இயல்பாய் இரத்தல்

புகைப்படம் : திரைப்பட இயக்குனர் திரு. ஐயப்ப மாதவன்

 

எவரும் அறியாமல்
என் கைகள் நீண்டும் குறுகியும் ஆகின.
யாரும் அற்ற ஒரு பொழுதினில்
யாசகம் வேண்டி நின்றேன் ஒருவனிடம்.
‘உனக்கு மட்டும் ஏன் கைகள் இப்படி ஆகின்றன?’
என்றான் அவன்.
யாசித்தல் இயல்பு ஆன பொழுதுகளில்
இடம் சென்று பெறுதல் அரிதானதால்
இவ்வாறானது என்று உரைத்தேன்.
எப்பொழுது இது மறையும் என்றான்?
இயல்பாய் ஒருவன்
இடும்போது மறையும் என்றேன்.
எவரும் அறியா விஷ்யங்களை
இனம் கண்டு கொண்டது எங்கனம் என்றேன்?
இயல் புன்னகை பூத்து
கைகளில் இடுகிறான்.
புவனம் கனகம் ஆகிறது
காலம் உறைகிறது.

சமூக ஊடகங்கள்

சுணங்கன்

புகைப்படம் : இயக்குனர் திரு. ஐயப்ப மாதவன் அவர்கள்

​ஆதி நாளில் நீ தனித்திருந்தாய்;
கூடி வந்த காலமதில்
நாம் தனித்து இருந்தோம்;
அகிலின் வாசம்
அறையை நிரப்புகிறது.
பெரும் தீயாகி என்னை​​
உன்மடியினில் கிடத்துகிறாய்.
மோனத்தீயாகி
முத்தமொன்றை இடுகிறாய்
கண்களில் இருந்து விழிநீர் அருவியாகி
வழிந்தோடுகிறது.
புறவெளியில்
மாய உலகில் காற்றினை உரசி
வார்தைகள் தோன்றி மறைகின்றன.
‘இரத்தம் இருந்தப்ப ஆடின,
சுண்டினப்பின் கண்ணீர் விட்டு
என்ன புண்ணியம்’

 

*சுணங்கன் – நாய் போலத் திரிபவன்

சமூக ஊடகங்கள்

மழைத்தெரு

மழைத்தெரு

புகைப்படமும், தலைப்பும் : திரைப்பட இயக்குனர் திரு. ஐயப்ப மாதவன்

அன்றொரு நாளின்
பெருமழையினில்
நீ என்னோடு பயணித்தாய்.
பெருமழையில் நனைந்தபடி
நம் இருவருக்குமான
மழை நினைவுகளை
வரிசைபடுத்தச் சொன்னாய்.
பெருமழையில் தேனீர்;
மழையை உன் துப்பட்டாவால்
துடைத்த நிகழ்வு;
இலக்கியம் பேசியபடி நகர்ந்த நிகழ்வு;
இசையின் பரிமாணங்களில் உன் வியப்பு
வார்த்தைகளின் கோர்வையில்
பெருமிதம் கொண்டு
இன்னும் கூறவாக என்று புன்னகைக்கிறேன்.
மௌன மழையில் உன் கண்ணீரை
கரைத்துவிடு என்று கூறி
விலகலுக்கான காரணம் விளக்குகிறாய்.
தனித்த நகர்தலுடன்
இப்பொழுதும்
பெருமழை பெய்து கொண்டிருக்கிறது.

சமூக ஊடகங்கள்

மௌன மரம்

மௌன_மரம்_Iyyapa_Madhavan

புகைப்படம் : திரு. ஐயப்ப மாதவன், திரைப்பட இயக்குனர்

நாளொன்றின் இறுதியில்
வானம் பார்த்திருக்கையில்
தனித்தனி பறவை இனங்கள்
தனித்தனி மரங்கள் அடைந்தன.
அடைந்தப்பின் பறவைகள் மறைந்து
மரங்கள் தனித்து இருந்தன.
கரைந்த காலங்களில்
மாறாது இருந்தது இந்நிகழ்வு.
சந்தி இரவொன்றில்
அறிந்திரா புதிய மரமொன்று எதிர்ப்பட்டது
‘மௌன மரம்’ என்று தன்னிலை விளக்கம் சொன்னது.
தேகம் இளைத்தவர்கள், யாசிப்பவர்கள்
பெரும் பயண வழி அற்றவர்கள்,
மனிதர்களால் கைவிடப்பட்டவர்கள் எங்களில் இலக்கு;
அவர்களை யாம் சென்றடைவோம் என்றது.
இன்னும் பல பகுப்புகள் உண்டு.
இருந்தாலும் இதை மட்டும் உரைத்தோம்
என்றும் உரைத்தது.
பிறிதொரு நாளில் என்னில்
சுடர் எனக்கரைந்திருந்தது
மௌன மரமும்.

சமூக ஊடகங்கள்

இயல்பானவன்

இயல்பானவன்_IyaapaMadhavan

புகைப்படம் : திரைப்பட இயக்குனர்  திரு. ஐயப்ப மாதவன்

புகைவண்டி பயணத்தில்
இயல்பில்லாதவனை
எளிதில் கண்டறியக்கூடும்.

ஜன்னலுக்கு வெளியே
யாருமற்ற புல்வெளியில்
வானம் பார்த்து
ஒருவன் உறங்கிக் கொண்டிருக்கலாம்
கடந்து செல்.

அன்றைய செய்தித் தாளினை
எவரும் படிக்க இயலாமல்
எட்டாய் மடித்து
ஒருவன் வாசித்துக் கொண்டிருக்கலாம்
கடந்து செல்

யாசிக்கும் மனிதனின்
கண்ணீர் தாண்டி
மறுதலிக்கும் மனம் அறிந்து
கடந்து செல்.

நடை பாதை ஒன்றில்
‘இறைவனிடம் கை ஏந்துங்கள்’
எனும் பாடலை
சுருதி மாறாமல் பாடும்
பாடலை கேட்டு கடந்து செல்.

உன் நிலை கண்டும்
மற்றொருவன்
கவிதை எழுதக் கூடும்,
அப்போது நீ
இயல்பானவனாக மாறி இருப்பாய்

சமூக ஊடகங்கள்

பற்றிய மௌனம்

பற்றிய மௌனம்_IyyapaMadhavan

நிழலும் நிஜமும் : திரைப்பட இயக்குனர் திரு. ஐயப்ப மாதவன்

யாரும் அறியா கணமொன்றில்
உடல் பிரிந்து உயிர் தனியானது.
காணப்படுபவைகளை காட்சியாக்கி கண்டது.
தன்னிலை அறிந்து தான் மீண்டும் கூடு அடைந்தது.
பெறத் துடிக்கும் ஒன்றை
பெற்றதாய் கொண்டது மனம் ஒன்று.
அடைய முடியா புவனங்கள்
அண்டத்தில் இல்லை
என்று கூறி பெரு நடை ஒன்றை பயின்றான்
பித்தனொருவன்.
கருமை நிறம் கொண்டவனுடன் வந்த
கருமை நிற நாய் ஒன்று
வேகமாக தாவியது அவன் மேல்.
உடலுக்குள் உயிர் ஒடுங்கியது.
‘கூத்தனின் நாடகத்தில் குறை உண்டோ’
எனக் கூறி அவ்விடம் அகன்றான்
கருமை மனிதன்
பிறிதொரு நாளில்
உடலும் உயிரும் தனித்த பொழுதுகளில்
மௌனம் பொருந்தி
காலம் இயல்பு இழந்திருந்தது.

சமூக ஊடகங்கள்

முதுகாடு

முதுகாடு_IyaapaMadhavan

புகைப்படம் : திரு. ஐயப்ப மாதவன், திரைப்பட இயக்குனர்.

வினாடிகள்
வினாடியாகத் தான் சேர்ந்து மறைகின்றன.
ஒன்றின் தொடர்ச்சி போல் இல்லாமல்
ஒவ்வொன்றும்.
ஆனாலும்
கடந்த யுகமுடிவில் பட்ட அதே பிம்பத்தில்
இந்த உடலும் அதே நினைவுகளும்.

 

முதுகாடு - இடுகாடு, சுடுகாடு

சமூக ஊடகங்கள்

சொரூப நீட்சி

சொரூப நீட்சி_Iyyappa Madhavan

 

புகைப்படம் : ஐயப்ப மாதவன், திரைப்பட இயக்குனர்

 

அஞ்சன இரவொன்றில்
யாருமற்ற தனிமையில்
தலையணையை ஈரமாக்கும்
விழித் துளிகள் வீசிச் செல்கின்றன
இழப்பதற்கு என்று
எதுவும் இல்லை
இளமையும், வறுமையும் தவிர.

சமூக ஊடகங்கள்

அமலம்

அமலம்_KP

புகைப்படம் : Karthik Pasupathy

பிரபஞ்சத்தின் நீட்சியில்
காலபரிமாணம் அற்று
வான்முட்டி கூட்டமாக பறந்தன
சில பறவைகள்.
அறியாத பொழுதொன்றில்
மரித்து தரை சேர்ந்தது
பறவை உடல் ஒன்று.
கத்தின, கூக்குரலிட்டன, கரைந்தன.
உருவம் அழிவதாய் ஒலித்தன
உயிர் கொண்ட பறவைகளின் குரல்கள்.
பின்னொரு பொழுதுகளில்
விரும்பி வானம் கொண்டன.
சலனப்பட்டு இருந்தது காற்று
சலனம் அற்று இருந்தது வானம்.

*அமலம் – மாசு அற்றது

சமூக ஊடகங்கள்

சொல்லாடுதல்

சொல்லாடுதல்_KP

புகைப்படம் :  Karthik Pasupathi

வீட்டில் இருக்கும் கம்யூட்டரில் HD சரியாக வேலை செய்யவில்லை. நண்பர் வந்து புது HD மாற்றிக் கொடுத்தார்.
இதுல எது எது எது வேணும்னு சொன்னீங்கன்னா அதெல்லாம் புது HDல காப்பி செய்துடலாம்.
12 வருடங்களுக்கு மேற்பட்ட விஷயங்கள். எப்படி உடனடியாக தேர்வு செய்ய முடியும். சரி, வரிசையா ஒன்னு ஒன்னா பாத்துக்கிட்டே வாங்க. நீங்க சொல்றதை மட்டும் காப்பி செய்துடுறேன்.

இது இளையராஜா பாடல்கள் …இது வேணும்.
இது நான் கடவுள் மூவி .. இது வேணும்.
யோகி ஃபோல்டர்ல என்ன இருக்குன்னு பாருங்க?
ஏதோ பெபில்ஸ்ன்னு இருக்கு.

என் இனிய பொன் நிலாவே பாடலில் வருவது போல் காலம் சுழல ஆரம்பித்தது.

அப்போது யோகிக்கு பேச்சு வரவில்லை. சில நேரம் ம்,.. ம்ம்.. சந்தோஷப் படும் போது வேகமாக குதிப்பான்.

ஒரு முறை கடைக்கு சென்றிருந்த போது அழுதான். அப்போது DVD பிளேயரில் இருந்து பாடல்கள் ஒலித்தன. உடன் அழுகை நின்றது.
சார், இது என்ன பாடல்?
குழந்தைகளுக்கான பாடல் சார்.
எவ்வளவு சார்?
99ரூ.
நான் இத எடுத்துக்கிறேன் சார்

அன்று முதல் பக்தி பாடலுக்கு பதிலாக இந்தப்பாடல்கள் தான் ஒலிபரப்பாகும் (அப்படித்தான்)

பேச்சு வர ஆரம்பித்தது.
சைகை காட்டியது போய் கம்யூட்டரை அவனே ஆன் செய்து பாடல்களை வைக்கக் கற்றுக் கொண்டான்.

என் இனிய பொன் நிலாவே பாடல் முடிவுக்கு வந்தது.

அட என்னா அங்கிள் நீங்க, அவருகிட்ட போய் கேட்டுகிட்டு இருக்கீங்க. எல்லாத்தையும் காப்பி பண்ணி போட்டுடுங்க. இல்லேன்னா கத்துவார். இவரு கௌதம் ஃப்ரெண்ட் வேற. படத்துக்கு ஒரு டிக்கெட் எடுத்து குடுக்க முடியல. நீங்க என்ன பண்ணுங்கண்னா, மியுசிக் சைட்ல போயி AYM படத்துல வர ‘தள்ளிப்போகாதே’ பாட்டை டவுண்லோட் செய்து குடுங்க. அப்பாவ கேட்காதீங்க.

 

*சொல்லாடுதல் – பேசுதல்

சமூக ஊடகங்கள்

மாகேஸ்வர பூசை

%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0_%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%88_ramn

 

புகைப்படம் : ராம்

காட்சி – 1

ராமாபுரம் சிக்னலில் இருக்கும் ஒரு போலீஸ்காரர் எனது நண்பர். அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.

என்னவோ சார், என்னன்னு தெரியாமாக எங்க பொழப்பு ஓடுது. சார், எனக்கு சுகர், அங்க கூட்டத்த கன்ட்ரோல் பண்ணிகிட்டு இருக்கறப்ப திடீர்ன்னு சுகர் சூட் அப் ஆயிடும். என்ன செய்யிறதுன்னு தெரியாது. மயக்கம் வரும். அப்பத்தான் இங்க வந்து பன்னுல பாதி கடிச்சிட்டு (சொல்லுகையில் குரல் உடைந்திருந்தது – பசி அனுபவித்தவர்கள் கண்களில் அது பற்றி சொல்லும் போது எப்பொழுதும் எழும் பிறர் அறியா கண்ணீர்) மீதிய இங்கயே போட்டு போய்டுவன். பாக்றவன் என்னா சொல்வான்னா ‘ வேலை பாக்ற நேரத்தில திங்கிறான் அப்படீம்பான்’ என்னா செய்றது சார். நம்ம பொழப்பு அப்படி. ஆனா ஒன்னு சார், நம்ம நிலம எதிரிக்கு கூட வரக்கூடாது.

காட்சி – 2

மெஸ் -பொத்தேரி

டேய், டேய் இங்க வாடா (கடைக்கார அம்மா ஒரு ஆட்டோ டிரைவர் பையனை அழைக்கிறார்)

இல்ல வந்து…

டேய், வாடா வந்து 4 இட்லி திண்ட்டு போடா

இல்ல வேண்டாம்.

என் பக்கம் பார்வை திரும்பியது.

சார், இந்த பய நான் பார்த்து வளர்ந்தவன். சாப்பிட காசு இல்லேன்னு திரும்பி போறான். கேட்டா உனக்கு செலவுன்றான், இவனுக்கு நாஸ்டா குடுத்தாவா நான் கொறஞ்சிடப் போறேன்.

காட்சி – 3

பிறந்து ஒரு வாரமே ஆன 2 நாய் குட்டிக்கள் மற்றும் ஒரு ஆடு.

இரு நாய் குட்டிகளும் ஆட்டுக்குட்டியிடம் பால் அருந்த முற்படுகின்றன. ஆடு வேகமாக விலகிச் செல்கிறது.

இடம் : பால் இல்லாமல்அழுத ஞான சம்பந்தருக்கு அம்மை பால் கொடுத்த சீகாழி திருக்குளம்  அருகே.

மாகேஸ்வர பூசை – ஒவ்வொரு உயிரிலும்  கலந்து இருக்கும் இறைவனுக்கு உணவுபடைத்தல்

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – மாக்கான்

 
 
இது சுமாராக 30 வருடங்களுக்கு முன்பு நடந்ததாக இருக்கலாம்.
மதியம் 12 மணியில் இருந்து 1 மணிக்குள் ஒருவ(ன்)ர் வருவார். எங்கிருந்து வருகிறார், எங்கு அவருக்கு வீடு, அவருடன் யார் யார் இருக்கிறார்கள என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.
மேல் ஆடை தூய வெண்மையாக இருக்கும்.வேட்டி சற்றே வெளுத்த காவி. கைகளில் மிக சுத்தமான ஒரு பித்தளை பாத்திரம். (நிச்சயம் 5 கிலோ இருக்கும்.கிட்டத்தட்ட பாய்ஸ் படத்தில் செந்தில் வைத்திருக்கும் பாத்திரம் போல).
நாங்கள்( 3 பேர்) அவருக்கு வைத்த பெயர் ‘மாக்கான்’. அந்நாளில் அதன் அர்த்தம் தெரியாது.
எல்லா வீடுகளுக்கும் செல்ல மாட்டார். நிச்சயமாக 4 வீடு மட்டுமே. அதுவும் தினசரி அந்த 4 வீடுகளில் மட்டுமே வாங்குவார். அந்த 4 வீட்டிலும் மறுக்காமல் தினமும் உணவளிப்பார்கள்.
இரவில் மிக மெல்லியதாக ஒலிக்கும் வானொலியின் குரலை ஒத்திருக்கும் அவர் குரல்.’அம்மா சோறு போடுங்க‘  இதுவே அவரிடம் இருந்து வரும் அதிகப்படியான வார்த்தைகள்.
இரண்டு மூன்று அறைகள் இருக்கும் வீடுகளில் சில நண்பர்களுடன் ஒளிந்து கொள்வேன். யாருக்கும் கேட்காமல் எல்லோரும் சேர்ந்து கத்துவோம். ‘அம்மா சோறு போடுங்க‘. சத்தம் அதிகமானால் வீட்டு பெண்களிடம் இருந்து அடி விழும்.
சில நாட்களில் கைகளில் இருக்கும் குச்சியால் விரட்ட வருவார். பல நாள் எதுவும் செய்ய மாட்டார்.
 
மூன்று வருடங்கள் தொடர்ந்து அவரை பார்த்திருக்கிறேன்.
பிறகு
அவரைக் காணவில்லை.
இன்றைக்கும் யாராவது யாசித்தால் இந்த ஞாபகம் தவிர்க இயலாதாக இருக்கிறது. எவ்வித காரணும் இன்றி இன்று உங்கள் நினைவு.
நீங்கள் எவ்வடிவத்திலும் இருக்கலாம். என் செய்களுக்காக மானசீகமா மன்னிப்பு கோருகிறேன். 
ஏனெனில் நீங்கள் ‘ப்ரம்மம்’.
புகைப்படம் : R.s.s.K Clicks

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – செம்பருத்தி

ஒரு நாள் பூ மார்கெட்டில் இருந்தேன்.
இதென்ன, செம்பருத்தி பூப்போல் இருக்கிறதே..
‘என்னா சார், அப்படி பாக்கிற. இது செம்பருத்தி பூ. எடுத்துக்க. 3 பத்து ரூபா. உனக்காக 4 தரேன்’.
டேய் மணி 4.30 ஆச்சு எழுந்திரி. போய் பூ எடுத்து கிட்டுவா.
தூக்கம் தூக்கமா வருது.
‘பூ எடுத்துகிட்டு வந்து சாமிக்கு போட்டா புண்ணியம்’. அன்று கட்டிய பூக்கள் இல்லாத காலம். (காலம் என்ன காலம் 1000 வருஷத்துக்கு முன்னாடியா, இப்பத்தான் 30 வருஷத்துக்கு முன்னாடி)
உறவுகளுடனும், நண்பர்களுடனும் பூவினை  பகிர்தல் என்பது இல்லாத காலம்.
இன்னைக்கு எப்படியும் ராமு வீட்டு அரளியையும், செல்லமா அவர்கள் வீட்டில் செம்பருத்தியையும் அந்த செந்தில் பயல் எடுக்குறத்துக்கு முன்னாடி எடுத்துடனும். உடல் வேகம் கொண்டது.
1.
அப்பாடா இன்னும் யாரும் வரல.அதால எல்லா பூவும் நமக்குத்தான்.
2.
ஓஹோ, இன்னைக்கு நீ அரளிப்பூ எடுக்கறயா. இரு நான் போயி செம்பருத்திப் பூ எடுத்து முடிச்சிடுறேன்.
n
கொஞ்சம் தூங்கிட்டேன். அதனால எல்லாப் பூவையும் அவன் எடுத்துட்டான்.
இரண்டு விதமான செம்பருத்தி. ஒன்று சாதாரண செம்பருத்தி, மற்றொன்று அடுக்கு செம்பருத்தி, ஒவ்வொன்றும் இப்போதைய உள்ளங்கைகளை விட பெரியது. கொஞ்சம் பவழமல்லி(பாரிஜாதம் என்பதை விட பவழமல்லி என்றால் வாசனை கூடத்தான்). பவழமல்லியை ஊசி நூலில் கோர்த்து பட அளவுக்கு போட்டா தனி அழகுதான்.
பெரியவர்களின் பேச்சுக்கள்
1.பாத்துப் போ, பூச்சி பொட்டு (பாம்புதானே) ஏதாவது செடில கிடக்கப் போவுது.
2.ஏண்டா இப்படி இத்தனை விடியக் காலையில வந்து பூ எடுக்குறீங்க. இன்னைக்கு .உங்க வீட்ட சொல்றேன். விடிஞ்ச பிறகு வாங்கடா?
3ஏண்டி கண்ணுகளா, எல்லா பூவையும் எடுத்துகிட்டு போறீங்களே. எனக்கு கொஞ்சம் குடுக்கக் கூடாதா. செல்லம்மா மச்சி (யார் இப்படி ஒரு உறவை சொல்லி முதலில் அழைத்தார்கள்). இது தான் அதிக பட்ச கோவம். ஆனால் எந்த பெரியவர்களும் மனமார திட்டியதில்லை
டேய், மாப்ள ஒனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நம்ம கட செந்தில் அதாண்ட ஒன்னோட பூ எடுபான அவன் செத்துப் போயிட்டான் என்ற நண்பன் போனில் சொன்ன நிகழ்வும், போதும்பா எவ்வளவு நேரம் தான் பூவை பாத்துகிட்டே நிப்ப. சீக்ரம் வாங்கு. வீட்டுக்கு போகணும் என்ற மகனின் குரலும் ஒரு சேர ஒலிக்கின்றன.
மலர்கள் மரணிப்பதில்லை. ஏனெனில் அவைகளின் வாசம் எப்போதும் நீங்காமல் இருப்பதால்.

புகைப்படம் :  SL Kumar

சமூக ஊடகங்கள்