
பாடல்
பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
பாடகந் தண்டை கொலுசும்
பச்சை வைடூரிய மிச்சையாய் இழைத்திட்ட
பாதச் சிலம்பி னொலியும்
முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
மோகன மாலை யழகும்
முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால்
முடிந்திட்ட தாலி யழகும்
சுத்தமா யிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்
செங்கையில் பொன்கங்கணம்
ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற
சிறுகாது கொப்பி னழகும்
அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை
அடியனாற் சொல்லத் திறமோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.
காமாட்சியம்மை விருத்தம்
கருத்து – அன்னையின் வடிவழகையும், திருமேனியில் அணிந்திருக்கும் பல்வேறு ஆபரணங்களையும், அதில் பதிக்கபெற்று இருக்கும் நவரத்தினங்களையும் குறிப்பிட்டு தன் இயல்பு நிலையினால் விளக்க முடியாமையை கூறும் பாடல் பாடல்.
பதவுரை
அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே! உன்னுடைய பத்துவிரல்களில் அணிந்திருக்கும் மோதிரங்கள் எத்தனை பிரகாசமானது? கால்விரல்களில் அணிந்திருக்கும் பாடகமும், தண்டையும், கொலுசும், பாதங்களில் இருக்கும் பச்சை நிற வைடூரியங்களால் இழைத்திட்ட சிலம்பின் ஓசையும், முத்துகளால் பதிக்கப்பெற்ற மூக்குத்தியும், ரத்தினங்களால் பதிக்கப்பெற்ற பதக்கமும், மனதினை மயக்கும்படியாக அணிந்திருக்கும் மாலை அழகும், முழுவதும் வைடூரியம் மற்றும் புஷ்பரா கத்தினால் செய்து முடிதிருக்கும் தாலி அழகும், , செம்மை உடைய கையில் பொன்னால் ஆன கங்கணமும், இந்த புவனத்தால் விலை மதிக்க முடிக்கமுடியா ஒளி பொருந்திய முகமும், அதில் தொடர்ச்சியாக இருக்கும் சிறு காதுகளில் வேறு நகைகள் அணியாத போதும் கும்மியாட்டம் போன்று ஒலி எழுப்பி கொண்டிருக்கும் கம்மலின் அழகும், அத்திவரதன் தங்கையும் ஆகிய சக்தியின் சிவரூபத்தை அடியேனால் சொல்ல இயலுமோ?
விளக்க உரை
- கொப்பி – கும்மியாட்டம்