அமுதமொழி – விளம்பி – சித்திரை – 11 (2018)

பாடல்

அமல கமலவுரு சங்கந் தொனித்தமறை
   அரிய பரமவெளி யெங்கும் பொலித்தசெய
     லளவு மசலமது கண்டங் கொருத்தருள …… வறியாத
தகர முதலுருகொ ளைம்பந் தொரக்ஷரமொ
   டகில புவனநதி யண்டங் களுக்குமுத
     லருண கிரணவொளி யெங்கெங் குமுற்றுமுதல் …… நடுவான
கமல துரியமயி லிந்துங் கதிர்ப்பரவு
   கனக நிறமுடைய பண்பம் படிக்கதவ
     ககன சுழிமுனையி லஞ்சுங் களித்தமுத …… சிவயோகம்
கருணை யுடனறிவி தங்கொண் டிடக்கவுரி
   குமர குமரகுரு வென்றென் றுரைப்பமுது
     கனிவு வரஇளமை தந்துன் பதத்திலெனை …… யருள்வாயே
திமிலை பலமுருடு திந்திந் திமித்திமித
   டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட
      திகுட திகுடதிகு திந்திந் திகுர்த்திகுர்த …… திகுதீதோ
செகண செகணசெக செஞ்செஞ் செகக்கணென
   அகில முரகன்முடி யண்டம் பிளக்கவெகு
     திமிர்த குலவிருது சங்கந் தொனித்தசுரர் …… களமீதே
அமரர் குழுமிமலர் கொண்டங் கிறைத்தருள
   அரிய குருகுகொடி யெங்குந் தழைத்தருள
     அரியொ டயன்முனிவ ரண்டம் பிழைத்தருள …… விடும்வேலா
அரியின் மகள்தனமொ டங்கம் புதைக்கமுக
   அழகு புயமொடணை யினபங் களித்துமகிழ்
     அரிய மயிலயில்கொ டிந்தம் பலத்தின்மகிழ் …… பெருமாளே.

திருப்புகழ் – அருணகிரிநாதர்

பதவுரை

திருமாலின் மகளான வள்ளியின் தனங்களோடு தனது அங்கமும் சேர்ந்து இருக்கும் படி, திருமுக அழகுடன் திருத்தோள்களால் அவளை அணைத்து இன்பத்தில் திளைத்து மகிழ்ந்து, அருமை வாய்ந்த மயிலுடனும், வேலாயுதத்துடனும் இந்தம்பலம்  என்ற ஊரில் மகிழ்ந்து ஆனந்தமாக அமர்ந்த பெருமாளே, திமில் எனும் பறையும்,  முருடு எனும் பலவிதமான மத்தள வகையும் ‘திந்திந் திமித் திமித   டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட    திகுட திகுடதிகு திந்திந் திகுர்த்திகுர்த திகுதீதோ   செகண செகண செக செம் செம் செகக்கண’ என  தாளத்துக்கு ஏற்ப ஒலிக்கவும், ஆதிசேஷனின் முடிகள் வரை நீண்டதான அண்டங்களும் பிளந்து போகும்படி மிக்க பேரொலியை எழுப்பி, வெற்றிச் சின்னங்களான சங்கங்கள் முழங்க, அசுரர்கள் சண்டையிட்டு மடிந்த போர்க்களத்தில் தேவர்கள் ஒன்று கூடி மலர்களைக் கொண்டு அங்கு பொழிய, அருமை வாய்ந்த கோழிக் கொடி எங்கும் சிறப்பாக விளங்க, திருமாலும், பிரமனும், முனிவர்களும், அண்டங்களும் பிழைத்து உய்ய  வேலாயுதத்தைச் செலுத்திய வேலவனே, குற்றம் இல்லாத, 1008 இதழ் தாமரை வடிவம் கொண்ட சஹஸ்ராரதில்  இருந்து சங்க நாதம் ஒலிக்க, வேதங்கள் என்றும் சாத்திரங்கள் என்றும் சொல்லப்படும் மறைகளால் அறியப்படாது செழித்து விளங்க கூடியதும், அசைவற்றதுமான அபூர்வமான ஆகாச வெளி  எனும் அவ்விடத்தில் எவராலும் அவ்விடத்தின் உண்மைத் தன்மையை அறிய முடியாதவாறு, உயிர் எழுத்தும், மெய் எழுத்தும் ஆகி உருக் கொண்டுள்ள அகராதி 51 அக்ஷரங்கள் ஆகி, அனைத்து லோகங்களுக்கும், ஆறுகளுக்கும், அண்டங்களுக்கும் முதன்மை பெற்றதாய்,  செந்நிற கிரணங்களை வீசும் பேரொளியை எல்லா இடங்களிலும் கண்டு, முதல், நடு, மற்றும் தாமரைவடிவமானதும், யோகியர் தன் மயமாய் நின்று தியானிக்கும் உயர் நிலையான துரியத்தில் சந்திர ஒளி போல் பரவுவதும்,  பொன்னொளி பொன்ற நிறமுடையதும், ஸ்படிகம் போன்ற வெண்மை நிறமான சுத்த வாயிலைக் கொண்டதுமான ஆகாய வெளியில், சுழி முனை நாடியின்  உச்சியில், பஞ்ச இந்திரியங்களும் இன்பம் பெறக் கூடியதாய் அமுதம் போல் விளங்கும் சிவ யோக நிலையை உனது கருணையினால் அறியும்படியான வழியை யான் அடைவதற்கு, பார்வதியின் குமரனே, குமர குருவே என்று பல முறை கூற, முதிர்ந்து கனிந்த பக்தி நிலை வர,  செயல் செய்வதற்கான திடம் எனப்படும் இளமையைத் தந்து, உன் திருவடியில் என்னை இணைக்க அருள்வாயாக.

விளக்க உரை

 • பெரும்பேர்கண்டிகையில் இருந்து கிழக்கே செய்யூர் வழியில் உள்ளது இத்தலம் என்று சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாடலில் யோக மரபு பற்றிய குறிப்புகள் பல இருப்பதாலும், அம்பலம் என்ற சொல் சிற்சபையை குறிப்பதாலும், தச தீட்சையில் பல குறிப்புகள் இருப்பதாலும்,  பூத்தாக்காலாயிரத்தெட்டின் வாசி பூங்கமலத் திருவடியை பூசை செய்யே (அகஸ்தியர் ஞானம்)  –  உண்மையான குருவினை சரண் அடையும் போது அவர் கற்றுத் தருவதில் இவையும் அடக்கம் என்பதாலும் குருமுகமாக ஆழ்ந்து அறிக.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – உவணம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  உவணம்

பொருள்

 • உயர்ச்சி
 • உயர்வு
 • கருடன்
 • பருந்து

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அதல சேட னாராட அகில மேரு மீதாட
   அபின காளி தானாட …… அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
   அருகு பூத வேதாள …… மவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
   மருவு வானு ளோராட …… மதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட
   மயிலு மாடி நீயாடி …… வரவேணும்
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
   கருத லார்கள் மாசேனை …… பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
   கனக வேத கோடூதி …… அலைமோதும்
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
   உவண மூர்தி மாமாயன் …… மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
   னுளமு மாட வாழ்தேவர் …… பெருமாளே

திருப்புகழ் – அருணகிரிநாதர்

கருத்து உரை

கதாயுதத்தை தன் தோளினின்று அகற்றாத வீமன் செலுத்திய அம்பு மழையில், பெரும் பகைவர்களாகிய கெளரவர்களின் பெரிய சேனையை பொடிபட உதவியவரும், கதறிச் சென்ற பசுக்கள் மீண்டு வர  தனது புல்லாங்குழலை ஊதியவரும்,  அர்ச்சுனன் ஏறிய தேரில் தேர்ப்பாகனாக இருந்தவரும், தங்க மயமானதும், வேத ஒலியைத் தருவதும் ஆன சங்கை ஊதியவரும்,  அலை வீசும் பாற்கடல் மீதில்  பாம்பின் மேல் பள்ளி கொண்டவரும், மூன்று உலகங்களை மூன்று அடியில் அளந்த பாதத்தை உடையவரும்,  கருடனை வாகனமாகக் கொண்டவரும் ஆன திருமாலின் மருமகனே!  அன்றலர்ந்த மலர் மாலையை அணிந்த மார்பினை உடையவனும், திருவண்ணாமலை அரசனும் ஆகிய ப்ரபுட தேவராஜனின் உள்ளமும் மகிழ்ச்சியில் ஆடும் வண்ணம் அவனது நெஞ்சிலே வாழும் தேவர் பெருமாளே! பூமிக்கு கீழ் பாதாலத்தில் இருக்கும் ஆதிஷேன் ஆடவும், அகிலத்தில் மீதுள்ள மேருமலை அசைந்தாடவும், சிவதாண்டவத்துக்கு மாறுபாடு இன்றி  ஒற்றுமையாக காளி தாண்டவம் ஆடவும், அந்த காளியோடு அதை எதிர்த்து அன்று அவள் அதிர்ந்து நடுங்கும்படி ஊர்த்துவகோலத்தில் நடனம் ஆடி போட்டியிட்டவரான, ரிஷபத்தில் ஏறிய  சிவன் ஆடவும், அருகில் பூத கணங்களும் பேய்களும் ஆடவும், இனிமை மிக்க சரஸ்வதியும் ஆடவும், தாமரை மலரில் அமரும் பிரமனும் ஆடவும், அருகில் அவர்களிடத்தில்  பொருந்தி நிற்கும் தேவர்கள் எல்லாம் ஆடவும், சந்திரன் ஆடவும், தாமரை மறையில் உறையும் மாமி ஆகிய லக்ஷ்மியும் ஆடவும், விஸ்வரூபம் எடுத்த நின் மாமனாகிய விஷ்ணுவும் ஆடவும், நீ ஏறிவரும் மயிலும் ஆடி, நீ நடனம் ஆடி என்முன்னே வரவேண்டும்.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

மறைத்தலின் நோக்கம் என்ன?
உயிர்கள் தம் வினைகளை நுகர்தல் பொருட்டு ஆசை உண்டாக்குதல்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – நொதி

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  நொதி

பொருள்

 • அருவருக்கத்தக்கசேறு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அடியில்வி டாப்பிண மடையவி டாச்சிறி
   தழியுமுன் வீட்டுமு …… னுயர்பாடை
அழகொடு கூட்டுமி னழையுமின் வார்ப்பறை
   யழுகையை மாற்றுமி …… னொதியாமுன்
எடுமினி யாக்கையை யெனஇடு காட்டெரி
   யிடைகொடு போய்த்தமர் …… சுடுநாளில்
எயினர்கு லோத்தமை யுடன்மயில் மேற்கடி
   தெனதுயிர் காத்திட …… வரவேணும்
மடுவிடை போய்ப்பரு முதலையின் வாய்ப்படு
   மதகரி கூப்பிட …… வளையூதி
மழைமுகில் போற்கக பதிமிசை தோற்றிய
   மகிபதி போற்றிடு …… மருகோனே
படர்சடை யாத்திகர் பரிவுற ராட்சதர்
   பரவையி லார்ப்பெழ …… விடும்வேலாற்
படமுனி யாப்பணி தமனிய நாட்டவர்
   பதிகுடி யேற்றிய …… பெருமாளே.

திருப்புகழ் – அருணகிரிநாதர்

கருத்து உரை

முதலை பிடியில் சிக்கிய கஜேந்திரனின் அபயக் குரலைக் கேட்டவுடன்  அங்கு நேரில் தோன்றி யானைக்கு மோட்சம் அளித்தவனும், சங்கை ஊதுபவனும், கரிய மேகம் போன்றவனும், பட்சிகளின் அரசனான கருடன் மேல் ஏறி வந்தவனும், இவ் உலகின் தலைவனுமாகிய திருமால் துதித்து ஏத்தும் மருமகனே! பரந்த சடையை உடையவனும், கடவுள் உண்டென்று நம்புவோர்க்கு அதன் பொருளாகவும் உள்ள சிவபெருமான் அன்பு கொள்ளும் வகையில், அரக்கர்கள் கடலில் கூச்சலிட்டு அலறும்படிச் செலுத்திய வேலால் அவர்கள் அழியும்படி செய்வித்து, தன்னைப் பணிந்த பொன்னுலகத்தில் வாழும் தேவர்களின் தலைவனான இந்திரனை மீண்டும் குடி ஏற்றிய பெருமாளே! ‘வீட்டில்  கிடக்கும் பிணத்தை அங்கேயே இருக்க விடாமல், அழுகிப் போவதற்கு முன்னமேயே வீட்டுக்கு எதிரில் சிறப்புடன் பாடையை அழகாகக் கட்டுங்கள்; நன்கு கட்டப்பட்ட பறை வாத்தியங்களை வரவழையுங்கள்; அழுகையை நிறுத்துங்கள்; பிணம் கெட்டு அழியும் முன்னர் உடலை எடுத்துச் செல்லுங்கள்’  என்று கூறி சுடுகாட்டில் தீயின் இடையே கொண்டு போய்ச் சுற்றத்தார் சுட்டு எரிக்கும் அந்த நாளில், வேடுவர் குலத்தைச் சேர்ந்த, உத்தம குணம் உடைய வள்ளியோடு மயில் மேல் ஏறி விரைவாக என் உயிரைக் காப்பதற்கு வரவேண்டும்.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – நிட்டூரம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  நிட்டூரம்

பொருள்

 • கொடுமை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கொத்தார் பற்கா லற்றே கப்பாழ்
   குப்பா யத்திற் …… செயல்மாறிக்
கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே
   கொட்டா விக்குப் …… புறவாசித்
தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன்
   அஆ உஉ…… எனவேகேள்
செற்றே சுட்டே விட்டே றிப்போ
   மப்பே துத்துக் …… கமறாதோ
நித்தா வித்தா ரத்தோ கைக்கே
   நிற்பாய் கச்சிக் …… குமரேசா
நிட்டூ ரச்சூர் கெட்டோ டப்போர்
   நெட்டோ தத்திற் …… பொருதோனே
முத்தா ரத்தோ ளிற்கோ டற்பூ
   முட்டா திட்டத் …… தணிவோனே
முற்றா நித்தா அத்தா சுத்தா
   முத்தா முத்திப் …… பெருமாளே.

திருப்புகழ் – அருணகிரிநாதர்

கருத்து உரை

என்றும் உள்ளவனே, விரிந்த தோகையை உடைய மயில் மீது நிற்பவனே, காஞ்சீபுரத்துக் குமரேசனே, கொடுமை வாய்ந்த சூரன் கேடு அடைந்து கடலில் ஓட, போரினை பெரிய கடலில் புரிந்தவனே, முத்து மாலை அணிந்த தோளில் வெண்காந்தள் மலரைத் தவறாது விருப்பத்துடன் அணிபவனே, முதுமையே வாராமல் என்றும் இளமையாய் இருப்பவனே, என் தந்தையே, பரிசுத்தமானவனே, இயல்பாய் பாசங்களினின்று நீங்கியவனே, முக்தியைத் தரும் பெருமாளே! வரிசையாக அமைந்திருந்த பற்கள் வேரற்று விழுந்து போக, பாழ்பட்டு இத் துன்பத்திற்கு காரணமான சட்டையான இந்த உடலின் செயல்கள் தடுமாறி, உடலின் கண் இருக்கும் மயிரெல்லாம் கொக்கின் நிறம் போன்று வெளுத்து, உடல் கூன் அடைந்து, நடக்க இயலாமல் ஊன்றுகோல் பிடித்து, கொட்டாவி விட்ட தலையானது குனிதலை அடைந்து மற்றும் இவ்வாறு நிலை வேறுபாடுகளை அனுபவித்து, நின்று  பின்னர் இறந்தார் ஐயோ கெட்டேன் எனக் கூறிக் கதறி,  அ ஆ உ உ என்னும் ஒலிகளுடன் உறவினர்கள் அழ, சுடுகாட்டுக்குச் சென்று, அங்கு பிணத்தைச் சுட்டுவிட்டு, (நீரில் மூழ்கி) வெளியேறி வருகின்ற அந்தப் பேதைமை வாய்ந்த துக்கம் நீங்காதோ?

விளக்க உரை

 • ‘ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி’ எனும் பட்டினத்தாரின் பாடலும், ‘ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு’ எனும் திருமந்திரப்பாடலும் ஒப்பு நோக்கி இங்கு சிந்திக்கத் தக்கது.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – கொளுவுதல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  கொளுவுதல்

பொருள்

 • கொள்ளச்செய்தல்
 • தீமூட்டுதல்
 • பூட்டுதல்
 • தூண்டிலிடுதல்
 • அகப்படுதல்
 • மிதியடிமுதலியனஅணிதல்
 • வேலையில்அமர்தல்
 • சிக்குதல்
 • தந்திரஞ்செய்தல்
 • குடல்தூக்கிகொள்ளதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

உடையவர்க ளேவ ரெவர்களென நாடி
   யுளமகிழ ஆசு …… கவிபாடி
உமதுபுகழ் மேரு கிரியளவு மான
   தெனவுரமு மான …… மொழிபேசி
நடைபழகி மீள வறியவர்கள் நாளை
   நடவுமென வாடி …… முகம்வேறாய்
நலியுமுன மேயு னருணவொளி வீசு
   நளினஇரு பாத …… மருள்வாயே
விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர்
   விகிர் தர்பர யோகர் …… நிலவோடே
விளவு சிறு பூளை நகுதலையொ டாறு
  விடவரவு சூடு …… மதிபாரச்
சடையிறைவர் காண உமைமகிழ ஞான
  தளர் நடையி டாமுன் …… வருவோனே
தவமலரு நீல மலர்சுனைய நாதி
  தணிமலையு லாவு …… பெருமாளே.

திருப்புகழ் (திருத்தணிகை) – அருணகிரிநாதர்

 

கருத்து உரை

ரிஷபத்தை வாகனமாகப் பூட்டிச்  செல்பவரும், குற்றமற்றவரும், தூயவரும், திரிசூலத்தை ஏந்தியவரும், மிக உயர்ந்தவரும், மேலான யோகம் படைத்தவரும், பிறைச்சந்திரன், வில்வத் தளிர், சிறிய பூளை / தேங்காய்ப்பூக் கீரை / சிறுபீளை என்று அழைக்கப் பெறும் பூளாப்பூ, பற்களுடன் கூடிய மண்டையோடு, இவற்றோடு கங்கை ஆறு, விஷப்பாம்பு ஆகியவற்றைத் தரித்துள்ள மிகுந்த பாரமான ஜடாமுடியுடைய சிவபெருமான் கண்டு களிக்கவும், உமாதேவி பார்த்து மகிழவும், ஞானத் தளர் நடையிட்டு அவர்கள் முன்னே வருபவனே, மிகுத்து மலரும் நீலோத்பலப் பூக்கள் உள்ள சுனையுடையதும், ஆதியில்லாததுமான மிகப் பழைய திருத்தணிகை மலை மீது உலாவும் பெருமாளே,  செல்வம் படைத்தவர்கள் எவர் எவர்கள் என்று தேடி, அவர்கள் மனம் மகிழுமாறு அவர்கள் மீது எதுகை மோனையுடன் கூடிய ஆசுகவிகளைப் பாடி, ‘உன்னுடைய புகழ் மேருமலை அளவு உயர்ந்தது’ எனக் கூறியும், அவர்களை வலிமையான புகழ்ச்சி மொழிகளைப் பேசியும், பல முறை நடந்து பலநாள் போய்ப் பழகியும், அவர்கள் தனம் ஈயாததால் தரித்திரர்களாகவே மீண்டு, ‘நாளைக்கு வா’ என்றே கூற, அதனால் அகம் வாடி,முகம் தனது களை இழந்து, வருந்தும் முன்னதாகவே, உனது சிவந்த ஒளி வீசுகின்ற தாமரை போன்ற இரு பாதங்களையும் தந்தருள்வாயாக.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

இறைவன் சச்சிதானந்தமாய் இருத்தல் என்ன இயல்பு?
சிறப்பு இயல்பு(சொரூப இலக்கணம்)

சமூக ஊடகங்கள்