அமுதமொழி – விளம்பி – மார்கழி – 10 (2018)

பாடல்

மூலம்

கனவு கனவென்று காண்பரிதாங் காணில்
நனவி லவைசிறிதும் நண்ணா – முனைவனரு
டானவற்றிலொன்றா தடமருதச் சம்பந்தா
யானவத்தை காணுமா றென்.

பதப் பிரிப்பு

கனவு கனவென்று காண்பரிதாம் காணில்
நனவில் அவைசிறிதும் நண்ணா – முனைவன்அருள்
தான்அவற்றில் ஒன்றா தடமருதச் சம்பந்தா
யான்அவத்தை காணுமா றென்

திருநெறி 9  – உமாபதி சிவம்

பதவுரை

மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே! உயிர் செயல்படும் நிலையைக் கூறுவதாகிய காரிய அவத்தையானது, புருவ மத்தியில் இருந்து செயல்படுவதாகிய நனவு, கண்டத்திலிருந்து செயல்படுவதாகிய கனவு, இருதயத்திலிருந்து செயல்படுவதாகிய உறக்கம், உந்தியிலிருந்து செயல்படுவதாகிய  பேருறக்கம், மூலாதாரத்திலிருந்து செயல்படுவதாகிய உயிர்ப்படக்கம் என விரியும். அவ்வாறு உயிரானது கண்டத்தில் இருந்தில் செயல்படும் நிலை ஆகிய கனவினை காணும் போது கனவில் நின்று  ‘இது கனவு’ என்று அறிய இயலாது. அகம் விழிப்புற்ற நிலையாகிய நனவில் அந்த கனவில் கண்ட காட்சிகள் காண இயலாது. முனைவன் அருள் பெறும் போது  காரிய அவத்தைகள் நீங்கப் பெற்று, காரண அவத்தையின்  கேவல அவத்தை, சகல அவத்தை ஆகியவைகளும் நீங்கப் பெற்று,  பல்வேறு பிறப்பெடுத்துப் படிப்படியாக முக்திப் பேற்றை அடைந்து இறைவனின் திருவருளுக்கு உரியதாகும் நிலை ஆகிய சுத்த அவத்தையை காணுமாறு செய்வாயாக.

விளக்க உரை

 • ‘இத்தகைமை இறையருளால் உயிரறியும்’ எனும் சிவப்பிரகாசரின் வரிகளுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
 • உயிரானது ‘அறிவித்தால் அறியும் அறிவுடைய ஒரு பொருள்’ எனபதும்,  உயிர் தனித்து இயங்கினாலும், இறைவன் தனிக் கருணையினால் அன்றி அவத்தைகள் விலகி அது நிலை பேறு கிட்டாது என்பதும் விளங்கும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 13 (2018)

பாடல்

ஞானம் இவன்ஒழிய நண்ணியிடும் நற்கல்அனற்
பானு ஒழியப் படின்.

உமாபதி சிவம்

பதவுரை

நல்ல சூரியகாந்த கல்லானது ஆதித்தனையல்லாமல் ஜொலிக்காதது போல் ஞானாசாரியன் இல்லாமல் ஒருவனுக்கு ஞானம் உண்டாகாது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 9 (2018)

பாடல்

கனவு கனவென்று காண்பரிதாம் காணில்
நனவில் அவைசிறிதும் நண்ணா – முனைவன்அருள்
தான்அவற்றில் ஒன்றா தடமருதச் சம்பந்தா
யான்அவத்தை காணுமா றென்

திருநெறி 9 – வினாவெண்பா – உமாபதி சிவம்

பதவுரை

காரிய அவத்தை பற்றி, கனவிலே நின்று ‘இது கனவு’ என்று கனவைத் தரிசித்தல் அல்லது கனவினை கண்டு கொள்ளுதல் அரிதானது. நனவாகி, அவ்வாறு கிட்டும் அனுபவம் தன்னில் கருவிகள் இல்லாத காரணத்தால் நிஜத்தில் எவ்விதத்திலும் பலன் அளிக்காது. முனைவன் அருளில் ஒன்றி அவ்வாறான அருளிலே நின்று கண்டது என்னவெனில், அவ்வாறான சமயங்களில் காரிய அவத்தை பொருந்தாது, மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே, யான் காரண அவத்தைகளைத் தரிசித்தல் எப்படி?

விளக்க உரை

 • சுத்த தத்துவங்களைக் கொண்டு அறிய வேண்டுமென்பது கருத்து.
 • நண்ணுதல் – கிட்டுதல், பொருந்துதல், செய்தல், இருத்தல்
 • காரண அவத்தை
 1. கேவல அவத்தை : ஆதிகாலம் தொட்டு ஆணவ மலத்தோடு இருக்கின்ற உயிரின் நிலை கேவலஅவத்தை
 2. சகல அவத்தை : மாயை பற்றி உடம்பைப் பெற்று உலகப் பொருளை நுகர்வது சகல அவத்தை.
 3. சுத்த அவத்தை : பல்வேறு பிறப்பெடுத்துப் படிப்படியாக முக்திப் பேற்றை அடைந்து இறைவனின் திருவருளுக்கு உரியதாகும் நிலை சுத்த அவத்தை
 • காரிய அவத்தை
 1. நனவு : சாக்கிரம் என்ற கூறப்படும் இந்நிலையில் உயிர் புருவ நடுவிலிருந்து செயல்படும்.
 2. கனவு : சொப்பனம் என்று கூறப்படும் இந்நிலையில் கண்டத்திலிருந்து உயிர் செயல்படும்.
 3. உறக்கம் : சுழுத்தி என்று கூறப்படும் இந்நிலையில் உயிர் இருதயத்திலிருந்து செயல்படும்.
 4. பேருறக்கம் : துரியம் என்று கூறப்படும் இந்நிலையில் உயிர் உந்தியிலிருந்து செயல்படும்.
 5. உயிர்ப்படக்கம் : துரியாதீதம் என்று கூறப்படும் இந்நிலையில் உயிர் மூலாதாரத்திலிருந்து செயல்படும்.
 • யோக மரபில் கண்டத்தில் இருந்து மேலே சென்று புருவ மத்தியாகிய ஆக்கினையில் பூசித்தல் மனித நிலையில் இருந்து விலக்கி தேவர்கள், முனிவர்கள் போன்ற மேல் நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்பதுவும் கருத்து. மேல் விபரங்களை குரு மூலமாக அறிக.

சமூக ஊடகங்கள்