மற்று நான் பெற்றது..

வடதிருமுல்லைவாயில் எழுதப்பட்ட சுந்தரர் தேவாரம்.

செய்த சபதம் மறந்து சங்கிலி நாச்சியாரை விட்டு திருவொற்றியூர் எல்லையைக் கடந்ததால் சுந்தரர் இரு கண்களையும் இழக்கிறார். காஞ்சிபுரம் செல்லும் வழியில் வடதிருமுல்லைவாயில் வருகிறார்.

இத்திருத் தலத்தில் 10+1 பாடல்கள் பாடுகிறார்.

அனைத்துப் பாடல்களும்  அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே என்று முடிகின்றன.

இதில் ஒரு பாடல் மட்டும் இப்போது.

மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார்? வள்ளலே! கள்ளமே பேசிக்
குற்றமே செயினும், குணம் எனக் கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன்;
செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லை வாயிலாய்! அடியேன்
பற்று இலேன்; உற்ற படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .

இப்பாடல் சாதாரண மனிதனை வைத்து எழுதப் பட்டதாகவே தோன்றுகிறது.

மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார் – எனக்கு கிடைக்கப் பெற்றது யாருக்கு கிடைக்கும்.

வள்ளலே – பெறுபவரின் நிலை அறியாமல் விரும்பிய அனைத்தையும் கொடுக்கக் கூடியவன்.

கள்ளமே பேசிக் குற்றமே செயினும் – என் உள்ளம் கள்ளத் தன்மை உடையது, குற்றம் புரியக் கூடியது.

குணம் எனக் கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன் – இது எனது பிறவிக் குணம். ஆதலால் இன்னும் பல தீமைகள் புரிந்தேன்.

செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லை வாயிலாய் – செருக்கு கொண்டவர்களின் கர்வத்தை திரிபுர தகனமாக(மும் மல காரியம்) செய்தவனே

அடியேன் பற்று இலேன் – பற்றுவதற்கு எதுவும் இல்லாதவன்.

என்னுடைய துயரத்தை களைவாய்.

சமூக ஊடகங்கள்

பெண் – இளமை துறத்தல்

வந்த சிவனடியார் அமுது உண்டு சென்றார்.

பரம தத்தன் பசியோடு வீடு திரும்பினான். புனிதவதியார் அமுது படைத்தார். அதோடு மாங்கனியையும் படைத்தார்.

மிகுந்த பசியோடு இருந்ததால் அவன் சொன்னான் ‘இன்னொன்றை எடுத்து வந்து இடுக’.  கணவன் மனைவி இருவருக்கும் இரட்டைகள் என்பது பொதுவானது. (இன்பத்திலும் துன்பத்திலும், வாழ்விலும் தாழ்விலும் – திருமண மந்திரம்). இது விடுத்து அவன் தான் மட்டும் உண்ண  நினைத்தது  தவறானது.

புனிதவதியார் திகைத்தார். இறைவனிடம் சென்று வேண்டினார். மற்றொன்று கிடைத்தது. அதனை அவனிடம் கொடுத்தார் புனிதவதியார். இது வரை அறையா சுவையாக இருந்தது. காரணம் வினவினான் பரம தத்தன்.

நடந்ததை விளக்கிச்சொன்னார் புனிதவதியார்.

பரம தத்தன் நம்பவில்லை. அவன் கூறினான். ‘அப்படி எனில் மற்றொன்றை இடுக’.

புனிதவதியார் இறைவனிடம் வேண்டினார். மற்றொன்று கிடைத்தது.

அதைக் கொண்டுவந்து பரம தத்தனின் கைகளில் அதை இட்டதும் அவன் அதை வாங்கினான். வாங்கியதை உணர்ந்ததும் அது மறைந்து விட்டது. பரம தத்தன் திகைத்தான். அவன் சொன்னது ‘மற்றொன்றை இடுக’ என்றுதானே அன்றி அதை தான் உண்ண வேண்டும் என்று சொல்லவில்லை. எனவே இட்ட உடன் மறைந்து விட்டது.

பரம தத்தன் தெய்வத்திற்கு தீங்கு இழைத்து விட்டதாக நினைத்தான். எனவே வியாபார நிமித்தமாக கடல் மார்க்கமாக பயணம் தொடந்தான்.

நம் பயணமும் கடல் மார்க்கமாக தொடர்கிறது.

சமூக ஊடகங்கள்

பெண் – இளமை துறத்தல்

காரைக்கால் அம்மையார்

இவர் காரைக்காலில் பிறந்தவர். இயற்பெயர் – புனிதவதி. வணிகர் மரபினை சார்ந்தவர்.

இளமை முதலே சிவ பக்தியில் சிறந்தவராக விளங்கினார். சிவ பத்தர்களை சிவனாகவே எண்ணி வணங்குவார்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரமதத்தன் என்பவருக்கு புனிதவதியை மணம் செய்து வைத்தார் அவர் தந்தையார்.

தந்தையாருக்கு புனிதவதியை கணவன் வீட்டிற்கு அனுப்ப மனம் இல்லை. எனவே காரைக்காலில் பரமதத்தன் தனது வியாபாரத்தை தொடர்ந்தார்.

பரமதத்தனை சந்திக்க வந்தவர்கள் அவனிடம் இரண்டு மாம்பழங்களை கொடுத்துச் சென்றனர்.(இதில் பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. இவைகள் இரட்டை என்ற கருத்துக்கு வலிமை சேர்க்கின்றன.கணவன் – மனைவி, பரமாத்மா – ஜீவாத்மா)

பரமதத்தன்  வேறு ஆள் மூலமாக அந்தப் பழங்களை புனிதவதியிடம் கொடுத்து அனுப்பினான்.புனிதவதி மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தார்.

ஐந்தொழில் புரிவோன் நாடகத்திற்கு தயாரானார்.

அப்போது வாயிலில் குரல் கேட்டது. ‘சிவாயா நம’

காரைக்கால் அம்மையார்,’திரு அமுது(சோறு) தயாராக இருக்கிறது. கறிஅமுது இன்னும் தயாராகவில்லை, சற்று பொருத்திருங்கள்’

சிவனடியார் – ‘மிக்க பசியாக இருக்கிறது. இருப்பதைப் படையுங்கள்’.

எனவே அமுது படையல் பரமதத்தன்  அனுப்பிய ஒரு மாங்கனியோடு நிகழ்தது.

காத்திருங்கள்.. நாயகனின்  நாடகத்திற்கு..

சமூக ஊடகங்கள்

பெண் – இளமை துறத்தல்

நான் அறிந்த வரையில் (மிக மிக சிறிய அளவு) பக்தி இலக்கிய காலத்திலிருந்து தற்காலம் வரை இரண்டு பெண்கள் தனது இளமையை துறந்திருக்கிறார்கள்.  (பல ஆண்கள் விரும்பி இருக்கிறார்கள்.  உ.ம் யயாதி – புரு – மஹாபாரதம்)

1. ஔவையார்,
2. காரைக்கால் அம்மையார்.

இருவருக்குமே இளமையின் மீது ஏன் அந்த வெறுப்பு ஏற்பட்டது?

1.சமூகம்
2.பொருளாதாரம்
3.வீடு
4.இறைமை குறித்த சிந்தனைகள்
5.காரைக்கால் அம்மையாருக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்து வரும் திருநீல கண்ட நாயனார் முலமாக வெளிப்பட்ட /பதிவு செய்யப்பட்ட ‘இளமை மீதூற இன்பத்துறையில் எளியன் ஆனார்’ என்ற எண்ணங்களின் துறத்தலா?
6.துறக்கப்பட்ட விஷயத்தில் இருந்த வலிகள்/காயங்கள்/வடுக்கள்.
7.இலக்கு நோக்கிய பயணம்.

நோக்கம் இருவருக்கும் ஒன்றாகத்தான்  இருந்திருக்கிறது.

காரைக்கால் அம்மையார் – என் சிறுவயதில் சொல்லப்பட்ட கதை இது.  இந்த பிரமிப்பு மற்றும் வலிகள் இன்றும் தொடர்கிறது.

ஒரு சராசரி ஆண் எப்படி வாழ்க்கையை நடத்தினான்,  இறையருளால் ‘அம்மா’ என்று அழைக்கப்பட்ட பெண் எப்படி அடைய முடியா இலக்கை அடைந்தாள் என்பது மிக நீண்ட வரலாறு.

காலத்தினை கருத்தில் கொண்டு காரைக்கால் அம்மையார் சரிதத்தை எழுத இருக்கிறேன். தவறு இருப்பின் தெளியப் படுத்துங்கள்.

Photo – Shivam

சமூக ஊடகங்கள்

காதல் = பக்தி இலக்கியம்

காதலில் பல வகைகள் உண்டு.  பக்தி இலக்கியங்கள் அதனை பெரிதும் பின்பற்றுகின்றன.
தன்னை தலைவியாகவும், இறைவனை தலைவியாகவும் இந்த இலக்கிய காதல்கள் போற்றுகின்றன.

திருநாவுக்கரசரின் பின்வரும் பாடல் அதனை நன்கு விளக்குகிறது.

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் 
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் 
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் 
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் 
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் 
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் 
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.

கேட்டு, கண்டு, உணர்தல் அங்கே நிகழ்கிறது. காட்சிகள் விரிகின்றன.
தோழியினடத்தில் கேட்கிறாள்.

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் –  முதலில் அவனது பெயர் என்ன என்று கேட்கிறாள்.
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்  – அவனது உருவ அமைப்புப் பற்றி கேட்கிறாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் – அவனது சொந்த ஊர் பற்றி கேட்கிறாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் – பின் அவன் பொருட்டு பைத்தியமாகிறாள்.

இவ்வடிவத்தில் முக்கியமானதொரு விஷயம் ‘கேட்கிறாள்’.’கேட்கிறாள்’  என்ற நிலை தன்னை இழந்த நிலை. காதும் மனமும் வேறு வேறு  வேலையைச் செய்கின்றன்.
காதல் எத்தனை விஷயங்களை செய்கிறது என்ற பட்டியல்.

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அன்னையையும், மற்ற எல்லாவற்றையும் விலக்குகிறாள். ‘நீத்தாள்’ – மீண்டும் திரும்ப முடியாத நிலை. (உ.ம் நீத்தார் விண்ணப்பம் – மாணிக்கவாசகர். அன்னையை எவ்விதத்திலும் விலக்க முடியாது என்பது துணிபு. ஆதிசங்கரர், பட்டினத்தார்)

எல்லா இடங்களுக்கும்/வீடுகளூக்கும் என்று சில ஆசாரங்கள் இருக்கின்றன. இங்கே ஆசாரங்கள் என்பது பழக்க வழக்கங்கள். அதை விட்டு விலகினாள்.
தன்னை மறந்து விடுகிறாள். தன் பெயரையும் மறந்து விடுகிறாள். இரண்டும் வெவ்வேறு நிலைகள். முதல் வகை குறுகிய காலம் குறித்தது. இரண்டாவது நீண்ட காலம் குறித்தது.

அவனது தாளை சரணடைந்தாள்.
வாருங்கள் நமது பொக்கிஷங்களை பேணிக்காப்போம்.

சமூக ஊடகங்கள்