அமுதமொழி – விகாரி – சித்திரை – 4 (2019)


பாடல்

மூலம்

மருவினிய மலர்ப்பாதம் மனத்தில்வளர்ந் துள்ளுருகத்
தெருவுதொறும் மிகஅலறிச் சிவபெருமா னென்றேத்திப்
பருகியநின் பரங்கருணைத் தடங்கடலிற் படிவாமா
றருளெனக்கிங் கிடைமருதே இடங்கொண்ட அம்மானே

பதப்பிரிப்பு

மருவு இனிய மலர்ப் பாதம் மனத்தில் வளர்ந்து உள் உருகத்
தெருவுதொறும் மிக அலறிச் சிவபெருமான் என்று ஏத்திப்
பருகிய நின் பரம் கருணைத் தடம் கடலில் படிவு ஆம்
ஆறு அருள் எனக்கு இங்கு இடைமருதே இடம் கொண்ட அம்மானே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்துதிருவிடைமருதூர் பெருமானிடம் உன்னுடைய பரங்கருணை ஆகிய  பெரிய கடலில் படிந்து மூழ்கும் வண்ணம் அருள் செய்ய வேண்டுதல்

பதவுரை

திருவிடைமருதூரை ஊராகக் கொண்ட எம் தந்தையே! தழுவி  இரண்டற கலத்தலுக்கு உரித்தான இனிய மலர் போன்ற திருவடியை உள்ளத்தில் வைத்து அது மலருமாறு செய்து உள்ளம் உருகி, வீதிகள் தோறும் மிகவும் ஓலமிட்டு அலறி, சிவபெருமானே என்று புகழ்ந்தும் துதித்தும் நுகர்ந்த மேலான கருணையை  அறியாதவனாக இருப்பினும் உன் பரங்கருணை ஆகிய  பெரிய கடலில் படிந்து மூழ்கும் வண்ணம், அடியேனுக்கு இங்கு அருள் செய்வாயாக.

விளக்க உரை

 • மருவுதல் –  ஒன்றாதல்; இரண்டறக் கலத்தல். தழுவுதல்
 • வளர்தல் – விளங்குதல்; வளர்ந்து – வளர்தலால்
 • உள் உருக – உள்ளம் உருக
 • படிவு ஆமாறு – மூழ்குதல் உண்டாகும்படி

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 3 (2019)

பாடல்

பூசுவது வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ!
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசன்அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்துசிவனுடைய காருண்யமான கருணையை விளக்கும் பாடல்.

பதவுரை

தோழியே,  உங்கள் இறைவனான ஈசன் பூசிக்கொள்வது வெண்மையான திருநீறு; அணிகலனாக அணிவது சீறுகின்ற பாம்பு; அவனது திருவாயினால் சொல்லுவது விளங்காத சொற்கள் போலும் என ஒருத்தி இகழ்ச்சியாகக் கூறினாள்; பூசுகின்ற பொருளும், பேசுகின்ற சொற்களும், அணிகின்ற ஆபரணங்களும் கொண்ட என் ஈசனானவன் எல்லா உயிர்க்கும் இயல்பாகவே இறைவனாய் இருந்து அந்த உயிர்களுக்கு தக்க பலன் அளிப்பவனாய் இருக்கிறான் என்று மற்றொருத்தி விடை கூறினாள்.

விளக்க உரை

 • மறை – பொருள் விளங்காத சொல். `வேதம்` என்பது, உண்மைப் பொருள்.
 • ஈசன் தலைமை கொண்டது  அவனுக்குப் பிறர்தந்து வராமல் இயல்பாக அமைந்தது.
 • ‘சிவன் சாந்தாகப் பூசுவதும் சாம்பல்; அணியாக அணிவதும் பாம்பு; சொல்வதும் பொருள் விளங்காத சொல் என்றால், அவன் உயர்ந்தோனாதல் எவ்வாறு’  என்பது இதனுள் எழுப்பப்பட்ட தடை; ‘எல்லா உயிர்க்கும் அவனே தலைவன் என்பது யாவராலும் நன்கு அறியப்பட்டதால், அவன் பூசுவது முதலியன பற்றி ஐயுற வேண்டுவது ஏன்` என்பது  தடைக்கு விடை.
 • கேள்வியில் பூசுவதும், பூண்பதுவும், பேசுவது என்று வருகிறது. பதிலில் பூசுவதும், பேசுவதுவும், பூண்பதுவும் என்று வருகிறது. முன்னர் உரைத்த மறை போலும் என்பதைக் கொண்டு அவன் பேசுவது மறை என்றும் அவன் பூண்பது என்பது அந்த மறை சொற்களே என்பதையும், அவனே அந்த மறை வடிவமாக இருக்கிறான் என்றும் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் உணர்ந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 25 (2019)

பாடல்

நீதி யாவன யாவையும் நினைக்கிலேன்
   நினைப்பவ ரொடுங்கூடேன்
ஏத மேபிறந் திறந்துழல் வேன்றனை
   என்னடி யானென்று
பாதி மாதொடுங் கூடிய பரம்பரன்
   நிரந்தர மாய்நின்ற
ஆதி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
   அதிசயங் கண்டாமே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்துதுன்பம் மிகும்படியான வாழ்வில் இருந்து மீட்டு பழைய அடியார்களோடு தன்னையும் சேர்த்து அருளிய அதிசயத் திறம் பற்றி  உரைத்தப் பாடல்.

பதவுரை

உலகியலிலுக்கும், மெய் ஒழுக்கங்களுக்கும் பொதுவாய் இருக்கும் நீதிகளை இருப்பவனவற்றை நினையேன்; அவ்வாறு நினைப்பவர்களோடு இணக்கமாய் இருந்து ஒன்று சேரவும் மாட்டேன்; துன்பமே மிகும்படியாக ஆளாகிப் பிறந்து இறந்து நிலை கெடுமாறு சுற்றித் திரிவேன்; இப்படிப்பட்ட என்னையும்  என்றும் உள்ள பொருளாய் நிற்பவனும், அன்னையை தன் பாகத்தில் கொடுத்தவனும், கடவுளும் ஆன முதல்வன், தன்னுடைய அடியான் எனக் கொண்டு, ஒழுக்கத்தோடு சிறிதும் இயைபில்லாத என்னையும்,  ஒழுக்கம் மிக்கவர்களும், காலத்தினால் பழமையானவர்கள் ஆன தன் அடியவர் கூட்டத்தில் சேர்த்து ஆண்டு அருளித் தன் அடியாரோடு சேர்த்து வைத்த அதிசயத்தைக் கண்டோம்.

விளக்க உரை

 • உழலுதல் – அசைதல்; அலைதல்; சுழலுதல்; சுற்றித்திரிதல்; நிலைகெடுதல்.
 • பரம்பரன் – முழுமுதற்கடவுள், கடவுள்; அப்பாட்டன்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 26 (2019)

பாடல்

முழுமுத லேஐம் புலனுக்கும் மூவர்க் கும்என்த னக்கும்
வழிமுத லேநின் பழவடி யார்தி ரள்வான் குழுமிக்
கெழுமுத லேயருள் தந்திருக்க இரங்குங் கொல்லோ என்று
அழுமது வேயன்றி மற்றென் செய்கேன் பொன்னம் பலத்தரைசே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

முழு முதல் ஆனவனே, பொற்சபையில் ஆடுகின்ற நாதனாகவும், தலைவனாகவும் இருப்பவனே! அயன், அரி அரன் ஆகிய மூவர்க்கும், மெய் வாய் கண் மூக்கு மற்றும் செவி ஆகிய ஐம்புலன்களுக்கும், நீ வகுத்து நின்ற பாதையில் செல்லும் எனக்கும் முதலானவே, உன்னுடைய பழைய அடியார் திருக்கூட்டத்தோடு சேர்ந்து, பெருமை மிக்க சிவலோகத்தில் சேர்ந்திருத்தலைத் திருவருளால் கொடுத்தருள இரங்குமோ என்று அழுவது அல்லாமல் வேறு என்ன செய்ய வல்லேன்?

விளக்க உரை

 • ‘மூவர்க்கும் ஐம்புலனுக்கும் முதல்’ – மூவர் தொழில் செய்பவர்கள், ஐம்புலன்கள்  செயப்படுபொருள். ஆகவே அவை எல்லாவற்றிற்கும் ஆன பெரும் தலைவன்.
 • ‘மற்றென் செய்கேன்’ –  உன்னை வற்புறுத்துதற்கு என்ன உரிமை உடையேன்’ என்று பொருள் உரைப்பார்களும் உளர். ஆன்றோர் பொருள் உணர்ந்து உய்க.
 • ‘முழு முதல் ஆனவனே’ என்பதை சிவனின் எண் குணங்களோடு ஒப்பிட்டு உய்க.
 • கெழுமுதல் – கூடுதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 24 (2019)

பாடல்

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
     இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
     தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
     திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
     எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

இனிய ஓலியை தரும் வீணையை உடையவர்களும்,  யாழினை வாசிப்பவர்களும் ஒரு பக்கத்தில் இருந்து ஒலி எழுப்பவும், மற்றொரு பக்கத்தில் இருந்து மறையாகிய ரிக் முதலிய வேதங்களோடு, நினது புகழை பாடக்கூடியதான தோத்திர பாடல்களை துதித்தும் நெருக்கமாக தொடுக்கப்பட்ட மலர் மாலைகளை கைகளில் கொண்டவர்கள் மற்றொரு புறத்திலும், உன்னை ஆராதனை செய்பவர்கள், பேரன்பின் காரணமாக அழுகை கொண்டவர்கள், உள்ளம் அன்பில் நைந்து உருகுவதாலும், திருவருள் இன்பத்தை ஆராமையால் மிக்கத் துய்ப்பதனால் நிகழும் மெய்ப்பாடு ஆகிய துவள்கை கொண்டும் ஒரு பக்கத்திலும், தலையின் மீது இருகைகளையும் குவித்துக் கும்பிடுபவர் ஒரு பக்கத்திலும் இருக்கப் பெற்றவனே! இவர்களோடு சேர்த்து என்னையும் ஆண்டு இன்னருள் புரிய பள்ளி எழுந்தருளாயே.

விளக்க உரை

 • விதிக்கப்பட்டவாறு உன்னைத் தொழுகிறார்கள்; யாம் வணங்கும் மற்றும் தொழும் வகை அற்று இருக்கிறோம்; அவர்களுக்கு அருளுதலை செய்தல் போலவே  எனக்கும் அருளவேண்டும் என்பதை உணர்த்தவே ‘ என்னையும்’ எனும் சொற்றொடர்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 15 (2018)

 

பாடல்

ஆனைவெம் போரில் குறும் தூறு எனப்புலனால் அலைப்புண்
டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினையேன் மனத்துத்
தேனையும் பாலையும் கன்னலையும் அமுத்தையும் ஒத்து
ஊனையும் என்பினையும் உருக்காநின்ற ஒண்மையனே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

பிறவி பற்றி நின்று பெற்ற  வினைகளை உடையவனாகிய என் உள்ளத்தின் கண் தேன் போன்றும், பால் போன்றும், கருப்பஞ் சாறு போன்றும், அமுதம் போன்றும் இனித்து, என் ஊன் ஆகிய உடம்பையும், உடம்பில் இருக்கும் எலும்பையும் உருகச் செய்கின்ற ஒளியுடையவனான ஞான வடிவம் ஆனவனே! யானைகள் தம்முள் மாறுபட்டுச் செய்யும் கொடிய போர் சண்டையில் அகப்பட்ட சிறு புதர் போல ஐம்புலன்களால் அலைக்கப்பட்ட என்னை விட்டு விடுவாயோ? (விடாமல் காத்து அருள்வாயாக என்றவாறு)

விளக்க உரை

 • பித்தம் கொண்டவன் எச்சுவையும் அறிய மாட்டான். அதை மாற்றி இனிமை சுவை உடைய பொருள்களை காட்டி அருளினாய்; ஞான வடிவில் இருந்து என் ஊன் உருக்கினாய்; எலும்புகளை உருக்குமாறு செய்தாய்; அவ்வாறு பேரருள் செய்த நீ என் வினைபற்றி நிற்கும் ஐம்புலன்களில் இருந்தும் காக்க மாட்டாயா எனும் பொருள் பற்றியது.
 • ஐம்புலன்களை யானைகளுக்கு உவமையாக கூறியமையால் யானைகள் ஐந்து என்று கொள்க.
 • குறுந்தூறு – சிறுபுல்.
 • கன்னல் – கரும்பு.
 • ஒண்மையன் – ஞான வடிவினன்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 17 (2018)

பாடல்

முழுமுத லேஐம் புலனுக்கும்
*மூவர்க் கும்என்த னக்கும்
வழிமுத லேநின் பழவடி
யார்தி ரள்வான் குழுமிக்
கெழுமுத லேயருள் தந்திருக்க
இரங்குங் கொல்லோ என்று
அழுமது வேயன்றி மற்றென்
செய்கேன் பொன்னம் பலத்தரைசே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

பொற்சபையில் ஆடுகின்ற தலைவனே! முற்றும் உணர்தும் முடிவில் ஆற்றல் உடைமை கொண்டும் இருந்து எல்லாவற்றுக்கும் ஆதியான பொருளே! ஐம்புலன்களுக்கும், முத்தேவர் களுக்கும், எனக்கும் செல்லும் வழி காட்டும் முதலானவனே! உன்னுடைய பழைய அடியார்கள் கூட்டத்தோடு கூடி, பெருமை மிக்க சிவலோகத்தில் சேர்ந்து இருப்பதை திருவருளால் கொடுத்து அருள இரங்குமோ என்று அழுவது அல்லாமல் வேறு என்ன செய்ய வல்லேன்?

விளக்க உரை

 • *’ஆதியான் அரிஅயனென் றறிய வொண்ணா அமரர்தொழுங் கழலானை’ என்பது திருநாவுக்கரசர் தேவாரப் பாடல். அஃதாவது தன்னில் இருந்து பிரித்து பிரம்மா என்றும் திருமால் என்றும், உருத்திரன் என்றும் அறிய ஒண்ணாத ஆதியானவன்
 • ‘முழுமுதல்’ –  இரட்டுற மொழிதல் பெருந் தலைவன் 2. சிறந்த நிலைக்களம் (பரம ஆதாரம் – தாரகம்)
 • கெழுமுதல் – கூடுதல்.
 • ‘மற்றென் செய்கேன்’ – `உன்னை வற்புறுத்துதற்கு என்ன உரிமை உடையேன்` என்ற பொருள் பற்றியது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 9 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : திமிலை

ஒவியம் - tamillexion

 

பாடல்

கமலநான்முகனுங் கார்முகில் நிறத்துக்
     கண்ணனும் நண்ணுதற்கரிய
விமலனே எமக்கு வெளிப்படா யென்ன
     வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்
திமிலநான் மறைசேர் திருப்பெருந்துறையில்
     செழுமலர்க் குருந்தமே வியசீர்
அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால்
     அதெந்துவே என்றரு ளாயே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனாலும், கார்மேகம் போன்ற நிறத்தை உடைய திருமாலாலும் எளிதில் அடைவதற்கு இயலாத  அருமையான தூயவனே! ‘எமக்கு வெளிப்பட்டுத் தோன்ற வேண்டும்’ என்று வேண்ட பெரிய நெருப்பு உருவத்தில் இருந்து தோன்றிய எந்தையே! பஞ்சவாத்திய  கருவிகளுள் ஒன்றானதும், பேரொலியை உடையதுமான திமிலையின் ஓசையும், நான்கு வேதங்களும் சேர்ந்து ஒலிக்கும் பெருந்துறையில் செழுமையான மலர்களை உடைய குருந்தமர நிழலைப் பொருந்திய சிறப்புடைய குற்றம் இல்லாதவனே! அடியேனாகிய நான் அன்பொடு அழைத்தால் ‘அது என்ன’ என்று அருளொடு கேட்டு அருள் புரிவாயாக!

விளக்க உரை

 • வியன்தழல் – பெரிய நெருப்பு
 • திமிலை (வேறு பெயர் – பாணி )
 1. பஞ்சவாத்தியம் எனப்படும் கருவிகளுள் ஒன்றானதும், மணற்கடிகார வடிவில் இருக்கும் ஆன இசைக்கருவி
 2. மரத்தினால் செய்யப்பட்டு தோலினால் கட்டப்பட்ட தோற்கருவி
 3. பலா மரத்தில் செய்யப்பட்டு, கன்றின் தோலால் (குறிப்பாக 1 – 2 ஆண்டே ஆன கன்றின் தோல்) மூடப்பட்ட இருமுக முழவுக்கருவிகளுள் ஒன்று.

 

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 17 (2018)

பாடல்

கடலினுள் நாய்நக்கி யாங்குன் கருணைக் கடலின்உள்ளம்
விடலரி யேனை விடுதிகண் டாய்விட லில்லடியார்
உடல்இல மேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
மடலின்மட் டேமணி யேஅமு தேஎன் மதுவெள்ளமே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

உன் திருவடியை விடும் தன்மை இல்லாத அடியார்களது உடலாகிய வீட்டில் நிலைபெறுகின்ற திரு உத்தரகோசமங்கைக்குத் தலைவனே! மலரில் இருக்கும் பூந்தேனே! மாணிக்கமே! அமுதமே! என் மது வெள்ளமே! பூந்தேனே! மாணிக்கமே! அமுதமே! என் மதுப்பெருக்கே! உன் திருவடியை விடுதல் இல்லாத அடியாரது உடலாகிய வீட்டில் நிலைபெறுகின்ற, திரு உத்தரகோச மங்கைக்குத் தலைவனே!  கடல் நீரில் நாய் நக்கிப் பருகினது போல உனது கருணைக் கடலினுள்ளே, உள்ளத்தை அழுந்திச் செல்ல விடாத என்னை விட்டு விடுவாயோ?

விளக்க உரை

 • இறைவனது கருணை ஏகவுருவாய் எங்கும் பரந்து கிடப்பினும் உயிரினது தன்மைக்கேற்பவே அதைப் பெற முடியும்‘ என்பது பற்றியப் பாடல்
 • ‘விடலரியேனை’  –  முழுதும் மூழ்கும் படி விட்டுப் பருகாது, சிறிதே சுவைத்து ஒழிவேனை என்னும் உவமைக்கேற்ப உரைத்தல்
 • மடலின் மட்டு – பூவிதழில் துளிக்கின்ற தேன் (மிகச் சிறிய அளவு)
 • மதுவெள்ளம்- தேன் வெள்ளம்(பெருகிய மிக அதிக அளவு)
 • இறைவனுக்கு அடியாரது உடல் ஆலயமாதலின், ‘அடியார் உடல் இலமே மன்னும்’ என்ற  அடிகள் கொண்டு அறியலாம்; ‘ஊனுடம்பு ஆலயம்’ என்ற திருமூலர் வாக்கையும் ஒப்பு நோக்கிக் காண்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 11 (2018)

பாடல்

கேட்டாரும் அறியாதான் கேடொன் றில்லான்
     கிளையிலான் கேளாதே எல்லாங் கேட்டான்
நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே
     நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே
காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங்
     கேளா தனவெல்லாங் கேட்பித் தென்னை
மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான்
     எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே. 

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

எக்காலத்திலும் அறிவினால் தன்னை உணர்ந்து உரைப்பவர்களாகவும், அறியாதவர்களாள் உரைக்கப்படும் பொருள் அற்ற வார்த்தைகளை ஏற்காமலும் இருக்கும் ‘நாடவர்’ எனவும் ‘நாட்டார்’ எனவும் அழைக்கப்படுபவர்களாலும் உரைக்கப்படும் சொற்களைக் கேட்டு அறியாதவனும்,  தனக்கு எந்த வகையிலும் எந்த ஒரு கேடும் இல்லாதவனும், தனக்கென எந்த வகையிலும் உறவு இல்லாதவனும், கேட்டல் என்னும் தொழில் இல்லாமல் இயல்பாகவே எல்லாவற்றையும் கேட்பவனும் ஆகிய இறைவன், என்னுடைய சிறுமையை நோக்காது நாய்க்கு ஆசனம் அளித்து இருக்கையில் அமரச்செய்தது  போல தன் அருகில் இருக்கச் செய்து, காட்டுவற்கு அரிதான தன் உண்மை நிலையைக் காட்டி, நான் எந்த காலத்திலும் கேட்காத சிவாகமங்களின் பொருள்களைக் கேட்பிக்கச் செய்து, மீண்டும் நான் பிறவாமல் என்னைத் தடுத்து ஆட்கொண்டான். இது எம்பெருமான் செய்த ஒரு வித்தை ஆகும்.

விளக்க உரை

 • தவிசு – இருக்கை; ஆசனம்
 • ‘ஆரும் கேட்டு அறியாதான்` – உலகல் உள்ளவர்களால் கேட்டறியப் படாமை
 • கேளாதே எல்லாம் கேட்டான் – பிறர் அறிவிக்க பின் அறிவது அல்லாமல், தானே எல்லாவற்றையும் நன்கு உணர்ந்தவன்.
 • ‘நாயினுக்குத் தவிசிட்டு’ – உயர்ந்தவர்களுக்கு செய்யத் தக்கதை இழந்தோர்க்கு செய்ததை அறிவித்தல் பொருட்டு
 • காண இயலாப் பொருளைக் காணச் செய்தல், கேட்க இயலாப் பொருளை கேட்கச் செய்தல், வினைகளில் இந்து காத்து மீண்டும் பிறவாமல் செய்தல் ஆகியவை உயர்ந்தோர்க்கே செய்யக் கூடியவை;  இவற்றையும் எனக்குச் செய்தான் என்பது கருத்து.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 6 (2018)

பாடல்

வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும்
   கானின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய
தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்
   டூன்வந் துரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து
தேன்வந் தமுதின் தெளிவின் ஒளிவந்த
   வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

விண்ணுலகில் தோன்றிய தேவர்களும், திருமால், பிரமன், இந்திரன் முதலானவர்களும், காட்டில் சென்று ஊண் உறக்கமின்றி, தம்மை மறந்து கடும் தவம் செய்தும் காண்பதற்கு அரியவனாகிய சிவபெருமான்  தானே வலிய வந்து நாய் போன்றவனாகிய அடியேனைத் தாய்போலக் கருணை செய்து, உயிரினை உருகச் செய்து, என் ரோமங்கள் விதிர்விதிர்க்குமாறு செய்து, இனிமையான அமுதம் போல், தெளிவான ஒளிவடிவமான அவன் பெருமை பொருந்திய திருவடியைப் புகழ்ந்து அம்மானைப் பாட்டாக  பாடுவோமாக.

விளக்க உரை

 • ‘தேவர்களும் நிலவுலகத்திற்கு வந்து தவம் புரிகின்றனர்` எனும் பொருளில். இந்திரன் சீகாழிப்பதியில் தங்கித் தவம் புரிந்தது – கந்த புராணம் உரைத்தது
 • ‘கானின்று வற்றியும்’ – ஊண் உறக்கமின்றித் தவம் புரிதல்
 • ‘புற்றெழுந்தும்’ – தம்மை மறந்து தவம் புரிதல்
 • உயிர்ப்பு – (அன்பினால்)  உயிர்த்தல்; மூச்செறிதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 27 (2018)

 

பாடல்

பண்ணார்ந்த மொழிமங்கை பங்காநின் ஆளானார்க்
குண்ணார்ந்த ஆரமுதே உடையானே அடியேனை
மண்ணார்ந்த பிறப்பறுத்திட் டாள்வாய்நீ வாஎன்னக்
கண்ணார உய்ந்தவா றன்றேஉன் கழல்கண்டே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

இசை போன்று இனிய சொல்லை உடைய உமையினை ஒரு பாகத்தில் உடையவனே! உனக்கு என்று உரிமை ஆனவர்களுக்கு, உண்ணுதலுக்கு ஏற்ற அருமையான அமுதமே! உடையவனே! அடியேனை, மண் உலகில் பொருந்திய எல்லா பிறப்புகளையும் அறுத்து, ஆட்கொள்ளுதல் பொருட்டு ‘நீ வருக’ என்று அழைத்ததனால் உன் திருவடிகளைக் கண் கொண்டு அடியேன் உய்ந்த முறை ஏற்பட்டது.

விளக்க உரை

 • மண்ணார்ந்த பிறப்பறுத்திட்டாள்வாய்நீ – எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதங்கள் – 1. தேவர் – 11,00,000 யோனி பேதம், 2. மனிதர்- 9,00,000 யோனி பேதம், 3. நாற்கால் விலங்கு – 10,00,000 யோனி பேதம்,
 • 4. பறவை – 10,00,000 யோனி பேதம், 5. ஊர்வன – 15,00,000 யோனி பேதம், 6. நீர்வாழ்வன – 10,00,000 யோனி பேதம். 7. தாவரம் – 19,00,000 யோனி பேதம் ஆக மொத்தம் 84,00,000 யோனி பேதம். .அத்தனை யோனி பேதங்களும் மனித பிறப்பினை அடிப்படையாக கொண்டவை. ஒலி, தொடு உணர்வு, உருவம், சுவை,  வாசனை ஆகியவை கொண்டு மண்ணின் தத்துவமாக கருத்தில் கொண்டு அது விரிந்து தொண்ணுற்று ஆறு தத்துவங்களையும் கடந்து நின்று வினை நீக்கி அருளுபவன் என்றும் கொள்ளலாம்.
 • உடையவன் – உரியவன், பொருளையுடையவன், கடவுள், செல்வன், தலைவன்

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவொற்றியூர்

தல வரலாறு(சுருக்கம்)/சிறப்புகள்
 
·   சிவன் சுயம்பு மூர்த்தி – தீண்டாத் திருமேனி
·   சிவன் வடிவம் – பாணலிங்க வடிவம்
·   மூலவர் – படம்பக்க நாதர் – கவச திருமேனி – கார்த்திகை பௌர்ணமி ஒட்டிய மூன்று நாட்கள் மட்டும் கவசம் விலக்கப்படும்.
·   அம்பிகை ஞான சக்தி வடிவம்
·   மகிஷாசூரன் அற்ற துர்க்கை
·   அம்மனின் 51வது சக்தி பீடங்களில் இஷூ பீடம்
·   தேவாரப் பாடல் வரிசைகளில் 253வது தலம்
·   சப்த விடத் தலங்களில் ஒன்று
·   கஜ பிருஷ்ட விமானம்
·   பைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சி
·   சிவனில் வடிவங்களில் ஒன்றான ஏகபாத மூர்த்தி – வெளிப் பிரகாரத்தில்
·   சுந்தரர் சங்கிலி நாச்சியாரை திருமணம் செய்து கொண்ட இடம்
·   ஏலேலே சிங்கர் மன்னருக்கு தருவதாக வைத்திருந்த மாணிக்கங்களை காசி சிவ பக்தர்களிக்கு தந்ததால் ‘மாணிக்க தியாகர்’
·   உபமன்யு முனிவரின் ஆலோசனைப்படி வாசுகி முக்தி வேண்டி வழிபட்டு முக்தி அடைந்த இடம் – படம்பக்க  நாதர்
·   கண்ணகியின் உக்கிரம் குறைக்க சிவனும் பார்வதியும் தாயம் ஆடி, கட்டைகளை கிணற்றில் இட்டு கண்ணகியை கிணற்றினுள் இட்டு கோபம் குறைத்த இடம்
·   63 நாயன் மார்களில் ஒருவரான கலிய நாயனார் வறுமையின் காரணமாக தனது கழுத்தை அறுத்து ரத்தத்தை எடுத்து விளக்கு எரித்து முக்தி அடைந்த தலம்.(குருபூசை நாள்: ஆடி – கேட்டை)
·   63 நாயன் மார்களில் ஒருவரான ஐயடிகள் காடவர்கோன் நாயனார் பாடிய தலம்
·   நுனிக் கரும்பை இனிக்க வைத்து பட்டினத்து அடிகளுக்கு முக்தி அளித்த தலம்.
·   நந்திக்காக சிவன் பத்ம தாண்டவம் ஆடிய இடம்
·   வட்டப்பாறை அம்மனின் உக்கிரம் குறைய ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம் ஸ்தாபிதம் செய்த இடம்
 
தலம்
திருவொற்றியூர்
பிற பெயர்கள்
முக்தி தலம், ஆதிபுரி, பூங்கோயில், பூவுலகச் சிவலோகம்
இறைவன்
படம்பக்கநாதர், ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர்,
இறைவி
வடிவுடை அம்மன், திரிபுரசுந்தரி
தல விருட்சம்
மகிழம், அத்தி
தீர்த்தம்
பிரம்ம, நந்தி தீர்த்தம்
சிறப்புகள்
 சித்திரையில் வட்டப்பாறையம்மன் உற்சவம், வைகாசியில் வசந்தோற்ஸவம், சிவராத்திரி, திருக்கார்த்திகை, மாசி மகம்.
மாவட்டம்
சென்னை
திறந்திருக்கும் நேரம் / முகவரி
அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில்
திருவொற்றியூர்
சென்னை
PIN – 600019
+91-44 – 2573 3703.  +91-94444-79057
வெள்ளிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை
பெளர்ணமி –  காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
மற்ற நாட்கள்காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை
மாலை – 4 மணி முதல் இரவு 8 30 மணி வரை
பாடியவர்கள்
சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்,
நிர்வாகம்
இந்து அறநிலையத்துறை
இதர குறிப்புகள்
ஐயடிகள் காடவர்கோன், முசுகுந்தன்,, பிரமன், திருமால், நந்திதேவர், சந்திரன், வால்மீகி முனிவர், 27 நட்சத்திரங்கள் ஆகியவர்கள் வழிபட்ட தலம்.
காளமேகப்புலவர், இரட்டைப்புலவர்கள், தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், மறைமலையடிகளார் ஆகியவர்கள் பாடி உள்ளனர்
வடிவுடைஅம்மன்
 
பாடியவர்                      திருநாவுக்கரசர்     
திருமுறை                     4ம் திருமுறை 
பதிக எண்                     45
திருமுறை எண்                7
பாடல்
 
பிணமுடை யுடலுக் காகப் பித்தராய்த் திரிந்து நீங்கள்
புணர்வெனும் போகம் வேண்டா போக்கலாம் பொய்யை நீங்க
நிணமுடை நெஞ்சி னுள்ளா னினைக்குமா நினைக்கின் றாருக்கு
உணர்வினோ டிருப்பர் போலு மொற்றியூ ருடைய கோவே
கருத்து
மரணம் உடையதும், விரும்பத் தக்காத நாற்றம் உடைய உடலை பாதுகாக்க பைத்தியம் போல் திரிந்து மறுமையைத் தரும் சிற்றின்பத்தை விலக்குக. நீக்குவதற்கு உரித்தான எளிதான வழி நெஞ்சில் உறையும் இறைவனையும் நினைத்தல். அவ்வாறு செய்தால் ஒற்றிவூர் உறையும் அரசனைப் போன்ற ஒற்றியூர்ப் பெருமான் அக்குறைகளை நீக்குவான்.
 
பாடியவர்                  சுந்தரர்         
திருமுறை                7ம் திருமுறை
பதிக எண்                 91          
திருமுறை எண்           9   
பாடல்
 
பற்றி வரையை யெடுத்த அரக்கன்
இற்று முரிய விரலால் அடர்த்தார்
எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம்
ஒற்றுந் திரைவாய் ஒற்றி யூரே.
பொருள்
மலையை அசைத்த அரக்கனாகிய இராவணின் உறுப்புகள் ஏதும் இல்லாதவாறு செய்தவர் சிவன். அவர் இதனை அவர் தனது பெரு விரலால் செய்தார். அவர் கடல் சூழ்ந்த இந்த திருவொற்றியூரில் இருந்து வினைகளை நீக்கி அடியவர்களுக்கு அருள் செய்கிறார்.
 

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274

விக்னங்களை தீர்க்கும், மங்களைத் தரும் விநாயகர் அருள் புரியட்டும். தமிழ் தலைவனும், சித்தர்களின் நாதனும் ஆறுமுகங்களையும் உடைய செந்தில் நாதன் அருள் புரியட்டும்.
முழு முதற் கடவுளும், சைவத் தலைவனும், பிறவிப் பிணிகளை நீக்குபவனும், ஐந்தொழிலுக்கு உரியவனும், பிறப்பிலியும், ஆதி நாயகனுமான சிவனும் வாம பாகத்தில் என்றும் நிறைந்திருக்கும் அம்பாளின் துணை கொண்டு இக்கட்டுரைகளை எழுதத் துவங்குகிறேன்
 
எல்லா பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் என்றும் என்னை வழிநடத்தும் தாயைப் போல் எனக் காத்து எனை வழி நடத்தும் என் குருநாதர் எனக்கு அருள் புரியட்டும்.
இது சமயக் குறவர்கள் நால்வரால் பாடல் பெற்ற  தலங்கள் பற்றிய செய்திகள். இது குறித்து சைவத் திருத்தலங்கள் 274 என்ற தலைப்பில் எழுத உள்ளேன். சிறு குறிப்புகளுடன் தலத்திற்கு 2 பாடல் வீதம் எழுத உள்ளேன்.
 
தலம்
பிற பெயர்கள்
இறைவன்
இறைவி
தல விருட்சம்
தீர்த்தம்
விழாக்கள்
மாவட்டம்
திறந்திருக்கும் நேரம் /முகவரி
நிர்வாகம்
பாடியவர்கள்
இருப்பிடம்   
இதர குறிப்புகள்
பாடல்
விளக்கம்
குறைகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள்.
காவிரிக்கு வடகரையிலுள்ள திருத்தலங்கள்    – 63
காவிரிக்கு தென்கரையிலுள்ள திருத்தலங்கள் – 127
ஈழநாட்டிலுள்ள திருத்தலங்கள்              – 2
பாண்டிநாட்டிலுள்ள திருத்தலங்கள்           – 14
மலைநாட்டிலுள்ள திருத்தலங்கள்                          – 1
கொங்கு நாட்டிலுள்ள திருத்தலங்கள்                     – 7
நடுநாட்டிலுள்ள திருத்தலங்கள்                                – 22
தொண்டை நாட்டிலுள்ள திருத்தலங்கள்               – 32
துளுவ நாட்டிலுள்ள திருத்தலங்கள்                        – 1
வட நாட்டிலுள்ள திருத்தலங்கள்                              – 5
ஆக மொத்தம்                             – 274
கோவில் என்றதும் என் நினைவில் என்றைக்கும் வரும் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரன் உறைவிடமாகிய மயிலையில் பயணம் தொடங்குகிறது.

சமூக ஊடகங்கள்