அமுதமொழி – சுபகிருது – புரட்டாசி – 20 (2022)


பாடல்

அறிவெனில் வாயில் வேண்டா அன்றெனில் அவைதாம் என்னை
அறிவதை உதவு மென்னில் அசேதனம் அவைதா மெல்லாம்
அறிபவன் அறியுந் தன்மை அருளுவன் என்னி லான்மா
அறிவில தாகும் ஈசன் அசேதனத் தளித்தி டானே

சிவப்பிரகாசம் – மூன்றாம் சூத்திரம் – ஆன்ம இலக்கணம் – உமாபதி சிவம்

கருத்துஆன்மா அறிவுடைப் பொருள் என்பதை விளக்கும்  பாடல்.

பதவுரை

ஆன்மாவானது தானாக அனைத்தையும் அறிய இயலும் எனில் அதற்கு இந்திரியங்கள் தேவை இல்லை; அதுபோலவே ஆன்மாவிற்கு அறியும் தன்மை இல்லை எனில் இந்திரியங்கள் எதன் பொருட்டு அதனுடன் இணைத்து படைக்கப்பட்டு இருக்கின்றன; இந்திரியங்கள் சடமாவதால் ஆன்மாவுக்கு அறிவை கொடுக்காது;  அனைத்தையும் அறிகின்ற ஈசன் ஆன்மாவுக்கு அறியும் தன்மையைக் கொடுப்பார் எனில்  ஆன்மா இயற்கையில் அறிவில்லாத சடப் பொருளாக இருக்க வேண்டும். ஏனெனில் ஈசன் அறிவில்லா சடப்பொருளாக இருக்க வேண்டும்; ஏனெனில் சிவன் இயல்புக்கு மாறாக  உயிறற்ற பொருள்களுக்கு  உயிர் தன்மையை அருள மாட்டார். எனவே ஆன்மாவானது இயற்கையில் அறிவுடைய பொருள் ஆகும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – புரட்டாசி – 19 (2022)


பாடல்

தாமரையி னிலையினிலே தண்ணீர் தங்காத
தன்மைபோலச் சகத்தாசை தள்ளி விட்டெங்கும்
தூமணியாம் விளங்கிய சோதி பதத்தைத்
தொழுது தொழுதுதொழு தாடாய்பாம்பே

சித்தர் பாடல்கள் – பாம்பாட்டி சித்தர் –  அகப்பற்று நீக்கல்

கருத்துஉலகியலை விடுத்து சிவத்தினை நாட அறிவுறுத்தும்  பாடல்.

பதவுரை

பாம்பே! தாமரை இலையின் மேல் தண்ணீரானது இருப்பினும் அதன் மேல் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கக் கூடிய தன்மையைப் போல் இந்த உலகில் வாழ்ந்தாலும் உலகப் பற்றினை நீக்கி,  முத்தினைப் போல் பிரகாசிக்கும் தன்மை உடைய சோதியின் பதத்தை தொழுது தொழுது ஆடுவாயாக.

விளக்க உரை

  • பாம்பு – மனம் எனக் கொள்ளலாம்.
  • தொழுது தொழுது – இருவினை ஆகிய நல்வினை தீவினை நீக்கம் பெறுதல் குறித்து இருமுறை உரைக்கப்பட்டது.

சமூக ஊடகங்கள்

தர்மத்தின் பலன், தற்பெருமை – வினா விடை


கேள்வி : சாஸ்திரத்தில் விதிக்காதவாறு செய்த தர்மங்களுக்கு பலன் இல்லாமல் போகுமா?

பதில் : சாஸ்திரம் என்பது எக்காலத்திற்கும் பொதுவானது. யுகம் சார்ந்தும், தர்மம் பற்றியும் செய் தர்மத்தின் அளவு குறைந்து போகும்.

கேள்வி : தற்பெருமை குற்றம் என்றால், தற்போது நடைமுறையில், எல்லோரும் அப்படி இருக்கிறார்களே.

பதில் : யுகதர்மத்தின்படி மனிதர்கள் தம் நிலை மறந்து அவ்வாறு இருக்கிறார்கள். தோராயமாக 86 லட்சம் பிறவிகளுக்கு பின் மனித பிறப்பு என்பது இறையின் கருணையினால் கிடைக்கிறது. அநாதி காலம் தொட்டு சென்ற சில நூற்றாண்டு வரையில் இந்த தற்பெருமையினை விலக்க சொல்லி இருக்கின்றார்கள். (தன்பெருமை எண்ணாமை, தற்போதமே இழத்தல் – சிவபோகசாரம் – தருமை ஆதீன குரு முதல்வர்)

பொதுவில் தர்மம் என்பது இரு காரணங்களுக்காக செய்யப்படும்

  1. தன்வினைகளை அறுக்க
  2. அறுக்கப்பட்ட வினைகளை அறிந்து மேல் நிலைக்குச் செல்ல

உதாரணமாக அன்னதானம் என்பதை எடுத்து கொள்வோம். பெறுவர், வழங்குபவர் என இருவர் உண்டு. இருவர் இல்லாமல் இந்த தானம் நிறைவு பெறாது. அவ்வாறு இருக்கும் போது அந்த தானம் பற்றி எவ்வாறு பெருமை கொள்ள இயலும்?

தர்மத்தினை எவரும் அறியாமல் செய்வதே தர்மம்.

இவைகள் எம் தனிப்பட்டக் கருத்துக்கள். (அறிந்தவர்கள் உரைத்தால் அறிந்து கொள்வேன்)

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – வைகாசி – 26 (2022)


பாடல்

கண்டாரை நோக்கிக் கருத்தோடு இருப்போர்க்குக்

கொண்டாட்டம் ஏதுக்கடி – குதம்பாய்

கொண்டாட்டம் ஏதுக்கடி ?

காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்

கோலங்கள் ஏதுக்கடி – குதம்பாய்

கோலங்கள் ஏதுக்கடி ?

அருளியச் சித்தர் : குதம்பைச் சித்தர்

கருத்துஅகக்கண் கொண்டு கண்டவர்களுக்கு புறத்தில் கொண்டாட்டங்களும், புறத் தோற்ற அழகு செய்தலும் எதற்காக என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

குதம்பை எனும் ஆபரணத்தை காதில் அணிந்தவளே! ஞானத்தினால் மெய் உணர்வு கொண்டு நாம் காணும் போது நம்மைக் கண்டு அருளுபவரை அகக் கண் கொண்டு அதில் ஒன்றி கருத்தோடு இருப்பவர்களுக்கு புறக் கொண்டாட்டங்கள் எதற்காக? காலன் எனும் எமனை வெல்லக்கூடிய கருத்தினை கொண்டு அவனை வெல்லக்கூடியவர்களுக்கு புறத்தினால் அமையப்பெறும் கோலங்கள் எதற்காக?

கண்டாரை நோக்குதல், கருத்தோடு இருத்தல், காலனை வெல்லுதல் போன்றவை மிகவும் சூட்சமமானவை. இவைகள் குரு மூலமாக உபதேசம் செய்யப்பட்ட முறைகளுடன் செய்யப்பட வேண்டும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – வைகாசி – 25 (2022)


பாடல்

அறிவறி வென்ற அறிவும் அனாதி
அறிவுக் கறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியின் பிறப்பறுந் தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துஊழினால் அடையக் கூடிய ஆக்கக் கேடுகளைத் தவிர்க்க வல்லவர் ஒருவரும் இல்லை என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

உலகத்தாரால் அறிவு கொண்டவை என்று சொல்லப் படுவதாகிய உயிர்களும் அனாதியாக இருக்கின்றன; அவற்றின் மெய் அறிவுக்கு காரணமாக உள்ள பேரறிவு கொண்ட இறைவனும் அனாதியாக இருக்கின்றான்; அறிவாகிய உயிர்களைக் கட்டியுள்ள பாசங்களும் அனாதியாக இருக்கின்றன; ஆயினும் உயிர்களிடத்து அன்புகொண்டு அனாதியாகிய இருக்கும் சிவனது ஞான சத்தி உயிரினிடத்தின்  ஒன்றும் போது  உயிரின் பிறவித்தொடர்ச்சி அறும்.

விளக்கஉரை

  • அனாதி –  ஆதியும், அந்தமும் இல்லாதது.
  • ஞானம் நிகழப் பிறப்பறும் என்பது பொருள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – வைகாசி – 24 (2022)


பாடல்

ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்-ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்யம் புவியதன் மேல்

ஔவையார் – நல்வழி

கருத்துஊழினால் அடையக் கூடிய ஆக்கக் கேடுகளைத் தவிர்க்க வல்லவர் ஒருவரும் இல்லை என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

அழகிய பூமியின்மேலே, மனதில் மாறுபாடு இல்லாமல் உண்மையாக வாழ்வதற்கு உரியாரை அழிக்கவல்லார் யாவர்? அது போல இறத்தலுக்கு உரியவரை இறவாமல் நிறுத்த வல்லார் யாவர்? ஒழிவு இல்லாமல் பிச்சைக்குச் செல்வோரை, தடுக்க வல்லவர் யாவர்?

விளக்கஉரை

  • ஓவாமல் – சளைக்காமல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – வைகாசி – 23 (2022)


பாடல்

நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும்
நெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி
அற்பமொடு பெருமையுமாய் அருமை யாகி
அன்புடையார்க் கெளிமையதாய் அளக்க லாகாத்
தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும்
ஆகின்ற தன்மையனை நன்மை யோடும்
பொற்புடைய பேசக் கடவோம் பேயர்
பேசுவன பேசுதுமே பிழையற் றோமே

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்துஈசனே அனைத்துமாகி இருப்பதை உரைத்தும், அதன் பொருட்டு அரசனிடத்தில் பயம் கொள்ளமாட்டோம் எனவும் உரைக்கும் பாடல்.

பதவுரை

நிற்பன என்றழைக்கபடும் மனிதனாகவும், நடப்பன என்றழைகப்படும் மிருகங்களாகவும், நிலமாகவும், நீராகவும், நெருப்பாகவும் , காற்றாகவும், நீண்ட வானமாகவும் (பஞ்ச பூதங்கள்), மிகசிறிய அளவில் இருக்கக்கூடியதாகவும், பெருமை தரதக்கவனாகவும், அருமை உடையவனாகவும், தன்னிடத்தில் அன்பு கொண்டவர்களுக்கு மிகவும் எளியவனாகவும், அளக்க இயலாததான தற்பரம் ஆனவனாகவும், சதாசிவமும் ஆகித் தானும் யானும் ஆகின்ற தன்மையுடைய சிவ பெருமானாகவும் அவன் நன்மைகளையும்  பொலிவுடைய தன்மைகளையும் புகழ்ந்து பேசக் கடவோம்; அதனால் பிழையற்றவரன் ஆனோம். சிறந்த உணர்வு இல்லாமல்  அரசனுக்கு வணங்கி நின்று அவனுக்கேற்ப  தன்மை உடையவர்கள்  பேசுமாறுபோல யாம் பேசுவமோ?

விளக்கஉரை

  • பரம் – மேலான பொருள் 
  • தத்பரம் – உயிருக்கு மேற்பட்டது
  • சதாசிவம் – சதா சிவதத்துவம்
  • தானும்  யானும் – இறைவனது பொருள் தன்மையையும் கலப்பினையும் உணர்த்தியது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – வைகாசி – 22 (2022)


பாடல்

எட்டாப் புரவியடி யீராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
கட்டக் கயிறெடுத்துக் கால்நாலும் சேர்த்திறுக்கி
அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா!
ஆண்டிருந்தா லாகாதோ!

அருளியச் சித்தர் : அழுகணிச்சித்தர்

கருத்துவாசி கொண்டு இறைவனை அடையும் வழியினைக் கூறும் பாடல்.

பதவுரை

கண்ணம்மா! (சூட்சமத்தினை குருமூலமாக அறிக)  புரவி எனும் வாசியினைப் போல் நில்லாமல் 12 அங்குலம் கொண்டு சென்று கொண்டிருகும் காற்றினை சுழிமுனை வாசலில் நிற்கச் செய்து, அதில் நான்கு அங்குல காற்றினை சுருக்கி, ஆன்ம தேசத்தை நம் சொந்தம் ஆக்கிகொள்ள முடியாதோ?

அட்டாள தேசம் என்பதனை எட்டு அங்குலம் உடைய தேகம் என்று கொண்டு உடல், மனம் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டுவருதலை உரைப்பதாவும் கொள்ளலாம்.

ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

வாசி முறைகள் குரு பரம்பரையாக வருபவை. உபதேசிகப்படும் குருவுக்கு தக்கபடி எண்ணிக்கையும், முறையும் மாறுபடலாம் என்பதால் குரு முகமாக அறிதல் நலம்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – வைகாசி – 7 (2022)


பாடல்

இருள் உதய நீக்கும் இரவியைப்போல் என்னுள்
அருள் உதய நன்றாய் அருளி – மருள் உதயம்
மாற்றியவன் ஆரூரன் மாமறையும் ஆகமமும்
சாற்றிய ஞானப்பிரகாசன்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – குருவே ஈசனாய் நின்று பாச நீக்கம் செய்து அருளிய திறத்தினை கூறும் பாடல்.

பதவுரை

ஆரூரில் உறைபவனும், பெரிய வேதங்களையும், ஆகமங்களையும் அறிவித்தவனாகிய ஞானப்பிரகாசனானவன், சூரிய ஒளியானது இருளைநீக்கும் தன்மையைப்போல் என்னுள்ளே அருள் தோற்றத்தினை தோன்றச்செய்து நன்றாய் அருளி அநாதிகாலம் தொட்டு தொடர்ந்து பெருகிவரும் பிறவியின் மயக்கம் மாற்றியவன்.

விளக்கஉரை

  • மருள் – மயக்கம், பேயாட்டம், பயம், திரி புணர்ச்சி.வியப்பு, உன்மத்தம், கள், குறிஞ்சியாழ்த்திறம் எட்டனுள் ஒன்று, எச்சம் எட்டனுள் பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை, பெருங்குரும்பை, புதல், பேய், ஆவேசம், புல்லுரு
  • இருள் உதயநீக்கு – அருள்தோற்றம் பற்றிய கணத்தில் மருள்நீக்கம் முற்றிலும் நீங்காதவாறு சிந்தித்தல் தெளிதல் போன்றவற்றை முற்றிலும் நீக்கி எனும் பொருள் பற்றி நின்றது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – பங்குனி – 24 (2022)


பாடல்

ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்து மாறுபோல்
மாடுகாட்டி என்னைநீ மதிமயக்கல் ஆகுமோ,
கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா,
வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே

அருளியச் சித்தர் : சிவவாக்கியர்

கருத்து – செல்வம் போன்ற இகலோக விஷயங்களில் மனதைச் செலுத்தாமல் தனக்கு மெய்வீட்டினை காட்டி அருள வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

தாருகாவனத்து முனிவர்களின் ஆணவம் அழியச் செய்வதற்காக அவர்கள் செய்த யாகத்தில் இருந்து தோன்றிய யானையை   கொன்று அதன் தோலை ஆடையாக அணிந்து பிட்சாண்டவர் வடிவம் கொண்டவனே! வலை விரித்து வேங்கைப் புலியை பிடிப்பதற்காக ஆட்டை கட்டி வைத்து பிடிப்பது போல இகலோக வாழ்வில் உழலச் செய்வதற்காக உறவுகள், செல்வம் போன்றவற்றைக் கொண்டு என்னுடைய மதியினை மயக்குதல் முறையோ? மெய்யான வீட்டை எனக்குக் காட்டி அந்த வழியிலே நிலைபெறுமாறு செய்து உன்னை அடையும் வழியைக்காட்டி என்னை வெளிப்படுத்த வேண்டும்.

விளக்க உரை

  • பதி, பசு, பாசம் என்ற சைவத்தின் மூன்று பெரும் பகுப்புகளில் மாடு எனும் பசுவானது அளவுக்கு உட்பட்டதாகிய ஜீவனைக் குறிக்கும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – பங்குனி – 23 (2022)


பாடல்

நிலைகெட விண்ணதிர நிலம்
   எங்கும் அதிர்ந்தசைய
மலையிடை யானைஏறி வழி
   யேவரு வேனெதிரே
அலைகட லால்அரையன் அலர்
   கொண்டுமுன் வந்திறைஞ்ச
உலையணை யாதவண்ணம் நொடித்
   தான்மலை உத்தமனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்துஉத்தமனாகிய ஈசன் அருளுவதன் பொருட்டு தானே கைலாச மலையில் இருந்து இறங்கிவந்து அருள் புரிந்த திறத்தை வியந்து உரைக்கும் பாடல்.

பதவுரை

திருக்கயிலைமலையில் வீற்றிருந்து அருளும் முதல்வனான உத்தமன், விண்ணுலகம் தனது இயல்பு நிலையில் இருந்து கெட்டு அதிரும்படியாகவும்,  நிலவுலகம் முழுதும் அதிரும்படியாகவும் மலையில் திரியும் யானை மீது ஏறி வந்து, தனது மலையாகிய கைலாச மலையை அடையும் வழியே வருகின்ற என் எதிரே வந்து, அலைகின்ற கடலுக்கு அரசனாகிய வருணனை பூக்களைக் கொண்டு எல்லொருக்கும் முன்னரே வந்து வணங்குமாறு செய்து, உடல் அழியாது உயர்ந்து நிற்கின்ற ஒரு நிலையை எனக்கு அளித்தருளினான்; அவனது திருவருள் என்னே!

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – பங்குனி – 22 (2022)


பாடல்

இளையம் முதுதவம் ஆற்றுதும் நோற்றென்
றுளைவின்று கண்பாடும் ஊழே – விளிவின்று
வாழ்நாள் வரம்புடைமை காண்பரேல் காண்டாரும்
தாழாமே நோற்பார் தவம்

நீதிநெறி விளக்கம் – ஸ்ரீ குமரகுருபரர்

கருத்து – மரணிக்கும் நாள் எதுவென்று யாருக்கும் தெரியாது என்பதால் உடனே தவம் செய்து கொள்ளுதல் மக்கள் கடன் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

நாம் இப்போது இளைஞராக இருக்கிறோம், இளமையில் இறத்தல் என்பது இல்லை என்றும், தமது வாழ்நாள் நீண்ட கால எல்லையினை உடையது எனும் எண்ணம் கொண்டும் முதுமையில் வருந்தி தவம் செய்வோம் என்று இப்பொழுது எவ்வித வருத்தமும் இல்லாமல் உறங்கிக் கிடப்பதும் ஒரு காலத்திலும் முறை ஆகாது. தமது ஆயுள் நாள் முடிவைக் காணும் துறவியரும் நொடிப்பொழும் தாமதிக்காமல் தவம் செய்வார்.

விளக்க உரை

  • வரம்பு – எல்லை, முடிவு, உளைவு, விளிவு
  • இளையம் – இளமை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – பங்குனி – 21 (2022)


பாடல்

ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்
கூட்டும்படி அன்றிக் கூடாவாம்-தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம்

நல்வழி – ஔவையார்

கருத்துமுற்பிறவியில் செய்த வினைகளை ஒத்தே இந்தப் பிறவியில் செல்வம் சேரும் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

உலகில் இருப்பவர்களே  கேளுங்கள்! பொருளை சம்பாதிப்பதற்காக கணக்கில் அடங்காத முயற்சிகள் செய்தாலும் செய்த வினையாகிய ஊழின் அளவே பொருள் ஈட்டுதல் கைகூடும்.அதற்கு மேல் நினைத்தாலும் செல்வம் சேராது. தேடிய செல்வத்தைக் கொண்டு அவர்களுக்கு மரியாதை செய்யும் உலக மக்களே! அந்தச் செல்வம் ஒருவரிடம் நிலையாகத் தரித்து இருப்பதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – மாசி – 11 (2022)


பாடல்

பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்

துணிந்தேஉமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்

பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்

டணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே

நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்துசிவனை பைரவ ரூபமாக கண்டு அவரை வணங்கி தன் சூலை நோய் எனும் வயிற்று வலியை நீங்க வேண்டி விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

திருவதிகைக் கெடிலநதிக்கு வடபால் விளங்கும் திருத்தலமான திருவீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள அரிய கடவுளே, உலகில் புறப்பற்றுகளோடு இருந்து பின் இறந்தவர்களை  எரித்த சாம்பலை உடலில் பூசிக் கொள்ள வல்லமை உடைய பெருமானே! விடை ஆகிய காளையை விரும்பி ஊர்தல் செய்பவரே, திருத்தலையைச் சுற்றிலும் வெண்டலைமாலை கொண்டு அணிந்தவரே, உம்மை வழிபாடு செய்பவர்களின் பாவங்களைப் போக்க வல்லவரே! இறந்தவருடைய மண்டை ஒட்டில்(பிரம்ம கபாலம்) பிச்சை ஏற்றுத் திரிபவரே! உம்மையே பரம்பொருளாகத் துணிந்து உமக்கு அடிமை செய்து அடியேன் வாழக்கருதுவதால், எம்மைத் துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவீராக.

விளக்க உரை

  • படுவெண்தலை – பட்டதலை
  • படுதல் – அழிதல்
  • பொடி – இறந்தவரது வெந்த உடம்பின் சாம்பற்பொடி
  • பெற்றம் – விடை, ரிஷபம், காளை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – தை – 29 (2022)


பாடல்

அத்துவித சித்த பரிசுத்தர்களிடத்தினில்
   அடுத்திடர் தொலைப்பம் என்றால்
ஆசையெனு மூவகைப் பேய்பிடித் தாவேச
   மாட்டும் வகையல்லாமலே
தத்து பரியொத்தமனம் எத்தனை சொன்னாலுமிது
   தன் வழியிலே இழுத்துத்
தள்ளுதே பாழான கோபமும் அடங்காது
   தன்னரசு நாடு செயுதே!
இத்தனை விதச் சனியில் எப்படி வழிப்படுவ
   தெப்படி பிழைப்பதம்மா?
இனியாகிலும் கடைக்கண் பார்த்து வினைதீர்த்து
   இணை மலர்ப்பதம் அருளுவாய்
வித்தகது தற்கணனிடத்தில் வளரமுதமே
   விரிபொழிற் திருமயிலை வாழ்
விரைமலர்க்குழல் வல்லி மறைமலர்ப்பத வல்லி
   விமலி கற்பகவல்லியே

ஸ்ரீ மயிலை கற்பகாம்பிகை பதிகம் – திருமயிலை கற்பகாம்பிகை பதிகம் – தாச்சி அருணாச்சல முதலியார்

கருத்துதுன்பங்களில் உழலும் தன்னை அதனிடத்தில் இருந்து காத்து அருள வேண்டி விண்ணப்பம் செய்யும் பாடல்.

பதவுரை

திருமயிலையில் வீற்றிருந்து மணம் பொருந்திய மலர்களை தனது கூந்தலில் அணிந்து வேதங்களால் தாங்கப் பெறும் திருவடிகளை உடையவளே, சிவபெருமானுக்கு  துணையாக இருக்கும் கற்பகவல்லியே! சித்தமானது  மாறுபாடு இல்லாமல்  இருக்கும் பரிசுத்தர்களை அடைந்து அவர்கள் மூலமாக துயரத்தை தொலைக்க எண்ணும் போது ஆசை, மாயை, கன்மம் எனும் மூவகைப் பேய்கள் பிடித்து ஆவேசமாக ஆட்டுகின்றது; குதிரையினை ஒத்த மனமானது எத்தனை நல்விஷயங்களை  உரைத்தாலும் அதனைக் கேளாமல் தன்னுடைய வழியிலே இழுத்து தள்ளுகிறது; அத்துடன் தீமை தரத் தக்கதான கோபமும் அடங்காது எவருடைய வார்த்தையும் கேளாமல் தானே ஆட்சி செய்கிறது; இவ்வாறு அனைத்தும் துன்பம் தருமாறு  இருக்கும் நிலையில் எவ்வாறு வழிபாடு செய்து வினைகளைக் குறைத்து பிழைக்கமுடியும்? எனவே நீ இனியாவது உன்னுடைய கடைக்கண் பார்வை தந்து என்னுடைய வினைகளைத் தீர்த்து ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும் மலர் போன்ற பாதங்களை அருளுவாய்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – தை – 22 (2022)


பாடல்

இந்திரன் மால்பிரமன் னெழி
   லார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த
   யானை யருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன்
  ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரனென்றான் நொடித்
   தான்மலை உத்தமனே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்துசுந்தரர், இறைவனார் தம்மை ‘நம் தோழர்’ என்றும் ‘ ஆரூரன்’ என்றும் அழைத்ததை தம் திருவாக்கால் உரைத்தப் பாடல்.

பதவுரை

திருக்கயிலையில் வீற்றிருந்து அருளும் முதல்வனாகிய எம்பெருமான், இந்திரன், திருமால், பிரமன், ஊக்கத்துடன் பாடுபவர்களாகிய தேவர்கள் ஆகிய எல்லாரும் வந்து என்னை எதிர் கொள்ளுமாறு செய்து, எனக்கு பெரிய யானையை  ஊர்தியாக அளித்து அருளச் செய்தான்.  அங்கு இருக்கும் மந்திரங்களை ஓதுகின்ற முனிவர்கள் `இவன் யார்` என்று கேட்டபோது, `இவன் நம் தோழன்’ என்றும் ‘ஆரூரன்’  என்னும் பெயரினை உடையவன் என்றும்  திருவாய் மலர்ந்து அருளினான். என்னே அவன் திருவருள்.

விளக்க உரை

  • மத்தம் – பெரியது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – மார்கழி – 13 (2021)


பாடல்

கட்டும் பாம்புங் கபாலங்கை மான்மறி
இட்ட மாயிடு காட்டெரி யாடுவான்
சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனை
எட்ட னைப்பொழு தும்மறந் துய்வனோ

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – ஈசனின் வடிவத்தினையும், அவனின் செயற்கறிய செயல்களையும் கூறி அவனை நினைந்து வாழமுடியாது என உரைக்கும் பாடல்.

பதவுரை

படம் எடுத்து ஆடும் பாம்பினை கட்டியவனும், பிரம்ம தலையாகிய கபாலத்தினையும், மான் குட்டியினையும் கையின் கொண்டவனும்,  மூலகாரணத்தில் அனைத்தும் ஒடுங்கும் உலக அழிவு ஆகிய சர்வசங்கார நிலையில் சுடுகாட்டினை விருப்பமுடன் உறையும் இடமாகக் கொண்டு அந்த இடுகாட்டில் ஆடுவானும், கல்வியினால்  அறியப்பட வேண்டியவற்றை  உணர்ந்தோராகிய பெரியோராகிய சிட்டர்கள் வாழும் இடமாகிய தில்லைச் சிற்றம்பலத்துக் கூத்தனை எள்ளளவுப் பொழுதேனும் மறந்து வாழ்வேனோ?

விளக்க உரை

  • கபாலம் – பிரமனது மண்டையோடு
  • மறி – கன்று
  • இட்டம் – விருப்பம் .
  • எரி – பிரளயகாலத் தீ
  • தனை – அளவு .
  • எள் – அளவின் சிறுமையினை காட்டுவது

 

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – கார்த்திகை – 23 (2021)


பாடல்

அறிவான தைம்பத்தோ ரெழுத்துக் கெல்லாம்
     ஆதிமணிச் சோதிநிற மான வாலை
விரிவான ராஜலிங்க சுரூப மாகி
     வின்னினொளி சித்தருக்குத் தெய்வ மாகிச்
சரியான நடுவணையிற் பருவ மாகி
     சடாட்சரத்தின் கோவையதாய் நின்ற மூலம்
குறியான பதியறிந்து குறியைக் கண்டு
     கூடினேன் சிதம்பரத்தி லாடி னேனே

அருளிய சித்தர் : அகத்தியர்

கருத்து – அகத்தியர் அம்பலத்தில் ஆடியதை குறிப்பிட்டு உரைக்கும்  பாடல்

பதவுரை

மெய்யறிவைத் தரத்தக்கதான ஐம்பத்தோரு எழுத்துகளுக்கு மேலானதானதும், எல்லாவற்றுக்கும் மேலானதும், சோதி வடிவமாகவும் இருக்கும் வாலையையும், பிரபஞ்சமாக பரந்து விரியும் ராஜலிங்க சொருபமாகவும், விண்ணில் ஒளிரும் சித்தர்களுக்கு தெய்வமாகவும் (ஸ்தூலத்தில் உள்ளும் எனவும் கொள்ளலாம்), இரு கண்களின் நடுவில் உள்ளதான அக்னி கலையின் இருப்பிடமான நடுவணையில் தோன்றி ஆறு ஆதாரங்களுக்கும் இணைப்பதான மூலமாக நின்றதான பதியாகிய இறைவன் இருப்பிடத்தைக் கண்டு அவருடன் இணைந்து  அம்பலத்தில் ஆடினேன்.

ஐயனின் முழுமையாக அக அனுபவம் சார்ந்து உரைக்கப்பட்டதாலும், பிழை கொண்ட மானுடம் சார்ந்து உரைப்பதாலும் பிழை இருக்கலாம். குறை எனில் மானுடம் சார்ந்தது, நிறை எனில் குருவருள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – கார்த்திகை – 19 (2021)


அமுதமொழி – பிலவ – கார்த்திகை – 19 (2021)

பாடல்

செப்பரிய மூன்றுலகுஞ் செம்பொன் னாக்குவோம்
செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்
இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்
எங்கள் வல்ல பங்கண்டுநீ யாடு பாம்பே

அருளிய சித்தர் : பாம்பாட்டி சித்தர்

கருத்து – சித்தர்கள் செய்யக்கூடிய சில அரும் செயல்களைக் கூறும் பாடல்

பதவுரை

நாகமே! உரைக்கக் கூடியதாகிய மூன்று உலகங்களையும் சிறப்புடைய பொன்னால் உடையதாக ஆக்குவோம்; வெப்பம் தரும் சூரிய கதிர்களை குளிர்ச்சி தரக்கூடியதாகிய சந்திர ஒளியாக மாற்றிச் செய்வோம்; பரந்து பட்டதான இந்த உலகத்தினை இல்லாமல் மறைப்புச் செய்வோம்; இப்படிப்பட்ட செய்யக்கூடிய சித்தர்களாகிய எங்களில் வல்லமையையக் கண்டு நீ ஆடுவாயாக.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – கார்த்திகை- 14 (2021)


பாடல்

ஒற்றியூரென்ற ஊனத்தி னாலது தானோ
அற்றப்பட ஆரூர தென்றகன் றாயோ
முற்றாமதி சூடிய கோடிக் குழகா
எற்றால்தனி யேஇருந் தாய்எம்பி ரானே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – திருவொற்றியூர் திருத்தலத்தையும், திருவாரூர் திருத்தலத்தையும் விடுத்து தனியாக திருக்கோடிக்குழகர் திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பதன் காரணத்தை  சிலேடையாக வினவும் பாடல்.

பதவுரை

வளர்பிறை எனப்படும் முற்றாத சந்திரனைச் சூடியுள்ள கோடிக்கரைக்கண் உள்ள அழகனே, எம்பெருமானே! ஒற்றி எனும் ஒற்றியூரையும், ஆருர் எனும் திருவாரூரையும் என்ன காரணத்தால் அறுதியாக நீங்கிவிட்டு எதனால் இங்குத் தனியேவந்து இருக்கின்றாய்?

விளக்க உரை

  • சிலேடை வகை – எத்துணையோ ஊர்கள் இருந்தும்  அவைகளை எல்லாம் விடுத்து, ஒருவரும் இல்லாத இவ்விடத்தில் ஏன் வந்து இருத்தல் வேண்டும்  எனும் பொருள் பற்றியது.

சமூக ஊடகங்கள்