அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 12 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : கொம்பு

 

ஓவியம் : இணையம்

பாடல்

சங்க நாதங்கள் ஒலிப்பத் தழங்கு பொன் கோடு முழங்க
மங்கல வாழ்த்து உரை எங்கும் மல்க மறை முன் இயம்பத்
திங்களும் பாம்பும் அணிந்தார் திருப்பதி எங்கும் முன் சென்று
பொங்கிய காதலில் போற்றப் புகலிக் கவுணியர் போந்தார்

பெரிய புராணம் – சேக்கிழார்

பதவுரை

சங்கின் ஒலிகள் முழங்கவும், அழகியதாக விளங்கக் கூடியதும், பஞ்ச வாத்தியங்களில் ஒன்றானதுமான  கொம்புகள் ஒலிக்கவும், மங்கலமான வாழ்த்துரை சொற்கள் எங்கும் பெருகவும், மறைகள் முழங்கவும், பிறைச் சந்திரனையும், பாம்பையும் அணிந்த இறைவன் உறைவதும், புண்ணியம் மிக்கதுமான திருத்தலங்கள் எங்கும் சென்று, மேன்மேலும் பெருகும் விருப்பத்துடன் போற்றியும், சீகாழி பதியில் தோன்றியவரும், கவுண்டினிய கோத்திரத்தில் தோன்றியவருமான திருஞானசம்பந்தர் எழுந்தருளிச் சென்றார்.

விளக்க உரை

 • கொம்பு
 1. ‘திமில’, ‘மத்தளம்’,’இலத்தாலம்’,’இடக்க’ ஆகியவற்றுடன் சேர்ந்த ‘கொம்பு’ பஞ்ச வாத்திய இசை கருவிகள்
 2. ஊது கருவி எனப்படும் தூம்பு வகை தமிழர் இசைக்கருவி
 3. பயன்பாடு – நாட்டுப்புற இசை மற்றும் கோயில் இசையில் (பண்டைக் காலத்தில்  போரில் வென்ற அரசனின் வெற்றியைப் பறைசாற்றும் வகையில் வாசிக்கப்பட்ட இசைக் கருவிகளில் முதன்மையானது கொம்பு.)
 4. முன் காலத்தில் விலங்குகளின் கொம்புகளைப் பயன்படுத்தியும், பின்னர் மூங்கிலாலும், தற்காலத்தில் வெண்கலம், பித்தளை போன்ற உலோகங்களாலும்  செய்யப்படுகிறது.
 5. நீளம் – நான்கு முதல் ஆறு அடிவரை
 6. இதன் ஒலி யானை பிளிறுவது போன்ற ஓசையை ஏற்படுத்தும்
 7. காலம் – மூன்றாயிரம் ஆண்டுகள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 10 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் :வயிர்

ஓவியம் : Shivam.org

பாடல்

மறை முழங்கின தழங்கின வண்தமிழ் வயிரின்
குறை நரன்றன முரன்றன வளைக்குலம் காளம்
முறை இயம்பின இயம்பல ஒலித்தன முரசப்
பொறை கறங்கின பிறங்கின போற்றிசை அரவம்

பெரியபுராணம் – சேக்கிழார்

பதவுரை

வேதங்கள் முழங்கின; வளமான தமிழ்ச் சொற்களால் ஆன தமிழ் மறைகளும் ஒலித்தன; சில துண்டங்களாக உள்ளவைகளும், பலப் பலவாறு சேர்த்தும் பொருத்தியும் முழக்கப்படும் ஆன வயிர் மற்றும்  ஊது கொம்புகள் ஒலித்தன; அளவாலும், உருவாலும் பலவகைப்பட்டவையும், எண்ணிக்கையால் பன்மையும் உடைய சங்கினங்கள் முழங்கின; எக்காளங்கள் ஆகிய தாரையும் திருச்சின்னமும் முறைப்படி மெய்க் கீர்த்திகளைக் கூறி ஊதின; இயங்களுக்குள் பெரிய உருவுடைய முரசங்கள் மற்றும் சிறுகுன்று போன்ற உருவுடையவை ஒலித்தன; திருஞானசம்பந்தரின் பெருமையும் திருவருள் பெருமையினையும் உணர்ந்த அடியார் அர! அர! என்று பலவாறு போற்றித் துதிக்கும் சத்தம் இவற்றின் மேலாய் விளங்குமாறு  துதித்து உடன் சென்றனர்.

விளக்க உரை

 • திருவரத்துறையினின்றும் விடைபெற்றுப் திருஞானசம்பந்தர், சிவிகையில் ஏறிப் புறப்படும் இது போன்ற எழுச்சி மிக்க ஆர்ப்புடன் கூடிய ஒலிகள் முழங்கின
 • மறைகள் – தமிழ்கள் எனப் பன்மையில் கொள்க வேண்டும். தமிழ் என்று வேறு பிரித்துக் கூறியதாலும், பன்மை பொருள்பற்றியும் தமிழ் மறைகளும், கீதங்களும் என்று கொள்ளப்படும்.
 • வண்மை – ஈகை, குணம், அழகு, வாய்மை, வளமை; வளப்பம், வலிமை, புகழ் வாகைமரம்
 • முழங்கின, தழங்கின, நரன்றன, முரன்றன், இயம்பின, ஒலித்தன, கரங்கின, பிறங்கின என வந்த எட்டு வினை முற்றுக்களும் ஒலித்தன என்ற ஒரே பொருளைத் தருவன. ஆயினும் சத்திக்கும், வெவ்வேறு பொருள்களுக்கேற்ப ஒலிகளும் வேறுபடுவது பொருட்டு  அவ்வவற்றுக்கு ஏற்றபடி வெவ்வேறு வினைகளால் குறிப்பிடப்படுள்ளது.
 • வயிரின் குறை – வயிர் / ஊது கொம்புகள். குறை – இவை சில துண்டங்களாக உள்ளவை பலப் பலவாறு சேர்த்தும் பொருத்தியும் முழக்கப்படுதல் பற்றிய குறிப்பு.
 • பிறங்கின – அர! அர! முழக்கம் எல்லாவற்றினும் மேலாய் விளங்கின.
 • வயிர்
 1. விலங்குகளின் கொம்பினால் செய்யப்பட்டு, போர்க்களங்களில் பயன்படுத்தப்பட்ட துளைக்கருவி. மரங்களின் வைரம் போன்ற பகுதியைத் துளைத்தும் செய்யப்பட்டிருக்கலாம்
 2. அன்றில் பறவையின் ஒலியை போன்று வயிரின் ஒலி அமைந்திருக்கும்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 5 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : பம்பை

ஒவியம் – tamillexion

பாடல்

நெடுஞ் சடை கரந்திட நெறித்த பம்பையும்
விடுங் கதிர் முறுவல் வெண்ணிலவும் மேம்பட
இடும் பலிப் பாத்திரம் ஏந்து கையராய்
நடந்து வேட்கோவர் தம் மனையில் நண்ணினார்

பெரிய புராணம் – சேக்கிழார் (திருநீலகண்ட நாயனார் புராணம்)

பதவுரை

நீண்ட சடையினில் ஒழுங்குபடுத்தப்பட்ட பம்பை எனும் வாத்திய கருவியுடன், வெண்ணிலவில் இருந்து வெளிப்படும் கதிரினை ஒத்தவாறு கூடிய புன்முறுவலுடன், கைகளில் பிட்சைப் பாத்திரம் ஏந்தி நடந்து திருநீல கண்டர் வீட்டிற்கு சென்றார்.

விளக்க உரை

 • கரத்தல் – மறைத்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 4 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : காளம்

புகைப்படம் - இணையம்

பாடல்

சங்கொடு தாரை சின்னந் தனிப்பெருங் காளந் தாளம்
வங்கிய மேனை மற்று மலர்துளைக் கருவி யெல்லாம்
பொங்கிய வொலியி னோங்கிப் பூசுரர் வேத கீதம்
எங்கணு மெழுந்து மல்கத் திருமண மெழுந்தத தன்றே

பெரிய புராணம் – சேக்கிழார்

பதவுரை

சங்கு, தாரை, சின்னம், ஒப்பற்ற பெரிய எக்காளம், தாளம், குழல் போன்ற ஏனைய நாதம் மலர்கின்ற கருவிகளுடன் சேர்ந்து மேலெழுந்த ஒலியுடன் கூடி மறையவர்களது வேத ஒலியினோடும் பொருந்தி எங்கும் எழுந்து பெருக திருமணமானது எழுச்சி பெற்றுச் சென்றது.

விளக்க உரை

 • தாரை, சின்னம், காளம், தாளம் – இவை கணபதிக்கு இறைவர் அளித்தருளியவை;
 • பெருங்காளம் (உயிர்த்தூம்பு) உருவினாலும் ஒசையினாலும் பெரியதானது. யானை பிளிறுவது போல ஒலி தரும் கொம்பு
 • தனி – இறைவர் தந்து அருளியதால் ஒப்பற்ற தன்மை;
 • சங்கொடு – சங்கு – மங்கலம் தருவதும், சிறந்ததானதும், மனிதர்களால் மற்றைய கருவிகள் போல் இல்லாமல் செயற்கையாக உருவாக்கப்படாத ஒலி இல்லாமல் இயற்கையாகவே ஒலி உடையதும், பிரணவநாதம் நீங்காது ஒலிக்கும் சிறப்புடையதும், பிரணவ வடிவுடைதும் ஆனது.
 • வங்கியம் – குழல்; துளைக்கருவிகளும் முதன்மையானது
 • ஒலி – மங்கலஒலி. வேதங்களுடன் கூடியது.
 • திருமணம் எழுந்தது – திருமணத்தின் பொருட்டு மணமகன் தன் சுற்றத்தாருடன் மணமகளிடன் மனைக்குச் செல்லும் வழக்கு (அப்பொழுதே திருமண நாள்)

 

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 24 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : ஆகுளி (வேறு பெயர் – சிறுகணாகுளி)

ஓவியம் : shaivam.org

பாடல்

வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும்
கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச்
சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி
கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும்

பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம் – சேக்கிழார்

பதவுரை

வெல்லும் படையும், அஞ்சாமையாகிய வீரம் கொண்ட சொல்லும் உடைய வேட்டுவர் கூட்டங்களில் இருந்து எழும் கொல், எறி, குத்து என்றும் ஆரவாரத்துடன் கூடிய ஒலிகள் மட்டுமல்லாமல், சிலம்பின் பருக்கைக் கற்கள் கொண்டதாகிய சில்லரியின் ஓசையும், உடுக்கையும், ஊதுகொம்பும் சிறிய முகமுடைய சிறுபறையும் சேர்ந்து பெருகுகின்ற ஒலியினும் மிக உயரத்தினின்று பள்ளத்தாக்கில் மலையில் வீழும் அருவிகளாதலின் அவற்றின் வேகமும், கற்கள் மோதுதல் ஏற்படுவதால் தோன்றும் ஒலியும், வளைந்து வளைந்து செல்லுதலால் ஏற்படும் ஒலிகள் முதலியனவும் அங்கே எங்கும் உள்ளன.

விளக்க உரை

 • துடி – கொம்பு – ஆகுளி – இவை குறிஞ்சித் திணைக்குரிய பறை வாத்தியங்கள்
 • வேடரது மன மொழி மெய் என்ற மூன்று காரணங்களின் கொடுமைத் தொழில் குறித்தபடி.
 • சில்லரி – சிலம்பின் பருக்கைக் கற்கள்
 • சில் அரி துடி – சில உருக்குப்பரல் உள்ளே இடப்பட்ட வெண்டயம் சுற்றப்பட்ட துடி; துடியினுள் இடப்பட்ட பரல்
 • கொம்பு – வாய்வைத்து ஊதி முழக்கும் வாத்தியம்
 • ஆகுளி – சிறுபறை (தாளவிசைக்கருவி முழவுக்கு இணை கருவியாகவும், துணை கருவியாகவும் அமையும்)

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 26 (2018)

பாடல்

பொன்னின் வெண்திரு நீறு புனைந்தெனப்

பன்னும் நீள்பனி மால்வரைப் பாலது

தன்னை யார்க்கும் அறிவரி யான்என்றும்

மன்னி வாழ்கயி லைத்திரு மாமலை

 

பெரியபுராணம் – சேக்கிழார்

 

பதவுரை

பொன்னின் மேல் வெண்மையான திருநீற்றை அணிந்து போல் என்று அருளாளர்களால் போற்றிக் கூறப்படுவதும், வெகு நீண்ட தொலைவிற்கு பனி சூழ்ந்து இமய மலையின் பகுதியில் உள்ளதும், அன்பர்கள் விடுத்து பிறர் எவராலும் அறிவதற்கு அரிய சிவபெருமான் எந்நாளும் நிலைபெற்று வீற்றிருந்து அருளும் பெருமை பொருந்தியதுமானது திருக்கயிலாய மாமலையாகும்.

சமூக ஊடகங்கள்