அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 8 (2018)

பாடல்

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே

சிவவாக்கியர்

பதவுரை

அருளைத் தரும் நாதர் மற்றும் அம்மையின் உண்மையான திருவடிகளைக் கொண்டு இயம்புவது என்னவெனில் வினையது கொண்டு உருவம் கொண்ட உடலில் இருக்கும் நாடியில் தசவாயுக்களில் ஒன்றானதும், பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன் ஆகிய வாயுக்களுடன் இணைந்து அவற்றை இயக்கி தானும் இயங்குவதான தனஞ்செயனை எண்ணத்தினால் குவித்து துரியத்தின் இடமான கபாலத்தில் ஏற்றும் முறையை தெரிந்து கொண்டால், முதுமை உடையவர்களும் இளமைத் தோற்றம் உடையவராக ஆகிவிடுவார்கள்; அவர்களது மேனி சிவப்பு நிறம் கொண்டிடும்.

விளக்க உரை

  • கபாலம் ஏற்றுதல் – குரு மூலமாக அறிக.

சித்தர் பாடல் என்பதாலும், பக்தி நிலையில் இருந்து எழுதியதாலும், அவர்களின் உள் அனுபவங்களை மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 04 (2018)

பாடல்

மிக்கசெல்வம் நீபடைத்த விறகுமேவிப் பாவிகாள்
விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவது அறிகிலீர்
மக்கள்பெண்டீர் சுற்றம்என்று மாயைகாணும் இவையெலாம்
மறலிவந்து அழைத்தபோது வந்துகூடலாகுமோ?

சிவவாக்கியர்

பதவுரை

தன்னிடம் செல்வம் மிகுதியா இருக்கிறது எனும் கர்வத்துடன் அதை விரும்பி அடையும் பாவிகளே, உடைக்கப்பட்ட மரமாகி விறகுடன் இந்த உடலையும் வெந்து போவதை நீங்கள் அறியவில்லையா? தனது வாரிசுகள், தன் மனைவி மற்றும் சுற்றம் என்று கண்ணால் காணப்படுபவை எல்லாம் மாயை ஆகிய இவைகள் கூற்றுவன் வந்து அழைத்தபோது இவைகள் சேர்ந்து வருமா?

விளக்க உரை

  • கர்வம் கொண்ட உடலை தீயினில் இட்டு என்றும் பொருள் கொள்ளலாம்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 28 (2018)

 

பாடல்

நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய்
சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில்
செவ்வைஒத்து நின்றதே சிவாயநம அஞ்செழுத்துமே

 

சிவவாக்கியர்

 

 

 

பதவுரை

நம்பிக்கைத் தரும் ‘ந’ எனும் எழுத்தாகிய நகாரம் இடுப்பிலிருந்து கால்கள் வரையிலாகவும், ‘ம’ எனும் எழுத்தாகிய மகாரம் வயிற்றுப்பகுதியாகவும், ‘சி’ எனும் எழுத்தாகிய  சிகாரமானது நெஞ்சில் இருந்து இரண்டு தோள்களாகவும், சிறந்ததான ‘வ’ எனும் எழுத்தை குறிக்கும் வகரம் வாயாகவும்,  ‘ய’ எனும் எழுத்தை குறிக்கும் யகரம் இரண்டு கண்களாகவும் தூலத்தில் அமைந்துள்ள ஐந்தெழுத்து, சூட்சமத்தில் மெய்ப்பொருளாக அதே பஞ்சாட்சரமாக ஒத்து இருப்பதை அறிந்து அதனை தியானித்து அச் சிவமே ஐந்தெழுத்தாக  இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

விளக்க உரை

  • ‘நமசிவய’ என்னும் மந்திரம்தான் இந்த உடல். அதனுள்தான் இறை ஆகிய  சிவம் உள்ளது. யோக முறையில் வழிமுறை தெரிந்து உடலின் உள்ளே செல்ல சிவத்தை உணரலாம்.

சமூக ஊடகங்கள்