அமுதமொழி – விளம்பி – ஆனி – 2 (2018)

பாடல்

தென்னவன் மலையெ டுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு
மன்னவன் விரலா லூன்ற மணிமுடி நெரிய வாயாற்
கன்னலின் கீதம் பாடக் கேட்டவர் காஞ்சி தன்னுள்
இன்னவற் கருளிச் செய்தார் இலங்குமேற் றளிய னாரே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

காஞ்சித் திருத்தலத்தில் உறையும் மேற்றளி ஆனவர், தெற்குப் பகுதியை ஆண்ட இராவணன், தனது கர்வத்தால் கயிலாய மலையைப் பெயர்த்து எடுக்க முற்பட்ட போது, சிறந்த அழகான ஆபரணங்களை அணிந்த பெண்ணாகிய  பார்வதி  நடுக்கம் கொண்டது கண்டு, நடுக்கம் நீக்குவதன் பொருட்டு தனது கால் விரல்களால் கயிலாய மலையை அழுத்த, அதனால் அவன் தலைகளை நெரியுமாறு செய்த போது, தன் தவற்றை உணர்ந்து, கரும்பு போன்று இனிய கீதங்களைப் பாடியதால் அவன் தவற்றினை மன்னித்து  அதனால் அவனுக்கு அருள் செய்தவர் ஆவார்.

விளக்க உரை

 

 • தென்னவன் –  இராவணன்
 • சேயிழை – கல் இழைத்துச் செய்யப்பட்ட அணிகளைப் பூண்டவள். இழை நூலிழையாகக் கொண்டு தாலி எனலும் கூடும்
 • மன்னவன் – என்றும் நிலையாயிருப்பவன்.(கயிலைத் தலைவன்)
 • நெரிய – நொறுங்க
 • கன்னலின் – கரும்பினைப் போலும் இனிமை தரும்
 • கீதம் – சாமகானம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 31 (2018)

பாடல்

 

ஆரிடம் பாடில ரடிகள் காடலால்

ஓரிடங் குறைவில ருடையர் கோவணம்

நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும்

பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே

 

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

 

பதவுரை

சிவபெருமான் முனிவர்களுக்காக பாடலாக உடைய வேதத்தை அருளிச் செய்தவர். புறங்காடு எனப்படும் சுடுகாட்டினை ஒரு இடமாகக் கொண்டு எவ்விதமான குறையும் இல்லாமல் வாழ்பவர். இடுப்பிற்கு கீழ் ஒற்றை ஆடையை அணிபவர். திருச்சடை முடியில் கங்கையைத் தாங்குபவர். இடபத்தினை வாகனமாகக் கொண்டவர். இவ்வாறான சிவபெருமான் திருப்பைஞ்ஞீலியில் தினந்தோறும் பூதகணங்கள் சூழ்ந்து நின்று பணிசெய்யது வீற்றிருந்து அருளுகின்றார்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 30 (2018)

பாடல்

அட்டகாலன் றனைவவ் வினான்அவ் வரக்கன்முடி
எட்டுமற்றும் மிருபத்திரண் டும்இற வூன்றினான்
இட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள்
மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரும் மாகாளமே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

எட்டு திசைகளிலும் சென்று மார்க்கண்டேய முனிவரின் உயிரை கவருவதற்காக போராடிய காலனின் உயிரைக் கவர்ந்தவனும், இராவணனின் பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெரியுமாறு திருவடியை ஊன்றியவனும் ஆகிய சிவன் விரும்பி உறையும் இடம் தேனீகளின் ஒலிப்பு  சூழ்ந்துள்ளதுமான திருமாகாளமாகும்.

விளக்க உரை

 • எட்டும் இருபத்திரண்டும் (8+22) – பத்துத் தலைகளும் இருபது கைகளுமாகிய முப்பதும்
 • மட்டு – தேன்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 15 (2018)

பாடல்

உரியேன் அல்லேன் உனக்கடிமை
     உன்னைப் பிரிந்திங் கொருபொழுதுந்
தரியேன் நாயேன் இன்னதென்
     றறியேன் சங்கரா கருணையினாற்
பெரியோன் ஒருவன் கண்டுகொள்
     என்றுன் பெய்கழல் அடிகாட்டிப்
பிரியேன் என்றென் றருளிய அருளும்
      பொய்யோ எங்கள் பெருமானே

தேவாரம் – எட்டாம் திருமுறை – மாணிக்கவாசகர்

பதவுரை

சங்கரனே! எம் பெருமானே! யான், உனக்கு அடிமையா இருப்பதற்கு கூட உரிய தகுதி உடைவன் அல்லேன்; கருணையில் ஒப்பற்றவனாகிய நீ, உன் கழலை அணிந்த திருவடியைப் பார்த்துக் கொள்வாயாக என்று காட்டியும், உன்னைப் பிரிய மாட்டேன் என்று அருளிச் செய்த உன் திருவருளும் பொய்தானோ? நாயேன் அதன் தன்மை இன்னதென்று அறியமாட்டேன். எனினும் உன்னை விட்டு நீங்கி இந்த இடத்தில் ஒருகணமும் தங்கியிருக்கமாட்டேன்.

விளக்க உரை

 • ‘பொழுது’ – மிகச் சிறியதான நொடிப்பொழுது. (கண் இமைப் பொழுது போன்றது)
 • ‘என்றென்று’ – வலியுறுத்தலில் பொருட்டு அடுக்குத் தொடர்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 14 (2018)

 

பாடல்

தண்டேர்மழுப் படையான்மழ

   விடையான்எழு கடல்நஞ்

சுண்டேபுரம் எரியச்சிலை

   வளைத்தான்இமை யவர்க்காத்

திண்டேர்மிசை நின்றான்அவன்

   உறையுந்திருச் சுழியல்

தொண்டேசெய வல்லாரவர்

   நல்லார்துயர் இலரே

 

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

 

பதவுரை

மழுப்படையைத் தண்டு போல கொண்டு ஏந்தியவனும், இளமையான இடபத்தை உடையவனும், தேவர்களுக்காக கடலில் எழுந்த நஞ்சினை உண்டு அவர்களை காத்தவனும், திரிபுரங்கள் எரியும்படி வில்லை வளைத்துத் வலிமையானதும் உறுதியானதுமான தேரின்மேல் நின்றவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருச்சுழியலில் சென்று அவனுக்குத் தொண்டு செய்ய வல்லவர்கள், இன்பம் உடையவரும் துன்பம் இல்லாதவரும் ஆவார்கள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 13 (2018)

பாடல்

ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர்
     ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற் றோள்மேல்
ஏகாச மாவிட்டோ டொன் றேந்திவந்
     திடுதிருவே பலியென்றார்க் கில்லே புக்கேன்
பாகேதுங் கொள்ளார் பலியுங் கொள்ளார்
     பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கிப்
போகாத வேடத்தர் பூதஞ் சூழப்
     புறம்பயம்நம் மூரென்று போயி னாரே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

தீங்கு தருகின்ற விடத்தை உண்டு, மாலையில் தோன்றும் செந்நிறத்தை போன்றதுமான பெருமான், ஐந்தலைப் பாம்பு ஒன்றனை அழகிய பொன் போன்ற தோளின் மீது மேலாடையாக அணிந்து, திரு ஓடு ஒன்றனைக் கையில் ஏந்தி, எம் இல்லத்தில் வந்து `’திருவே! உணவு இடு’ என்று கூற, உள்ளே சென்று யான் மீண்டு வர ஏதும் என்னிடத்துப் பிச்சையாகப் பெறாமல் என்னைக் கூர்ந்து நோக்கி என் கண்ணுள்ளே அவர் உருவம் நீங்காது இருக்குமாறு செய்து, பூத கணங்கள் சூழப் ‘புறம்பயம் நம் ஊர்’ என்று கூறிப் போயினார்.

விளக்க உரை

 • ஏகாசம் – ஏகம்+ஆகாசம் – ஒரே ஆகாயம் –  மேலாடை
 • ‘போகாத வேடத்தார்’ –  அவரது வேடம் என் கண்ணினின்றும் நீங்காத இயல்பானது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 12 (2018)

பாடல்

தெற்ற லாகிய தென்னிலங் கைக்கிறை வன்மலை
பற்றி னான்முடி பத்தொடு தோள்கணெ ரியவே
செற்ற தேவனஞ் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
உற்று நீநினை யாய்வினை யாயின வோயவே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

மனமே! தெளிந்த அறிவினை உடையவனும், தென்இலங்கைக்கு இறைவனாகவும்# விளங்கிய இராவணன், ஈசன் வீற்றிருந்து அருளும் கயிலைமலையைப் பெயர்க்க முற்படும் போது, பற்றிய அளவில் அவன் முடிகள் கொண்ட பத்து தலைகளையும், இருபது தோள்களும் நெரியுமாறு அவன் கர்வம் அழித்த தேவனாகிய நம்முடைய சிக்கல் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை, வினைகள்யாவும் தேய்ந்து ஒழிய நீ ஆராய்ந்து நினைவாயாக.

விளக்க உரை

 • தெற்றல் – அறிவில் தெளிந்தவன். இராவணன் ஒழுக்கத்தில் பிழை உடையவன் ஆயினும் பல நூல் கற்றதால் அறிவில் சிறந்தவன்.(இராவணம் கொடி வீணை என்பது கண்டு உணர்க).மாறுபாடுடையவன் என்பது இக்காலத்தார் கூறும் புதுப்பொருள் பொருந்தாமையால் விலக்கப்பட்டுள்ளது.
 • #இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பலபெயர்கள் இருபதாலும், ஈஸ்வர பட்டம் பெற்றமையாலும்  இறைவன் என்று அழைக்கப்பெற்று இருக்கலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 3 (2018)

பாடல்

கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால்
விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை
அரவாடச் சடைதாழ வங்கையினி லனலேந்தி
இரவாடும் பெருமானை யென்மனத்தே வைத்தேனே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

பெருமானை மறைத்தும் மறந்து போகச் செய்யும் படியாகிய செய்தும், உலக நாட்டத்தில் திளைக்கும் படி செய்யும் வலிய நெஞ்சினை உடையவர்களால் உணர்தற்கு அரியவனாய், வஞ்சனையில்லாத அடியவர் உள்ளத்தில் பரவி நிற்கும் பெருமானாய், காளை மேல் ஏறும் திறனுடையவனாய், பாம்புகள் படமெடுத்து ஆடவும், சடை தொங்கவும், உள்ளங்கையில் தீயினை ஏந்தி இரவினில் கூத்தாடும் பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன்

விளக்க உரை

 • கரவார் – சதா சிவசிந்தனையாளர்
 • வித்தகன் – ஞானசொரூபன்
 • இரவு – கேவலாவத்தை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 2 (2018)

பாடல்

பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார்
அஞ்ச ஆனை யுரித்தன லாடுவார்
நெஞ்சம் வாழி நினைந்திரு மீயச்சூர்
எந்த மையுடை யாரிளங் கோயிலே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

நெஞ்சமே! ஈசானம் முதல் சத்யோஜாதம் வரை ஐந்து மந்திரங்களை ஓதும் பரமனும், யானையை அஞ்சுமாறு அதன் தோலை உரித்தவனும், தீயேந்தி ஆடுவானும், திருமீயச்சூர் இளங்கோயிலில் இருந்து அருள்புரிவனும் ஆகிய எம்மை உடையானுமாகிய பெருமானையே நினைந்திரு; அந்த நினைப்பால் வாழ்வாய்.

விளக்க உரை

 • பஞ்சமந்திரம் -ஈசானஸ் ஸர்வ வித்யானாம், ஈச்வரஸ்ஸர்வ
  பூதானாம் – தமீச்வராணாம் பரமம் மகேச்வரம்

  முதலியவை, ஈச்வர பத அர்த்தத்தை விளக்கும் பஞ்ச மந்த்ரங்கள் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 31 (2018)

பாடல்

பிறையுடை யான்பெரி யோர்கள்பெம்மான் பெய்கழ னாடொறும் பேணியேத்த
மறையுடை யான்மழு வாளுடையான் வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட
கறையுடை யான்கன லாடுகண்ணாற் காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளிக்
குறையுடை யான்குறட் பூதச்செல்வன் குரைகழ லேகைகள் கூப்பினோமே.

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

தலையில் சந்திரனை பிறையாக அணிந்தவனும், பெருமை மிக்க செயல்களைச் செய்கிறவர்களும், நல்ல பண்புடையவர்களாக விளங்குகின்றவர்களும், புகழ்ச்சியை விரும்பாதவர்களும், உலகியல் நோக்கத்தினை பிரதானமாக கொண்டு செயல்படுவர்களும் ஆன பெரியோர்களின் தலைவனும், வேத வடிவங்களாகி அதன் தலைவனாக இருப்பவனும், மழுவாகிய வாளை உடையவனும், மால் துயிலுகின்ற கடலாகிற பாற்கடலிலே தோன்றிய நஞ்சினை உண்டு அதனால் ஏற்பட்ட கண்டத்தை உடையவனும், கோபம் கொண்டு கனல் சேர்ந்த விழிகளால் காமனைக் எரித்தவனும், சிவபெருமான் தம் திருநடனத்தைப் புலப்படும்படிக் காட்டியருளும் செல்வனுமாகிய காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தை உறைவிடமாக கொண்டவனாகிய இறைவன் திருவடிகளை நாள்தோறும் விரும்பி ஏத்தி அத்திருவடிகளையே கை கூப்பினோம்.

விளக்க உரை

 • காட்டுப்பள்ளிக் குறையுடை யான் – அன்பர்களின் குறைகளைக் கேட்டறிபவனும் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. பொருள் பொருந்தாமையால் இவ்விளக்கம் விலக்கப்பட்டுளது. ஆன்றோர்கள் ஆய்ந்து அறிக.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 27 (2018)

பாடல்

உரைப்பார் உரைப்பவை உள்க வல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்காடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
காரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

உன்னை இடையறாது நினைத்து, உன்னைப் பற்றி அறிந்து, அதன் உட்பொருளை பொருள் மாறாது உரைக்கும் அடியார்கள் தங்கள் தலை உச்சியாக இருப்பவனே, இடுப்பில் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே, எல்லா வகையிலும் முதலும் முடிவும் ஆனவனே, சிறந்த முல்லை நிலத்தையும், சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள `அவினாசி` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, காலனையும், முதலையையும், இக்குளக்கரையில் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள்.

விளக்க உரை

 • `காலனை முதலையிடத்தும், முதலையைக் கரையிடத்தும் தரச்சொல்லு ` என்ற பொருளில் சுந்தரர் இவ்வாறு இப்பாடலை அருளிச்செய்து முடிக்குமுன்பே, நீரில்லா மடுவில் நீர் நிறைந்திட முதலை அங்கு வந்து, சுந்தரரிடம் ஐந்து வயது பாலகனாக உண்ட சிறுவனை  பத்து வயதுப் பையனாகவே உயிருடன் உமிழ்ந்துவிட்டுச் சென்றது வரலாறு
 • உள்குதல் – உள்ளுதல், நினைதல், ஆராய்தல், நன்கு மதித்தல், மீண்டும் நினைத்தல், இடைவிடாது நினைத்தல்
 • ‘உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே’ எனும் பொருளில் பல இடங்களில் விளக்கப்பட்டுளது. இறைவன் புகழ் சொல்லை விரும்பாதவன் எனும் பொருளிலும், உரைப்பார், உரைப்பவை உரைப்பார், உள்கி உரைப்பவை உரைப்பார் எனும் பொருளிலும் இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 • தங்கள் உச்சியாய் – யோக தொடர்புள்ளவர்கள் குரு மூலமாக அறிக

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 26 (2018)

பாடல்

அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
     அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
     திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
     கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
     பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

தேவாரம் -ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

புறப்பொருளை அறியும் கருவி மட்டும் கொண்டு, தன்னையறியும் உயிரறிவு துணையுடன் தன் முயற்சியால் அறிந்து அணுவதற்கு அரியவன் ஆனவனும், ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் ஆகிய அறுதொழில்களை செய்யும் தில்லைவாழ் அந்தணர்களின் உள்ளத்தில் உள்ளவனும், வீடுபேறு அளிக்கும் அறிய பெரிய வேதங்களின் உட்பொருளாக இருப்பவனும், மிகவும் சிறிதானதும், நுண்ணியதுமான அணு அளவில் உள்ளவனும், யாரும் தம் முயற்சியால் உணரமுடியாத மெய்ப்பொருள் ஆகியவனும், தேனும் பாலும் போன்று இனியவனும், தானே விளங்கும் சுயம்பிரகாசம் ஆகிய நிலைபெற்ற அறிவே ஆன ஒளிவடிவினனும், எல்லா வகையிலும் மேம்பட்டவனும், வியாக்கிரபாதர் என்னும் புலிக்கால் முனிவனுக்கு உறைவிடமாகிய தில்லையில் எழுந்தருளும் அப்பெருமானுடைய உண்மையான புகழைப் பற்றி பேசாத நாள்கள் எல்லாம் பயன் அற்ற நாள்களே.

விளக்க உரை

 • பெரும்பற்றப் புலியூரானை – புலி கால் முனிவர் பூசித்த திருப்பாதிரிப் புலியூரில் உள்ளவனை என்று சில இடங்களில் விளக்கப்பட்டுளது. அந்தணர் என்று தில்லை வாழ் அந்தணர் குறித்த செய்தியாலும்,  புலிக்கால் முனிவர் பற்றிய செய்தியாலும், ஆறாம் திருமுறையில் முதல் தலம் மற்றும்  கோயில் எனப்படுவதும், சைவர்களால் குறிக்கப்படுவதும் ஆன ‘கோயில்’  என்று விளக்கி இருப்பதாலும் இப்பொருள் கொண்டு விளக்கப்பட்டிருக்கிறது. பிழை இருப்பின் ஆன்றோர்கள் மன்னிக்க.
 • ‘அணு’ என்றதனால் நுண்மையும், ‘பெரியான்’ என்றதனால் அளவின்மையும் அருளியது குறித்து  ஒப்பு நோக்கி  சிந்திக்கத் தக்கது.
 • ‘பிறவாநாள்’ – பிறவி பயனின்றி ஒழிந்த நாளாதல் பற்றி. அறம், பொருள், இன்பங்கள் நிலையற்ற உலகியல் இன்பம் தருவதான சிறுமை தரும் என்பது பற்றியும், இறை இன்பமான பெரும் பயன் தராது எனும் நோக்கில்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 23 (2018)

பாடல்

தவ்வலி யொன்ற னாகித் தனதொரு பெருமை யாலே
மெய்வ்வலி யுடைய னென்று மிகப்பெருந் தேரை யூர்ந்து
செவ்வலி கூர்வி ழி ( ய் ) யாற் சிரம்பத்தா லெடுக்குற் றானை
அவ்வலி தீர்க்க வல்லா ரவளிவ ணல்லூ ராரே.

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

குறைந்த வலிமையை உடையவனாய் இருந்தும், செருக்கு அடைந்து அதனால் ‘தன்னை உண்மையான வலிமை உடையவன்’ என்று கருதி மிகப் பெரிய தேரில் ஏறிச் சென்று, கோபம் காரணமாக சிவந்த, கொடிய கூர்மையான விழிகளால் கயிலையை, தன் பத்துத் தலைகள் கொண்டு அதனைத் தூக்க முற்பட்டவனாகிய இராவணனுடைய செருக்கினை அழித்து, வலியைப் போக்கிய பெருமான் திருஅவளிவணல்லூரில் உறைகின்றார்.

விளக்க உரை

 • ஊர்தல் – நகருதல், பரவுதல், தினவுறுதல், நெருங்குதல், வடிதல், ஏறிச் செல்லுதல், கழலுதல், ஏறுதல்
 • தவ்வுதல் – ஒடுங்குதல், குறைதல்
 • தவ்வலி – ஒடுங்கும் வலி, குறைந்த வன்மை
 • ஒன்றன் – தன் வலி ஒன்றினையே துணையாக உடையவன்

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

வாமதேய மந்திரத்தால் செய்யும் தொழில் என்ன?
திதி எனும் காத்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 19 (2018)

பாடல்

போந்தனை தரியாமே நமன்றமர் புகுந்தென்னை
நோந்தனை செய்தாலும் நுன்னல தறியேன்நான்
சாந்தனை வருமேலுந் தவிர்த்தென்னை யாட்கொண்ட
வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

 பதவுரை

இறக்கும் நிலையை  நீக்கி என்னை ஆட்கொண்ட தலைவனே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, எனது துன்பத்தைச் சிறிதும் பொறாமல் அதை நீக்குதலுக்கு தகுதியானவன் நீயே அன்றோ! ஆதலினால் எமனுக்கு ஏவலராய் உள்ள தூதர்கள் வந்து எனக்கு துன்புறும் செயல்களைச் செய்யினும், யான் உன்னை அன்றி வேறொருவரைத் துணையாக அறியமாட்டேன்.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

தத்புருட மந்திரத்தால் செய்யும் தொழில் என்ன?
திரோபவம் எனும் மறைத்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 17 (2018)

பாடல்

வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
     வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
     ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
     தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாட லுகந்தாய் போற்றி
     கயிலை மலையானே போற்றி போற்றி

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

வானில் உள்ள தேவர்கள் போற்றும் அமுதமாய், வந்து என் உள்ளம் புகுந்தவனாய், உயிர்களின் பிறப்பிற்கு காரணமான குறையைப் போக்கும் அருள் உருவம் உடையவனாய், ஓங்கித் தீப்பிழம்பாய் உயர்ந்தவனாய், தேன் போல தெளிவாக தோன்றுபவனே, தேவர்களுக்கும் தேவனாய் நின்றவனே , சுடுகாட்டுத் தீயில் கூத்தாடுதலை விரும்பி செய்பவனாய் உள்ள கயிலை மலையானே! உன்னை போற்றுகிறேன்.

விளக்க உரை

 • மருந்து – அமுதம்
 • வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி – தன் முயற்சி இல்லாமல் இறைவன் தானே வந்து ஆட்கொண்டு அருள் புரிந்த விதம் பற்றிய குறிப்பு.
 • ‘தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி கானத்தீ யாட லுகந்தாய் போற்றி’ – தேவ லோகத்தையும், சுடு காட்டையும் சமமாக பாவிப்பவன் எனும் பொருள் பற்றியது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 16 (2018)

பாடல்

தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச் சரமமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கடம் மட்டமிநாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

பூம்பாவாய்! பராக்கிரமும், கோபமும் தன் இயல்பாக உடைய இராவணனின் தோள்களை நெரித்து உகந்த திருவடிகளை உடையவனாய், கண்களுக்கு நிறைவு தரும் மயிலை எனும் கபாலீச்சரத்தில் அமர்ந்து உள்ளவனுக்கு, இடை வடிவமான பண்ணோடு பாடும் சப்தரிஷிகள் & வாலகில்யர்கள், தேவர்கள், அரம்பையர்கள், அசுரர்கள், தானவர்கள், தைத்தியர்கள், நாகர்கள், கருடர்கள், கிண்ணரர்கள், கிம்புருசர்கள், யட்சர்கள் / யட்சினிகள், வித்தியாதரர்கள், அரக்கர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், சாரணர்கள், பூத கணங்கள், பிசாசர்கள் ஆகிய பதினெண் கணத்தினரும் ஏத்தும் வகையில் சித்திரை அட்டமியில் நிகழும் விழாவைக் கண்ணாரக் கண்டு மகிழாமல் செல்வது முறையோ?

விளக்க உரை

 • தண்ணா – வெம்மையைச் செய்யும்; ‘தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானை’ – குளிர்ச்சி பொருந்திய, தமிழை வளர்க்கிற பாண்டி நாட்டையுடையவனும் எனும் வரிகளுடன் மாற்றுப் பொருள் கொண்டு சிந்திக்கத் தக்கது.
 • கண்ணார் – பகைவர்
 • தேவர்கள், சித்தர்கள், அசுரர், தைத்தியர்கள், கருடர்கள், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தர்வர், இயக்கர்கள், விஞ்சையர், பூத கணங்கள், பிசாசர்கள், அந்தரர், முனிவர்கள், உரகர்கள், ஆகாய வாசியர், போக பூமியர் ஆகியோர் பதினெண் கணத்தினர் என்று மற்றொரு குறிப்பில் காணப்படுகின்றது.
 • முன் காலத்தது விழா – அட்டமிநாள் விழா; தற்காலத்தில் சித்திரைப் பௌர்ணமி; ‘கடம் மட்டமிநாள்’ – அடர் அட்டமி நாள் – அடர் எனும் சொல் பூவிதழ் எனும் பொருளோடு இணைந்து எனக் கொண்டால் முழுமை பெற்ற (இரண்டு) அட்டமி நாள்; ஆக மொத்தம் 16 எனவே சித்திரை பௌர்ணமி எனவும் கொள்ளலாம்; கடலாடுதல் சித்திரை நிலவில் நிகழும் என்பதாலும், அவ்விழா குறித்து எழுதப்பட்டதாகவும் இருக்கலாம்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 15 (2018)

பாடல்

அடியார் சிலர்உன் அருள்பெற்றார்
     ஆர்வங் கூர யான்அவமே
முடையார் பிணத்தின் முடிவின்றி
     முனிவால் அடியேன் மூக்கின்றேன்
கடியே னுடைய கடுவினையைக்
     களைந்துன் கருணைக் கடல்பொங்க
உடையாய் அடியேன் உள்ளத்தே
     ஓவா துருக அருளாயே

தேவாரம் – எட்டாம் திருமுறை – மாணிக்கவாசகர்

பதவுரை

உடையவனே! உன் அடியார்களில் சிலர் உன்னிடத்தில் இருந்து உன்னுடைய அருளைப் பெற்றார்கள். அடியவனாகிய நானோ அழிவில்லா துர்நாற்றமுடைய பிணத்தைப் போன்று வெறுப்பினால்  வீணே  மூப்படைகின்றேன். அவ்வாறு இருந்தும் இளகாத மனம் உடையவனாகிய என்னுடைய கொடுமையான வினைகளை நீக்கி, அடியேனுடைய உள்ளத்தில் உன்னுடைய கருணையாகிய கடல்  பொங்கும் வண்ணம் இடைவிடாது உருகும்படி அருள் புரிவாயாக.

விளக்க உரை

 • பிணத்தின் – வெறுப்புக் காரணமாக உடம்பை பற்றிய சொல் ‘பிணம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 10 (2018)

பாடல்

நிலனே நீர்வளிதீ நெடுவானக மாகிநின்ற
புலனே புண்டரிகத் தயன்மாலவன் போற்றிசெய்யும்
கனலே கற்பகமே திருக்கற்குடி மன்னிநின்ற
அனல்சேர் கையினனே அடியேனையும் அஞ்சலென்னே.

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

தீ ஏந்திய கையை கொண்டு, திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளி உள்ளவனே, நிலம், நீர், தீ, காற்று, நீண்டவானம் எனும் ஆகாயம் என்னும் ஐந்துமாகி உள்ளவனே, தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் மற்றும் மாயோன் ஆகிய திருமால் இருவரும் போற்றி நின்ற பொழுதில் நெருப்பாகி தோன்றியவனே, கற்பகத் தரு போன்றவனே, அடியேனையும், `அஞ்சதே` என்று சொல்லி அருள் புரிவாயாக.

விளக்க உரை

 • இத்தலத்தில் இறைவர்  ‘கற்பகநாதர்’  ஆதலின்  ‘கற்பகமே` எனும் சொற்றொடர். ஆறாம்  திருமுறையில் ‘கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே’ என்றும் பாங்கோடு வைத்து சிந்திக்கத் தக்கது.
 • அஞ்சலென்னே என்பதை `அஞ்சாதி` என்று சொல்லி அருள் புரிவாயாக என்று சில இடங்களில் விளக்கப்பட்டுளது.  ‘அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன …அஞ்சாதி யாதி அகம்புக லாமே’  எனும் திருமந்திரப் பாடலின் படி அஞ்செழுத்து சிவன் இருப்பிடம் இத்தலம் ஆகவே அஞ்செழுத்தாக சிவன் இத்தலத்தில் உறைகின்றான் என்றும் பொருள் தோன்றும். கற்றறிந்தோர் பொருள் கொண்டு உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 4 (2018)

பாடல்

மழுங்கலா நீறாடும் மார்பர் போலும்
     மணிமிழலை மேய மணாளர் போலும்
கொழுங்குவளைக் கோதைக் கிறைவர் போலும்
     கொடுகொட்டி தாள முடையார் போலும்
செழுங்கயி லாயத்தெஞ் செல்வர் போலும்
     தென்னதிகை வீரட்டஞ் சேர்ந்தார் போலும்
அழுங்கினா ரையுறவு தீர்ப்பார் போலும்
     அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

ஒளி குறையாத மணியுடன் கூடிய திருநீற்றைப் மார்பினில் பூசியவரும், அழகியதான திருவீழி மிழலையில் திருமணக் கோலத்தினை கொண்டவரும், குவளை மலர் மாலையை அணிந்த உமை அம்மைக்குத் தலைவர் ஆனவரும், கொடு கொட்டி ஆடும் ஆடலுக்கு ஏற்ற தாளம் உடையவரும். செழுமை உடைய கயிலாயத்தில் உள்ள எம் செல்வரும், தென் திசையில் உள்ள அதிகை வீரட்டத்தை உகந்து அவ்விடம் சேர்ந்தவரும், (துன்பத்தினால்) ஒளி குறைந்து வருந்துபவர்களைக் காப்பாற்ற மாட்டாரோ என்ற ஐயம் அனைத்தும் தீர்த்து அவர்களை ஆட்கொள்ளுபவராகிய எமது  ஆமாத்தூர்த் தலைவர் எல்லா வகையிலும் அழகியரே.

விளக்க உரை

 • அழுங்குதல் – அழுங்கல் – அரவம் (ஒலி) ,இரக்கம், கேடு, அச்சம், சோம்பல், பேரிரைச்சல், நோய்
 • ஐயுறவு தீர்ப்பார் – `துன்பங் களைவரோ களையாரோ` என்னும் ஐயம். இத்திருப் பாடலின் இறுதியில் ` ஐயுறவு தீர்ப்பார்` என்றதால், நிச்சயம் நிறைவேற்றுவார் என்பது உரை பொருள். மேலும், அடியவர்களை மாயையில் ஆழ்த்தும் ஐம்புலன்களது உறவை அறுப்பவர் என்றும் பொருள் கொள்ளலாம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 3 (2018)

பாடல்

வேதங்கள் நான்குங் கொண்டு விண்ணவர் பரவி யேத்தப்
பூதங்கள் பாடி யாட லுடையவன் புனித னெந்தை
பாதங்கள் பரவி நின்ற பத்தர்க டங்கண் மேலை
ஏதங்க டீர நின்றா ரிடைமரு திடங்கொண் டாரே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

நான்கு வேதங்களையும் ஒலித்துக்கொண்டு, தேவர்கள் முன்நின்று போற்றிப் புகழ,  பூதங்கள் எனப்படும் உயிர்வர்க்கங்கள் பாட, கூத்தாடுதலை உடைய தூயவனாகிய எம் தலைவர், தம் திருவடிகளை முன்நின்று துதித்த அடியார்களுடைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளையும், பிராப்தம் ஆகிய நிகழ்கால வினைகளையும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகளையும் தீர்ப்பவராக இடைமருதூர் எனும் திருவிடைமருதூர் திருத்தலத்தை இடமாக கொண்டுள்ளார்.

விளக்க உரை

 • ஏதம் –  துன்பம், குற்றம், கேடு, தீமை

 

 

சமூக ஊடகங்கள்
1 2 3 4