அமுதமொழி – விளம்பி – மாசி – 8 (2019)

பாடல்

மூலம்

அல்ல லென்செயும் அருவினை யென்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே

பதப்பிரிப்பு

அல்லல் என் செயும் அருவினை என் செயும்
தொல்லை வல்வினை தொந்தம் தான் என் செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு
எல்லை இல்லதோர் அடிமை பூண்டேனுக்கே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – ஈசனுக்கு அடிமை பூண்ட தனக்கு எந்த வினைகளும் ஒரு துன்பமும் செய்யாது என அறுதியிட்டுக் கூறிய பாடல்.

பதவுரை

உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், வல்வினையாகிய துவந்தங்களும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும்  ஏனைய  சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளும், பிராப்தம் ஆகியதும் தீர்ப்பதற்கு அரியதும் ஆன நுகர்வினை ஆகிய  நிகழ்கால வினைகளும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகள் ஆகிய எதிர்வினைகளும்  எனக்கு என்ன துன்பம் செய்யவல்லன? தில்லைமாநகரிலே திருக்கூத்து நிகழ்தி அருளும் திருச்சிற்றம்பலவனார்க்கு அளவில்லாத அடிமைபூண்ட எனக்கு அந்த வினைகள் ஒரு துன்பமும் செய்யாது.

விளக்க உரை

 • அல்லல் – ஆகாமிய வினை, பழைய வினைகளை அனுபவிக்கும் போது நாம் செய்யும் செயல்களால் நாம் பெருக்கிக்கொள்ளும் வினைகள்;
 • அருவினை – அனுபவித்தால் அல்லது தீராத வினை; வேறு எவராலும் தீர்க்கமுடியாது எனபதால் அருவினை
 • தொல்லை வல்வினை – பழமையான சஞ்சித வினை; நம்மை மாயத் தோற்றத்தில் ஆழ்த்தும் வலிமை கொண்டமையால் வல்வினை
 • தொந்தம் (வடமொழியில் துவந்துவம்) – துவந்துவம் – இரட்டை . நல்வினை தீவினை , அறம் மறம் , இன்பம் துன்பம் என்னும் இரட்டைகள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 6 (2019)

பாடல்

அங்கத்தை மண்ணுக் காக்கி யார்வத்தை யுனக்கே தந்து
பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னைச்
சங்கொத்த மேனிச் செல்வா சாதனா ணாயே னுன்னை
எங்குற்றா யென்ற போதா விங்குற்றே னென்கண் டாயே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – மரணிக்கும் தருவாயில் ‘இங்கிருக்கிறேன்’ என்று இருப்பிடத்தைக் காட்டி அருள் புரிய வேண்டுதல்.

பதவுரை

முதற்கடவுளாகவும், அனைவருக்கும்  மேம்பட்டனும் ஆகிய இறைவனே, திருமேனி முழுதும் நீறு பூசப்பட்டதால் சங்கினை ஒத்த வெண்ணிறமான மேனியை உடைய செல்வனே, வெட்கத்தை கொடுப்பதும், குற்றத்தினையும், கேட்டினை உடையதும் ஆன இந்த உலகப் பொருட்கள் மீது கொண்டுள்ள பாசம் நீக்கி, அதன் மூலம் பிறவி என்ற சேற்றினை அடியோடு போக்கி, இந்த உடல் மண்ணுடன் பொருந்தி கலக்குமாறு செய்து, உன்னைப்பற்றி ஆர்வம் கொண்டு, விருப்பத்தை உன்னிடத்திலேயே வைத்து, மனதினில் உன்னை தியானித்து, என் உயிர் போய் இறக்கும் தருவாயில், இறைவனே, நாய் போன்றவனாகிய அடியேன் உன்னை ‘எங்கிருக்கின்றாய்’ என்று வினவினால், ‘இங்கிருக்கிறேன்’ என்று  உனது இருப்பிடத்தைக் காட்டி அருள் புரியவேண்டும்.

விளக்க உரை

 • அங்கம் – உடம்பு
 • மண்ணுக்கு ஆக்கி –  புதைக்கப்பட்டோ எரிக்கப்பட்டோ மண்ணொடு மண்ணாய்ப் போமாறு உடல் நீங்குதல்
 • விழுந்து தொழும்போது – உடம்பு மண்ணில் கழிக்கப்பட்ட பிறகு,  உயிர் அந்த உடம்பில் இருந்து நீங்கிச் சிவத்தில் கலத்ததாக  எண்ணுதல் சைவ மரபு .
 • பரமன் – முதற்கடவுள்
 • பங்கம் – தோல்வி, குற்றம், அவமானம், வெட்கம், விகாரம், கேடு, நல்லாடை, சிறுதுகில், இடர், துண்டு, பங்கு, பிரிவு, குளம், அலை, சேறு
 • பிறவியளறு –  பிறவிச் சேற்றினை; பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழிவிட்டவா  எனும்  கந்தரலங்கார பாடலும் ஒப்பு நோக்கி சிந்திக்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 4 (2019)

பாடல்

மூலம்

சொல்லக் கருதிய தொன்றுண்டு கேட்கிற்றொண் டாயடைந்தார்
அல்லற் படக்கண்டு பின்னென் கொடுத்தி யலைகொண்முந்நீர்
மல்லற் றிரைச்சங்க நித்திலங் கொண்டுவம் பக்கரைக்கே
ஒல்லைத் திரைகொணர்ந் தெற்றொற்றி யூருறை யுத்தமனே

பதப்பிரிப்பு

சொல்லக் கருதியது ஒன்று உண்டு கேட்கில், தொண்டாய் அடைந்தார்
அல்லல் படக்கண்டு பின்என் கொடுத்தி, அலைகொள் முந்நீர்
மல்லல் திரைச்சங்கம் நித்திலம் கொண்டுவம்பு அக்கரைக்கே
ஒல்லைத் திரைகொணர்ந்து எற்று ஒற்றியூர்உறை உத்தமனே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – அடியவர்கள் துன்பத்தை நீக்க திருவுள்ளம் கொண்டது பற்றி வினா எழுப்பியது

பதவுரை

முந்நீர் எனும் கடலின் வளமான அலைகள் கொண்டதும், கடலின் கரையில் இருப்பதும், திரையினையும் உடைய சங்கங்களையும் முத்துக்களையும் கொண்டு வந்து சேர்பதும், பழமையானதும், வேகமாக வந்து அலைகளை ஒதுக்கிச் சேர்க்கும் ஒற்றியூரில் உகந்தருளியிருக்கும் உத்தமனே! திருச்செவியினை கொடுத்து நீ கேட்பதற்குத் தயாரானால், ‘உனக்கு தொண்டு செய்வதற்காக வந்து சேர்ந்த அடியவர்கள் துன்பப்படுவதைப் பார்த்துக் கொண்டு இருக்கும் நீ, இப்பொழுது அவர் துன்பத்தைத் தீர்க்காமல் எதிர் காலத்தில் அவர்களுக்கு யாது வழங்கத் திருவுள்ளம் பற்றியுள்ளாய்’ என்பதே அடியேன் கேட்க நினைக்கும் கேள்வி ஆகும்.

விளக்க உரை

 • முந்நீர் – கடல், ஆழி
 • மல்லல் – வளம்
 • நித்திலம் – முத்து
 • ஒல்லை – வேகமாய், காலதாமதமின்றி , சீக்கிரமாக, சீக்கிரம், சிறுபொழுது, தொல்லை, தொந்தரவு, பழமை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 21 (2019)

பாடல்

வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்
   வெய்ய வினைப்பகையும் பைய நையும்
எம்பரிவுந் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
   எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்
அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி
   அனலாடி ஆன்அஞ்சும் ஆட்டு கந்த
செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்
   செவ்வான வண்ணரென் சிந்தை யாரே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

அழகிய பவளம் போன்ற நிறமுடையவரும், செம்மை நிற குன்று போன்றவரும், செவ்வானம் போன்ற நிறமுடையவரும், நெருப்பில் நின்று ஆடியவரும்நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம்  என்று உலக பஞ்ச பூதங்களாகி அதன் வடிவமாக இருப்பவரும், மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற உடல் பஞ்ச பூதங்களாகி அதன் வடிவமாகவும் இருப்பவரும், அதில் ஆடுதலை விரும்பிச் செய்பவரும் ஆகிய சிவபெருமான் எம் சிந்தைக்கு உரியவர் ஆயினார்; ஆதலால் யாம் யாவர்க்கும் எளியோம் அல்லோம்; ஞாயிறு ஆகிய சூரியன் எங்கு எழுந்து எத்திசை உதித்தாலும் அதனால் எமக்கு வரக்கடவது யாது? வெம்மை கொடுத்து துன்பம் தரும் இறப்பாகிய மரணம் நம்மேல் நாம் வருந்தும்படி வராது; கொடியதும்  துன்பம் தரக்தக்கதான வினையாகிய பகையும் மெல்ல விலகும் பரிவினால் வருத்துகின்ற எம் துன்பமும் யாம் தீர்ந்தோம்; துன்பம் இல்லாதவர்களாக ஆனோம்.

விளக்க உரை

 • இத்திருத்தாண்டகம் தாம் பெற்று நின்ற சிவப்பேற்றின் பெருமையைத் கூறி அருளியது.
 • பைய நையும் – மெல்ல வருந்துகின்ற;
 • வெம்ப – நாம் வருந்தும்படி.
 • வருகிற்பது அன்று – வரவல்லது அன்று.
 • கூற்றம் –  அஃறிணை சொல். அது பற்றி  `வருகிற்பது அன்று` என அஃறிணையாக முடித்தருளினார். `கூற்றம் நம்மேல் வெம்ப வருகிற்பது அன்று` என இயையும்.
 • பைய நையும் – மெல்ல வருந்துகின்ற

 

செம்மை நிறம் பற்றி பவளம் போன்றவர், செங்குன்ற வண்ணர், செவ்வான வண்ணர் என்று கூறி இருப்பது அம்மை வடிவமாக அருள் கொண்டதைக் குறித்திருக்கலாம். உணர்ந்தோர் பொருள் உரைப்பின் மகிழ்ந்து உய்வேன்.

 


 

மூன்று முறைக்கூறக் காரணம் ஏதாகினும் உண்டா? // கவிதை அழகு + இறைவனின் திருவுருவையே எதிலும் காணுதல் – இரண்டும் தான். வேறென்ன காரணம் வேண்டும்? 🙂 மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ – ஐயோ இவன் வடிவென்பதொர் அழியா அழகுடையான் : கம்பர் இப்படி ஒரே வரியில் இராமனின் சியாமள வர்ணத்திற்கு நான்கு உவமைகளைக் கூறவில்லையா, அதுபோலவே இதுவும்.

Jataayu B’luru

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 20 (2019)

பாடல்

தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச்
   சூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம்
பூண்டு பொறியரவங் காதிற் பெய்து
   பொற்சடைக ளவைதாழப் புரிவெண் ணூலர்
நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி
   நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார்
வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி
   வெண்காடு மேவிய விகிர்த னாரே

தேவாரம்  – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

தாம் மனத்தால் விரும்பியவாறு  நடக்கும் வெண்மை நிறக் காளையில் ஏறி, உலகியலுக்கு வேறுபட்ட பெருமானாக இருப்பவரும், தூண்டப்பட்ட விளக்கு போன்று ஒளி பொருந்திய பிரகாசம் உடைய திருமேனியில் திரு வெண்ணீறு அணிந்து, சூலத்தைக் கையில் ஏந்தி, நீண்டு சுழலும் நாக்கினை உடைய பாம்பினை அணிகலனாகப் பூண்டு, பொறிகளில் ஒன்றான காதிலும் பாம்பினை அணிகலனாகப் பூண்டு, பொன் போன்ற சடைகள் நீண்டு தொங்குமாறு, பூணூல் அணிந்தவராய், நீண்டு நெடுஞ்சாண் கிடையாக விளங்கும் பிறைச் சந்திரனைச் சூடி, வெண்காடு எனும் திருவெண்காட்டுத் தலத்தை விரும்பி அடைந்து, அதன் நீண்ட தெருக்களின் வழியே வந்து என் நெஞ்சத்தைக் கைப்பற்றிக் கொண்டார்.

விளக்க உரை

 • பொற்சடைகள் – பொன்போலும் சடைகள்
 • வேண்டும் நடை – அவர் விரும்பியவாறே நடக்கும் நடை ; அது விரைந்தும், மெல்லென்றும், தாவியும் நடத்தல். ` தாம் செலுத்தியவாறே செல்லும் அறம் என்பது உண்மைப் பொருள்.
 • விகிர்தன் – உலகியலுக்கு வேறுபட்டவன்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 14 (2019)

பாடல்

நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

நீங்கள் உயிர் நீத்தப்பின் நெருப்பு கொண்டு சுடுவதாகிய சுடுகாடு அடைவது உறுதி என்பதற்கு அது உண்டென்பதை மெய்பிக்கப் பொதுவாக இருக்கும் வழிகளைக் குறிப்பிடுவதாகிய பிரமாணங்கள் அல்லது அளவையில் ஒன்றான ஆன்றோர் சொற்களே (ஆப்த வாக்கியம்) சான்று. திருப்பாற்கடலினை கடைந்த பொழுது எழுந்த ஆலகால விடத்தை உண்ட இறைவர் கைவிட்டால், உடல் கிடந்து ஊரார் வெறுக்கும் பொருளாகிய பிணம் ஆகி விடும். இவ்வாறான துன்பம் மிக்க இந்த வாழ்வினைக் கொண்டு பிற உயிர்களுக்கு பயன் தரக்கூடிய என்ன செயல்களை செய்தீர்? இது குறித்து நீங்கள் நாணவும் இல்லை.

விளக்க உரை

 • நடலை – துன்பம்
 • சுடலை – இடுகாடு
 • ஊர்முனிபண்டம் – பிணம் என்று பேரிட்டு ஊர் மக்களால் வெறுக்கப்படும் பொருள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 9 (2019)

பாடல்

நெஞ்சம்உமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்இது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகிவந் தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
அஞ்சேலும்என் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

திருக்கெடில நதிக்கரையிலே திருவதிகையிலே திருவீரட்டானத்திலே  எழுந்தருளும் அம்மானே! என் நெஞ்சத்தை உன்னிடத்திலேயே உறையுமாறு பண்படுத்தி வைத்துவிட்டேன். இனி ஒரு பொழுதும் உம்மை நினையாமல் இருக்க மாட்டேன். இச்சூலைநோயையின் காரண காரியத்தை அறியாமல், அதனால் ஏற்படும் கொடுநோயை அடியேன் இதுகாறும் அனுபவித்தறியேன்; வயிற்றினோடு சேர்த்து மற்றைய ஏனைய உள்ளுறுப்புக்களையும்க் கட்டி அவை செயற்படாமல் மடக்கி இடுவதைப் போல வந்த விடம் போல வந்து என்னைத் துன்புறுத்தும் நோயை விரட்டியோ, செயற்பாடு இல்லாமல் மறைத்தோ,அஞ்சேல் என்று எனக்கு அருளியும் அபயம் அளித்திலீர்;  இதற்கு நிகரான வஞ்சகத்தினை யான் கண்டறியேன்.

விளக்க உரை

 • வல் + து + அம் = வஞ்சம் – பொய். நெஞ்சத்தினை இடமாக நினைக்கும் செயல் என் அநுபவத்தில் பொய் போல் இல்லாமல் மெய்யே என்றவாறு.
 • நஞ்சு ஆகி – நஞ்சின் இயல்புடையதாகி.
 • ஆகி – போன்று
 • என்னீர் – என்று சொல்லீர்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 28 (2019)

பாடல்

பிணிவிடா ஆக்கை பெற்றேன் பெற்றமொன் றேறு வானே
பணிவிடா விடும்பை யென்னும் பாசனத் தழுந்து கின்றேன்
துணிவிலேன் றூய னல்னேன் றூமலர்ப் பாதங் காண்பான்
அணியனா யறிய மாட்டே னதிகைவீ ரட்ட னீரே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

காளையை ஊர்தியாகக் கொண்டவனே ! அதிகைப்பெருமானே!  நோய்களிடம் இருந்து  நீங்காத இந்த மனித உடலைப் பெற்றிருக்கும் அடியேன்,  செயல் படாமல் ஒழியாததான நல்வினை மற்றும் தீவினைகளை, சுற்றத் தொடர்பை நெருக்கமாகக்  கொண்டு, அந்த வினைகளை  அடியோடு நீக்குவதற்குத் தேவையான தூய்மையும், மனஉறுதியும் இல்லாதவனாய்,  அந்த தூய்மை, துணிவு ஆகியவற்றை நல்கும் உன்னுடைய தேன் துளிகளைக் கொண்டதும், மலர் போன்றதும் ஆன உனது திருவடிகளைக் காணும் வகையில் உன்னை அறியமாட்டாதவனாய் உள்ளேன்.

விளக்க உரை

 • பெற்றம் – விடை
 • பணி – கருமம்
 • பாசனம் – சுற்றம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 25 (2019)

பாடல்

திருநாமம் அஞ்சு எழுத்தும் செப்பார் ஆகில், தீ வண்ணர்
     திறம் ஒரு கால் பேசார் ஆகில்,
ஒருகாலும் திருக்கோயில் சூழார் ஆகில், உண்பதன் முன்
     மலர் பறித்து இட்டு உண்ணார் ஆகில்,
அருநோய்கள் கெட வெண்நீறு அணியார் ஆகில், அளி
     அற்றார்; பிறந்த ஆறு ஏதோ என்னில்,
பெரு நோய்கள் மிக நலிய, பெயர்த்தும் செத்தும்
     பிறப்பதற்கே தொழில் ஆகி, இறக்கின்றாரே!

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

‘திருநாமம்’ என்பதும், சிவபிரான் பெயரைக் குறிக்கும் மரபு சொல்லாகியதும் ஆன அஞ்செழுத்தை ஒருகாலும் ஓதாதவர்களும், தீயின் வண்ணம் உடையவரின் சிறப்புகளை ஒருகாலும் பேசாதவர்களும், திருக்கோயிலினை ஒரு காலத்திலும் வலம் வாராதவர்களும், உண்பதற்கு முன்னமாக மலரைப் பறித்து, பூசித்து அவற்றை இறைவனுக்கு இட்டுப்பின் உண்ணாதவர்களும், கொடுமையான நோய்கள் கெடச் செய்வதான வெண்ணீற்றை அணியாவர்களும் அருள் அற்றவர்கள் ஆவார்கள்; அவர்கள் தலைவராயினார்பால் பெறும் அருளை இழந்தவர்; ஆதலால் அவர்கள் பிறப்பு பற்றி,  தீராத பெரிய நோய்கள் மிகத் துன்புறுத்தப் பெற்று அதனால் செத்து, வரும் பிறப்புகளிலும் பயனின்றி, இறந்து, பிறப்பெடுப்பதே  தொழிலாகி இறக்கின்றார்.

விளக்க உரை

 • இத் திருத்தாண்டகம், எதிர்மறை முக நிகழ்வுகளை ஓதி, பெறவைத்த ஒழுக்கநெறியில் நில்லாதவர்களுக்குப் பிறவித் துன்பம் நீங்காது என உணர்த்தும்.
 • அளி அற்றார் –  தலைவரான இறைவன் பால் பெறும் அருளை இழந்தவர்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 11 (2018)

பாடல்

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

திருவதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே! கர்வம் கொண்டு தலை கிள்ளப்பட்ட நான்முகன் மண்டை ஓட்டினைக் கொண்டு பிச்சையேற்றுக் கொண்டு திரிபவனே! அபிடேகத்தீர்த்தத்தையும், பூவையும்,புகையும் (பிறவும்) உனக்கு சமர்ப்பிப்பது நின்னை வழிபடுவதை மறந்தறியேன்; தமிழ் மொழியில் அமைந்த நின்புகழ் பாடும் இசைப் பாடல்களை பாடுதலை மறந்தறியேன்; வினை பற்றி இன்புறும் பொழுதிலும், துன்புறும் பொழுதிலும் உன்னை மறவேன்; உன் திருநாமத்தை என் நாவினால் ஒலிப்பதனை மறவாதவனாய் இருக்கிறேன்; (அடியேன்) உடலின் உள்ளே இருப்பதும், மிக்க வருத்துவதும் ஆன சூலை நோயினால் வருந்துகின்றேன்; அந்த வருத்தம் தரும் சூலை நோயைத் தீர்த்தருள்வாய்.

விளக்க உரை

 • சலம், பூ, தூபம், தமிழோடிசை – அர்ச்சனை மற்றும் தோத்திரத்திரம் செய்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 8 (2018)

பாடல்

மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே
நாட்டுப் பொய்யெலாம் பேசிடு நாணிலீர்
கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

செல்வத்தையே தேடுவதன் பொருட்டு, மனம் செருக்குற்று, நாட்டிலுள்ள பொய்யெல்லாம் பேசிடும் நாணம் அற்றவர்களே! இந்தக் கூடாகிய உடம்பைவிட்டு உயிர் போவதற்கு முன்பே காட்டுப்பள்ளியை உறைவிடமாக கொண்டவன் திருவடியினை சேர்வீராக.

விளக்க உரை

 • மாடு – செல்வம்
 • நும்முளே – உங்களுக்குள்
 • கூடு – உடல்
 • செல்வம் தேடுதலில் மகிழ்ந்து எனவும், பொய் பேசுவதால் உள்ளுக்குள் மகிழ்வு கொண்டு எனவும் கொள்ளலாம்.

 

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 3 (2018)

பாடல்

மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

ஒற்றியூரை தலமாக உடைய சக்ரவர்த்தியே! மனம் என்னும் தோணியை, அறிவு எனப்படும் துடுப்பை பயன்படுத்தி, சினம் எனும் சரக்கை அந்தத் தோணியில் ஏற்றி, செறிவுடைய பாசக்கடலாகிய பரப்பில் செலுத்தும்போது, மன்மதன் என்ற பாறையில் தாக்கி, அந்தத் தோணி நிலைமாறி கவிழும்போது உன்னை அறிய இயலாதவனாக வருந்துவேன்;  அந்த நிலையில் என்னை மறந்து உன்னையே தியானிக்கும் அறிவை அடியேனுக்கு விரும்பி அளிப்பாயாக.

விளக்க உரை

 • மனன் ( மன்மதன் ) பாறை
 • மறியும்போது – கீழ்மேலாகும் பொழுது
 • ஒண்ணாது – ஒன்றாது; பொருந்தாது
 • மனனெனும் பாறை – சில பதிப்புகளில் ‘மதன்’ என்று காணப்படுவதாக தெரிகிறது. ‘மதன்’ என்பது பிழைபட்ட பாடம் என்பதால் இப்பொருள் விலக்கப்படுகிறது.

 

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 2 (2018)

பாடல்

கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக்
     காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
     ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே
மற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை
     வானவர்க ளெப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
     பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

பெரும்பற்றப் புலியூரான் எல்லாவற்றையும் செய்து முடிக்கும் வல்லமை உடையவன்; கங்கையைத் தாங்குகின்ற நீண்ட சடையை உடையவன்; காவிரியால் சூழப்பட்ட திருவலஞ்சுழி என்ற திருத்தலத்தில் விரும்பி அருளுபவன்; பொருள் இல்லாதவராகிய வறியவருக்கும், துன்பத்தினால் வருந்தி தன்னை தாங்குவார் எவரும் இலர் என வருந்துபவருக்கும் அருள் செய்பவன்; திருவாரூரிலும் விரும்பி தங்கியிருப்பவன்; தன்னைத் தவிர வேறு எவராலும் தனக்கு ஒப்பிட இயலாதவன்; வானவர்கள் எனப்படும் தேவர்களால் எப்பொழுதும் வணங்கிப் போற்றப்படுபவன்; இவ்வாறான அந்தப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

விளக்க உரை

 • கல்தானை – கல்லாடை; அஃதாவது காவியுடை எனப் பொருள் கொள்வாரும் உளர்.

 

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 24 (2018)

பாடல்

தொண்டர் தொழுதேத்துஞ் சோதி யேற்றார்
துளங்கா மணிமுடியார் தூய நீற்றார்
இண்டைச் சடைமுடியார் ஈமஞ் சூழ்ந்த
இடுபிணக்காட் டாடலா ரேமந் தோறும்
அண்டத்துக் கப்புறத்தார் ஆதி யானார்
அருக்கனா யாரழலா யடியார் மேலைப்
பண்டை வினையறுப்பார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

திருப்பந்தணைநல்லூர் தலத்தில் உறையும் சிவபெருமான்,  அண்டங்களையும் கடந்து எங்கும் பரவியிருப்பவர்; ஆதியானவராக இருப்பவர்; சூரியனாக இருந்து, அடியவர்களுடைய பழைய வினைகளைச் சுட்டு எரிப்பவராய் இருப்பவர்; அடியார்கள் தம்மைத் தொழுது துதிப்பதற்குக் காரணமாகி தானே எல்லாவற்றையும் ஒருங்கே அறிந்து இயங்கும் ஞானஒளியை வடிவமாக உடையவர்; நிலைகலங்குதல் இல்லாத அழகிய தலையை உடையவர்; தூய திருநீறு அணிந்தவர்; தாமரை, முல்லை போன்ற மாலைகளை சடையில் சூடியவர்; குளிர்ந்த கண்களை உடைய காளை மீது ஏறி  பிச்சை ஏற்றவர் ஆவார்.

விளக்க உரை

 • துளங்குதல் – அசைதல், நிலைகலங்குதல், தளர்தல், வருந்துதல், ஒலித்தல், ஒளிசெய்தல்,
 • இண்டை – தாமரை, மாலை வகை, , முல்லை, புலிதொடக்கி, தொட்டாற்சுருங்கி;
 • துளங்கா மணி முடியார் – அஞ்சுவ தொன்றில்லாத முதல்வர்
 • ஈமம் – பிணத்தைச் சுடுங்காடு
 • ‘அண்டத்துக்கு அப்புறத்தார்’ – மாயைக்கு அப்பாற்பட்டு நிற்கும் நிலை.
 • ஆதியானார் – எல்லா பொருள்களுக்கும் தாமே முதலாயும், தமக்கொரு முதல்வன் இல்லாதவராயும் உள்ளவர்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 22 (2018)

பாடல்

ஓம்பினேன் கூட்டை வாளா வுள்ளத்தோர் கொடுமை வைத்துக்
காம்பிலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்
பாம்பின்வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின் றேனை
ஓம்பிநீ யுய்யக் கொள்ளா யொற்றியூ ருடைய கோவே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

ஒற்றியூர்ப் பெருமானே! உள்ளத்துள்ளே நேர்மைக்குப் புறம்பானவைகளை நினைவு வைத்துக் வைத்துக் கொண்டு, இந்த உடம்பினைப் பயனற்ற வகையில் பேணி பாதுகாத்துக்கொண்டு, காம்பு இல்லாத அகப்பை கொண்டு முகக்கக் கருதியது போல, உன் திருவருள் துணை இல்லாததனால் நினைத்த பேறுகளைப் பெற இயலாதவனாய்,  பாம்பின் வாயில் அகப்பட்ட தேரையானது, சடுதியில் தான் அழியப் போவதனை நினைவு கொள்ளாது வேறு பல நினைப்புகள் கொண்டது போல  பல எண்ணங்களையும் எண்ணி நெஞ்சம் புண்ணாகின்ற அடியேனை காப்பாற்றி அடியேன் உய்யும் வண்ணம் காத்து அருளவேண்டும்.

விளக்க உரை

 • ஓம்புதல் – காப்பாற்றுதல்; பாதுகாத்தல்; பேணுதல்; வளர்த்தல்; தீங்கு வாராமற் காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்
 • கூடு – உடம்பு
 • வாளா – வீணில்.
 • காம்பு இலா மூழை .- பிடிப்பதற்கு உரிய காம்பு இல்லாத அகப்பை.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 3 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : கொக்கரை

புகைப்படம் : முத்தமிழ் வலைக்காட்சி

பாடல்

கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி
பக்க மேபகு வாயன பூதங்கள்
ஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய்
அக்கி னோடர வார்ப்பரா ரூரரே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

தன்னோடு ஆடுதலை விரும்பியதும், கொக்கரை , குழல் , வீணை , கொடுகொட்டி ஆகிய வாத்தியங்களை இசைத்து  கொண்டு பக்கவாட்டிலே நின்று கொண்டும் திறந்தவாயை உடையனவாகியதும், ஒருசேர  ஆடுதலை விரும்பியதுமான பல பூதங்களுடன்  ஒன்று சேர்ந்து சங்காரதாண்டவமாகிய  ஆடுதலை உடைய கூத்தராய் சங்கு மணிகளையும், அரவை எனும் பாம்பினையும் அணிந்து இருப்பவர் திருவாரூர்ப் பெருமானாவர்.

விளக்க உரை

 • கொக்கரை , குழல் , வீணை , கொடுகொட்டி முதலியன இறைவனது திருக்கூத்திற்கு முழங்கும் பக்கவாத்தியங்கள்.
 • ஒக்க ஆடல் உகந்து – ஒருசேர அவைகளும் தன்னோடு ஆடுதலை விரும்பி
 • அக்கு – சங்குமணி

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 2 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : முரசு

ஓவியம் : Wikipedia

பாடல்

நரியைக் குதிரைசெய் வானும் நரகரைத் தேவுசெய் வானும்
விரதங்கொண் டாடவல் லானும் விச்சின்றி நாறுசெய் வானும்
முரசதிர்ந் தானைமுன் னோட முன்பணிந் தன்பர்க ளேத்த
அரவரைச் சாத்திநின் றானு மாரூ ரமர்ந்தவம் மானே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

நரியைக் குதிரையாக செய்விக்கும் சாமர்த்தியம்  உடையவனும் (மாணிக்கவாசகர் வரலாறு), மும் மலங்களுக்கு உட்பட்டு பிறவி நீக்கம் பெறத் தன்மை இல்லா உயிர்களாகிய நரகர்களையும் தேவர்கள் ஆக்கும் வல்லமை உடையவனும்*, மல பரிபாகம் கொண்ட உயிர்கள் தாம்  மேற்கொள்ளும் விரதங்களுக்கு ஏற்ப அவரவர்க்குப் பயன் அருளுபவனும், விதை இன்றியே பயிரை உண்டாக்க வல்லவனும், எம்பெருமானாகிய  தியாகராசருக்கு உரியதும், தியாக முரசைத் தாங்கியதும் ஆகிய ஆனை மீது அமர்த்தி முழங்கப்படுமாறு செல்பவனும், தன்  அடியார்கள்  முன்னின்று வணங்கி துதிக்கப்படுகையில் பாம்பினை இடுப்பில் கட்டி நின்றவனும் ஆன எம்பெருமான் ஆரூரில் அமர்ந்து தவம் செய்பவனும்  ஆவான்.

விளக்க உரை

 • பண் : காந்தாரம்
 • * நரகர் மானிடப்பிறப்பு கொள்ளாமல் தேவராதல் அற்புதம் என்பதால் இங்கு இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.
 • விச்சு, விச்சது – வித்து
 • சாத்தி – சார்த்தி
 • முரசு  – அரைக்கோள வடிவத்தில் பெரிதாக இருக்கும் தோலால் ஆன ஒலிக் கருவி .(வேறு பெயர்கள் – பறை, பேரி, முழவு). மூன்று வகைகள்
 1. வீர முரசு – போர்க் காலங்களில் பயன்படுத்தப்படுவது.
 2. தியாக முரசு – பொருள்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புபவர்கள், வறியவர்களை வரவேற்க அமைக்கப்பட்டது
 3. நியாய முரசு – நீதி வழங்கும் காலங்களில் நியாயம் கேட்க விரும்புபவர்களை அழைக்க அமைக்கப்பட்டது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 28 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : கிண்கிணி

 

ஓவியம் : Wikipedia

பாடல்

தாட வுடுக்கையன் தாமரைப்பூஞ் சேவடியன்
கோடலா வேடத்தன் கொண்டதோர் வீணையினான்
ஆடரவக் கிண்கிணிக்கால் அன்னானோர் சேடனை
ஆடுந்தீக் கூத்தனை நான்கண்ட தாரூரே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

முழந்தாள் அளவு நீண்ட கைகளை உடையவனாகவும், தாமரைப் பூப்போன்ற திருவடிகளை உடையவனாகவும், அல்லி போன்ற பூக்களை சூடியவனாகவும்*,  வீணையைக் கைகளில் கொண்டவனாகவும், ஆடுவதால் ஒலிக்கின்ற கிண்கிணிகளை அணிந்த திருவடிகளை உடைய மேம்பட்டவனாய்த் தீயில் கூத்தாடும் பெருமானை அடியேன் தரிசித்த தலம் ஆரூராகும்.

விளக்க உரை

 • *கோடலா வேடத்தன் – பிறரால் கொள்ள முடியாத வேடத்தினன் எனும் பொருளில் சில இடங்களில் விளக்கப் பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
 • தாட வுடுக்கையன்  – முழந்தாள் அளவு நீண்ட கை அரசர்களுக்கு உரிய உத்தம இலக்கணம். ‘தாள்தொடு தடக்கை அத்தருமமே அனான்’ எனும் கம்பராமாயண பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 21 (2018)

பாடல்

உன்னுருவிற் சுவையொளியூ றோசை நாற்றத்
துறுப்பினது குறிப்பாகு மைவீர் நுங்கள்
மன்னுருவத் தியற்கைகளால் வைப்பீர்க் கையோ
வையகமே போதாதே யானேல் வானோர்
பொன்னுருவைத் தென்னாரூர் மன்னு குன்றைப்
புவிக்கெழிலாஞ் சிவக்கொழுந்தைப் புகுந்தென் சிந்தை
தன்னுருவைத் தந்தவனை யெந்தை தன்னைத்
தலைப்படுவேன் துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

பற்றுக் கொண்டு விரும்பி நினைக்கப்படும் உடலிலே வாய், கண், உடல், செவி, மூக்கு என்ற ஐம்பொறிகளில் புலன்களாகநின்ற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்து வகைகளே! உங்களுடைய மயக்கம் பொருந்திய மண்ணில் ஏற்படுத்தப்பட்ட உருவங்களினால் சுவைக்கின்ற உங்களுக்கு இந்தப் பரந்த உலகம் போதாதா ? யானோ தேவர்களுக்கு அழகிய பொன் போன்ற உருவத்தைத் தந்தவனும், அழகிய ஆரூரில் நிலைபெற்ற மலைபோல் வான் அளவு உயர்ந்தவனாகவும், இந்த உலகம் எல்லாவற்றிலும் அழகான சிவக்கொழுந்தாய் ஆனவனும், என் சிந்தையுள்ளே புகுந்து அதில் தன்னுருவைத் தந்த என் தலைவனை எப்பொழுதும் அணைந்திருப்பேன். ஆதலால் என்னை உம் அளவில் சிறுமை படுத்துவதற்காக செருக்கிக்கொண்டு என்பக்கம் வாராதீர்கள்.

விளக்க உரை

 • உன் உருவில் – ( விரும்பி ) நினைக்கப்படுகின்ற உடம்பு
 • உறுப்பு –  பொறி
 • குறிப்பு – புலன்
 • மன் உருவம் – ( மயக்கம் ) நிலைபெற்ற உருவம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 17 (2018)

பாடல்

தென்ன வன்னெனை யாளுஞ் சிவனவன்
மன்ன வன்மதி யம்மறை யோதியான்
முன்ன மன்னவன் சேர்வன பூழியான்
இன்னம் இன்புற்ற வின்னம்ப ரீசனே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

தென் நாட்டு அரசனும், என்னை ஆள்பவனாகிய சிவனும், உலகை காக்கும் தலைவனும்,  போற்றுதலுக்கு உரிய அழகிய மறைகளை ஓதியவனும், உலகம் தோன்றுவதற்கு முன்னமே நிலைப்பெற்ற  தோற்றத்திற்கு உரித்தானவனும், சுடுகாட்டில் சேரும்  திருநீற்றினை அணிந்தவனும்,சூரியன் வழிபட்டு இன்புற்ற இன்னம்பரில் எழுந்தருளியுள்ள ஆகிய பெருமானான ஈசனாவான்.

விளக்க உரை

 • தென்னவன் – அழகியவன் எனும் பொருள் இருப்பினும், ‘தென்நாடு உடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ எனும் வரிகளை முன்வைத்து தென் நாட்டு அரசன் எனும் பொருளில் விளக்கப்பட்டுளது. (யோக மார்க்கமான பொருளை குரு மூலமாக அறிக)
 • முன்னம் மன்னவன் – உலகத்தோற்றத்திற்கு முன் உள்ள நிலை பேறுடையோன்
 • பூழி – விபூதி
 • இனன் – சூரியன்
 • இன்னம் இன்புற்ற – சூரியன் வழிபட்டு இன்புற்ற. சூரியன் வழிபட்டதால் இனன் நம்பூர் என்ற பெயர் மருவி இன்னம்பர் ஆயிற்று

சமூக ஊடகங்கள்
1 2 3 4