அமுதமொழி – விளம்பி – வைகாசி – 24 (2018)

பாடல்

காலனைக் காலால் உதைத்தவளாம் வாலை
ஆலகால விடம் உண்டவளாம்
மாளாச் செகத்தைப் படைத்தவளாம் இந்த
மானுடன் கோட்டை இடித்தவளாம்

கொங்கணச் சித்தர்

பதவுரை

வாலையானவள், காலனை தனது காலகளால் உதைத்தவள்; ஆலகால விஷத்தினை உண்டவள்; அழிதல் இல்லாத உலகத்தைப் படைப்பவள்; மானுடன் என்னும் வரைமுறையை நீக்குபவள்.

விளக்க உரை

  • இதில் கூறிப்படும் விஷயங்கள் ஈசனுக்கானதாகவும் இருக்கிறது. அஃதாவது சிவசக்தி ரூபமாக அனைத்தையும் வாலையாக இருந்து செய்விக்கிறாள் என்பது பொருள்.
  • மாளுதல் – சாதல்;  அழிதல்; கழிதல்; இயலுதல்.
  • கோடு – வளைவு; நடுநிலைநீங்குகை; யானையின்தந்தம்; விலங்குகளின்கொம்பு; ஊதுகொம்பு; நீர்வீசுங்கொம்பு; மரக்கொம்பு; யாழ்த்தண்டு; பிறைமதி; சங்கு; குலை; மயிர்முடி; மலையுச்சி; மலை; மேட்டுநிலம்; வரி; ஆட்டம்முதலியவற்றிற்குவகுத்தஇடம்; நீர்க்கரை; குளம்; காலவட்டம்; வரம்பு; ஆடைக்கரை; முனை; பக்கம்; அரணிருக்கை; கொடுமை; நீதிமன்றம்.
  • ‘இந்த மானுடன் கோட்டை இடித்தவளாம் மாளாச் செகத்தைப் படைத்தவளாம்’ என்று பொருள் மாற்றி வாசிக்கலாம். அஃதாவது  மானிடப் பிறப்பே மற்ற மேம்பட்ட நிலைகளை அடையச் செய்கிறது எனப் பொருள் கொண்டு ‘மானுடன் கோட்டை இடித்தவளாம்’ என்று இருந்திருக்கலாம். யுகங்கள் தோறும் உலகம் அழிக்கப்பட்டும் மீண்டும் பிறப்பிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறது. ஆனால் தவ முனிவர்கள், ரிஷிகள் மற்றும் சித்தர்கள் வாழும் லோகங்கள் எந்த வகையிலும் மாறுபாடு அடைவதில்லை. அந்த வகையில் இவர்கள் இருக்கும் உலகங்கள் படைத்தவள் என்பதற்காகவும் இவ்வாறு எழுதப்பட்டு இருக்கலாம். ஆன்றோர் பொருள் அறிந்து பிழை பொறுத்தருள வேண்டும்.

சமூக ஊடகங்கள்