தருமை ஆதீன முதல் குருமூர்த்திகளாகிய ஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் – சொக்கநாத வெண்பா
கருத்து – சொக்க நாதருக்கு பணி செய்யவும், நினைவு அகலாமல் இருக்கவும் அவரிடம் விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
மனக்கவலையையினை நீக்குவதான தென்மதுரையில் வீற்றிருந்து அருளுபவனும், இயல்பாகவே தூய்மை உடையவனும் ஆனவனே, படைக்கப்படும் உலகம் அனைத்தையும் தோற்றுவிக்கும் சொக்க நாதனே! உனக்கு பணி செய்யவும், உன்னுடைய நினைவு அகலாமல் எப்பொழுதும் உன்னுடைய நினைவு கொண்டிருக்கும் வரத்தினை நீ அருள்வாயாக.
கருத்து – இறைவனின் மகிமையை அறிந்தவரின் அக அனுபவங்களை விளக்கும் பாடல்
பதவுரை
பிள்ளை பெறுவது வலி தரும் காரியம் என்பது பெற்றவளுக்கு மட்டுமே தெரியும், பிள்ளை பெறாதவளுக்கு அந்த பிரசவ வலி எப்படித் தெரியும்; அது போல இறைவனின் பெருமையை உணர்ந்து பேரானந்தம் கண்டவர்களின் கண்களில் இருந்து எவ்வித முனைப்பும் இன்றி தாரை தாரையாய்க் கண்ணீர் பெருக்கும்; இறைவனின் பெருமையை உணராதவர் நெஞ்சம் கல்லினை ஒத்து இருக்கும்
கருத்து – செயற்கரிய செயல்களை செய்து முடித்தவராகிய சிவபெருமானை கபாலத்தில் யாசிப்பது ஏன் என வினவும் பாடல்
பதவுரை
கடல் சூழ்ந்த திருவெண்காட்டை தலமாக உடைய இறைவரே! படம் எடுத்து ஆடும் பாம்பைத் தலையிலே வைத்தும், பாய்கின்ற புலியினது தோலை இடுப்பில் கட்டியும், கோபம் கொண்டு பகைவரது திரிபுரங்களை எரியுமாறு செய்து அதை அழித்தும், அதன் பின் அந்த மூவர்களுக்கும் அருள் செய்தும், கூற்றுவனை கொன்று, பின்னர் உயிர்ப்பித்து அவனை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டும் ஆன பெருமைகளை உடைய நீர் பிரம்மனது தலை ஓட்டினைக் கையில் ஏந்திக்கொண்டு, பேரழகுடைய உருவத்துடன் மனைகள் தோறும் பிச்சைக்குத் திரிவது என்?
விளக்கஉரை
மூவர்க் கருள்பு ரிந்தீர் – திரிபுரத்து ஓர் மூவர் ஆகிய சுதன்மன், சுசீலன், சுமாலி ஆகிய திரிபுரத்து அசுரர்கள், சிவபத்தியைக் கைவிட்ட பொழுதும், அதில் இருந்து மாறாமல் இருந்ததால் அவர்களை உய்விப்பதன் பொருட்டு ஒருவனைக் குடமுழா முழக்குபவனாகவும் , இருவரை வாயில் காவலராகவும் கொண்ட அருள் செய்த முறையை ஒப்பு நோக்க தக்கது.
மடங்கல் – கூற்றுவன் – எல்லா உயிர்களும் மடங்குதற்கு இடமானவன்
பழிப்பது போல் புகழ்வதால் இது வஞ்சப்புகழ்ச்சி ஆகும்
தவ நிலையை அறிந்தோர்க்கு ஞானந் தன்னால் தெரியும் எனவேதான் நவசித் தாதிகள் கண்டு தெளிந்ததை நன்றாய் அறிவாய் ஆனந்தப் பெண்ணே
அருளிய சித்தர் : சங்கிலிச் சித்தர் எனும் மதங்க நாதர்
கருத்து – தவநிலையை அறிந்தவர்கள் நவசித்தர்கள் என்பதை உரைக்கும் பாடல்
பதவுரை
மனமாகிய ஆனந்தப் பெண்ணே! எது தவம் என்பதையும், அதன் நிலை என்ன என்பதையும் அறிந்தவர்களுக்கு மெய்ஞானம் தன்னால் தெரியும். இவ்வாறு நவசித்தர்கள் கண்டு தெளிந்தார்கள் என்பதை நன்றாக அறிவாயாக.
கருத்து – பஞ்சாக்கர மந்திரத்தினை அதன் பொருள் பற்றி உரைப்போர் அதன் பொருளைக் காண்பார் என உரைக்கும் பாடல்
பதவுரை
தலையாகிய அண்டமாகிய சிவலோகத்திற்கு உரியவனும், ஆதிரை நட்சத்திற்கு உரியவனும், ஆலகால விஷத்தை உண்டதால் கரிய கண்டத்தை உடையவனும், செம்மை உடைய பொன் போன்ற திருவடிகளை உடையவனும் ஆன சிவபெருமானுக்கு உரித்தானதான தலையான மந்திரமாகிய பஞ்சாக்கர மந்திரத்தினை பற்றிக் கொண்டு அதன் பொருள் பற்றி தியானித்து தலை தாழ்த்தி வணங்குபவர் அந்த மந்திரத்தின் பொருளைக் காண்பர்.
பூரணி மனோன்மணி தயாபரி பராபரி புராதனி தராதரமெலாம் பொற்புடன் அளித்த சிவசக்தி இமவானுதவு புத்ரி மகமாயி என்றே சீரணி தமிழ்க்கவிதை பாடி முறையிடுவதுன் செவிதனிற் கேறவிலையோ? தேஹி என்றாலுனக் கீயவழி இல்லையோ தீனரக்ஷகி அல்லையோ? ஆருலகினிற் பெற்ற தாயன்றி மக்கள்தமை ஆதரிப்பவர் சொல்லுவாய் ? அன்னையே இன்னமும் பராமுகம் பண்ணாமல் அடியனை ரக்ஷி கண்டாய் மேருவை வளைத்தவனிடத்தில் வளரமுதமே விரிபொழிற் திருமயிலை வாழ் விரைமலர்க்குழல் வல்லி மறைமலர்ப்பத வல்லி விமலி கற்பகவல்லியே
திருமயிலை கற்பகாம்பிகை பதிகம் – தாச்சி அருணாச்சல முதலியார்
கருத்து – அன்னையை பல பெயர்களில் அழைத்தும் தன்குறைகளை உரைத்தும் தன்னைக் காக்கவேண்டும் என உரைக்கும் பாடல்.
பதவுரை
பூரணியாகவும், மனோன்மணியாகவும், அருள் செய்தவற்கு காரணமாகவும் இருப்பவளே, பரம்பொருளாக இருப்பவளே, காலத்திற்கு முற்பட்டு இருப்பவளே, விரும்பம் கொள்பவர்களின் நிலையினைப் பாராமல் அவர்கள் விரும்பும் அனைத்தையும் அளக்க வல்ல சிவசக்தியாக இருப்பவளே, இமவான் புத்ரியாக இருப்பவளே, மகமாயி என்று சிறப்புடையதான தமிழில் பாக்களாக எழுதி பாடி முறையிடுவது உந்தன் செவிதனில் விழவில்லையோ? வறுமை, கொடுமை, நோய் ஆகியவை கொண்டவர்களாகிய தீனர்களை காப்பவள் என்றாலும் தேஹி என்று யாசகம் செய்வதன் பொருளுட்டு யான் அழைத்தபோதும் உனக்கு அருள வழி இல்லையோ? மேருமலையை வளைத்தவன் ஆகிய சிவபெருமான் இடத்தில் வளரும் அமுதமே, மணம் பொருந்திய மலர்களை தனது கூந்தலில் அணிந்து வேதங்களால் தாங்கப் பெறும் திருவடிகளை உடையவளே, சிவபெருமானுக்கு துணையாக இருக்கும் கற்பகவல்லியே! இந்த பரந்து விரிந்த உலகில் தன் தாயைத் தவிர மக்களை ஆதரித்து காப்பவர் சொல்லுவாயாக. ஆகவே அன்னையே அலட்சியமும் புறக்கணிப்பும் செய்யாமல் அடியேனை காப்பாயாக
கருத்து – யோக முறையில் ஆறு ஆதாரங்களைக் கடந்து செல்கையில் பிரம்மத்தினை உணரலாம் என உரைக்கும் பாடல்.
பதவுரை
மிகச்சிறியதான ஆலவிதைக்குள் பெரிய ஆலமரம் ஒடுங்கியிருந்து மிகப் பெரிய ஆலமரமாக ஆகின்றது. அதுபோல பரம் பொருளானது ஓரெழுத்து வித்தாக இருந்து, விளைந்து இந்த உலக வடிவம் கொள்கிறது; இவ்வாறு ஒரேழுத்து கொண்டு பிரமமாகி நமக்குள் இருக்கும் மெய்ப்பொருளை அறிந்து கொண்டு, யோக முறையில், வாசியை ஏற்றி இறக்கி அதனை நம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்களிலும் பிரம்மத்தினை காணுமாறு செய்தால் நீங்களே அந்த பரப்பிரம்மம் ஆவீர்கள்.
கருத்து – சிவபெருமானின் தோற்றத்தையும் குணங்களையும் உரைத்து, அவர் உறையும் இடம் திருப்பைஞ்ஞீலி என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
சிவபெருமான் இருடிகள் எனப்படும் முனிவர்களுக்காக வேதத்தை அருளிச் செய்தவர். அவரது இருப்பிடம்சுடுகாடு என்றாலும் அதனால் ஒரு குறையும் இல்லாதவர். அவர் அணிவது கோவண ஆடை. சடைமுடியில் கங்கையைத் தாங்கியவர். இடபத்தை வாகனமாக கொண்டவர். தினந்தோறும் பூதகணங்கள் சூழ்ந்து நின்று பணிசெய்ய திருப்பைஞ்ஞீலியில் வீற்றிருந்து அருளுகின்றார்.
கைவல்ய நவநீதம் – தத்துவ விளக்கப் படலம் – நன்னிலம் தாண்டவராயர் சுவாமிகள்
கருத்து – ஒன்றைக் கண்டு மகிழ்வு கொள்ளும் ஆன்மாவானது இறைவனோடு முற்றிலும் ஒத்து ஆடும் ஆனால் ஆடும் சிவசத்தி ஆகாது என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
இது பாம்பு அல்ல கயிறுதான் என்று தெளிவது போலவும், இது மனிதன் அல்ல வினைக் கூடு ஆகிய கட்டைதான் என்று தெளிவது போலவும், குரு உபதேசிக்கப்பட்ட உபதேசத்தின் தெளிவினாலும், அந்த குரு உபதேசத்திற்கு எடுத்துக்கொண்ட வேத, வேதாந்த நூல்களின் சாரத்தைக் கொண்டும் இது உடல் அல்ல, இது உலகமும் அல்ல, இது பஞ்சபூதங்களும் அல்ல, இவை உண்மைப் பொருளும் அல்ல என்று உணர்ந்து மாறுபாடு இல்லாத ஸ்திரமான ஸ்வரூப ஞானம் என்னும் ப்ரஹ்மம் என்பதை மன வேற்றுமை இல்லாமல் ஐயம் இன்றி நிச்சயமாகத் தெரிந்து கொள்வதே பழித்து உரைப்பதாகும் என்று அறிந்து கொள்வாயாக.
விளக்கஉரை
இந்த உலகை அவன் அவள் அது எனும் அவை என்று சுட்டறிவால் அறிவது, கயிற்றை பாம்பென உணர்வது போல ஓர் கற்பித அறிவு. ஒர் பிரம்மஞானியான குருவின் மகா வாக்கியப் பொருள் உபதேசத்தால் இந்த மாய மயக்கங்கள் நீக்கி, அங்கே பரப்பிரம்மமே மெய்பொருளாக நிற்பதை அறிய இயலும்
கருத்து – திருவடித் தொண்டினை வஞ்சனை எதுவும் இல்லாமல் செய்ததன் பொருட்டு அருள வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
படம் எடுத்து ஆடும் பாம்பினைக் கட்டிக்கொண்டும், கோவணத்தை ஆடையாகக் கொண்டும், பித்த நிலையில் இருப்பவரை ஒத்தும் , பரமர் எனப்படும் முழு முதற் தெய்வமாகியும் இருக்கும் இவர் அருளுதல் பொருட்டு சிறிதும் திருவுளம் இரங்குவார் எனில் எம்மைக் காக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; எனது தலையையும், நாவையும், நெஞ்சத்தையும் எந்த விதமான மாறுபாடும் இன்றி திருப்பாச்சிலாச்சிராமத்தில் உள்ள எம்பெருமானுக்கே உரியனவாக ஆக்கினேன்; அவருடைய திருவடித் தொண்டினை வஞ்சனை எதுவும் இல்லாமல் செய்தேன்; இவ்வாறு யானே உரைத்தல் என்பது பொய்யினை உரைப்பது போல் ஆகும்; இருப்பினும் என் செய்வேன்?
கருத்து – குண்டலினி சிரசை அடையும் மார்க்கத்தைக் உரைக்கும் பாடல்
பதவுரை
உபதேசம் செய்யப்பட்ட முறைகளை அனுசரித்து தீட்சை முறைகளால் மலங்களை எரித்து, பஞ்சேந்திரிய சத்திகள் கூடுவதினால் உண்டான மூலாதாரத்தில் இருந்து எழும் அக்கினியானது மற்ற ஆதாரங்களாகிய சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி ஆகியவற்றை கடந்து நெருப்பாறு மயிர்ப்பாலம் என்று அழைக்கப்படும் சுழிமுனையினை நாடி வழியே மேலேறி, ஆக்ஞையைக் கடந்து புருவ மத்தியில் ஆத்ம சொரூபத்தை காண சூழ்ந்துள்ள திரைகளை விலக்கி ஆத்மாவை விளக்கி மேலப்பதி எனும் சகஸ்காரத்தில் அதன் அசைகின்ற விளையாட்டினை என் கண்ணால் பார்ப்பேனோ?
விண்ணவராலும் அறிவரி யான்றன்னைக் கண்ணற உள்ளே கருதிடில் காலையே எண்ணுற வாகும் முப் போதும் இயற்றிநீர் பண்ணிடில் தன்மை பராபர னாகுமே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – சிவன் சாராதவர்களுக்கு அரியவன் என்பதும், சார்ந்தார்க்கு எளியன் என்பதையும் உணர்த்தி, அவனைச் சார்ந்து பயன் அடைக என்று கூறப்பட்ட பாடல்
பதவுரை
தேவர்களாலும், மூவர்களாலும் அறிவதற்கு அரியவனாகிய சிவனை இடைவெளி இன்றி உள்ளத்தால் பற்றுங்கள்; அவ்வாறு பற்றினால் பற்றிய அக்கணத்திலே அவன் உங்களால் விரும்பப்படும் பொருளாய் வெளிப்படுவான். அதன் பின்பு எக்காலத்திலும் நீங்கள் அவனை அகத்திலும், புறத்திலும் வழிபட்டால், உங்களது தன்மை சிவத்தன்மை ஆகிவிடும்.
விளக்கஉரை
கண் – காலம் பற்றிய இடைவெளி என்று சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கின்றது. ‘கண்ணற உள்ளே’ என்பதை முன்வைத்து ஆக்கினையில் நின்று தவம் செய்வதை குறிக்கும் என்றும் கொள்ளலாம்
நெட்டெழுத்தில் வட்டம் ஒன்று நின்றதொன்றும் கண்டிலேன்
குற்றெழுத்தில் உற்றதென்று கொம்புகால் குறித்திடில்
நெட்டெழுத்தில் வட்டமொன்றில் நேர்படான் நம்ஈசனே
அருளிய சித்தர் : சிவவாக்கியர்
பதவுரை
நெட்டெழுத்துக்கள் யாவும் முதலும் முடிவும் இல்லா வட்டத்தில் இருந்து தோன்றுவதைப் போல் பிரமத்திலிருந்தே நால்வகை யோனிகளிலும் உயிர்கள் உலகுக்கு தோன்றி வருகின்றது; குற்றெழுத்துக்களாகிய ‘க’ முதல் ‘ன’ வரையில் அகார ஒலியில் ஒன்றி இருக்கும்; அதில் கொம்பு, கால் ஆகியவைச் சேர்த்தால் அந்த வட்ட எழுத்துக்களின் ஒலி மாறும்.. இவ்வாறு எழுத்துக்கள் யாவும் வட்ட வடிவ ஒரெழுத்தில் இருந்தே உற்பத்தி ஆகி நிற்பதைப் போல் பிரம்மமான ஈசனிடம் இருந்தே அனைத்தும் ஆகி நிற்பதை உணர்ந்து அவனை துதியுங்கள்.
கருத்து – அன்னையினை பாகம் கொண்டு எழுந்து அருளும் திருக்கோடிகா திருத்தலம் பற்றி உரைக்கும் பாடல்
பதவுரை
திருக்கோடிகாவில் விரும்பி உறையும் அழகனானவன் வண்டுகள் மொய்க்கும் பூக்கள் அணிந்த குழலையுடைய உமாதேவியின் பாகனாயும், திருமறைக் காட்டில் வாழும் அழகு கொண்டவனாகவும் , பன் நெடுங்காலமாய் செய்த வினையான் வரும் பழைய வினையாகிய பிறவித் துன்பத்தைத் தீர்ப்பவனாயும், வீட்டுலக வழியை உணர்த்தும் பரமனாகவும், கூர்மை கொண்டு ஆடும் ஆட்டம் போல இயல்பாக எவ்வகை வருத்தமுமின்றிப் பகைவர் புரங்களை அழித்தவனாகவும், திருவாரூர் மூலட்டானத்தினனாய் விளங்குபனாகவும் ஆவான்.
விளக்கஉரை
மணாளன் – அழகன்
பண்டு ஆடு – முற்பிறப்பில் செய்த பழவினை
பரலோகம் – எல்லா உலகங்களினும் மேலாய உலகம், வீட்டுலகம்; இறைவனது திருவருள்
பரமன் – யாவர்க்கும் மேலானவன்
பரலோக நெறி காட்டும் பரமன் – பரலோகத்தை அடையும் பொழுது உடம்பும் இல்லாது அருளே வடிவாகிய சிவபிரானை உணரும் உணர்வே கொண்டவனாகவும் , அவ்வுணர்வும் அவன் தந்தால் மட்டுமெ பெற முடியும் என்பதும் பெறப்படும்
அத்திமதிசூடும் ஆனந்தப் பேரொளிதான் சத்திசிவம் என்றறிந்தே – என் ஆத்தாளே சச்சுபலங் கொண்டான்டி
அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்
பதவுரை
திருநீற்றையும், வெண்மதி எனும் சந்திரனையும் சூடி ஆனந்த பேரொளி வடிவமாக இருப்பதே சக்தி சிவன் எனும் நிலையே. இவ்வாறான பூரண நிலையை முழுமையா அறியாவிட்டாலும் சிறுமைகண்டும் எனக்கு அன்னை அருள் செய்தாள்.
கருத்து – அன்னையினை பாகம் கொண்டு எழுந்து அருளும் திருஆமாத்தூர் திருத்தலம் பற்றி உரைக்கும்பாடல்.
பதவுரை
பாடுதலையும் கூத்தாடுதலையும் விரும்பிய பல பூதங்களை உடைய ஆமாத்தூரில் உறையும் ஈசனானவர், படம் எடுக்கும் பாம்பைக் கச்சையாக உடுத்தியும், தீப்போன்ற சிவந்த மேனி கொண்டும், இமைக்காத முக்கண்களை உடையவராகவும், நான்கு வேதங்களையும் ஓதுபவராகவும், திருநீற்றை நீரில் குழைத்து அணிந்தவராகவும், தம் உடம்பின் ஒரு பாகத்தில் உமாதேவியை நீங்காத கோலம் கொண்டவராகவும், தெளிவான கங்கையை திருமுடியில் தாங்குபவராகவும், தீ ஏந்திய கையினை உடையவராகவும் அழகி கோலம் கொண்டவராகவும் காட்சி வழங்குகின்றார்.
கருத்து – அன்னையினை பாகம் கொண்டு எழுந்து அருளும் திருமணஞ்சேரி திருத்தலம் பற்றி உரைக்கும் பாடல்.
பதவுரை
கூர்மையாக முப்புரங்களையும் அழித்தும், குயில் போலும் இனிய மென்மையான மொழிபேசும் உமை அம்மையை தன்னுடைய ஒரு பாகத்தில் உடையவனாகியும், மயில்கள் வாழும் நிறைந்த சோலைகள் சூழ்ந்ததும் ஆன திருமணஞ்சேரியில் எழுந்து அருளும் இறைவனைப் பற்றி நின்றவர்களுக்கு பாவம் இல்லை.
எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே! கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க் கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல் முற்பவத்தில் செய்த வினை
மூதுரை – ஔவையார்
கருத்து – முன் ஜென்ம வினைவழியே அனைத்தும் நிகழும் என்பதைக் கூறும் பாடல்.
பதவுரை
தான் எண்ணியவாறு நடக்கவில்லையே என்று வருந்தும் மட நெஞ்சமே! விரும்பியதை எல்லாவற்றையும் தரும் கற்பக மரத்திடம் சென்று வேண்டி நின்றாலும் அது எட்டிக் காயைக் கொடுக்கிறது எனில் அது அவர்கள் முன் பிறவியில் செய்த வினையின் பயன்.
ஆதியாய் நடுவாய் அந்தமாய்ப் பந்தம் யாவுமற் றகம்புறம் நிறைந்த சோதியாய்ச் சுகமா யிருந்தஎம் பெருமான் தொண்டனேன் சுகத்திலே இருக்கப் போதியா வண்ணங் கைவிடல் முறையோ புன்மையேன் என்செய்கேன் மனமோ வாதியா நின்ற தன்றியும் புலன்சேர் வாயிலோ தீயினுங் கொடிதே
தாயுமானவர்
கருத்து – பெருமானின் போற்றத்தக்க இயல்புகளைச் சொல்லி தன்னைக் கைவிடாமல் காத்து அருள வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
தொடக்கம், நடு, முடிவு ஆகிய வகையில் இருந்தும் எந்த வகையிலும் பிணைப்பு இல்லாமல் உள்ளும் புறம்புமாய் நிறைந்து பேரின்ப சுகவடிவாகியும் பேரொளி சுடராகியும் நிற்கும் பெருமானே! உன்னுடைய அடிமையாகிய யான் பேரின்பப் பெருவாழ்வில் நிலைத்து நிற்கும்படி உணர்த்தி அருளாமல் அடியேனைக் கைவிட்டு ஒதுக்குவது முறை ஆகுமோ? இந்த எண்ணங்களால் எளியேன் உள்ளம் மிகவும் துன்புறுகின்றது. பொறிகள் மனத்தினும் மிகவும் கொடுமையாக தீயினைப் போன்று உள்ளன. தாழ்ச்சி உடையனாகிய யான் நீ கைவிட்டு விட்டால் என்ன செய்வேன்? அதனால் எளியேனைக் கைவிடாதே.