
பாடல்
ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர்
ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே
சிவவாக்கியர்
கருத்து – அகத்திலும் புறத்திலும் நிறைந்திருக்கும் ஈசனை வழிபடும் முறையை கூறும் பாடல்
பதவுரை
யோக சாதனை செய்து தவ வாழ்வு மேற்கொள்பவர்களால் கண்டம் எனப்படுவதாகிய கழுத்தில் இருந்து சங்கின் ஒலியை எழுப்ப இயலும். அது அகத்தில் இருந்து பெறப்பட்டு புறத்தில் வெளியிடப்படுகிறது. இவ்வாறு அகம் புறம் அனைத்திலும் நிறைந்திருக்கும் ஈசனையும் அவன் திருவருளையும் உணராமல் புற உடல் சார்ந்து அதற்கு மட்டும் மதிப்பு அளித்தல் எவ்வாறு பொருந்தும்?
விளக்க உரை
- ‘ஒரு கல்லை இரண்டாய் உடைத்து ஒன்றை வாசலில் பதித்தும் இன்னொன்றைக் கடவுள் எனச் சிலை செய்து வணங்குகிறீர்கள்;. இவற்றில் ஈசனுக்குகந்த கல் எதுவென்று கொள்ள முடியும் என்று வினவுகிறார்’ என்று பல இடங்களில் விளக்கம் காணப்படுகிறது. சிவனுடைய எண்ணங்களை வெளிப்படுத்தும் சித்தர் என்பதாலும், உருவ வழிபாட்டினை ஏற்றுக் கொள்ளாதவர் என்பதாலும் பொதுவான இக்கருத்து விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
சித்தர் பாடல் என்பதாலும் ஈசனிடம் இருந்து பெறப்பட்ட அனுபங்களை விவரித்து எழுதியதாலும் பதவுரையில் பொருள் குற்றம் இருக்கலாம். குறை எனில் மானிடப் பிறப்பு சார்ந்தது. நிறை எனில் குருவருள்.