அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 29 (2018)

பாடல்

முட்டற வாழும் பெருஞ்செல்வ மும்முத் தமிழ்க்கல்வியும்
எட்டுணை யேனுங் கொடுத்துண்டிருக்க எனக்கருள்வாய்
வட்டமதிச் சடையானே சிகரமலைக் கமர்ந்த
சட்டம் உடையவ னேகாழி யாபதுத் தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

பூரணத்துவத்தின் அடையாளம் ஆகிய முழு நிலைவை தலையில் சூடியவனே, காழி மலை மேல் அமர்ந்த  மாணிக்க வகை போன்றவனும், நேர்மை ஆனவனும் ஆன ஆபதுத்தாரணனே, நீங்காமல் இருக்கும் பெரும் செல்வமும், முத்தமிழ் கல்வியும் எள்ளவாவது எப்பொழுதும் கொடுத்துக் கொண்டிருக்க எனக்கு அருள்வாய்.

விளக்க உரை

 • எட்டுணை – எள்ளளவு
 • சட்டம் – மரச்சட்டம், கம்பியிழுக்கும் கருவி, எழுதும் ஓலை, எழுதுதற்கு மாதிரிகையாயமைந்த மேல்வரிச்சட்டம், நியாய ஏற்பாடு, செப்பம், நேர்மை, ஆயத்தம், புனுகுப்பூனையின் உறுப்பிலிருந்து எடுக்கப்படும் திரவப்பொருள், மாணிக்கவகை

 

 

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 14 (2018)

 

பாடல்

அடியார் மனத்தில் நினைத்த கருமம் அனைத்துமங்கே
முடியாத தேது முடித்தருள் வாய் முருகாரலங்கல்
கடியார் மலர்க் கொன்றை மாலிகை சூடிய கண்ணுதலே
தடியேந்திய கையனே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

அழகிய தளிர் நிறைந்து சூட்டப்பட்ட கொன்றை மலர் மாலையை அடையார்களால் சூட்டப்பட்டு அதை அணிந்தவனே, காப்பதன் பொருட்டு தடியினை கைகளில் ஏந்தியவனே, சீகாழிப் பதியில் உறையும் ஆபதுத்தாரணனே, ‘உன்னிடத்தில் பற்றுக் கொண்ட அடியவர்கள் மனதில் தோன்றிய சிந்தனைகள் உன்னைப் பற்றியப் பின் முடியாது ஏது?’ என்று அவற்றை முடித்து அருள்வாய்.

விளக்க உரை

 • அலங்கல்  –  மாலை, பூமாலை, அசையும் கதிர், தளிர், ஒழுங்கு, ஒலி, துளசி, முத்துச்சிப்பி

ஆதினம் அவர்கள் பக்தி நிலையில் எழுதியதால், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 16 (2018)

பாடல்

நெறியும் பொறியுந் தவமும் மெய்ஞ்ஞானமும் நீடறிவும்
பொறியும் புகழும் கொடுத்தருள் வாய்புரம் காய்ந்தவனே
குறியும் குணமும் கடந்தவனே குழக்கன்று கட்டுந்
தறியின்கண் வந்தவனே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

குழக்கன்று எனும் மிக இளையகன்று போன்று கட்டுத்தறி விட்டு அன்பர்களுக்கு அருள் செய்ய வந்தவனே, காழிப் பதி உறையும் ஆபதுத்தாரணனே, மௌனம் கொண்டவனே, தனக்கென அடையாளம் ஆகிய பேதம் விலக்கியவனே *, சைவ ஆகமத்தில் கூறப்படும் எண் குணங்களாகிய தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர்-அருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை ஆகியவற்றை கடந்தும் நிற்பவனே, உனது அன்பைப் பற்றி வாழும் நெறி, அந்த நெறியில் இருந்து விலகாத பொறிகள், பொறிகளால் பெறப்படும் தவம், தவத்தில் இருந்து கிடைக்கப் பெறும் ஞானம், அதன் பயனான மெய் அறிவு, அதைக் ஈயும் உடல், அதனால் பெறப்படும் புகழ் ஆகியவற்றை கொடுத்தருள்.

விளக்க உரை

 • வாய்புரம் காய்ந்தவனே – மௌனம் கொள்ளுதல்
 • * அவரவர் வழிபாடு செய்யும் விதமாக அந்த ரூபத்தில் அருள்பவன்

 

ஆதினம் அவர்கள் பக்தி நிலையில் எழுதியதால், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 31 (2018)

பாடல்

மட்டுப்படாத யமதூதர் வந்து வளைத்துடலைச்
சுட்டுப் பல பொடியாக்கு முன் காத்தருள் தோடணிந்த
பட்டுப் புயத்தினும் தண்டாயுதத்தினும் பாதத்தினும்
தட்டுப் புழுகணியுங்காழி யாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

காதில் தோடு அணிந்தவனும், கைகளின் மேற்பகுதி ஆகிய தோள்களின் மேல் பட்டு உடுத்தியவனும், தனது திருக்கரத்தில் தண்டாயுதமும், பாதத்தில் புனகு அணியும் ஆபதுத்தாரணனே, வரையறைக்கு உட்படாத யமதூதர்கள் இந்த உடலை சிதையால் எரியூட்டி அதை பொடியாக்கும் முன்னம் வந்து காத்து அருள வேண்டும்.

விளக்க உரை

 • ஸ்ரீ ல ஸ்ரீ 10 வது குருமூர்த்திகள் மிகப் பெரிய பைரவ உபாசகர் என்றும் காசி சென்ற போது அங்கிருந்து உபாசனை முறைகளை கற்றுவந்ததாகவும் செவி வழி செய்தி. இந்த ‘ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை’ மொத்தம் 30 பாடல்கள் கொண்டது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 21 (2018)

பாடல்

வட்டையொப்பாகும் இனியசொல்மாதர் மயக்கத்திலே
பட்டையப் பாமிகயானிளைத்தேன் பண்டிருவர்க்கெட்ட
நெட்டையப்பாமறை காணத சேவடி நீயருள்வாய்
சட்டையப்பா வடுகா காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

பட்டை என்னும் ஆபரத்தின் ஒரு உறுப்பினை அணிந்தவனே, சட்டையப்பனே, வடுகனே, காழிப்பதியில் உறையும் ஆபதுதாரணனே, பெரும் காட்டினைப் போன்றதும், திசைகள் அற்றதாகவும் செய்யும் இனிய சொல்லைச் கூறும் மாதர்கள் மேல் மயக்கம் கொண்டு யான் இளைத்து விட்டேன். காலங்களால் அளவிடமுடியாததான முற்காலத்தில் திருமாலாலும், பிரம்மனாலும் காண இயலாதவாறு நெடிய அளவில் வளர்ந்தும், வேதம் எனப்படும் மறைகளாலும் காண இயலா திருவடியை நீ அருள்வாய்.

விளக்க உரை

 • பட்டை – மரத்தோல்; வாழைப் பட்டை; பொற்சரிகைப்பட்டி; கழுத்துப் பட்டை; பனம் பட்டை; போதிகை; மணியைத் துலக்கும்பட்டை; அணிகலனின் ஓர் உறுப்பு (யாழ்); நீர் இறைக்கும் கூடை; மரவுரி; தகடு; பனங்கை ( ‘நிர்வாணம் சுனவாகனம்’ என பைரவர் த்யான ஸ்லோகத்தில் இருப்பதாலும் மர உரி தரித்தவர் எனும் கருத்து விலக்கப்படுகிறது)
 • பண்டு – பழமை; முற்காலம்; முன்; தகாச்சொல்; நிதி ( குறிப்பு : பண்டிருவர் காணாப் படியார் போலும் – பண்டு மாலும் அயனும் காண இயலாத நிலையினரும் (6.89.3))

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 23 (2018)

பாடல்

சாயாத சூலதண்டாயுதனே பச்சைச் சட்டையனே
வேயார் விண்ணோர் தொழ மெனியனேயென்மிடி தவிர்ப்பாய்
வாயார வுன்னைத் துதிப்போர்க்கு வேண்டும் வரமளிப்பாய்
தாயாகிய அப்பனே காழியாபதுத்தாரணனே.

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

நடுநிலை மாறாத மூன்று முனைகளை உடைய சூலமும் தண்டாயுதமும் கொண்டவனே, குளிர்ச்சி பொருந்திய தேகம் கொண்டவனே, மூங்கில் போன்றவர்களும், விண்ணில் இருக்கும் தேவர்களும் தொழும் மேனியை உடையவனே, வாயினால் உன்னைத் துதிப்பவர்களுக்கு அவர்கள் வேண்டும் அளவிற்கு வரங்களை அளிப்பவனே, எனக்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்து காழிப்பதியில் உறையும் ஆபதுத்தாரணனே! எனக்கு துயர் ஏற்படாமல் தவிர்த்து என்னைக் காப்பாய்.

விளக்க உரை

 • சாயாத சூலம் – குற்றம் செய்பவர்களை மட்டும் தண்டிக்கும் தன்மை உடைய சூலம்
 • பச்சை சட்டையன் – குளிர்ச்சி பொருந்திய தேகம் கொண்டவன் (பச்சை என்பது குளிர்ச்சி பொருந்தியது எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது).
 • வேய்த்தல்,- வஞ்சித்தல் என பொருள் கொண்டு அதன் எதிர்மறையாகிய வேயார் – வஞ்சித்தல் இல்லாதவர்கள் எனும் பொருளில் விளக்கப்பட்டுளது. மூங்கில் எனும் பொருளும் இருக்கிறது.[உ.ம் வேயார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் – மூங்கில்கள் நிறைந்து வரும் பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில்  ( தேவாரம் – ஏழம் திருமுறை – சுந்தரர்)].வேயார் என்பது பன்மை பொருள் கொண்டு, பிட்சடனார் வடிவில் இருந்த போது மூங்கில் போன்ற தாருகா வன ரிஷி பத்தினிகளால் விரும்பப்பட்டவர் எனவும் கொள்ளலாம். பொருள் குற்றம் பொருத்து, ஆன்றோர் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 8 (2018)

பாடல்

தெள்ளும் புழுகும் பனிநீரும் குங்குமச்சேறும் செந்தேன்
விள்ளும் மலரும் நின் பாதத்தில் சாத்தி விடாமலின்பங்
கொள்ளும்படியன்பு தந்தெனை யாண்டருள் கூற்றுவனைத்
தள்ளும் பதாம்புயனே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

கூற்றுவனை தள்ளும் பாதத்தை உடையவனை, சீகாழிப்பதியை உடைய ஆபதுத்தாரணனே! தெளிவாக விரைந்து செல்லும் இமயமலை இருந்து வரும் பனி நீரும், சேற்றில் தோன்றும் குங்கும நிறமான தாமரை மலர்களும், செம்மையான தேனைத் தரும் மலர்களும் கொண்டு உன்னுடைய பாதத்தில் சாத்தி, நீங்காத இன்பம் கொள்ளும்படி அன்பு காட்டி எனை ஆண்டு அருளுவாய்.

விளக்க உரை

 • தெள்ளுதல் – தெளிவாதல், ஆராய்தல், படைத்தல், கொழித்தல், அலைகொழித்தல், தெளிவித்தல், அனுபவமுதிர்தல்
 • பங்கஜம் = பங்க+ஜ = சேற்றில் தோன்றுவது. பங்கம் = சேறு.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 24 (2018)

பாடல்

சீர்கொண்ட செம்பொன் திருமேனியுஞ்செம் முகமலரும்
கார்கொண்ட சட்டையும் தண்டாயுதமும் கணங்கள் எட்டும்
கூர்கொண்ட மூவிலைச் சூலமும் கொண்டருள் கூர்ந்த கொன்றைத்
தார் கொண்ட வேணியனே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

சீர்காழி தலத்தில் உறையும் ஆபத்து தாரணனவன், அழகு பொருந்திய செம்மையான திருமேனியும், செம்மையான மலர்ந்த முகமும், கருமை நிறம் கொண்ட மேனியும், தண்டாயுதமும் கொண்டு, காள பைரவர், அசிதாங்க பைரவர், சம்ஹார பைரவர், ருரு பைரவர், குரோதன பைரவர், கபால பைரவர், ருத்ர பைரவர், உன்மத்த பைரவர் என்று எண் திசைக்கும் ஒன்றாக இருக்கும் அட்ட பைரவராக விரிந்து*, கூர்மையான மூன்றாக இருக்கும் சூலமும், அடர்ந்த இருள் போன்ற கூந்தலில் கொன்றைப் பூவினை அணிந்தவன் ஆவான்.

விளக்க உரை

 • * கணங்கள் எட்டும் – மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை (8) பைரவ மூல வடிவங்கள் எனவும், இந்த எட்டு வடிவங்களே 64 பைரவ மூர்த்த பேதங்களாக வடிவங்களாக விரிவடைகின்றன என்ற பொருளில் விளக்கப்பட்டுள்ளது. மாற்று கருத்து இருந்து தெளிவு படுத்தினால் மகிழ்வு அடைவேன்.
 • சீர் – 1) செல்வம், 2) அழகு, 3) நன்மை, 4) பெருமை, 5) புகழ், 6) இயல்பு 7) சமம் 8) கனம் 9) ஓசை 10) செய்யுளின்  ஓருறுப்பு 11) உறவினருக்கு விழாக்களில் செய்யப்படும் சீர்
 • கார் – 1) கருமை 2) கரியது 3) மேகம் 4) மழை 5) கார்ப் பருவம் ஆவணி, புரட்டாசி மாதங்கள் அடங்கிய மழைக் காலம் 6)  நீர் 7) கார்நெல் 8) கருங் குரங்கு 9) வெள்ளாடு 10) ஆண்மயிர் 11) எலிமயிர் 12) கருங்குட்டம் 13) இருள் 14) அறிவு மயக்கம் 15) ஆறாச் சினம் 16) பசுமை 17) அழகு 18) செவ்வி
 • கூர்தல் – 1) மிகுதல் 2) விரும்புதல் 3) வனைதல் 4) குளிரால் உடம்பு கூனிப்போதல்

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

சிவனுக்கு சத்யோஜாத மந்திரம் எந்த உறுப்பு?
முழந்தாள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 9 (2018)

பாடல்

விண்ணார் மலர்ப்பொழில் சூழ்காமி மாமலைமேலமர்ந்த
தண்ணார் மதிபுனை வேணியன் ஆபதுத்தாரணன் மேல்
பண்ணாப் பாடிய மாலைக்கு மாமுகன் பாதமும் நீள்
கண்ணாறிரண்டுள கந்தன் பொற்பாதமும் காத்திடுமே.

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் – 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

விண்ணில் உள்ள தேவர்கள் மலர் சொரியும் இடமாகவும், சோலைகள் சூழ்ந்ததும், பொன் போன்ற உயர்ந்ததுமான பெரிய மலைமேல் அமர்ந்தவனும் குளிர்ச்சியான சந்திரனை தனது திருமுடியில் சூடியவனும் ஆன ஆபதுத்தாரணன் மேல் பண்ணால் இறைவனுக்கு ஆரம் போன்று பாடிய மாலைக்கு பெரிய முகத்தை உடைய கணபதி பாதமும், நீளமான பன்னிரெண்டு கண்களை உடைய கந்தன் பொற்பாதமும் காத்திடும்.

விளக்க உரை

 • இது காப்புச் செய்யுள்.
 • ஸ்ரீ ல ஸ்ரீ 10 வது குருமூர்த்திகள் மிகப் பெரிய பைரவ உபாசகர் என்றும் காசி சென்ற போது அங்கிருந்து உபாசனை முறைகளை கற்றுவந்ததாகவும் செவி வழி செய்தி. இந்த ‘ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை’ மொத்தம் 30 பாடல்கள் கொண்டது.

குரு அருளோடும் திரு அருளோடும் ஒவ்வொரு பாடலாக பதவுரை எழுதப்பட இருக்கிறது. இந்த முயற்சியும் வெற்றி பெற என் குருவின் பாதம் பணிந்து வேண்டுகிறேன்.

சமூக ஊடகங்கள்