அமுதமொழி – விகாரி – ஆவணி – 28 (2019)


பாடல்

பண்டைநற் றவத்தால் தோன்றிப் பரமனைப் பத்தி பண்ணும்
தொண்டரைத் தானே தூய கதியினில் தொகுப்பன் மார்க்கர்
கண்டநூ லோதி வீடு காதலிப் பவர்கட் கீசன்
புண்ட ரிகத்தாள் சேரும் பரிசினைப் புகல லுற்றாம்

திருநெறி 2 – சிவஞானசித்தியார் சுபக்கம் – அருணந்தி சிவாச்சாரியார்

கருத்து –  வைநயிகரருக்கு சிவபெருமானின் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை அடியும் முறையினை கூறும் பாடல்

பதவுரை

முன்பு செய்த நன்வினைகளால் தவம் பொருந்தி பரமனை பக்தி செய்யும் தொண்டராகவும் அவனை அன்பு கொண்டு வழிபடுபவராகவும் இருப்பவர்களான் சாமுசித்தர்களை தானே தூய நெறியில் இருந்து காத்து சிவகதி அளிப்பான்; ஞானிகளை பிரமாணம் என்று அறிந்து அவர்கள் காட்டிய முறையில் அவர்கள் உரைத்த நூல்களைக் கற்று முக்தி பெறவேண்டும் என்பவர்களான வைநயிகரருக்கு சிவபெருமானின் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை அடியும் முறையினை இங்கே வகுத்துக் கூறுகின்றோம்.

விளக்க உரை

 • தானே தூய கதியினில் தொகுப்பன் – விஞ்ஞானகலருக்கு அறிவு வடிவமாகவும், பிரளயகலருக்கு மான் மழு சதுர்புஜம் காலகண்டம் திருநேந்திரம் தாங்கி உருவ வடிவம் கொண்டும் வெளிப்பட்டு அருள் செய்வது போல் சாமுசித்தருக்கு அருள்புரிவன்.
 • ஸம்+சித்தம் – நன்றாக முடிவுபெற்றது
 • வைநயிகர் – விநயம் உடையவர்
 • மார்க்கர் – சன்மார்கர், ஞானிகள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 32 (2019)


பாடல்

மூலம்

எட்டு மிரண்டு முருவான லிங்கத்தே
நட்டம் புதல்வா நவிலக்கேள் – சிட்டன்
சிவாயநம வென்னுந் திருவெழுத்தஞ் சாலே
யவாயமற நின்றாடு வான்

பதப்பிரிப்பு

எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே
நட்டம் புதல்வா நவிலக்கேள் – சிட்டன்
சிவாயநம வென்னூந் திருவெழுத்தஞ் சாலே
அவாயமற நின்றாடு வான்

திருநெறி 4 – உண்மை விளக்கம்  – மனவாசகங்கடந்தார்

கருத்து –  திருவைந்தெழுத்தினை ஓத ஆன்மாக்களின் பிறவித் துன்பம் தீரும் எனக் கூறும் பாடல்.

பதவுரை

எட்டு எழுத்தாகிய அகரத்தினையும், இரண்டு    எழுத்தாகிய உகரத்தினையும் கொண்டு உருவானதும் பத்து எழுத்தால் ஆனதும் ‘ய’ எனும் எழுத்தால் குறிக்கப் பெறுவதும் ஆன லிங்கம் எனப்படுவதான இந்த உடலில் உறையும் ஆன்மாவில் சிவபெருமான் ஆடுகின்ற நடனத்தை யாம் சொல்லக் கேட்பாயாக;  அனைத்தையும் அறிந்தவனாகிய ஈசன் சிவாயநம  என்கின்ற திருவைந்தெழுத்துக்களையே தனது திருமேனியாகக் கொண்டு ஆன்மாக்களின் பிறவித் துன்பம் நீங்கும்படி ஆடல்புரிவான் என்பதை அறிவாயாக.

விளக்க உரை

எட்டும் இரண்டும் அறியாத என்னை
எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி
எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின்
எட்டும் இரண்டும் இலிங்கமதாகும்

 • யோக மரபினை முன்வைத்து, எட்டு  ஆகிய வலது கண், இரண்டு ஆகிய இடது கண் இரண்டையும் கொண்டு சூரிய சந்திரன் எனவும், சிவசக்தியினை பத்தாகிய அக்னிஸ்தானம் என்றும் திருமந்திர விளக்கம் அருளப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 22 (2019)


பாடல்

நிர்க்குணனாய் நின்மலனாய் நித்தியா னந்தனாய்த்
தற்பரமாய் நின்ற தனிமுதல்வன் – அற்புதம்போல்
ஆனா அறிவாய் அளவிறந்து தோன்றானோ
வானே முதல்களையின் வந்து

திருநெறி 1 – சிவஞானபோதம் – மெய்கண்டார்

கருத்துஅசத்தாயுள்ள பிரபஞ்சத்தை அசத்தென்று காண உளதாய் நிற்பது ஞானசொரூபம் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

குணம் என்பதாகிய எண் குணம் உடையவனும், அழுக்கு எனும் குற்றங்கள் அற்றவன் ஆனவனும், எக்காலத்திலும் துன்பமற்றவனும், மேம்பட்டதான பரம் பொருள் ஆனவனும் படைப்பில் முதல் முதலில் தோன்றிய ஆகாயமே அசத்து என்று சுட்டறிவினைக் கொண்டு அறியும் பொருளாய்  கொண்ட அறிவினைக் கடந்து சூன்யப் பொருள் போல் தோன்றி, (குருவருளால்) சுட்டறிவதால் உண்டாகும் தன்னறிவினால் நீங்காமல் நிலை பெறுவதாகிய சோதி வடிவாய் (அகத்தில்) விளங்கிக் தோன்றுவான்.

விளக்க உரை

 • தற்பரம் தனக்குப் பரமென விரியும்.
 • சூனியமாய்த் தோன்றினாலும் அது அற்புதம் போல் வந்தது
 • தனி முதல்வன் – உலகியல் விடுத்து அதைக் கடந்து அதற்கும் காரணாய் இருக்கும் ஞானத் தன்மைப் பற்றியது.
 • பிரபஞ்சம் நிலைப்பு தன்மை உடையது அல்ல எனும் பேருண்மையினையும், அசத்தாய் உள்ள உலகினைக் அறிய ஞான வடிவமாகியவனே அருளிச் செய்ய இயலும் என்றும், அசத்து நிலையுடைய பொருள்கள் தன் சொருபத்தை காட்டாது மறைத்து நிற்கும் இயல்பு உடையது; இது நிலைப்பு தன்மை உடையது என்று அறிய உணர்த்துவது ஞான சொருபமாகிய பதி ஞானம் என்று சுப்பிரமணிய தேசிகர் உரையில் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 9 (2019)


பாடல்

ஆச்சப்பா உட்கருவி முப்பத்தாறும்
   அப்பே சிவத்தினுட கூறேயாச்சு
நீச்சப்பா புறக்கருவி அறுவதுதான்
   நிசமான சக்தியுட கூறேயாச்சு
பேச்சப்பா உள்வெளியும் நன்றாய்ப் பார்த்து
   பெருமையுடன் ஆதார நிலையுங் கண்டு
காச்சப்பா கருவி கரணாதி என்று
   காடான தத்துவத்தைக் கண்டு தேரே

சௌமிய சாகரம் – அகத்தியர்

கருத்து – 96 தத்துவங்கள் சிவ சக்தி ரூபமாக இருப்பதை அகத்தியர் புலத்தியருக்குக் கூறும் பாடல்.

பதவுரை

உலகின் தோற்றம், பிரபஞ்சத்தின் அமைப்பு என்பவற்றை விளக்கும் மெய்ஞ்ஞானத்தின் எண்ணக் கருக்களில் சைவநெறியினை முன்னிறுத்தி கூறப்படும் தத்துவங்கள் உணர்த்துவதாகிய 96 தத்துவங்களில் அககருவிகளான 36 தத்துவங்கள் சிவனின் கூறுகள் ஆகும்; செயல்பட்டு அறிவை ஏற்படுத்தும் புறக்கருவிகளான 60  தத்துவங்கள் உண்மையில் செயல்படும்  சக்தியின் கூறுகள் ஆகும்;  ஆகாயம் என்பதும், பெருவெளி என்பதும் ஆன ஆதார நிலை ஆகிய இந்த சூட்சுமத்தை குருவின் மூலமாக நன்கு அறிந்தும் உணர்ந்தும் கருவிகளையும் கரணங்கள் எனப்படும் மனத்தில் மாறுபாடுகளையும் பக்குவப்படுமாறு செய்ய வேண்டும்;  உடல் கருவிகளும் உயிர் கருவிகளும் கொண்டு மேலே கூறப்பட்டவாறு பக்குவப்படுமாறு செய்தால் காடு போல் வழிதவறி உலகில் உழலச் செய்யும் தத்துவங்களை அறிந்து அதில் இருந்து தேறலாம்.

விளக்க உரை

 • சாங்கிய யோகத்தில் 24 தத்துவங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. ஆன்றோர் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 29 (2019)


பாடல்

வைத்தநெறி நூலும் வகுத்துரைத்துப் – பத்தர்
குருலிங்க முண்மையெனக் கூறிநீ டின்பம்
தருமன்பை யென்சொல்வேன் தான்
பொன்னாடர் இந்திரனும் பூமகனும் மாதவனும்
எந்நாடும் எந்நாளு மேநாடித் – துன்னாத
வேத முடிவின் விளங்கும் ஒளிஉயிரின்
போத முடிவில் பொருந்துமொளி
முதலாக நின்று முகிழ்த்த உலகின்
விதமான எல்லாம் விரித்தும் – திரமாக
ஊர்பேர் உருவமிவை ஒன்றுமிலன் என்றாலும்

பஞ்சாக்கரப் பஃறொடை –  பேரூர் வேலப்ப தேசிகர்

கருத்து – சிவனின் பெருமைகளை கூறி அவன் அருளும் பேரின்பத்தையும் அதற்கு காரணமான அன்பையும் உரைக்க இயலாது என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

பொன்போன்ற நாட்டினை ஆளும் இந்திரனும், மலர்மேல் வீற்றிருக்கும் ப்ரம்மாவும், மாதவனும் உன்னை அறிவதற்காக நாள், இடம் என்று தேடியும் உன்னை அறிய இயலவில்லை; செறுதலை உடைய வேதத்தின் முடிவாக விளங்கக்கூடியதும் உயிரின் ஒளி போன்றதும், ஞானத்தின் முடிவாக நிற்கும் ஒளிவடிவாகவும் மொட்டு போன்றதும் ஆன இந்த உலகில்  விதம் விதமாக  விரிந்து எங்கும் நின்றும் நிலையான ஊர் பேர் இல்லாமலும், உருவம் இல்லாமலும் எதுவும் நீ இல்லை எனும் படியாக இருந்தாலும் முடிவானது என்பதைக் கூறும் சைவ சித்தாந்த நெறி நூலும், அதன் பொருளை உரைத்து இவன் பக்தன் என்று குருலிங்க உண்மையை கூறி  நிலைத்த இன்பத்தை தரும் உன் அன்பை என்ன என்று சொல்வேன் யான்?

விளக்க உரை

 • துன்னுதல் – பொருந்துதல், மேவுதல், அணுகுதல், செறிதல், செய்தல், அடைதல், ஆராய்தல், தைத்தல், உழுதல்
 • போதம் – ஞானம், அறிவு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 28 (2019)


பாடல்

உறையுந் தனுவில் உறையும் உயிர்தன்
நிறைவை அறிந்தொருகால் நில்லா – அறையுமுடல்
சேட்டையல்லால் மற்றுயிரின் சீவகமே இல்லையெனக்
காட்டுகையால் ஆவியிலைக் காண்

உபாயநிட்டை வெண்பா –  அம்பலவாண தேசிகர்

கருத்து – உயிர்களின் உடலுக்கும் மெய்ஞானத் தன்மைக்கும் இருக்கும் தொடர்பை விளக்கும் பாடல்.

பதவுரை

தனு எனப்படுவதான இந்த  உடலில் உயிர்கள் மெய்ஞானம் ஆகிய தன்னிறைவை அடைந்தப்பின் நில்லாது; உடலை விட்டு உயிர் துண்டித்தல் என்பதைத் தாண்டி உயிர்களுக்கு வேறு எந்த தொடர்பும் இல்லை என்பதைக் காட்டுவதால் ஆவி எனும் உயிர் என்பது நிரந்தரமானது இல்லை என்பதை காணலாம்.

விளக்க உரை

 • தனு – உடல், வில், தனுராசி, சிறுமை, நான்கு கரங்கொண்ட நீட்டலளவை, எருத்தின் முக்காரம், மார்கழி மாதம், ஊன்றிப் பேசுகை, தக்கன் மகளும் அசுரர்க்குத் தாயுமான காசிபர் மனைவி
 • அறைதல் – அடித்தல், பறைமுதலியன கொட்டுதல், கடாவுதல், சொல்லுதல், துண்டித்தல், மண்ணெறிந்து கட்டுதல்,
 • ஒலித்தல்
 • சீவகம் – இலந்தையின் பிசின், ஏலம், வேங்கை, திருநாமப்பாலை
 • ஆவி – வேதியியல் பொருட்கள் காணப்படக்கூடிய மூன்று இயற்பியல் நிலைகளுள் ஒன்று, உயிர், ஆன்மா

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 22 (2019)


பாடல்

எவ்வடி வுகளும் தானாம் எழிற்பரை வடிவ தாகிக்
கவ்விய மலத்தான் மாவைக் கருதியே ஒடுக்கி ஆக்கிப்
பவ்வமீண் டகலப் பண்ணிப் பாரிப்பான் ஒருவ னென்றே
செவ்வையே உயிருட் காண்டல் சிவரூப மாகு மன்றே

திருநெறி 13 –  உண்மைநெறிவிளக்கம் – சீகாழி தத்துவநாதர்

கருத்து – அனைத்திலும் நீக்கமற நிறைந்து உயிர்க்குயிராய்த் நின்று இருக்கும் உயிர்களை  சிவரூபமா காணுதலை கூறும் பாடல்.

பதவுரை

சிவம் சத்தி நாதம் விந்து சதாசிவன் மயேசுரன் ருத்திரன் விஷ்ணு பிரமா மற்றுமுள்ள வடிவுகள் எல்லாம் தானே ஆகின்ற சிறந்த சிவசக்தி வடிவே தன்னுடைய வடிவாகி, வேலை கொள்வானிடத்தில் வேலை செய்பவன் நடு நடுவே இளைப்பு கண்டு இளைபாறுதல் போல் இந்த புவனியிலே அனுபவிக்க தக்க அளவில் இருக்கும் வினையின் ஒரு பகுதியை அனுபவிக்கச் செய்து மலத்தில் இருந்து துயரம் தீரும் அளவில் மாயையின் காரியத்தை ஒடுக்கி, பின் உண்டாக்கி, அந்த வழியில் நின்று கன்மங்களை தொலைப்பிக்கச் செய்து அதன் கடுமையைக் குறைத்து காப்பவனும், ஆணவ மாயை கண்ம மலங்களைப் பிடித்துக் கிடக்கும் ஆன்மாக்களையும் அந்த ஆன்மாக்கள் கொண்டிருக்கும் சஞ்சீதம், பிராப்தம் மற்றும் ஆகாமிய  வினைகளையும் அறிந்து அதனை அறிய காரணமாண  மாயா காரியமாகிய உடலும் தத்துவங்களும் கொண்டு அவைகளை அனுபவிக்கச் செய்வதான பரமேசுரனின் வடிவு பரையாகும்; இவ்வாறு உயிர்க்குயிராய்த் திருவடி ஞானமாய் நின்று அறிவிப்பதைத் திருவருளைக் காணுதல் சிவரூபமாகும்.

விளக்க உரை

 • பரை – பூட்டியின் பூட்டி, ஆறாம் தலைமுறை மூத்தப் பெண், சிவசத்தி, ஒரு அலகு
 • பாரித்தல் – பரவுதல், பருத்தல் (பேச்சு வழக்கு), மிகுதியாதல், தோன்றுதல், ஆயத்தப்படுதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 15 (2019)


பாடல்

ஈறாகி யங்கே முதலொன்றா யீங்கிரண்டாய்
மாறாத வெண்வகையாய் மற்றிவற்றின் – வேறாய்
உடனா யிருக்கு முருவுடைமை யென்றுங்
கடனா யிருக்கின்றான் காண்

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார் (மெய்கண்ட சாத்திரம் – சைவ சித்தாந்தம் )

கருத்துஈசன் உலகுயிர்த் தொகுதியாகி, அவைகளே தானுமாகி அதில் இருந்து விலகியும் இருக்கும் முத்திறத்தினை விளக்கும் பாடல்.

பதவுரை

சங்காரம் எனும் மூலகாரணத்தில் அனைத்தையும் ஒடுங்க செய்தும், உலக அழிவு செய்தும், தானே  அனைத்தும் சாட்சியாக இருந்து முழு முதற் பொருளாய் இருப்பவனும், படைப்பு ஆகிய சிருஷ்டி கரணத்தில் சக்தியுடன் கூடி இரண்டாகியும், தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையு உணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலா ஆற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை  ஆகிய எண் குணத்துடன் கூடியும், சிருஷ்டியில் குறிப்பிடப்பட்ட உலக உயிர் தொகுதியுடன் பிரிக்க இயலாதவாறு கூடியும், உலக உயிர்களின் தன்மை தனக்கு எவ்வகையிலும் தன்னைச் சேராதவாறு தனித்து இருப்பவனும் உயிர்க்கு உயிராய் உள் நின்று உயிரின் தன்மைகளை அறிவித்தலால் வேறாகியும், அதனை  அறிவிக்க உதவும்கால்  உயிர்களோடு ஒன்றாகியும்,  உடனாகி இருக்கும் உயிர்க்கு உயிராய் உள் நின்று உயிரின் தன்மைகளை அறிவித்தலால் வேறாகியும், தன் உண்மையினை எக்காலத்தும் தனக்குரிய முறைமையாகக் ண்டிருக்கின்றான் அம்முதல்வன்; அஃது  அவனது இயல்பு என்பதனை மாணவனே கண்டுணர்வாயாக.

விளக்க உரை

 • சத்தியிடமாய் நின்று இருக்கும் காலத்தில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றுடன் சூரியன், திங்கள் ஆன்மா எனும் எண்பேருருவினாகி நிற்கின்றான் எனும் சில இடங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. சிவனின் குணங்களில் எண் குணம் என்பது பிரதானமானதால் இப் பொருள் விலக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
 • ஈசனுக்கும் உலக உயிர்த் தொகுதியுடன் கூடிய தொடர்பு பேதம், அபேதம் பேதா பேதம் என்னும் மூன்று வகைப்படும். ‘முதலொன்றாய், மாறாத வெண்வகையாய்‘ எனும் வரிகளால் அபேத நிலையினையும், ‘ஈங்கிரண்டாய்‘ எனும் வரிகளால்  பேத நிலையினையும் ‘மற்றிவற்றின்  வேறாய், உடனா யிருக்கு முருவுடைமை‘ எனும் வரிகளால் பேதா பேத நிலையும் அறியப்படும்

இதனை

பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும்
போதம் அபோதம் புணர்போதா போதமும்
நாதம் அநாத முடன்நாதா நாதமும்
ஆதல் அருளின் அருளிச்சை யாமே

எனும் திருமந்திரப் பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 4 (2019)

பாடல்

ஒடுங்கிடா கரணம் தாமே ஒடுங்குமா றுணர்ந் தொடுக்க
ஒடுங்கிடும் என்னில் நின்ற தொடுங்கிடா கரண மெல்லாம்
ஒடுங்கிட ஒடுங்க உள்ள உணர்வுதா னொழியும் வேறாய்
ஒடுங்கிடின் அன்றி மற்ற உண்மையை உணரொ ணாதே

திருநெறி 7 – உமாபதி சிவம்

கருத்துமனம், சித்தம், புத்தி மற்றும் அகங்காரம் கொண்ட அந்தக்கரணங்கள் மற்றும் அது சார்ந்த துணைக்கருவிகள் விலக்கி அவைகளை அந்நியமாக்குதலே சிவம் அறியும் வழி என அறிவுறுத்தும் பாடல்.

பதவுரை

அந்தக்கரணத்தின் பகுதி ஆகிய மனம் என்றுமே தானே ஒடுங்காது; கரணங்கள் ஒடுங்கும் வழியை அறிந்து ஒடுக்க அவை ஒடுங்கும் எனில் அதற்கு துணைபுரிவதும், ஆன்ம தத்துவத்தின் குழுக்களில் இடம்பெற்றதும் ஸ்தூல உடல், அதுசார்ந்த பொறிகள்,  பஞ்சபூதங்கள், ஐம்பொறிகள்,  ஒன்பது கருவிகள் ஆகிய துணைக்கருவிகளும் ஒடுக்குதல் இல்லை; தத்துவங்கள் எல்லாம் ஒடுங்கத் தக்கதாக ஒடுங்கினபொழுதே ஆன்மபோதம் ஒடுங்குமென்னில் அப்பொழுது உள்ள பழைய சிற்றறிவு நீங்கி முழுமையான முக்கால அறிவே முத்தியென்கிற நிலையை கொடுத்து விடும். அவ்வாறு இல்லாமல்  அந்தச் சிவத்தை அறிந்து அநுபவிக்கும் வழி எவ்வாறு என்னில்  கரணங்கள் அந்நியமாய் விடும்படி, தரிசனமான ஞானத்தோடும் கூடி நின்று ஒழிவது அல்லாமல் அந்தச் சிவத்தை அறிந்து அதன் உண்மையை அநுபவிக்க இயலாது.

விளக்க உரை

 • கரணம் – கைத்தொழில்; இந்திரியம்; அந்தக்கரணம்; மனம்; உடம்பு; மணச்சடங்கு; கல்வி; கூத்தின்விகற்பம்; தலைகீழாகப்பாய்கை; கருவி; துணைக்கருவி; காரணம்; எண்; பஞ்சாங்கஉறுப்புகளுள்ஒன்று; சாசனம்; கணக்கன்; கருமாதிச்சடங்குக்குரியபண்டங்கள்.
 • கேவலஞானம் – முக்கால் அறிவு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 1 (2019)

பாடல்

மூலம்

நாற்கோணம் பூமிபுனல் நண்ணுமதி யின்பாதி
யேற்குமனல் முக்கோண மெப்போது- மார்க்கு
மறுகோணங் கால்வட்ட மாகாய மான்மா
வுறுகாய மாமிவற்றா லுற்று

பதப்பிரிப்பு

நாற்கோணம் பூமிபுனல் நண்ணுமதி யின்பாதி
ஏற்கும்அனல் முக்கோணம் எப்போதும் – ஆர்க்கும்
அறுகோணம் கால்வட்டம் ஆகாயம் ஆன்மா
உறுகாய மாம்இவற்றால் உற்று

உண்மை விளக்கம் – திருவதிகை மனவாசகங்கடந்தார்

கருத்து – சரீரம்  பஞ்ச பூதங்களின் தன்மை கொண்டு இருப்பதை விளக்கும் பாடல்

பதவுரை

பூமி எனும் பிருதிவியானது நாலு கோணம் கொண்டதாக இருக்கும்; நீர் எனும் அப்புவானது அரைச் சந்திரனைப் போல இருக்கும்; தீ எனும் தேயுவானது மூன்று கோணம் கொண்டதாக இருக்கும்; காற்று என்றும் வாயு என்றும் அழைக்கப்படும் கால் அறுகோண வடிவமாக இருக்கும்; ஆகாயமானது வட்ட வடிமாக இருக்கும்; ஆன்மா இவை எல்லாவற்றுடன் கூடி சரீரத்திலும் பொருந்தி நிற்பதால், இந்த சரீரம் எனப்படும் உடலானது பஞ்ச பூதங்களின் தன்மை கொண்டு இருக்கிறது.

விளக்க உரை

 • உறுதியாதல், நிகழ்தல்
 • உறுகாய – சேர்ந்திருக்கும் உடல்
 • கால் – 1. மாந்தர்கள் உட்பட விலங்குகளின் ஓர் உடல் உறுப்பு. 2. ஒன்றை ஈடாக பங்கிட்ட நான்கில் ஒரு பங்கு; 3. காற்று 4. நாற்காலி, முக்காலி போன்ற இருக்கைகளைத் தாங்கி நிற்கும் பகுதி; கருவிகள் ஓரிடத்தில் ஊன்றி நிற்கப் பயன்படும் சற்று நீண்ட பகுதி. 5. காடு, கான், கானகம், அடவி 6. பிறப்பிடம், தோன்றும் இடம், தோற்றம் 7. வமிசம், இனமுறை 8. கறுப்பு நிறம் 9. இருள் 10. வினையெச்ச விகுதி 11. ஏழனுருபு 12. உருளை, சக்கரம், ஆழி 13. வண்டி 14. முளை 15. பூந்தாள் 16. மரக்கால் 17. அடிப்பகுதி 18. காலம், பொழுது 19. குறுந்தறி 20. வழி 21. மரக்கன்று 22. மகன் 23. வலிமை 24. வாய்க்கால் நீர்க்கால் 25. எழுத்தின் சாரியை 26. வாதம் 27. காம்பு  28. தடவை (முறை) 29. கழல் 30. சரண் 31. இயமன் 32. பிரிவு 33. மழைக்கால் 34. நடை 35. சிவபெருமான் ஆன்மாக்களைத் தம்முள் ஐக்கியமாக்கிக்கொண்ட தலம் 36. கிரணம் 37. வெளியிடுதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 18 (2019)

பாடல்

அருளது சத்தியாகும் அரன் தனக்கு அருளை இன்றித்
தெருள் சிவம் இல்லை அந்தச் சிவம் இன்றிச் சத்தி இல்லை
மருளினை அருளால் வாட்டி மன்னுயிர்க்கு அளிப்பன் கண்கட்கு
இருளினை ஒளியால் ஓட்டும் இரவியைப் போல ஈசன்

சிவஞான சித்தியார்

பதவுரை

மல மாயைகளுக்கு உட்பட்ட உயிர்கள் அதை விலக்க முதன்மையாக இருப்பது அருள் எனப்படும் இறைவனின் சத்தியாகும். இவ்வாறாக பெறப்படும் சக்தி சிவம் என்பததில் இருந்து தனியே அறியப்படுவது இல்லை, அந்த சக்தி விடுத்து சிவம் என்பதும் தனித்து இல்லை. அத்தகைய சிவமானது, கண்ணில் தோன்றும் இருளை சூரியன் தன் ஒளியால் ஓட்டுதல் போல, உயிர்களின் அறிவை மறைத்து, மயக்கம் தரும் மல மாயையை தனது அருளாலே நீக்கி மண்ணில் தன் அருளை அளித்து, முத்தியைக் கொடுப்பான்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 10 (2018)

பாடல்

மூலம்

கனவு கனவென்று காண்பரிதாங் காணில்
நனவி லவைசிறிதும் நண்ணா – முனைவனரு
டானவற்றிலொன்றா தடமருதச் சம்பந்தா
யானவத்தை காணுமா றென்.

பதப் பிரிப்பு

கனவு கனவென்று காண்பரிதாம் காணில்
நனவில் அவைசிறிதும் நண்ணா – முனைவன்அருள்
தான்அவற்றில் ஒன்றா தடமருதச் சம்பந்தா
யான்அவத்தை காணுமா றென்

திருநெறி 9  – உமாபதி சிவம்

பதவுரை

மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே! உயிர் செயல்படும் நிலையைக் கூறுவதாகிய காரிய அவத்தையானது, புருவ மத்தியில் இருந்து செயல்படுவதாகிய நனவு, கண்டத்திலிருந்து செயல்படுவதாகிய கனவு, இருதயத்திலிருந்து செயல்படுவதாகிய உறக்கம், உந்தியிலிருந்து செயல்படுவதாகிய  பேருறக்கம், மூலாதாரத்திலிருந்து செயல்படுவதாகிய உயிர்ப்படக்கம் என விரியும். அவ்வாறு உயிரானது கண்டத்தில் இருந்தில் செயல்படும் நிலை ஆகிய கனவினை காணும் போது கனவில் நின்று  ‘இது கனவு’ என்று அறிய இயலாது. அகம் விழிப்புற்ற நிலையாகிய நனவில் அந்த கனவில் கண்ட காட்சிகள் காண இயலாது. முனைவன் அருள் பெறும் போது  காரிய அவத்தைகள் நீங்கப் பெற்று, காரண அவத்தையின்  கேவல அவத்தை, சகல அவத்தை ஆகியவைகளும் நீங்கப் பெற்று,  பல்வேறு பிறப்பெடுத்துப் படிப்படியாக முக்திப் பேற்றை அடைந்து இறைவனின் திருவருளுக்கு உரியதாகும் நிலை ஆகிய சுத்த அவத்தையை காணுமாறு செய்வாயாக.

விளக்க உரை

 • ‘இத்தகைமை இறையருளால் உயிரறியும்’ எனும் சிவப்பிரகாசரின் வரிகளுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
 • உயிரானது ‘அறிவித்தால் அறியும் அறிவுடைய ஒரு பொருள்’ எனபதும்,  உயிர் தனித்து இயங்கினாலும், இறைவன் தனிக் கருணையினால் அன்றி அவத்தைகள் விலகி அது நிலை பேறு கிட்டாது என்பதும் விளங்கும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 15 (2018)

பாடல்

விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு
அளந்தறிந்து அறியா, ஆங்கவை போலத்
தாம்தம் உணர்வின் தமி யருள்
காந்தம் கண்ட பசாசத் தவையே

சிவஞானபோதம் – மெய்கண்டார்

பதவுரை

சடப் பொருட்கள் என்றும்,ஞானேந்திரியங்கள் என்றும் ஐம்பொறிகள் என்றும் அறிகருவிகள் என்றும் வழங்கப்பெறும் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றில் உடல் உணர்வை உணரும்; வாய் சுவையை உணரும்; கண் புறக் காட்சியைக் காணும்; மூக்கு வாசனையை அறியும்; செவி ஓசையை அறியும். அவ்வாறு ஐம்பொறிகள் இவைகளை அறிந்தாலும், அறிகின்ற தம்மை அறியமாட்டா. உயிர் உடனிருந்து திருவருள் காந்தம் போன்று இயங்கினால் உயிர்கள் இரும்பினைப் போல் இயங்கி அவை செயல்படும்.

விளக்க உரை

 • இறைவன் திருவருள் என்பது சைவசித்தாந்த மரபில் மறைப்பாற்றலையே (திரோதான சத்தி) குறிக்கும். உயிர் அனுபவித்துத்தான் மலக் குற்றங்களை நீக்க முடியும். எனவே உயிர்கள் மாயை செய்த கன்மங்களின் வழியே வினையாற்ற வேண்டியுள்ளதால், நன்மை தீமைகளை அறியாதவாறு உலகியல் அனுபங்களில் ஈடுபடச் செய்ய திருவருள் துணை செய்யும்.
 • ஐம்பொறிகள் உயிரால் செலுத்தப் படுவதால் வினைகளை நுகர்கின்றன.  உயிர் தன் வினையினால் தன்பொருட்டாகவே நுகர்கின்றது. அவ்வுயிரைச் செலுத்துகின்ற இறைவன்  முன்னிலையில் உலக நிகழ்வுகள் செயல்படுகின்றன.
 • தமி – ஒப்பற்ற முதல்வன்
 • பசாசம் – இரும்பு

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 24/25 பைரவர்

ஸ்ரீ காலபைரவர் – காத்மாண்டு
புகைப்படம் : இணையம்

பெயர்க் காரணம்
பைரவர் என்னும் வட மொழி சொல் பீரு என்னும் சொல்லை அடிப்படையாக கொண்டது. இதற்கு அச்சம் என்பது பொருளாகும். எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை அண்டியவர்களைக் காப்பவர் என்பது பொருள்.
– (பரணம்) – உலக உயிர்களை தோற்றுவித்து  படைப்புத் தொழில் செய்பவர்
ர் – (ரமணம்) – தோன்றிய உயிர்களைக் காப்பவர்
– (வமணம்) – வலியுடன் வாழ்ந்து சலித்த உயிர்களை அழித்து தன்னுள் அடக்கிக் கொள்பவர்
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும் காலங்களுக்கு உட்பட்டே இயங்குகின்றன. அப்படிப்பட்ட காலத்தை இயக்கும் பரம்பொருளே பைரவர் ஆவார்.
பைரவர் சிவபெருமானின் இருபத்து ஐந்து மூர்த்தங்களில் / அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார்.
சில்ப சாஸ்திரப்படி 64 பைரவர்கள் வகைபடுத்தப்பட்டாலும், 8 பைரவர்கள் திசைக்கு ஒருவராக காவல் புரிகிறார்கள். அசிதாங்க பைரவர்,ருரு பைரவர்,சண்ட பைரவர்,குரோதன பைரவர்,உன்மத்த பைரவர்,கபால பைரவர்,பீஷண பைரவர், ஸம்ஹார பைரவர். இந்த எட்டு பைரவர்களே 64 திருமேனிகளாக விரிவடைகிறார்கள்.
வேறு பெயர்கள்
சிவபெருமானுடைய பஞ்ச குமாரர்களில் ஒருவரான பைரவருக்கு வைரவர், பிரம்மசிரேச்சிதர், உக்ர பைரவர், க்ஷேத்ரபாலகர், வடுகர், ஆபத்துதாரனர், சட்டைநாதர், கஞ்சுகன்,கரிமுக்தன், நிர்வாணி, சித்தன், கபாலி, வாதுகன், வயிரவன் என்று பல பெயர்கள் உண்டு.
கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும்(வடிவங்களுக்கு ஏற்றவாறு ஆயுதங்கள் மாறும்) நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர்
கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார்.
கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவரது அவதார தினமாகும்.
பைரவர் தோற்றம்
தோற்ற வகை : 1
அந்தகாசுரன் என்னும் அரக்கன் சிவனை வழிபட்டு இருள் என்ற சக்தியைப் பெற்று உலகை இருள் மயமாக்கி கர்வம் கொண்டு தேவர்களை துன்புறுத்தி வந்தான். அதனால் தேவர்களும், முனிவர்களும் சிவனிடம் முறையிட்டு அவனை அழிக்க வேண்டினார்கள். சிவன் தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக மாற்றினார். எனவே எட்டு சைகளிலும் எட்டு பைரவர்கள் தோன்றினார்கள்.
தோற்ற வகை : 2
ஒரு முறை ப்ரம்மா தனக்கு ஐந்து தலைகள் இருப்பதால் கர்வம் கொண்டு சிவனை நிந்தித்தார். சிவன் ருத்ரனிடம் ப்ரம்மாவின் ஐந்தாவது தலையை நீக்குமாறு கூறினார்இதனால் ப்ரமாவின் கர்வம் நீங்கியது. ப்ரம்மாவின் தலையை எடுத்ததால் பைரவருக்கு ப்ரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதனால் சிவன் பைரவரை பூலோகத்தில் சென்று யாசகம்(பிச்சை) எடுக்குமாறு கூறினார். இந்த தோஷம் திருவலஞ்சுழியில் அவருக்கு நீங்கியது.
பூசிக்க உகந்த மலர்கள்
தாமரை, செவ்வரளி, அரளி, வில்வம், தும்பைப்பூ, சந்தனம் செண்பகம், செம்பருத்தி, நாகலிங்கப்பூ,சம்மங்கி (மல்லிகை விலக்க வேண்டும்)
பிடித்த உணவுப் பொருட்கள்
சர்க்கரைப் பொங்கல், உப்பில்லாத தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயாசம், அவல் பாயாசம் நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால், செவ்வாழை மற்றும் பல பழவகைகள்
பைரவரை வழிபாடு செய்ய சிறந்த நாள்
எல்லா நாட்களுமே பைரவரை வழிபட சிறந்த நாள் என்றாலும் சில தினங்கள் உன்னதமான பலன்களைத் தரும். அதில் அம்மாவாசை, பௌர்ணமி(வெள்ளிக் கிழமையுடன் கூடிய பௌர்ணமி இன்னும் சிறப்பு), தேய்பிறை அஷ்டமி, ஞாயிறு ராகு காலம் ,
பைரவர் வழிபாட்டின் பலன்கள்
· ஏவல், பில்லி சூனியம், பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடையலாம்.
·   திருமணத்தடைகள் நீங்கும்
·   சந்தான பாக்கியம் பெறலாம் (குழந்தை)
·   இழந்த பொருள்களையும் சொத்துக்களையும் திரும்பப்பெறலாம்
·   இழந்த பொருள், சொத்தை மீண்டும் பெற்றிடலாம்.
·   ஏழரையாண்டுச் சனி, அஷ்டமத்துச் சனி, சனீசுவரனால் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கும்
·   எதிரிகள் தொல்லை நீங்கும்
·   கிரங்களின் தோஷங்கள் மற்றும் பிதுர்தோஷம் நீங்கும்
·   வாழ்வில் வளம் பெருகும்
·   பிறவிப்பிணி அகலும்


இது சிறு குறிப்பு மட்டுமே. பைரவர் பற்றி விரிவாக அறிய திருவாடுதுறை மடத்து பதிப்பில் வெளியாகி இருக்கும் ‘மகா பைரவர்’ நூலினை வாசிக்கவும்.

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

மாணவன்:
சாங்கிய மதத்தின் ஒரு பிரிவினர்உலகத்திற்கு முதல் காரணம்பிரகிருதி“‘, அது தன்னைத்தானே தோற்றுவிக்கும் என்று கூறுகின்றனரே, அஃது எவ்வாறு?
ஆசிரியர்:
அறிவில்லாத பொருள் தானே செயல்படுவது இல்லை. எனவே உலகம்  செய்படுகிறது எனில் , அஃது அறிவு பெற்ற ஒரு கர்த்தாவினால் தான் நிகழ்த்தப்படுகிறது. எனவே அதை நடத்துபவன் பேரறிவும் பேராற்றலும் பெற்றவனாகவே இருக்க முடியும்.
மாணவன்:
அறிவு அற்றவைகளுக்கு செயல்பாடுகள் இல்லை எனில் எவ்வாறு காந்தம் இரும்பை ஈர்க்கிறது. நஞ்சு பற்றி இடம் இல்லாமல் எல்லா இடங்களுக்கும் பரவுகிறது.
ஆசிரியர்:

காந்தத்தையும், இருப்பையும் ஒருவன் கூட்டுவிக்கும் போதே அது ஈர்க்கப்படும். நஞ்சு பரவுதல் உயிர் உள்ள உடம்பின். எனவே அறிவில்லாத பொருள்கள் செயல்படா.
மாணவன்:
நீங்கள் குறிப்பிட்டது போல் உயிர்கள் அறிவுடைப் பொருள் எனில் அவைகள் உலகிற்கு கர்த்தாவாகுதல் என்பது சரியா?
ஆசிரியர்:
நிச்சயம் இல்லை. உயிர்கள் உடம்பை பெற்றபின்னரே முழுமை பெறும் தன்னை உடையதாகும். உடம்பு இல்லா உயிர்கள் மற்றொரு உடம்பை தோற்றுவிக்காது. எனவே பேரறிவு உடைய இறைவனே உலகிற்கு கர்த்தா.

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 23/25 ஏகபாதர்

வடிவம்(பொது)
·   உருவத்திருமேனி
·   வாமதேவ முகத்திலிருந்து  தோன்றியவர்
·   ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், பிரம்மா, விஷ்ணு என்ற ஐந்து மூர்த்திகளும் ஊழிக்கால பிரளயத்தில் ஒடுங்கி ஒரே உருவத்தில் காட்சியளிக்கும் மூர்த்தம்
·   வலது கை – அபய முத்திரை
·   இடது கை – வரத முத்திரை
·   பின்கைகளில் மான், மற்றும் ஆயுதம்
·   ஆடை – புலித்தோல்
·   கழுத்து – மணிமாலை
·   ஜடாபாரத்தில் சந்திரன் மற்றும் கங்கை
வேறு பெயர்கள்
·         ஒரு பாதன்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
 
·         திருக்காளத்தி – மலைப்பாறை புடை சிற்பங்கள்
·         திருவண்ணாமலை கோயில்
·         திருவொற்றியூர்
புகைப்படம் :  ta.wikipedia
(வேறு குறிப்புகள் இருந்தால் தெரியப்படுத்தவும்)

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 22/25 திரிபாதர்

வடிவம்
இரண்டு சிரசு
நாலு கொம்புகள்
ஏழு புஜம்
மூன்று பாதம்
வேறு பெயர்கள்
முப்பாதன்
திரிபாதத்ரி மூர்த்தி
இதரக் குறிப்புகள்
பிரளயத்தின் முடிவில் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, ருத்ரர்கள் மகேஸ்வரனிடத்தில் லயமாகும் நிலை திரிபாத மூர்த்தி ஆகும்.
சரியை, கிரியை, யோகம் அனுஷ்டிக்கும்படி செய்யும் வடிவம்.
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
மாமல்லபுரம் வடக்கு சுவர் சிற்பம்

(வேறு குறிப்புகள் இருந்தால் தெரியப்படுத்தவும்)

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்


மாணவன்

பிரமாணங்கள் குறித்து இன்னும் விளக்க வேண்டும்.
ஆசிரியர்

குடமாய் தோன்றும் பொருள் முன்பு மண்ணில் இருந்தே தோன்றியது. ஆடையாய் தோன்றும் பொருள் நூலில் இருந்தே தோன்றியது. எனவே சூன்யத்தில் இருந்தோ அல்லாதவற்றில் இருந்தோ எந்தப் பொருளும் தோன்றவில்லை. உள்ள பொருளே நிலை மாறியும் வடிவம் மாறியும் வரும். (Energy cannot be created. One form of energy can be converted to another form of energy – Ex. Kinetic energy to Static energy என்பது சிந்திக்கத் தக்கது.) இதுவே சைவ சித்தாந்தத்திற்கு அடிப்படை. இதையேமருவுசற் காரியத்தாய்என உமாபதிச் சிவாச்சாரியார் சிவப்பிரகாச நூலில் குறிப்பிடுகிறார்.
மாணவன்

தோன்றிய பொருள் தோற்றத்திற்கு முன்னும் உள்ளதுஎன்பதன் பொருள்காணப்படாத நுண்நிலையில் உள்ளதுஎன்பதன் பொருள் உணர்ந்து கொண்டேன்.எனவே உலகத்தை உள் பொருள் எனத் தயங்காது கொள்வேன்.
காரியப் பொருள்களுக்கு கர்த்தா இன்றியமையாதது
மாணவன்

உலகம் நுண் நிலையில் இருந்து பருநிலைக்கு தோன்றுகிறது எனக் கொண்டால் உலகம் உள் பொருள் என்பதற்கும் அது தானாக தோன்றாமல் அதை தோற்றுவிக்க ஒரு கர்த்தா வேண்டும் என்பது எங்கனம்? ‘

ஆசிரியர்

இல்லாதது தோன்றாது’ என்பது போலவே ‘அதை தோற்றுவிக்க ஒரு கர்த்தா வேண்டும்’ என்பதே உண்மை.


மண், நூல் ஆகியவை காரணப் பொருள்; குடம், ஆடை போன்றவை காரியப் பொருள். மண், நூல் போன்றவை தானே மாற்றம் கொள்ள இயலாது. அதை கூட்டுவிக்க குயவனும், கோலிகனும் தேவை. எனவேஉள்ளதாய் நின்று தோன்றும் பொருள்கள் யாவும் செய்வோனை உடையன‘ . அதுபோலவே உலகத்தை தோற்றுவித்ததற்கு ஒரு கர்த்தா தேவை.

எனவே ஒரு காரியம் நிகழ்த்தப்பட வேண்டுமாயின்முதற்காரணம், துணைக்காரணம், நிமித்தக்காரணம்என மூன்றும் தேவை. குடத்திற்கு மண் முதற் காரணம், தண்டச் சக்கரம் துணைக் காரணம், குயவன் நிமித்த காரணம். அதுபோலவே உலகத்திற்கு மாயை முதல் காரணம், கடவுளது ஆற்றல் துணைக் காரணம், கடவுள் நிமித்த காரணம்.

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

மாணவன்:
பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருளுக்குரிய பிரமாணங்களை கூறும் முன்  அவற்றின் இயல்புகள் பற்றிக் கூற வேண்டும்.
ஆசிரியர்
பிரமாணம்  வடசொல், அளவை  தமிழ்ச்சொல். அளப்பவன்(பிரமாதா– உயிர் அல்லது ஆன்மா), அளத்தற்கருவி (பிரமாணம்  உயிரின் அறிவாற்றல் அல்லது   ஆன்ம சிற்சக்தி), அளக்கப்படும் பொருள்(பிரமேயம்)

பதி, பசு மற்றும் பாசங்கள்) ஆகிய மூன்றாலே அளத்தல் நிகழும்.
புறப் பொருள்களை அளக்க கருவிகள் இருத்தல் போல், அகக் கருவிகளைஅளக்க அவரவர் அறிவாற்றலே பிரமாணமாகிறது.
தார்க்கியர்கள்(தருக்க நூல் சார்ந்தவர்கள்) கண் முதல் உடல் வரையிலான 5 வகை பொறிகளையே (பஞ்ச இந்திரியங்கள் ) பிரமாணம் என்பார்கள். பஞ்ச இந்திரியங்களும் வேறு ஒரு பொருளாகிய அறிவால் அளக்கப்படுவதாலும், தான் மற்றொன்றினாலும் அளக்கப் படாததுமாகவும், பிறவற்றை அளப்பதாகவும் இருப்பதே உண்மை அளவை. எனவே  தார்க்கியர்கள் கருத்து பொருந்தாது.
மாணவன்:

சைவ சித்தாந்தம் கூறும் இன்றியமையாத பிரமாணங்கள் எவை?

ஆசிரியர்

எண்
பிரமாணம்
விளக்கம்
1
காட்சிஅளவை(பிரத்தியட்சப் பிரமாணம்)
கண்ணால் கண்டேன்
2
கருதலளவை(அனுமானப் பிரமாணம்)
புகை இருப்பதால் நெருப்பு இருக்க வேண்டும்
3
உரையளவை/ஆகமப் பிரமாணம்(சப்தப் பிரமாணம்)
நான் இவரை மதிப்பவன். அதனால் இவர் கூறியதால் செய்கிறேன்
4
இன்மையளவை(அபாவப்/அனுபலத்திப்  பிரமாணம்)
முயற் கொம்பு
5
பொருளளவை(அருந்தாப்பத்தி பிரமாணம்)
இரண்டும் ஒரே அளவாகத் தான் இருக்க வேண்டும்
6
உவமையளவை(உபமானப் பிரமாணம்)
தாமரை முகம்
7
ஒழிபு அளவை(பாரிசேடப் பிரமாணம்)
மல்லிகை வெள்ளைநிறமுடையது என்பதால் அவைகளில் கருமை நிறமுடைய பூக்கள் இல்லை என்பது துணிபு
8
உண்மையளவை(சம்பவப் பிரமாணம்)
இறைவனின் தனிப்பெரும் கருணையினால் இது நிகழ்கிறது
9
வழக்களவை( ஐதிகப் பிரமாணம்)
கார்த்திகைக்குப் பின் கடுமழை இல்லை
10
இயல்பு அளவை( சுபாவப் பிரமாணம்)
சித்திரை மாதத்தில் வெப்பம் இயல்பை விட அதிகம்
  
இவைகளில் முதல் மூன்றும் பிரதானமானவை. மற்றவைகள் அவைகளின் வகையே.

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 20/25 சரபமூர்த்தி

மகேசுவரமூர்த்தங்கள் 20/25 சரபமூர்த்தி
வடிவம்(பொது)
·   நரசிம்ம மூர்த்தியாக அவதாரம் எடுத்த திருமாலின் கோபம் இரண்ய  சம்ஹாரத்திற்குப் பிறகும் குறையவில்லை. அதன் பொருட்டு  சிவபெருமான் எடுத்த அவதாரம் `சரபமூர்த்தி’
·   சரபம் என்பது மனிதன், யாளி, பட்சி, இம்மூன்றும் கலந்த உருவம். .
·   உடல் அமைப்பு  – சிம்ம முகம், சிம்ம உடல், எட்டுக்கால், எட்டுக்கை, ஆயுதமாக மான், மழு, சூலினி, ப்ரத்யங்கிரா தேவியர் – இறக்கைகள், சூரியன், சந்திரன், அக்னி –  கண்கள்,துடிக்கும் நாக்கு, தூக்கிய  காதுகள், கருடமூக்கு, நான்கு கரங்கள், எட்டு கால்கள், அதில் காந்தசக்தி கொண்ட நகங்கள்
·   உத்திர காமிகாகமத்தின்படி இவ்வடிவம் ஆகாச பைரவர்
·   சில இடங்களில் 32 கைகளுடன் விவரிக்கப்பட்டுள்ளார்.
·   சில இடங்களில் இம் மூர்த்தம் மகேசுவர பேதமாக குறிப்பிடப்படுகிறது.
வேறு பெயர்கள்
·         ஸ்ரீ சரபேஸ்வரர்
·         ஸ்ரீ சரப மூர்த்தி
·         புள்ளுருவன்
·         எண்காற் புள்ளுருவன்
·         சிம்புள்
·         நடுக்கந்தீர்த்த பெருமான்
·         சிம்ஹாரி
·         நரசிம்ம சம்ஹாரர்
·         ஸிம்ஹக்னர்
·         சாலுவேசர்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

·         திருபுவனம், மயிலாடுதுறை
·         தாராசுரம், கும்பகோணம்
·         ஆபத்சகாயேசுவரர் கோயில்,துக்காச்சி,கும்பகோணம்
·         தேனுபுரீஸ்வரர் ஆலயம்,மாடம்பாக்கம், சென்னை
·         ஆலய மூலவர் – ஸ்தம்ப சரபேஸ்வரர்,திரிசூலம், சென்னை
·         ஸ்ரீ வெள்ளீஸ்வரர் ஆலயம்,மயிலாப்பூர்
·         குறுங்காலீஸ்வரர் கோயில்,கோயம்பேடு
·         தாமல் நகர், காஞ்சிபுரம்  –  லிங்க உருவ சரபேஸ்வரர்
·         மதுரை, சிதம்பரம், காரைக்குடி –
·         சராவு சரபேஸ்வரர் ஆலயம், மங்களூர்
இதரக் குறிப்புகள்

·         16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருமலைநாதர் என்பவரால் இயற்றப்பட்ட  சரப புராணம்

புகைப்படம் : இணையம்
 

சமூக ஊடகங்கள்