அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஆகம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  ஆகம்

பொருள்

 • உடல்
 • மார்பு
 • மனம்
 • சுரை

வாக்கிய பயன்பாடு

ஆகம் வுட்டு பேசினா எல்லா வியாதியும் போயிடும்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஏக பராசத்தி ஈசற்காம் அங்கமே
ஆகம் பராவித்தை ஆம் முத்தி சித்தியே
ஏகம் பராசத்தி யாகச் சிவன்உரு
யோகம் பராசத்தி உண்மைஎட் டாமே.

திருமுறை 10 – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

பராசத்தி வடிவமாய் உள்ளது ஒன்றே; அதுவே சிவத்திற்கும் வடிவம் ஆகும். அந்தச் சத்திக்கு வடிவம், `பராவித்தை` எனப்படும் ஸ்ரீவித்தை. அந்த வித்தையால் முத்தி, சித்தி இரண்டும் வாய்க்கப்பெறும். பராசத்தி ஒன்றாக இருப்பினும் சிவன் அங்கியாய் நிற்கிறார். சத்தி அவனுக்கு அங்கமாய் நிற்பதால் எட்டாய்ப் பிரிந்து குணங்கள் உண்டாகின்றது. சத்தியானவள்  பரை, ஆதி, விந்து, மனோன்மனி, மகேசுவரி, உமை, திருமகள், கலைமகள் ஆகிய வடிவங்களாக பிரிந்து நிற்கையில் ஈசன் அந்தந்த வடிவங்களின் அங்கமாய் நிற்கிறார்.

விளக்க உரை

 • ஸ்ரீவித்தைக்குரிய தெய்வமாகிய சத்தியினது இயல்பு தெளிவிக்கும் பாடல்
 • அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்று யோக முறைப்படி கூறிவாரும் உண்டு.
 • (தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர்-அருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை – சைவ முறைப்படி கூறுவாரும் உண்டு)

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

மெய்கண்டார் அவதரித்த ஊர் ஏது?

திருப்பெண்ணாகடம்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – செப்புதல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  செப்புதல்

பொருள்

 • சொல்
 • விடை
 • செம்பு
 • சிமிழ்
 • நீர்வைக்கும்குடுவை
 • சிறுமியர்விளையாட்டுப்பாத்திரம்
 • இடுப்பு

வாக்கிய பயன்பாடு

நீ செப்புற எதுவுமே காதுல ஏறல.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஓரில் இதுவே உறையும் இத் தெய்வத்தைத்
தேரில் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்
வாரித் திரிகோணம் மாவின்ப முத்தியும்
தேரில் அறியும் சிவகாயந் தானே.

திருமந்திரம் – 10ம் திருமுறை – திருமூலர்

கருத்து உரை

யான் உனக்கு ஒரே முடிவைச் சொல்லுகின்றேன்; கேள்;  முடிவான உண்மையை ஆராயுமிடத்து மேற்கூறிய பதினைந்தெழுத்து மந்திரமே(`க, ஏ, ஈ, ல, ஹ்ரீம்ஹ, ஸ, க, ஹ, ல, ஹ்ரீம்,ஸ, க, ல, ஹரீம்` ) மந்திரங்களில் முதன்மையாயது. இம்மந்திரத்திற்கு உரிய தேவியின் பெருமையை ஆராந்தால் இவளையன்றித் தெய்வம் வேறில்லை என்பதை அறியலாம். இம்மந்திரத்தைக் கொண்ட `ஸ்ரீசக்கரம்` எனப் படுகின்ற முக்கோணச் சக்கரமே பேரின்பமாகிய வீட்டின் கடலாகவும் விளங்கும். ஸ்ரீசக்கரமே மெய்யுணர்ந்தோர் காணும் சிவன் சரீர வடிவாகிய சிதாகாசமாம்.

விளக்க உரை

 • மேலே கூறப்பட்ட மந்திரத்தின் சிறப்பும், அதனோடு தொடர்புடையவற்றின் சிறப்பினையும் விளக்கும் பாடல்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை 

புற சந்தானத்தின் வேறு பெயர் என்ன?
பூதப்பரம்பரை

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ககாராதி

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  ககாராதி

பொருள்

 • ‘க’ எனும் எழுத்தை முதன்மையாக் கொண்ட ஸ்ரீவித்தை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ககாராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை
அகாராதி ஓர் ஆ றரத்தமே போலும்
சகாராதி ஓர்நான்கும் தாம்சுத்த வெண்மை
ககாராதி மூவித்தை காமிய முத்தியே.

திருமந்திரம் – 10 திருமுறை – திருமூலர்

கருத்து உரை

`ஸ்ரீ வித்தை` எனப்படும் பராவித்தையை மேற்கொள்ள முடியாத மெலியோர்க்குக்காக  அமைந்தது இந்த புவனாபதிச் சக்கரம்.  ககாரத்தை முதலில் உடைய ஐந்தெழுத்துக்களும் பொன்னிறம் உடையன; ஹகாரத்தை முதலில் உடைய ஆறெழுத்துக்களும் செந்நிறம் உடையன; ஸகாரத்தை முதலில் உடைய நான்கெழுத்துக்களும் தூய வெண்ணிறம் உடையன. ககாரத்தை முதலில் உடையது முதலிய இம்மூன்று வித்தைகளும் `போகம், மோட்சம்` என்னும் இரு பயன்களையும் தருவனவாம்.

விளக்க உரை

 • காரத்தை(ஐந்தாவன: `க, ஏ, ஈ, ல, ஹ்ரீம்`) முதலில் உடைமை பற்றி – `காதி வித்தை`. ஹகாரத்தையே தமிழ் முறையால், ‘அகாரம்’ . ஹகாராதி      ( `ஹ, ஸ, க, ஹ, ல, ஹ்ரீம்`). ஸகாரதி (`ஸ, க, ல, ஹரீம்` ) –  “சகாராதி’ . இப்பதினைந்தெழுத்தின் தொகுதியே `பஞ்ச தசாட்சரி`. `லலிதா திரிசதி தோத்திரம்` முந்நூறு நாமங்கள் கொண்ட கோவை. அந்நாமங்கள் இங்குக் காட்டிய எழுத்துக்களில் ஒவ்வொன்றை முதலாகக் கொண்டு ஓரெழுத்திற்கு இருபதாக (15 X 20)முந்நூறு உள்ளன. எனவே, அவற்றின் முதலெழுத்துக் களின் தொகுதியே இப்பஞ்ச தசாட்சரியாம்.
 • இப் பதினைந்தெழுத்தும் இம்மந்திரத்திற் சொல்லப்பட்ட வாறு மூன்று பகுதிகளாகக் கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு பகுதியும் `ஹ்ரீம்` என்பதை முடிவில் கொண்டு நிற்றல் அறியத் தக்கது. இம்மூன்று பகுதிகளும் முறையே, `வாக்பவ கூடம், காமராஜ கூடம், சத்தி கூடம்` எனப்படுகின்றன. இம் மந்திர மாலையின் பெருமை. இப்பகுதிகளின் பெருமை. இவ் வெழுத்துக்களின் பெருமை முதலி யவை இம்மாலையின் பூர்வ பாகம் ஆகியவை குறித்து விளக்கமான நூல்கள் உள்ளன. இது சத்திக்குரிய உபநிடதமாகிய திரிபுரோபநிடதம்.
 • இப் ‘பஞ்ச தசாட்சரி மந்திரம்’ காயத்திரியின் மற்றொரு வடிவம்`;காயத்திரியினும் இது மிக மேலானது; காயத்ரி போன்று வெளிப்படையாக கூறாமல் மிக மறை பொருளாகச் சில சங்கேத குறியீட்டுச் சொற்களால் கூறுகின்றது. இங்ஙனமாகவே, இவ் எழுத்துக்களைக் கொண்ட லலித திரிசதி தோத்திர வழிபாடே எல்லா வழிபாட்டின் பயனையும் தந்து, `ஸர்வ பூர்த்திகரி` யாகின்றது
 • `வாக்பவ கூடம்` முதலிய மூன்று பகுதி – `பிரளய கால அக்கினியின் நிறம், கோடி சூரியப்பிரகாச நிறம், கோடி சந்திரப்பிரகாசநிறம்`
 • காமிய முத்தி – இவற்றையும் தரும். இதனால், இது சத்தி வழிபாடாகிய ஸ்ரீவித்தைக்குரிய சிறந்த பஞ்ச தசாட்சர மந்திரத்தின் சிறப்பு.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

அக சந்தானத்தின் வேறு பெயர் என்ன?
தேவப்பரம்பரை

 

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – காணுதல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  காணுதல்

பொருள்

 • அறிதல்
 • காண்டல்
 • சந்தித்தல்
 • செய்தல்
 • வணங்குதல்

வாக்கிய பயன்பாடு

காணாதத கண்டது மாதிரி ஏன் இப்படி எல்லாத்தையும் திங்கற? வவுறு வலி வரும். சொல்றத கேளு.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அவன்கழல் செலுமே.

சிவஞான போதம் – மெய்கண்டார்

கருத்து உரை 

காண்பதற்கு ஏற்ற நிலையை அடைந்துவிட்ட விழிகட்கு காணுதற்கு உரியதைக் காட்டும் ஆன்மாவைப் போல,  காண முயலும்போது காணுதற்கு என்றும் உள்ளதாகிய சிவத்தை தானேயாகக் காட்சி பெற்று காணும்படி காட்டின காரணத்தால் சோர்வு இல்லாத அன்பினால் அல்லது பற்றுக்கொண்டு சிவத்தினிடம் சென்று சேர்தல் கூடும்.

விளக்க உரை

 • ஒரு பொருளை காண வேண்டும் என விருப்பம் தோன்றும் போது, அதன் வழி நின்று கண் அப்பொருளைக் காண்கிறது. அவ்வாறு காணும் நேரத்தில் உயிரும் உடனிருந்து அப்பொருளைக் காண்கிறது. இவ்வாறு உயிரானது கண்ணுக்கு காட்டும் உபகாரத்தைச் செய்து, அதை காணச் செய்யும் உபகாரத்தையும் செய்கிறது. அதுபோல இறைவன் உயிரோடு இணைந்து காட்டவும் செய்து பின் காணவும் செய்கிறான். அவ்வாறு காணும் பொழுது ஆன்மாவானது இறை மீது அயரா அன்பு கொண்டு அரன் கழல் அடையும்.
 • இவ்வுடல் பெற்று உயிர் அடையும் பேறுகள் இருவகைப்படும். ஒன்று அருளுடன் கூடிய அருள் பேறு, மற்றொன்று சிவப்பேறு.
 • அருள் பேறு – கண் விளக்கின் ஒளியைக் கொண்டு இருள் நீங்கப் பெற்று புறப் பொருள்களைக் காண்பது. ( புற தரிசனம் )
 • சிவப்பேறு – கண்ணானது விளக்கின் ஒளியைக் கொண்டு ஒளிக்கு காரணமாகிய விளக்கையே காணுதல் (அக தரிசனம்)
 • அயரா அன்பின் – இறையன்பில் தொய்வு இன்றி நிற்றல் வேண்டும் என்பது பற்றியும் சோர்வின்றி, இடையீடின்றி சிவத்தைப் பற்றி நிற்க வேண்டும். அப்போதுதான் சிவத்தை அடைதல் சித்திக்கும்  என்பதை இது விளக்கும்

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

அகசந்தானாச்சாரியார் நால்வர் யார்?
திருநந்திதேவர், சனற்குமாரர், சத்தியஞான தரிசினி மற்றும் பரஞ்சோதி முனிவர்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சுரும்பு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  சுரும்பு

பொருள்

 • வண்டு – ஆண்வண்டு
 • மலை

வாக்கிய பயன்பாடு

பாதயெல்லாம் செடி, கொடி வளர்ந்து காடா கெடக்கு; சாக்கிரதையா போ; சுரும்பு ஏதாவது கடிச்சிட, கிடிச்சிட போவுது.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்
சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தள்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்

திருமுருகாற்றுப்படை – நக்கீரர்

கருத்து உரை

மரம் தாவுவதில் வல்ல குரங்குகளும் ஏறுவதற்கு கடினமான வகையில் மிக உயரமாக வளர்ந்து நிற்கும் மரங்களையுடைய மலைப் பக்கத்தில், வண்டுகளாலும் மொய்க்க இயலாத அதிக உயரத்தில் சுடர் விட்டு எரியும் தீயைப் போன்ற நிறமுடைய செங்காந்தள் மலர்களால் ஆன குளிர்ச்சி பொருந்திய பெரியகண்ணியைத் தலையில் அணிந்த திருமுடியை உடையவன் திருமுருகப்பெருமான்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

கயிலாயத்துக்கு வெளியே வளர்ந்த மரபு எது?
புறச்சந்தானம்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அவத்தை

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  அவத்தை

பொருள்

 • நிலை பொருள்
 • வேதனை

வாக்கிய பயன்பாடு

தூக்கம் வரலேன்னாலே ரொம்ப அவஸ்த்த தான்.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சமயத் தெழுந்த அவத்தையீ ரைந்துள
சமயத் தெழுந்த இராசியீ ராறுள
சமயத் தெழுந்த சரீரம்ஆ றெட்டுள
சமயத் தெழுந்த சதாசிவந் தானே.

திருமந்திரம் – ஏழாம் தந்திரம் – சதாசிவ லிங்கம் – திருமூலர்

கருத்து உரை

சைவ சமயத்தில் இறைவனுக்கு அவத்தைகள் பத்துச் சொல்லப்படுகின்றன. அவை நவந்தரு பேதங்களுள் மேல் நிற்கும் நான்கு தவிர ஏனை ஐந்தும் `அணுபட்சம், சம்புபட்சம்` எனத் தனித்தனி இவ்விரண்டும். சூரியன் முதலிய கோள்கள் இயங்கும் இராசிகள் பன்னிரண்டு என்று சொல்லப்படுதல் போலச் சைவத்தில் இறைவன் தானங்கள் பன்னிரண்டு சொல்லப்படுகின்றன*. இறைவனுக்குத் திருமேனிகள் அத்துவாக்கள் முன்வைத்து ஆறு` என்றும், அட்ட மூர்த்தங்கள் முன்வைத்து `எட்டு` என்றும் சொல்லப்படுகின்றன. இவை அனைத்துமாய் நிற்பது சைவ சமயத்தில் சொல்லப் படும் சதாசிவ லிங்கம்.

விளக்க உரை

 • * – திருவாடுதுறை போன்ற ஆதின அனுட்டானங்களில் 12 இடங்களில் திருநீறு பூசுவது வழக்கம்; மற்ற மடங்களில் 16 இடங்களில் திருநீறு பூசுவது வழக்கம் – ஆதீன முறைப்படி.
 • காட்சி, வேட்கை, ஒருதலையுள்ளுதல், மெலிதல், ஆக்கஞ்செப்பல், நாணுவரையிறத்தல், நோக்குவ இல்லாமவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு ஆகிய உயிரின் நிலைகள்
 • காரண அவத்தை – 1. கேவல அவத்தை ,2. சகல   அவத்தை , 3. சுத்த  அவத்தை
 1. கேவல அவத்தை: ஆதிகாலம் தொட்டு ஆணவமலத்தோடு இருக்கின்ற உயிரின் நிலை
 2. சகல அவத்தை: மாயையினால் உடம்பைப் பெற்று உலகப் பொருளை நுகர்வது
 3. சுத்த அவத்தை: பல்வேறு பிறப்பெடுத்துப் படிப்படியாக முக்திப் பேற்றை அடைந்து இறைவனின் திருவருளுக்கு உரியதாகும் நிலை
 • காரிய அவத்தை – உயிர் செயல்படும் நிலையைக் கூறுவது. மேற்கூறிய இம்மூன்று நிலைகளில் உயிரானது கூடி நிற்பது காரண அவத்தை. வகைகள் – 5
 1. நனவு – இந்நிலையில் உயிர் புருவ நடுவிலிருந்து செயல்படும்.
 2. கனவு – இந்நிலையில் கண்டத்திலிருந்து உயிர் செயல்படும்.
 3. உறக்கம் – இந்நிலையில் உயிர் இருதயத்திலிருந்து செயல்படும்.
 4. பேருறக்கம் – இந்நிலையில் உயிர் உந்தியிலிருந்து செயல்படும்.
 5. உயிர்ப்படக்கம் – இந்நிலையில் உயிர் மூலாதாரத்திலிருந்து செயல்படும்.
 • கேவல நிலையில் ஐந்து அவத்தைகள் செயல்படும் பொழுது கீழாலவத்தை
 • சகலத்தில் செயல்படும் பொழுது மத்தியாலவத்தை
 • சுத்த நிலையில் செயல்படும் பொழுது மலோலவத்தை

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

கைலாயத்துக்குள் வளர்ந்த மரபு எது?
அகச்சந்தானம்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சிட்டர்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  சிட்டர்

பொருள்

 • பெரியோர்
 • கல்விநிரம்பிய சான்றோர்.

வாக்கிய பயன்பாடு

காஞ்சிபுரம் சிட்டர்கள் நிறைந்த நகரம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சிட்டர் வானவர் சென்று வரங்கொளும்
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை
சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச்
சிட்டர்  பாலணு கான்செறு காலனே.

தேவாரம் – 5ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

தில்லைச் சிற்றம்பலமானது, தேவர்கள் போய்வேண்டும் வரங்களைப் பெற்றுக்கொள்ளும் சிறப்புடையது; ஞானிகள் ஆகிய பெரியோர்கள் வாழ்தற்கு இடமாவது அது. அத்தில்லைச் சிற்றம்பலத்தில் திருக்கூத்தாடி அருளும் ஞான மூர்த்தியின் திருவடிகளைக் கைகூப்பித் தொழப்போகும் அப்பெரியோர்களாகிய மெய்ஞ்ஞானியரை, வருத்தி அழிக்க வல்ல காலன் அணுக மாட்டான்.

துக்கடா

சைவ சித்தாந்தம் வினா விடை

இருவகைச் சந்தானங்கள் எவை?
அகச்சந்தானம், புறச்சந்தானம்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – துனி

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  துனி

பொருள்

 • நீங்கின
 • பிணக்கு
 • ஊடல்
 • ஒரு வித சண்டை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

துனியால் உளந்தளர்ந் தந்தோ
   துரும்பில் சுழலுகின்றேன்
இனியா யினும்இரங் காதோநின்
   சித்தம்எந் தாய்இதென்ன
அனியாய மோஎன் அளவின்நின்
   பால்தண் அருளிலையோ
சனியாம்என் வல்வினைப் போதனை
   யோஎன்கொல் சாற்றுவதே.

திருஅருட்பா – 3ம் திருமுறை – வள்ளாலார்

கருத்து உரை

வெகுளி என்னும் குற்றதால் உட்கருவியாகிய மனம் தளர்ந்து சுழல் காற்றில் அகப்பட்ட துரும்புபோல் சுழலுகின்றேன்; இந்தக் குற்றத்தினின்று நீக்குதற்கு நின் அருள் அல்லாது பற்றுக்கோடு இல்லை. அருள் துணை புரிவதற்கு இப்பொழுதாகிலும் நின் திருவுள்ளம் இரங்குமோ? இரங்காது  எனில் இது என்ன நியாயம்? என்னளவில் உந்தன் அருள் இல்லையோ? என் வல்வினையின் காரணமாக கற்பிக்கப்பட்டு இந்நிலை ஏற்பட்டதோ? என்னென்று கூறுவேன்.

விளக்க உரை

 • மாயையினைப் பற்றி அறிவு சுழலுவதால் உண்மை அறியாமல் உடல் தளர்ந்தது;
 • என் அளவில் நின்பால் தண்ணருள் இலையோ – எவ்விடத்தும் எவ்வுயிருக்கும் அருள் பெருகிப் பாயும் நின் திருவுள்ளம், என்பால் அஃது இல்லாமல் போயிற்றோ எனும் பொருளில்.

துக்கடா

சைவ சித்தாந்தம் வினா விடை

சந்தானம் என்பது எதைக் குறிக்கும்?
குரு சிஷ்ய பரம்பரை

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – செவ்வி

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  செவ்வி

பொருள்

 

 • வளமை
 • அழகு
 • நேர்மை
 • பேட்டி
 • நேர்காணல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து
வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே.

அபிராமி அந்தாதி

கருத்து உரை

உன்னால் கவரப்பட்ட பாகத்தைக் கொண்ட இறைவராம் சிவபெருமானும், அவ்வாறான ஈசனுடன் மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடனும், உங்கள் திருமணக் கோலத்துடனும், என் மனத்துள் இருக்கும் அசுத்தங்களைத் தீர்த்து  என் உயிரைக் கவர காலன் கோபத்துடன் வரும் வேளை தோன்றி அருள வேண்டும்.

துக்கடா

சைவ சித்தாந்தம் வினா விடை

சைலாதி என்பவர் யார்?
திருநந்திதேவர்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஓவின

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஓவின

பொருள்

 • நீங்கின

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யொளிஒளி உதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

தேவாரம் – 8ம் திருமுறை – மாணிக்கவாசகர்

கருத்து உரை

தேவனே! திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! யாவரும் அறிதற்கு அரியவனே! எங்களுக்கு எளியவனே! எம் தலைவனே! அழகிய குயில்கள் கூவின; கோழிகள் கூவின; பறவைகள் ஒலித்தன; சங்குகள் முழங்கின; நட்சத்திரங்களின் ஒளி மங்கியது. உதய காலத்து வெளிச்சம் தோன்றுகிறது. எமக்கு அன்புடன் சிறந்த நெருங்கிய வீரக்கழலை அணிந்த திருவடிகள் இரண்டையும் காட்டி பள்ளி எழுந்தருள்வாயாக.

துக்கடா

சைவ சித்தாந்தம் வினா விடை

திருக்கயிலாய பரம்பரை யாரால் எப்பொழுது தொடங்கப்பட்டது?

திருநந்தி தேவரால் கயிலையில் தொடங்கப்பட்டது.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வேழம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  வேழம்

பொருள்

 • யானை
 • நாகம்
 • மகுடி
 • தடி
 • கயிறு
 • கரும்பு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோல கால பயிரவ னாகி வேழம்
உரித்துமை யஞ்சக் கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

தேவாரம் – 4ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

திருச்சேறைச் செந்நெறிச் செல்வ மூர்த்தியானவர், விரிந்த பல்வேறு விதமான ஒளியை உடைய சூலத்தையும், வெடி முழக்கம் போல் ஒலியினை ஏற்படுத்தும் உடுக்கையையும் கையில் ஏந்தி, தலையில் கங்கையினை தரித்தும் அழகிய தோற்றம் உடைய கால பைரவ மூர்த்தியாகி, யானைத் தோலை உரித்த தம் செயலைக் கண்டு பார்வதி அஞ்ச, ஒளி பொருந்திய அழகிய பவளம்போன்ற வாயைத் திறந்து சிரித்து அருள் செய்தார்.

துக்கடா

சைவ சித்தாந்தம் வினா விடை

சைவசமயக் குரவர்கள்

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – நெறி

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  நெறி

பொருள்

 • முறை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அவனே தானே ஆகிய அந்நெறி
ஏக னாகி இறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை யின்றே.

திருநெறி 1 – 10ம் சூத்திரம் – சிவஞானபோதம்

கருத்து உரை

மாயைக்கு உட்பட்டு எவ்வாறு ஆன்மாவானது அதனோடு கலந்து நிற்கிறதோ அதுபோலவே சுத்த நிலையில் ஆன்மா கலந்து நிற்கும் பொழுதுகளில் அவன் தானாகவே ஒன்றாகி அந்த நெறிபற்றி நிற்பான். அந்நிலையில் ஆன்மாவினை மலம் பற்றாது. பற்றினாலும் வலிமை குறைந்துவிடும்.

துக்கடா

சைவ சித்தாந்தம் வினா விடை 

சைவ சமயத்தின் இலக்கிய கருவூலம்

பன்னிரு திருமுறைகள்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பற்றார்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  பற்றார்

பொருள்

 • பகைவர்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

முற்றா மதிச்சடையார் மூவ ரானார்
மூவுலகு மேத்தும் முதல்வ ரானார்
கற்றார் பரவுங் கழலார் திங்கள்
கங்கையாள் காதலார் காம்பேய் தோளி
பற்றாகும் பாகத்தார் பால்வெண் ணீற்றார்
பான்மையா லூழி யுலக மானார்
பற்றார் மதிலெரித்தார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

6ம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து உரை

பந்தணைநல்லூர்ப் பெருமான் முற்றாத (இளம்) பிறை சூடிய சடையினர்; மும்மூர்த்திகளையும் உடனாய் இருந்து செயற்படுத்தலின் மூவர் ஆனவர்; மூவுலகாலும் துதிக்கப்படும் முதல்வர்.சான்றோர்களால் துதிக்கப்படும் திருவடிகளை உடையவர்; பிறையையும் கங்கையையும் விரும்பித் தலையில் கொண்டவர்; மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதியினை தனது பாகமாக உடையவர்; வெண்மையான திருநீறு அணிபவர்; தம் இயல்பான பண்பினால் உலகங்கள் ஆக நிற்பவராகவும் அவற்றை அழிக்கும் ஊழிக்காலங்களாகவும் உள்ளவர்; குளிர்ந்த கண் கொண்டவராகி அரக்கர்களின் பகைவர் மதில்களை எரித்தவர் அப்பெருமானார்

விளக்க உரை

 • புறப்பற்றுதல் மூவரானார் – அயன் , மால் , உருத்திரன் ` – காரணக் கடவுளர். இவர்கள் ஒரோவோர் அதிகாரத்தை தங்களிடத்தில் வைத்து அதன் வாயிலாக, படைத்தல், காத்தல், அழித்தல்  என்னும் தொழில்களை நடத்துதலால் மூவரானார்.
 • முதல்வரானார் – முத்தொழிற்கும் தாமே உரியராதல் பற்றி ‘முதல்வரானார்.
 • ஊழி ஆனார் – ஊழி பற்றி உலகம் ஒடுங்குங்காலம் உலகமானார்.
 • முற்றா மதிச்சடையார், திங்கள் கங்கையாள் காதலார் – ஒரே பாடலில் இருமுறை திங்கள் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. தனது தவற்றினை ஒப்புக்கொண்டதால் கங்கையைக்கு நிகராக திங்களைக் காதலிக்கிறார் என்றும், அதனால் திங்களையும் தனது சடையில் சூடி உள்ளார் என்பதும் விளங்கும்.

துக்கடா

சைவ சித்தாந்தம் வினா விடை

சைவ சித்தாந்தம் எனும் தொடரைக் கையாண்ட ஆகமம்

காமிய ஆகமம்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – நிருபாதி

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  நிருபாதி

பொருள்

 • துன்பமின்மை
 • காரணமின்மை
 • தடையின்மை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மாநிருபா திபர்சூழ மணிமுடிதான் பொறுத்தே
மண்ணாள வானாள மனத்தில்நினைத் தேனோ
தேன்ஒருவா மொழிச்சியரைத் திளைக்கவிழைந் தேனோ
தீஞ்சுவைகள் விரும்பினனோ தீமைகள்செய் தேனோ
நானொருபா வமும்அறியேன் நன்னிதியே எனது
நாயகனே பொதுவிளங்கும் நடராஜ பதியே
ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் அழகோ
என்ஒருமை அறியாயோ யாவும்அறிந் தாயே.

6ம் திருமுறை – திரு அருட்பா – சிவ தரிசனம் – வள்ளலார்

கருத்து உரை

எல்லாம் அறிந்தவனே. நல்ல நிதியினை உடையவனே, எனது நாயகனே அனைவராலும் வணங்கத் தக்கவனாக விளங்கும் நடராஜ பதியே! எப்பொழுதும் பெரும் இன்பம் உடைய தேவர்கள் உன்னை தலைமேல் தாங்கி நீ மண்ணாளவும், வானத்தையும்  ஆள மனதால் நினைத்தேனோ.; அப்படிப்பட்ட உன்னை மனித்தில் நினைத்தேனோ, உன் பெருமை பேசாமல்,  தேன் போன்று பலவகையிலும் வேறு வார்த்தை உரைப்பவர்களும் மகிழ்ந்து இருக்க விரும்பினேனோ; இன்சுவைகளை விரும்பினேனோ; தீமைகள் ஏதாகிலும் செய்தேனோ; உடையவனே நான் எந்த பாவமும் அறியவில்லை; நீ ஏன் இருமையில் இருக்கின்றாய், இது அழகோ! எனது ஒருமையினை நீ அறியாயோ!

 விளக்க உரை 

 • பலவகையிலும் தேன் மொழி உரைப்பவர்கள் – இறை சொற்கள் அன்றி பிற சொற்கள் பேசுவோர்
 • நன்னிதி – குறைவு வரா செல்வம்
 • ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் – நீ எப்பொழுதும் அருளுபவன், இப்பொழுது அருள் செய்யவில்லை எனும் பொருளில்.
 • என்ஒருமை அறியாயோ – என் மனம் எப்பொழுதும் உன் சிந்தனையைப் பற்றி இருக்கும். இது நீ அறியாயோ?

துக்கடா

சைவ சித்தாந்தம் வினா விடை

முதன் முதலில் சித்தாந்தம் எனும் சொல்லை கையாண்டவர்
திருமூலர்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – குருளை

தமிழ் அன்னை

 

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  குருளை

பொருள்

 • நாய், பன்றி, புலி, முயல், நரி போன்ற விலங்கின் குட்டி
 • பாம்பின் குஞ்சு
 • குழந்தை
 • ஆமை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மந்திக் குருளையொத் தேன்இல்லை; நாயேன் வழக்கறிந்தும்
சிந்திக்கும் சிந்தையை யான்என்செய் வேன்எனைத் தீதகற்றிப்
புந்திப் பரிவில் குருளையை ஏந்திய பூசையைப்போல்
எந்தைக் குரியவன் காண் அத்த னே !கயி லாயத்தனே!

பட்டினத்தார்

கருத்து உரை

கயிலாயத்தில் உறைபவனே! பெண் குரங்கானது தனது குட்டிப் பற்றி நினைவுறாது அங்கும் இங்கும் தாவும், குட்டி தாய்க்குரங்கைப் பற்றிக் கொள்ளும். அதுபோல் இந்த ஆத்மாவானது பரமாத்மாவாகிய உன்னைப் பற்றிக் கொண்டால் வினைகள் அறுபடும். நாயேன் இந்த உண்மையை அறிந்து புறத் தேடல்களை கொள்ளும் சிந்தனையை என்ன செய்வேன்? ஆகவே பெருமானே எனது தீவினைகளை அகற்றி, பூசை செய்வதை ஒத்து தாய்ப் பூனை தனது தனது குட்டியை எங்கு சென்றாலும் கவ்விக் கொண்டு செல்லுமோ அவ்வாறு இந்த நாயேனை நீ ஆட்கொண்டு அருள வேண்டும்.

விளக்க உரை

 • புறப்பற்றுதல் விடுத்து அவனே வந்து ஆட்கொள்ளும் அகப்பற்றினை வேண்டுதல் குறித்தது.

துக்கடா

சைவ சித்தாந்தம் வினா விடை

உலகத்திற்கு முதன்மையாக இருப்பவர் யார்?

இறைவன்

 

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கஞ்சம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  கஞ்சம்

பொருள்

 • ஒருவகை அப்பம்
 • கஞ்சா
 • துளசி
 • வெண்கலம்
 • கைத்தாளம்
 • பாண்டம்
 • தாமரை
 • நீர்
 • வஞ்சனை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அஞ்சு முகத்தி நவ முகத்தி
   ஆறு முகத்தி சதுர் முகத்தி
அலையில் துயிலும் மால் முகத்தி
   அருண முகத்தி அம்பரத்தி
பஞ்சா ஷரத்தி பரிபுரத்தி
   பாசாங்குசத்தி நடுவனத்தி
பதுமா சனத்தி சிவபுரத்தி
   பாரத்தனத்தி திரிகுணத்தி
கஞ்ச முகத்தி கற்பகத்தி
   கருணாகரத்தி தவகுணத்தி
கயிலாசனத்தி நவகுணத்தி
   காந்தள் மலர்போல் சதுர்கரத்தி
மஞ்சு நிறத்திபரம்பரத்தி
   மதுர சிவந்தி மங்களத்தி
மயிலாபுரியில் வளரீசன்
   வாழ்வே அபயாம்பிகை தாயே!

அவயாம்பிகை சதகம் – நலத்துக்குடி கிருஷ்ண ஐயர்

கருத்து உரை

சிவனைப்போல ஐந்து முகமும், ஒன்பது சக்திகளின் முகமும், கௌமாரி நிலையில் ஆறு திருமுகமும், ப்ராமி நிலையில் நான்கு முகமும், கடலில் தூங்கும் திருமாலை ஒத்த முகமும், மகேஸ்வர நிலையில் சிவந்த முகமும், ஆகாயமே வடிவாகவும், பஞ்சாட்சரத்தை இடமாகவும், கையிலே பாசமும் ,அங்குசமும், பூமிக்கு நடுவில் இருக்கும் விந்திய அடவியில் இருக்கின்றவளும்,  தாமரையில் வீற்றிருப்பவளும்,. சிவபுரத்தை ஆட்சி செய்வவளும், கருணை மிகுந்த மார்பகங்களை கொண்டவளும், படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழிலையும் செய்பவளும், தாமரை முகம் கொண்டவளும், கற்பக மரத்திற்கும் சக்தி கொடுப்பவளும், கருணை கொண்டவளும், திருக்கயிலை மலையில் ஈசனின் கூட இருப்பவளும். நவரச குணங்கள் கொண்டவளும், காந்தள் மலர் போன்ற நான்கு கரங்கள் கொண்டவளும். மேகம் போன்ற நிறம் உடையவளும், சிவந்த உதடுகள் உடையவளும் ஆன அழகான அபயாம்பிகைத்தாய் மயிலாடுதுறையில் வாழ்கின்றாள்.

விளக்க உரை

துக்கடா

சைவ சித்தாந்தம் வினா விடை

சித்தாந்தம்முடிந்த முடிவு

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இல்லி

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  இல்லி

பொருள்

 • பொள்ளல்
 • சிறு துளை
 • தேற்று மரம்
 • வால்மிளகு
 • தூண்டில் புழு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

எண்ணிலி இல்லி அடைத்துஅவ் இருட்டறை
எண்ணிலி இல்லியோடு ஏகில் பிழைதரும்
எண்ணிலி இல்லியோடு ஏகாமை காக்குமேல்
எண்ணிலி இல்லதோர் இன்பமது ஆமே.

10ம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

எண்ண இயலாதா அளவு துளைகளுடன் கூடிய இருட்டறை ஒன்று உள்ளது. ஆயினும் அந்த அறையில் சிறிதும் ஒளிபுகாது இருட்டில் இருக்கிறது.  இந்த இருள் எத்தகைய துன்பத்தை தரும் என்பது குறித்து சொல்லப்பட வேண்டியது இல்லை. ஆனாலும் இறைவன் திரு உள்ளம் பற்றுவான் ஆயின் பெரிய இன்பம் தரும் மாளிகை ஒத்ததாகிய இல்லம் கிடைத்துவிடும்.

விளக்க உரை

 • திருவருள் துணைகிடைத்தலின் அருமையை இப்பாடல் விளக்கும்
 • எண்ணிலி இல்லி – மயிர்க்கால்கள்
 • இருட்டறை – தேகம்
 • பெரியதோர் இன்பம் – திருவருள். இன்பம், சிவானந்தம்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பொருந்துதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  பொருந்துதல்

பொருள்

 • செயப்படுபொருள்குன்றிய தன்வினை
 • மனம் இசை வாதல்
 • தகுதியாதல்
 • அமைதல்
 • உடன்படுதல்.
 • நெருங்குதல்
 • சம்பவித்தல்
 • பலித்தல்
 • இயலுதல்
 • கலத்தல்
 • அடைதல்
 • அளவளாவுதல்
 • புணர்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

வருந்தேன் பிறந்தும் இறந்தும் மயக்கும் புலன்வழிப்போய்ப்
பொருந்தேன் நரகில் புகுகின்றி லென், புகழ்வாரிடத்தில்
இருந்தேன் இனியவர் கூட்டம் விடேன்இயல் அஞ்செழுத்தாம்
அரும்தேன் அருந்துவன் நின் அரு ளால்கயி லாயத்தனே!

பட்டினத்தார்

கருத்து உரை

நின்னுடைய அருளால், இனி வருந்த மாட்டேன், மாயைக்கு உட்பட்டு பிறப்பையும், இறப்பையும் தரும் புலன்வழி சென்று அங்கு கலக்க மாட்டேன்; நரகத்தில் புக மாட்டேன். உன்னை புகழ்ச்சி செய்யும் அடியவர் கூட்டத்தில் இருந்தேன்; அவ்வாறான அடியவர் கூட்டம் விட்டு விலக மாட்டேன்; இயல்பாக இயன்றவரை தேன்போன்ற இனிய அஞ்செழுத்தை அருந்துவேன்.

விளக்க உரை

 • சொல்லப்படும் மந்திரங்களின் மேம்பட்ட நிலை, அம்மந்திரமாக ஆகுதல். தன்னிலை மறந்து அவ்வகைப்பட்ட ஐந்தெழுத்தில் ஒன்றும் போது அமுத தாரகைகள்  அன்னாக்கில் தோன்றும். மேல் விபரங்களை குரு மூலமாக அறிக

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இலங்குதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  இலங்குதல்

பொருள்

 • ஒளிசெய்தல்
 • விளக்கமாகத் தெரிதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தேய்ந்து இலங்கும் சிறுவெண்மதியாய்! நின் திருச்சடைமேல்
பாய்ந்த கங்கைப்புனல் பல்முகம் ஆகிப் பரந்து ஒலிப்ப,
ஆய்ந்து இலங்கும் மழு, வேல், உடையாய்!—அடியேற்கு உரை நீ,
ஏந்து இளமங்கையும் நீயும் நெய்த்தானத்து இருந்ததுவே!

தேவாரம் – 4ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை 

தேய்ந்து விளங்கும் பிறைச்சந்திரனை உடையவனே! அழகிய உன் சடையின் மீது இறங்கிப்பாய்ந்த கங்கைநீர் பலமுகங்கொண்டுப் பரவி ஒலிக்கவும், ஆராய்ந்து விளங்கும் மழுப் படையை உடையவனே! அழகு விளங்கும் இளமங்கையான பார்வதியும் நீயும் நெய்த்தானப் பதியில் விரும்பி உறையும் காரணத்தை அடியேனுக்கு உரைப்பாயாக.

விளக்க உரை

 • தேய்ந்து விளங்கக்கூடிய பிறைச்சந்திரனை அணிந்தவனே அல்லது தேய்ந்து விளங்கும் வெளிறிய அறிவு உடையவனே – சிலேடை
 • உன் தலை மேல் இருப்பவள் மிகவும் ஆர்ப்பாட்டம் செய்கிறாள். நீ அதைக் கவனிக்காமல் பார்வதியோடு இங்கு வீற்றிருக்கிறாய். உன் மனைவிக்கு பயந்ததாகவும் தெரியவில்லை. அவள் எப்படித்தான் சகித்துக் கொண்டு இருக்கிறாளோ? வேறு எந்தப் பெண்ணும் இவ்வாறு பொறுமையுடன் இருக்கமாட்டாள். உன் கைகளில் இருக்கும் மழு, ஆயுதம் கண்டு பயந்து உடன்பட்டு இருக்கிறாளோ, இந்த ரகசியத்தை எனக்குச் சொல் என்று சிலேடையாகப் பாடுகிறார்.
 • ஏந்து மங்கை – ஏந்தப் பெற்ற மங்கை; இத்தலத்து அம்பிகை திருப்பெயர் `இள மங்கை`, பாலாம்பிகா – (வாலாம்பிகை) என்றனர் வட மொழியில்

 

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இந்தனம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  இந்தனம்

பொருள்

 • விறகு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

இந்தனத்தின் எரி பாலின் நெய் பழத்தின் இரதம்
எள்ளின் கண் எண்ணெயும்போல் எங்கும்உளன் இறைவன்
வந்தனை செய்து எவ்விடத்தும் வழிபடவே அருளும்
மலம்அறுப்போர் ஆன்மாவில் மலர் அடிஞா னத்தால்
சிந்தனை செய்து அர்ச்சிக்க சிவன் உளத்தே தோன்றி
தீ இரும்பை செய்வதுபோல் சீவன் தன்னைப்
பந்தனையை அறுத்துத் தா னாக்கித்தன் உருவப்
பரப்பெல்லாம் கொடுபோந்து பதிப்பன் இவன் பாலே,

சிவஞான சித்தியார்

கருத்து உரை

விறகில் தீயினைப் போலவும், பாலில் நெய் போலவும், பழத்தில் சுவை போலவும், எள்ளினுள் எண்ணெயைப் போலவும் இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். எனவே இறைவனை அகத்திலோ, புறத்திலோ வணங்கி வழிபட்டால் அவர்களுக்கு அருள்பாலிப்பான். ஆயினும் தங்களைப் பற்றியுள்ள மலம் முற்றிலும் நீங்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் சிவபெருமானை அவனுடைய செந்தாமரை மலர்போன்ற  திருவடி ஞானத்தினால் தங்கள் உள்ளத்தின் உள்ளே எழுந்தருளுவித்து அகவழிபாடு இயற்றுவார்கள்.  அத்தகைய அடியார்கட்கு இறைவன் மாயை பற்றி விளக்கி, தானே  தோன்றி அவர்களது மலப்பற்றினை அறவே துடைத்து அருளுவான். நெருப்பில் இட்ட இரும்பானது நெருப்பின் தன்மையை பெறுவது போல இறைவனும் உயிரைத் தன் வண்ணம் ஆக்குவான். தனது பேரானந்தப் பெரும் செல்வம் முழுவதையும் உயிருக்கு அருளுவான்.

விளக்க உரை

 • அகவழிபாட்டின் சிறப்பு எடுத்து உரைத்தல் குறித்தது இப்பாடல்
 • பக்குவப் பட்ட உயிரின் வகையினைக் காலம் முன்வைத்து காட்டுவதற்காக 4 உவமைகள் கூறப்பட்டுள்ளன.
 • தீயானது தன்னில் இடப்பட்டவைகளின் மாசுகளை நீக்கி, தன் வண்ணமாக செய்து விடும். அது போல அகவழிபாடு கொண்ட ஆன்மாவை அதன் மலம் நீக்கி, தன் வயம் உடைமை, தூய உடம்பு உடைமை, இயற்கை உணர்வு உடைமை,  முற்றுணர்வு உடைமை,  இயல்பாகவே பாசமின்மை, பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை ஆகிய எண் குணத்தான் தன் வண்ணமாக செய்து பர முக்தியைத் தருவான்.

சமூக ஊடகங்கள்
1 2 3 8