அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அளவை

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  அளவை

பொருள்

  • அளவு
  • தத்துவம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அளவை காண்டல் கருதல்உரை அபாவம் பொருளொப் பாறென்பர்
அளவை மேலும் ஒழிபுண்மை ஐதிகத்தோ டியல் பெனநான்(கு)
அளவை காண்பர் அவையிற்றின் மேலு மறைவர் அவையெல்லாம்
அளவை காண்டல் கருதல்உரை என்றிம் மூன்றின் அடங்கிடுமே

திருநெறி 2 – சிவஞான சித்தியார்  – சுபக்கம் – பாயிரம்

கருத்து உரை

பிரமாணமாவது காட்சிமுதல் அறுவகைப்படும் என்பாரும் , அவ்வாறான அறுவகைப் பிரமாணங்கட்கு மேலும் எஞ்சுவதைக் கொள்ளுதல் ஆகிய பிரமாணமாகிய பாரிசேடப்பிரமாணம் நான்கு என்பாரும், ஆக மொத்தம் பத்துக்கு எனவும் அதற்கு மேலும் பிரமாணங்கள்  உள்ளன என்பாரும் உளர். அவையெல்லாம் பிரத்தியட்சம்,அநுமானம், உரைச்சான்று என  மூன்றினுள் அடங்குவனவன்றி வேறானது அல்ல.

விளக்க உரை

  • சைவ சித்தாந்த கருத்துக்களை விளக்கும் பாடல்
  • பிரமாணம் – அறுவகை – 1.புலனுணர்வு – (பிரத்தியட்சம்), 2. உய்த்துணர்வு – (அநுமானம்), 3.உரைச்சான்று – (சப்தம் அல்லது ஆப்தவாக்கியம்), 4.ஒப்புநோக்கு – (உபமானம்),  5. சூழ்நிலைசார் உய்த்துணர்வு – (அர்த்தாபத்தி), 6.எதிர்மறைச் சான்று – (அனுபலப்தி)
  • பாரிசேடப் பிரமாணம்- ஒழிபளவை, உ.ம் மூவரில் இருவர் திருடவில்லை எனும் பொழுது மற்றொருவன் திருடினான் என்பது பொருள். அவ்வண்ணமே பதி பசு பாசம் என்னும் மூன்றில் பசுவிற்கும் பாசத்திற்கும் வினைப் பயனைக் கூட்ட முடியாது என்று விலக்கவே, பதிக்குக் கூட்ட முடியும் என்பதால் பாரிசேடமாயிற்று

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

அருளல் தொழில் என்பது என்ன?
உயிர்களிடத்தில் அவற்றின் மலப்பற்றை போக்கி தனது பேரின்பத்தை நுகரச் செய்தல்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – குலாலன்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  குலாலன்

பொருள்

  • குயவன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

காரிய காரணங்கள் முதல்துணை நிமித்தம் கண்டாம்
பாரின்மண் திரிகை பண்ணுமவன்முதல் துணைநி மித்தம்
தேரின்மண் மாயை யாகத் திரிகைதன் சத்தி யாக
ஆரியன் குலால னாய்நின் றாக்குவன் அகில மெல்லாம் .

திருநெறி 2 – சிவஞான சித்தியார்

கருத்து உரை

ஒரு காரிய நிகழ்ச்சிக்கு முதல் காரணம், துணை காரணம், நிமித்த காரணம் என்னும் மூன்று காரணங்கள் தேவைப்படும். இவைகளில் முதல் காரணமும், துணை காரணமும் தனியே தனித்து இயங்காது. காட்சிக்கு புலப்படும் குடம் முதலிய காரியத்திற்கு பஞ்ச பூதத்தில் ஒன்றான மண் முதல் காரணமாகவும், குலாச் சக்கரம் எனும் திரிகை துணைக் காரணமாகவும் இருக்கும். குயவன் நிமித்த காரணமாக இருப்பான்.  ஆராய்ந்து பார்ப்பின் மண் மாயையாகவும், திரிகை அருட்சக்தியாகவும், குயவனை சிவனாகவும் எடுத்து உலகம் தோற்றுவிக்கப்படும்.

விளக்க உரை

  • உலக படைப்பிற்கு சிவனே நிமித்த காரணம் என்பதை விளக்கும் பாடல்
  • மாயையில் இருந்து சிவன் தனது அருள் தன்மையினால் உலகங்களை தோற்றுவிக்கிறான் என்பது விளங்கும்.
  • புறப்புறச் சமயம், புறச் சமயம், அகப்புறச் சமயம் கொள்கைகள் மறுதலிக்கப்பட்டு அகச்சமய கருத்துக்கள் நிலை நிறுத்தப் பெறும்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

அளவை எனும் பிரமாணத்திற்கு அடிப்படை எவை?
அளவை, அளக்கும் கருவி

சமூக ஊடகங்கள்