அமுதமொழி – விளம்பி – ஆடி 2 (2018)

 

பாடல்

மூலம்

தினகர ரக்கர தங்கெடுத் தார்குரு தேசிகர்செந்
தினகர ரக்கர மாறுடை யார்தெய்வ வாரணத்தந்
தினகர ரக்கர சத்தியின் றாகிலத் தேவர்நண்ப
தினகர ரக்கர தந்தீர்வ ரீர்வர் செகமெங்குமே

சொல் பிரிவு

தினகரர் அக்க ரதம் கெடுத்தார் குரு தேசிகர்
(செந்) தி நகரர் அக்கரம் ஆறுடையார் தெய்வ ஆரண
(தந்) தி நகரர் அர கர சத்தி இன்றாகில் அத் தேவர்
(நண்ப) தி ந கர ரக்கர் அதம் தீர்வர் ஈர்வர் செகமெங்குமே

கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்

பதவுரை

பன்னிரு மாதமும், சைவர்களால் ‘சிவாதித்யர்கள்’ என அழைக்கப்படும்  பன்னிரு கதிர்களின் பெயர்களுடன் விளங்கும் வைகர்த்தன், விவச்சுதன், பகன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகப்பிரகாசன், லோகசாக்ஷி, திருவிக்ரமன், ஆதித்தன், திவாகரன், அங்கிசமாலி ஆகிய சூரியனின் நேத்திரத்தையும், பல்லையும் அழித்த ஈசனுக்கு உபதேசம் செய்த ஞான ஆச்சாரியனும், செந்தூர் பதியில் இருப்பவரும், ஆறு அக்ஷரங்கள் கொண்டு அதன் ஷடாக்ஷரப் பொருளாய் இருப்பவரும், தெய்வீகமானதும், வேதங்கள் பூஜித்ததும், சர்ப்பம் போல் வடிவமுடைய திருச்செங்கோடு மலையை ஆள்பவரும் ஆகிய கந்த பிரானின், அரத்தைப் போன்ற கூர்மையான வேலாயுதம் இல்லை என்றால் தேவர்களின் சிறந்ததான அமராவதி நகரம் இல்லாமல் போயிருக்கும்;வஞ்சனையை உடைய அசுரர்கள் இறப்பைத் தவிர்த்திருந்து உலகம் முழுவதையும் நிர்மூலமாக்கி இருப்பார்கள்.

விளக்க உரை

 • வேலாயுதத்தின் பெருமை கூறும் பாடல்
 • வெவ்வேறு இடங்களில் குறிக்கப்படும் சூரியர்கள்
 1. தாத்ரு, சக்கரன், அரியமான், மித்திரன், வருணன், அம்சுமான், இரணியன், பகவான், விவச்சுவான், பூஷன், கவித்துரு, துவஷ்டன்.
 2. அஞ்சன், தாதா, இந்திரன், சவிதா, விச்சுவான், பகன், பருச்சனி, தோஷ்டா, மித்திரன், தோஷா, விஷ்ணு, பூஷா.
 3. விசுவான், அரியமா, பூஷா, துவஷா, சவிதா, பகன், தாதா, விதாதா, வருணன், மித்திரன், சுக்கிரன், உருக்கிரமன்.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – சேணி

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  சேணி

பொருள்

 • ஏணி
 • விஞ்சயர் உலகம்
 • வித்தியாதரர் உலகு
 • குழு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

செப்பத் தமதிலை மாற்றார் கொளுமுன்னங் செல்வர்க்கிடச்
செப்பத் தமதிலை யெங்ஙனுய் வார்தெய்வ வேழமுகன்
செப்பத் தமதிலை வாணுத னோக்கினர் சேணில்வெள்ளிச்
செப்பத் தமதிலை வென்றார் குமாரவத் திக்கரசே

கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்

கருத்து உரை

தெய்வீகமாகிய யானை முகம் கொண்டவ வினாயகர் புகழ்ந்து பேசிய தம்பியே, ஒளி பொருந்திய நெற்றியில் முன்றாவது கண்ணை உடையவரும், ஆகாசத்தில் வெள்ளி செம்பு தங்கமான  மதிலை உடைய திரிபுரத்தை ஜெயித்த ஈசனின் மைந்தனே, தில்லை நடேசனராகிய சிவனின் குமாரனே, தெய்வயானை மணாளனே, செல்வமுடையார் அது நிலையாக இருக்காது என்பதைத் தெரிந்து கொண்டு தானதர்மங்களைச் செய்யாவிடில் எப்படிக் கடைத்தேறுவார்கள்?

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

படைத்தல் என்பது என்ன?
உயிருக்கு தனு, புவன, போகங்களை உண்டாக்கும் தொழில்.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – திவா

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  திவா

பொருள்

 • பகல்
 • நாள்
 • நற்செயலுக்கு ஆகாதென நீக்கப்படும் காலம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

திவாகர கன்ன கொடைப்பாரி யென்றுழ றீனவல்லீர்
திவாகர கன்ன புரக்குழை வல்லி செருக்குரவந்
திவாகர கன்ன சுகவா சகதிறல் வேல்கொடென்புந்
திவாகர கன்ன மறலி யிடாதுயிர்ச் சேவலுக்கே

கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்

கருத்து உரை

‘நற்செயலுக்கு ஆகாதென நீக்கப்படும் காலத்திலும் தானம் கொடுக்கும் கைகளை உடையை கர்ணனே, பாரியைப் போன்ற கொடை வள்ளலே’  என்று அவ்வாறு தகுதி இல்லாத பலரிடமும் பேசி என்னை உழல வைக்கும் வறுமையாகிய இருளை பிளக்கக்கூடிய ஞான சூரியனே, ‘கர்ணபூரம்’ என்ற ஆபரணத்தைத் தரித்திருக்கும் வள்ளி நாயகியை  பெருமிதத்துடன்  தழுவும் மார்பை உடையவனே, மாலைப் பொழுதின் நிறத்தை உடைய சிவபெருமானின் காதில் இனிமையாக பிரணவத்தை உபதேசம் செய்தவனே, எமன் என் உயிரை கொள்ளை கொள்ளாதபடி காப்பாற்றுவதற்காக வலிய வேலாயுதத்தை ஏந்தி வந்தும் என்னுடைய இருதயத்தில் நீ வீற்றிருந்தும் அருள வேண்டும். 

விளக்க உரை

 • ‘பகல் பொழுதில் தானம் கொடுக்கும், கையை உடையை கர்ணனே’ என பல இடங்களில் விளக்கப்பட்டாலும் பொருள் பொருந்தாமையால் அவ்விளக்கம் இங்கு பயன்படுத்தப்படவில்லை.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – செற்றை

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  செற்றை

பொருள்

 • சிறு புதர்
 • கூட்டம்
 • நல்ல நீரில் தவழும் ஒரு மீன் இனம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

செற்றை வரும்பழ னஞ்சோலை யிஞ்சி திகழ்வரைமேற்
செற்றை வரும்பழ நிக்கந்த தேற்றிடு நூற்றுவரைச்
செற்றை வரும்பழ நாடாள நாடிகண் சேய்விடுத்த
செற்றை வரும்பழ மாங்கூடு வேமத் தினத்தில்வந்தே

.. சொற்பிரிவு ..

செற்றை வரும் பழனம் சோலை இஞ்சி திகழ் வரை மேல்
செல் தை வரும் பழநிக் கந்த, தேற்றிடு, நூற்றுவரை
செற்று ஐவரும் பழநாடு ஆள நாடி கண் சேய் விடுத்த
செற்றை வரும் பழமாம் கூடு வேம் அத்தினத்தில் வந்தே

கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்

கருத்து உரை

செற்றை எனும் மீன்கள் நீந்தும் வயல்களும், பூஞ்சோலைகளும், மதில்களும் திகழ்கின்ற மலையின் மேல் மேகக் கூட்டம் தவழ்கின்ற பழநி மலை ஆண்டவனே, துரியோதனாதிகள் நூறு பேரையும் அழித்து, பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் புராதனமான ராஜ்ஜியத்தை ஆள வேண்டும் என மனதில் நினைத்து, அப்படியே செய்த கிருஷ்ணனின் நேத்திரம் எனும் (வல) கண்ணாகிய சூரியனின் மைந்தனாகிய எமன் அனுப்பிய தூதர் கூட்டம் வந்தடையும் இந்த உடலாகிய கூடு, அக்னியில் தகிக்கப் படுகின்ற அந்த கடைசி நாளில் எழுந்தருளி எனக்கு அபயம் கொடுத்து காப்பாற்று.

விளக்க உரை

 • செற்றை வரும்பழ – செற்றை வரும் / செல் தை வரும்/ செற்று ஐவரும் எனும் சொல் பிரிவுகளுடன் அதற்கான விளக்கமும் காண்க.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – சீயன்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  சீயன்

பொருள்

 • திருமால்
 • செல்வன்
 • மூன்றாம் பாட்டன் / குரு
 • ஒரு நாடு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சீயனம் போதி யெனவாய் புதைத்துச் செவித்தரத்தோல்
சீயனம் போதி யமலையிற் றாதை சிறுமுநிவன்
சீயனம் போதி கடைந்தான் மருகன்செப் பத்திகைத்தார்
சீயனம் போதி லரனா திருக்கென் செயக்கற்றதே

சொற்பிரிவு

சீயன் நம் பொதி என வாய் புதைத்து செவி தர தோல்
சீய நம்பு ஓதிய மலையின் தாதை சிறு முனிவன்
சீயன் அம்போதி கடைந்தான் மருகன் செப்ப திகைத்தார்
சீ அனம் போதில் அரன் ஆதி ருக்கு என் செயக் கற்றதே.

கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்

கருத்து உரை

பார்வதியினை ஒரு பாகத்தில் உடைய சிவபெருமான் ‘நமக்கு உபதேசம் செய்வாய்’ என்று கேட்டு பணிவுடன் வாயை மூடிக்கொண்டு காதால் கேட்க, யானைகளும், சிங்கங்களும், தஞ்சமாக உறைகின்றதும் கல்வி ஒழுக்கத்திற்கு இருப்பிடமாகிய பொதிக மலைக்கு தலைவனாகிய அகத்திய முனிவனின் குருவானவரும், பாற்கடலை கடைந்தவனாகிய திருமாலின் மருகனாகிய குமரக் கடவுள் அப்போது உபதேசம் செய்ய, அன்னத்திலும் தாமரையிலும் இருக்கும் மிகவும் இழிவு தர தக்கதாகிய பிரம்மன் திகைத்து பழமையான வேதத்தை எதற்காக கற்றுக் கொண்டான்?

சமூக ஊடகங்கள்