் ஆடுகின்ற ஐயர் தானே

தர்க்க சாஸ்திரம் – அகத்தியர்

கருத்துஅம்பலத்தில் ஆடும் ஈசனே ஆறுமுக மூர்த்தி ஆன முருகப்பெருமான் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

அண்டங்களுக்கும் மையப் பொருளாகவும், கருப்பொருளாகவும் இருந்து அதில் நிறைந்து இருப்பவரும், அறுபத்து நான்கு கலைகள் அனைத்திலும் வல்லவனாக இருந்த மூர்த்தியாக இருப்பவரும், பெரியதானதும் ஐம்பூதங்கள் ஆனதும் ஆன நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு  மூர்த்தி ஆக இருப்பவரும், தேவர்களுக்கு உரித்தான பேருலகம் படைத்த நாதனாக இருப்பவரும், நுட்பமானதும், சிறப்பு உடையதும் ஆன சுடுகாட்டில் குடியிருந்த மூர்த்தியாக இருப்பவரும், அட்டாங்க யோகத்தில் மூன்றாம் படியானதும், யோக நிலையில் அமர்ந்திருப்பவரும், ஆறு ஆதாரங்களுக்கும் காரணமான ஆறுமுகமாகவும் ஆன மூர்த்தியாகவும் ஆகி பொன்னம்பலத்தில் ஆடுகின்றவராகவும் இருந்து வியக்கதக்கவராகவும் இருப்பவர் ஈசன்.

விளக்க உரை

  • ஈசனின் பல்வேறு மூர்த்தங்கள் சுவத்திகாசனம், கோமுகாசனம், பதுமாசனம், வீராசனம், கேசரியாசனம், பத்திராசனம், முத்தாசனம், மயூராசனம், சுகாசனம் போன்ற பல்வேறு ஆசனங்களில் இருக்கும் கோலங்களில் அமையப் பெறும். அவ்வாறு எல்லா இருக்கை நிலை கொண்டவர் எனவும் உரைக்கலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • ஐயர் – உயர்ந்தவர், வியக்கத்தக்கவர்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 16 (2019)

பாடல்

வழுத்துகிறேன் என்மகனே மாணா கேளு
   வல்லவர்க்குப் பிள்ளை என்றவகையும் சொல்வேன்
அழுத்துகிற ஆத்தாளை அவர்க்கே ஈந்தேன்
   அதனாலே அரனுக்குப் பிள்ளை என்றார்
தொழுத்துகிற அவரையுந்தா நின்று யானும்
   துய்யவெளி உபதேசம் துரந்து சொல்லி
வழுத்துகிறேன் அதனாலே ஆசானென்று
   அல்லோரும் எனைத் தானும் அருளினாரே

சுப்ரமணியர் ஞானம்

கருத்துசிவன் தனக்கு தந்தையாகவும், மகனாகவும் ஆன ரகசியத்தை முருகப் பெருமான் அகத்தியர் கேட்டதற்கு இணங்க அவருக்கு கூறியது.

பதவுரை

என் மகனாகவும், என் மாணவன் ஆனவனாகவும் ஆன உன்னை வாழ்த்துதல் செய்கின்றேன். வலிமை உள்ளவனும் சமர்த்தவனும் ஆகியவருக்கு எவ்வாறு மகன் ஆனேன் என்று உரைக்கிறேன். தனது ஆத்தாள் ஆகிய பார்வதி தேவியை அவள் விரும்பியவாறு ஈசனாருக்கு கொடுத்தேன். அதனாலே  ஈசனார் ஆகிய அவரை விட இளமை உடைய இளைஞன் ஆனேன். தனக்கு ஞான உபதேசம் செய்யும் படி விரும்பி நின்ற அவரை, தூயவெளி என்பதும், வெட்டவெளி என்பதும் ஆகாசம் என்பதும் ஆன இடம் காட்டி உபதேசம் காட்டி அருளியதால் அவருக்கு ஆசான் ஆனதால் அவருக்கு மெய்ஞானத் தந்தை ஆனேன் என்று அல்லாதவர்களும் கூறியது குறித்து தன்னைப்பற்றி அருளினார்.

விளக்க உரை

  • வழுத்துதல் – வாழ்த்துதல், துதித்தல், அபிமந்திரித்தல்
  • அழுத்துதல் – அழுந்தச்செய்தல், பதித்தல், உறுதியாக்குதல், வற்புறுத்துதல், அமிழ்த்துதல், எய்தல்.

சித்தர் பாடல் என்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதாலும் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 10 (2019)

பாடல்

பூசியே செவ்வரளிப் புஷ்பம்வாங்கிப்
பூரணியே யென்றுமன் துறுதியாகத்
தேசியே கேசரியே தாயேயென்று
தினந்தோறு மந்திரத்தை செபித்துமைந்தா
பேசியே திரியாமல் வாமம்வைத்துப்
பேரான மாமிசமும் வடைதேன்பாலு
வாசியே மனதடங்க அன்னம்வைத்து
மாங்கனியோ வற்கடலை பயிறும்வையே

யோகஞானம் – 500 (முருகப்பெருமான் அகத்தியருக்கு உபதேசம் செய்தது)

பதவுரை

முன்னர் கூறப்பட்டவாறு எந்திரங்களில் வாசனை திரவியங்களைப் பூசி, செவ்வரளி பூக்களை வாங்கி அதன் மேல் சாற்றி, வடை, தேன், பால், வாசி வழி மனம் அடங்க அன்னம், மாங்கனி, வறுகடலை மற்றும் பயிறு தானியங்கள் இவைகளை நைவேத்தியமாக வைத்து மனதில் உறுதிகொண்டு முழுமை அடந்தவளே, மிகவும் அழகு நிரம்பப் பெற்றவளே, சிங்கம் போன்றவளே,  தாயானவளே என்று தினம் தோறும் மந்திரத்தை செபித்து, பேசித் திரியாமல் மௌனமாக பூசிக்க வேண்டும்.

விளக்க உரை

  1. தேசி – பெரிய குதிரை,ஓர் இராகம், கூத்துவகை, அழகு, ஒளிரும் அழகுள்ளவள்
  2. வாமம்வைத்துப் பேரான மாமிசமும் –
  • மாமிசம் – மா-ம்-இ- சம்
  • மா – பெருமை மிக்க
  • ம்-இம் எனும் ஊமை மூலம்
  • இ-அருட்பிரணவம்
  • சம்- சுகம்
  • இடது பக்கமாக வாசி செல்லும்படி செய்து பெருமை மிக்கதும் சுகம் தருவதும் ஆன ‘இம்’ எனும் ஊமை மூலம் கொண்டு பூசிக்கவேண்டும். அம்மை ஈசனின் இடப்பாகத்தவள் என்பதை ‘வாமபாகம் வவ்வியதே’ எனும் வரிகள் மூலம் நினைவு கூறலாம். அன்னை மகார வடிவமாக இருப்பதை ‘மகாரப் பிரியை’ எனும் திருநாமம் கொண்டு அறியலாம். மேலும் ‘ம்’ என்பது ஜீவாத்மாவை குறிப்பதாகும்; ஆறாம் அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும். இவ்வாறு பூசிக்க வேண்டும்  எனவும் கொள்ளலாம்.

மா சக்தி நிறைந்தவளான அன்னை பூசை பற்றியதாலும், முருகனே அகத்தியருக்கு உபதேசிப்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதாலும் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 26 (2019)

பாடல்

நோக்குவது பூரணச்சந் திரனைநோக்கு
     நுண்மையுடன் பூரணமாய் நின்றாயானால்
மூக்குநுனி யந்தமதில் வாசிநின்று
     நலங்காமல் தீபமதில் நாடும்பாரு
வாக்குமன தொன்றாகி நின்றுபாரு
     மக்களே கன்பசுவு வாழ்வுண்டாகும்
தூக்குமென்ற கொடுமைதனை அகற்றிமைந்தா
     சுகமான இடமறிந்து சுகத்தில் நில்லே

அகத்தியர் சௌமிய சாகரம்

பதவுரை

மஞ்சள் நிறமானதும், பத்து இதழ் கொண்டதும் ஆன தாமரை  வடிவ மணிபூரக சக்கரத்தில், பிரகாசிக்கும் பூரண சந்திரனைப் போன்ற மகாலட்சுமியையும் விஷ்ணுவையும் மனக் கண்ணால் நோக்கி, நுட்பமாக பூரணமாக நின்றால் மூக்கு நுனியின் முடிவில் வாசி நிற்கும்; இந்த நிலையில் உடல் வருத்தம் தரா அளவில்  தொடர, மனம் வாக்கு காயம் ஒன்றுபட்டு,  தீப தரிசனம் காட்டி நிற்கும்; ஜீவனை அறியாமை என்ற இருளில் மூழ்கடித்து விடுவதாகிய தூக்கத்தைக் தொலைத்துவிட்டு இந்தப் பயிற்சியின்போது ஏற்படும் ஆனந்தத்தை தருவதான இடம் அறிந்து ஆனந்த நிலையில் இருக்க முனைய வேண்டும்.

விளக்க உரை

  • நலங்குதல் – நொந்துபோதல்; வருந்துதல்; நுடங்குதல்; கசங்குதல்
  • மனம், வாக்கு, காயம் ஆகியவை ஒன்றுபட்ட நிலையில்  ஆத்ம ஜோதியை நாடுவது எளியதும், சாத்தியமாகவும் ஆகிறது.

( மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும்குருவருளால் காட்டப் பெற்றாலும் வினையின் காரணமாக உணர்தலில்எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்நிறை எனில் குருவருள்)

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 12 (2018)

பாடல்

ஆமப்பா குருவுக்குத் திருநேத்திரங்கள்
அப்பனே காளகண்ட மான்மழுவினோடு
தாமப்பா புலித்தோலா லாடைசாத்தி
தந்தியுட தோல்போற்றிக் கண்டந்தன்னில்
வாமப்பா அரவமணிந்து விபூதி சாத்தி
மாதுசிவ காமியொரு பாகராய்
ஓமப்பா ரிஷபவா கனத்திலேறி
இச்சைபெறச் சொரூபசித்தி கொடுத்தாள்வாரே

அகத்தியர் பூஜா விதி – 200 – அகத்தியர்

பதவுரை

ஈசன் குருவாய் வரும் பொழுது, மூன்று கண்கள், கருமை நிறம் உடைய கண்டம் கொண்ட மான் மற்றும் மழுவினை கைகளில் ஏந்தி, புலித் தோல் ஆடை உடுத்தி, மெல்லியதான அரவமாகிய பாம்பினை கண்டத்தில் அணிந்து, விபூதி தரித்து சிவகாமி உடன் உமை ஒரு பாகனாய் ரிஷப வாகனத்தில் ஏறி விரும்பியதை அருள சொரூப காட்சி கொடுத்து அருள்வார்.

விளக்க உரை

  • ஈசன் குருவாய் வரும் திறம் சொல்லியது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 15 (2018)

பாடல்

மாடுதானாலும் ஒருபோக்குண்டு; மனிதருக்கோ
     அவ்வளவும் தெரியா தப்பா!
நாடுமெத்த நரகமென்பார்; சொர்க்க மென்பார்;
     நல்வினையோ தீவினையோ எண்ணமாட்டார்;
ஆடுகின்ற தேவதைகள் அப்பா! கேளு; அரிய தந்தை
     யினஞ்சேரு மென்றுந் தோணார்;
சாடுமெத்த பெண்களைத்தான் குறிப்பா யெண்ணித் தளமான
     தீயில்விழத் தயங்கினாரே

அகத்தியர்

பதவுரை

ஐந்தறிவு மட்டுமே பெற்றதாயினும் மாடு தன் கவனத்தை தன்னை செலுத்துபவன் மீதே கொண்டு அதே போக்கில் கவனச் சிதறல் இல்லாது பயணிக்கும்.; ஆனால் ஆறறிவு பெற்றிருந்தும் மனிதர்கள் அவ்வாறு அறிய இயலாதவர்கள்; முற்பிறவியில் செய்த நல்ல மற்றும் தீய செயல்களின் விளைவே இப்பிறவி சார்ந்த கர்மங்கள் என்பதை மறந்து நரகம் என்றும், சொர்கம் என்றும் வீண் பேச்சுப் பேசி வாழ்வைக் கழித்திடுவார்கள். கண்களைக் கவறும் நாட்டியம் போலான நடை உடை பாவனைகளைக் கொண்ட  பெண்களைத் தங்கள் சகோதரிகள் (தந்தை இனம்) என எண்ணவே தோணாது வாழ்வார். வெளியில் அழகாகவும் பொருள் விடமாகவும் பேசும் நங்கையர்களின் மேலேயே கவனம் செலுத்தி, சிற்றின்பங்களின் பால் கொண்ட விருப்பம் துறந்து உடலின் மேல்தளமான சகஸ்ராரத்தில் அணையா விளக்காய் கனன்று கொண்டிருக்கும் கனலில் சேர்வதற்குத் தயங்குகிறார்கள்.

விளக்க உரை

  • மனிதகுலத்தின் மேலான தாக்கத்தை வெளிப்படுத்தும் அகத்தியப் பெருமானின் பாடல்.
  • தந்தை இனம் மட்டுமே சகோதரத்துவதை ஏற்படுத்தும்; உலக உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகவே எண்ணுதல் தம்மை மேம்பட்ட நிலைக்கு அழைத்துச் செல்லும் முக்கிய இறை வழிகளில் ஒன்று. ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ எனும் வரிகளுடன் ‘அரிய தந்தை’ எனும் வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
  • தன்னில் இருந்து மனித குலம் மீது எவ்வகையிலும்  கடும் சொல் விழக் கூடாது என்பதற்காக ‘ஆடுகின்ற தேவதைகள்’ எனும் பதத்தை பயன்படுத்தி இருக்கிறார்.

மதனா அண்ணா அவர்களுக்கு நன்றி.

சித்தர் பாடல் என்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

 

சமூக ஊடகங்கள்