அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – சூகரம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  சூகரம்

பொருள்

 • பன்றியினம்
 • மான்வகை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மூலம்

யான்றானெ னுஞ்சொல் லிரண்டுங் கெட்டாலன்றி யாவருக்குந்
தோன்றாது சத்தியந் தொல்லைப் பெருநிலஞ் சூகரமாய்க்
கீன்றான் மருகன் முருகன் க்ருபாகரன் கேள்வியினாற்
சான்றாரு மற்ற தனிவெளிக் கேவந்து சந்திப்பதே.

சொல் பிரிவு

யான், தான் எனும் சொல் இரண்டும் கெட்டால் அல்லது யாவருக்கும்
தோன்றாது சத்தியம் தொல்லைப்பெருநிலம் சூகரம் ஆய்
கீன்றான் மருகன் முருகன் கிருபாகரன் கேள்வியினால்
சான்று ஆரும் அற்ற தனி வெளிக்கே வந்து சந்திப்பதே.

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

கருத்து உரை

கேள்விகளால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு இறை அனுபவம் வராது. சொல் எனும் சுட்டு என்ற ஒன்று இருக்கும் வரை இன்ப அநுபூதி இல்லை. சுட்டிக்காட்ட பயன்பாடு உரிய சொற்களில் ‘யான்’ எனும் தன்னிலை சொல்லும், ‘தான்’ என்னும் படர்க்கை சொல்லும் அடங்கிய பிறகே சத்தியமாகிய அனுபவம் தலைப்படும். அப்பொழுது பழமை பொருந்திய பெரிய பூமியை வராகமாய் உருவெடுத்து பிளந்தவராகிய திருமாலின் திருமருகனும் முருகனின் கருணைக்கு உறைவிடமாகிய கிருபாகரனது உபதேசக் கேள்வியினால் சாட்சி ஒருவரும் இல்லாத ஒப்பற்ற ஞான வெளியில் திருமுருகப்பெருமானின் திருவருளால் சொல் இறந்த அனுபவமாகிய முருகன் தனி வெளியே வந்து சந்திப்பது எனும் அனுபவம் கிட்டும்.

விளக்க உரை

 • ‘யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும் தானாய் நிலைநின்றது தற்பரமே எனும் கந்தர் அநுபூதிப்பாடல் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
 • இரண்டற்ற அத்துவித நிலையில் யான் தான் என்னும் சொற்களுக்கு இடம் இல்லாமல் இரண்டும் ஒன்றாகி  சொல்ல அற்ற அனுபவ நிலை உண்டாகிறது.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – நொதி

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  நொதி

பொருள்

 • அருவருக்கத்தக்கசேறு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அடியில்வி டாப்பிண மடையவி டாச்சிறி
   தழியுமுன் வீட்டுமு …… னுயர்பாடை
அழகொடு கூட்டுமி னழையுமின் வார்ப்பறை
   யழுகையை மாற்றுமி …… னொதியாமுன்
எடுமினி யாக்கையை யெனஇடு காட்டெரி
   யிடைகொடு போய்த்தமர் …… சுடுநாளில்
எயினர்கு லோத்தமை யுடன்மயில் மேற்கடி
   தெனதுயிர் காத்திட …… வரவேணும்
மடுவிடை போய்ப்பரு முதலையின் வாய்ப்படு
   மதகரி கூப்பிட …… வளையூதி
மழைமுகில் போற்கக பதிமிசை தோற்றிய
   மகிபதி போற்றிடு …… மருகோனே
படர்சடை யாத்திகர் பரிவுற ராட்சதர்
   பரவையி லார்ப்பெழ …… விடும்வேலாற்
படமுனி யாப்பணி தமனிய நாட்டவர்
   பதிகுடி யேற்றிய …… பெருமாளே.

திருப்புகழ் – அருணகிரிநாதர்

கருத்து உரை

முதலை பிடியில் சிக்கிய கஜேந்திரனின் அபயக் குரலைக் கேட்டவுடன்  அங்கு நேரில் தோன்றி யானைக்கு மோட்சம் அளித்தவனும், சங்கை ஊதுபவனும், கரிய மேகம் போன்றவனும், பட்சிகளின் அரசனான கருடன் மேல் ஏறி வந்தவனும், இவ் உலகின் தலைவனுமாகிய திருமால் துதித்து ஏத்தும் மருமகனே! பரந்த சடையை உடையவனும், கடவுள் உண்டென்று நம்புவோர்க்கு அதன் பொருளாகவும் உள்ள சிவபெருமான் அன்பு கொள்ளும் வகையில், அரக்கர்கள் கடலில் கூச்சலிட்டு அலறும்படிச் செலுத்திய வேலால் அவர்கள் அழியும்படி செய்வித்து, தன்னைப் பணிந்த பொன்னுலகத்தில் வாழும் தேவர்களின் தலைவனான இந்திரனை மீண்டும் குடி ஏற்றிய பெருமாளே! ‘வீட்டில்  கிடக்கும் பிணத்தை அங்கேயே இருக்க விடாமல், அழுகிப் போவதற்கு முன்னமேயே வீட்டுக்கு எதிரில் சிறப்புடன் பாடையை அழகாகக் கட்டுங்கள்; நன்கு கட்டப்பட்ட பறை வாத்தியங்களை வரவழையுங்கள்; அழுகையை நிறுத்துங்கள்; பிணம் கெட்டு அழியும் முன்னர் உடலை எடுத்துச் செல்லுங்கள்’  என்று கூறி சுடுகாட்டில் தீயின் இடையே கொண்டு போய்ச் சுற்றத்தார் சுட்டு எரிக்கும் அந்த நாளில், வேடுவர் குலத்தைச் சேர்ந்த, உத்தம குணம் உடைய வள்ளியோடு மயில் மேல் ஏறி விரைவாக என் உயிரைக் காப்பதற்கு வரவேண்டும்.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – நிட்டூரம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  நிட்டூரம்

பொருள்

 • கொடுமை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கொத்தார் பற்கா லற்றே கப்பாழ்
   குப்பா யத்திற் …… செயல்மாறிக்
கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே
   கொட்டா விக்குப் …… புறவாசித்
தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன்
   அஆ உஉ…… எனவேகேள்
செற்றே சுட்டே விட்டே றிப்போ
   மப்பே துத்துக் …… கமறாதோ
நித்தா வித்தா ரத்தோ கைக்கே
   நிற்பாய் கச்சிக் …… குமரேசா
நிட்டூ ரச்சூர் கெட்டோ டப்போர்
   நெட்டோ தத்திற் …… பொருதோனே
முத்தா ரத்தோ ளிற்கோ டற்பூ
   முட்டா திட்டத் …… தணிவோனே
முற்றா நித்தா அத்தா சுத்தா
   முத்தா முத்திப் …… பெருமாளே.

திருப்புகழ் – அருணகிரிநாதர்

கருத்து உரை

என்றும் உள்ளவனே, விரிந்த தோகையை உடைய மயில் மீது நிற்பவனே, காஞ்சீபுரத்துக் குமரேசனே, கொடுமை வாய்ந்த சூரன் கேடு அடைந்து கடலில் ஓட, போரினை பெரிய கடலில் புரிந்தவனே, முத்து மாலை அணிந்த தோளில் வெண்காந்தள் மலரைத் தவறாது விருப்பத்துடன் அணிபவனே, முதுமையே வாராமல் என்றும் இளமையாய் இருப்பவனே, என் தந்தையே, பரிசுத்தமானவனே, இயல்பாய் பாசங்களினின்று நீங்கியவனே, முக்தியைத் தரும் பெருமாளே! வரிசையாக அமைந்திருந்த பற்கள் வேரற்று விழுந்து போக, பாழ்பட்டு இத் துன்பத்திற்கு காரணமான சட்டையான இந்த உடலின் செயல்கள் தடுமாறி, உடலின் கண் இருக்கும் மயிரெல்லாம் கொக்கின் நிறம் போன்று வெளுத்து, உடல் கூன் அடைந்து, நடக்க இயலாமல் ஊன்றுகோல் பிடித்து, கொட்டாவி விட்ட தலையானது குனிதலை அடைந்து மற்றும் இவ்வாறு நிலை வேறுபாடுகளை அனுபவித்து, நின்று  பின்னர் இறந்தார் ஐயோ கெட்டேன் எனக் கூறிக் கதறி,  அ ஆ உ உ என்னும் ஒலிகளுடன் உறவினர்கள் அழ, சுடுகாட்டுக்குச் சென்று, அங்கு பிணத்தைச் சுட்டுவிட்டு, (நீரில் மூழ்கி) வெளியேறி வருகின்ற அந்தப் பேதைமை வாய்ந்த துக்கம் நீங்காதோ?

விளக்க உரை

 • ‘ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி’ எனும் பட்டினத்தாரின் பாடலும், ‘ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு’ எனும் திருமந்திரப்பாடலும் ஒப்பு நோக்கி இங்கு சிந்திக்கத் தக்கது.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – திவா

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  திவா

பொருள்

 • பகல்
 • நாள்
 • நற்செயலுக்கு ஆகாதென நீக்கப்படும் காலம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

திவாகர கன்ன கொடைப்பாரி யென்றுழ றீனவல்லீர்
திவாகர கன்ன புரக்குழை வல்லி செருக்குரவந்
திவாகர கன்ன சுகவா சகதிறல் வேல்கொடென்புந்
திவாகர கன்ன மறலி யிடாதுயிர்ச் சேவலுக்கே

கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்

கருத்து உரை

‘நற்செயலுக்கு ஆகாதென நீக்கப்படும் காலத்திலும் தானம் கொடுக்கும் கைகளை உடையை கர்ணனே, பாரியைப் போன்ற கொடை வள்ளலே’  என்று அவ்வாறு தகுதி இல்லாத பலரிடமும் பேசி என்னை உழல வைக்கும் வறுமையாகிய இருளை பிளக்கக்கூடிய ஞான சூரியனே, ‘கர்ணபூரம்’ என்ற ஆபரணத்தைத் தரித்திருக்கும் வள்ளி நாயகியை  பெருமிதத்துடன்  தழுவும் மார்பை உடையவனே, மாலைப் பொழுதின் நிறத்தை உடைய சிவபெருமானின் காதில் இனிமையாக பிரணவத்தை உபதேசம் செய்தவனே, எமன் என் உயிரை கொள்ளை கொள்ளாதபடி காப்பாற்றுவதற்காக வலிய வேலாயுதத்தை ஏந்தி வந்தும் என்னுடைய இருதயத்தில் நீ வீற்றிருந்தும் அருள வேண்டும். 

விளக்க உரை

 • ‘பகல் பொழுதில் தானம் கொடுக்கும், கையை உடையை கர்ணனே’ என பல இடங்களில் விளக்கப்பட்டாலும் பொருள் பொருந்தாமையால் அவ்விளக்கம் இங்கு பயன்படுத்தப்படவில்லை.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – செற்றை

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  செற்றை

பொருள்

 • சிறு புதர்
 • கூட்டம்
 • நல்ல நீரில் தவழும் ஒரு மீன் இனம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

செற்றை வரும்பழ னஞ்சோலை யிஞ்சி திகழ்வரைமேற்
செற்றை வரும்பழ நிக்கந்த தேற்றிடு நூற்றுவரைச்
செற்றை வரும்பழ நாடாள நாடிகண் சேய்விடுத்த
செற்றை வரும்பழ மாங்கூடு வேமத் தினத்தில்வந்தே

.. சொற்பிரிவு ..

செற்றை வரும் பழனம் சோலை இஞ்சி திகழ் வரை மேல்
செல் தை வரும் பழநிக் கந்த, தேற்றிடு, நூற்றுவரை
செற்று ஐவரும் பழநாடு ஆள நாடி கண் சேய் விடுத்த
செற்றை வரும் பழமாம் கூடு வேம் அத்தினத்தில் வந்தே

கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்

கருத்து உரை

செற்றை எனும் மீன்கள் நீந்தும் வயல்களும், பூஞ்சோலைகளும், மதில்களும் திகழ்கின்ற மலையின் மேல் மேகக் கூட்டம் தவழ்கின்ற பழநி மலை ஆண்டவனே, துரியோதனாதிகள் நூறு பேரையும் அழித்து, பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் புராதனமான ராஜ்ஜியத்தை ஆள வேண்டும் என மனதில் நினைத்து, அப்படியே செய்த கிருஷ்ணனின் நேத்திரம் எனும் (வல) கண்ணாகிய சூரியனின் மைந்தனாகிய எமன் அனுப்பிய தூதர் கூட்டம் வந்தடையும் இந்த உடலாகிய கூடு, அக்னியில் தகிக்கப் படுகின்ற அந்த கடைசி நாளில் எழுந்தருளி எனக்கு அபயம் கொடுத்து காப்பாற்று.

விளக்க உரை

 • செற்றை வரும்பழ – செற்றை வரும் / செல் தை வரும்/ செற்று ஐவரும் எனும் சொல் பிரிவுகளுடன் அதற்கான விளக்கமும் காண்க.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – சீயன்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  சீயன்

பொருள்

 • திருமால்
 • செல்வன்
 • மூன்றாம் பாட்டன் / குரு
 • ஒரு நாடு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சீயனம் போதி யெனவாய் புதைத்துச் செவித்தரத்தோல்
சீயனம் போதி யமலையிற் றாதை சிறுமுநிவன்
சீயனம் போதி கடைந்தான் மருகன்செப் பத்திகைத்தார்
சீயனம் போதி லரனா திருக்கென் செயக்கற்றதே

சொற்பிரிவு

சீயன் நம் பொதி என வாய் புதைத்து செவி தர தோல்
சீய நம்பு ஓதிய மலையின் தாதை சிறு முனிவன்
சீயன் அம்போதி கடைந்தான் மருகன் செப்ப திகைத்தார்
சீ அனம் போதில் அரன் ஆதி ருக்கு என் செயக் கற்றதே.

கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்

கருத்து உரை

பார்வதியினை ஒரு பாகத்தில் உடைய சிவபெருமான் ‘நமக்கு உபதேசம் செய்வாய்’ என்று கேட்டு பணிவுடன் வாயை மூடிக்கொண்டு காதால் கேட்க, யானைகளும், சிங்கங்களும், தஞ்சமாக உறைகின்றதும் கல்வி ஒழுக்கத்திற்கு இருப்பிடமாகிய பொதிக மலைக்கு தலைவனாகிய அகத்திய முனிவனின் குருவானவரும், பாற்கடலை கடைந்தவனாகிய திருமாலின் மருகனாகிய குமரக் கடவுள் அப்போது உபதேசம் செய்ய, அன்னத்திலும் தாமரையிலும் இருக்கும் மிகவும் இழிவு தர தக்கதாகிய பிரம்மன் திகைத்து பழமையான வேதத்தை எதற்காக கற்றுக் கொண்டான்?

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – கொளுவுதல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  கொளுவுதல்

பொருள்

 • கொள்ளச்செய்தல்
 • தீமூட்டுதல்
 • பூட்டுதல்
 • தூண்டிலிடுதல்
 • அகப்படுதல்
 • மிதியடிமுதலியனஅணிதல்
 • வேலையில்அமர்தல்
 • சிக்குதல்
 • தந்திரஞ்செய்தல்
 • குடல்தூக்கிகொள்ளதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

உடையவர்க ளேவ ரெவர்களென நாடி
   யுளமகிழ ஆசு …… கவிபாடி
உமதுபுகழ் மேரு கிரியளவு மான
   தெனவுரமு மான …… மொழிபேசி
நடைபழகி மீள வறியவர்கள் நாளை
   நடவுமென வாடி …… முகம்வேறாய்
நலியுமுன மேயு னருணவொளி வீசு
   நளினஇரு பாத …… மருள்வாயே
விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர்
   விகிர் தர்பர யோகர் …… நிலவோடே
விளவு சிறு பூளை நகுதலையொ டாறு
  விடவரவு சூடு …… மதிபாரச்
சடையிறைவர் காண உமைமகிழ ஞான
  தளர் நடையி டாமுன் …… வருவோனே
தவமலரு நீல மலர்சுனைய நாதி
  தணிமலையு லாவு …… பெருமாளே.

திருப்புகழ் (திருத்தணிகை) – அருணகிரிநாதர்

 

கருத்து உரை

ரிஷபத்தை வாகனமாகப் பூட்டிச்  செல்பவரும், குற்றமற்றவரும், தூயவரும், திரிசூலத்தை ஏந்தியவரும், மிக உயர்ந்தவரும், மேலான யோகம் படைத்தவரும், பிறைச்சந்திரன், வில்வத் தளிர், சிறிய பூளை / தேங்காய்ப்பூக் கீரை / சிறுபீளை என்று அழைக்கப் பெறும் பூளாப்பூ, பற்களுடன் கூடிய மண்டையோடு, இவற்றோடு கங்கை ஆறு, விஷப்பாம்பு ஆகியவற்றைத் தரித்துள்ள மிகுந்த பாரமான ஜடாமுடியுடைய சிவபெருமான் கண்டு களிக்கவும், உமாதேவி பார்த்து மகிழவும், ஞானத் தளர் நடையிட்டு அவர்கள் முன்னே வருபவனே, மிகுத்து மலரும் நீலோத்பலப் பூக்கள் உள்ள சுனையுடையதும், ஆதியில்லாததுமான மிகப் பழைய திருத்தணிகை மலை மீது உலாவும் பெருமாளே,  செல்வம் படைத்தவர்கள் எவர் எவர்கள் என்று தேடி, அவர்கள் மனம் மகிழுமாறு அவர்கள் மீது எதுகை மோனையுடன் கூடிய ஆசுகவிகளைப் பாடி, ‘உன்னுடைய புகழ் மேருமலை அளவு உயர்ந்தது’ எனக் கூறியும், அவர்களை வலிமையான புகழ்ச்சி மொழிகளைப் பேசியும், பல முறை நடந்து பலநாள் போய்ப் பழகியும், அவர்கள் தனம் ஈயாததால் தரித்திரர்களாகவே மீண்டு, ‘நாளைக்கு வா’ என்றே கூற, அதனால் அகம் வாடி,முகம் தனது களை இழந்து, வருந்தும் முன்னதாகவே, உனது சிவந்த ஒளி வீசுகின்ற தாமரை போன்ற இரு பாதங்களையும் தந்தருள்வாயாக.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

இறைவன் சச்சிதானந்தமாய் இருத்தல் என்ன இயல்பு?
சிறப்பு இயல்பு(சொரூப இலக்கணம்)

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மாடை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  மாடை

பொருள்

 • பொன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே.

கந்தர் அனுபூதி – அருணகிரிநாதர்

கருத்து உரை

மிகப் பெரியதான வலிமைமிக்க மாபெரும் மாயைகளை எல்லாம் நீக்க வல்லவராக முருகப் பெருமான், தன் அறுமுகத்தில் இருக்கும் ஆறு வாயினால் உபதேசங்களை தந்து அருளிய போதிலும், வீடு, பொன் (செல்வம்), மாதர் என்று இவைகளை எப்பொழுதும் நினைத்து சோர்வு அடையச் செய்கிற உலக மாயைக்குள் கிடந்து கலங்குவதை நான் இன்னும் விடவில்லையே.

விளக்க உரை

 • முருகப் பெருமான் தன்னுடைய திருவாக்கால் ஷடாச்சர உபதேசம் செய்தும் நான் தேறவில்லையே என்கிறது மற்றுமொரு உரை.
 • ‘எனக்கு சம்சார மாயை நீங்கவில்லையே’ என பொருள் கொண்டால் முருகனின் பரதத்துவத்திற்கு இழுக்கு ஏற்படும் என்றும் உபதேசம் செய்தவர் எப்படிப்பட்டவர், செய்த உபதேசம் எப்படிப்பட்டது என்பதின் தரமே குறைந்துவிடும் என்று சில குறிப்புகளில் காணப்படுகிறது. அருளாளர்களின் பாடல்கள் அனைத்தும் அவர்களுக்காக எழுதப்பட்டவை அல்ல. சாதாரணமாக இருக்கும் கடை நிலை மனிதர்களின் நிலையில் இருந்து அவர்கள் உய்வதன் பொருட்டு எழுதப்பட்டவை.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

மூவகை அளவைகள் எவை?
காட்சி, கருதல், உரை

சமூக ஊடகங்கள்