சித்த(ர்)த் துளிப்பு – 8-Jan-2021


பாடல்

ஆறாத புண்ணி லழுந்திக் கிடவாமற்
தேறாத சிந்தைதனைத் தேற்றுவது மெக்காலம்
தந்தைதாய் மக்கள் சகோதரரும் பொய்யெனவே
சிந்தைதனிற் கண்டு திருக்கறுப் தெக்காலம்

அருளிய சித்தர் : பத்ரகிரியார்

பதவுரை

உலக வாழ்வில் ஆறாத புண் போன்று அழுந்திக் கிடப்பது போல் அல்லாமல்,  நன்மையும் வளமையும் தராத சிந்தனைக் கொண்டு அதில் இருந்து விலகி தேற்றிவருவது எக்காலம்?

பெற்றோர்களாகிய தந்தை, தாயார், தான் பெற்ற மக்கள், தன்னுடன் உடன் பிறந்த சகோதரர்கள் ஆகிய உறவுகள் அனைத்தும் பொய்யான வாழ்வு எனக் கண்டு, அதனால் சிந்தையினில் தெளிவு பெற்று  இருப்பது எக்காலம்?

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 23 (2021)


பாடல்

பாரப்பா மவுனமுடன் நின்று வாழ
பரைஞான கேசரியாள் பாதம் போற்றி
சாரப்பா அவள்பதமே கெதியென்றெண்ணி
சங்கையுடன் மவுனரசந்தானே கொண்டால்
பேரப்பா பெற்றதொரு தவப்பேராலே
பேரண்டஞ் சுற்றிவர கெதியுண்டாகும்
ஆரப்பா அறிவார்கள் மவுனப் போக்கை
அறிந்துகொண்டு பூரணத்தை அடுத்து வாழே

அகத்தியர் சௌமிய சாகரம்

கருத்து – அமிர்த ரசத்தை தவத்தின் மூலம் பருகினால் ஒரு யோகி ஆழமான மவுன நிலையை அடைவார் என்பதைக் குறிக்கும் அகத்தியரின் பாடல்.

பதவுரை

மௌனத்துடன் மனம் ஒன்றி அது பற்றி வாழ மெய்யறிவாக இருக்கும் கேசரியாள் பாதம் போற்றி! அவள் பதத்தினை வாழ்விற்கான கதி என்று எண்ணி, சங்கு எனப்படும் தொண்டைக்குழிப் பகுதியின் வழியாக வரும் நாதம் என்று அழைக்கப்படும் பேச்சினை நிறுத்தி, மௌனம் கொண்டால் அதன் விளைவாக தவ ஆற்றல் கிட்டும்; அந்த தவ ஆற்றலின் காரணமாக பேரண்டம் எனக் கூறப்படும் 1008 அண்டங்களையும் கெவுன சித்தி எனப்படும் வானத்தில் சூட்சும நிலையில் பயணிக்கக்கூடியத் தகுதி பெற்று அண்டங்களைச் சுற்றி வரும் வாய்ப்பு உண்டாகும். மற்றவர்களால் அறிய இயலா இந்த மவுனத்தின் போக்கை அறிந்து கொண்டு மெய்யறிவு எனப்படும் பூரணத்தினைக் கண்டு வாழ்வாயாக. 

விளக்கஉரை

  • மௌன நிலையின் சிறப்புகள்
  • பேரண்டம் – 1008 அண்டங்கள்
  • பரஞானம் – இறையறிவு

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 7-Jan-2021


பாடல்

சாவல்நாலு குஞ்சதஞ்சு தாயதான வாறுபோல்
காயமான கூட்டிலே கலந்துசண்டை கொள்ளுதே
கூவமான கிழநாரிக் கூட்டிலே புகுந்தபின்
சாவல்நாலு குஞ்சதஞ்சும் தாம்இறந்து போனதே

அருளிய சித்தர் : சிவவாக்கியர்

பதவுரை

கூட்டில் அடைக்கப்பட்டதான நான்கு சேவல்களும், ஐந்து கோழிக் குஞ்சுகளும் ஒன்றுக் கொன்று சண்டையிட்டு அவைகள் மடிந்து விடும். அந்தக்கூட்டத்தில் ஒரு கிழ நரியானது புகுந்துவிட்டால் சண்டை செய்யாமல் அவைகள் இறந்துவிடும். அதுபோல் இந்த உடலில் எமன் புகுந்துவிட்டால் அந்தக்கரணங்கள் ஆகிய மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகிய நான்கும், அது பற்றி அதோடு இருப்பதான மெய், வாய்,கண், மூக்கு, செவி எனும் பஞ்ச இந்திரியங்கள் அனைத்தும் இறப்பினை எய்தி அனைத்தும் ஆன்மாவில் அடங்கிவிடும்.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 6-Jan-2021


பாடல்

ஓதும் சரியை கிரியை தவயோக ஞானம்
தெரிய அமைத்த சிவசித்தன்
துரியத்தில் தோத்தி அணுவாய்த் துகழாய்ச் சுடரொளியாய்த்
தேத்தியுரு வாகவந்து சென்மிப்போன்

அருளிய சித்தர் : திரிகோணச் சித்தர்

பதவுரை

சிவனைச் சகளத் திருமேனியராகக் கோயிலில் வைத்து வழிபடுதலாகிய சரியை, ஆகமங்களில் விதித்தவாறு புறத்தொழிலாலும் அகத்தொழிலாலும் வழிபடுதலாகிய கிரியை, தவம், யோகம், ஞானம் ஆகியவற்றை  தெரிந்து அதை அமைத்துத் தந்தவன் அந்த சித்தனாகிய சிவன்.

நான்காம் அவத்தையும், யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை ஆகிய துரிய நிலையில் அவனை போற்றினால் அணுஅளவு துகளாயும், சுடரொளியாகவும் உருவாகவும் வந்து ஜனனம் செய்யக்கூடியவன்.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 5-Jan-2021


பாடல்

ஓங்கார வட்டமதின் உட்பொருள்கண் ஓர்ந்ததற்பின்
நீங்காத ஆசை நிலைக்குமோ மாங்குயிலே
ஆன்மா பரத்தோடு அமருந் திருக்கூத்தை
நான்வாயி னாலே நவில்வனோ மாங்குயிலே

அருளிய சித்தர் : சதோக நாதர் என்ற யோகச் சித்தர்

பதவுரை

மாங்குயிலே! ஓங்கார வடிவத்தில் இருக்கும் வட்டத்தின் உட்பொருளை கண் கொண்டு பார்த்தப்பின் மாயை கொண்டு அழியும் பொருள்களின் மீது இருக்கும் நீங்காத ஆசை நிலைத்திருக்குமோ? உயிர்களில் உறையும் ஆன்மாவானது, நிலைத்ததான பரமான்மாவோடு கூடி அமர்ந்திருக்கும் திருக்கூத்தை என்னுடைய வாயினால் சொல்ல இயலுமோ?

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 4-Jan-2021


பாடல்

வஞ்சப் பிறப்பும் இறப்புக்கு மேகு முன்
வாசனை என்றே அறிந்துகொண்டு
சஞ்சல மற்றுப்பி ராணாயஞ் செய்திடில்
தற்பர மாவாய் ஆனந்தப் பெண்ணே

அருளிய சித்தர் : சங்கிலிச் சித்தர்

பதவுரை

ஆனந்த வடிவில் இருக்கும் மனோன்மணித்தாயே! தொந்த வினையின் காரணமான கொடுமை கொண்டதான பிறப்பும், இறப்பும் வாசனையின் காரணமாக நடக்கிறது என்பதை அறிந்து கொண்டு எவ்விதமான மன மாறுபாடும் இல்லாமல் பிராணாயாமம் செய்தால் எல்லாவற்றிலும் மேம்பட்டதான பரம்பொருள் ஆகலாம். (என்பதை உணர்த்துவாயாக)

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 3-Jan-2021


பாடல்

குருவாகித் தோத்திப் பழவடியார் சூழ்வினையை நீக்கியுரு
மாத்தித் தனது வசம் ஆக்கியே
சாத்தரிய மானிடச் சட்டை வடிவெடுத்த மாயோகி
யானிடப முந்தும் அருள் ஆனந்தன்

அருளிய சித்தர் : திரிகோணச் சித்தர்

பதவுரை

மாபெரும் தவயோகியாகவும், இடபத்தில் வருபவரும், அருளினை அருளக்கூடிய பேரானனந்த வடிவமாக இருப்பவனும் தன்னுடைய உருவத்தினை நீக்கி, மானிட வடிவத்தில் குருவடிவம் கொண்டு தோத்திரப் பாடல்களைப் பாடி தன்னைத் துதிப்பவராகிய பழைய அடியார்களை சூழ்ந்து வரும் வினைகளை நீக்கி தன் வசன் ஆக்குபவன்.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 2-Jan-2021


பாடல்

முத்தி பெறுவதற்கும் முதலாய் நினைத்தவர்க்கும்
நித்திரையும்விட்டு – ஞானம்மா
நினைவோடு இருக்கணுமே
நினைவைக் கனவாக நீயெண்ணியே பார்க்கில்
சினமாய்வரும் எமனும் – ஞானம்மா
தெண்டநிட்டுப் போவானே

அருளிய சித்தர் : புண்ணாக்குச் சித்தர்

பதவுரை

நிறைவினை அடையச் செய்வதாகிய முக்தியினை பெறுவதற்கும், முக்தியினை அளிக்க நினைத்த குருவிற்கும், இறையினையும் கனவு போன்ற இந்த வாழ்வினில் இருந்து விலகி, மெய்யறிவு பெற்று அதில் நிறைந்து இருக்க வேண்டும்.
அவ்வாறு குரு இடத்தில் இருந்து பெறப்பட்ட அனுபவங்களைக் கொண்டு இந்த உலக வாழ்வினை நித்தியம் என்று எண்ணாமல் அநித்தியம் என்று கொண்டு அதுபற்றி அறிந்து வாழ்வினை கொள்ளும் போது கோபம் கொண்டு உயிரினை பறிக்க வரும் எமனும் தன்னுடைய தண்டத்தினை விட்டுச் செல்வான்

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 1-Jan-2021


பாடல்

புல்ல ரிடத்திற்போய்ப் பொருள்தனக்குக் கையேந்திப்
பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டி
பல்லை மிகக்காட்டமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகமல் என் கண்ணம்மா
பொருளெனக்குத் தாராயோ ?

அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்

பதவுரை

கண்ணம்மா! வாழ்தலுக்காக பொருள் தேடி நிற்கும் வேடர்கள் இடத்தில் போய் அவர்களிடத்தில் பொருள் வேண்டுதலுக்காக கையேந்தி, அவர்களைப் புகழ்ந்து அவர்களுடன் சேர்ந்து வாழ்கிறேன். அவர்களிடத்தில் பொய்யாக புன்னகைக்காமல், அவர்களைப் பொய்யாக சேராமல், பொய்யான அந்த வேடம் புனைவர்கள் இடத்தில் செல்லாமல்  எனக்கு பொருள் தருவாயாக

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 31-Dec-2020


பாடல்

பட்டணத்தை யாளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள்
விட்டுப் பிரியாமல் வீரியங்கள் தாம்பேசி
விட்டுப் பிரிந்தவரே வேறு படுங்காலம்
பட்டணமும் தான்பறிபோய் என் கண்ணம்மா
படைமன்னர் மாண்டதென்ன?

அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்

பதவுரை

கண்ணம்மா! பட்டணம் எனப்படும் இந்த உடலினை ஆளக்கூடியவர்கள் பஞ்ச இந்திரியங்களாகிய பஞ்சவர்கள் எனப்படும் அரசர்கள்; இவர்கள் உடலினை விட்டு நீங்காமல் இருக்கும் வரையில் பெருமை கொண்டு ஆற்றலும் வல்லமையும் கொண்டு பேசி இருப்பார்கள்; அவ்வாறு பெருமை பேசும் போது ஆளுமை செய்யக்கூடிய பஞ்சவர்கள் வேற்றுமை கொண்டு உடலினை விட்டு பிரியும் போது பட்டணம் என்று சொல்லக்கூடிய இந்த உடலானது போய்விடும்; படைமன்னர் எனப்படும் பஞ்சவர்களும் மாண்டு விடுவார்கள்.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 28-Dec-2020


பாடல்

போற்றுஞ் சடங்கைநண் ணாதே – உன்னைப்
     புகழ்ந்து பலரிற் புகலவொண் ணாதே
சாற்றுமுன் வாழ்வையெண் ணாதே – பிறர்
    தாழும் படிக்குநீ தாழ்வைப்பண் ணாதே

அருளிய சித்தர் : கடுவெளிச் சித்தர்

பதவுரை

தாங்கள் தங்களுக்கு என்று விரும்பிச் செய்யும் சடங்குகளை குறைவாக மதிப்பிட்டு எள்ளி நகையாடாதே; உன்னை பலரும் புகழ்ந்தாலும் அந்த புகழ்ச்சியில் மகிழ்ந்து விடாதே; நிறைவான வாழ்வு வாழும் முன் வாழ்வை வாழ்ந்துவிட்டோம் என எண்ணாதே; மற்றவர்கள் தாழ்ந்த நிலையை அடையும் படி செய்யக்கூடிய செயலைச் செய்து நீ தாழ்ச்சியினை அடையாதே.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 27-Dec-2020


பாடல்

வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்
   சஞ்சலம் ஏதுக்கடி – குதம்பாய்
   சஞ்சலம் ஏதுக்கடி ?
ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு
   வாதாட்டம் ஏதுக்கடி – குதம்பாய்
   வாதாட்டம் ஏதுக்கடி ?

அருளிய சித்தர் : குதம்பைச் சித்தர்

பதவுரை

நகை அணிந்த காதுகளை உடைய பெண்ணே! பிறரை ஏமாற்றுவதான வஞ்சித்தலை விலக்கி தான் யார் எனக் கண்டவர்களுக்கு துன்பம் தரத்தக்கதான குழப்பங்கள் எப்படி வரும்? வினைகளை அறுத்து பிறவி அறுத்தலை செய்யக்கூடியதற்கு ஆதாரமாக இருக்கும் தலை முதல் திருவடிவரை கண்டவர்களுக்கு மற்றவர்களிடம் தர்க்கம் செய்தல் எதற்காக?

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 11 (2020)


பாடல்

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை – நினைப்பதெனக்
கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க் கில்லை விதி

நல்வழி – ஔவையார்

கருத்துவினைகளின் பயன்களை அனுபவியாமல் விலக்குவதற்கு வேதம் முதலாகிய அனைத்து நூல்களிலும் வழி முறைகள் சொல்லப்படவில்லை என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

நெஞ்சே! தொந்த வினைகளின் பயன்களை அனுபவியாமல் விலக்குவதற்கு வேதம் முதலாகிய அனைத்து நூல்களிலும் வழி முறைகள் சொல்லப்படவில்லை. நீ வினை வலிமையை மனதினால் ஆராய்ந்து அதை வெல்ல நினைத்து அதுபற்றி கணித்துக் கவலைப்படலாம் அன்றி நற்செயல்கள்  புரிந்து அதன் காரணமாக விண்ணுலகம் செல்பவர்களை அவர்களின் தலைவிதி தடுத்து நிறுத்தாது.

விளக்கஉரை

  • விண்ணுறுவார் – விண்ணுலகம் செல்பவர்கள்

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 26-Dec-2020


பாடல்

ஆதிபெருஞ் சோதிதனை அனுதினமும் நாடி
   ஐயர்பதந் தேடிக்கொண்டு அருள்பெறவே பாடிச்
சோதியெனும் மனோன்மணியாள் அருளதனைப் பெற்றுச்
   சுகருடைய பாதமதை மனந்தனிலே உற்று

அருளிய சித்தர் : வகுளிநாதரென்னும் மௌனச்சித்தர்

பதவுரை

அருளை பெறுவதற்காக குற்றமற்றவனாக இருக்கும் அவனது திருவடிகளை தேடிக்கொண்டு, காலத்தால் குறிப்பிட்டுக் கூற இயலாததாக இருப்பதும், அளவிட முடியதாகவும் இருக்கும் பெரியதான சோதியினை நித்தமும் விரும்பி அதை நாடி,  சோதி வடிவமாகவே இருக்கும் மனோன்மணியாள் அருளைப் பெற்று சுகத்தினை தருபவருமான பாதத்தினை மனத்தினாலே உற்று நோக்கு.

சுகர் –  சீவ முக்தி எனப்படும் துறவு நிலையை அடைந்தவரும், வியாச முனிவரின் புதல்வரான பரிட்சித்து மன்னன், தட்சகனால் கடிபட்டு இறக்கும் தறுவாயில் அவனுக்கு பாகவதத்தை உபதேசித்தார். எழுதிய சித்தர் பற்றி எக்குறிப்பும் காணப்படாமையால் சுகர் குருவாக இருந்திருக்கலாம்.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 24-Dec-2020


பாடல்

ஆன்மா பரத்தோடு அமருந் திருக்கூத்தை
நான்வாயி னாலே நவில்வனோ மாங்குயிலே
அஞ்செழுத்தைக் கண்டு அதன் உண்மை யும்தெரிந்து
வஞ்சகங்கள் அற்று மகிழ்ந்திருந்தேன் மாங்குயிலே

அருளிய சித்தர் : சதோக நாதர் என்ற யோகச் சித்தர் பாடல்

பதவுரை

உயிர்களிடத்தில் உறையும் ஆன்மாவானது பரம்பொருளான பரமான்மாவோடு அமர்ந்து திருக்கூத்து நிகழ்த்தும் விதத்தினை என்னுடைய சொற்கள் கொண்டு வாயினால் சொல்ல இயலுமோ? அண்டத்திலும் பிண்டத்திலும் இருந்தும், அதற்கு மூலமாகவும் இருக்கும் ஐந்தெழுத்தினைக் கண்டும் அதன் தன்மைகளை உணர்ந்தும் அதனால் வஞ்சங்களை விலக்கி மகிழ்வுற்று இருந்தேன்

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 23-Dec-2020


பாடல்

வேத விதிப்படி நில்லு – நல்லோர்

மேவும் வழியினை வேண்டியே செல்லு

சாத நிலைமையே சொல்லு – பொல்லாச்

சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு

அருளிய சித்தர் : கடுவெளிச் சித்தர்

பதவுரை

மறை ஆகிய வேதத்தில் உரைக்கப்பட்டவாறு அதன் வழியில் நிற்பாயாக; தர்மம் சார்ந்து அதன் வழியில் இருக்கும் நல்லவர்கள் செல்லும் வழியினை அவர்களிடத்தில் சொல்லக் கேட்டு அதன் வழியில் செல்வாயாக; வாக்கு, மனம்,காயம் ஆகிய்வற்றால் பிறருக்கு துன்பம் தரத்தக்க வார்த்தைகளைக் கூறாமல் அதுபற்றி நலம் தரத்தக்க வார்த்தைகளைக் கூறுவாயாக; பொல்லாததும் பேய்த் தன்மை உடையதுமான கோபத்தை வைராக்கியம் கொண்டு அதனை கொல்வாயாக.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 22-Dec-2020


பாடல்

முக்கோண மூசுழிதற் கோண மாகி
முதலான மூலமணி வாலை தன்னில்
நாற்கோண நாலுவரை நயந்து காக்க
நாயகியாள் பரஞ்சோதி நாட்ட முற்றுத்
தீக்கோணத் திக்குதிசை யிருந்த மாயம்
தெரிந்திடவே யுரைத்திட்டேன் விவர மாக
தாக்கோண விட்டகுறை வந்த தென்றால்
தனியிருந்து பார்த்தவனே சித்த னாமே

அருளிய சித்தர் : இராமதேவர்

பதவுரை

அனைத்திற்கும் மூலமாக இருக்கக்கூடியவளும், பரஞ்சோதி,மனோன்மணி என்றும் அழைக்கப்படுபவளும், திசை என்பதே இல்லாமல் இருக்கும் தீ போன்றவளாகி வாலை முக்கோண வடிவிலே இருக்கக்கூடியதான மூலாதாரமும், நாற்கோண வடிவில் இருக்கும் சுவாதிட்டானம் அனைத்தையும் விரும்பிக் காப்பவள்; இதை நீ அறிவதன் பொருட்டு விபரமாக உரைத்துவிட்டேன்; இவ்வாறு உரைத்ததை பல்வேறு கோணங்களில் தனியே இருந்து அவளைப் பார்த்தவன் சித்தனாவான்.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 21-Dec-2020


பாடல்

நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா!
கண்குளிரக் காண்பேனோ!

அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்

பதவுரை

கண்ணம்மா! நாகரிகமற்றவன், அயலான், காட்டான்  எனும் பொருளில் இயங்கிக் கொண்டிருக்கும் காற்றானது மூலாதாரத்தில் இருந்து இயங்கி யோக மார்க்கமாக ஆஞ்ஞை கடந்து சகஸ்ராரம் வரையில் கடைத்தெருவின் வழியே செல்வது போன்று  அனைத்து ஆதாரங்களையும் கடந்து செல்கின்றது. ஊர்சபைக்காரார் எனும் உடலோடு இருப்பவர்களும், அண்டத்தில் இருப்பவர்களாகிய எமனால் ஏவப்பட்டவர்களும் நமது யோக சித்தி நிறைவேறாமல் இருப்பதன் பொருட்டு இந்த முறைகள் குறித்து புன்னகை புரிந்து எள்ளி நகையாடுவார்கள்; அவ்வாறு நம்மை கட்டுப்படுத்துவர்களாகிய அந்த நாட்டார்கள் நம்மை  கண்டு எள்ளி நகையாடினாலும் காற்றினை மேலேற்றி உன்னுடைய திருநடனத்தினைக் காண்பேனோ!

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 20-Dec-2020


பாடல்

முற்றுமே அவனொழிந்து முன்பின் ஒன்றும் காண்கிலேன்
பற்றில்லாத ஒன்று தன்னை பற்றி நிற்க வல்லது
கற்றதாலே ஈசர் பாதங் காணலா யிருக்குமோ
பெற்ற பேரை அன்புடன் பிரியமாகக் கேளுமே

அருளிய சித்தர் : சிவவாக்கியர்

பதவுரை

அனைத்திலும் அவனே வியாபித்து இருப்பதால் அனைத்திலும்  அவனைத் தவிர முன்னும் பின்னும் வேறு ஒன்றையும் காண்கிலேன்; எதையும் பற்றி நில்லாமலும் அநாதியாகவும் இருக்கக்கூடிய பரம்பொருளாகி நம்மை பற்றி நிற்கும் வல்லமை உடையவனாகிய அவனை அடைவது பற்றி கற்ற பின்னும் அவனுடைய திருவடிகளைக் காணாமல் இருக்கலாமோ? அவனையே முழுமையாக நினைந்து அவனுடைய திருவடிகளை அடைந்த குருவிற்கு அன்பும் பக்தியும் கொண்டு அவரிடத்தில் கேட்டால் குரு அதுபற்றி உணர்த்துவார்கள்.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 19-Dec-2020


பாடல்

நல்ல வழிதனை நாடுஎந்த

நாளும் பரமனை நத்தியே தேடு

வல்லவர் கூட்டத்திற் கூடுஅந்த

வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு

அருளிய சித்தர் : கடுவெளிச் சித்தர்

பதவுரை

உடலில் வாழ்வியல் முறைக்கு தர்மத்தில் விதிக்கப்பட்டவாறு நல்லவழிகளை நாடி இருப்பாயாக; எக்காலத்திலும் பரமனை விருப்பத்துடன் நாடி இருப்பாயாக; நல்ல செயல்களை நிகழ்த்தவல்ல மெய்ஞானம் பெற்ற வல்லவர் கூட்டத்தில் சேர்ந்து இருப்பாயாக; கேட்பனவற்றை எல்லாம் அருள வல்லவனாக வள்ளலை அருளியதன் பொருட்டு நெஞ்சத்தில் வைத்துக் கொண்டாடுவாயாக.

சமூக ஊடகங்கள்