அமுதமொழி – பிலவ – பங்குனி – 23 (2022)


பாடல்

நிலைகெட விண்ணதிர நிலம்
   எங்கும் அதிர்ந்தசைய
மலையிடை யானைஏறி வழி
   யேவரு வேனெதிரே
அலைகட லால்அரையன் அலர்
   கொண்டுமுன் வந்திறைஞ்ச
உலையணை யாதவண்ணம் நொடித்
   தான்மலை உத்தமனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்துஉத்தமனாகிய ஈசன் அருளுவதன் பொருட்டு தானே கைலாச மலையில் இருந்து இறங்கிவந்து அருள் புரிந்த திறத்தை வியந்து உரைக்கும் பாடல்.

பதவுரை

திருக்கயிலைமலையில் வீற்றிருந்து அருளும் முதல்வனான உத்தமன், விண்ணுலகம் தனது இயல்பு நிலையில் இருந்து கெட்டு அதிரும்படியாகவும்,  நிலவுலகம் முழுதும் அதிரும்படியாகவும் மலையில் திரியும் யானை மீது ஏறி வந்து, தனது மலையாகிய கைலாச மலையை அடையும் வழியே வருகின்ற என் எதிரே வந்து, அலைகின்ற கடலுக்கு அரசனாகிய வருணனை பூக்களைக் கொண்டு எல்லொருக்கும் முன்னரே வந்து வணங்குமாறு செய்து, உடல் அழியாது உயர்ந்து நிற்கின்ற ஒரு நிலையை எனக்கு அளித்தருளினான்; அவனது திருவருள் என்னே!

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – தை – 22 (2022)


பாடல்

இந்திரன் மால்பிரமன் னெழி
   லார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த
   யானை யருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன்
  ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரனென்றான் நொடித்
   தான்மலை உத்தமனே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்துசுந்தரர், இறைவனார் தம்மை ‘நம் தோழர்’ என்றும் ‘ ஆரூரன்’ என்றும் அழைத்ததை தம் திருவாக்கால் உரைத்தப் பாடல்.

பதவுரை

திருக்கயிலையில் வீற்றிருந்து அருளும் முதல்வனாகிய எம்பெருமான், இந்திரன், திருமால், பிரமன், ஊக்கத்துடன் பாடுபவர்களாகிய தேவர்கள் ஆகிய எல்லாரும் வந்து என்னை எதிர் கொள்ளுமாறு செய்து, எனக்கு பெரிய யானையை  ஊர்தியாக அளித்து அருளச் செய்தான்.  அங்கு இருக்கும் மந்திரங்களை ஓதுகின்ற முனிவர்கள் `இவன் யார்` என்று கேட்டபோது, `இவன் நம் தோழன்’ என்றும் ‘ஆரூரன்’  என்னும் பெயரினை உடையவன் என்றும்  திருவாய் மலர்ந்து அருளினான். என்னே அவன் திருவருள்.

விளக்க உரை

  • மத்தம் – பெரியது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – கார்த்திகை- 14 (2021)


பாடல்

ஒற்றியூரென்ற ஊனத்தி னாலது தானோ
அற்றப்பட ஆரூர தென்றகன் றாயோ
முற்றாமதி சூடிய கோடிக் குழகா
எற்றால்தனி யேஇருந் தாய்எம்பி ரானே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – திருவொற்றியூர் திருத்தலத்தையும், திருவாரூர் திருத்தலத்தையும் விடுத்து தனியாக திருக்கோடிக்குழகர் திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பதன் காரணத்தை  சிலேடையாக வினவும் பாடல்.

பதவுரை

வளர்பிறை எனப்படும் முற்றாத சந்திரனைச் சூடியுள்ள கோடிக்கரைக்கண் உள்ள அழகனே, எம்பெருமானே! ஒற்றி எனும் ஒற்றியூரையும், ஆருர் எனும் திருவாரூரையும் என்ன காரணத்தால் அறுதியாக நீங்கிவிட்டு எதனால் இங்குத் தனியேவந்து இருக்கின்றாய்?

விளக்க உரை

  • சிலேடை வகை – எத்துணையோ ஊர்கள் இருந்தும்  அவைகளை எல்லாம் விடுத்து, ஒருவரும் இல்லாத இவ்விடத்தில் ஏன் வந்து இருத்தல் வேண்டும்  எனும் பொருள் பற்றியது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 22 (2021)


பாடல்

படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப்
     பாய்பு லித்தோல் அரையில் வீக்கி
அடங்க லார்ஊர் எரியச் சீறி
    அன்று மூவர்க் கருள்பு ரிந்தீர்
மடங்க லானைச் செற்று கந்தீர்
     மனைகள் தோறுந் தலைகை யேந்தி
விடங்க ராகித் திரிவ தென்னே
     வேலை சூழ்வெண் காட னீரே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – செயற்கரிய செயல்களை செய்து முடித்தவராகிய சிவபெருமானை கபாலத்தில் யாசிப்பது ஏன் என வினவும் பாடல்

பதவுரை

கடல் சூழ்ந்த திருவெண்காட்டை தலமாக உடைய இறைவரே! படம் எடுத்து ஆடும் பாம்பைத் தலையிலே வைத்தும், பாய்கின்ற புலியினது தோலை இடுப்பில் கட்டியும்,  கோபம் கொண்டு பகைவரது திரிபுரங்களை எரியுமாறு செய்து அதை அழித்தும், அதன் பின் அந்த மூவர்களுக்கும் அருள் செய்தும், கூற்றுவனை கொன்று, பின்னர் உயிர்ப்பித்து அவனை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டும்  ஆன பெருமைகளை உடைய நீர் பிரம்மனது தலை ஓட்டினைக் கையில் ஏந்திக்கொண்டு, பேரழகுடைய உருவத்துடன் மனைகள் தோறும் பிச்சைக்குத் திரிவது என்?

விளக்க உரை

  • மூவர்க் கருள்பு ரிந்தீர் – திரிபுரத்து ஓர் மூவர் ஆகிய சுதன்மன், சுசீலன், சுமாலி ஆகிய திரிபுரத்து அசுரர்கள்,  சிவபத்தியைக் கைவிட்ட பொழுதும், அதில் இருந்து  மாறாமல் இருந்ததால் அவர்களை உய்விப்பதன் பொருட்டு ஒருவனைக் குடமுழா முழக்குபவனாகவும் , இருவரை வாயில் காவலராகவும் கொண்ட அருள் செய்த முறையை ஒப்பு நோக்க தக்கது.
  • மடங்கல் – கூற்றுவன் – எல்லா உயிர்களும் மடங்குதற்கு இடமானவன்
  • பழிப்பது போல் புகழ்வதால் இது வஞ்சப்புகழ்ச்சி ஆகும்  

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 15 (2021)


பாடல்

வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்
     நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை
     உரைத்தக்கால் உவமனே யொக்கும்
பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு
     பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பித்தரே யொத்தோர் நச்சில ராகில்
     இவரலா தில்லையோ பிரானார்

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – திருவடித் தொண்டினை வஞ்சனை எதுவும் இல்லாமல் செய்ததன் பொருட்டு அருள வேண்டும்  என விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

படம் எடுத்து ஆடும் பாம்பினைக் கட்டிக்கொண்டும்,   கோவணத்தை ஆடையாகக் கொண்டும், பித்த நிலையில் இருப்பவரை  ஒத்தும் , பரமர் எனப்படும் முழு முதற் தெய்வமாகியும் இருக்கும் இவர் அருளுதல் பொருட்டு சிறிதும் திருவுளம் இரங்குவார் எனில்  எம்மைக் காக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; எனது தலையையும், நாவையும், நெஞ்சத்தையும் எந்த விதமான மாறுபாடும் இன்றி திருப்பாச்சிலாச்சிராமத்தில் உள்ள எம்பெருமானுக்கே உரியனவாக ஆக்கினேன்; அவருடைய திருவடித் தொண்டினை வஞ்சனை எதுவும் இல்லாமல் செய்தேன்; இவ்வாறு யானே உரைத்தல் என்பது பொய்யினை உரைப்பது போல் ஆகும்; இருப்பினும் என் செய்வேன்?

விளக்க உரை

  • தலையும்என் நாவும் நெஞ்சமும் – மனம், மொழி, வாக்கு
  • நச்சு – விருப்பம்
  • இல்லையோ – இரக்கப் பொருளதாய் முறையீடு உணர்த்தியது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 10 (2021)


பாடல்

மூலம்

தானெனை முன்படைத்தான் அதறிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து
வானெனைவந் தெதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்தான்மலை உத்தமனே

பதப்பிரிப்பு

தானெனை முன்படைத்தான் அதுஅறிந்து தன் பொன்அடிக்கே
நான் எனப் பாடல் அந்தோ நாயினேனைப் பொருட்படுத்து
வான்எனை வந்து எதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து
ஊன்உயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே

ஏழாம் திருமுறை -தேவாரம் – சுந்தரர்

கருத்து – குற்றம் உடைய தன்னையும் பொருட்டாக மதித்து உடலையும், உயிரையும் மதித்த தன்மையை வியந்து கூறும் பாடல்.

பதவுரை

திருக்கயிலையில் வீற்றிருந்து அளும் முதல்வன் ஆகியவனும் உத்தமன் ஆகியவனும் ஆன ஈசன், தானே முன்பு என்னை இந்த பூமியில் தோன்றச் செய்து  அருளினான்;  தோற்றுவித்ததன் காரணத்தை உணர்ந்து  அவனது பொன்போன்ற  திருவடிகளுக்கு என்னளவில் (தோத்திரம்) பாடல்கள் செய்தேன்;  படைப்பின் நோக்கம் உணர்ந்தும் அதிகம் பாடல்கள் பாடாமல் நாய் போன்ற குற்றம்  உடைய என்னைப் பொருட்படுத்தாமல் என்னை அடியவர்களுள் ஒருவனாக வைத்து, வானவர்களும் வந்து எதிர்கொள்ளுமாறு , பெரியதான யானை ஊர்தியை எனக்கு அளித்து, எனது உடலோடு உயிரை உயர்வு பெறச் செய்தான்; என்னே அவனது திருவருள்!

விளக்க உரை

  • அறிந்து – தோற்றுவித்தது என்பது  பாடுதல் பொருட்டு என்று பெறப்படும்
  • நொடித்தல் – அழித்தல். நொடித்தான் மலை – (உயிர்களின் வினைகளை) அழிக்கும் கடவுளது மலை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 3 (2021)


பாடல்

வல்ல தெல்லாம் சொல்லி உம்மை
   வாழ்த்தி னாலும் வாய்தி றந்தொன்
றில்லை என்னீர் உண்டும் என்னீர்
   எம்மை ஆள்வான் இருப்ப தென்நீர்
பல்லை உக்க படுத லையிற்
   பகல்எ லாம்போய்ப் பலிதி ரிந்திங்
கொல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்
   ஓண காந்தன் தளியு ளீரே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – திருவோணகாந்தன்தளி தலத்தில் இருக்கும் ஈசனின் பெருமைகளை உரைத்து தம்மை ஆட்கொள்ள வேண்டும் என உரைக்கும் பாடல்.

பதவுரை

நித்தமும் பல் நீங்கியதும், இறந்தவர்களின் தலை ஆனதுமான மண்டை ஓட்டில் பிச்சை ஏற்கத் திரிந்து  திருவோணகாந்தன்தளி  என்னும் திருத்தலத்தில் வாழும் பெருமானே! யாம் வல்லமை மிக்கதாகிய பல கருத்துக்கள் சொல்லி உம்மை வாழ்த்திய போதும், நீர் திருவாய் திறந்து, எமக்கு தரத்தக்கதான யாதேனும் ஒருபொருளை, ‘இல்லை’ என்றும் சொல்லாதவராக இருக்கின்றிர்; அன்றியும்  ‘உண்டு’ என்றும் சொல்லாதவராக இருக்கின்றிர்; உயிர்ப்பில்லா வாழ்வினை விட்டொழிய மாட்டாதவராக இருப்பவராகிய எம்மை  நீர் பணிகொள்ள இருத்தல் எவ்வாறு?

விளக்க உரை

  • உமக்கு அடியவர்களாகிய நாங்கள் எங்ஙனம் வாழ்வோம் என்பது குறிப்பு
  • திரிந்தும்- இழிவு குறிப்பு
  • பகல் – நாள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – வைகாசி – 22 (2021)


பாடல்

படைக்கட் சூலம் பயிலவல் லானைப்
   பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானைக்
கடைக்கட்பிச் சைக்கிச்சை காதலித் தானைக்
   காமன்ஆ கந்தனைக் கட்டழித் தானைச்
சடைக்கட் கங்கையைத் தாழவைத் தானைத்
   தண்ணீர்மண் ணிக்கரை யானைத்தக் கானை
மடைக்கண்நீ லம்மலர் வாழ்கொளி புத்தூர்
   மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

ஏழாம் திருமுறை -தேவாரம் – சுந்தரர்

கருத்து – திருவாழ்கொளி புத்தூரில் உறையும் ஈசனின் பெருமைகளை உறைத்து அவனை விடுத்து வேறு எதையும் நினைக்கமாட்டேன் எனக் கூறும் பாடல்.

பதவுரை

படைகளில் முதன்மையான சூலத்தை தனது படையாகக் கொண்டவனும், தன்னை நினைப்பவர்களது உள்ளத்தில் பரவி அந்த சிந்தனைகளை அதிகப்படுத்துவனும், ஊர்தோறும் சென்று பிச்சையை விரும்பிச் செய்பவனும், அழகிய வடிவம் கொண்ட காமனது உடலை அழியச் செய்தவனும், பெருக்கெடுத்து செல்லும் கங்கையைச் சடையில் தங்கும்படி செய்தவனும், நீர்வளம் உடைய மண்ணி ஆற்றின் கரையில் இருப்பவனும், எண்குணங்கள் அமையப் பெற்றவனும், நீர் மடைகளில் நீலோற்பல மலர் மலர்ந்து இருக்கின்ற திருவாழ்கொளி புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போன்றவனுமாகிய பெருமானை மறந்து யான் வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினைக்கமாட்டேன்.

விளக்க உரை

  • படைக்கண் – உள் என்னும் பொருளதாய் வந்தது. ஏனைய படைகளிலும் சிறந்தது சூலம் எனும் பொருள் பற்றியது.
  • பாவிக்கொள்ளுதல் – மூடிக்கொள்ளுதல், சுற்றிக் கொள்ளுதல்
  • தாழ்தல் – தங்குதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 26 (2021)


பாடல்

குறைவி லாநிறை வேகுணக் குன்றே
   கூத்த னேகுழைக் காதுடை யானே
உறவி லேன்உனை யன்றிமற் றடியேன்
   ஒருபி ழைபொறுத் தால்இழி வுண்டே
சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச்
   செம்பொ னேதிரு வாவடு துறையுள்
அறவ னேஎனை அஞ்சல்என் றருளாய்
   ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – குறைகள் அற்றவனாகிய சிவனிடத்தில் குறையுடைய தன்னை பொறுத்து அருள வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

‘குறை` எனப்படுவது ஒன்றும் இல்லாது எக்காலத்திலும் நிறைவுடையவனே, எண்குணங்கள் அனைத்தும் பெற்று மலை போன்று உயர்ந்து நிற்பவனே, கூத்துகளை நிகழ்த்துபவனே, குழையணிந்த காதினை உடையவனே, ஒலி எழுப்பும் வண்டுகள் வெளியே செல்லாமல் சிறைபோன்று சோலைகள் சூழ்ந்த திருவாரூரில் செம்பொன் போன்ற திருமேனியினை உடையவனே! திருவாவடுதுறை திருத்தலத்தில் எழுந்து அருளுகின்ற அறவடிவினனே, அடியேனுக்கு உன்னையன்றி எனக்கு எவரும் உறவினராக இல்லை ஆதலினால் யான் செய்த ஒரு குற்றத்தை நீ பொறுத்துக்கொண்டால் , நீ தாழ்வினை அடைவாயா, என்னை ,`அஞ்சேல்` என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள் செய்வாயாக.

விளக்க உரை

  • குறைவிலா நிறைவே – எல்லாவற்றினும் மேலான பொருளாகிய இறைவன் ஒருவனையன்றி, குறை சிறிதும் இல்லாத நிறைவுடைய பொருள் வேறொன்றும் இல்லாமையை எதிர்மறையால் உணர்த்தியது
  • உறவிலேன், உறவு யார் –  தமக்குத் துணைசெய்ய வல்லவர்கள் ஈசனற்றி  பிறர் இல்லை என்பதை வலியுறுத்தியது
  • ஒரு பிழை – பிறப்பெடுத்தது
  • ஒரு பிழை பொறுத்தால் இழிவுண்டே – இறைவரோடு உண்டான உரிமையில் உரைத்தது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 1 (2021)


பாடல்

கங்கை வார்சடை யாய்கண நாதா
கால காலனே காமனுக் கனலே
பொங்கு மாகடல் விடமிடற் றானே
பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால்விடை யாய்தெளி தேனே
தீர்த்த னேதிரு வாவடு துறையுள்
அங்க ணாஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்துஈசனின் செயற்கரிய செயல்களை உரைத்து தன்னையும் காக்க வேண்டும் என விண்ணப்பிக்கும்  பாடல்.

பதவுரை

கங்கை நதியினை தாங்கிய நீண்ட சடையை உடையவனே, பூத கணங்களுக்குத் தலைவனே,  காலன் ஆகிய எமனுக்கு காலனே, காமன் உடலினை நெருப்பாகி அதனை எரித்தவனே,  அலை மிகுந்து தோன்றும் பெரிய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அதை கண்டத்தில் உடையவனே,  உயிர்களுக்கு முதல்வனாக இருப்பவனே, அற வடிவமாக இருப்பவனே, மாசு படாமல் எக்காலத்திலும் தூயோனாக  இருப்பவனே, செம்மையான கண்களை உடைய திருமாலாகிய இடபத்தை ஊர்தியாக உடையவனே, தெளிந்த தேன் போன்றவனே, இறைவனே, தேவர்களிடத்தில் ஆண் சிங்கமாய் உள்ளவனே, திருவாவடுதுறையில் எழுந்து அருளியிருக்கின்ற கருணையாளனே, அடியேனுக்கு உன்னை அன்றி உறவாக யாவர் உளர்! என்னை ‘அஞ்சேல்’ என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்வாயாக.

விளக்கஉரை

  • ‘அமரர்கட்குத் தலைவனே’ என அருளாது ‘அமரர்கள் ஏறே’  என , உருவகித்து அருளியது முதன்மையின் சிறப்பு பற்றியது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மாசி – 18 (2021)


பாடல்

கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற்
   கைப்பர் பாழ்புக மற்றது போலப்
பழுது நானுழன் றுள்தடு மாறிப்
   படுசு ழித்தலைப் பட்டனன் எந்தாய்
அழுது நீயிருந் தென்செய்தி மனனே
   அங்க ணாஅர னேயென மாட்டா
இழுதை யேனுக்கொர் உய்வகை யருளாய்
   இடைம ருதுறை எந்தைபி ரானே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – மெய்யறிவு இல்லாமல் உலகில் உழலும் தனக்கு மனம் இரங்கி உய்யும் வகையினை அருள வேண்டும் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

திருவிடைமருதூரில் எழுந்து அருளுகின்ற எம் குலதேவனேகழுதையானது குங்குமத்தினை பொதி போல் சுமந்து வருந்தினால் சிறப்பு எதுவும் இல்லை எனக் கருதி, அனைவரும் நகைப்பர்; அதுபோல  அடியேன் உனக்கான தொண்டினை மேற்கொண்டு, அதன் உண்மையானப் பயனைப் பெறாமல் மனம் தடுமாறி, வெள்ளத்தில் உண்டாகும் சுழியிடை அகப்பட்டவன் போல  இந்த உலக வாழ்க்கையில் வருத்தம் கொண்டவன் ஆயினேன்; (அவ்வாறே மற்றவர்கள் எள்ளி நகைப்பர் என்பது மறை பொருள்) ‘மனமே, நீ நம் இறைவனுக்கு உண்மையானத் தொண்டினை செய்யாது (புறப்பொருள்கள் குறித்து) கவலை கொண்டிருந்து என்ன பெறப் போகின்றாய்என்று நெஞ்சிற்கு அறிவுறுக்கவும்,  ‘அழகிய கண்களை உடைய சிவனேஎங்களைக் காப்பவனேஎன்று உன்னை அன்பினால் துதிக்கவும் மாட்டாத அறிவில்லாதவனாகிய எனக்கு, நீ  மனம் இரங்கி, உய்யும் நெறி ஒன்றை வழங்கி அருளாய்.

விளக்கஉரை

  • நகைப்பர் -> கைப்பர்
  • அங்கணன் – கண்ணழகு உடையவன், கருணையான நோக்குடையவன், கடவுள்; சிவன்; திருமால்; அருகன்
  • இழுதை – பேய், அறிவின்மை, அறிவிலி, பொய்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஐப்பசி – 30 (2020)


பாடல்

பிலந்தரு வாயினொடு
   பெரி தும்வலி மிக்குடைய
சலந்தரன் ஆகம்இரு
   பிள வாக்கிய சக்கரம்முன்
நிலந்தரு மாமகள்கோன்
   நெடு மாற்கருள் செய்தபிரான்
நலந்தரு நன்னிலத்துப் பெருங்
   கோயில் நயந்தவனே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – சக்கராயுதத்தை திருமாலுக்கு வழங்கியவன் திருநன்னிலத்துப் பெருங்கோயிலில் உறைக்கின்றான் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

அறத்தினை முன்வைத்து நன்மையைத் தருகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், பிலம் என்று வழங்கப்படுவதும், பாதாளம் போன்று இருக்கப் பெற்றதுமான  வாயைக் கொண்டவனும், பெரிதும் மிகுந்த வலிமையையும் உடைய சலந்தராசுரனது உடலை இரண்டு பிளவாகச் செய்த சக்கராயுதத்தை, முன்னொரு காலத்தில் , மண்ணை உண்டு உமிழ்ந்த திருமகள் கணவனாகிய திருமாலுக்கு அளித்த தலைவன்.

விளக்கஉரை

  • பிலம் – பாதாளம்; கீழறை; குகை; வளை
  • நலம் – நன்மை, அறம், சோபனம் என்ற யோகத்தின் தனித்தமிழ் சொல்.
  • நிலந்தரு –  மக்களுக்கு நிலம் முதலிய செல்வத்தைத் தருகின்ற மாமகளுக்கு உரித்தானவன்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – புரட்டாசி – 24 (2020)


பாடல்

மையார்தடங் கண்ணிபங் காகங்கை யாளும்
மெய்யாகத் திருந்தனள் வேறிட மில்லை
கையார்வளைக் காடுகா ளோடு முடனாய்க்
கொய்யார்பொழிற் கோடியே கோயில்கொண் டாயே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – ஈசன் தனித்து இருந்து கோடிக்கரையில் உறைதல் குறித்து வினா எழுப்பியப்  பாடல்.

பதவுரை

மைபொருந்திய பெரிய கண்களை உடைய உமையம்மை ஆகிய இறைவியின் பாகத்தை உடையவனே! கங்கையும் வேறிடம் இல்லை என்பதை உணர்ந்து உனது அழிவில்லாத திருமேனியில் இருக்கின்றாள்;  இவ்வாறு இரு மகளிர் உடம்பிலே நீங்கா திருக்க பூக்கள் பொருந்திய சோலைகளைகளில் இருந்து பூக்களைப் பறித்து சூடி கையில் நிறைந்த வளைகளையுடையவளும் காட்டை உரிமையாக உடையவளும் ஆன காளியோடு  கூடிதான கோடிக் கரையையே உறைவிடமாகக் கொண்டாயே, இஃது எவ்வாறு?

விளக்க உரை

  • காடுகாள் – காடுகிழாள், பழையோள்,  காளி; ‘காடுகள்’ –  பிழைபட்ட பாடம்
  • இருவர் இருக்க, மூன்றாமவளைக் கூடியது எவ்வாறு என , நகை தோன்ற வினவியது; இத்துணை மகளிரோடும் இங்குத் தனியாய் இருத்தல் தகுமோ என்பதும் பெறப்படும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆடி – 12 (2020)


பாடல்

இரவத்திடு காட்டெரி யாடிற்றென்னே
இறந்தார்தலை யிற்பலி கோடலென்னே
பரவித்தொழு வார்பெறு பண்டமென்னே
பரமாபர மேட்டி பணித்தருளாய்
உரவத்தொடு சங்கமொ டிப்பிமுத்தங்
கொணர்ந்தெற்றி முழங்கி வலம்புரிகொண்
டரவக்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – திருஅஞ்சைக்களத்து நாயகனை கேள்விகள் கேட்டு அருளப்பண்ண வேண்டும் எனும் பாடல்.

பதவுரை

உருவத்தில் சிறியதாக இருக்கும் இப்பி, ஆயிரம் இப்பிகளுக்கு தலைவனாக இருக்கும்  சிப்பி, முத்து ஆகியவற்றைக் கொண்டு வந்து சேர்ப்பதும், வலம்புரிச்சங்கை மேலே கொண்டு வலிமையாகவும், பெரியதாகவும் முழங்கம் செய்வதும், ஆர்ப்பரிக்கும் கடலினை கொண்டு அழகிய கரையினை உடையதுமான ‘மகோதை’ என்னும் நகரித்தில் உள்ள அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தந்தையே, தன்னிடம் அடையும் உடல்களை எல்லாம் சமமாக எரிப்பதால் வலிமை உடையது ஆகிய புறங்காட்டில் எரியில் ஒலிக்குமாறு நின்று ஆடியது என்? இறந்தவரது தலை மண்டை ஓட்டினை பாத்திரமாக்கி  பிச்சை ஏற்பது என்? உன்னை வாழ்த்தி வணங்குவோர் பெறும்பொருள் யாது? மேம்பட்டவர்க்கு எல்லாம் மேலானவனே, விருப்பம் கொண்டதை சொல்லி அருளுவாய்.

விளக்க உரை

  • திருஅஞ்சைக்களம் –  சுந்தரர் முக்தித் தலம் (இன்று ஆடி சுவாதி, சுந்தரர் முக்தி அடைந்த தினம்)
  • இரவம் – ஒலி
  • பரவுதல் – வாழ்த்துதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – வைகாசி – 20 (2020)


பாடல்

வந்தொர் இந்திரன் வழிபட மகிழ்ந்து
வான நாடுநீ யாள்கென அருளிச்
சந்தி மூன்றிலுந் தாபர நிறுத்திச்
சகளி செய்திறைஞ் சகத்தியன் றனக்குச்
சிந்து மாமணி யணிதிருப் பொதியிற்
சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன்
செந்தண் மாமலர்த் திருமகள் மருவுஞ்
செல்வத் தென்றிரு நின்றியூ ரானே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்துஇந்திரனுக்கும், அகத்தியருக்கும் செய்த திருவருளை எடுத்து அருளிச்செய்த பாடல்.

பதவுரை

சிறந்த தாமரை மலரில் இருக்கும் திருமகள் வாழும் இடமானதும், செல்வத்தை உடையதும்  ஆன அழகிய திருநின்றியூரில் வீற்றிருந்து அருளும் இறைவனே, இந்திரன் ஒருவன் உன்னிடத்தில் வந்து உன்னை வழிபட, அதற்காக மகிழ்ந்து அவனுக்கு  ‘நீ  விண்ணுலகை ஆள்க ` என்று சொல்லி வழங்கிய  அருளிய தன்மையும், காலங்கள் இணைவதான ‘காலை, நண்பகல், மாலை’ என்னும் மூன்று சந்திகளிலும், உருவத்திருமேனி ஆன இலிங்க உருவத்தை அமைத்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு, அருவிகள் மணிகளாய்ச் சிதறுகின்ற, அழகிய திருப்பொதிகை மலையில் வீற்றிருக்க அவருக்கு அருளிய பெருமையையும் அறிந்து, அடியேன்  உனது திருவடியை அடைந்தேன்;  என்னை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக.

விளக்க உரை

  • தாபரம் – மலை, உடம்பு, நிலைத்திணைப் பொருள், மரப்பொது, இடம், ஆதாரம், பற்றுக்கோடு, பூமி, கோயில், இலிங்கம், உறுதி
  • சேர்வு – அடைதல், வாழிடம், திரட்சி, ஒன்று சேர்கை, ஊர், கூட்டம்
  • இந்திரன் எண்ணிக்கை எண்ணற்றது என்பதால் ஓர் இந்திரன்
  • சகளி செய்திறைஞ் சகத்தியன் – இலிங்கத் திருமேனியில் பாவனையால் அமைத்து வழிபாட்டில் கொள்ளப்படும் மந்திரங்களில் ‘பஞ்சப்பிரம மந்திரங்கள்‘ எனப்படும் ஐந்தும் , சடங்க மந்திரங்கள் எனப்படும் ஆறும் ஆகப் பதினொரு மந்திரங்கள் இன்றியமையாதனவாகும். சிவ வழிபாட்டினை ஆகம மந்திரங்களையே முடி முதலிய முதன்மை உறுப்புக்களாக வைத்து சுருக்கமாகவும், வேத மந்திரங்களை முப்பத்தெட்டுக் கூறுகளாகச் செய்து வழிபாடு செய்யும் முறைகள் என சிவ நெறியில் விளக்கப்பட்டுள்ளன. ஆகையால் சிறந்த வழிபாடாக செய்த அகத்தியர் என்பதை முன்வைத்து இவ்வாறு அருளினார்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை-2 (2020)


பாடல்

பாறு தாங்கிய காட ரோபடு
   தலைய ரோமலைப் பாவையோர்
கூறு தாங்கிய குழக ரோகுழைக்
   காத ரோகுறுங் கோட்டிள
ஏறு தாங்கிய கொடிய ரோசுடு
   பொடிய ரோஇலங் கும்பிறை
ஆறு தாங்கிய சடைய ரோநமக்
   கடிக ளாகிய அடிகளே

ஏழாம் திருமுறை – தேவாரம் –  சுந்தரர்

கருத்து – சிவன் சிறப்புகளை சொல்லும் பாடல்.

பதவுரை

நமக்குத் தலைவராய் உள்ளவர் பருந்துகளைச் சுமக்கும் முதுகாட்டில் அழிந்த தலையை ஏந்தியவரோ? மலைமகளது ஒருபாகத்தைச் சுமக்கும் அழகரோ? குழைய அணிந்த திருச்செவியினை உடையவரோ? சிறிய இடைவெளி கொண்ட கொம்பினை உடைய இளமையான இடபத்தைக் கொண்டுள்ள கொடியை உடையவரோ? சுடப்பட்ட திருநீற்றை அணிந்தவரோ? விளங்குகின்ற பிறையோடு கூடிய ஆற்றைச்(கங்கை) சுமந்த சடையை உடையவரோ? சொல்லுமின்.

விளக்க உரை

  • பாறு – விலங்குகளின் பிணங்களைத் தின்று வாழும் பறவையினம், பிணந்திண்ணி கழுகு, எலும்புண்ணிப் பாறு
  • ஆணவம் கொண்ட தலையை உடையவரது அழிவு தலையின் மேல் ஏற்றி உரைக்கப்பட்டது
  • குறுங்கோடு – இளைய ஏறாகல் / இளைய காளை
  • தலைவர் – நமக்குத் தலைவராய் உள்ள தலைவர்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 1 (2020)


பாடல்

நிணம்படு முடலை நிலைமையென் றோரேன்
   நெஞ்சமே தஞ்சமென் றிருந்தேன்
கணம்படிந் தேத்திக் கங்குலும் பகலும்
   கருத்தினாற் கைதொழு தெழுவேன்
பணம்படும் அரவம் பற்றிய கையர்
   பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிணம்படு காட்டில் ஆடுவ தாகில்
   இவரலா தில்லையோ பிரானார்

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்துதிருப்பாச்சிலாச் சிராம இறைவரின் திருமேனி அழகைக் கூறி அவரி அன்றி அடியேனைப் காப்பவர் வேறொருவர் இல்லை என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

படம் எடுத்து ஆடக் கூடியதான பாம்பைப் பிடித்த கையை உடையவராகிய திருப்பாச்சிலாச் சிராமத்தில் எழுந்தருளி இருக்கின்ற எம்முடைய கடவுளாராகிய இவரது தன்மை என்னவெனில் பிணம் பொருந்திய காட்டில் ஆடுவதே ஆகும்; இரவும் பகலும் அவரது அடியவர்கள் கூட்டத்தில் சென்று அவர்களின் கருத்தினை ஒத்து அன்போடு துதித்துக் கைகூப்பித் தொழுவேன்கொழுப்பு பொருந்தியதாகிய இவ்வுடம்பை (அழியும் தன்மை உடையது) நிலைத்த தன்மை உடையதென்று நினைக்காமல், நெஞ்சம் இறைவருக்கு உரியது என்று தஞ்சம் அடையத் துணிந்தேன்அடியேனைப் காப்பவர் இவரன்றி வேறொருவர் இல்லை.

விளக்க உரை

  • நிணம் – கொழுப்பு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 8 (2019)


பாடல்

முன்னவன் எங்கள்பிரான் முதல்
   காண்பரி தாயபிரான்
சென்னியில் எங்கள்பிரான் திரு
   நீல மிடற்றெம்பிரான்
மன்னிய எங்கள்பிரான் மறை
   நான்குங்கல் லால்நிழற்கீழ்ப்
பன்னிய எங்கள்பிரான் பழ
   மண்ணிப் படிக்கரையே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்துஈசனின் எண் குணங்களில் சிலவற்றை சொல்லியும், அவன் சில தன்மைகளையும் கூறி அவன் உறையும் திருத் தலத்தைப் பற்றி உரைக்கும் பாடல்.

பதவுரை

சங்காரம் முடிந்து சிருஷ்டி தொடங்குவதற்கு முன் உள்ளவனும், தனக்கு முன்னால் உலகம் மற்றும் உலகப்  பொருளும் படைக்கப்படவில்லை எனும் தன்மை கொண்டு எங்கள் இறைவன் ஆனவனும், சென்னி எனப்படுவதும் தலை எனப்படுவதும் ஆன உச்சியில் இருக்கும் எங்கள் தலைவன் ஆனவனும், அழகிய நீல கண்டத்தை உடைய எங்கள் இறைவன் ஆனவனும், என்றும் நிலை பெற்ற எங்கள் தலைவனும், நான்கு மறைகளையும் கல்லால மர நிழலில் இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்தவனும் ஆன எங்கள் இறைவன் இறைவன் எழுந்தருளியிருப்பது  ‘திருப்பழமண்ணிப்படிக்கரை’ என்னும் திருத்தலமே.

விளக்க உரை

  • பிரான் – தலைவன், தேவன், இறைவன்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 11 (2019)


பாடல்

திண்டேர்நெடு வீதி யிலங்கையர்கோன்
திரள்தோள்இரு பஃதும்நெ ரித்தருளி
ஞெண்டாடுநெ டுவயல் சூழ்புறவின்
நெல்வாயி லரத்துறை நின்மலனே
பண்டேமிக நான்செய்த பாக்கியத்தாற்
பரஞ்சோதிநின் நாமம் பயிலப்பெற்றேன்
அண்டாஅம ரர்க்கம ரர்பெருமான்
அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர் 

கருத்து –  ஈசனை வழிபட பூர்வ புண்ணியம் வேண்டும் என்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

வலிமை மிக்க தோள்கள் இருபதையும் நெரித்து பின் (அவன் கர்வம் அழிந்தப்பின்) அவனுக்கு அருளியவனே, நண்டுகள் உலாவுகின்ற நீண்ட வயல் சூழ்ந்த, முல்லை நிலத்தையுடைய திருநெல்வாயில் அரத்துறையின் கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே, மேலான ஒளி வடிவினனே, தேவனே, தேவர்க்குத் தேவராய் உள்ள்வர்களுக்கு தலைவனே, நான் முற்பிறவிகளில் செய்த நல்வினையின் காரணமாக உனது பெயரைப் பல காலமும் சொல்லும் பேற்றினைப் பெற்றேன்; இனி அடியேன், உலகியலில் இருந்தும் பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.

விளக்க உரை

  • தேவர்க்குத் தேவர், காரணக் கடவுளர் – அயனும், மாலும்
  • நாமமாவது – திருவைந்தெழுத்து

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 2 (2019)


பாடல்

இட்டி தாகவந் துரைமி னோநுமக்
   கிசையு மாநினைந் தேத்துவீர்
கட்டி வாழ்வது நாக மோசடை
   மேலும் நாறுக ரந்தையோ
பட்டி ஏறுகந் தேற ரோபடு
   வெண்ட லைப்பலி கொண்டுவந்
தட்டி யாளவுங் கிற்ப ரோநமக்
   கடிக ளாகிய அடிகளே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்துஅடியவர்களை இறைவனின் இயல்புகளை உரைக்கக் கூறும் பாடல்.

பதவுரை

இறைவரை உமக்கு ஏற்றவாறு  போகம் வேண்டுவார் ஆயின் போக வடிவிலும், யோகம் வேண்டுவார் ஆயின்  யோக வடிவிலும், துன்பம் நீங்க வேண்டுவார் ஆயின் வேகவடிவிலும் விருப்பம் கொண்டு நினைந்து வழிபாடு செய்து துதிக்கின்றவர்களே, நமக்குத் தலைவராகிய தலைவரும், மூத்தோனும், கடவுளும் ஆன அடிகள் கழுத்து, கை, அரை முதலிய இடங்களில் கட்டிக் கொண்டு வாழ்வது பாம்போ?  சடைமேல் அணிவதும் மணம் வீசுகின்ற திருநீற்றுப்பச்சை ஆன உருத்திரச்சடை அல்லது கரந்தைப்பூமாலையா? தொழுவில் கட்டப்படும் எருதையே விரும்பி ஏறுகின்றவரோ? தம் அடியார்களை, அழிந்த வெண்டலை எனும் மண்ணை ஓட்டில் பிச்சையேற்றுக் கொண்டு வந்து இட்டும் பணிகொள்ள வல்லரோ? சொல்லுங்கள்.

விளக்க உரை

  • நேரிழை – பெண்
  • இட்டி – ஈட்டி, எசமான், பரிசு, விருப்பம், வழிபாடு.
  • கரந்தை – திருநீற்றுப்பச்சை/உருத்திரச்சடை, ஒரு மரவகை, நீர்ச்சேம்பு, குரு, ,கரந்தைப்பூமாலை
  • நினைந் தேத்துவீர் – அவ்வாறு வழிபட்டதால் அவர் இயல்பெல்லாம் அறிவீர்; ஆதலின் வினவுகின்றேன்; சொல்லுங்கள்

சமூக ஊடகங்கள்